Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

அன்னகிளி போன வேகத்தை பார்த்தவனுக்கு….. “ஐயோ! எவனும் நம்மை ஒழுங்கா குடும்பம் நடத்த விட மாட்டானுங்க போல இருக்கே….”, என்று நொந்து கொண்ட விக்ரம்……

அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அவள் முன்னே வந்து நின்றான்.

அவன் வந்து நின்ற வேகத்துக்கு…. அவனுடன் இருந்த பாதுகாவலரும் பன்னீரும் பதறி உள்ளே வந்தனர்.

பிறகு அன்னகிளியின் முன் விக்ரம் நின்றதை பார்த்ததும்…… தயங்கி நின்றனர். மொத்த மண்டபமும் இவர்களை தான் வேடிக்கை பார்த்தது….

அவர்களிடம், “உள்ள ஏதோ பிரச்சனை….”, என்று சொல்லி….. “ஒன்னுமில்லை, நீங்க போங்க”, என்று விக்ரம் வார்த்தையை முடிக்கும் முன்னரே…. பாதுகாவலரும் பன்னீரும் உள்ளே சென்றிருந்தனர்.

அங்கே சென்று, “என்ன? என்ன பிரச்சனை?”, என்று வேறு விசாரிக்க ஆரம்பிக்கவும்… பேசிய பெண்மணி பயந்து போக….. அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்களும் வாயை இறுக்க மூடிக் கொண்டனர்.

“பன்னீர்! ஒன்னுமில்லை வாங்க!”, என்று விக்ரம் நின்ற இடத்தில் இருந்து சத்தம் கொடுக்க இருவரும் திரும்பி வந்தனர்.

அதற்குள் அன்னக்கிளி வெளியே போக ஆன முயற்சி செய்து கொண்டிருக்க…… அவளால் போக முடியவில்லை. விக்ரம் தான் அவளின் கையை இறுக்கமாக பற்றியிருந்தானே……

“விடுங்க!”, என்று அவனிடம் சொல்ல வாயை திறந்தவள்…. அவனின் முகத்தில் தெரிந்த கோபத்தில் அமைதியானாள்.

“எங்கடி போற…. நானிருக்கேன்ல……. நான் இருக்கும் போது என்கிட்டே தான் வரணும்! புரிஞ்சதா!”, என்று அடிக்குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு சீறினான்.

பிறகு, “யாரோ என்னவோ சொன்னாங்கன்னு அண்ணனும் தங்கச்சியும் போவீங்களா.. உள்ள ஒரு பொண்ணு நிச்சயத்துக்கு உட்கார்ந்து இருக்கே அந்த ஞாபகமில்லையா உங்களுக்கு…. எல்லாமே அவசரம் உங்களுக்கு”, 

“வாடி! நீதான் எல்லாம் செய்யற…. யார் என்ன சொல்றாங்கன்னு நான் பார்க்கிறேன்!”, என்று கையை பிடித்து அழைத்து வந்தான்.

பழனிசாமியை பார்த்து, “மாமா, உங்க தம்பியை கூட்டிட்டு வாங்க….”, என்று சொல்லி நலுங்கு வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தவன்.

வேண்டுமென்றே எல்லோருக்கும் கேட்கும் விதமாக….. “யாராவது பேசுனா…. நீங்க யாரு என்னை பத்தி பேசன்னு அட்லீஸ்ட் வாய் மேல ஒரு அடி வெச்சா கூட நான் சந்தோஷப்படுவேன்…… இப்படி தான் கோபப்பட்டுட்டு போவியா……”, என்றான் கிண்டலாக.

“யாரு? என்ன பேசினாங்க?”, என்று ஒன்றுமே தெரியாதவன் போல பஞ்சாயத்தை ஆரம்பித்து நீதிபதி என்று நிரூபித்தான்.

“இந்தம்மா…”, என்று சிறு பெண்ணை போல கையை காட்டிய அன்னகிளி….. “நான் எல்லா ஏற்பாடும் செஞ்சா அவங்க பொண்ணு நல்லா இருக்காதாம்”, என்றாள்.

“யாரு? கல்யாண பொண்ணு, இவங்க பொண்ணா…..?”, என்று கேட்டவன்…… “யாரும்மா நீங்க?”, என்றான். அந்த பெண்மணி…… பெண்ணின் தந்தையின் பெரியம்மா…..

அவன் கேட்ட தோரணையில் அந்த அம்மா பயந்தே போனது….. அப்போதும் தைரியத்தை வரவழைத்து அந்தம்மா…… “எங்கவீட்டு பொண்ணு நல்லா இருக்கணும்னு சொன்னேன்”,

“நீங்க பெத்தீங்களா….. இல்லை நீங்க படிக்க வெச்சீங்களா…. இல்லை நீங்க கல்யாணம் பண்ணி குடுக்கறீங்களா…… இல்லை நாளைக்கு அந்த பொண்ணுக்கு ஏதாவது ப்ரச்சனையின்னா நீங்க கூட்டிட்டு போய் வெச்சிக்க போறீங்களா?”, என்றான் நக்கலாக…

அவன் கேட்ட விதத்தில் அவன் அந்த பெண்மணியை கிண்டல் செய்கிறான் என்று அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது…. இருந்த சீரியஸ் சிச்சுவேஷன் எல்லாம் போய் ஒரு லகுத்தன்மை வந்து….. எல்லார் முகத்திலும் புன்னகை ஒட்டியது.

இத்தனை களேபாரங்களையும்….. கந்தசாமி போனதையும்…… “அச்சோ, நின்றுவிட்டதா?”, என்று பயந்து கண்களில் கண்ணீர் எப்பொழுது விழுமோ என்று பார்த்துக் கொண்டிருந்த மணப்பெண் கலைவாணியை பார்த்தவன்…..

“யூ டோன்ட் வொர்ரி சிஸ்….. இவளுக்கு கொஞ்சம் கோபம் அதிகம்!”, என்று அன்னகிளியை இன்னும் நெருங்கி நின்று கொண்டவன்…… “இவங்கண்ணனுக்கும் அதே மாதிரி…. மத்தபடி ரொம்ப நல்லவங்க….”, என்று இடக்காக சர்டிபிகேட் கொடுத்தவன்…..

“தங்கச்சியை பத்தி சொன்னதுக்கே அண்ணனுக்கு அவ்வளவு கோபம் வந்து போயிட்டாரு பாருங்க….. அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை எப்படி பார்த்துக்குவாங்க…… அதை நினைங்க”, என்று சற்று கலாட்டாவாக பேச…..

பெண்ணின் முகத்தில் பயம் தெளிந்து சற்று வெட்கத்தை கூட பூசியது. “யாரோ என்னவோ பேசினாங்கன்னு மண்டபத்தை விட்டு கிளம்புவீங்களா…..  யாருடி இந்தம்மா? சும்மா எல்லோரையும் நீங்களே பெரியாளாக்கி விட்டுடுங்க”, என்று கோபமாக அன்னகிளியை திட்டிக்கொண்டே அந்த பெண்மணியையும் நக்கல் அடிக்க…                

அந்த பெண்மணிக்கு ரோஷம் பொங்கி…… “இந்த பொண்ணு புருஷனோட வாழலைன்னு கேள்விப்பட்டேன்… அதான் அப்படி சொன்னேன்…… நான் சொன்னதுல என்ன தப்பு?”,

“நான் தான் இந்த பொண்ணோட புருஷன்……”, என்று சொல்லி அன்னகிளியை இடித்துக் கொண்டு நெருங்கி நின்றவன்…. “நானும் இவளும் சேர்ந்து வாழறோம்னு எப்படி காட்றது…. இவ்வளவு சேர்ந்து நின்னா போதுமா”, என்றான்… விலக முயன்ற அன்னகிளியை விலக விடாமல்.

பார்த்த எல்லோர் முகத்திலும் புன்னகை….. 

அந்த பெண்மணி மற்றும் சில பேர் இதை, “ஆங்”, என்று பார்க்க…… அன்னகிளி கூச்சத்தில் நெளிந்தாள்.      

“நீங்க பார்த்தீங்களா…. என் வீட்டுக்காரம்மா என்னோட சேர்ந்து வாழலைன்னு….. நீங்களும் உங்க வீட்டுக்காரரும் சேர்ந்து வாழறீங்கன்னு எப்படி காட்டுவீங்க?”, என்று விக்ரம் ஆரம்பிக்க……

அன்னகிளி எல்லோரும் பார்க்கிறார்கள் என்று தெரிந்த போதும் அவசரமாக விக்ரமின் வாயை கை கொண்டு மூடினாள்…

அந்த பெண்மணி பேசியது எல்லாம் அன்னகிளியின் மனதில் பின் ஓடி விட்டது….. இந்த விக்ரம் ஏதாவது ஏடாகூடமாக பேசிவிட்டால் என்ன செய்வது என்று பதறியவள் 

“நீங்க டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ்… அந்த மாதிரி பேசுங்க…..”, என்று அவன் காதில் அருகில் சென்று முணுமுணுத்தாள்.   

பார்க்கவே அந்த காட்சி கவிதையாய் இருந்தது. மண்டபமே அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தது.    

அன்னகிளியின் அழகும், உயரமும்…… அதற்கு சற்றும் குறையாமல் கம்பீரத்துடன் இருந்த விக்ரமும்……. அன்றைய நாயகன் நாயகியை பின் தள்ளினர்.

“முதல்ல வீட்டுக்கு போனதும் இவங்களுக்கு த்ரிஷ்ட்டி சுத்தி போடணும்”, என்று மரகதம் நினைத்தார்.

“உங்களுக்கு எல்லாம் டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் பஞ்சாயத்தோ தீர்ப்போ செல்லாதுடி…. விக்ரம் பஞ்சாயத்து தான் செல்லும்”, என்று வாயை மூடியிருந்த அவள் கையை விலக்கி….. அவனும் இது தான் சாக்கென்று அவளின் காதினில் ஓத…

பழனிசாமி கட்டாயப்படுத்தி கந்தசாமியை அழைத்து வந்திருக்க……. அன்னகிளியின் அண்ணன்கள் இருவரும் இதை பார்த்தனர்…… இருவர் முகத்திலும் புன்னகை.

சபையில் பகிரங்கமாக ரகசியம் பேசினர் கணவனும் மனைவியும்……

“நேரமாகுது விக்ரம்”, என்று லதா ஞாபகப்படுத்த…..

“என்ன நானா லேட் பண்றேன்… சின்ன பையன் நான் பேசிட்டு இருக்கேன்…… உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் என்ன பண்றாங்க….. என் வீட்டுக்காரம்மாவை யாராவது பேசினா நீங்கல்லாம் வேடிக்கை பார்ப்பீங்களா?”, என்று விக்ரம் உசுப்பேற்ற……

பொங்கி எழுந்த அன்னகிளியின்  உறவு முறைகள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வந்தனர்……… அந்த பெண்மணியை மன்னிப்பு கேட்க சொல்ல….

“அதெல்லாம் வேண்டாம்!”, என்று விக்ரம் உறுதியாக சொல்லவும்…. அப்படியே விடுவதா வேண்டாமா என்று யோசித்தனர். 

“இப்போ எதுக்கு எல்லோரையும் இப்படி உசுப்பேத்தறீங்க…….”, என்று திரும்பவும் அன்னகிளி ரகசியம் பேச….

“எப்போ பார்த்தாலும் அடுத்தவன் விஷயத்தையே பஞ்சாயத்து பண்றேன்…. ஒரே போர்…… எப்போ நான் பிரச்சனை பண்றது……”, என்று அன்னகிளியிடம் விக்ரம் பதிலுக்கு ரகசியம் பேச……

“அதுக்கு எங்கண்ணன் நிச்சயம் தான் உங்களுக்கு கிடைச்சதுங்களா……?”,

“அந்த அறிவு உனக்கில்லடி இருந்திருக்கணும்…..”,

அன்னகிளி அவனை பார்த்து முறைக்கவும்…… அவளை பார்த்து கண்ணடித்தவன்….. “ஓகே பேபி கூல்…. எங்கக்கா எதுக்கு இருக்கா?”, என்றவன்…. லதாவை புன்னகையோடு பார்க்கவும்……

லதா தலையில் செல்லமாக அடித்துக் கொண்டவள்….. “நீங்க வாங்க தம்பி!”, என்று கந்தசாமியை அழைத்து நலுங்கு வைக்க போடப்பட்டிருந்த சேரில் அமர சொன்னவள்…..

“நீ வாம்மா!”, என்று சைய்கையாலேயே மணப்பெண் கலைவாணியை நோக்கி கை காட்ட….. பெண்ணின் அம்மாவே அந்த பெண்ணை எழுப்பி, “போம்மா”. என்று அனுப்பிவிட்டார்.

அந்த பெண்ணை கந்தசாமியின் பக்கத்தில் அமரவைத்து… “வா! நீதான் முதல்ல நலுங்கு வைக்கிற!”, என்று அன்னகிளியை பார்த்து அழைத்தாள்.

“ம்கூம்! மாமாவும், அத்தைங்களும் தான் வெக்கணுமுங்க”, என்று சொன்ன அன்னகிளி… அவளுடைய தாய் மாமாவை அழைத்தாள்.  

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு நின்று கொண்டிருந்த அவளின் மாமா…. வேட்டியை இறக்கிவிட்டு……. “என்னங்க பாப்பா!”, என்று வரவும்…..

“ஆரம்பிங்க மாமா”, என்று நலுங்கு வைக்க சொல்ல… பிறகு அவரின் மனைவியை… பிறகு தன் தந்தையின் கூட பிறந்தவர்களை என்று ஒவ்வொருவராக அழைத்து பின் பெண் வீட்டினரை அழைத்து என்று எல்லாவற்றையும் முறையோடு செய்ய வைத்தாள்.

ஓரளவு வேலைகள் முடிந்துவிட்டது என்று தெரிந்ததும் விக்ரம் பிரபாகரை விட்டு, “அத்தையை கூப்பிடு”, என்று சொல்லி அன்னகிளியை அருகில் அமர்த்திக் கொண்டான்.

“பிரச்சனை வந்தா அதை தீர்க்க பார்க்கணும்…… அதைவிட்டுட்டு நம்ம அதை அதிகப்படுத்த கூடாது”, என்று அன்னகிளிக்கு அட்வைஸ் வேறு செய்ய ஆரம்பித்தான் விக்ரம்.

எல்லாம் நல்ல படியாக முடிந்து விட்ட போதிலும், விக்ரமின் பேச்சை கேட்டதும்  ஏனோ சலிப்பாக இருந்தது அன்னகிளிக்கு…. விக்ரமை பார்த்து அவனின் கண்களோடு தன் கண்ணை கலக்க விட்டவள், “ஏன் எனக்கு பிரச்சனை வரணும்?”, என்றாள்.

“வாழ்க்கையில இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது….. எதிர்கொள்ள முடியாத பிரச்சனை எத்தனையோ இருக்கு…… இது எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது…. இதெல்லாம் ஜஸ்ட் உன்னால ஃபேஸ் பண்ண முடியற ப்ராப்லம்ஸ் பேபி…..”, என்றான்.

“எல்லாம் உங்களால தானுங்க”, என்று அன்னகிளி முறுக்கவும்….

“சரி! என்னால தான்! இப்போ என்ன அதுக்கு? எனக்காக நீ இது கூட செய்ய மாட்டியா?”, என்றான்….

பதில் பேசாமல் அன்னகிளி திரும்பிக் கொள்ளவும்……

“செய்ய மாட்டியா?”, என்று விக்ரம் அதிகாரமாக மறுபடியும் கேட்கவும்……

“நான் ஒரு வாரத்துக்கு மௌன விரதமுங்க……. பத்து நாளா எனக்கு காது கேட்கறது இல்லீங்க”, என்றாள் சீரியசாக.  

அன்னகிளி சொன்ன விதத்தில் விக்ரம் சத்தமாக சிரிக்கவும்…. “அச்சோ! ஷ்! சத்தமா சிரிக்காதீங்க! எல்லோரும் நம்மளை தான் பார்ப்பாங்க……”, என்று அவள் எழுந்து போக முற்படவும்……

“ஏய்! ரொம்ப பண்ணாத உட்காருடி…. ஏதோ நாடகத்துல நடிக்க போற மாதிரி எல்லாத்தையும் எடுத்து பூட்டிக்கிட்டா…. சகிக்கலை…..”,

“உனக்கிருக்குற இடுப்புக்கு ஒட்டியாணம் வேறயா…… உங்கப்பா வேற உன் இடுப்புக்கு தகுந்த மாதிரி அந்த சைஸ்கே ஒட்டியாணம் செஞ்சிருக்கார்…. அனேகமா  இதுக்கே ஒரு நூறு பவுன் செஞ்சிருப்பார் போல…..”,  

“இதையெல்லாம் போட்டு என்னை தயவு செஞ்சு காமெடி பீஸ் ஆக்காத…. ஆனா ஒருவகையில பரவாயில்லை… உன் இடுப்பு வெயிட் சுமக்குது…… பின்னால யூஸ் ஆகும்”, என்று சொல்லவும்….    

அன்னகிளி வாயை பிளந்து, “ஒஹ்! மை காட்!”, என்றாள்……

“யெஹ்! திஸ் இஸ் மன்மதன் காட்…… யூ நோ, வி ஹேவ் மெனி குட் தியரீஸ் அபௌட் திஸ்”, என்று ஆரம்பிக்கவும்…… 

அன்னகிளி பதறினாள்… “நோ! நோ! டோன்ட் ஸ்பீக் மோர்!”, என்று… 

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “லெட் மீ எக்ஸ்ப்லைன்…… டூ யூ வான்ட் ப்ராக்டிகல் ஆர் தியரி……..”, என்று கண்ணடிக்க………  

“ஐயோ! வாயை மூடுங்க!”, என்று அன்னகிளி சொல்லி அடிக்க கையில் என்ன கிடைக்கறது என்று பார்க்க….

“நோ, நோ…. நோ வெப்பன்ஸ்…… யூ மௌன விரதம்……… உனக்கு காது கேட்காது”, என்றான் சிரிப்போடு…..    

அன்னகிளியின் முகத்திலும் புன்னகை…. “சான்ஸே இல்லீங்க நீங்க…… எவ்வளவு சீரியஸ் சிச்சுவேஷன்……. அதை எப்படி மாத்திடீங்க….”, என்றாள்.

“நிஜமாவே சான்ஸே இல்லை தான்!”, என்று விக்ரம் ஒத்துக்கொள்வது போல பேசியவன்… “உன்னோட பிடிவாதம், எப்படின்னு சில சமயம் சொல்ல முடியாது…. அந்த சமயத்துல யாரும் எதுவும் செய்ய முடியாது… ஏன் நான் நினைச்சா கூட”, என்று அன்னகிளியை தெரிந்தவனாக ஒத்துக் கொண்டான்.

விக்ரம் எதை பேசுகிறான் என்று புரிந்த அன்னகிளியின் முகம் ஒரு கோபத்தை காட்ட…. “வேண்டாம்! மறுபடியும் எதையும் ஞாபகபடுத்த வேண்டாம்!”, என்றாள்.

ஆனால் விக்ரம் அவளை முதல் முதலில் பார்த்த நாளில் இருந்து ஞாபகப்படுத்த ஆரம்பித்தான்.

அப்போது விக்ரம் பதினெட்டு வயது இளைஞன்….. அவனுக்கு லதாவை ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுக்க விருப்பமேயில்லை…. முக்கியமாக மாப்பிள்ளையின் பெயர் பிடிக்கவில்லை.

“பழனிசாமி…….”,

ஆனால் அவனின் அப்பாவும் அம்மாவும் பொறுமையாக விளக்கினர்…… “நல்ல பெரிய செல்வாக்கான வசதியான குடும்பம்…. நம்மள மாதிரி ஒன்னாம் தேதி கண்டு எண்ணி எண்ணி செலவு பண்றவங்க கிடையாது….. பாதி சம்பளத்தை வீட்டு வாடகையாவோ இல்லை வீட்டு டி யு வா வோ கட்டுறவங்க கிடையாது விக்ரம்…..”,

“ஸோ வாட் அப்பா? அவங்கவங்களுக்கு இருக்குறது தான் அவங்கவங்களுக்கு…… நம்ம மத்தவங்களோட நம்மை கம்பேர் பண்ணனும்னு அவசியம் இல்லை”,

“அப்பா யோசிக்காம செய்வனா விக்கி கண்ணா…….”, என்று விக்ரமை சமாதானப்படுத்தி அவன் தந்தை ஒரு வழியாக திருமணத்திற்கு எல்லோரையும் கிளப்பி கொண்டு பழனிசாமியின் ஊருக்கு வர……

கல்யாணம் மிகவும் விமரிசையாக கோலாகலமாக நடந்தது.   

 அவன் பிளஸ் டூ பரீட்சை எழுதியிருந்தான்…. சௌமியா டென்த் பரீட்சை எழுதியிருந்தாள்….. அவர்களின் பரீட்ச்சை நேரமாதலால் அவனின் அம்மாவும் அப்பாவும் அவனை எதற்கும் கூப்பிட்டுக்கொண்டு வரவில்லை.

முதல் முறையாக திருமணத்தில் தான் அவன் அக்கா திருமணம் செய்ய போகும் வீட்டினரை பார்த்தான்.

சௌமி யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்க… சௌமி தாவணி பாவாடையில் இருக்க…. அந்த பெண் பாவாடை சட்டையில் இருந்தது.

“யாரு இது? எருமை கணக்கா இவ்வளவு பெருசா இருக்கு! பாவாடை சட்டையில இருக்கு!”, என்று எண்ணியவனாக விக்ரம் அருகில் சென்றான்.

சென்ற பிறகு தான் பார்த்தான்…. நிச்சயம் அது சிறு பெண்…. முகம் தான் காட்டிக் கொடுத்ததே..

“யாரு இது சௌமி?”, என்று தங்கையிடம் கேட்டான்…

“நம்ம அக்காவை கல்யாணம் பண்ணின மாமாவோட தங்கச்சி……”,

“என்ன படிக்கறா?”, என்றான் வயதை தெரிந்துகொள்ள….

“ஃபிப்த் டு சிக்ஸ்த் போறா!”, என்றதும் விக்ரமின் வாய் தானாக பிளந்தது…

“என்னது ஃபிப்தா”, என்று……

“ம்! கொஞ்சம் அதிகமா வளர்ந்துட்டா போல!”, என்று சௌமி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாக சொல்ல….

“கொஞ்சம் இல்லை…….. ரொம்ம்ம்ம்ம்ப…….! அதுக்குன்னு அவங்க வீட்ல இருக்குறவங்க ஒரு சுரிதார் போட்டு விடக் கூடாது…… பாவாடை சட்டை…. ஐயோ!”, என்றான்.

இதையெல்லாம் உணராமல் அன்னகிளி விக்ரமை பார்த்து புன்னகைக்க.. பதிலுக்கு சம்ப்ரதாயமாக புன்னகைத்தான் விக்ரம்….                             

“அழகா இருக்கால்லண்ணா”, என்று சௌமி சொல்ல….

நிஜமாகவே குண்டு குண்டு கன்னத்துடன்…. கள்ளமில்லா…… வசீகரிக்கும்….. அழகான முகத்துடன் இருந்தாள்…. அன்னகிளி.

ஆனால் விக்ரமிற்கு அது தெரியவில்லை….. அவளின் அபரிதமான வளர்ச்சி தான் தெரிந்தது.

“பேர் என்ன?”, என்றான்….

“அன்னகிளி!”, என்று  அவள் சொல்லவும்….

அன்னகிளியிடம் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும்……. “ஆளையும் பாரு அவள் பேரையும் பாரு”, என்று தான் விக்ரமிற்கு தோன்றியது. அன்னகிளி பேர் அவனுக்கு பிடிக்கவேயில்லை.

“இங்க என்ன பண்றீங்க பாப்பா!”, என்று அன்னகிளியின் சின்ன அண்ணன் வந்த போது தான் பார்த்தான்… சௌமி அருகில் இல்லாததை….

“இவ எப்போ போனா… பிசாசு!”, என்று தங்கையை நினைத்தவன்….. “இவ்வளவு வளர்ந்திருக்கா இவ பாப்பாவா!”, என்று மனதிற்குள் நினைத்தான் விக்ரம்…

“இல்லீங்க அண்ணா! இங்க பேசிட்டு இருந்தனுங்க!”, என்று அன்னகிளி பதிலளிக்கவும்… அவள் பேசிய மொழி இன்னும் பிடிக்காமல் போனது.  

“வாங்க! வாங்க!”, என்று விக்ரமை கண்டுகொள்ளாமல் கந்தசாமி அன்னகிளியை அழைத்து போனவன் பேசிக்கொண்டே சென்றது….. விக்ரமின் காதில் விழுந்தது.

“என்னங்க பாப்பா! நீங்க யாரு, என்ன, அவங்க எப்படின்னு, தெரியாம போய் பேசுவீங்களா….”, என்று அண்ணனாக பேசிக்கொண்டு செல்ல….

விக்ரமிற்கு அவ்வளவு கோபம் வந்தது…

“அந்த எரும மாடு கூட நானா பேசினேன்… அது சின்ன பொண்ணு……. அதுகிட்ட என்னை பத்தி என்ன பேசிட்டு போறான் இவன்”, என்று விக்ரமிற்கு தோன்ற…..

அதன் பிறகு விக்ரம் அன்னகிளியிடம் பேசியதே இல்லை…..

அன்னகிளியாக எதற்காவது பேச வந்தாலும் தவிர்த்து விடுவான். அருகில் போகும் போது விக்ரம் காட்டும் கடுமையில் அன்னகிளியும் அவனிடம் இருந்து ஒதுங்கி விடுவாள்.

தாய் தந்தை இறந்து…… அக்கா வீட்டினரை ஆதாரமாக கொண்டு…… விக்ரம் வீட்டை விற்று….. பணத்தை சௌம்யாவுக்காக பேங்கில் போட்டு…….. அவளை ஹாஸ்டலில் சேர்த்து…. இவன் லா காலேஜ் சேர்ந்து….

இவனின் படிப்பிற்கு லதா அக்காவை நம்பி இருந்து……. லீவ் நாட்களில் மட்டும் அக்கா வீட்டிற்கு வந்து போய் கொண்டிருந்த போது….. என்று வருடங்கள் கடந்த போதும்……

அன்னகிளி மிக மிக அழகான சிறுமியில் இருந்து…….. அதை விடவும் அழகான பருவப் பெண்ணாக மாறிய போது கூட அவன் கண்கொண்டோ கவனித்தோ அன்னகிளியை பார்த்ததில்லை.

இதற்கு லதா அக்காவின் வீட்டில் தான் தங்குவான்…… ஆனால் மிக மிக கண்ணியமான ஆண்மகன் விக்ரம்….. அதனால் தான் வயதுப் பெண் இருக்கும் வீடு….. இவன் அடிக்கடி ஏன் இங்கே வந்து தங்குறான் என்று கந்தசாமியும் ஒன்றும் சொன்னதில்லை.

கந்தசாமிக்குமே விக்ரமை பற்றி தெரிந்திருந்தது. ஆனால் விக்ரம் தங்களுக்கு குறைவு என்ற அலட்சியம் எப்போதுமே கந்தசாமிக்கு இருக்கும்….

ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை காட்டிக் கொண்டே இருப்பான் கந்தசாமி…. விக்ரம் எதையும் கண்டுகொள்ள மாட்டான்…. லதாவும் விக்ரமின் தேவைகளை அவனாக கேட்கும் படி வைத்துக் கொள்ள மாட்டாள்…..

பழனிசாமி லதாவின் கண்ணசைவில் நடக்கும் கணவனாக அமைந்து விட்டதால் விக்ரமிற்கு எந்த பிரச்சனையும் இல்லை…. லதாவின் புகுந்த வீட்டினர் அனைவருமே லதா சொன்னால் சரி என்று விடுவர்.

லதாவிற்கும் அவளின் புகுந்த வீடு என்ற பயமெல்லாம் இல்லை….. எல்லாம் அவளிஷ்டம்…. உறங்குவது, எழுவது… சமைப்பது…… அவள் சமைத்தால் யாருக்கும் பிடித்தமில்லாமல் போக… அந்த வேலையிலிருந்து விடுதலை.

இந்த மாதிரி குறைகள் தான் லதாவிடம்….. மற்றபடி எதிர்த்து பேசுவது….. மாமியார் மாமனாரை மரியாதையில்லாமல் நடத்துவது….. அண்ணன் தம்பிக்குள் பிரச்சனையை கிளப்புவது…. நாத்தனாரை அன்பாய் நடத்தாமல் இருப்பது என்பது போல எந்த குறையும் சொல்ல முடியாது.

அந்த வகையில் நல்ல மருமகள்….. இது அன்னகிளிக்கு நல்லா இருக்கும் வாங்கலாம் என்று சொல்லும் முதல் ஆளாக அவள் தான் இருப்பாள்.  

மொத்தத்தில் வீட்டில் லதாவின் பேச்சிற்கு மறு பேச்சு கிடையாது… அது கந்தசாமிக்கு பிடிக்காது. 

அதனால் எப்போதும் லதாவிற்கும் கந்தசாமிக்கும் தான் ஆகாது. என்னவோ மனைவியின் பின்னேயே அண்ணன் சுத்துவது போல கந்தசாமிக்கு தோன்றும்….. இருவரும் எதிரும் புதிருமாய் நிற்பர்… அப்போதும் லதா விட்டுக் கொடுக்க மாட்டாள்….. பழனிசாமிக்காக அமைதியாக போய் விடுவான் கந்தசாமி.

ஒரு வேலை லதாவின் தம்பி என்பதால் தான்…. கந்தசாமிக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று கூட விக்ரமிற்கு தோன்றியது உண்டு.   

சௌமி   இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்தாள். அவளின் வகுப்பு தோழன் வினோத்….. சௌமிக்கும் வினோத்திற்கும் இடையில் நல்ல தோழமை…. அது விக்ரமிற்கு நன்கு தெரிந்த ஒன்று…… அதனால் விக்ரமிற்கும் வினோத்திற்கும் கூட  நல்ல பழக்கம்…

வினோத் சரியில்லாதவனாக இருந்தால் எப்படி விக்ரம் சௌம்யாவை அவனுடன் பழக விட்டிருப்பான்.

நல்லவன்….. அதனால் தான் வினோத்தின் அண்ணனுக்கு சௌம்யாவை பிடித்துப் போக…. அவர்கள் பெண் கேட்க….. வேறு இனம் என்றாலும்…. வசதி வாய்ப்பில் குணத்தில் என்று பெரிய ஆட்களாக இருக்க…..

யாருடைய உதவியையும் எதிர்பாராமல்….. குடும்பத்திற்கு பெரியவராய் முத்துசாமியை முன்னிறுத்தி….. சௌம்யாவின் பெயரில் பேங்கில் இருந்த பணம், சேர்த்து வைத்திருந்த நகை என்று தங்கையின் திருமணத்தை சீரும் சிறப்புமாய் நடத்தினான்.

பெண் வீடாக லதாவின் வீடு தான் இருக்க…. திருமணத்தை முன்னிட்டு வர போக இருந்த வினோத்…. அன்னகிளியை பார்த்த முதல் நொடியில் இருந்தே…. அவள் மேல் கரை காணாத காதலில் விழுந்தான்.

காதல் என்று வந்துவிட்டால்….. அதற்கான சரியான பிரதிபலிப்பு எதிர்புறம் இல்லாவிட்டால்……. எத்தனை நல்ல மனிதனாக இருந்தாலும் சரி……. அவனை தடம் பிரள வைக்கும்.

அப்படித்தான் வினோத்தும் நிலை பிரள்ந்தான்.

Advertisement