Advertisement

அத்தியாயம் பதினொன்று :

செல்விக்கு வேலை முடித்து கிளாஸிற்கு போக வேண்டும் என்ற ஞாபகம் மட்டுமே இருந்தது. இதில் அருள் எல்லாம் ஞாபகத்திலேயே இல்லை. நேற்று கிளாஸில் கொடுத்த ஹோம் வொர்க் மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.

அருளைப் பற்றியெல்லாம் அவள் அதிகமாக யோசிக்கவில்லை. ஆனால் அருள்.. அவளைப் பற்றி மட்டுமே யோசிப்பதை வேலையாக வைத்திருந்தான். அவன் மனம் முழுவதும் செல்வி மட்டுமே.. தற்போது  நிரம்பியிருந்தாள். அவளை ஹாஸ்டலில் பார்த்துவிட்டு சென்றதில் இருந்து.. அவள் ஞாபகமாகவே இருந்தது. அண்ணனை பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இப்போது அவளைப் பார்பதற்காகவே விரைவாக வந்தான்.

வாய் அண்ணனோடும் அண்ணியோடும் பேசிக்கொண்டு இருந்தாலும்.. கண்கள் ரகசியமாக செல்விக்காகப் பார்த்திருந்தது.

“எப்போ அருள் எக்ஸாம்?” என்றான் சரவணன். 

“ப்ரிலிமினரி நெக்ஸ்ட் மன்த், சரவணா..” 

“எப்படி ப்ரிபேர் பண்ணிட்டு இருக்க?”

“எப்படி பண்ணியிருகேன்றது.. ரிசல்ட் வந்தா தான்.. எனக்கேத் தெரியும்”, என்று மிக மெல்லிய புன்னகை சிந்தினான்.

அந்த நேரம் பார்த்து ராதிகாவிடம்.. செல்வி ஏதோ கேட்பதற்காக வர.. சின்னப் புன்னகை பெரிதாக மாறிற்று.

செல்வி இது எதையும் கவனிக்கவில்லை. அவள் எப்பொழுதும் போல ராதிகாவிடம் கேட்டு அவள் பாட்டிற்க்கு சென்றுவிட்டாள்.

அருள் மிகவும் கவனமாக இருந்தான். ராதிகா மட்டும் இருந்தால் பிரச்சனையில்லை. அவன் கண்கள் செல்வியைத் தொடர்ந்தால் கூட.. அவ்வளவாக உணர மாட்டாள். ஆனால் அங்கே இருப்பது சரவண பாண்டியன் அல்லவே. சிறு பார்வை தொடரலும்.. அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டால்

“பார்த்து கவனமா நடந்து கொள்ளுடா. அவன் கண்டுபிடிச்சிட்டான்னா ரொம்ப கஷ்டம். நீயே இன்னும் ஸ்திரமாகலை., உன் எண்ணம்.. என்னன்னு கண்டுபிடிக்கத் தான் நீயே வந்திருக்க.. பார்த்து நடந்துக்கோடா”, என்று அவனுக்கு. அவனே சொல்லிக்கொண்டான் அருள்.   

ஆம். அவனுக்கேத் தெரிய வேண்டி இருந்தது. செல்வியை அவன் பார்த்துச் சென்றதில் இருந்து.. ஊருக்கு போன பின்னாலும்.. அவள் ஞாபகம் தான். ஏனென்று தெரியவில்லை. அவள் கண்ணீரோடு சிரித்தது.. அவன் இரவுகளில், அவனுக்கு ஞாபகம் வந்து.. அவனுக்கு பெரியத் தொல்லையை கொடுத்தது. அவனுக்குத் தோன்றும்.. இந்த உணர்வு.. என்னவென்று அவனுக்கேத் தெரிய வேண்டியிருந்தது.

இது சாதாரண விஷயமில்லை.. என்று அவனுக்குத் தெரியும். தன் குடும்பத்தினர்.. இதற்கு எப்பொழுதும் ஒத்துக்கொள்ள மாட்டார்.. என்று இன்னும் நன்றாகத் தெரியும். தன்னுடைய ஜாதி ..அவளுடைய ஜாதி.. இதற்கெல்லாம் பெரிய தடையாக இருக்கும்.. என்றுத் தெரியும். 

ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்வது.. இந்த காலகட்டத்தில் சாதாரண விஷயம் ஆகி வந்தாலும்.. அது சம அந்தஸ்து உள்ளவர்கள் இடையே மட்டும் தான்.. இன்னும் சாத்தியமாகி கொண்டிருக்கிறது என்று உணர்ந்து தான் இருந்தான்.

ஜாதி மட்டுமல்ல.. அவள் தங்கள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த பெண். தானே.. பலமுறை அவளை கீழிறக்கி நடத்திய சம்பவங்கள் உண்டு. மற்றவர் பார்வை.. அவள் மீது எப்படி இருக்குமென்று தெரியாது.

சரவணன், ராதிகாவை காப்பாற்ற.. அந்த பெண்ணின் பாட்டி இறந்ததினால்.. ஒரு இரக்கத்தால், அவளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறான். திருமணம் என்று வரும்போது.. அவன் எப்படி நடந்துகொள்வானோ தெரியாது.. என்று அவனுக்கு அவனே சொல்லிகொண்டவன். .அவனின் எண்ண ஓட்டத்தால் அதிர்ந்தான்.

“என்ன! நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேனா.. நான் அவளை காதலிக்கிறேனா?”

யோசனையின் நாயகி.. ஏதோ வேலையாக அங்கேயும் இங்கேயும் செல்ல.. அவளையே பார்த்திருந்தான். 

இவ்வளவு தீவிரமாக.. அவன் மனம் இருப்பது.. அவனுக்கே அவனை குறித்து ஆச்சர்யமாக இருந்தது. அவனின் நிலை.. அவளைக் குறித்து என்ன என்று அறிவதற்காகவே.. இந்த முறை அவன் அண்ணன் வீட்டிற்கு வந்தான் என்பது தான் நிஜம்.

நிலை அவனுக்கு புரிவதற்குள்ளாகவே.. அவன் மனம் திருமணம் வரை போய்விட்டது. சந்தோஷமாகவும் இருந்தது. இது சரி வருமா என்று அவனுக்குள்ளேயே.. அவனுக்கு பயமாகவும் இருந்தது.         

எதுவாக இருந்தாலும்.. அவள் சின்னப் பெண். இப்போது எதுவும் பேசமுடியாது. முதலில் தான் எக்ஸாம் பாஸ் செய்து ..வேலையில் அமர்வோம். அதற்குள் அவளும் படித்து முடிக்கட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.. என்று மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.  

 அதற்குள் காலை உணவு தயாராக இருக்க.. அண்ணனும் தம்பியும் சாப்பிட அமர்ந்தனர். அவர்கள் சாப்பிடும் போதே.. செல்வி  ரெடியாகி  வெளியே கிளம்புவதை பார்த்தான். இவள் எங்கே போகிறாள்.. என்று யோசனையாக அவன் மனம் இருக்க..

ராதிகாவே கேட்காத தகவலாக, “அவ ஸ்போகன் இங்கிலீஷ் கிளாஸ்சும்.. கம்ப்யூட்டர் கிளாஸ்சும், போறா அருள்.” என்றாள்.

“சாப்பிடலையா?” என்றான் அவனை அறியாமல்.

இவன்.. என்ன கேட்கிறான் என்பது போல சரவணனின் பார்வை இருந்தது. அவன் அருள் இப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அருளுமே கேட்ட பிறகே.. இது அதிகப்படி.. என்று அவனுக்கே தோன்றியது.

“நம்ம இப்போ தானே சாப்பிட உட்கார்ந்தோம். அதுக்கு முன்னாடியே ..அந்த பொண்ணு சாப்பிட்டிட்டு கிளம்பிடிச்சான்றதுக்காக கேட்டேன்”, என்று அருள் சமாளித்தான்.

“சாப்பிட்டிடுட்டா”, என்று ராதிகா பதில் அளித்தாள். அவள் அதை சாதாரணமாக தான் எடுத்துக்கொண்டாள். 

சரவணனுக்கு தான் எங்கோ உதைத்தது. போலீஸ் மூளை அல்லவா.. எதையும் சந்தேகக் கண்ணோடு தானே பார்க்கும். ஆனால் அப்போதும், “நமக்கு முன்னாடியே அந்த பொண்ணு சாப்பிட்டிடுச்சான்றதுக்காக கேட்கறானா.. இன்னும் இந்த வேற்றுமையை இவன் விடலியா..” என்று தான் நினைத்தான்.

அப்படித்தான்.. சரவணன் நினைத்தானேத் தவிர..வேறு எண்ணம் செல்வி மேல்.. அருளுக்கு இருக்ககூடும்.. என்று சற்றும் நினைக்கவில்லை. ஏனென்றால்.. சிறுவயதில் இருந்து அருள்.. செல்வியிடம் நடந்து கொண்ட விதம் அப்படி.

“இவன் எப்போது திருந்துவானோ”, என்று எண்ணிக்கொண்டே சரவணன் உண்டு முடித்து எழுந்தான்.

“அப்பா! இவன் ரொம்ப ஒண்ணும் துருவலை”, என்று ஆசுவாசப்பட்டான் அருள்.

“உங்க கைப்பக்குவமே தனி அண்ணி. சாம்பார் சூப்பர்”, என்றான் அருள்.

“நான் வைக்கலை அருள். செல்வி தான் வச்சா.”

“எதுவா இருந்தாலும் உங்க ட்ரைனிங் தானே..” என்று ராதிகாவிற்கே ஐஸ் வைத்தான். இருந்தாலும்.. மனம் ஒருபக்கம் சொன்னது பரவாயில்லை, அவளுக்கு நல்லா சமைக்கக் கூட வருது போல என்று. அதன் பிறகு சீரியசாக.. அண்ணனிடம் அவன் எக்ஸாம்மிற்கு வேண்டி.. ஏதோ கேட்டுக் கொண்டு இருந்தான்.

சரவணனும், அவனுக்கு எப்படி.. என்ன என்று சொல்லிக்கொண்டு இருந்தான். அவனுக்கு சொல்லிக் கொடுத்த பிறகே அவன் டியூட்டிக்கு.. கிளம்பினான் சரவணன்.

“நைட் நான் வர்ற வரைக்கும் இருப்ப தானே?” என்றான் சரவணன் அருளிடம்.

“ஒன்பது இருபதுக்கு எனக்கு பஸ்”.

“இன்னைக்கே கிளம்பறியா நீ. நாளைக்கு சண்டே தானே.. இருந்துட்டு கிளம்பலாமில்ல..”.

“இல்லை! எனக்கு நாளைக்கு அங்க கோச்சிங் இருக்கு. நெக்ஸ்ட் மந்த் எக்ஸாம்.. அது முடிஞ்சு தான் வருவேன்”.

“சரி. நீ போறதுக்கு முன்னாடி.. எனக்கு ஒரு கால் அடி. நான் ஒருவேளை மறந்துட்டன்னாக் கூட வந்துடுவேன்.”       

 “சரி சரவணா! ஆனா லேட் பண்ணிடாத..”

“பஸ்சை நான் வர்றதுக்கு முன்னாடி எடுத்துடுவானா அவன்கிட்ட என் பேரை சொல்லு..” என்று சொல்லிச் சென்றான்.

“அட.. எப்போ இருந்து.. இவன் கெத்தை காட்ட ஆரம்பிச்சான்..” என்று யோசித்தான் அருள். அது தானாக வந்துவிடும்.. என்று அவனுக்கு புரியவில்லை. நானும் இந்த மாதிரி ஆகிடுவேனா ???

அதன் பிறகு அமைதியாக உட்கார்ந்து டீ வி பார்த்துக்கொண்டிருந்தான். படிப்பில் மனம் செல்லவில்லை. செல்வியின் வருகைக்காக.. வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.  

எப்படியிருந்த நான்.. இப்படி ஆகிவிட்டேன்.. என்று அவனுக்கு,  அவனே கேட்டுக்  கொண்டான். அவனுக்கு.. அவனிடமே கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. இருந்தாலும்.. அத்தனையையும் தள்ளி போட்டுவிட்டு.. கண்கள் செல்விக்காக காத்திருந்தது.

அவனை, அதிக நேரம் காக்க வைக்காமல்.. மதியமே செல்வி வந்துவிட்டாள்.

அருள் வந்திருக்கிறான் என்று ராதிகா தடபுடலாக சமைத்துக்கொண்டிருக்க.. செல்வி அவளுக்கு உதவ போய் நின்றுகொண்டாள்.

சுவையான அருமையான விருந்து. சரவணன் வரமுடியாது என்று தெரிவித்து இருந்ததால்.. ராதிகா அவனுக்கு கொடுத்து விட்டிருந்தாள்.

“எப்படி அண்ணி.. இப்படி ருசியா சாப்பிட்டும், சரவணன் வெயிட் போடாம இருக்கான்.”

“அதுக்குத் தான்.. அவர் தினமும் ஐஞ்சு கிலோமீட்டருக்கு மேல ஜாக்கிங் போறாரே..”

“அப்படியே.. ஊரை ரோந்து சுத்திட்டு வந்துடுவான்னு சொல்லுங்க.”

“ஒஹ்! அதுக்கு தான் காலைல ஊரைச் சுத்தி ஒடறாரா.. நானும் தினமும் எதுக்கு.. ஒவ்வொரு பக்கம் போறார்னு நினைச்சேன். இதுக்குதானா..” என்று திருப்பி அவனையே கேள்விக் கேட்டாள் ராதிகா.

அவள் கேட்ட விதம் அருளுக்கு சிரிப்பை வரவழைக்க.. கஷ்டப்பட்டு அடக்கிப் புன்னகை மட்டும் புரிந்தான்.

அவன் ராதிகா சொன்னதற்கு தான் சிரிக்கிறான்.. என்றுணர்ந்த செல்வி அவனை பார்த்து முறைத்தாள்.

அவ்வப்போது செல்வியை கவனித்துக் கொண்டிருந்த அருளுக்கு இது நன்கு புரிந்தது. “அட அங்க சிரிச்சா.. இங்க ஷாக் அடிக்குது”, என்று நினைத்தவனுக்கு இன்னும் சிரிப்பு பொங்கியது.

செல்வியால் தாங்கவே முடியவில்லை.

“இப்போ எதுக்கு சிரிக்கறீங்க”, என்றாள்.

“என்ன செல்வி”, என்றாள் ராதிகா.

“உங்களுக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அக்கா. இவங்க எதுக்கோ சிரிக்கறாங்க. என்னன்னு கேளுங்க..”,

“ஒண்ணுமில்லை அண்ணி. சிரிக்க கூட.. நான் இங்க பெர்மிஷன் வாங்கணுமா என்ன?”

“என்ன செல்வி.. அருள் ஒண்ணுமில்லைன்னு தானே சொல்லுது.”

“அவங்க அப்படி சொன்னா நம்பிடுவீங்களா? என்னவோ போங்க.. ஒண்ணுமில்லைன்னா பரவாயில்லை. ஆனா ஒண்ணுமில்லாம இருக்காது. எப்பவும் ஜாடை பேசுவாங்க இவங்க. எனக்குத் தெரியும்.” என்றாள் ரோஷமாக.

ஏனோ.. அருளுக்கு கோபம் வரவில்லை. திரும்ப கிண்டல் பண்ண கூட வரவில்லை. மறுபடியும் சிரித்தான். அவன் அதிகம் சிரிக்க மாட்டான். ராதிகா கூட.. என்ன இவன் இன்று.. இப்படி சிரிக்கிறான் என்று நினைத்தாள்.

அவன் சிரிப்பதை பார்த்து.. இன்னும் கோபம் ஏறியது செல்விக்கு. ஏதாவது சூடாக சொல்ல வேண்டும்.. என்று வாய் வரை வார்த்தை வந்தது. இருந்தாலும் ராதிகாவிற்காக அமைதியாக பொறுத்தவள்.. அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.

அவளின் அந்த செய்கையை ரசித்தான் அருள். “அப்பா.. என்னம்மா கோபம் வருது. நீ.. எப்படிடா இவகிட்ட சொல்லி.. சம்மதம் வாங்கப் போற. .தெரியலையே.. ஒரு வேலை சம்மதிக்கலைன்னா.. என்ன பண்ணுவ?.”

“தூக்கிறமாட்டேன். இனிமே அவ என்கிட்ட இருந்து.. விலகவே முடியாது. நான் விடமாட்டேன்”, என்றது மனம்.

“இவ்வளவு தீவிரமாகவா.. நீ இருக்கிறாய்?”, என்று அவனுக்கு.. அவனே கேட்டுக்கொண்டான்.” டேய் இன்னும் எத்தனை தடவை கேட்ப.. அடங்குடா.”, என்றான் அவனுக்கு அவனே.

ஏதோ ஒன்று ராதிகாவிடம் பேசிக்கொண்டே இருந்தாலும்.. பார்வை முழுவதும் செல்வியின் மேலேயே இருந்தது. அது அவனுக்கு ஒரு இனம் புரியாத உற்சாகத்தையும்.. சந்தோஷத்தையும் கொடுத்தது.

“நீ என்னடா.. இப்படி டீன் ஏஜ் பையன் மாதிரி.. இப்படி சைட் அடிக்கற..”. இதுவும் அவனுக்கு அவனே.

இப்படி மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தான். இது தெரியாத ராதிகா வளவளத்துக்கொண்டிருந்தாள். ஏதோ கேட்பதற்காக செல்வியும் மறுபடியும் வந்தாள். 

அவள் சொல்லவும்.. ராதிகா ஏதோ வேலையாக அந்த புறம் நகர்ந்தாள். அவள் இல்லாததை உணர்ந்த செல்வியும்.. அந்த இடத்தை விட்டு அகல நினைக்க..

அதற்கு முன்.. அருளின் குரல் அவளைத் தடுத்தது.  

“என்ன.. உங்க அக்காவை சொன்னா.. உனக்கு அவ்வளவு கோபம் வருதா? முறைக்கற..”,

பதில் பேசாமல் அவனை நேர் கொண்டு பார்த்தாள்.

அந்த நேர்கொண்ட.. அவளின் பார்வை அவனைக் கவர்ந்தது. அதை ரசித்தான். அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தாள் செல்வி. எதுக்கு இப்படி பார்க்கிறான். இது நல்லதுக்கு இல்லையே என்று நினைத்தாள்.    

“என்ன பதிலை காணோம்..”,

“எங்க ஐயாவோட தம்பியா.. இருக்க போய் பார்க்கறேன். இல்லை”

“இல்லை.. என்ன செய்வ?”,

“அந்த தைரியம் தானே.. எதுவும் செய்ய மாட்டேன்னு.”

“பார்றா.. எவ்வளவு வாயடிக்கறா. அது.. உங்க அக்கா மட்டும் இல்லை. எனக்கு அண்ணியும் கூட. “

“அந்த ஞாபகம் இருந்தா.. அவங்களை கிண்டலா பார்த்து சிரிப்பீங்களா?”

“அது கிண்டல் இல்லை.  அவங்க அறியாமையை பார்த்து சிரிப்பு வந்தது. யார்.. எது சொன்னாலும் நம்பறாங்க.”

“அப்படி ஒண்ணுமில்லை. எங்க அக்கா பயங்கர புத்திசாலி.”,

“ஆமாம். பயங்கர புத்திசாலி.”, என்று செல்வி சொன்னதையே திரும்ப சொன்னான்.

“இப்போ தானே சொன்னேன்”, என்று இடுப்பில் கையை வைத்து முறைத்தாள் செல்வி.

“பாத்து.. கண்ணு சுளுகிக்கப் போகுது”, என்றான், அவள் முறைப்பதை பார்த்து.

“இவனை என்ன செய்யலாம்..” என்பது போல செல்வி பார்க்க.. 

அப்போது பார்த்து ராதிகா வந்ததால்.. அவனை ஒரு பார்வை பார்த்து, திரும்பிக் கொண்டாள் செல்வி.

“ஒஹ்! அண்ணி முன்னாடி.. என்கிட்ட இவ வாய் குடுக்க மாட்டாளா..” இப்படி செல்வியின் எண்ணங்கள் மட்டுமே சூழ நேரத்தை கடத்தினான்.

கிளம்பும் நேரம் ஆகப்போக.. செல்வி தனியாக இருக்கும் நேரத்தை பார்த்து.. “எனக்கு, பெஸ்ட் ஆப் லக்.. சொல்ல மாட்டியா?” என்றான்.

“எதற்கு?” என்பது போல செல்வி பார்க்க..

“நானும்.. உங்க ஐயா மாதிரி.. போலிஸ் ஆகப் போறேன் இல்லை. அதுக்குத் தான்.”

“என்ன! நீங்க போலிஸ் ஆகப்போறீங்களா?”, என்று அதிசயமாக கேட்டாள். “நீயெல்லாம் போலிஸ் ஆனா.. எனக்கு போலிஸ் ஆகற ஆசையே.. போய்டும் போல இருக்கே”, என்றாள் மனதிற்குள். 

“ஆமாம் போலிஸ் தான்.. ஆகப்போறேன்.”

“முதல்ல நீங்க எக்ஸாம் எழுதுங்க. ரிசல்ட் வரட்டும். அப்புறம் பார்க்கலாம்.”

“அதுக்குத் தானே உன்னை விஷ் பண்ண சொல்றேன்.”

“நானெல்லாம்.. விஷ் பண்ணினா உங்களுக்கு பிடிக்காது. ஏன்.. நான் உங்க முன்னாடி வந்தாலே உங்களுக்கு பிடிக்காது. திட்டிடே இருப்பீங்க. இப்போ என்ன ஆச்சு? உங்களுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா? மாத்தி யோசிக்கறீங்க…” என்றாள் நெடுநாளைய சந்தேகமாக.

அவள் சீரியசாக பேச இவனும் சீரியசாக.. “அது அப்போ. இது இப்போ..” என்றான்.

“அதுதான்.. நானும் கேட்கறேன். அது ஏன் அப்ப அப்படி. இப்ப இப்படி.”

“அதை.. நீ தான் கண்டுபிடிக்கணும்.”

“நான் ஒண்ணும் உங்க அளவுக்கு புத்திசாலியில்லை. நீங்களே சொல்லுங்க.”

“பார்ப்போம்.. உன்னால கண்டுபிடிக்க முடியலைன்னா.. அப்போ சொல்றேன்.”

அவன்.. பேச்சை தன்னிடம் வளர்த்துகிறான்.. என்று சட்டென்று செல்விக்குத் தோன்ற.. திரும்பி உள்ளே போகப்போனாள்.

அவள் உள்ளே போகப்போகிறாள் என்றுணர்ந்த அருள்.. பட்டென்று அவள் கையை பிடித்து நிறுத்தினான்.

அவன் கையை பிடித்ததும்.. செல்வி பயந்து விட்டாள். அவள் கையை உருவப் பார்க்க.. பிடி உடும்புப் பிடியாக இருந்தது.

“என்ன பண்றீங்க.. விடுங்க கையை.” என்றாள் பதட்டமாக.

“நீ என்னை விஷ் பண்ணு. விடறேன்”, என்று ப்ளாக் மெயில் பண்ணினான். அதற்குள் ராதிகா வரும் அரவம் கேட்க.. கை விட்டுவிட்டான்.

ஆனால்.. செல்விக்கு அவன் கையை பிடித்த அதிர்ச்சி விலகவில்லை. சுவரோடு ஒண்டி நின்றாள்.

ராதிகா வரும்போது.. செல்வியை கலாட்டா செய்த சாயல் சிறிதும் இன்றி.. முகத்தை நல்ல பையனாக வைத்துக்கொண்டு.. அப்போது தான் அந்த இடத்திற்கு வருவது போல.. எட்டு வைத்தவன்.. ராதிகாவை பார்த்தவன், “ஏன் அண்ணி.. இந்த பொண்ணு இப்படி நிக்குது”, என்றான்.

ராதிகாவும் செல்வியை பார்த்தவள், “என்ன செல்வி.. இப்படி சுவரோட, எதையோ பார்த்துப் பயந்த மாதிரி நிக்கற.”

“ஒண்ணுமில்லை அக்கா ஏதோ யோசனை”, என்றாள்.

“நான்.. உன் கையை பிடிச்சதை சொல்லு”, என்று சைகையால் காட்டினான் அருள். அதை கவனித்தும் கவனிக்காத மாதிரி.. செல்வி அந்த இடத்தை விட்டு மறுபடியும் நகரப் போக..

அதை பார்த்த அருள்.. காரியத்திலேயே கண்ணாக.. “அண்ணி, இந்த பொண்ணு உள்ள போகுது. எனக்கு எக்ஸாம்க்கு விஷ் பண்ண சொல்லுங்க”, என்றான் தைரியமாக.

எதையும் தவறாக எடுக்காத ராதிகா.. “ஆமாம் செல்வி! அருளுக்கு நெக்ஸ்ட் மந்த் எக்ஸாம். அவரும் அவங்க அண்ணா போல போலிஸ் ஆகப் போறாங்க”, என்றாள் சீரியசாக.

“கிழிச்சான்”, என்று முனுமுனுத்தாள் செல்வி.

அவளின் வாயசைவு ராதிகாவிற்கு புரியவில்லை. அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அருளுக்கு புரிந்தது.

அவன் முகம் புன்னகையை பூசியது. “என்ன கிழிக்கறேன்னு.. காட்டுறேண்டி..” என்றான். ஆனாலும் விடாமல் நின்றான்.

“ஆல் தி பெஸ்ட் அருள்”, என்ற ராதிகா. .செல்வியும் சொல்வாள் என்று அவள் முகம் பார்க்க.. ராதிகாவிற்காக வேண்டா வெறுப்பாக.. “பெஸ்ட் ஆப் லக்”, என்று சொன்னாள் செல்வி.

நிகழ்ந்த நிகழ்வுகள் அவளை அசைத்திருந்தது. எவ்வளவு உரிமையாக கையை பிடித்தான். ராதிகாவிற்கோ.. ஐயாவிற்கோ தெரிந்தால்.. தன்னைப் பற்றி என்ன நினைப்பர் என்ற கவலை.. சஞ்சலம் அவளுக்கு வந்தது. ஏன்.. இவன் இப்படி நடந்து கொள்கிறான். இந்த நடத்தைக்கு.. அவன் தன்னை திட்டினால், அவமதித்தால் கூட பரவாயில்லை.. என்று தோன்றியது.

“சரவணா.. நான் கிளம்பறேன்”, என்று அவன் அண்ணனிற்கு தொலைபேசியில் அழைத்து கூறினான்.

“நீ போ. நான் பஸ் ஸ்டான்ட் வந்திடறேன்”, என்றான் சரவணன்.

அதை ராதிகாவிடம் தெரிவித்து, வெளியே வந்தவனின் கண்கள்.. செல்வியைத் தேடின. அவளை வெளியே காணவில்லை.

அவளை பார்க்காமல் போகவும் மனமில்லை. “இருங்க அண்ணி”, என்று ஏதோ எடுப்பவன் போல உள்ளே சென்றவன்.. சமையல் அறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த அவளை பார்த்து.. “நான் போயிட்டு வர்றேன்”, என்றான்.

இவனை எதிர்பார்க்காதவள் விதிர்த்து திரும்ப.. “நான் போயிட்டு வர்றேன்”, என்றான் மறுபடியும்.

அவளையும் மீறி தலையசைத்தாள் செல்வி. பிறகே சென்றான்.

அவளிடம் சொல்லி வந்த குதூகலம்.. அவன் மனம் முழுக்க நிறைந்திருந்தது. இங்கே நடப்பது எதுவும் ராதிகா உணரவில்லை. அவள் எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவில்லை.  

பஸ் ஸ்டாண்டில் சரவணன் இவன் போகும் முன்னரே காத்திருந்தான். அங்கே இருந்த இடங்களை சுற்றி நடந்து கொண்டிருந்தான். இவன் சுற்றி நடந்து கொண்டிருந்ததால்.. அந்த இடமே சற்று அமைதியாக இருந்தது. அங்கே இருந்த கடைக்காரர்களிடம் எல்லாம் பேசிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் சரவணன்.

பஸ் ஸ்டான்ட் அதன் பரபரப்பில் இருந்து.. சற்று குறைந்து காணப்பட்டது அருளுக்கு. அவன் அண்ணன் அங்கே ரோந்து சுற்றி கொண்டிருப்பதால் தான் என்று உணர்ந்தான்.  

சரவணன் இருக்கும் இடம் நோக்கி இவன் போக.. இவனை பார்த்ததும் வந்தான் சரவணன்.

“வந்து நேரம் ஆச்சா”,

“இப்போ தான் வந்தேன். நீ என்னை அனுப்ப வந்தியா.. இல்லை இங்க என்னென்ன நடக்குதுன்னு பார்க்க வந்தியா..”

“ரெண்டும் தான்”, என்று சொல்லி புன்னகைத்தான் சரவணன்.          

“ஒரு நிமிஷம் கூட.. நீ போலீஸ் ஆபிசர்ன்றதை மறக்காத..”

“நாளைக்கு நீ எப்படின்னு பார்க்கத் தானே போறேன்”, என்று சொல்லி சரவணன் புன்னைகைக்க.. அருளின் முகமும் புன்னகையில் மலர்ந்தது.

“சரி.. நான் கிளம்பறேன்”,

“எக்ஸாம் நல்லா பண்ணு. கான்பிடண்டா பண்ணு.”

“போறதுக்கு முன்னாடி பேசுவேன்ல.. அப்போ சொல்லு”, என்றபடி அருள் பஸ்சில் ஏறி அமர்ந்தான். பஸ்சும் நகர்ந்தது. அவன் எண்ண ஓட்டங்களும் நகர்ந்தது. அவன் மனமே அவனிடம் பேச ஆரம்பித்தது. அவனும் பதில் கொடுக்க ஆரம்பித்தான். 

 “தைரியம்டா உனக்கு. அவ கையைப் பிடிக்கற அளவுக்கு தேறிட்ட..”

“அதெல்லாம்.. அப்போதைக்கு வர்ற அசட்டு தைரியம்.” என்று அவனே ஒத்துக்கொண்டான்.

“என்ன.. அசட்டு தைரியமா!. அந்த பொண்ணு ஏதோ மூட்ல இல்லை போல.. பட்டுன்னு ஒரு அறை விட்டிருந்தா.. தெரிஞ்சிருக்கும்.”

“அவ என்னை அறைஞ்சிடுவாளா?”,

“அறைஞ்சா.. நீ என்னடா பண்ணுவ?”,

“வாங்கிப்பேன்.”

“ஐயோ.. வழியுது.” என்று அவனை திட்டிய அவன் மனம்..

“அவ உங்கண்ணன் கிட்ட சொன்னா.. தெரியும்டா சங்கதி.”

“சொல்லட்டுமே. ஆமாம்னு சொல்லிட்டுப் போறேன். என்னைக்கு இருந்தாலும் இதை.. நான் எதிர் கொண்டு தானே ஆகணும்.”

“அதுக்குன்னு.. இப்போவேவா?. இப்போவே எதையும் உளறி வைக்கதடா. இன்னும்.. அவ மனசு என்னன்னு தெரியாது. அவ சரின்னு.. சொல்லுவாளான்னும் தெரியாது. அவளை இப்போவே குழப்பிடாத. அவ படிக்கட்டும்டா. “

“சரி. நீ எப்படி சொல்றியோ.. அப்படியே செய்யறேன்.” என்று அவன் மனசாட்சியோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்தான்.    

Advertisement