Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                                          அத்தியாயம்  –  16
 
 
தன் தாடையை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்த ஸ்ருதியை பார்க்கையில் அஸ்வினுக்கு சிரிப்பு தான்.. அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்… எப்படியோ பிரச்சனை சரியானதில் அவள் செய்த சேட்டைகள் பின்னால் போக இந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தான்..
 
அடுத்த இரண்டொரு நாட்களிலேயே ஸ்ருதியை ஐசியூவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்ற கோகிலா வற்புறுத்தி தன் கணவரையும் மருமகனையும் அலுவலகங்களுக்கு செல்ல சொல்லியிருந்தார்.. சந்திரன் ஏற்கனவே பத்து பதினைந்து நாட்கள் விடுமுறையில் இருக்க இப்போது கண்டிப்பாக போக வேண்டிய சூழ்நிலை..
 
அஸ்வின் இரவு மட்டும் ஹாஸ்பிட்டலிலேயே தங்கி கொள்ள பகல் பொழுதில் கோகிலா, கற்பகம் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.. நெற்றிக்காயம் நன்கு ஆறியிருக்க கைகால் கட்டுகள் மட்டும் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்தது..
 
இவள் நடக்க முடியாமல படுத்திருந்ததால் சேட்டைகளுக்கு வழியில்லாமல் அஸ்வினும் கொஞ்சம் நிம்மதியாகவே தன் வேலையை பார்க்கத்துவங்கினான்.. அதோடு அவர்களுக்கு ஒரு புது பிராஜக்ட் ஒன்று கிடைத்திருக்க அதன் ஆரம்பக்கட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் அதிலேயே மூழ்கிவிட்டான்.. இவை அனைத்தும் அவன் அலுவலகத்தில் இருக்கும் வரைதான் இங்கு வந்துவிட்டாலோ அவனுக்கு ஸ்ருதியை தவிர மற்றவை எல்லாம் பின்னால் போய்விடும்..
 
படுத்துக் கொண்டே ஸ்ரீயுடன் விளையாடுவது, கோகிலாவோடு வம்பிழுப்பது, சந்திரனை பார்த்தால் செல்லம் கொஞ்சுவது , கற்பகத்தோடு அரட்டை அடிப்பது என பகல் பொழுதை போக்குபவள் இரவில் அஸ்வினோடுதான்..!! பேசுவாள் ..பேசுவாள்.. பேசிக் கொண்டே இருப்பாள்.. திராட்சை கண்கள் மின்ன கன்னத்தில் குழிவிழ சிரிப்புடன் அவள் பேசும் அழகே தனி… அவள் கைகளை நீவிவிட்டபடி, நெற்றிக்காயத்தை வருடியபடி என அவள் பேசும் அழகை ரசிப்பவனுக்கு வாழ்க்கையே அழகாக மாறியிருந்தது..
 
ஸ்ருதி லேசாக நடக்க ஆரம்பிக்கவுமே கோகிலா டாக்டரிடம் கேட்டு அஸ்வினை வற்புறுத்தி மகளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.. அங்கேயே இருந்தால் அவளை அடக்க முடியாது என்பதை அறிந்தவர் தங்கள் வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்வதாக அஸ்வினிடம் கேட்க அவன் ஒத்துக் கொள்ளவேயில்லை.. கடைசியில் அனைவரும் ஒரே வீட்டில் இருக்கலாம் என்ற முடிவுக்கு பின்னர்தான் லேசாக தலையசைத்தான்.. அவளை தாய்வீட்டில் விட்டு இவன் இங்கு எப்போது என்ன நடக்குமோவென பக்பக்கென்று  இருக்க மனம் ஒப்பவில்லை..
 
நாட்கள் கடகடவென ஓடியதில் ஸ்ருதி வீட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியிருந்தது..  ஸ்ருதி ஸ்ரீயோடு அஸ்வின் அறையில்தான் தங்கியிருந்தாள்.. அந்த பெரிய கட்டிலில் ஸ்ருதிக்கு இடையூறு இல்லாமல் அஸ்வினும் ஸ்ரீயும் சற்று தள்ளியே இருந்தனர்..
 
 ஸ்ரீக்குட்டி ஒருநாளைக்கு ஒரு அறையில் படுப்பான்.. அவன் மூடை பொறுத்து எந்த அறையில் தோன்றுதோ அங்குதான்.. இரவு பாதிசாமத்திற்கு மேல் வேறு அறைக்கும் ஓடுவான்.. ஆகமொத்தம் அவனுக்கும் கால் ஒரிடத்தில் நிற்காமல் சின்ன ஸ்ருதியாக மாறிக் கொண்டிருந்தான்..
 
ஸ்ருதி இப்போது நன்றாக நடக்க ஆரம்பித்திருந்தாள்.. கைகட்டு அவிழ்க்கப்பட்டு அதிக வேலைக் கொடுக்காமல் சின்ன சின்ன எக்ஸர்சைஸ் மட்டும் செய்ய சொல்லிருந்தார்கள்..
 
அன்று இரவு மணி எட்டிருக்கும் அஸ்வின் தன் அலுவலகம் விட்டு வந்திருந்தவன் குளித்து இரவு உடைக்கு மாறி டின்னருக்கு வர அங்குதான் ஹால் சோபாவில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்..
 
ஸ்ருதியும் ஸ்ரீக்குட்டியும் தங்களுக்குள் ஏதோ விளையாடிக் கொண்டே மகனை தன் மடியில் வைத்து ஏதோ சொல்லிக கொடுத்துக் கொண்டிருந்தாள்.. நொடிக்கு ஒரு அணைப்பும் ஒரு முத்தமும் அவனுக்கு கொடுக்க அவனும் குதூகலத்துடனே அவள் சொல்லிக் கொடுத்ததை சொல்லிக் கொண்டிருந்தான்..
 
மகனையும் மனைவியையும் ரசித்தவன் டைனிங் ஹாலுக்கு செல்ல கோகிலா மருமகனுக்கு டிபனை எடுத்து வைத்தார்..
 
எல்லாரும் சாப்பிட்டாங்களா அத்த..??”
 
 
சாப்பிட்டாங்க மாப்பிள்ள.. ஸ்ருதி மட்டும்தான் கொஞ்சநேரம் ஆகட்டும்னு சொன்னா…
 
டிபனை எடுத்து வாயில் வைக்க போனவன் ஸ்ருதி சாப்பிடவில்லை எனவும் அவளை அழைக்கவர அதற்குள் அங்கு ஸ்ரீ எதற்கோ ஸ்ருதியை விரட்ட இவள் அவனுக்கு விளையாட்டு காட்டியபடி மெதுவாக ஓடத்துவங்கினாள்.. டைனிங்ஹாலை நோக்கி ஓடிவர அங்கு கிடந்த கால்மிதி தடுக்கிவிட்டு விழப்போகவும் அனைவரும் அப்படியே ஒருநிமிடம் அதிர்ச்சியில் உறைய அங்கு வந்து கொண்டிருந்த அஸ்வின்தான் சட்டென எட்டி அவளை விழாமல் தாங்கிப் பிடித்தான்.. அவனுக்கே ஒருநிமிடம் திக்கென அடித்துக் கொண்டது..
 
இப்போதுதான் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க ஆரம்பித்திருந்தாள்.. மறுபடியும் விழுந்துவைச்சா.. கோபத்தில் பல்லை கடித்து அவளை நேராக நிறுத்தியவன்
 
 
உனக்கெல்லாம் அறிவே இல்லையா..?அறிவுகெட்ட முண்டம்..!! உன் வயசென்ன.. இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்தும் இதென்ன சின்னப்பிள்ளத்தனமா..ச்சே எப்ப என்ன ஏழரைய இழுத்து வைப்பன்னு நாங்க பயந்துட்டே இருக்கனுமா.. போடி போய் பேசாம ஓரிடத்தில உட்காரு..?” சத்தமாக அவளை திட்ட அவனது கோபத்தில் ஸ்ரீயே பயந்து அழ ஆரம்பித்துவிட்டான்..
 
அவனை நோக்கி திரும்பியவன்,” டேய் மூச் வாயத்திறக்கக்கூடாது.. நீயும் இவக்கூட சேர்ந்துட்டு ரொம்ப சேட்டை பண்ற..வாயமூடு.. போ போய் நீயும் உட்காருடா..?”
 
அவன் முன்னால் வந்தவள்,” மாமா என்னை திட்டினிங்க பரவாயில்ல.. சின்னப்பையன் அவனையும் ஏன் திட்றிங்க..?”
 
பல்லை கடித்தவன்,” உன்னை வாயத்திறக்காத.. உட்காருன்னு சொன்னேன்..??” அனைவரும் ஸ்ருதி  விழுந்திருந்தால் என்னாயிருக்கும் என்பதால் அஸ்வின் திட்டியதில் தவறில்லை என நினைத்து அமைதியாக இருக்கவும்,
 
அங்கு ஸ்ரீ அழுகையை அடக்கிக் கொண்டு முகம் அஷ்டக்கோணலாக மாற கண்ணீர் இப்போ விழவா பிறகா என கண்ணுக்குள் தளும்பி நிற்க அவனை தூக்கி சமாதானப்படுத்தியவள் தன் மகனின் அழுகையை தாங்கமுடியாமல் மாமனின் முன்னால் வந்து..
 
 அதான் விழலைல எதுக்கு மாமா இவ்வளவு திட்றிங்க.. அதுவும் ஸ்ரீக்குட்டியவும்..??”
 
அவளை அடிப்பது போல நெருங்கியவன் ஸ்ரீயை பறித்து தாயிடம் கொடுத்து,” என் கண்ணுமுன்னாடி நிக்காம போடி.. என்உயிர வாங்காத..??”
 
புஸ்புஸுவென கோபம் அதிகமாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவள்.. ம்ம் நீங்க என்னை அடிக்கப் போறிங்க..கண்ணுமுன்னாடி நிக்காம போகச் சொல்றிங்க.. திட்றிங்க..? அன்னைக்கு நீதான் என் செல்லம்.. பட்டு, தங்கம்,, நீ என்ன பண்ணினாலும் நான் உன்னை நல்லா பார்த்துபேன், எனக்கு கோபமே வராது.. நீதான் என் தேவதை அப்படின்னு சொன்னதெல்லாம் பொய்யா..!!”
 
அவ்வளவு நேரம் அஸ்வினின் கோபத்தில் சற்று டென்சனாக நின்றிருந்தவர்கள் ஸ்ருதியின் இந்த பதிலில் சட்டென சிரிப்புவர அஸ்வினுக்கோ மானமே போயிற்று இவள..??”
 
தெரியாம சொல்லிட்டேன்.. எல்லாரும் செல்லம் கொடுக்கும்போது நானும் அப்படியே இருந்தேன்ல அதான் என் தப்பு.. இனிமே நீ எதாச்சும் சேட்டை பண்ணு.. அப்ப இருக்கு உனக்கு.. போய் சாப்பிட்டுட்டு பேசாம படுக்கனும்..”  கோபத்தில் திட்டியவன் சாப்பிடாமல் கூட தன் அறைக்குச் செல்ல,
 
 அஸ்வின் தன் மகள் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என்பதை இத்தனை நாட்களில் பார்த்திருந்தவர்கள் அவனாவது அதட்டட்டும் என பேசாமல் செல்ல கற்பகமோ மகனுக்கு வேறு ஏதோ பிரச்சனையோ என்று நினைத்தவர் காலையில் அதைப்பற்றி பேசவேண்டும் என நினைத்தார்..
 
அதன் பிறகு வீட்டில் அமைதி.. ஸ்ரீயும் தன் பாட்டியுடனேயே படுக்கச் செல்ல மணி ஒன்பதரையிருக்கும்.. தன் அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் ப்பச் தேவையில்லாத டென்சனை அவமேல காட்டிட்டனோ.. அவளைப்பத்தி நமக்கு தெரியும்தானே அதோட ஸ்ரீயையும் அதட்டி..ச்சே.. என்ன பண்ணிட்டேன்.. மெதுவாக அவர்களை தேடிச் செல்ல ஸ்ரீ தன் தாயின் அறையில் இருப்பது தெரிய அங்கு நுழைந்தான்..
 
தந்தையை பார்க்கவும் விளையாட்டு பொருட்களை கீழே போட்டவன் ப்பா..” என தந்தையிடம் தாவ அவனுக்கு அப்படியே உள்ளுக்குள் உருகிற்று.. தன் மகனின் கன்னம் கன்றும் அளவுக்கு முத்தமிட்டவன் அவனை லேசாக இறுக்கி அணைக்க குட்டியும் தந்தையோடு செல்லம் கொஞ்சியது.. கற்பகம் தன் மகனின் தலையை வருடிவிட்டவர்..
 
என்ன கண்ணா.. ஏதாவது பிரச்சனையா..? நீ இப்படியெல்லாம் சத்தமா யாரையும் திட்ட மாட்டியே..
 
ஒன்றும் சொல்லாமல் தன்தாயின் மடியில் படுக்க மெதுவாக தலையை கோதி விடத் துவங்கினார்..
 
ஸ்ருதியைப்பத்திதான் உனக்கு தெரியும்தானே.. புதுசாவா பண்றா.. அவளும் நம்ம ஸ்ரீமாதிரிதான்.. குழந்தை குடும்பம்னு வந்து கொஞ்ச நாளான்னா அவளுக்கும் பொறுப்பு வந்திரும்.. உனக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை வேணும்.. உன்னை ஏத்துக்க அவளுக்கும் கொஞ்சநாளாகும்.. சும்மா இப்படி கோப்படாத…!! இவ்வளவு பிரச்சனைக்கப்பறம் இப்பத்தான் உனக்கு பிடிச்ச வாழ்க்கை ஆரம்பமாக போகுது.. அதுக்குள்ள தேவையில்லாத கோபத்தினால எதையும் சிக்கலாக்கிராத கண்ணா..
 
ஸ்ரீக்குட்டியும் தந்தையின் நெஞ்சில் படுத்தபடி மெல்ல தூக்கத்திற்கு சென்றிருக்க குட்டியை இங்கேயே படுக்க வை. போ போய் ஸ்ருதிய பாரு.. சாப்பாடு வேண்டாம்னு சொன்னா.. மாத்திரை போடனும் ஏதாவது சாப்பிட வை..
 
ஹாலுக்கு வந்தவன் அங்கு யாரும் இல்லாமல் மாமனாரின் அறைக்கு சென்றான்.. அவர் அங்கு அமர்ந்து ஏதோ பைல் பார்த்துக் கொண்டிருக்க அஸ்வினை பார்க்கவும் பாலோடு வந்த கோகிலா,
 
தம்பி இந்தாங்க பால்.. ஸ்ருதி எங்க போனா..??”
 
 உங்களோட இல்லையா..?”
 
இல்லையே மாப்பிள்ள.. அவ உங்க ரூம்ல இருக்கான்னு நினைச்சேன்..
 
இல்ல மாமா.. ஒருவேளை மாடியில இருக்காளோ.. மாடிக்கு போகவேண்டாம்னு சொல்லியிருந்தேன்..மறுபடி ஆரம்பிச்சிட்டாளா..??” ஒவ்வொரு அறையாக தேடியவன் மாடியில் எல்லா அறையிலும் தேடி மொட்டை மாடிக்கு செல்ல அங்கும் அவளை காணவில்லை..
 
எங்க போனா..??”
 
 சந்திரனும் அவளை வீட்டில் ஒரு மூலை முடுக்குவிடாமல் தேட எங்கும் காணவில்லை.. சற்று நேரத்திலேயே அஸ்வினுக்கு பதட்டம்வர அவள் போனிற்கு தொடர்பு கொள்ள நாட் ரீச்சபிள் என வந்தது..
 
வெளியில் வந்து வாட்ச்மேனிடம் விசாரிக்க,
 
ஆமா தம்பி நம்ம ஸ்ருதிம்மா இந்த பக்கம் வாக்கிங் போறதா சொல்லிட்டு போனாங்க..?”
 
அதிர்ந்தவன் வாக்கிங்கா..அதுவும் இந்த நேரத்திலா.. அவளால ரொம்பதூரம் நடக்க முடியாதே.. மாமனாரும் மருமகனும் ஆளுக்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு தேடிச் செல்ல அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.. அஸ்வினுக்கு டென்ஷன் அதிகமாகி இருந்தது.. இருவரும் தேடி எங்கும் காணாமல் ஒருவேளை வீட்டுக்கு வந்துவிட்டாளோ  வீட்டிற்கு போன் செய்து கேட்டவன். அவளது போனிற்கும் முயற்சித்து கொண்டே இருக்க கடைசியில் அவளிற்கு ரிங் போயிற்று..
 
அந்த பக்கம் எடுக்கபடவும் அஸ்வின் பதட்டத்துடன்,” ஹலோ ஹலோ ஸ்ருதி நல்லாயிருக்கியா.. எங்க இருக்க ஒன்னும் பிரச்சனை இல்லையே..?”
 
அந்த பக்கம் ஒரு வயதானவரின் குரல்,” ஸ்ருதியா.. இல்லைங்களே இது என்னோட போனுங்க..?”
 
நம்பரை சரிபார்த்தவன் அவர் போனா.. ஹலோ யார் பேசுறிங்க.. இந்த போன் நம்பர் என் மனைவியோடது நீங்க யார் பேசுறது..?”
 

Advertisement