Advertisement

அத்தியாயம் ஒன்பது:

சரவணனும் உணர்ந்தே இருந்தான். செல்வி அந்த வீட்டில் தங்களுக்கு எந்த வகையிலும்.. சிறு தொந்தரவும் கொடுக்கவில்லை. அதே சமயம், ராதிகா செல்வியிடம் எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை என்று. எப்படி ஒரு வேற்று பெண்ணை வைத்து.. சிறிதும் முகசுழிப்பு இல்லாமல் பராமரிக்க முடிகிறது என்று தோன்றியது.

செல்வியும் அவர்கள் தனக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்.. அவர்களை தான் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது.. என்பதில் தெளிவாக இருந்தாள். சரவணன் வரும்வரை தான் ராதிகாவிற்கு உதவிக்கொண்டு.. ஏதாவது பேசிக்கொண்டு இருப்பாள். சரவணன் வந்ததும்.. படிப்பதற்கு என்று ரூமிற்குள் புகுந்து விடுவாள்.

அவர்களின் தனிமையை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டாள். சரவணனுக்கே பல நாட்கள் அவள் வீட்டில் இருக்கிறாளா.. இல்லையா என்று சந்தேகமாக இருக்கும்.

“அந்த பொண்ணு.. இங்க தானே இருக்கா..” என்பான்.

“இங்க தாங்க இருக்கா”, என்பாள் ராதிகா. அந்த அளவுக்கு இருக்குமிடம் தெரியாமல் இருப்பாள் செல்வி.

அவளின் நடவடிக்கைகள் பார்த்தே.. இன்னும் அந்த பெண்ணின் மேல்.. நல்ல அப்பிராயம் கொண்டனர் சரவணனும் ராதிகாவும்.

இரண்டு மாதம் வேகமாக செல்ல.. அவளின் தேர்வு முடிவுகள் வந்தன. மாநிலத்தில் மூன்றாவதாக வந்திருந்தாள். அவளே எதிர்பார்க்கவில்லை. அவளை விட ராதிகாவிற்கும், சரவணனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நன்றாக படிக்கக்கூடியப் பெண் செல்வி என்று அவர்களும் அனுமானித்திருக்கவில்லை.

செல்வி அவளிடம் கேட்டவர்களிடம் எல்லாம், “எங்க அய்யாவும் அக்காவும் தான் காரணம்”, என்று சரவணனுக்கும் ராதிகாவுக்குமே புகழாரம் சூட்டினாள்.

ராதிகா அங்கே வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து கோதையிடம் சொன்னாள். கோதைக்கு அது ஒரு செய்தி அவ்வளவே. “ஏதோ உதவி செய்யறதுக்கு.. நல்லா படிக்கவாவது செய்யுதே”, என்று முடித்துக்கொண்டார். எழிலரசிக்கு பயங்கர ஆச்சர்யம். நம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்.. இவ்வளவு நன்றாக படிப்பாளா என்று.

அதை அருளிடம் பகிர்ந்து கொண்டாள். “அண்ணா அந்த செல்வியில்ல.. ஸ்டேட் தேர்ட் வந்திருக்காளாம்”,

“என்ன? சரியாச் சொல்லு..”,

“என்ன சொல்றது.. பேப்பர் பார்த்தியா. அவ போட்டோ வந்திருக்கு. மாநிலத்திலேயே மூணாவதா வந்திருக்காளாம்”.

“அட! நம்ம சும்மா கிண்டல் பண்ணினா.. இவ நிஜமாவே வந்துட்டா போல இருக்கே.”, என்று மனதிற்குள் அருள் நினைத்துக்கொண்டான்.

அவன் நினைப்புக்கு தக்கப்படி.. அவனைத் தொலைபேசியில் அழைத்த ராதிகா. “என்ன.. ஸ்டேட்ல மூணாவதா  வந்துட்டா செல்வி. இப்போ என்ன சொல்ற?” என்றாள்.

“நானா? நான் என்ன சொல்றதுக்கு இருக்கு.” என்றான் அருள்.

“நீதானே அவளை அன்னைக்கு சொன்ன.. என்னவோ ஸ்டேட்ல முதல்ல வர்ற மாதிரி பேசறான்னு. முதல்ல வரலைன்னாலும் மூணாவதா வந்துடோமில்ல”, என்றாள் சந்தோஷமாக.

“அவளை விட.. உங்களைத் தான் கைல பிடிக்க முடியாது போல இருக்கே”, என்று அவளை திரும்ப கிண்டல் அடித்தான்.

“சும்மா பேச்சை மாத்தகூடாது. யாரையும் குறைச்சு எடை போடக்கூடாது”, என்று கண்டித்தாள்.

“நாம எப்படா அவளை தூக்கிப் பார்த்தோம். அவளை குறைச்சு எடைபோடறதுக்கு”, என்று மனதிற்குள்ளேயே நக்கலடித்தான் அருள். ஆனால் வெளியே சொல்லவில்லை. அவன் எண்ணம்.. அவனுக்கே சிரிப்பைத் தர சிரித்தான்.

“எதுக்கு.. இப்படி சிரிக்கற நீ இப்போ?”, என்றாள் ராதிகா சந்தேகமாக.

“ஒண்ணுமில்லை அண்ணி”, என்று பேச்சை மாற்றினான்.

பிறகு.. “அண்ணா இருக்காங்களா”, என்று பேச்சை மாற்றி வேறு ஏதோ பேசி வைத்தான்.

ராதிகாவின் போனை வைத்த பிறகு.. வேகமாக ஹாஸ்டல் முன் ரூமிற்கு வந்து.. அங்கே இருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தான்.

முதல் பக்கத்திலேயே அவள் போட்டோ இருந்தது. ஸ்கூல் யுனிஃபார்மில் மங்கலாக தெரிந்தாள்.

“பாருடா.. இவளுக்கு வந்த வாழ்வை”, என்று எண்ணினான். “நடத்திட்டாளே.. சாமார்த்தியசாலி தான். அண்ணன் படிக்க வைக்கறது எல்லாம் வீணாக போகலை.” என்று நினைத்தான். அப்போது.. அதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை.

செல்வியை.. ராமநாதபுரத்தில் உள்ள பள்ளியிலேயே ஹாஸ்டலில் சேர்த்தனர். கோதை அதற்கும் ஆட்சேபித்தார். “எதுக்குடா பக்கத்திலேயே சேக்கறீங்க.. தூரமா சேருங்க” என்றார்.

“அம்மா, ஏதாவது ஆத்திரம் அவசரம்னா.. சும்மா நாங்க ஓட முடியாது. பக்கதிலேன்னா எப்ப வேண்ணா பார்க்கலாம். எங்களுக்கு சிரமம் இருக்காது. இதுலல்லாம் நீ ஏன் தலையிடற?. அதை நான் பார்த்துக்கறேன். எந்த பிரச்சனையும் வராது”, என்று வாக்குறுதி கொடுத்து அன்னையை அடக்கினான்.

“என்னவோ போ.. சரவணா. நாளப் பின்ன ஏதாவது பிரச்சினை வந்தது.. நான் சும்மா இருக்க மாட்டேன்”, என்றார்.

“ஒண்ணும் வராது.. என்னை நம்பும்மா. செல்வி நல்ல பொண்ணு. எந்த பிரச்சனையும் பண்ணமாட்டா”.

“இப்போக் கூட.. நான் அந்த பொண்ணு பிரச்சினை பண்ணும்னு சொல்லலை. ஆனா.. ஏதாவது அவளால.. தானா பிரச்சினை வந்துட்டா?. பொண்ணுங்க கண்ணாடி பாத்திரம் மாதிரி. கவனமா கையாளணும். நாளைக்கே அந்த பொண்ணுக்கு எதாவது பிரச்சனைனாலும்.. நம்மளைத் தான் சொல்லுவாங்க.”

“ஒண்ணும் வராது. நான் பார்த்துக்கறேன்மா”, என்று மறுபடியும்.. மறுபடியும் கூறியப் பிறகே.. அரை மனதாக தொலைபேசியை வைத்தார். 

என்னவரும் என்று.. இவர் இப்படிப் பயப்படுகிறார் என்று புரியவில்லையே.. என்று சரவணனும் ராதிகாவும் நினைத்தனர்.

அவர்களுக்கு பெரியவர்களின் பயம் புரியவில்லை. சில சமயம் நாம் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, நடந்துவிடுமோ என்று பயந்து கொண்டே இருந்தால் அப்படியே நடந்து விடும்.

வாழ்க்கை மறுபடியும் வேகமாக சென்றது. செல்வி பிளஸ்டூ முடிக்கும் தருவாயில் இருந்தாள். எழிலரசியும் அவளின் டிகிரி பைனல் இயரில் இருந்தாள். அருள் அவனின் பி. இ. முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலையில் அமர்ந்தான்.

என்ன தான் வேலையில் அமர்ந்து விட்டாலும், கை நிறைய சம்பளம் வாங்கினாலும்.. அவனுக்கு அவன் அண்ணனை போல ஐ.பி.எஸ். ஆகவேண்டும்.. என்ற ஆசை மட்டும், மனதின் ஓரம் இருந்து கொண்டே இருந்தது.

அருள், அவன் அண்ணன் வீட்டிற்கு போவது வருவது தான். அவன் அண்ணனின் உதவியால்.. அவனும் ஐ.பி.எஸ். எக்ஸாமிற்கு தயார் செய்து கொண்டிருந்தான். வேலையில் இருந்து கொண்டே.. மாலை வேளைகளில், ஸ்பெஷல் கோச்சிங்கும் சென்று கொண்டு இருந்தான். வேலை.. படிப்பு என்று அயராது உழைத்தான். அடிக்கடி தன் அண்ணனிடம் வந்து ஆலோசனைப் பெற்று செல்வான்.    

அவன்.. அப்படி அவன் அண்ணன் வீட்டிற்கு வரும்போது.. கண்கள் செல்வியை தானாகத் தேடும். ஆனால் செல்வி.. அதன் பிறகு அவன் கண்ணில் படவேயில்லை .

“எங்க அண்ணி.. உங்க தத்துப் புள்ளையை காணோம்”, என்று அருள் கூட கிண்டலடிப்பது உண்டு.

“அவ லீவுக்கு கூட வர்றதில்லை. அங்கேயே இருந்து படிக்கறா”, என்பாள் ராதிகா, அவன் கிண்டலை புரிந்து கொள்ளாமல்.

“என்ன.. இந்த தடவையும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரப்போறாளா அவ?” என்பான் நக்கலாக.

“யாரு கண்டா?. போன தடவை நீதான் சொன்ன. பலிச்சது. இந்த தடவையும் உன் வாக்கு பலிக்குமோ என்னவோ?”,

“ஆனாலும்.. உங்களுக்கு ரொம்ப தான் ஆசை அண்ணி”,

சிரித்தாள் ராதிகா.

ஆமாம் இப்போதெல்லாம் அவள் மனம் விட்டு சிரிப்பதே குறைந்து விட்டது. திருமணமாகி இரண்டு வருடங்கள் மேலாகிவிட்டது. இன்னும் குழந்தை இல்லையே.. என்பது தான் காரணம்.

இப்போதும்.. மனதின் ஓரம் ஒரு வலி எழத்தான் செய்தது. அருள் செல்வியை தத்துப்பிள்ளை என்று கூறியதால். மனம் அவளின் பிள்ளைக்காக ஏங்க ஆரம்பித்தது.

அருள் அவளின் முகவாட்டத்தை கவனித்து விட்டு, “என்ன ஆச்சு அண்ணி”, என்றான்.

“ஒண்ணுமில்லை”, என்றாள் ராதிகா.

வீட்டிற்கு வந்தவுடனேயே மனைவியின் முக வாட்டத்தை கண்டு கொண்டான் சரவணன். அருள் இருப்பதால், “என்ன?” என்று பார்வையாலேயே வினவ.. “ஒன்றுமில்லை”, என்று அவளும் தலையசைவிலேயே பதில் கொடுத்தாள் ராதிகா.

அவளின் முகச்சோர்வே ஏதோ இருக்கிறதென்று உணர்த்த.. அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

ஆனால் அருளே.. “பேசிட்டேயிருந்தாங்க சரவணா. அப்படியே மூட் ஆப். ஏன்னு தெரியலை”, என்று போட்டு கொடுத்தான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை”, என்று சமாளித்தாள் ராதிகா.

உறங்க ரூமினுள் பால் எடுத்து வந்தாள் ராதிகா. அவளைப்பார்த்த சரவணன் அமைதியாக பாலை வாங்கி அருந்திவிட்டு டம்ளரை வைத்தவுடன், “இப்போ சொல்லு”, என்றான்.

“என்ன சொல்வது”, என்பது போல ராதிகா பார்க்க.. 

“என்ன.. உன் இந்த மண்டையை குழப்புதுன்னு சொல்லு”..

“ப்ச்! ஒண்ணுமில்லை”, என்றாள் சலிப்பாக.

“சொல்லுமா! சொன்னாதானேத் தெரியும்”, என்றான் சரவணன் கனிவாக.

“நான் மட்டும் ஏன் இன்னும் அம்மா ஆகலை..”, என்றாள் கம்மிய குரலில்.

“இது தான் விஷயமா..”, என்பது போல சிரித்த சரவணன்.. “என்ன வயசாயிடுச்சு உனக்கு. இப்போதான் இருபத்தி ஒண்ணு. இப்போல்லாம் பொண்ணுங்க கல்யாணம் பண்றதே.. இருபத்தி நாலு, இருபத்தி அஞ்சில தான். உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிடிச்சுன்றதுக்காக.. குழந்தையும் சீக்கிரம் பொறக்கணும்னு நினைச்சா எப்படி? அது பொறக்கும் போது பொறக்கும்”, என்றான் அணைத்தவாறே.

அவன் விளக்கத்தில் ராதிகாவின் முகம் தெளியவில்லை. முகம் சுருங்கியே இருந்தது.

“யாராவது ஏதாவது சொன்னாங்களா?”,

“ம்”, என்று தலையாட்டினாள்.

“யாரு?”,

“அம்மா”,

“எங்கம்மாவா?”.

“இல்லை.. அத்தை இல்லை. எங்கம்மா.”, என்றாள் ராதிகா.

“என்னவாம் அவங்களுக்கு..”,

“கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் மேல ஆச்சு. இன்னும் ஒண்ணும் விஷேஷமில்லையான்னு கேட்டுட்டே இருக்காங்க..”

“கேட்டா.. கேட்டுட்டுப் போறாங்க.”

“அதெப்படி.. அப்படியே விடமுடியும்.”

“அதுக்காக என்ன செய்ய முடியும். எடுக்கற முயற்சி எல்லாம் எடுத்துட்டு தானே இருக்கோம்.” என்றான் அவளை பார்த்து கண்ணடித்து.

“நீங்க வேற ஏம்பா இதுதான் சமயம்னு”, என்று அழகாக வெட்கப்பட்டாள் ராதிகா.

“வேற.. என்னடி செய்ய சொல்ற”, என்று அணைப்பை இறுக்கினான்.

“ஒண்ணும் செய்ய வேண்டாம். ஏதாவது கோவிலுக்கு போகலாம்”, என்றாள்.

“போகலாம், போகலாம்.. அது மட்டும் போதாது. நம்ம வேலையை இப்போ பார்க்கலாம்”, என்று ஆரம்பித்தான்.

“நான் பேசிட்டே இருக்கேன். நீங்க என்ன செய்யறீங்க..”, என்று சொல்ல..

“நீ பேசறதுக்கு தான் தீர்வு கண்டுபிடிக்கறேன்”, என்று அவன் காரியத்தில் கண்ணாக.. அதற்கு மேல் அங்கே அவளின் சொல் எதுவும் எடுபடவில்லை. அவனுடைய காரியத்தினால் அவளின் கவலைகளை மறக்க செய்தான்.

காலையில் கண்விழிக்கும் போதே.. சுகமான நினைவுகளுடன் கண்விழித்தாள் ராதிகா. அதற்கு தக்காற் போல அவளை இறுக்கமாக அணைத்து உறங்கிகொண்டிருந்தான் சரவணன்.

அன்று சண்டே என்பதால் மெதுவாக கண்விழித்தனர்.      

“இன்னைக்கு.. காலையில செல்வியை பார்க்கப்போகணுங்க”, என்றாள் ராதிகா.

“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு ராதிகா. அருள் தான் இருக்கான் ல. நீ அவனை கூட்டிட்டு போயிட்டு வாயேன்..”

“அவனா.. வருவானோ மாட்டானோ?”,

“நான் சொல்றேன்.. அதெல்லாம் வருவான்.”

“என்னவோ சொல்லிப்பாருங்க”, என்றபடியே எழப்போனாள்.

“இன்னும் கொஞ்சம் நேரம்.. அப்படியே இருடி”, என்றான் அணைப்பை விலக்காமல்.

“அச்சோ என்னதிது. வெளிய அருள் படுத்திருக்கான்.  என்ன நினைப்பான். விடுங்க. இப்போவே நேரமாயிடிச்சு”, என்று சொல்லி.. அவன் கைகளை விலக்கி வேகமாக எழுந்தாள்.

அதற்கு தகுந்த மாதிரி அருள் எழுந்து உட்கார்ந்து டீ.வி பார்த்துக்கொண்டிருந்தான்.

“சாரி.. அருள் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இதோ டீ போடறேன்”, என்று அவள் வேகமாக போக..

“நோ ப்ரோப்ளம் அண்ணி. நான் ஏற்கனவே டீ போட்டு சாப்பிட்டிட்டு.. உங்களுக்கும் பிளாஸ்க்கல  ஊத்தி வச்சிருக்கேன்”, என்றான்.

“என்ன.. நீ போட்டியா?”, என்றாள் ஆச்சர்யமாக.

“ஆமா. நான் தான் போட்டேன். ஏன்?”,

“பரவாயில்லை.. உங்க அண்ணனை மாதிரி நீ இல்லை. உங்க அண்ணனுக்கு கிட்சன் எல்லாம்.. எப்பவும் நோ என்ட்ரி தான்”, என்றாள் சலிப்பாக.

“என்ன அவசரம்னாலும்.. சமையலறைக்குள்ள மட்டும் போய் ஒரு வேலை செய்ய மாட்டார். ஒரு தோசை திருப்பி போட சொன்னாக்கூட போட மாட்டார்”, என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சரவணன் வந்தான்.

“என்னடா.. ரெண்டு பேரும் என்னை மென்னுட்டு இருக்கீங்க”.

“நீங்க ரொம்ப நல்லவர் வல்லவர். அண்ணிக்கு சமையல்ல அவ்வளவு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு சொன்னாங்க.”

“நானா? நான் சமையல் பக்கம் கூட போமாட்டேனே”, என்றான் சரவணன்.

“அதை தாங்க.. அவன் அப்படி சொல்றான்”, என்றாள் சிரிப்போடு  ராதிகா.

“இருங்க.. உங்க தம்பி போட்ட டீயோடு வர்றேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க.”, என்று உள்ளே சென்று டீயோடு வந்தாள்.

அருந்திப்பார்த்தால் சுவையாக இருந்தது.

“எப்படி அருள்.. இவ்வளவு நல்லா டீ போட கத்துக்கிட்ட”.

“அது தானா வருது”, என்று சொல்லி அவன் சிரிக்க.. ராதிகாவும் சரவணனும் கூட சிரிப்பில் இணைந்தனர். அவர்கள் சிரித்து பேசிக்கொண்டு இருக்கும் போதே சரவணன் அருளிடத்தில்.. “அருள்! இன்னைக்கு செல்வியை பார்க்கப் போகணும். அடுத்த வாரம் இருந்து அவளுக்கு எக்ஸாம் ஆரம்பிக்குது. என்னால இன்னிக்கு போக முடியாது. போன்ல பேசிடறேன். நீ உன் அண்ணியோட துணைக்குப் போறியா?”, என்றான்.

“எப்படி தான் இருக்கா அவ.. பார்போமே.” என்ற ஆர்வம் அருளிடத்தில் அவனை அறியாமல் எழுந்தது. “சரி”, என்று ஏதோ அரை மனதாக சொல்லுவது போல இழுத்து சொன்னான்.

எப்படியோ அவன் வந்தால் போதும்.. என்று ராதிகாவும் விட்டுவிட்டாள்.      

 காலையில் கிளம்பி அவள் ஸ்கூல் சென்றனர். இவர்கள் காத்திருக்கவும் செல்வி வந்தாள்.

பார்த்தவன்.. அவளா.. இவள்! என்று பிரமித்து விட்டான். இன்னும் வளர்ந்திருந்தாள். பார்க்க அழகாகவும் இருந்தாள். தன் வீட்டில், அவள் வேலை செய்துகொண்டிருந்தபோது.. இருந்த உருவத்திற்கும் இதற்கும் சம்மந்தமேயில்லை. முன்பே சற்று பொலிவாக மாறியிருந்தாள் தான். ஆனால் இப்போது அழகான மாதிரி அவன் கண்களுக்கு தோன்றியது.

அவனுக்கு ஏனோ.. அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது. செல்வி.. இவனை ராதிகாவோடு பார்த்ததும்.. பார்வையை உடனே தழைத்தாள். அருளை அவள் எதிர்பார்க்கவில்லை. பார்த்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது.  

அருளை பார்த்ததும்.. ராதிகாவை அணுகுவதில், சற்றுத் தயங்கி தயங்கி வந்தாள்.

தன்னை பார்த்து தான்.. அவள் தயங்குகிறாள் என்று அருளிற்கு புரிந்தது. “இவ ஏன் இப்படி வர்றா.. ஒரு வேலை என்னை பார்த்தது தானோ.? நான் என்ன இவளை கடிச்சா திங்க போறேன்”, என்று அருளின் மனதிற்குள் ஓடியது.

“எப்படி இருக்க செல்வி?” என்றாள் உற்சாகமாக ராதிகா.

“நல்லா இருக்கேன் அக்கா”, என்றாள் செல்வி.

“எங்க.. போன தடவைக்கு இந்த தடவை டல்லா தெரியற..”,

“அது.. படிச்சிட்டே இருக்கேன் இல்லை. அதனால இருக்கும்”, என்றாள்.

“ஒஹ்! இந்த தடவையும் ஸ்டேட் ரேங்கா..”, என்று முனுமுனுத்தான் அருள்.

ராதிகாவிற்கு கேட்டது, செல்விக்கு கேட்கவில்லை.

இவனை பார்த்து.. என்ன பேசுவது என்று செல்விக்கு தெரியவில்லை. “கூட வந்திருக்கானே வணக்கம் சொல்லணுமோ”, என்று அவளுக்கு ஒரே குழப்பம். ஆனது ஆகட்டும் என்று.. கடைசியில் ஒன்றும் பேசாமல் ராதிகாவையே பார்த்தாள்.

“எல்லாம் படிச்சு முடிச்சிட்டியா?”,

“முடிச்சிட்டேன் அக்கா. ரெண்டு தடவை ரீவைஸ் கூட பண்ணிட்டே ன்.”

“ரொம்ப படிச்சு உடம்பை கெடுத்துக்காத”, என்றாள் ராதிகா கரிசனமாக.

“அதெல்லாம் இல்லை அக்கா. கவனமா இருப்பேன்”, என்றாள்.

இவர்கள் பேசுவதை சுவாரசியமாக அருள் பார்த்துக்கொண்டிருந்தாலும் கண்கள் ஏனோ.. செல்வியை விட்டு அகலாமல் சண்டித்தனம் செய்தது.

அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்த செல்விக்கு சங்கடமாக இருந்தது. “இதென்ன.. நான் உன்னோட முதலாளின்னு.. எப்பவும் அலட்சியமா பார்க்கிறவன்.. இன்னைக்கு என்ன.. இப்படிப் பார்க்கிறான்..” என்றிருந்தது.

பிறகு அவளுக்கு வாங்கி வந்த பொருட்கள் எல்லாம் கொடுத்தாள். அதில் நிறைய திண்பண்டங்கள் இருந்தது.

“எதுக்கு அக்கா இவ்வளவு?”, என்று செல்வி கேட்க..

“நிறைய நேரம் கண்முழிச்சு படிப்ப இல்லையா.. பசிக்கும். அதான்.” என்றாள்.

தனக்காக எவ்வளவு யோசித்து இருக்கிறார்கள்.. என்று எண்ணும்போதே கண்களில் நீர் நிறைந்தது செல்விக்கு. பசி என்பது அவ்வளவு பழக்கமான ஒன்றாக இருந்தது செல்விக்கு.

ஆனால்.. இவர்கள் என்றைக்கு அவளின் பொறுப்பை எடுத்துகொண்டார்களோ.. அன்றிலிருந்து பசி என்ற ஒன்று அவளை அணுகவேயில்லை. ஹாஸ்டலில் இருந்தாலும்.. வீட்டில் இருந்தாலும்.. வேளாவேளைக்கு உணவு. அதுவும் அவளைப் பொறுத்தவரை.. அது சுடு சோறு. பழையது இருந்தாலும்.. என்றும் அதை ராதிகா, அவளுக்கு கொடுத்தது இல்லை. 

அதுவும் நிறைய உணவு வகைகள்.. அவள் முன்பு உண்டது என்ன? பார்த்தது கூட கிடையாது. நினைவுகள் அவளை அலைக்கழித்தன. 

தான் முன்பு எப்படி இருந்தோம்.. என்ற பழைய நினைவுகள் தோன்ற.. கண்களில் மளமளவென்று கண்ணீர் இறங்கியது. அருள் முன்னிலையில் அழக்கூடாது.. என்று தான் நினைத்தாள் முடியவில்லை.

“என்ன செல்வி இது..” என்று ராதிகா பதற.

“ஒண்ணுமில்லைக்கா.” என்று அழுகையினோடே.. சிரித்துக்கொண்டே கண்களை துடைத்தாள்.

அருள்.. அவளை இப்போது.. இன்னும் விடாமல் பார்த்திருந்தான். அவள் கண்களில் கண்ணீர் என்றதும்.. அதை துடைக்க வேண்டும்.. என்று அவனையறியாமல் ஒரு உந்துதல். அவனே.. அவனை நினைத்து பயந்து விட்டான். “எனக்கு என்ன ஆச்சு? இந்த பொண்ணுமேல இவ்வளவு ஆர்வம்.. திடீர்ன்னு இப்போ. ஏன் தெரியவில்லை?”.

எப்போதும் செல்வியை பார்த்தால்.. வேலைக்காரப்பெண் என்ற அலட்சியம் தான் மேலோங்கும். இப்போது என்னவோ.. அவள் அழுதது அவன் மனதை பிசைந்தது. அதுவும் அவள் அழுகையினூடே.. சிரித்துக்கொண்டே கண்களைத் துடைத்தது.. பார்க்கப் பார்க்க.. அவள் மேல் ஏதோ ஒன்று பெருகியது. 

அருள் இல்லையென்றால்.. இன்னும் அழுதிருப்பாள். அவன் வேறு இருக்கிறானே என்ற கூச்சம் பெருக.. சீக்கிரம் தன் நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டாள் செல்வி.

“பரிட்ச்சை சமையத்துல அதையும் இதையும் நினைக்க கூடாது. படிப்புல மட்டும் தான் கவனம் இருக்கணும்.” என்று அவளை கடிந்து.. பின்பு சிறிது நேரம் பேசி கிளம்பினர்.

“போயிட்டு வரேன் செல்வி. நல்லா எழுது எக்ஸாம்மை”, என்று விடைபெற.

“ஆல் தி பெஸ்ட்”, என்றான் அருள் செல்வியை பார்த்து. அலட்சியமில்லாமல் முதல் முறையாக.

ஆச்சர்யமாக அவனை பார்த்தவள்.. “தேங்க்யூ”, என்றாள்.

பின்பு ஒரு சிறு தலையசைப்புடன் கிளம்பினான். இவன் என்ன.. நம்மிடம் இப்படி நடந்து கொள்கிறான்.. என்று வாயைப் பிளந்து பார்த்திருந்தாள் செல்வி.

“இவன்.. நமக்கு ஆல் தி பெஸ்ட், சொல்கிறானா?. இவ்வளவு உரிமையோடு.. தலையசைப்போடு விடைபெறுகிறானா.. ஒரு வேளை உடம்பு ஏதாவது சரியில்லாமல் இருக்குமோ.. அதான் இப்படி நடந்து கொள்கிறானோ?. என்னவாயிற்று இவனுக்கு.”, என்ற யோசனையோடே உள்ளே சென்றாள்.  

வெகு நேரம்.. அவன், ஆல் தி பெஸ்ட்.. சொன்ன விதம் ஞாபகத்தில் நின்றது. அவன் தலையசைப்பு. அதில் எவ்வளவு உரிமை. எண்ணங்கள் ஓடும்போதே.. “நீ சரியா கவனிச்சு இருக்க மாட்டே செல்வி..”, என்று மற்றொருபுறம்.. மனம் அவளுக்கு சொன்னது.

“அவன் உன் சிறு வயதில் உன்னிடம் நடந்து கொண்ட விதமெல்லாம் மறந்துவிட்டாயா? அவனாவது உன்னிடம் நல்ல விதமாக நடந்துகொள்வதாவது.. ஏதாவது ராதிகாவிற்காக போனால்போகிறதென்று ஒரு வாழ்த்து கூறியிருப்பான். அவன் தலையை அசைத்த மாதிரி உனக்கு தான் தோன்றியதோ..” என்று அவள் மனம் அவளிடம் கேள்வி கேட்டது.

“என்ன சொன்னான்.. அவன் உன்னைப் பார்த்து. முன்ன பின்ன பொண்ணுங்களையே பார்த்ததில்லையான்னு.. அவன் நண்பர்கள் கிட்ட எவ்வளவு நக்கலா சொன்னான். அவனாவது உன்னை பார்க்கறதாவது.. உனக்கு நொள்ளை கண்ணு ஆகிபோச்சுடி”, என்று அவளுக்கு அவளே திட்டிக் கொண்டாள். 

“ஏதோ ஒன்று. விடு அதை. வேலையைப் பார்.” என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டு படிப்பில் கவனத்தை திருப்பினாள்.

Advertisement