Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 08.
ஊட்டியிலிருந்து திரும்பி வந்திருந்த பவானியும், பரணிதரனும் அப்போது தான் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நேரம் மாலை ஐந்து மணி.
தங்களது பயணப்பைகளை ஹாலில் வைத்து நிமிர்ந்தவர்களின் கண்கள்,  அங்கு நின்ற கோதை நாயகி, திவ்யாவின் முகங்கள் காட்டிய அளவுக்கதிகமான மலர்ச்சியை குறித்துக்கொள்ளத் தவறவில்லை.
வீட்டினுள் நுழையும் போதே பவானியின் உள்ளுணர்வு ஏதோ உணர்த்த ஹாலில் இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை பார்த்தாள். 
புத்தம் புது ரோஜா மாலையோடு சிரித்தபடி இருந்தார்கள் இருவரும். அந்த ரோஜாப்பூ வாசனையுடன் கலந்து வந்த மஞ்சள் வாசனை அவளுக்கு ஏதோ உணர்த்த, சட்டென்று திரும்பி பார்த்தாள் திவ்யாவை.
அவளுக்கு புரிந்து விட்டது என்பது திவ்யாவுக்கும் புரிந்து விட தன் இருகைகள் கொண்டு தம்பி மனைவியின் கண்களைப் பொத்தி வீட்டினுள் நடத்திச் சென்று நிறுத்தியவள் அவள் கண்களிலிருந்து தன் கைகளை விலக்க
அங்கே பெண்கள் இருவரின் அறையில் கிழக்கு பார்த்த முகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் கன்னங்கள் இரண்டிலும் சந்தனம் பூசி அலங்காரம் செய்யப்பட்ட குட்டிப் பூந்தேராய் அமர்ந்திருந்தாள் பவித்ரா…
இன்று காலை  பவித்ராவின் பின்னோடு  ஆட்டோவிலிருந்து இறங்கிய  பெண்மணி தன்னை பவித்ரா பயிலும் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதோடு “பவித்ரா வயதுக்கு வந்திருப்பதாகவும், பள்ளியின் சார்பாக வீட்டில் கொண்டு வந்து விட்டுச் செல்ல வந்ததாகவும்” கோதையிடம் கூறினார். 
 அந்த பள்ளியில் இந்த மாதிரி சூழ்நிலையில் பெண் பிள்ளைகளை ஒரு ஆசிரியரின் துணையோடு பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விட்டு வருவதை  ஒரு நடைமுறையாகவே வைத்திருந்தார்கள்.
ஆசிரியர் சொன்ன விஷயம்  கோதை நாயகிக்கு மிகுந்த ஆச்சர்யத்தையேக் கொடுத்தது.
ஆனால் அதைக் காட்டிக்கொள்ள இது நேரமல்ல என்று உணர்ந்தவர் போல், பொறுப்பாக தன் வீட்டுப் பெண்ணை வீடு வரை கொண்டு வந்து ஒப்படைத்தவருக்கு டீ கொடுத்து உபசரித்து நன்றி சொல்லியே அனுப்பினார்.
அதன்பிறகு சூடாக ஒரு கப் பால் கொடுத்து பவித்ராவை குடிக்கவைத்த கோதை நாயகி,  கொஞ்சம் பயந்தாற் போல் நின்றவளின் முதுகை ஆதரவாகத் தட்டிக் குடுத்தபடியே,”பயந்துக்காத பவி! இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்குறது தான். இப்படி எல்லாம் நடக்காட்டா தான் பயப்படவேணும்” என்று தைரியப்படுத்த
“ம்ம்ம்…அக்கா சொல்லிக் குடுத்துருக்கா அத்தம்மா…” என்றாள் அவள்.
பவானி தன் தங்கையை இந்த நிகழ்விற்காக முன்னரே மனதளவில் தயார்படுத்தியிருப்பது புரிய மெச்சிக்கொண்டார் தன் மருமகளை.
இரண்டு பெண்களுக்கு எல்லாம் செய்தவர் தான் கோதை நாயகி. என்றாலும் இப்போது ஒருவித பரபரப்பு  உடம்பில் ஒட்டிக்கொள்ள திவ்யாவை ஃபோனில் அழைத்து விஷயத்தைக் கூற, அடுத்த பத்தாவது நிமிடம் இங்கு இருந்தாள் திவ்யா.
திவ்யாவிற்கும் இந்த விஷயம் ஆச்சர்யமே. பத்து வயதிலிருந்தே பெண்கள் பூப்படையும் காலகட்டமிது. அப்படி இருக்கையில் பதினைந்து வயதுக்கு பிறகு என்பதே ஆச்சர்யமாகத் தான் பார்க்கத் தோன்றியது.
வீட்டுக்கு வந்த திவ்யாவை வாசலிலேயே எதிர்கொண்டார் கோதை. அதுவே அவரின் பரபரப்பின் அளவைக் காட்டியது திவ்யாவுக்கு.
“பவானிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடலாமா?” என்று கேட்ட அன்னைக்கு
“எப்படியும் இன்னைக்கு சாயங்காலத்திற்குள்ள ரெண்டு பேரும் கிளம்பி வர்றதாத் தான் ப்ளான் ம்மா. அதனால நாம ஃபோன் பண்ணிச் சொல்லி அவளை டென்ஷன் படுத்த வேணாம். வந்தே தெரிஞ்சிக்கட்டும்” என்று திவ்யா சொல்ல அதுவே சரியென்று பட்டது கோதைக்கும்.
பேசிக்கொண்டே இருவரும் பவி இருக்கும் ரூமிற்குள் வர திவ்யாவைக் கண்டதும் பவித்ரா லேசாக வெட்கத்துடன் சிரித்தாள்.
“ஹேய்… உனக்கு வெட்கப்படக் கூடத்தெரியுமாடி?” லேசாக அவள் தலையைப்பிடித்து ஆட்டிக்கொண்டே கலாய்த்தாள் திவ்யா.
பின் நல்ல நேரத்தில் வேப்பிலை கலந்த மஞ்சள் நீரில் பவித்ரா வை குளிக்க வைத்து,  தந்தையுடன் கடைக்கு போய் தான் எடுத்து வந்திருந்த பட்டுப் பாவாடை தாவணியை அணிவித்து அழகாக ஆனால் எளிமையாக அலங்காரம் செய்து விட்டிருந்தாள் திவ்யா.
குட்டிப்பூந்தேராய் தன் தங்கையை இப்படி மங்களகரமாக கண்டவுடன் பவானியின் நெஞ்சம் விம்மிற்று.
சின்னவளை நோக்கி தன் கைகளை நீட்ட, நீட்டிய கைகளுக்குள் வந்து அடைக்கலமானாள் பவித்ரா.
தங்கையின் கன்னம் தடவி முத்தமிட்டு விடுத்தவள், உண்மையிலேயே இந்த சூழ்நிலையை நினைத்து எத்தனை நாட்களோ கலக்கமடைந்திருக்கிறாள் தான்.
‘தனக்காவது அந்த சமயத்தில் பாட்டி இருந்தார்கள். ஆனால் தன் தங்கைக்கு நான் மட்டுமே. ஒருவேளை நான் அலுவலகம் போயிருக்கும் நேரத்தில் தன் தங்கை இந்த சூழ்நிலையை சந்திக்க நேரிட்டால் என்ன செய்வது?’ என்று அவள் கலங்காத நாளில்லை.
ஆனால் இன்றோ தான் எண்ணித் தவித்தபடி இல்லாமல் அதற்கு நேர்மாறாக ஒரு குடும்ப சூழ்நிலையில் தன் தங்கை தன் பருவத்தின் அடுத்த கட்டத்துக்கு சென்றிருப்பதை பார்த்தவளுக்கு மனது நிறைந்து போனது.
இந்த குடும்ப சூழ்நிலை தங்களுக்கு கொடுத்தது தன் தலைவனோடான திருமணம் என்றாலும் முகம் சுளிக்காமல் தன் தங்கையையும் இந்த குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டிருப்பது கோதையின் பெருந்தன்மையின்றி வேறேது?
சட்டென்று  பக்கத்தில் நின்றிருந்த தன் கணவனின் அன்னையை கட்டிப்பிடித்தவள்,”உறவுகளுக்குள்ள நன்றி சொல்லக் கூடாதுன்னு தெரியும். இருந்தாலும் எனக்கு நன்றி ன்னு சொல்லுறதைத் தவிர வேறெதுவும் தெரியலை அத்த” என்று சொன்னவளின் குரல் உணர்ச்சி மேலிட்டால் திக்கித்திணறியே வந்தது.
அவளின் அந்த செயலில் கோதைநாயகியுமே கொஞ்சம் தன்னிலை இழக்கக் தான் செய்தார்.
“பவிக்கு மேக்கப் எல்லாம் பண்ணிவிட்டது நானு, ஆனால் நீ என்னடான்னா எங்கம்மாவ போய் பொசுக்குன்னு கட்டிபிடிச்சிக்கிட்ட. இதான் பவானி நல்லதுக்கே காலம் இல்லைன்னு சொல்லுறது…” அங்கிருந்த சூழ்நிலையை இலகுவாக்க கிண்டலில் இறங்கினாள் திவ்யா.
திவ்யாவின் முயற்சி பலிக்கவே செய்தது. முதலில் தன்னை மீட்டுக் கொண்ட கோதை,” சரி…சரி…முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க. அப்புறம் மிச்சம் மீதியை பேசிக்கலாம்” என்று தன் மகனையும் மருமகளையும் பார்த்துச் சொல்ல
பரணியும் தன் வாழ்த்துகளை பவித்ராவிற்கு சொல்லிவிட்டு நகர்ந்தான்.
பரணி கூடவே நகர்ந்த பவானியை கைபிடித்து இழுத்த திவ்யா தன்னுடனே மெதுவாக நடக்க வைத்தவள்,”சீக்கிரமா குளிச்சிட்டு வந்து இந்த மூக்குத்தி கதையெல்லாம் எனக்கு சொல்லணும் என்ன!” என்று பொய்யாக மிரட்ட, மெய்யாகவே வெட்கம் கொண்டு சிரித்தபடி ஓடினாள் பெண்.
########
 திருமணத்திற்காக  எடுத்திருந்த பத்து நாட்கள் விடுமுறை பரணிதரன், பவித்ரா  இருவருக்குமே முடிந்திருக்க, இன்றிலிருந்து பணிக்குத் திரும்புவதாக  முடிவு செய்திருந்தார்கள்.
காலையிலேயே விழித்திருந்த பவானி, கோதை நாயகி மறுக்க மறுக்க சமையல் வேலைகளை தானே முடித்திருந்தாள்.
“எனக்கு இரண்டு பேருக்கே சமைச்சு பழகிடிச்சு. அதனால எவ்வளவு அளவு எங்கிறதை மட்டும் சொல்லி தந்தால் போதும் அத்த. மிச்ச எல்லாத்தையும் நானே பாத்துக்குவேன்” என்று சொல்லி கோதை நாயகியின் மேற்பார்வையிலேயே எல்லா வேலைகளையும் முடித்திருந்தாள்.
ஏழாம்பக்கம் சின்னதாக வீட்டுக்கு மட்டும் வேப்பிலை சடங்கு கழித்த பிறகு பள்ளிக்கு விடலாம் என்று முடிவு செய்யப்பட்டதால் பவித்ரா வீட்டிலிருந்தாள்.
அலுவலகத்திற்கு புறப்பட்டிருந்த பவானி தங்கையிடம் போய் விடைபெற்றுக்கொண்டு,”அத்த தர்ற சாப்பாடையெல்லாம் வேஸ்ட் ஆக்காமல் ஒழுங்கா சாப்பிடணும். அதெல்லாம் இந்த சமயத்தில் ரொம்ப நல்லது” என்று ஒரு மூச்சு அட்வைஸூம்  கொடுத்து விட்டு தன் அறைக்குள் நுழைய 
அவளுக்காகவே காத்திருந்த பரணிதரன் தன் கைகளுக்குள் கொண்டு வந்தான் தன் மனைவியை.
பத்து நாட்களாக எந்நேரமும் ஒருவர் அருகாமையில் மற்றவர்கள் இருக்க  இன்று வேலைக்காக பிரிவது கூட கஷ்டமாக இருக்கத்தான் செய்தது இருவருக்குமே.
அவள் நெற்றியோடு நெற்றியை முட்டியவன்,” கூட ஒரு பத்து நாள் லீவ் போட்டுருக்கலாமோ செல்லம்!” என்று அவளிடமே அபிப்பிராயம் கேட்க…
“ம்ம்ம்… எத்தனை நாள் லீவ் போட்டாலும் ஒருநாள் வேலைக்கு போய்தான் ஆகணும் ஆஃபிஸர். ஏன்னா சோறு முக்கியம்”  தத்துவம் பேசினாள் மனைவி.
“போடீ… உங்கிட்ட போய்  கேட்டேன் பாரு” என்று அலுத்துக் கொண்டவன் அவள் மூக்குத்தியில் ஒரு முத்தம் வைக்க
“ஆஃபிஸருக்கு இப்பல்லாம் என்னைவிட எம்மூக்குத்தி மேலத் தான் லவ்ஸ் அதிகமாயிருக்கு” கிண்டலடித்தாள் பெண்
“இப்பல்லாம் அதிகமா பேசுற இந்த வாய் மேலயும் தான் எனக்கு வல்ஸ் அதிகமாயிடிச்சி” சிரித்தவாறே சொன்னவன் சிலபல கொடுக்கல் வாங்கல்களை அழகாக நிகழ்த்திக் கொண்டான். 
“பவானி! உண்மையிலேயே நீ ஸ்கூட்டில ஆஃபிஸுக்கு போய்டுவியா? நான் வேணும்னா வேற ஏற்பாடு பண்ணட்டுமா?” என்று நேற்றிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியையே  இப்போதும் கேட்க…
” எனக்கு வண்டியோட்ட ரொம்ப பிடிக்கும். நான் சேஃப் ஆ போய்ட்டு வந்துடுவேன். பிளீஸ்… நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க பரணி…” போலியான அலுப்பிருந்தது குரலில்.
பின்னே நேற்றிலிருந்து இதே பாட்டு என்றால் அவளும் தான் என்ன செய்வாள்?
இருவரும் தங்களது அறையில் இருந்து கீழே வந்து,  கோதை நாயகிடம் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்கு பக்கத்தில் இருந்த பால் விற்பனை செய்யும் இடத்தில் இருந்த மதியழகனையும் பார்த்து சொல்லிவிட்டு வந்தார்கள்.
பரணிதரன் நேற்றே குமரனிடம் கொடுத்து சர்வீஸ் செய்து விட்டிருந்த பவானியின் வண்டியை ஸ்டேண்ட்டில் இருந்து விடுவித்தவன் மனைவியின் கைகளில் கொடுத்து,”கவனம் பவானி, நிதானமான ஸ்பீட்ல போகணும்” என்று சொல்லிக் கொடுக்க
பார்த்துக்கொண்டிருந்த கோதை,”என்னது? பவானி ஸ்கூட்டில தனியா போறாளா?”என்றார். அதிருப்தி இருந்தது அவர் குரலில்
திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக வேலைக்கு போகும் இருவரும் தனித்தனியாக போவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
‘அதுவும் இருவரும் ஒரே ஊருக்கு பிரயாணப்படும் போது தனித்தனியாக எதற்கு?’ என்பது அவரின் எண்ணம்.
பரணிதரனுக்கு அலுவலகத்திற்கு செல்ல எப்போதுமே அலுவலக வாகனம் தான். அதுவும் அலுவலக வேலையாகச் செல்லும் போது மட்டும் தான் அவனே அதில் போவது. 
அவனது தனிப்பட்ட விஷயங்களுக்கு செல்லும் போது தனியாக என்றால் பைக். குடும்பமாக என்றால் வாடகைக்கார் தான். இது அவனை தெரிந்த அனைவருமே அறிந்த விஷயம்.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அலுவலக வாகனம் எப்போதுமே பரணிதரனின் வீட்டில் தான் நிற்கும்.
“உன்கூட இன்னைக்கு ஒருநாளாவது கார்ல கூட்டிட்டு போடா…” வேண்டுதல் இருந்தது அன்னையின் குரலில்
“கல்யாணம் ஆன உடனே என்னோட கொள்கைகளைத்  தூக்கி தூரப்போடச் சொல்லுறீங்களே ம்மா…இது நியாயமா?”  சிரிப்பிருந்தது மகனின் குரலில்.
அவனுக்காக அலுவலக வாகனத்தை தயாராக வைத்திருந்த டிரைவர் வேலு விடம்,”நீங்க வண்டியை ஆஃபீஸுக்கு கொண்டு போங்க வேலு. நான் பின்னாடியே பைக்ல வந்துடுறேன்” என்று சொல்ல
இந்த பதில் தான் பரணிதரணிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்த மனிதர் வண்டியோடு நகர்ந்தார்.
பிறகு ஷெட்டில் இருந்து பல்ஸரை வெளியே எடுத்து பவானி அருகில் கொண்டு வந்து நிறுத்தி,”வா”  என்று தலையசைத்து அழைத்தவன்,”இப்போ ஓகேயா?” அன்னையிடமும் கேட்கத்தவறவில்லை.   
கொஞ்சம் திணறினாலும் கணவனின் வலது தோள் பற்றி அழகாகவே ஏறி அமர்ந்தாள் பெண்.
தன்னிடம் புன்னகை முகமாக விடைபெற்று சென்றவர்களை கண்டு மனது நிறைந்து போனது கோதைக்கு. 
அதிலும் மூன்று வருடங்களுக்கு பிறகு தன் மகனின் புன்னகையில் உயிர்ப்பைக் கண்ட அந்த தாய்க்கு அதற்கு  காரணமான பெண்ணை தன் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் படர்ந்து பரவியது.
##########
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அதற்கு ஈடாகாத கணவனோடான இருசக்கர வாகனப் பயணம்… அதுவும் முதல் பயணம்… அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தாள் பவானி அந்த பயணத்தை.

Advertisement