Advertisement

அத்தியாயம் ஏழு :

அவனுக்கு செல்வியிடமும் பேசவேண்டி இருந்தது. ராதிகாவை வைத்துக்கொண்டு அவளிடம் பேசினான்.

“நாங்க ஹாஸ்டல்ல சேர்த்துவிடறோம்… அங்க இருந்துகிட்டே படிக்கறியா, செல்வி?. உங்க சொந்தக்காரங்க யாரும் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. என்ன சொல்ற..” என்றான்.

என்ன சொல்வாள் அந்த சிறுமி…. “நீங்க எப்படி சொன்னாலும் கேக்கறேங்க ஐயா. எனக்கு தனியா படுத்துக்கப் பயமா இருக்கு. நேத்து கூட.. நான் மட்டும் தான் வீட்டுல படுத்துக்கிட்டேன்”, என்றாள் அழுதபடி.

“என்ன.. தனியா படுத்துகிட்டியா?” என்றாள் அதிர்ச்சியாக ராதிகா.

மனித நேயம் எல்லாம் எங்கே போய்விட்டது. தேடினாலும் கிடைக்காது போல இருக்கிறதே.. என்று எண்ணினான் சரவணன். 

“அழாத நாங்க இருக்குறோம்… நாங்க பாத்துக்கறோம்…”, என்று அவளைத் தேற்றினாள் ராதிகா.        

அவனுக்கு அடுத்த நாள் ஊருக்கு போகவேண்டி இருந்தது. எப்படி அவளுக்கு டீ.சி வாங்குவது.. எந்த பள்ளியில் ஹாஸ்டல் இருக்கிறது என்று.. விசாரித்து சேர்ப்பது… தலையை குடைந்தது சரவணனுக்கு.

எமர்ஜென்சி என்று இன்னும் இரண்டு நாள் லீவ் அதிகப்படுத்தலாமா… கொடுப்பார்களா…. என்று யோசித்தான். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தலை பிடித்துகொண்டு அமர்ந்திருக்க…….. “எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற.. நான் படிச்ச ஸ்கூல்ல ஹாஸ்டல் இருக்கு. கேட்போமா?” என்றாள் ராதிகா.

“செல்வி டென்த்…. நடுவுல அட்மிசன் கொடுப்பாங்களா..” என்று சரவணன் சந்தேகமாக கேட்க….

“டொனேஷன் குடுக்கறோம்னு சொல்லி பார்க்கலாம். இப்போ தான் மணி பன்னண்டு ஆகுது………. சீக்கிரம் போனா இன்னைக்கே கேட்டுடலாம்.” என்றாள்.

அப்போதே கிளம்பினர்…. அங்கே ஸ்கூலில் சென்று பேச…. இவர்கள் கொடுப்பதாக சொன்ன அதிகப்படியான தொகைக்கு… உடனே அட்மிஷன் கிடைத்து.

இங்கே ஊருக்கு வந்து, இந்த ஸ்கூலில் அப்போதே.. தன் தந்தையை வைத்து டீசி வாங்கினான். மணி பார்த்தால்….. மாலை ஐந்து என்றது. உடனே அவளுக்கு ஹாஸ்டலுக்கு தேவையானதை மிக விரைவாக வாங்கினர். பணம் இருந்தால், முடியாது என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அன்றே அவளை கொண்டுப் போய்.. இரவு எட்டு மணிக்கு பள்ளியில் விட்டனர்.

இன்னும்.. அவளுக்கு உடைகள் எல்லாம் வாங்க வேண்டி தான் இருந்தது. ராதிகா தான் எல்லாம் பார்த்துக்கொள்கிறேன் என்று.. உறுதி அளித்ததால், ஊருக்கு வந்து அவளை விட்டு இரவு பத்து மணிக்கு எல்லாம்.. அவன் ட்ரைனிங்கிற்கு கிளம்பி விட்டான்.

எவ்வளவு ஆசையாக ஊருக்கு வந்தான். என்னென்னவோ நடந்துவிட்டது. இருவரும் சரியாக பேசக்கூட இல்லை. ராதிகாவுக்கும் வருத்தம்.. அவனுக்கும் வருத்தம் தான்… இருந்தாலும் நடந்ததுக்கு பதிலாக… செல்விக்கு இதையாவது செய்ய முடிந்ததே… என்ற திருப்தியோடே மறுபடியும் ட்ரைனிங் சென்றான்.

செல்விக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. புது சூழ்நிலை நிறைய மாணவிகள் இருந்தனர். எல்லோரையும் பார்த்தால் அவளுக்கு பயமாக இருந்தது. அவர்களின் நடை உடை பாவனைக்கும்.. இவளுதுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

ராதிகா அவளிடம் சொல்லி தான் அனுப்பினாள். “நீ வீட்ல வேலை செஞ்சதை எல்லாம் யார்கிட்டயும் சொல்லாத… யாராவது கேட்ட, ஆயா செத்துடிச்சு… அதனால இந்த ஸ்கூல சேர்ந்துட்டேன்னு மட்டும் சொல்லு.  நல்லா படிக்கணும் நீ…. நல்லா படிச்சாலே, எல்லாரும் உன்கூட ஃபிரன்ட் ஆகிடுவாங்க… பயப்படக்கூடாது. ஏதாவதுன்னா, உடனே எனக்கு போன் பண்ணு.” என்று தைரியம் சொல்லியே.. விட்டு சென்றாள்.

ஒரே நாளில்.. தன் வாழ்க்கை முறை எவ்வளவு மாறிவிட்டது.. என்று வியந்தாள் செல்வி. முன்பு வறுமை… இப்போது தனிமை…. இரண்டுமே.. மிகக் கொடுமையான விஷயங்களாக அவளுக்குத் தோன்றின. “ஏன் சாமி.. அந்த காளையை அனுப்பின.” என்று கடவுளிடம் தான் கேட்டுக்கொண்டிருந்தாள்.

புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை. ஆனால்.. நேற்று தனியாக பயந்து கொண்டு படுத்திருந்தற்கு..  இது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.

ஆயாவை அடக்கம் செய்தவுடன்.. பளிச்சென்று துடைத்துவைத்தார் போல, சொந்தங்கள் எல்லாரும் விலகி விட்டனர். “வீட்டை துடைச்சு விளக்கேத்தி வை”, என்று சொல்லியும் சென்றனர்.

“பதினோரு நாளுக்கு.. ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து விளக்கேற்ற வேண்டும்.” என்று சொன்னர். தான் எதுவும் செய்யாமல்.. செய்ய முடியாத நிலையில், ஹாஸ்டலுக்கு வந்துவிட்டோமே.. என்று அவளுக்கே கழிவிரக்கமாக இருந்தது.   

நேற்று தூங்காமல் விழித்திருந்தது… இரவு முழுக்க அந்த நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஏதோ பூச்சிகளின் சப்தங்கள்… கொசுவின் ரீங்காரம் மறக்கமுடியவில்லை. “சாமி, சாமி.. என்னைக் காப்பாத்து.”,என்று கடவுளை அழைத்துக்கொண்டே படுத்திருந்தாள்.  அந்த நினைவுகள் இன்று தாக்கவும், “கட்டாயம்.. நம்ம ஆயாவோ, சாமியோ.. நம்மை கோபிச்சிக்காது.” என்று எண்ணியே, அன்று இரவு முழுவதும்.. படுப்பதும் விழிப்பதுமாக இருந்தாள்.

அங்கே இருந்த வார்டன், அவளிடம் கரிசனத்தோடே நடந்தார். புது இடம் என்பதால், காலையில் ஐந்துமணிக்கே எழுப்பிவிட்ட அவர்… அங்கே உள்ள சட்ட திட்டங்களை சொன்னார்.

“காலைல அஞ்சு மணிக்கு எழுந்துக்கணும்…. அஞ்சரை வரைக்கும் காலைக் கடன்களை எல்லாம் முடிச்சிடணும். அஞ்சரைல இருந்து ஏழு வரைக்கும் ஸ்டடி ஹவர்… பின்ன ஏழுமணில இருந்து எட்டுமணிகுள்ள குளிச்சு ரெடியாயிடணும். எட்டுமணிக்கு டிஃபன்… எட்டரைக்கு ஸ்கூல். மூணரைக்கு விடுவாங்க… அஞ்சு மணிவரைக்கும் விளையாடலாம்.”

“பின்ன.. ஸ்நாக்ஸ் சாப்பிட்டிட்டு உட்கார்ந்தீங்கன்னா.. எட்டு மணிவரைக்கும் படிக்கணும். எட்டுமணிக்கு சாப்பிட்டிட்டு கொஞ்ச நேரம் ஏதாவது பேசலாம்…. அப்புறம் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிடணும்.” என்று தினசரி நடவடிக்கையை அவளுக்குப் புரிய வைத்தார்.

செல்வியும் புத்திசாலி மாணவி என்பதால்.. எல்லாவற்றையும் கரெக்டாக செய்து, அங்கு டீச்சர்ஸிடம் நல்ல பேர் எடுத்துக்கொண்டாள். சில மாணவிகளை நட்பாக்கியும் கொண்டாள். எந்த ப்ரச்சனையுமில்லாமல் எல்லாம் சுமுகமாகவே சென்றது. 

அந்த வார இறுதியில் தன் தந்தையோடு ராதிகா.. அவளைப் பார்க்க வந்தாள். எல்லாரும் செல்வியை பற்றி நல்ல விதமாகவே சொன்னர். அவளுக்கு உடைகள், திண்பண்டங்கள், அவளுக்கு தேவையான சில பொருட்கள் என்று எல்லாவற்றையும் அவளே யோசித்து வாங்கி வந்திருந்தாள்.

செல்வி எதுவும் தேவை.. என்று கேட்கும் நிலையை, அவளுக்கு வரவிடவில்லை ராதிகா. செல்வி தனக்கே இவ்வளவுமா என்று ஆச்சர்யப்பட்டுப் போனாள். அவ்வளவு திண்பண்டங்கள்.. அவள் உண்டதேயில்லை. இத்தனை உடைகள் தனக்கா என்றிருந்தது.

“ரொம்ப நன்றிக்கா.” என்றாள்.

“நன்றி.. கின்றின்னு ஏதாவது சொன்ன… அடி தான் வாங்குவ.” என்று அவளை மிரட்டிய ராதிகா.. “உன் கவனமெல்லாம் படிப்புல தான் இருக்கணும்.” என்று சொல்லி சென்றாள்.                         

செல்விக்கும் அதுவே சரியென்று பட்டது. தான் நல்ல மதிப்பெண்கள் எடுத்து.. அவர்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள். உறுதி மட்டும் பூணவில்லை… அதற்கான முயற்சியும் பரிபூரணமாக எடுத்தாள். மிக கடுமையாக உழைத்தாள்.

ராதிகா, அவளை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வந்து பார்த்து.. ஊக்கமளித்து  சென்றாள். சரவணனும் செல்வியின் நிலை விசாரிக்க தவறுவது இல்லை. இதிலெல்லாம் கோதைக்கு அதிகமாக உடன்பாடு இல்லையென்றாலும்.. எதையும் தடுக்கவில்லை. தடுத்தாலும் மீறி செய்வான் சரவணன் என்று தெரியும். அதற்கு ஏன் தடுப்பானேன் என்று விட்டு விட்டார்.    

அங்கே சரவணனின் ட்ரைனிங் முடிவடையும் நாள் நெருங்கியது. எங்கே போஸ்டிங் வரப்போகிறதோ.. என்று அந்த டென்ஷனிலேயே இருந்தான். அவனை ராமநாத புரத்தில் ஏ.எஸ்.பி யாக போட்டனர். தமிழ்நாட்டிலேயே போஸ்டிங் கிடைத்ததில் அவனுக்கு மிகுந்த சந்தோஷம்.

அங்கே குவார்ட்டர்ஸ் அல்லாட் செய்த பிறகு.. ராதிகாவை கூப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்தான். முதலில் தான் போய் பணியில் சேர்ந்து.. எப்படி இருக்கிறது என்று பார்த்து.. மெதுவாக அவளை கூப்பிடலாம் என்று நினைத்தான்.

இதை தொலைபேசியில் தெரிந்த ராதிகாவோ ஒரே பிடிவாதம்… “நீங்க போய் சேர்ந்து, ஒரு வாரத்துலயே என்னை கூப்பிடுக்கணும்”, என்று.. 

“கொஞ்சம் பொறுமையா இரு ராதிகா. அங்க எல்லாம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு கூப்பிடறேன்.”

“அதெல்லாம் முடியாது.  நான் உங்களை விட்டுட்டு.. ரொம்ப நாள் இருந்துட்டேன். இனிமேலும் முடியாது. நான் உடனே வருவேன்..”

“வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்க வேண்டாமா?”

“எல்லாம் வாங்கலாம். ஒண்ணும் அவசரமில்லை. முதல்ல என்னை கூட்டிட்டு போங்க.” என்றாள் பிடிவாதமாக.

“சரி ஒரு வாரம் இருக்குல்ல… அதுக்குள்ள ஏதாவது பண்ணலாம்..” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

இங்கே செல்வியின் தேர்வுகள் நெருங்கி கொண்டிருந்தன. அவளும் முழுமூச்சாக படித்துக்கொண்டிருந்தாள்.

சரவணன் ராமநாதபுரம் போய் சேர்ந்தான். சற்று பெரிய பதவி என்பதால்.. அவனுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதில் அவன் சந்தோஷமடைந்தாலும், எதுவும் தன்னை பாதித்துவிடக்கூடாது என்பதில்.. மிகுந்த கவனமாக இருந்தான். தான் மிகவும் நேசித்த பொறுப்பு.. இப்போது தனக்கு கிடைத்திருக்கிறது. இதில்.. தான் செவ்வனே பணியாற்ற வேண்டும்.. என்று உறுதி பூண்டான். அது அவ்வளவு எளிதான வேலையல்ல.. என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும்.. தான் அப்படித்தான் இருக்க வேண்டும்.. என்று எண்ணிக்கொண்டான்.

போலீஸ் ஸ்டேஷன் வந்து.. தன் இருக்கையில் அமர்ந்த போது.. அவனுக்குள் சொல்லொணா கர்வம் கிளர்ந்தது.

“சார்! நான் இங்க இருக்கிற சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி.” என்று அவரிடம் ஒருவர் வந்து அறிமுகப்படுத்திக்கொள்ள… அவர் சர்வீஸ் பிரமோஷன் கிடைத்து.. சப்-இன்ஸ்பெக்டர் ஆனவர்.. என்று அவர் வயதிலேயே புரிந்தது.

“உட்காருங்க”, என்று அவரை அமர வைத்து பேசியவன்…. அங்கே உள்ள பிரச்சனைகள் என்னென்ன என்று கேட்டறிந்தான். அதில் தான் முதலில் பார்க்க வேண்டியது எது.. என்றும் வரையரைத்துக்கொண்டான்.

கள்ளச்சாராயம், ப்ராத்தல், கட்டபஞ்சாயத்து, போன்ற கேஸ்களே அதிகம் இருந்தது. கொலை.. கொள்ளை போன்ற சம்பவங்கள் ஒன்றிரண்டே இருந்தது.  மனதிற்குள், என்ன செய்வது என்று வரையறுத்துக்கொன்டாலும்.. சற்று தடுமாற்றமாக தான் இருந்தது. எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று.  எல்லாம் சரியாக நடக்க வேண்டும், தான் எதுவும் தப்பு செய்து விடக்கூடாது.. என்று சற்று பயமும் இருந்தது.

எல்லாம் உள்ளுள்ளுள் சுழன்று கொண்டிருந்தது. பின்பு ஸ்டேஷனில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு.. அவர்கர்களைப் பற்றி கேட்டறிந்தான். பின்பு ஸ்டேஷனில் ஜீப்பை எடுக்க சொல்லி.. ஊரை ஒரு ரவுண்டு வந்தான். அந்த ஊரின் இடங்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள முயன்றான்.

ஒரே நாளில் முடியாது என்று தெரியும் தான்.  ஒரு வாரம் வந்தால் சரியாகப்போய்விடும் என்று எண்ணி கொண்டே.. பார்வையை ஊரைச்சுற்றி சுழல விட்டான். போலீஸ் ஜீப், ரௌண்ட்ஸ் வருவதாலோ என்னவோ… எல்லா இடங்களும் அமைதியாக இருந்தது. இப்படி ஜீப்பில், போலீஸ் சீருடையோடு சுற்றும் போது.. இத்தனை நாட்களாக இல்லாத கம்பீரம்.. சரவணனிடத்தில் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது.

எதிரில் இருப்பவர்களுக்கு அவனை பார்த்தால்.. ஒரு மரியாதை கலந்த பயம்.. ஏற்படும்படி இருந்தது அவன் தோற்றம். ஸ்டேஷன் வேலைகளையெல்லாம் பார்த்திருந்து…. அவனுக்கு அல்லாட் செய்திருந்த குவாட்டர்ஸ்க்கு வந்த போதே மணி பத்து.

பசி வயிற்றைக்  கிள்ளியது… கூட வந்த கான்ஸ்டபிள், “ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா சார்”, என..

“இல்லை.. நானே பார்த்துக்கறேன்”, என்று விட்டான்.

“இங்கே, எங்க ஹோட்டல் இருக்கு..”, என்று கேட்டு.. உடை மாற்றி அங்கே சென்றான். ஹோட்டல் மூடும் நேரம் தான். இருந்தாலும் போலீஸ் ஜீப்பை பார்த்ததும் அவசரமாக விழித்தது.

ஏதோ ஒன்றை சாப்பிட்டேன்.. என்று பேர் செய்து திரும்பினான். அங்கே ட்ரைனிங்கில் நல்ல சாப்பாடு கிடைக்கும். இந்த ஹோட்டல் சாப்பாடு அவனுக்கு பிடிக்கவேயில்லை. அந்த இட்லியும் சாம்பாரும் கொடுமையாக இருந்தது அவனுக்கு…. மதியம் சாப்பிட்டது அதற்கு மேலே.  

எப்போது ராதிகாவை அழைத்து வருவேன் என்றிருந்தது. வீட்டிற்கு வந்ததுமே முதல் வேலையாக  ராதிகாவிற்கு போன் செய்தவன்..

“நீ எப்ப வருவன்னு இருக்குடி.”

“என்ன திடீர்னு.. என் மேல கரிசனம்.”

“ஏன்.. வரக்கூடாதா?”

“அதுதான்.. ஏன் வந்ததுன்னு கேட்டேன்.” என்றாள் கறாராக..

“அது.. எனக்கு இங்க சாப்பிடவே பிடிக்கலை. எப்ப உன்கையாள சாப்பிடுவனோன்னு இருக்கு..”,

“ஹப்பாடா… சாப்பாடவது என்னை உங்களுக்கு ஞாபகப்படுத்துதே. அது வரைக்கும் சந்தோஷம்.”,என்றாள் இழுத்து.

“இல்லைனா.. உன் ஞாபகம் எனக்கு வர்றது.. இல்லையா என்ன?”,

“வந்துட்டாலும்… எல்லாம் ட்ரைனிங் முடிஞ்சு ஊருக்கு வந்தா… நீங்க ஏதோ அங்க வேலை இருக்குன்னு நின்னுட்டு… அப்படியே வேலைல போய் ஜாயின் பண்றீங்க. என்ன சொல்றது இதையெல்லாம் நான்.”

“அது.. போஸ்ட் ட்ரைனிங் கான்பரன்ஸ் ஒண்ணு.. பத்து நாள் இருந்தது. இஷ்டமிருக்கறவங்க இருக்கலாம்னு சொன்னாங்க. எனக்கு தான் மிஸ் பண்ண இஷ்டமில்லை. முடிச்சுவுடனே போஸ்டிங் வந்துடிச்சு.. நான் என்னடி பண்ண?”,

“இப்படி கேட்டா என்ன சொல்ல முடியும். பொண்டாட்டியப் பார்த்து ,ஆறுமாசம் ஆச்சுன்னு ஏதாவது.. பீலிங் இருக்கா என்ன?”

“பீலிங் இல்லைன்னு.. உனக்கு தெரியுமா?”

“தெரிஞ்சு.. என்ன பிரயோஜனம்.”

“பிரயோஜனம் எல்லாம்.. நீ இங்க வந்த பிறகு காட்டுரேன்டி.”

“ஐயே… பாக்க தானப் போறேன்.” என்று நொடித்தாள் ராதிகா.

“என்னடி இவ்வளவு வாயாயிட்ட… நாளுக்கு நாள் வாய் அதிகமாயிட்டே போகுது… போன தடவை விட.. இப்போ இன்னும் அதிகமாயிடுச்சு.”

“போலிஸ்காரர் பொண்டாட்டியில்ல… விவரமாயிருக்க வேண்டாம்..” என்றாள் ரோஷமாக.

“ஆத்தாடி அத்தா… நல்ல விவரந்தான். சரி எப்போ வர்ற சொல்லு.”

“நீங்க நாளைக்கே.. கூப்பிட்டாலும் வந்துடுவேன்.”

“இரு. நான் அம்மா கிட்ட பேசிட்டு சொல்றேன்.”, என்று போனை வைக்கப் போனான்..

“இப்போவா கூப்பிட போறீங்க”, என்றாள் அவசரமாக..

“ஆமாம், ஏன்?”

“போலீஸ் ஆகி.. நல்ல விவரம் ஆயிடீங்க போல… இப்போ மணி பன்னண்டு. இப்போ கூப்பிடாதீங்க. காலைல கூப்பிடுங்க..”

“ஓ! ரொம்ப நேரம் ஆயிடுச்சா… காலைல கூப்பிடறேன்.”,என்று சொல்லி படுத்தான். படுத்தவுடனே உறங்கியும் விட்டான்.

காலையில்.. ஏழு மணிக்கு தொலைபேசி மூலமாக.. ராதிகா எழுப்பவும் தான் எழுந்தான்.

“என்ன போலீஸ்கார்.. காலைல வாக்கிங் எல்லாம் போய், உடம்பை பிட்டா வெச்சுக்கறது இல்லையா?”

“ஏய்! ஒரு நாள் தூங்கிட்டேன் விடு.  அம்மா கிட்ட குடு போனை.” என்றவன், அவன் அம்மாவிடம் பேசினான். அங்கே வந்து சேர்ந்தது.. நடந்தது எல்லாம் சொன்னான்.

“அம்மா, இங்க சாப்பாடே எனக்குப் பிடிக்கலை. ராதிகாவை எப்போம்மா கூட்டிட்டு வரட்டும்.”

“நல்ல நாள் பார்க்கட்டுமா டா?”

“பாரும்மா! அப்படியே அங்க புதுசா தேவையான பொருள்.. எதுவும் வாங்காதீங்க! இருக்கிறத எடுத்திட்ட வாங்க… இங்க தேவையானதை வாங்கிக்கலாம் . அப்புறம் அதை வேற அங்க இருந்து பாதுக்காப்பா கொண்டுவரணும்.” என்றான்.

பிறகு அம்மாவும் மகனும் சேர்ந்து எல்லாவற்றையும் பிளான் செய்தனர். இருவரும் பேசி முடிக்க அரைமணிநேரம் ஆகிற்று. மறுபடியும் ராதிகாவிடமே போனை கொடுக்க சொன்ன சரவணன்…

“மறக்காம செல்வியைப் பார்த்து.. நம்ம, இந்த ஊருக்கு வர்றதை பத்தி சொல்லிடு.. ராதிகா. நம்ம அப்புறமா.. அவளை ஒருநாள் வந்து பார்க்கிறோம்னு சொல்லு. நல்லா படிக்க சொல்லு.. நல்ல மார்க் வாங்கணும்னு சொல்லு.” என்று செல்வியையும் மறக்காமல் சொன்னான்.

“நானே சொல்லிட்டு தான் வருவேன். அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்”, என்று அவனுக்கு உறுதி அளித்தாள் ராதிகா.

ஒரு வழியாக.. அந்த வார இறுதியில், எல்லாரும் ராமநாதபுரம் சென்று.. ராதிகாவையும் சரவணனையும் தனிக்குடித்தனம் வைப்பது என்று முடிவாயிற்று.

ராதிகா செல்வியைப் பார்க்க ஸ்கூலுக்கு சென்றிருந்தாள்.

ராதிகா ஊருக்கு போவதை கேட்ட.. செல்வியின் முகம் வாடிவிட்டது. “நீங்க மறுபடியும் எப்போ வருவீங்க அக்கா..”

“ஊருக்குவரும்போது.. உன்னை வந்து கண்டிப்பா பார்ப்பேன்.”

“ஆனா.. அதுக்குள்ள என் பரீட்ச்சை முடிஞ்சிட்டா?”

“அப்படியா உன்னை விட்டுடுவோம் செல்வி.  உனக்கு பயமே வேண்டாம். உன் கடைசி பரீட்ச்சை அன்னிக்கோ.. இல்லை அடுத்த நாளோ, நான் உன்னை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்துடுவேன். பயம் வேண்டாம்.  அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு.. அப்புறம் முடிவு பண்ணலாம். நீ.. அதையும் இதையும் போட்டு ..மனசை குழப்பிகாம படிக்கற வேலையை மட்டும் பாரு.” என்று அவளை சமாதானப்படுத்தி வந்தாள்.

அவர்கள்.. தன்னை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும்.. ஏனோ பயமாகவே இருந்தது செல்விக்கு.

அவளிடம் விடைபெற்று வந்துவிட்டாள் ராதிகா. இருந்தாலும் அவள் முகம் தெளியாததை கண்டு மீண்டும் வந்து, “பயப்படாத நான் இருக்கேன். ரொம்ப தூரமா இருக்கேன்னு பயப்படாத.  எங்க ஆளுங்க எல்லாம் இங்க தான் இருக்காங்க.. ஏதாவது ஒண்ணுன்னா உடனே வந்து பார்ப்பாங்க. அந்த மாதிரி எல்லாம் எதுவும் வராது…. இருந்தாலும் உனக்காக சொல்றேன்.” என்று மீண்டும் அவளை சமாதானப்படுத்தி விட்டே சென்றாள். சற்று அவளின் வார்த்தைகளில் தைரியமடைந்தாள் செல்வி.

அந்த வார இறுதியில்.. ராதிகாவை ராமநாதபுரத்தில் விட்டு வருவதற்காக.. ஒரு படையே கிளம்பியது. கோதை, பூபதி பாண்டியன், அருள், எழிலரசி, கற்பகம், அவர் கணவர், அவரின் மகன் சேகர், இவர்களோடு ராதிகா….என்று பெரிய பட்டாளமே கிளம்பி….எல்லாரும் ஒரு பெரிய வேன் பேசி சென்றனர். இதில்லாமல் ஒரு லாரியில் சாமான்கள் சென்றது.

அவர்களுக்காக ஆவலுடன் காத்திருந்தான் சரவணன். ராதிகா வந்தவுடனே விழிகள் அவளை அளவெடுத்தாலும்… அதை வெளியில் அதிகம் காட்டாமல்… வந்த தனது தாய், தந்தை, தங்கை, தம்பி, மாமனார், மைத்துனன், மாமியார், இவர்களோடே அளவளாவிக் கொண்டிருந்தான்.

அருளுக்கு தான் வேலை பெண்ட் எடுத்தது. சாமான் இறக்குவதை மேற்பார்வை பார்த்தவன்…. அப்படியே இறக்குபவர்களுக்கு உதவியும் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அந்த அந்த இடத்தில் எல்லாபொருட்களும் சேர்ந்து விடவேண்டும்.

அருளை சற்று அதிகமான.. பொறுப்பு மிக்கவன் என்றே சொல்லலாம். அவன் எல்லா வேலைகளையும் பார்த்து கொண்டு இருந்ததால்… சரவணன் வந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். எல்லாரும் இருப்பதனால்.. ராதிகாவிடம் தனியாக பேச கூச்சப்பட்டு, வந்திருந்தவர்களிடமே பேசிக்கொண்டு இருந்தான்.    

“போன்ல அந்த பேச்சு பேசறாங்க… நேர்ல கண்டுக்கறாங்களா பாரு… பொண்டாட்டிய, எல்லார் முன்னாடியும் என்னன்னு கேட்டுட்டா.. இவர் கௌரவம் குறைஞ்சிடுமோ..” என்று ராதிகாவிற்கு உள்ளுக்குள் கொதித்தது.

சரவணனைப் பார்த்து முறைத்தாள்…. அவள் முறைப்பதைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. யாரும் பார்க்காமல்.. அவளை பார்த்து கண்சிமிட்டினான்.

ஏதோ பொருள் வைப்பது போல அவன் அருகில் வந்தவள்…. மெதுவான குரலில் “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

யாரும் கவனியாமல்.. வேலை இருப்பது போல அவள் பின்னோடு சென்றவன்… அவளை ரூமிற்குள் தள்ளி, “வேறு எதுலடி குறைச்சல்.” என்றான் தைரியமாக.

“அது எனக்கென்னத் தெரியும். உங்களுக்கு தான் தெரியணும். ஆறு மாசம் கழிச்சு பார்க்கிறமேன்னு ஏதாவது ஆவலா பார்க்கறீங்க… வந்தவங்க கூட அப்படி என்ன பேச்சு.”

“யார் கிட்டடி பேசினேன். உங்க அத்தை, உங்க மாமா, உங்க அம்மா, உங்க அப்பா, உன் தம்பி, இவங்ககூட தானே பேசினேன்.  அதுவும் உனக்காகத் தான் பேசினேன்.” என்றான் லயமாக…

“நம்பிட்டேன். நீங்க என் சொந்தக்காரங்க கூடத் தான் பேசினீங்க.. உங்க சொந்தக்காரங்க கூட பேசலை. எனக்காகத் தான் பேசினீங்க.. நம்பிட்டேன்”, என்றாள் அவளும் லயமாக…

இருவருக்கும் காரணம் புரியாமல் சிரிப்பு வர…. அவனின் விரிந்த கைகளுக்குள் அடங்கினாள்.

“நானே உங்களை பார்க்காம தவிச்சு போயிருக்கேன். உங்களுக்கு கிண்டலா இருக்கா… என்னை மாதிரி.. உங்களுக்கு என்னை பார்க்கணும்னு தோணவேயில்லையா?”

அவளை அணைத்தவாறே பதிலளித்தான்… “தோணிச்சு ராதிகா. தோணாம எப்படி இருக்கும்.” என்று சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தவர்கள்…பிறகு எல்லாரும் தேடுவார்கள்.. என்பதின் பொருட்டு.. ஒருவரை ஒருவர் விலகி நின்றார்கள். அந்த ஒரு சிறி அணைப்பே இருவருக்கும் போதுமானதாக இருந்தது.

“இப்போ எதுக்கு ரூமுக்கு வந்தீங்க..” என்று ராதிகா கேட்டுக்கொண்டு இருக்கும்போதே.. வேகமாக சீருடை அணிந்தான் சரவணன்.

“எப்படி இருக்கு”, என்று மனைவியிடம் பெருமை காட்ட…

அவள் பதில் பேசாமல் மகிழ்ச்சியோடு திருஷ்டி கழித்தாள். “இப்போ எதுக்கு யுனிபார்ம் போட்டீங்க..”

“எனக்கு ஸ்டேஷன் வரைக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.  போயிட்டு மதியம் சாப்பிட வந்துடறேன். அதுவரைக்கும் எல்லோரையும் நீயே சமாளி.  வா…” என்று அவளை அழைத்து வெளியே வந்தான்.

இவனை சீருடையில் பார்த்த.. அவனின் அன்னைக்கும் தந்தைக்கும் மிகவும் பெருமை. கற்பகத்திற்கும் அவரின் கணவருக்கும்.. சந்தோஷம் சொல்லவே வேண்டாம். எல்லாரும் நிறைந்த மனதோடு அவனை ஆசீர்வதித்தனர்.     

வெளியே வந்து பார்த்தால்.. அதற்குள் பொருட்கள் எல்லாம் இறக்கியிருந்தனர். அருள் எல்லோருக்கும் கூலி கொடுத்துக்கொண்டு இருந்தான். 

“பணம் வேணுமா.. அருள்”, என்றான் சரவணன்.

“இல்லை, தேவையில்லை.. இருக்கு. அப்பா கொடுத்தாங்க சரவணா.” என்று அவன் வேலையை தொடர்ந்தான். வேலை என்று வந்துவிட்டால்.. அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பான் அருள்.

“சரி பார்த்துக்கோ”, என்றவன்… “சாப்பிட கடைல சொல்லட்டுமா?” என்றான் அவனின் அன்னை கோதையிடம்.

“அது எதுக்கு? சாமான் எடுத்து வெச்சிட்டா… ஒரு மணிநேரத்துல சமையல் ஆகிடும். நாலு பொம்பளைங்க இருக்கோம். சமைக்க மாட்டோம்..” என்றவரை கற்பகமும் ஆமோதித்தார்.

“ஆமாம் அண்ணி! சரியா சொன்னீங்க…. இப்போ சமையல் கட்டை சரிபண்ணிடலாம்..” என்று மளமளவென்று சாமான்களை இடம் சேர்த்தனர்.

அவர்கள் சாமான்களை எல்லாம் எடுத்து வைத்து, “உஷ் ஹப்பாடா”, என்று நிமிர… வயதானவர்கள் என்பதால்…. “நீங்க போங்க”, என்று அன்னையையும் அத்தையையும் விரட்டிய ராதிகா… எழிலரசியின் உதவியோடு ஒரு மணிநேரத்தில் சமைத்து முடித்துவிட்டாள்.    

சொன்னபடி சரவணனால் நேரத்திற்கு வரமுடியவில்லை. எல்லோரையும் காத்திருக்க வைக்காமல்  உணவு உண்ணச் செய்தாள் ராதிகா. அவள் மட்டும் பிறகு சரவணனுக்காக காத்திருந்தாள்.

“அவன் வேலையே இப்படிதான் ராதிகா… அவன் பசி தாங்க மாட்டான். எதையாவது சாபிட்டுக்குவான். அவன் வரட்டும்னு நீ பட்டினி கிடக்காதே”, என்று அத்தை சொல்லியும்…

“அவர் வந்துடட்டும் அத்தே. இன்னைக்கு தான் வந்திருக்கேன். இன்னைக்கே அவரை விட்டுட்டு சாப்பிடவா…நாளைல இருந்து பார்த்துக்கறேன்”, என்று கோதைக்கு சமாதானம் சொன்னாள் ராதிகா.

கற்பகதிற்கு தன் மகள் குடும்பம் நடத்தும் பாங்கை நினைத்து பெருமை. வீட்டில்லென்றால் யார் சாப்பிட்டாலும்.. சாப்பிடாவிட்டாலும் முதலில் சாப்பிட்டு விடுவாள்.

“இருடி அப்பா சாப்பிடட்டும்…. ஆம்பிளைங்க ஏதாவது வேலையிருக்கும்..” என்று கற்பகம் சொன்னால் கூட …. “அதென்ன ஆம்பிளைங்க தான் முதலில் சாப்பிடணும்னு சட்டமா..”,என்று எதிர்த்து பேசுவாள். இன்று கணவன் பாசம் அவளை எவ்வளவு நேரம் காத்திருக்க வைக்கிறது. அவளும் முகம் சுளிக்காமல் காத்திருக்கிறாள்….

தன் பெண்ணை பெருமையாக பார்த்தார் கற்பகம்.  

Advertisement