Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 12

இரண்டு நாட்களாக சித்திரைச் செல்வனுக்கும், மானசாவிற்கும் இடையில் ஒரு மௌன பாசை தான் நிகழ்ந்தேரிக்கொண்டு இருந்தது. சித்திரைச் செல்வன் அவன் தியரி கிளாஸ் எடுக்கவில்லை. பாஸ்கர் தான் எடுத்தான். ஆக இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர் காணாத நேரத்தில் காண்பதும் பின் பார்வையை நகற்றுவதாய் இருக்க, இவருக்கும் பேச்சுக்கள் குறைந்து போனது.

‘ஏன் அழைப்பு விடுத்தாய்..’ என்று அவனும் கேட்கவில்லை,

‘இதற்குத்தா அழைத்தேன்..’ என்று அவளும் சொல்லவில்லை.

மாறாக, இருவரின் பார்வைகள் தான் நிறைய நிறைய பேசியது.

அடுத்த வாரமிருந்து இதோ இப்படி யாரும் இங்க வரமாட்டார்கள். மானசாவும் சரி, ஷில்பாவும் சரி அடுத்து இந்த அறைக்கு வரும் வாய்ப்புகள் இல்லவே இல்லை..

நேரில் பார்த்தால் பேசிக்கொள்ளலாம். அவ்வளவே..

அதிலும் இப்போதெல்லாம் வகுப்புகள் முடிந்தாலும் சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்துவிட்டுத்தானே செல்கிறார்கள் இருவரும். அந்த சிரிப்பெல்லாம் அடுத்த வாரம் இருந்து இனி இங்கே இருக்காது..

இதெல்லாம் பாஸ்கர் சித்திரைச் செல்வனிடம் அன்றைய காலையில் சொல்ல “ம்ம்.. ம்ம்..” என்று மட்டுமே சொன்னான்.

“என்னவோ.. இந்த ரெண்டு பொண்ணுங்களும் நல்ல பிரண்ட்ஸ் ஆகிடுச்சுங்க.. விகல்பம் இல்லாம இருக்குதுங்க பாரேன்..” என்று அவன் போகிற போக்கில் சொல்லிச் செல்ல,

விகல்பம் விளைந்தது எல்லாம் சித்துவின் மனதில் என்று அவன் எப்படிச் சொல்லிக் கொள்வான்.

அதிலும் இப்போது மானசாவின் பார்வை வேறு அவ்வப்போது தன்புறம் வந்து போவது உணர்ந்து மேலும் சித்திரைச் செல்வன் தவித்துத்தான் போனான்.  

‘நோ சித்து.. நீ என்ன முடிவு எடுத்தியோ அதுபடி இரு.. வேற எதுவும் உனக்குத் தேவையில்லை..’ என்று தன் மனதை மானசாவிடம் இருந்து திசை திருப்ப, சித்திரைச் செல்வனின் இந்த அதீத மௌனமும், மானசாவின் இந்த அமைதியும் பாஸ்கருக்கும், ஷில்பாவிற்கும் நிச்சயம் வித்தியாசமாய் தான் பட்டது.

‘என்னாச்சு??!’ என்று பாஸ்கி சைகையில் ஷில்பாவிடம் கேட்க ‘தெரியலையே..’ என்று உதடு பிதுக்கினாள்.

மூன்றாவது நாள் ஷில்பாவே “ஏதும் பிராப்ளமா மனு??” என,

“இல்லையே.. ஏன்??!” என்றாள் மானசா வேகமாய்.

“இல்லே.. சைலண்ட்டா இருக்கியே..” என்று அவள் பார்க்க, “அதெல்லாம் எதுமில்ல சிப்ஸ்..” என்றாள் அசால்டாய் சொல்வது போல்.

அன்றைய தின வகுப்பிலும் கூட அதுவே வழக்கமாய் இருக்க “என்னடா மறுபடியும் எதுவும் சண்டை போட்டீங்களா??” என்று கேட்டேவிட்டான் பாஸ்கர்.

பாஸ்கர் அப்படி கேட்டதுமே  சித்துவும், மானசாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “இதோ இதைத்தான்டா கேக்குறேன்.. இப்படி அமைதியா இருக்கீங்களே..” என்று பாஸ்கர் சொல்ல,

“அதெல்லாம் எதுமில்ல பாஸ்கிண்ணா…” என்றாள் மானசாவும்.

அவன் மனதிலும் எதோ ஒன்று இருக்கிறது என்று அவளுக்கும் புரிய, அவள் மனதிலும் ஒரு மாற்றம் இருக்கிறது என்று அவனுக்கும் தெரிய, இருவருமே தங்களை வெளிப்படுத்திவிடுவோமோ என்ற நிலையிலேயே மௌனித்துப் போயினர்.

சித்துவும் “நீயா எதுவும் உளறாதடா..” என,

“நானு.. ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..” என்ற பாஸ்கர் பாடம் நடத்தத் தொடங்க, சித்திரைச் செல்வன் எழுந்து வெளியே வந்துவிட்டான்.

“பாஸ்கிண்ணா.. சண்டை எல்லாம் எதுவுமில்ல..” என்று மானசா சொல்ல,

“இல்லைன்னா சரிதான்..” என்றவனும் விட்டுவிட்டான்.

வகுப்பு முடியவுமே மானசா கிளம்பிட, ஷில்பா “எடி மனு.. கொஞ்சம் திங்க்ஸ் வாங்காம்..” என,

“ரூம் போயிட்டு ஸ்டோர் போவோமா??!!” என்றாள் மானசா.

“ம்ம் ஓகே..” என்று இருவரும் கிளம்பிட, ஏனோ பாஸ்கருக்குத் தான் அங்கே வெறுமையாய் இருந்தது.

‘ச்சே என்னடா இது..’ என்று.

அடுத்த வாரமிருந்து இந்த வகுப்புகள் இருக்காது இல்லையா, ஆக தாங்கள் எடுக்கும் வரைக்கும் இங்கே நல்லவிதமாய் எடுத்து முடித்திட எண்ணினான். இவர்கள் ஆளுக்கு ஒருபக்கமாய் கிளம்ப, அவனால் யாரையும் இழுத்து வைக்க முடியவில்லை.

ஷில்பாவும், மானசாவும் அறைக்கு வந்தவர்கள், தங்களின் நோட்டுப் புத்தகங்களை வைத்துவிட்டு, அங்கே ஹாஸ்டல் வெளியே தள்ளி இருக்கும் ஸ்டோர் செல்ல, அங்கே பெண்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கும்.

பொதுவாய் இந்நேரம் கூட்டம் இருக்காது, ஆக, ஷில்பா உள்ளே சென்று அவளுக்குத் தேவையானதை வாங்க, மானசா ஸ்டோருக்கு வெளியே இருக்கும் பூங்கா போன்ற அமைப்பில் உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

ஏனோ எதிலும் மனம் லயிக்கவில்லை..!!

எதுவும் பிடிக்காதது போன்ற ஒரு மாயத் தோற்றம்..!!

கல் பெஞ்சில் அமர்ந்தபடி கால் ஆட்டி அமர்ந்திருக்க, பார்வை எல்லாம் வெளியே வெறித்தபடி இருந்தது.

தனக்கு என்னானது??!! என்ற கேள்வி அவளுக்கு இருந்தாலும், அந்த ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கிட அவள் மனம் நாட்டம்கொள்ளவில்லை.

அப்படியே இதே அமைதியிலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்டு இருக்க “மனு…” என்று ஷில்பா இரண்டு முறை அழைத்தது எல்லாம் அவளின் செவிகளில் விழவே இல்லை.

“எடி… மனு…” என்று ஷில்பா அவளின் முதுகில் ஒரு போடு போட,

“ஷ்..!! என்ன டி..” என்று திரும்பியவள், அவளின் முறைப்பு கண்டு “என்ன சிப்ஸ்..” என,

“எந்தா ட்ரீம்ஸா…??!!” என்றாள், அவளை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து.

“ஆமா ட்ரீம்ஸ்  நீ வேற..” என்றவள், “எல்லாம் வாங்கியாச்சா..?? போலாமா..” என,

“எந்தா மனு.. ஹெல்த் ஏதும் செய்யுதா??” என்று அக்கறையாகவே விசாரித்தாள் ஷில்பா.

“இல்லையே..” என்று மானசா தலையை மறுப்பாய் ஆட்ட, “ம்ம் என்னவோ நீ சரியில்ல..” என,

“அதெல்லாம் எதுவும் இல்லை.. வா போலாம்.. போய் ஏதாவது படம் பாக்கலாம்..” என்று அழைத்துக்கொண்டு சென்றாள்.

மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால், மதியமே மானசா ஊருக்குக் கிளம்பிட, ஷில்பாவும், பாஸ்கரும் அவளை பஸ் ஏற்றிவிட கிளம்ப, சித்திரைச் செல்வன் அசையாது தான் இருந்தான்.

மானசாவின் பார்வை ஒவ்வொரு முறையும் அவனை தொட்டு மீள, “டேக் கேர் மானசா.. கனவே அவர் விசஸ் டூ யுவர் டாட்…” என்று எதுவோ கடமைக்கு சொல்பவன் போல் சொல்ல,

“தேங்க்ஸ்…” என்று சொன்னவளின் கண்களில் ஏனோ ஒரு நீர் படலம் சட்டென்று உருவாகிவிட,

நல்லவேளை அதனை ஷில்பாவும், பாஸ்கரும் கவனிக்கவில்லை. ஆனால் சித்திரைச் செல்வன் கண்டுவிட, சட்டென்று அவளின் அருகினில் வந்து “ஷ்.. என்ன மனு இது..” என்றான் ஒருவித இறங்கிய குரலில்.

“இல்ல ஒண்ணுமில்ல..” என்றவள் “நான் போறேன்..” என,

“ம்ம்ச். எப்பவும் அப்படி சொல்லக் கூடாது.. போயிட்டு வர்றேன் சொல்லணும்..” என்றான், கடிந்து.

அவனின் குரலில் ஏற்பட்ட மாற்றம் கண்டு, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “நான்.. நான் ஏதாவது உங்கள ஹர்ட் பண்ணிருந்தா ஐம் ரியல்லி சாரி..” என, இதனை அவள் சொல்வதற்குள், அவள் கண்கள் காட்டிய பாவனையும், அவள் இதழ் காட்டிய நடுக்கமும் சித்திரைச் செல்வனை வெகுவாய் அசைத்துவிட்டது.

இவர்கள் வகுப்பில் தான் இருந்தார்கள். அப்படியே கிளம்பி ஹாஸ்டல் சென்று மானசா அவளின் லக்கேஜ் எடுத்து வந்தால், அழைத்து கொண்டு சென்று விட்டு வருவோம் என்றுதான் ஷில்பாவும் பாஸ்கரும் கிளம்பி இருக்க, மானசாவின் உள்ளமோ சித்துவும் வரவேண்டும் என்று ஆசை கொண்டது.

அவனோ அதனை தவிர்க்கவே விரும்பித்தான் அப்படி கடமைக்கு பேசியது, ஆனால் மானசாவின் கண்களில் இப்படியொரு நீர் படலம் தெரியவும், அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதிலும் இப்போது அவள் ‘சாரி..’ வேறு கேட்க, மிகவும் வேதனை ஆகிப் போனது அவனுக்கு.

என்ன நினைத்தானோ “ஷில்பா..” என்று அழைக்க, அவள் திரும்பவும் “நீ போய் மானசா லக்கேஜ் எடுத்துட்டு வெளிய வா.. நான் இவளை கூட்டிட்டு வர்றேன்..” என, மானசாவே கூட அவனை வியந்து தான் பார்த்தாள்.

“டேய் நீயும் போடா..” என்று பாஸ்கரிடம் சொல்ல, இருவரையும் மாறி மாறி பார்த்தவன் “ம்ம்..” என்று சொல்லி நடக்க, அவனோடு  ஷில்பாவும் இவர்களை திரும்பிப் பார்த்தபடி நடக்க,

“இப்போ ஏன் அவங்களை போகச் சொன்னீங்க?” என்றாள் மானசா.

“நீ ஏன் இப்போ அழுத?? ஏன் இப்போ சாரி கேட்ட??” என்று அவனும் கேட்க,

“இ.. இல்ல.. அது.. நான் ரொம்ப ஓவரா தான் நடந்துக்கிட்டேன்.. அதான்..” என்றாள் ராகமாய் இழுத்து.

“அப்படின்னு நான் சொன்னேனா??!!” என்றவனின் குரலும் பார்வையும் முற்றிலும் தளர்ந்து போயிருக்க,

“நீங்க நெறைய டைம் சொல்லிருக்கீங்க..” என்றாள் பிகுவாய்.

“அதெல்லாம் கோவத்துல சொல்றது… சீரியஸா நான் உன்னை தப்பா நினைச்சது இல்லை.. ஓகே வா..” என,

“அப்.. அப்போ ஏன் என்னோட நீங்க சரியா பேசலை..” என்றாள் மீண்டும் குரலில் பிசிருடன்.

இதற்கு அவன் என்ன பதில் சொல்வான். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது பெண்ணே.. உன்பால் என் மனம் சலனப் படுகிறது அதனால் தான் பேசாது இருக்கிறேன் என்று அவனால் சொல்லிட முடியுமா??!!

“கொஞ்சம் ஸ்டடீஸ் ப்ரெஷர் அதான்..” என்றவன் “பர்ஸ்ட் கண்ணைத் தொட மனு…” என, அப்போது தான் அவனின் ‘மனு..’ அவளுக்குப் புரிந்தது.

பார்வையை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், புன்னகைத்தபடியே கண்களைத் துடைத்துக் கொண்டு, வழக்கம் போல, அவளின் கேசத்தை கோத “ம்ம் இந்த முடியையும் சேர்த்து கிளிப் போட்டா என்ன..??” என்றான் சித்திரைச் செல்வன்.

“அப்படி போட்டா ஃபேஸ் மொழுக்கட்டீர்னு இருக்கும் அதான்…” என்றவளுக்கு இன்னமும் புன்னகை விரிந்தது.

“ம்ம் குட்.. எப்பவும் நீ இப்படித்தான் இருக்கணும்..” என்றவன் “வா போவோம்..” என,

“நீங்க ஒன்னும் கிளம்பி நிக்கலையே..” என்றாள்.

“ஓகே.. சரி நீ கிளம்பு…” என்று வாசல் நோக்கி சித்திரைச் செல்வன் கரம் நீட்ட, “நிஜமா நான் கிளம்பிடுவேன்..” என்றாள் பாவனையாய்.

“ம்ம்ம் கிளம்பு .. டைம் ஆச்சுல்ல..” என்று அவனும் சொல்ல,

“இதோ போறேன்..” என்றவள், அறையின் வாசல் வரைக்கும் சென்று திரும்பிப் பார்க்க,

“நீ போ.. நான் இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வர்றேன்.. ஆபிஸ்ல கொஞ்சம் வேலை வேற இருக்கு..” என,

“ஓகே.. அப்போ யூ கேரி ஆன்…” என்றாள் மனதே இல்லாது.

அதற்குமேல் சித்திரைச் செல்வனும் எதுவும் சொல்லவில்லை. அவள் நல்லபடியாய் ஊர் சென்று வரட்டும் என்ற நினைப்பு மட்டுமே இருக்க “டேக் கேர்..” என்று மட்டும் சொல்லி அனுப்ப, மானசா மனதே இல்லாது தான் நடந்து வந்தாள்.

அவ்வப்போது பின்னே திரும்பி வேறு அவன் வருகிறானா என்று பார்க்க, இவள் நடந்து வந்ததில் அவர்களின் விடுதி தான் வந்தது.

சற்று தள்ளி ஷில்பாவும், பாஸ்கரும் நிக்க “மனு சைன் மட்டும் பண்ணிட்டு வா…”  என்று ஷில்பா சொல்ல, அவளும் உள்ளே சென்று பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு வர,

“அவன் எங்க??!!” என்றான் பாஸ்கி.

“ஆபிஸ்ல எதுவோ வொர்க் அப்படின்னு சொன்னாங்க..” என,

“ஓ!! சரி… ஒரு ஆட்டோ கூப்பிடவா.. இங்க இருந்து வெளிய போகணும்.. நடந்து போக லேட் ஆகும்..” என்று அவன் சொல்லவும்,

“ம்ம்..” என்றவளின் பார்வை திரும்பித்தான் பார்த்தது அவன் வருகிறானா என்று.

அவன் வரவில்லை.

வரமாட்டான் என்று புத்தி சொன்னாலும், வந்தால் என்ன என்று மனது ஏங்கியது..

போன முறை அவனோடு கோபித்துக்கொண்டு சென்றது என்ன, இப்போது செல்லவே மனமில்லாது செல்வது என்ன.. தன்னை நினைத்து அவளுக்கே விந்தையாகிப் போனது.

பாஸ்கர் அதற்குள் ஒரு ஆட்டோவினை அழைத்திருக்க “ம்ம் வா மனு..” என்று ஷில்பா சொல்லவும் அமைதியாகவே ஏறி அமர்ந்தாள்.

“பிஸ்கட் வாட்டர் பாட்டில் எல்லாம் இருக்கா…??” என்று பாஸ்கர் கேட்க,

“எல்லாம் உண்டு சேட்டா…” என்று ஷில்பா சொல்லிக்கொண்டு இருக்க,

“மானசா நீ உங்க வீட்ல சொல்லிட்டியா?? இப்போ கிளம்பினா அங்க போக எப்படியும் நைட் ஆகிடும் தானே…” என்றான் பாஸ்கர்.

“ம்மா.. எஸ்ணா… சொல்லிட்டேன்.. அப்பா கார் அனுப்புறேன் சொல்லிட்டார்..” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை.

பாஸ்கருக்கு என்னவோ புரிந்தது போலவும் இருந்தது, அதே நேரம் தானாக எதையும் கேட்கவும் அவன் விரும்பவில்லை. ஆக அமைதியாகவே வர,

“பாஸ்கி சேட்டா கார் கொண்டு வந்திருந்தா மெய்ன் பஸ் ஸ்டாண்ட்லையே டிராப் பண்ணிருக்கலாம்…”  என்று ஷில்பா சொல்ல, இதெல்லாம் எதுவுமே அவள் செவிகளில் எட்டவில்லை.

பல்கலைகழகத்தின் நுழைவு வாயிலில் வந்து ஆட்டோ இவர்களை இறக்கிவிட, அதற்கு பணம் கூட பாஸ்கி தான் கொடுத்தான். சுற்றிலும் இருக்கும் எதுவும்.. எதுவுமே மானசாவிற்கு இப்போது மனதினில் பதியவில்லை.

“நீ பார்த்து போயிடுவியா??!!” என்று பாஸ்கர் கேட்ட பிறகு தான், சிறிது சுயம் உணர்ந்தவள் “ஹா..!! அதெல்லாம் போயிடுவேன் பாஸ்கிண்ணா…” என, மேலும் ஒரு பத்து நிமிடம் காத்து நின்றனர், டவுன் பஸ் வர.

“ஆட்டோலையே அங்க போயிருக்கலாமோ…” என்று ஷில்பா சொல்லவும் தான்

‘அட ஆமால்ல..’ என்று தோன்றியது பாஸ்கிக்கு.

“இருக்கட்டும் சிப்ஸ்.. இப்போ பஸ் டைம் தானே..” என்றவளின் மனதோ பஸ் மெதுவாய் வந்தால் தேவலாம் என்று எண்ணியது.

ஆனால் அவளின் நேரமோ என்னவோ, அடுத்த இரண்டு நிமிடங்களில் பேருந்து வந்துவிட கூட்டம் அதிகமில்லை. கோவை செல்லும் பேருந்து இந்த நேரத்திற்கு தான் இவர்களின் பல்கலைகழகம் முன்னே வரும். அதனை கணக்கிட்டுத்தான் பாஸ்கர் அழைத்து வர, அந்த பேருந்தும் வந்துவிட

“டேக் கேர்.. போயிட்டு போன் பண்ணு..” என்று அவர்களும் சொல்ல, ஒருவித கனத்த மனதுடனே ஏறி அமர்ந்தாள் மானசா.

இவர்களைப் பார்த்து தலையை ஆட்டியவள், தன் பார்வையை சற்று தொலைவு வரை செலுத்தினான், அவன் வருகிறானா என்று பார்க்க.

எப்போதுமே, உடனே கிளம்பிவிடும் பேருந்து இன்று இன்னமும் கிளம்பாது நிற்க ‘சித்து சர் வாங்களேன்..’ என்று அவளின் உள்ளம் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கத் தொடங்க, இது அவனுக்குக் கேட்டதோ என்னவோ, முதுகலை மாணவன் ஒருவனோடு இணைந்து அவனின் பைக்கில் வந்துகொண்டு இருந்தான் சித்திரைச் செல்வன்.

முதலில் மானசா இதனை கவனிக்கவில்லை, யாரோ வருகிறார்கள் என்ற எண்ணத்தில் ஒருவித வெறித்த பார்வை பார்த்து அமர்ந்திருக்க “என்னடா இன்னும் பஸ் கிளம்பலையா??!!” என்ற சித்திரைச் செல்வனின் குரல் கேட்டு, பட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

அங்கே ஷில்பாவோடும் பாஸ்கரோடும் அவனும் நிற்க, அவளுக்கு என்னவோ கத்தி அழவேண்டும் போல் இருந்தது.!!

நெஞ்சு அடைத்துக்கொண்டு வர, கண்களில் பொல பொலவென்று கண்ணீர் சொரிய, அவர்கள் பக்கம் பார்க்காது அப்படியே தலையை குனிந்து அமரந்துகொண்டாள்.

ஏனோ அந்த நொடி அவனைப் பார்க்கும் தைரியம் அற்றுப்போனது மானசாவின் மனதிற்கு..

Advertisement