Advertisement

அத்தியாயம் எட்டு:

“என்னே.. மகளின் பாங்கு”, என்று கற்பகம் வியந்து கொண்டிருக்க.. “தன் மருமகள் தன் மகனை நன்றாக கவனித்துக்கொள்ளுவாள்”, என்று கோதைக்கும் திருப்தியாக இருந்தது.

சரவணன் வரும் போது நான்கு மணியாகியிருந்தது.  “நீ இன்னுமா சாப்பிடாம இருக்க”, என்று ராதிகாவைப் பார்த்து கடிந்தவன்.. அவசரமாக முகம் கைக்கால் கழுவி சாப்பிட அமர்ந்தான். “நீயும் உட்காரு”, என்று அவளிடம் சொன்னவன்.. “நாளைல இருந்து என்னை எதிர்பார்த்துட்டு இருக்க கூடாது. சரியான நேரத்திற்கு நீ சாப்பிட்டிடணும்”, என்று சொல்லி.. அதற்கு அவள் சரியென்ற பிறகே விட்டான்.

“என்ன அண்ணா.. நீ அண்ணியை இந்த மிரட்டு மிரட்டுற”, என்றாள் பார்த்துகொண்டிருந்த எழிலரசி.

“இதெல்லாம் ஒரு மிரட்டலா.. அப்போ நிஜமாவே நான் மிரட்டினா உங்க அண்ணி என்ன செய்வா?”

“என்ன செய்வாங்களோ? எனக்கு என்ன தெரியும். ஆனா.. திரும்ப கோபம் மட்டும் படவே மாட்டேங்கறாங்க”, என்றாள்.

“நல்லா கவனிக்கற நீ. நான் திட்டுறனாம். இவங்க அண்ணி கோபப்பட மாட்டாங்களாம். என் தங்கச்சியா நீ.? இப்படி கண்டுபிடிக்கற”, என்று நக்கல் அடித்தான் சரவணன்.

இதையெல்லாம் ஒரு சிரிப்போடு பார்த்திருந்தான் அருள். அவன் என்றும் அதிகம் பேசுபவன் கிடையாது. ஆனால் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்.. ஆயிரம் அர்த்தங்களோடு இருக்கும்.

“அண்ணா நீ என்னை பாராட்டறியா.. திட்றியா?”, என்று அடுத்த சந்தேகத்தை எழுப்பினாள் எழிலரசி. பார்த்த எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. இருந்தாலும் எழிலரசிக்காக முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள பெரு முயற்சி செய்தனர்.

“சொல்லு.. நீ என்னை பாராட்றையா இல்லை திட்றையா”, என்றாள் மறுபடியும்.

“உனக்கு எப்படி தோணுதோ அப்படி வச்சிக்கோ எழில்”, என்றான்.

உடனே அருளை பார்த்த எழில். “அண்ணா.. நீங்க சொல்லுங்க”, என்றாள்.

“எனக்குத் தெரியாது”.. என்பது போல உதடு பிதுக்கினான். 

“நீங்க சொல்லுங்க அண்ணி”, என்று அவளின் அண்ணியிடம் சப்போர்ட்டுக்கு வந்தாள் எழிலரசி.

“உண்மைய சொல்லட்டுமா? பொய் சொல்லட்டுமா?”.

“உண்மைய சொல்லுங்க அண்ணி”, என்று சிணுங்கினாள் எழிலரசி.

“உன்னை திட்றாங்க எழில்”, என்று அப்படியே எடுத்து கொடுத்தாள் ராதிகா.

இப்போது எல்லோர் முகமும் புன்னகையை பூச. “அப்போ என்னை கிண்டல் பண்ணிட்டு இருந்தீங்களா அண்ணா நீங்க. போங்க”, என்று முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள.

“இதெல்லாம் சும்மா எழில்”, என்று அவளை சமாதானப்படுத்த முற்பட்டான் சரவணன்.

அண்ணன் தங்கையின் விளையாட்டை பார்த்து இருந்த அனைவர் முகத்திலும் புன்னகை பெரிதானது. அதற்கு பிறகு அவன் ஸ்டேஷன் செல்லவில்லை. அப்படியே தனது தங்கையை சீண்டிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தான். அவன் அந்த மாதிரி விளையாடுவது வெகு அபூர்வமே.  

பேச்சும் விளையாட்டுமாக மாலை கடந்து விட.. “இருந்து நாளை போகலாம்”, என்றதற்குக் கூட நில்லாமல்.. இரவு வந்ததும் ராதிகாவை விட்டு எல்லாரும் கிளம்பினர்.

ஒரு இரண்டு நாள் இருந்துவிட்டு போகலாம்.. என்றதற்கு கூட யாரும் அசையவில்லை. எல்லாரும் வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டனர். கிட்ட தட்ட திருமணமாகி ஒரு வருடமாக பிரிந்திருக்கும் இருவருக்கும்.. தனிமை கொடுக்க வேண்டியே பெரியவர்கள் எல்லாரும் கிளம்பி சென்று விட்டனர்.

“என்ன ராதிகா.. எல்லாரும் நம்மளை விட்டுட்டு கிளம்பிட்டாங்க.”

“அது.. உங்கம்மா உங்களை மாதிரி இல்லை. கொஞ்சம் விவரம் புரிஞ்சவங்க. இன்னும் அவங்க இங்க இருந்தா.. நீங்க அவங்க பின்னாடியே சுத்துவீங்கன்னு கிளம்பிட்டாங்க”, என்றாள் நக்கலாக.

“உன்னை விட்டுட்டு ட்ரைனிங் போனாலும் போனேன்.. உனக்கு ரொம்ப ஏத்தம் ஆகிடுச்சு ராதிகா. என்னமா பேசறவ”,

“இன்னும் எத்தனை தடவை அதையே சொல்வீங்க. வேற.. சொல்லவே இல்லையா?”, என்று கேட்டப் படியே உள்ளே சென்றாள்.

கதவை அடைத்து அவள் பின்னோடு சென்றவன். “எப்படியோ.. கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி.. பின்னாடியும் சரி ..என்னை நீ நல்லா உன் பின்னாடி சுத்த வைக்கிற.”

“நீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி.. என் பின்னாடி சுத்துணீங்க. நான் அதை நம்பணும்?”

“நீ.. நம்பினாலும் நம்பாட்டாலும்.. அது தாண்டி நிஜம். ஆள் சுத்தணும்னு அவசியம் இல்லைடி. மனசு சுத்தினாலே.. சுத்தின மாதிரி தான்”, என்று அவளை பின்னிருந்து அணைத்தவன்,

“நானே காஞ்சு போய் வந்திருக்கேன். சும்மா வளவளன்னு பேசிட்டு. வாயை மூடு”, என்று அவளை சொல்லி.. அவள் வாயை மூடும் வேலையை தனதாக்கி.. அதன் பிறகு அவளை எதற்கும் பேசவிடவில்லை.                                                                                                                               

வாழ்க்கை ராதிகாவிற்கும் சரவணனுக்கும் தெளிவான நீரோட்டமாக சென்றது. ராதிகா சரவணனை கவனித்து கொண்டாளா.. சரவணன் ராதிகாவை கவனித்து கொண்டானா.. என்று சொல்ல முடியாத அளவிற்கு இருவரும் மனமொத்து குடும்பம் நடத்தினர். வேலை நேரம் போக.. மற்ற நேரமெல்லாம் ராதிகாவின் பின்னோடு சுற்றினான் சரவணன்.

சரவணன் தன்னை காதலித்து.. தன் பெற்றோர்களிடத்தில் பிடிவாதம் பிடித்து.. திருமணம் செய்து கொண்டான் என்பதில்.. அவ்வளவு சந்தோஷம் என்பதை விட.. ஒரு கர்வம் ராதிகாவிற்கு. தங்களின் மணவாழ்க்கையை உணர்ந்து வாழ முற்பட்டனர்.  

சரவணன் அவனுடைய பணிக்குப் புதிது என்பதால் முதலில் சற்று தடுமாறினான். பின்பு அவனே தேறிக்கொண்டான். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்வது.. குற்றவாளிகளிடம் எப்படி நடந்து கொள்வது.. தன்னுடன் பணிபுரிபவர்களிடம் எப்படி நடந்து கொள்வது.. என்று ஒரு ஏ.எஸ்.பி. யின் ஹோதா அவனுள் பரிபூரணமாக வந்திருந்தது.

அதிகம் டென்ஷன் ஆகாதவன்.. என்பதால் எல்லா விஷயத்தையும் பதட்டமில்லாமல் கையாண்டான். அதனால் குற்றங்களை கண்டுபிடிக்க அவனுக்கு வசதியாக இருந்தது.       

 அங்கே செல்வியின் பரிட்சை நெருங்க.. அவளை தொலைபேசியில் அழைத்து, “ஆல் தி பெஸ்ட்”, சொன்னர் ராதிகாவும் சரவணனும். செல்வியும் அவர்களின் தொலைபேசியை.. ஆவலுடன் எதிர்பார்த்து தான் காத்திருந்தாள்.

அவர்கள் அழைத்ததும்.. அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு. என்ன தான் அவர்கள் கவனித்து கொண்டாலும்.. அவளுக்கு மனதில் பயம்.. தன்னை அவர்கள் விட்டு விடுவார்களோ என்று. அவளுடையை பயத்திற்கு அவசியமேயில்லை என்பதை போலவே.. ராதிகாவின் சரவணனின் செய்கை இருக்கும். இருந்தாலும் ஏதோ ஒரு பயம்.. எப்பொழுதும் செல்வியின் மனதில் இருக்கும்.

பத்தாவது மெயின் பரீட்சைகளை நன்றாகவே எழுதினாள் செல்வி. பரீட்சை  முடிந்தவுடன் ஹாஸ்டல் காலி செய்ய வேண்டுமே. இனி எங்கே செல்வது என்று பயம் வர ஆரம்பித்தது. ஏதாவது ஏற்பாடு செய்வர் சரவணனும் ராதிகாவும் என்று தெரியும். இருந்தாலும் ஒரு பயம் அவளையறியாமல் மனதை அழுத்தியது.

அவளுடைய பயத்தை அதிகரிக்காமல்.. அடுத்த நாள் ராதிகா, அருளை அழைத்துக்கொண்டு.. அவளை அழைத்துப் போக வந்தாள்.

“செல்வி”, என்று அவளை அழைத்த வார்டன். “உனக்கு விசிட்டர் வந்திருக்காங்க”, என்றார்.

ராதிகா தான் வந்திருப்பாள் என்று செல்விக்குத் தெரியும். அதனால் மிக விரைவாக வந்தாள். அங்கே அருளை பார்த்ததும் சற்று தயங்கி நின்றாள். அவள் அருளை எதிர்பார்க்கவில்லை. இவன் எங்கே இங்கே வந்தான். வீட்டிலேயே என்னை முறைத்து பார்ப்பான். இப்போது எப்படியோ என்று சற்று சஞ்சலமாக இருந்தது.

“செல்வி”, என்றாள் ராதிகா.  

“நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா”, என்பது போல அருள் எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான். அவன் மனதில் பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

அவளின் அழைப்பில் தன்னை அறியாமல் “அக்கா”, என்றாள் செல்வி சிறிது சஞ்சலம் நீங்க.

“பரீட்சை எப்படி எழுதின செல்வி?”, என்றாள் ராதிகா.

“நல்லா எழுதியிருக்கேன் அக்கா”, என்றாள் செல்வி.

“என்னவோ ஸ்டேட் ரேங்க் எடுக்க போற மாதிரி.. நல்லா எழுதியிருக்காளாம்..”, என்று மனதிற்குள்ளேயே எண்ணினான் அருள். சரவணனுக்கு அவசர வேலை வந்துவிட்டதால்.. ராதிகாவோடு செல்வியை அழைத்து வர.. துணைக்குப் போகும் பொறுப்பை, ஸ்டடி லீவில் வீட்டில் இருந்த அருளிடம் சொல்லியிருந்தான் சரவணன்.

“வேலைக்காரப் பொண்ணை கூப்பிட.. நம்ம போகணுமா?”, என்று வேண்டா வெறுப்பாக வந்தான் அருள்.

அவள் படிக்கும் ஸ்கூலின் தோற்றத்தை பார்த்து வியந்தான். “பார்றா.. வேலைக்காரப் பொண்ணுக்கு வந்த வாழ்வை”, என்று அவனுக்கு தோன்றியது. ஸ்கூல் பிரம்மாண்டமாக இருந்தது. அதை விட அவனை பிரமிக்க வைத்தது செல்வியின் தோற்றம்.

“எப்படி இருந்த இவ.. இப்படி மாறிட்டா!” என்று சொல்லும் படியாக இருந்தது அவள் தோற்றம்.

அவளிடம் முன்பு இருந்த வேலைக்கார சிறுமியின் தோற்றம்.. அப்படியே மறைந்து விட்டது. பார்க்கவே.. லட்சணமான இளம் பெண்ணாக மாறியிருந்தாள். நல்ல உடை.. நல்ல உணவு.. அவளை நன்றாக மாற்றி இருந்தது. ஏழை சிறுமியின் தோற்றம் மறைந்து.. ஒரு நடுத்தர வர்க்க, இளம் பெண்ணின் தோற்றம் வந்திருந்தது. 

அவளுடைய இந்த புதிய தோற்றம் அவனை ஈர்த்தாலும்.. “பாருடா.. இவளுக்கு வந்த வாழ்வை”, என்று நினைக்கத் தோன்றியது அருளுக்கு. அவனையும் மீறி.. ஏதோ ஒன்று செல்வியை பார்க்கத் தூண்டினாலும்.. அதை துரத்தி அடித்து.. அலட்சிய பாவனையிலேயே அவளைப் பார்த்தான்.

இது எதையும் கவனிக்கும் மனநிலையிலேயே செல்வி இல்லை.           

“உன் துணி, மணி.. சாமான் எல்லாம் எடுத்துக்கோ”, என்றாள் ராதிகா.

“இதோ அக்கா”, என்று வேகமாக ஓடிச் சென்று.. முன்பே பேக் செய்து வைத்திருந்ததை..  ஒன்றொன்றாக கொண்டு வந்து வைத்தாள். வெளியே ஒரு ஆம்னி வேன் நின்று கொண்டிருந்தது. செல்வி, “வேண்டாம், வேண்டாம்..”, என்று சொல்லியும், ராதிகா சற்று உதவ.. எல்லாவற்றையும் வேனில் ஏற்றினார்கள்.

அருள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தானே தவிர.. உதவ முன்வரவில்லை. “இந்த பெண்ணின் சாமான்களை நான் தூக்குவதா..”, என்பது போல பார்த்துக்கொண்டு தான் நின்றான்.

அவனை தெரிந்தவளாக ராதிகாவும்.. எப்படியோ போகிறான்.. துணைக்காவது வந்தானே என்று அமைதியாக விட்டுவிட்டாள்.  

ஒரு வழியாக கிளம்பி ராமநாதபுரமே சென்றனர்.

வேறு வழி. இங்கே கோதையிடம் பேசிப்பார்த்தான் சரவணன்.. “அம்மா ரிசல்ட் வரும்வரை.. அங்கே வீட்டுக்கு பின்னாடி இருக்குற ரூம்ல.. அவளை தங்க வச்சிகிறீங்களா?”, என்று.

“அதெல்லாம் ஒத்து வராது. இது கிராமம். அதுவுமில்லாம எனக்கும் சரிவராது.. முழு நாளையும் அந்த பொண்ணை வச்சிக்கிட்டு. ஏதோ ரெண்டு மூணு நாள்னா கூட யோசிக்கலாம். நீ ரெண்டு மாசம்.. மூணு மாசம் சொல்றீயே. அது சரிவராது”, என்று விட்டார்.

“அப்போ.. இங்கே நான், என் வீட்டுல தங்க வச்சிக்கட்டுமா”, என்று கேட்டதற்கு..

“அதுவும் வேண்டாம்”, என்றார்.

“வேற எங்கயும் விடறதுக்கு வழி இல்லைம்மா”,

“அதுக்காக ஒரு பொண்ணை நம்ம வீட்ல தங்க வச்சுக்க முடியுமா?”

“வேற வழியில்லைம்மா. ஒரு ரெண்டு மாசம். அப்புறம் ஸ்கூல் தொறந்ததும்.. ஹாஸ்டல் போயிடப்போறா. அதுவரைக்கும் தான் ம்மா..” என்றான்.

“என்னவோ சரவணா. எனக்கு சரியாப்படலை..”

“வேற வழியில்லைம்மா. அப்படி எப்படியோ போகட்டும்னு விட்டுட முடியாது. ஏதாவது ஆயிடுச்சுனா.. அதுக்கு வேற நான் பொறுப்பேத்துக்க முடியாது. ஊருக்குள்ள, நம்ம தான்.. அந்தப் பொண்ணை பார்த்துக்கறோம்னு எல்லோருக்கும் தெரியும். இப்போ அப்படி பாதில விடமுடியாது. எதாவது அந்தப் பொண்ணை படிக்க வச்சு.. வேலை வாங்கி குடுத்துட்டம்னா.. நம்ம பொறுப்பு தீர்ந்துடும். ஒரு அஞ்சாறு வருஷம்.. லீவ் வரும்போது.. அந்த பொண்ணை நம்ம பார்த்துட்டு தான் ஆகணும்.”

“இப்படி சொன்னா எப்படிடா?. ஏதாவது ஆசிரமத்துல சேர்த்து விட வேண்டியது தானே.. எத்தனையோ இருக்கு இப்பல்லாம். எதாவது ஒண்ணுல சேர்த்துவிடு. நம்ம டொனேசன் மாதிரி ஏதாவது ஒரு அமௌன்ட் குடுத்துடலாம்”, என்றார்.

“அது சரிவரும்னு தோணலை. இருந்தாலும் பார்க்கறேன்”, என்றான்.. அவன் அம்மாவை சமாதானப்படுத்தும் விதமாக. அவனுக்கு செல்வியை ஆசிரமத்தில் விடும் எண்ணம் எல்லாம் இல்லை.

ராதிகாவையும் செல்வியையும் ராமநாதபுரம் கொண்டு வந்து சேர்த்தான் அருள். அவன் அண்ணனின் சொல்படி.

“நான் உங்களோடையா இருக்க போறேன்”, என்றாள் ஆச்சர்யமாக செல்வி.

“ஆமாம். லீவ் முடியறவரைக்கும் எங்களோட தான் இருக்க போற. அப்புறம் ஹாஸ்டல் போயிடுவியாம்”, என்றாள் ராதிகா.

இவர்கள் வீட்டில் தன்னை தங்க வைக்கிறார்களா.. என்று இருந்தது செல்விக்கு. நிஜமாகவே.. இவர்கள் பெரிய மனிதர்கள் தான்.. என்று தோன்றியது அவளுக்கு.

ஏனோ.. அருள் தன்னை முறைத்து, முறைத்து பார்ப்பது.. போலவே தோன்றியது செல்விக்கு. அவனுக்கு பிடிக்காவிட்டால்.. எனக்கென்ன வந்தது என்று மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டாள்.

அவளுக்கு என்று ஒரு தனி ரூம் ஒதுக்கி இருந்தனர். அவள் அந்த ரூமை உபயோகித்ததால்.. இரண்டு ரூம் கொண்ட அந்த வீட்டில்.. அருள் ஹாலில் தான் இருக்குமாறு வந்தது.

வேறு இடம் இல்லை. பெண்ணாக இருப்பதால், அவளை ஹாலில் படுக்க வைக்கவும் ராதிகாவிற்கு மனமில்லை. அவள் இருப்பது மாதிரி வேறு இடமும் இல்லை. வேறு வழியில்லாமல் ராதிகா அவளுக்கு ரூமை ஒதுக்கினாள்.

அதில் வேறு அருளுக்கு கொஞ்சம் கோபம். “பெரிய இவ இவ. இவ ரூம்ல தூங்குவா, நான் ஹால்ல தூங்கணுமா?. இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு என்னால இருக்க முடியாது. நாளைக்கு காலைல நான் ஊருக்கு போறேன்”, என்று நினைத்துக்கொண்டான்.

இரவு எட்டரை மணிக்கு மேல் தான் சரவணன் வந்தான்.

“என்ன செல்வி.. பரீட்ச்சை எல்லாம் எப்படி எழுதியிருக்க?”

“நல்லா எழுதியிருக்கேன் அய்யா”,

“ஆமா.. இவ தான் ஸ்டேட்  ஃபர்ஸ்ட்”, என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் அருள். அது பக்கத்தில் நின்ற ராதிகாவின் காதில் நன்கு விழுந்தது.

இவன் ஏன் இந்த பொறுமு பொறுமுகிறான்.. என்று ராதிகாவிற்கு தோன்றினாலும், மனதிலேயே வைத்துக்கொண்டாள். வெளியில் காட்டவில்லை. இப்போது போய்.. தான் ஏதாவது அருளை சொல்லப்போக.. அதை பார்க்கும் சரவணன், அவனுக்கு கண்டிப்பாக அறிவுரை கூறுவான். அது அருளுக்கு எரிச்சல் வரும் என்று நன்கு ராதிகாவிற்கு தெரியும். அதனால் அமைதியாக இருந்துவிட்டாள்.

“ஸ்கூல் எல்லாம் எப்படி இருந்தது.”

“நல்ல சௌகர்யமா இருந்தது அய்யா”, என்றாள்.

சரவணனுக்கும் செல்வியை பார்த்து ஆச்சர்யம் தான். அவனும் நீண்ட நாட்களுக்கு பிறகு.. இப்போது தானே பார்க்கிறான். அவளுடைய தோற்றம்.. நடை, உடை.. பாவனை எல்லாமே மாறியிருந்தது. பார்ப்பதற்கு நன்றாக மாறிவிட்டாள்.

ராதிகாவிடம் முணுமுணுத்தான். “ஏண்டி செல்வியா இவ.. இப்படி மாறிட்டா?”, என்றான் குரலில் ஆச்சர்யத்தை காட்டி.

ராதிகாவும் எந்த கல்மிஷமும் இல்லாமல். “இப்ப நல்லா இருக்காள்ல..”, என்று அதை ஆமோதித்தாள்.

அடுத்த நாள் நினைத்த மாதிரியே.. அருள் ஊருக்கு கிளம்பி விட்டான்.  இரு என்று ஒருபக்கம் மனம் சொன்னாலும்.. “இவர்கள் அந்த வேலைக்காரப் பெண்ணை தாங்குவதை.. பார்த்துக்கொண்டு இருப்பதா.? வேண்டாம்.. வேண்டாம்.. நான் போய் படிகின்ற வேலையை பார்க்கிறேன்.”, என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு கிளம்பியே விட்டான். 

செல்வி வந்தது தான்.. வீட்டு வேலை அனைத்தையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தாள்.

“இதெல்லாம் செய்யாதே செல்வி. நீ இங்க வேலை செய்யற பொண்ணு இல்லை”, என்று கடிந்தாள் ராதிகா.

“நீங்க.. ஏன் அக்கா அப்படி நினைக்கறீங்க?. உங்களுக்கு உதவி செய்யறேன் அக்கா”, என்றாள்.

“அதுக்கு இங்க ஒரு அம்மா வருவாங்க. அதனால நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்.”

“வருவாங்களா.. நான் இருக்கற வரைக்கும், அவங்களை வரவேண்டாம்னு சொல்லிடலாமா?”,

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். உனக்கு போர் அடிச்சதுன்னா.. ஏதாவது கிளாஸ் சேர்ந்துக்கோ. படிக்கற வேலையை பாரு.”

“நானா? நான் என்ன கிளாஸ் சேர்றது?”

“ஏதாவது கம்ப்யூட்டர் கிளாஸ் சேரு. அதோடா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போ..”

“நிஜமாக தான் சொல்கிறாரா”, என்பது போல செல்வி விழிவிரித்துப் பார்க்க.,

“இப்போ எதுக்கு உன் முட்டை கண்ணை இப்படி தொறக்கற. நான் நிஜமா தான் சொல்றேன்.”

“சரிங்க அக்கா”, என்று சந்தோஷமாக தலையை ஆட்டினாள் செல்வி.

ராதிகா அதோடு நின்றுவிடவில்லை. உடனே சரவணனிடம் பேசினாள்.

“என்னங்க”, என்றாள் சரவணனிடம்.

“என்னங்க”, என்று பதிலுக்கு ராகம் இழுத்தான் சரவணன்.

“இந்த செல்வி.. சொல்ல சொல்ல கேட்காம வீட்டு வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செய்யறா..”

“அதுக்கு தான் ஆள் வர்றாங்களே. வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே.”

“சொல்லிட்டேன். இருந்தாலும் நாள் முழுசும் சும்மாவே இருக்க முடியாதுல்ல?”

“சும்மா இருக்கிறது ஒரு கஷ்டமா.. சரி, உங்களுக்கு கஷ்டம். என்ன பண்ணலாம் சொல்லு..”

“அவளை ஏதாவது கிளாஸ் சேர்க்கலாமா”,

“அவளையா.? என்ன கிளாஸ்ல..”

“கம்ப்யூட்டர் அண்ட் ஸ்போக்கன் இங்கிலீஷ்..”

“யாரு.. அவ கேட்டாளா?”

“இல்லையில்லை”, என்று அவசரமாக மறுத்த ராதிகா.. “நான் தான் கேட்கறேன். அந்த பொண்ணுக்கு எதிர்காலத்துல உதவும் இல்லையா?”

“என் பாஸ் எனக்கு உத்தரவு போட்டா.. செஞ்சு தானே ஆகணும்”, என்றான் பயப்படுபவன் போல நடித்து.

“கிண்டல் பண்ணாதீங்க. சேர்க்கலாமா.. வேண்டாமா.?”

“நீ சொன்ன பிறகு அதுக்கு மறு வார்த்தையே இல்லை. சேர்த்துடலாம்”, என்றான்.

“சீரியஸா தானே சொல்றிங்க”, என்று மறுபடியும் உறுதி படுத்தினாள் ராதிகா.

“சீரியஸா தான் சொல்றேன். நாளைக்கே விசாரிச்சு சொல்றேன்”, என்று சரவணனும் பதில் உறுதி கொடுத்தான்.

அவர்கள் பேசிய படியே.. செல்வியை இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து விட்டான் சரவணன். பணத்திற்கு கணக்கு பார்க்கவில்லை. தானத்திலேயே சிறந்தது கல்வி தானமென்பது.. சரவணனின் எண்ணம்.

அதனால் அந்த ஏழைப்பெண்ணின் படிப்பிற்கு.. அவன் எந்த கணக்கும் பார்க்கவில்லை. சொல்லப்போனால்.. ராதிகாவையும் செல்வியுடன் சேர்ந்து படிக்கிறாயா.. என்றான். ஆனால் அவள் தான் ஒப்புக்கொள்ளவில்லை.

“எனக்கு இனிமே படிப்பெல்லாம் மண்டையில ஏறாது மாமா, விட்டுடுங்க”, என்றாள்.

“படிப்பு ரொம்ப அவசியம். ஏதாவது ஒரு டிகிரி தொலைதூரக்கல்வியிலாவது படி”, என்று சரவணனும் ராதிகாவிடத்தில் எவ்வளவோ சொன்னான்.

“இது ஒண்ணு மட்டும் என்னை விட்டுடுங்க மாமா. வேற என்ன சொன்னாலும் செய்யறேன்”, என்று விட்டாள்.

செல்வி ஆர்வத்துடன் அந்த வகுப்புகளுக்கு சென்று பயின்றாள்.  செல்வியை ராதிகா நன்றாகவே பார்த்துக்கொண்டாள். செல்வியே இதை எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் தான் என்ன கைமாறு செய்யப் போகிறோம்.. தெரியவில்லையே என்று மனது உறுத்தியது.

கோதை அவ்வப்போது ராதிகாவை அழைத்து.. என்ன நடக்கிறது என்று கேட்டுகொள்பவராகவே இருப்பார். அவருக்கு, செல்வி தன் மகன் வீட்டில் இருப்பது பொறுக்கவேயில்லை. அவளை தள்ளியே நிறுத்து.. என்று ராதிகாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அவரையும் மிஞ்சி விடுவார் கற்பகம். தன் மகளை அழைத்து, “ஏண்டி.. வீட்டுக்குள்ளயே அந்த பொண்ணுக்கு ஒரு ரூம் கொடுத்து வெச்சிருக்கியாம். இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா?”.

“நானில்லைமா.. அவர் தான்ம்மா சொன்னார்”, என்றாள் ராதிகா, தன் அன்னையின் வாயிற்கு பயந்து.

அதற்கும் விட்டேனா என்று. “அவர் சொன்னா.. உனக்கெங்க போச்சு அறிவு. ஆம்பிள்ளைங்க ஆயிரம் சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் தலையாட்டிட்டே இருந்தா குடும்பம் விளங்குன மாதிரி தான். பொண்ணு உனக்கு தாண்டி அறிவு வேணும்”.

“லீவ்ல மட்டும் தான்மா.. விடுங்க”, என்று கற்பகத்தை சமாதானம் செய்வதற்குள்.. போதும் போதும் என்றாகியது

அப்போதும் அடங்கியவரல்ல கற்பகம். “இப்போ தெரியாது ராதிகா. நாளைக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது தான்.. அம்மா சொல்றது புரியும்”, என்று சொல்லியவராக போனை வைத்தார்.      

Advertisement