Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 30

முனீச் பல்கலைகழகம்..

சித்திரைச் செல்வனின் குரல் அந்த அறை முழுவதும் ஒலித்துக்கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட முப்பது பேருக்கும் மேலே இருந்தது. அதில் இருபதுக்கும் மேலே ஆராய்ச்சி மாணவர்கள்.

நீலும், மானசாவும் கூட அடக்கம்..

அவன், எழுதியிருந்த ஆர்ட்டிக்கில் சம்பந்தமாகவும், பங்கேற்கப்போகும் சிறப்பு வகுப்பிற்கு சம்பந்தமாகவும், அதுபோக, அங்கிருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் கேட்ட சந்தேகங்களும் பதில் சொல்லும் விதமாகவும் பேசிக்கொண்டு இருந்தான்.

இந்தியாவில் இருந்து இவனோடு மற்றொரு பெண் தேர்வாகியிருக்க, கடைசி நேரத்தில் அப்பெண்ணால் வர முடியாத நிலை என்பதால், சித்து மட்டுமே அங்கே.

கிட்டத்தட்ட அரைமணி நேர பேச்சு அவனது.. நேரம் செல்ல செல்ல, மானசாவோ அவனின் பேச்சினில் மூழ்கிப்போனாள். பேச்சு காதில் விழுந்ததோ இல்லையோ, அவன் நிற்கும் விதம், பேசும் விதம், பேச்சினில் இருக்கும் அவனின் ஆளுமை, அவன் படிப்பினில் ஆழ்ந்த அறிவு.. எல்லாம்.. எல்லாமே அவளின் கண்ணில் பட்டு கருத்திலும் பதிந்துகொண்டு இருந்தது.

சித்திரைச் செல்வனை, ஒரு தனி மனிதனாய், அவனை மதிப்பீடு செய்துகொண்டு இருந்தாள். இதற்கும் அவளுக்கு அவன் புதியவன் அல்லவே.

ஆனால் இன்றோ புதிதாய் தான் தெரிந்தான்..

அனைத்தையும் தாண்டி மானசாவின் கண்கள் அவனை ரசிக்கத்தான் செய்தது…

அவளின் அருகே அமர்ந்திருந்த நீல் கூட சித்திரைச் செல்வனிடம் எதுவோ கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்க, சுற்றி நடப்பது எதுவுமே அவளுக்கு உணர முடியவில்லை.

பார்வை எல்லாம் அவனின் மேலேதான் இருக்க, இமைக்கும் நொடியில் சித்துவின் பார்வையும் அவளைத் தொட்டுத்தான் மீண்டது..

“எனி க்வரீஸ்….” என்று அவன் கேட்கையில் தான்,

“மனு.. ஆஸ்க் சம்திங்..” என்று நீல் அவளிடம் மெதுவாய் சொல்லவும் தான் அவள் சுற்றியும் பார்வையை ஓட்ட,

“மனு…” என்றான் சற்றே அழுத்தமாய்.

“ஐ டோன்ட் ஹேவ் எனி டபுட்ஸ்.. எவ்ரிதிங் இஸ் கிளியர்..” என்று சொல்லிவிட, அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது.

சித்திரைச் செல்வன் அங்கிருக்கும்  துறை சார்ந்த ஆட்களோடு, ஆசிரியர்களோடும் பேசிக்கொண்டு இருக்க, நீலும், மானசாவும் அவனுக்காக காத்து நின்றனர்.

“நீல் நீவேனா லஞ்ச் அவங்களோட ஜாயின் பண்ணிக்கோ. நான் கேண்டீன் போறேன்…” என,

“ம்ம்ச் மனு…” என்றான் கோபமாய்.

“ரொம்ப பண்ணாத நீல்…” எனும்போதே, “அதை நீ சொல்ற..” என்று அவன் முறைக்க, இப்படியே இவர்கள் பேசியபடி இருக்க, சித்து வந்துவிட்டான்.

“லஞ்ச் போலாமா..??” என்று கேட்டபடி.

“யா போலாம்…” என்று நீல் சொல்ல,

“ஓகே பை…” என்று மனு சொல்ல,

இப்போது நீல் மற்றும் சித்து இருவருமே இவளைத்தான் முறைத்தனர்.

அத்தனை சொல்லியும் கூட இப்படி செய்தால் எப்படி?? என்று சித்து பார்க்க, நீலோ ‘நீ செய்வது சரியில்லை..’ என்று பார்த்தான்.

அன்றைய தினம், நீல் மானசாவை திட்டிவிட்டு செல்ல, சித்திரைச் செல்வன் தான் எதுவோ சொல்லியிருக்கிறான் என்று அவனைத் தேடித்தான் போனாள் மானசா.

அவன் வீட்டில் இல்லாது வெளியே பார்க்கில் இருக்க, அவனோடு நேயாவும் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தாள். அத்தனை எளிதில் யாரிடமும் போகாத நேயா சித்துவோடு ஒட்டியது தான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

சிறிது என்ன சிறிது, நல்ல கோபத்திலேயே மானசா சித்திரைச் செல்வனிடம் சென்று நிற்க, அவனோ கையில் இருக்கும் புத்தகத்தில் மூழ்கியிருக்க, நேயா தான் பார்த்தவள் “மனு…” என, அதில் தான் திரும்பிப் பார்த்தான்.

“நீல் கிட்ட என்ன சொன்னீங்க??” என்று கோபமாய் அவள் கேட்க,

“நான் என்ன சொன்னேன்??” என்றான் தெரியாதவன் போல்.

அவனிடம் சொன்னால் இப்படித்தான் ஏதாவது நடக்கும் என்று தெரியாதா என்ன??!!

“ம்ம்ச் மிஸ்டர். சித்திரைச் செல்வன் ரொம்ப நடிக்காதீங்க.. நான் உங்களை சரியா ட்ரீட் பண்ணலைன்னு நீல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணீங்களா??” என்று எகிற, நேயாவின் பார்வை இவர்களை மீது தான் இருந்தது.

அதுவும் மனு கோபத்தில் குரலை உயர்த்த உயர்த்த, குழந்தையின் பார்வையில் குழப்பமும் பயமும் தெரிய,

“என்ன மனு இது..” என்று அதட்டியவன் நேயாவிடம் “நீ போய் விளையாடு..” என்று சொல்ல, அதுவோ மானசா முகம் பார்த்தது.

“சும்மாடா…” என்று சிரித்து வைத்தவள், “போ.. போய் விளையாடு…” என்றபடி அங்கேயே அவனின் அருகேயே அவளும் அமர, சற்று தள்ளி விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்களை நோக்கி நேயாவும் ஓட,

“ம்ம் இப்போ சொல்லு.. என்ன பிராப்ளம்..” என்றான் சித்து, அவளை நோக்கி திரும்பி அமர்ந்தபடி.

“பிராப்ளம் க்ரியேட் பண்றதே நீங்கதான்.. நான் என்ன உங்களை சரியா ட்ரீட் பண்ணலை.. இதைவிட மரியாதையா எல்லாம் எனக்கு உங்களை ட்ரீட் பண்ண தெரியாது…” என்று படபடக்க,

“நீ மிஸ்டர். சித்திரைச் செல்வன்னு சொல்றதுலையே தெரியுதே எவ்வளோ மரியாதைன்னு..” என்றான் நக்கலாய்.

அவனின் நக்கல் புரிந்து, முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள் மானசா.

“நீ என்னை கேர் பண்ணிப்பன்னு சொல்லிட்டு போனான்.. நீ என்னோட சரியா பேசலைன்னு தான் சொன்னேன்.. வேற எதுவும் சொல்லலை..” என்று சித்து நிதானமாகவே பேச,

“வேற சொல்ல என்ன இருக்கு???” என்றாள் பட்டென்று.

“ஏன் இல்லை??” என்றான் அவனும் அதே வேகத்தில்.

மனு பதில் சொல்லாது உறுத்து விழிக்க, “நீ என்னை தெரியும்னு இங்க சொல்லவே இல்லை தானே.. அதுவே எனக்கு மரியாதை இல்லைதானே.. அட்லீஸ்ட் என்னை தெரியும்னு சொல்றதுக்குக் கூட உனக்கு மனசு இல்லை தானே மனு..” என்று அவன் ஒரு நியாயம் பேச,

‘இதை நீ சொல்லாதே…’ எனும் விதமாய் பார்த்தாள் மானசா.

“பதில் பேசு மானசா.. யாரோ தேர்ட் பெர்சன் போல கூட நீ என்னை ட்ரீட் பண்ணல… இப்போ கூட என்னோட பேசணும்னு நீ வரலை.. நீல் சொன்னதுனால வந்திருக்க..” என,

“உங்களோட பேச எனக்கு என்ன இருக்கு??” என்றாள் இடக்காய்.

விமானம் ஏறி அந்து வம்பு பேச வேண்டும் என்பது இருவரின் விதியிலும் இருக்கிறது போலும்..!!

“ம்ம்ச்.. என்ன இல்லை.. சொல்லு என்ன இல்லை?? அன்னிக்கு நான் சொல்ல வர்றதை நீ கேட்க கூட இல்லை..” என்று அன்று இருந்த அதே இயலாமையில் சித்து இப்போதும் சொல்ல,

“பழசை பேச எனக்கு இப்போ விருப்பம் இல்லை..” என்றாள் முகத்தை இறுக வைத்து.

இப்படியொரு பதிலுக்கு அவன் என்ன சொல்வான்.. இல்லை பேசித்தான் ஆகிடவேண்டும் என்று கட்டாயம் செய்ய முடியுமா?? என்ன செய்வது என்று தெரியாது அவளின் முகம் பார்த்து அப்படியே அமர்ந்துபோக, அவளுமே சில நொடிகள் மௌனத்தில் தான் கழித்தாள்.

பழசை சண்டைக்காக கூட பேசிட அவளுக்கு இஷ்டமில்லை. அதுதான் நிஜம்..

இவர்கள் இப்படியே ஆடாது அசையாது அமர்ந்திருக்க நேயா இவர்களிடம் ஓடிவந்தாள். அவள் என்னவோ சும்மா தான் வந்தாள். அவள் வந்ததுமே “வா போவோம்..” என்று மானசா அழைக்க, அவளோ இப்போது சித்துவின் முகம் பார்க்க,

“நேயா…” என்று ஒரு அதட்டல் போட்டாள் மானசா..

அதுவோ மிரண்டு விழிக்க, “ம்ம்ச் மனு..” என்று அதட்டியவன் “யூ கோ பேபி..” என்று மீண்டும் விளையாட அனுப்பி வைத்தவன்,

“நீ ஏன் மனு இப்படி மாறிட்ட..??” என, அதுவரைக்கும் பொறுமையாய் இருந்தவள்,

“வாட்?? கம் அகைன்..?? நான்.. நான் மாறிட்டேன்.. அதுவும் ஏன் இப்படி மாறிட்டன்னு நீங்க கேட்கிற அளவுக்கு.. வாவ்.. வாட் எ காமடி..” என்று தானாகவே கை தட்டி சிரித்தவள்,

“சேஞ்சஸ் பத்தி நீங்க பேசுறீங்களா??” என்றாள் கண்களில் அனல் கக்கி.

அவள் கண்களில் தெரிந்த சீற்றம் கண்டு நிஜமாகவே சித்திரைச் செல்வன் ஒரு நொடி அரண்டுத்தான் போனான்..

“சொல்லுங்க சித்து சர்.. நான்.. நான்..” என்று அவள் எதையோ சொல்ல வர, அவன் கண்களில் சடுதியாய் வெளிப்பட்ட ஆவல் கண்டு அப்படியே தன்னையே அடக்கிக்கொண்டவள்,

அவன் முன்னே விரல் நீட்டி “ஜஸ்ட் நீங்க இங்க எதுக்கு வந்தீங்களோ அதை மட்டும் பார்த்துட்டு போனா நல்லது மிஸ்டர். சித்திரைச் செல்வன்..” என, நீட்டிய விரலை மட்டுமல்லாது, அவள் கையை பிடித்து கீழிறக்கியவன்,

“எஸ் கண்டிப்பா… இங்க வர்றப்போ என் லைப்காக ஒரு முடிவு எடுக்கனும்னு தான் வந்தேன்..” என, மானசாவிற்கு அது மேலும் கோபத்தை தான் கிளப்பியது.

கோபம் என்பதனை தாண்டி ‘இன்னுமா இப்படி..’ என்ற உணர்வு..

அவனின் பிடியில் இருந்து தன் கரத்தினை விடுவித்துக்கொள்ள அவள் முயல, அதுவோ முடிவேனா என,

“எப்பவுமே உங்களுக்கு உங்களோட டெசிசன்ஸ் மட்டும் தானே முக்கியம்.. அடுத்தவங்களோட பீலிங்க்ஸ் எல்லாம் முக்கியமா என்ன..?? நீங்க மாறவே இல்லை..” என்றாள் சொற்களை கடித்துக் குதறி.

கையை விட மானசாவிற்கு ஏனோ அந்த நொடி மனம் மிக மிக வலித்தது. தன்னை இங்கே கண்டதினால் சரி, இல்லையெனில் அப்போதென்ன முடிவு எடுத்திருப்பான். பார்த்ததுமே அப்படியே பாசம் வந்துவிட்டதா என்ன??!!

“நீ என்ன சொன்னாலும் சரி.. நீ இப்படி என்னை யாரோ போல பாக்குறது, பேசுறது எல்லாம் என்னால இப்போ இங்க அக்சப்ட் பண்ணிக்க முடியாது மானசா..” என்றான் அவனும் ஒரு முடிவிற்கு வந்தவனாய்.

“ஓ..!! சரி சொல்லுங்க நான் ஏன் உங்களை எனக்கு தெரிஞ்சவர் போல காட்டிக்கணும்?? வீ க்னோ ஈச் அதர்னு நான் ஏன் மத்தவங்கக்கிட்ட சொல்லணும்…?? டெல் மீ..” என்று கேட்க, சித்திரைச் செல்வனுக்கும் அமைதி விட்டுப் போனது.

“ஏன் உனக்குத் தெரியாது??” என்றவன் அவளின் கைகளை உதற, அவனின் பிடியில் இருந்து வெளி வந்த அவளின் கரம் பார்த்தவள்,

“இப்போ நீங்க பண்ணதை தான் அன்னிக்கு வார்த்தைல சொன்னீங்க.. இட்ஸ் இனப்… நான் இங்க வந்ததே நிம்மதியா இருக்கணும்னு… என்னவோ நீங்களும் இங்க வர வேண்டிய சூழ்நிலை.. நீங்க உங்க வேலையை பாருங்க.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. இப்போ என்ன மத்தவங்க முன்னாடி நான் உங்களை அவாய்ட் பண்ண கூடாது.. அதானே.. பார்த்துக்கலாம்..” என்றவள் அவன் பதில் சொல்லும் முன்னமே,

“நேயா…” என்றழைத்து, அவளையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.

இப்போதும் கூட போகும் அவளை பார்த்துக்கொண்டு நிற்கத்தான் அவனுக்கு முடிந்தது. பின்னோடு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், இருக்கும் இடம் கருதி, அவளின் மரியாதை கருதியும் சித்து அமைதியாக நின்றுவிட, அடுத்து மானசா சித்திரைச் செல்வனை யாரின் முன்னமும் அவள் தவிர்க்கவில்லை.

அவனோடு நேருக்கு நேரே பேசவில்லை என்றாலும், அவனிருக்கும் இடங்களில் அவளும் இருந்தாள்.

இன்றோ, தான் கிளம்புவதாய் சொல்ல, அதை ஆண்கள் இருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை.

அவளுக்கோ அன்றென பார்த்து பழைய சங்கதிகள் எல்லாம் படையெடுக்க, சித்திரைச் செல்வனை நிமிர்ந்து காண்பதை கூட தவிர்த்தாள். அவர்கள் காதல் மட்டும் நல்ல முறையில் இருந்திருந்தால், இந்நேரம் இருவரும் ஜோடியாக அல்லவா இங்கே வந்திருப்பர்.

இங்கே என்ன இங்கே.. எங்கே இருந்திருந்தாலும், அவர்களின் வாழ்வு அழகானதாய் அமைந்திருக்குமே..!!

நினைத்து நினைத்து அவளுக்கு ஏனோ ஒரு ஏக்கம் பெரியதாய் போனது… அப்படி என்ன என்னிடம் குறைகண்டான் அன்று.. ‘நமக்கு செட்டாகாது…’ என்று சொல்லும் அளவு அப்படியென்ன ஆகிப்போனது???!!

நினைக்க நினைக்க, அவளுக்கு அங்கே இருக்கவும் முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை.

“நோ நீல்.. ஐம் நாட் பீலிங் குட்.. நீங்க லஞ்ச் போங்க..” என்றவள் கிளம்பி வீட்டிற்கே வந்துவிட்டாள்.

அவளுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கும்தானே.. எத்தனை நேரத்திற்கு அவளும் எதுவும் தெரியாதவள் போல, ஒன்றும் நடவாதவள் போல இருந்திட முடியும்.

இன்று முடியாதென தோன்ற கிளம்பி வந்துவிட்டாள்.

டேவிட் வீட்டினில் அவனும் சரி அவனின் மனைவியும் சரி மாலை தான் வீடு வருவர். அவர்கள் வரும் நேரம்தான் நேயாவும் வருவாள். ஆக இப்போது யாருமில்லை என்பதால் மானசாவால் வெகு நாளைக்கு பிறது சுதந்திரமாய் அழுதிட முடிந்தது.

ஏதேதோ எண்ணங்கள்… என்னென்னவோ யோசனைக்கள்…

இதுநாள் வரைக்கும் எதிர்காலம் பற்றி அவள் சிந்திக்கவே இல்லை..

அப்பாவும் அக்காவும் எத்தனை முறை கேட்டிருப்பர்.. யாருக்குமே மானசா பிடிகொடுக்கவில்லை.. மறைத்து மறைத்து தனக்குள்ளே வைத்திருந்த வலிகள் எல்லாம் இப்போது விழி வழியாய் வெளிவர, அழுது தீர்க்கத்தான் முடிந்தது அவளால்.

நேரம் செல்ல செல்ல, அப்படியே உறங்கியும் போனாள் போல. ‘மனு….’ என்ற ஜெனியின் குரலில் தான் விழித்தாள்.

கண் விழித்து எழுந்து அமர்ந்தவளின் முகத்தினை ஜெனி வித்தியாசமாய் பார்க்க, “என்ன ஜெனி..” என்றாள் சோர்வாய்.

“டிட் யூ க்ரை??” என்று ஜெனி கேட்க, வேகமாய் முகத்தினை அழுந்த துடைத்தவள்,

“நோ யா..” என்றாள் சாதாரணமாய் சொல்வது போல்.

“தென் பேஸ் எப்படியோ இருக்கு…” என்று அவள் கேட்க, “நத்திங்.. பீலிங் நாட் வெல்..” என்றபடி எழுந்து, அவளின் அடுத்த கேள்வியில் இருந்து தப்பிக்க ரெஸ்ட் ரூம் நுழைந்துகொண்டாள்.

அதற்குள் ஜெனி, டேவிட்டிடம் என்ன சொன்னாளோ, மானசா வெளிவருகையில், “மனு…” என்ற அவனின் அழைப்புக் கேட்க,

“யா கம்மிங் டேவிட்…” என்றபடி மனுவும் அங்கே செல்ல, நேயா முதற்கொண்டு அவளைத்தான் பார்த்தனர்.

“வாட் ஹேப்பன்??” என்ற டேவிட்டிற்கு பதில் சொல்லாது, ஜெனியை முறைக்க,

“நான் கேட்டா எனக்கு பதில் சொல்லு மனு..” என்றான்.

“நிஜமா ஒண்ணும்மில்லை.. ஐம் ஆல்ரைட் டேவிட்.. ஜஸ்ட் கொஞ்சம் எப்படியோ இருந்தது. அவ்வளோதான்.. இப்போ ஐம் டோட்டலி ஓகே..” என்று இரு கைகளையும் விரித்து சொல்ல,

“ஹ்ம்ம்.. சரி… ராபர்ட் கால் பண்ணான்.. நெக்ஸ்ட் வீக் ராபர்ட் அண்ட் தனு இங்க வர்றாங்க..” என, சந்தோசிப்பதற்கு பதிலாய், அவளுக்கு திக்கென்று இருந்தது.

Advertisement