Advertisement

அத்தியாயம் ஆறு :

நாட்கள் வேகமாக ஓடின. பறந்தன. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நகர்ந்தன என்று சொல்லும் அளவிற்கு மெதுவாக போகவில்லை.. வேகமாக சென்றது. எழிலரசி பன்னிரெண்டாவது பரிட்சை எழுதி ரிசல்ட்டும் வந்திருந்தது. எல்லாரும் எதிர்பார்த்தது போல மிக குறைவான மதிப்பெண்களிலேயே தேறியிருந்தாள். “அப்படா பாஸ் பண்ணிட்டா”, என்று வீட்டில் உள்ளவர்கள் ஆசுவாச மூச்சு விட்டனர்.

அவளை ஒரு டிகிரி படிக்க வைப்பதா.. இல்லை மாப்பிள்ளை பார்ப்பதா.. என்று அவளின் பெற்றோருக்கு குழப்பமாக இருந்தது. அவளுடைய அண்ணன்கள் இருவரும் அவளை படிக்க வைக்கலாம், இப்போது மாப்பிள்ளைகள் கூட படித்த மணப்பெண்ணை யே கேட்கிறார்கள் என்றனர். அது ஒரு வகையில் சரியாகப் பட்டாலும்.. படிக்க மாட்டேன்.. என்று சொல்லுபவளை என்ன செய்வது.. என்று அவளின் பெற்றோருக்குத் தெரியவில்லை.

“பக்கத்தில் இருக்கும் காலேஜில் சேர்த்து விடுங்கள் அப்பா. வரன் ஏதாவது வந்தால் நிறுத்தி திருமணம் செய்து கொடுத்து விடலாம்”, என்றான் சரவணன். அவன் சொல்வதும் பெற்றோர்களுக்கு சரியாகப் பட.. அவளைக் கட்டாயப்படுத்தி காலேஜ் அனுப்பி வைத்தனர்.

“படிக்கறவரைக்கும் படி. நீ மார்க் எடுக்கலைன்னா திட்ட மாட்டோம்”, என்று ஆயிரம் சமாதானங்கள் கூறி அவளை படிக்க அனுப்பினர். அப்போதும் சிணுங்கிக்கொண்டே தான் எழிலரசி கல்லூரிக்கு சென்றாள்.

தினமும் எழிலரசி பண்ணும் ரகளைகளையும்.. அதை சமாதானப்படுத்த அவளுடைய தாய் தந்தை எடுக்கும் முயற்சிகளையும்.. பார்த்து செல்விக்கு சிரிப்பு தான் வரும். “இந்த அக்காக்கு படிக்கறதுல அப்படி என்ன கஷ்டம்..”, என்று யோசிப்பாள். அதே சமயம் எழிலரசியைப் பார்த்து சற்று பொறாமையாக கூட இருக்கும். எவ்வளவு நல்ல தாய், தந்தை கிடைக்கப் பெற்றிருக்கிறாள் என்று.   

இல்லாததை நினைத்து ஏங்குவது சரியானதல்ல.. என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்வாள் செல்வி. தன்னுடைய முன்னேற்றம் எல்லாம்.. படிப்பால் மட்டுமே என்றுணர்ந்தவள் தன் கவனத்தை எல்லாம் முழு மூச்சாக படிப்பில் செலுத்தினாள். அதுவும் அது பத்தாம் வகுப்பு என்பதால் கூடுதல் கவனம் செலுத்தினாள். அவளுக்கு வேண்டிய நோட்டு மற்ற செலவுக்கெல்லாம் ராதிகாவே கொடுத்துவிடுவாள்.

பொதுவில் யாரிடமும் எதுவும் கேட்க மாட்டாள் செல்வி. ஆனால் ராதிகாவிடம் கேட்பதற்கு அவளுக்கு எந்த கூச்சமும் இல்லை. தயங்காமல் கேட்பாள்.

ராதிகாவும் அதை சிறிதும் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டாள்.

தினமும் காலையில் கோவிலுக்கு போவது ராதிகாவின் வழமை. அவள் போகும் நேரம் தான்.. செல்வி அவளின் ஆயாவிற்கு கடை போடுவதற்கு, எல்லாம் எடுத்துக்கொடுத்துக் கொண்டிருப்பாள்.

அங்கே ராதிகாவை அப்போது பார்ப்பதில் செல்விக்கு சந்தோஷம். ஓடி வந்து இரு வார்த்தை பேசிவிட்டே செல்வாள். எப்போதும் ராதிகா அவளின் ஆயாவை பார்த்து சிரித்துவிட்டு மட்டும் செல்வாள். மிக சில சமயம் அவரின் அருகில் சென்று இரண்டொரு வார்த்தை பேசிச்செல்வாள். அதில் அந்த மூதாட்டிக்கு அப்படி ஒரு சந்தோஷம். அவர் பேசும் விஷயம் அவளின் பேத்தியை பற்றியதாகவே இருக்கும்.

இந்த அருள் வரும்போதேல்லாம்.. ஏதாவது சாக்கு வைத்து செல்வியை திட்டாமல் போக மாட்டான்.

அங்கே சரவணனின் ட்ரைனிங் நல்ல விதமாக சென்று கொண்டிருந்தது. மிகச் சிறப்பாக எல்லா பயிற்சியையும் மேற்கொண்டு இருந்தான் அவன். முடிந்தவரையில் தினமும் ராதிகாவிடம் தொலைபேசியில் பேசிவிடுவான். மிகவும் ஆவலாக அவனின் அழைப்பிற்காக எதிர்பார்த்து காத்திருப்பாள் ராதிகா.

என்றாவது அவன் அழைக்க முடியாமல் போய் விட்டால்.. அன்றெல்லாம் அவளின் முகத்தை பார்க்கவே முடியாது. அவளைப் பார்த்து கோதை கூட கண்டுபிடித்து விடுவார். “என்ன இன்னைக்கு சரவணன் போன் பண்ணலையா..”, என்று.

ஏன் செல்வி கூட கண்டுபிடித்து விடுவாள். “ஏன் அக்கா.. உங்க முகம் வாடி இருக்கு. ஐயா இன்னைக்கு உங்க கிட்ட பேசலையா”, என்பாள்.

“உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது”, என்று ராதிகா ஆச்சர்யப்பட

“உங்க முக வாட்டமே காட்டி கொடுத்திடுமே அண்ணி”, என்பாள் எழிலரசி. ஆம். இப்போது அவளும் சற்று சகஜமாக ..செல்வி, ராதிகாவின் பேச்சில் கலந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். காலேஜ் போக ஆரம்பித்ததில் இருந்து.. நல்ல மாற்றம் அவளிடம். அங்கு எல்லாரும் பழகுவதை பார்த்து.. ஏற்றத்தாழ்வுகள் சற்று அவளிடம் குறைய ஆரம்பித்திருந்தன.

அவளின் சின்ன அண்ணனை போல இருந்த எழிலரசி.. பெரிய அண்ணனை போல மாற ஆரம்பித்திருந்தாள். நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டாள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் விளையாட்டுத்தனம் மறைந்து சற்று பொறுப்பு கூடியிருந்தது அவளிடம்.

செல்வி கூட ராதிகாவிடம் சொல்வாள். “அக்கா, இந்த எழிலக்கா எப்பவும் என்னை திட்டிட்டே இருப்பாங்க முதல்ல எல்லாம். இப்போல்லாம் திட்றதே இல்லை. நிறைய வேலை வைக்கறதும் இல்லை. என்னாச்சு தெரியலையே..”, என்று கவலைப்படுவாள்.

“உனக்கென்ன வேலை வேணும் அவ்வளவுதானே. இரு நான் வைக்கிறேன்”, என்று ராதிகா விளையாட்டிற்கு மிரட்டுவதை..

“நீங்க எனக்கு வேலை வெச்சிட்டாலும் மானம் பொத்துக்குட்டு ஊத்தாது?”, என்று நொடிப்பாள் செல்வி.

“வர, வர.. உனக்கு ரொம்ப வாயாயிடுச்சு. என்ன வாயி, வாயி..”, என்று கிண்டலடிப்பாள் ராதிகா.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த வேலையில்.. இரண்டு நாள் விடுப்பில் சரவணன் ஊருக்கு வந்திருந்தான். வீட்டில் உள்ளவர்களுக்கு.. அப்படி ஒரு சந்தோஷம், மகிழ்ச்சி. பையன் ஊருக்கு வருகிறான் என்று. ராதிகாவிற்கு சொல்லவே வேண்டாம்.

அவன் வர எப்படியும் அதிகாலை மணி ஐந்தாகிவிடும்.. என்று தெரிந்த ராதிகா, நான்கு மணிக்கே எழுந்து கொண்டு.. அவனை எதிர்பார்க்கத் துவங்கி விட்டாள்.

“வந்தவுடனே என் போனுக்கு போன் பண்ணுங்க. காலிங் பெல் அடிச்சு எல்லோரையும் எழுப்பாதீங்க. அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு தான்.. என் முகத்தையே பார்ப்பீங்க”, என்று முன்னெச்சரிக்கையாக சொல்லியிருந்தாள்.

“எப்போயிருந்து பொண்டாட்டி.. நீ இவ்வளவு புத்திசாலியான?”,

“எல்லாம் உங்களை கட்டிகிட்ட நேரம் தான்.”

“இருடி.. நேர்ல வந்து உன்னை வச்சிக்கிறேன்.”

“எனக்கு ஒரு சந்தேகம் கேட்கட்டுமா?” என்றாள் சீரியஸாக.

ஏதோ கேட்கப்போகிறாள் என்று.. அவனும் பதில் சொல்ல தயாராக..

“ஏற்கனவே என்னை கல்யாணம் கட்டிட்டீங்களே, அப்புறம் எப்படி வச்சுபீங்க?” என்று கேட்க..

சரவணனுக்கு லஜ்ஜையில் முகம் சிவந்து விட்டது. “நீயாடி பேசற இப்படி எல்லாம். ஒரு ஆறேழு மாசம்.. மாமனை பிரிஞ்சதுக்கே இந்த எஃபக்டா!. வர்றேண்டி.. வந்து கட்டிக்கிட்டவளை.. எப்படி வச்சிக்கறதுன்னு காட்டறேன்.” என்றான் கணவனாக.

இப்போது வெட்கத்தில் முகம் சிவப்பது ராதிகாவின் முறையாயிற்று.        

தங்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடலை நினைத்துக்கொண்டே.. அந்த அதிகாலை வேலையில்.. வீட்டு வாசல் முன் வந்து நின்றவன்.. அவளுக்குத் தொலைபேசியில் அழைத்தான். அவள் வந்து கதவை திறக்கும் முன்னரே.. பூபதி பாண்டியன் தானாகவே கதைவை திறந்திருந்தார். இவர் கதவை திறப்பதை பார்த்த ராதிகா, சத்தமில்லாமல் ரூமிற்குள் போய் விட்டாள். பின்ன, “பெல் அடிக்காம எப்படி எழுந்து வந்த..” என்று யாராவது கேட்டு விட்டால் 

ராதிகா வந்து கதவை திறப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு.. பூபதி பாண்டியன் திறந்தது சற்று ஏமாற்றம் தான்.  இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் மலர்ந்த முகத்தோடு.. 

“நான் பெல் அடிக்காமையே உங்களுக்கு எப்படி தெரிஞ்சது அப்பா”, என்றான்.

“என் உள்மனசு சொல்லிச்சுடா”, என்றார். 

“என்னை நினைச்சிட்டே தூங்குணீங்களா?”, என்ற அவனின் கேள்விக்கு…

“உங்களையெல்லாம் நினைக்கறதை விட்டா.. வேற என்ன வேலை.. எனக்கும் உங்கம்மாக்கும். அவ அசந்து தூங்கறா. அதான் நான் எழுப்பலை. போ நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு, அப்புறமா பேசலாம்.” என்று அவனை, அவனின் ரூமிற்கு அனுப்பி வைத்தார்.

“சரிப்பா”, என்று ராதிகாவை பார்க்கும் ஆவலில் விரைந்தான்.

அவள் இவனுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். உள்ளே வந்தவன் அவளையே விழி எடுக்காமல் ஆராய்ந்தான். சற்று இளைத்த மாதிரி தெரிந்தாள். இவனை பார்த்தவுடன் “நான் வர்றதுக்கு முன்னாடியே மாமா வந்து கதவை திறந்திட்டாங்க.” என்று தன் செய்கைக்கு விளக்கமளிக்க.

“அதை விடு ராதிகா”, என்று அவளை அப்படியேத் தூக்கியவன் “எப்படியிருக்க?”, என்றான்.

“அய்யே! இது என்ன சின்ன புள்ளைங்க மாதிரி தூக்கிட்டு”, என்று அவசரமாக அவள் இறங்க முற்பட.. மெதுவாக..மிக மெதுவாக.. அவளை தன் மீது முழுவதுமாக உராய்ந்தவாறே இறக்கி விட்டான்.

முகம் சிவந்த ராதிகா.. “வந்த உடனே ஆரம்பிச்சிடீங்களா..”, என்று அவனிடம் இருந்து விலகி.. “நீங்க எப்படி இருக்கீங்க”, என்றாள் புன்னகைத்தவாறே.

“பெண்டெடுக்கறாங்க பயிற்சின்னு.. ஆனாலும் நல்லா தான் இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு”,

“அங்க என்ன என்ன பண்ணுனீங்க..”, என்று அவள் கதை கேட்க.. ஆவலாக அவனும் கதைக்கத் துவங்கினான்.  அவனுக்கு தான் அது மிகவும் பிடித்த விஷயமாயிற்றே. தினமும் தொலைபேசியிலும் இதைதான் பேசுவர். இங்கே வந்தும் இதையே பேசினான்.

அதற்குள் கோதை எழுந்து இருக்க.. “சரவணா”, என்று குரல் கொடுத்தார்.

“அம்மா”, என்று வெளியே விரைந்தான்.

“எப்படியிருக்க சரவணா”, என்று அவர் ஆரம்பிக்க.

“நல்லாயிருக்கேன் ம்மா..”, என்று அவரின் மடி சாய்ந்து படுத்துகொண்டவன்.. “ராதிகா, காபி”, என்று குரல் கொடுத்தான். 

அங்கே அவன் வந்த குதூகலம் நிறைந்தது. எழிலரசி எழுந்து வந்துவிட்டாள். இவன் வருகிறான் என்று அருளும் வந்திருந்தான். மொத்த வீடும் ஹாலில் குழுமினர். அவர்களுக்கு பேச நிறைய விஷயமிருந்தன.

“எப்படி இருந்தது சரவணா ட்ரைனிங்”, என்றான் அருள்.

“நல்லா இருக்குடா. நல்லாப் போகுது.”

“ரொம்ப கஷ்டமா இருக்கா அண்ணா”, என்றாள் எழிலரசி. 

“கொஞ்சம்.. ட்ரைனிங் கஷ்டம் தான் எழில். ஆனாலும் சமாளிச்சிட்டேன்”, என்றான்.

அதற்குள் ராதிகா எல்லோருக்கும் காபி, டீ, என்று அவரவர்க்கு தகுந்ததை எடுத்து வந்தாள்.

“அண்ணி ஒருத்தியா செய்யறா! நீ வேடிக்கை பார்க்கிற”, என்று கோதை எழிலரசியை கடிந்தார்.

“பரவாயில்லைத்தை நான் பார்த்துக்கறேன்”, என்று சமாதானப்படுத்தினாள் ராதிகா.

“அவளுக்கு நீ ரொம்ப இடம் கொடுக்கற ராதிகா. எல்லா வேலையும் நீ தானே இழுத்து போட்டு செய்யிற. இந்த ரெண்டு நான் பார்த்துக்கறேன். நீ சரவணனோடவே இரு”, என்றார் கரிசனமாக.

“சரிங்கத்தை”, என்றாள்.

அவன் அவர்களோடு எல்லாம் பேசி முடிப்பதற்குள்.. குளித்திருந்தாள். அவன் வந்தவுடனே “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, கோயிலுக்கு போகலாம்”, என்றாள்.

அதை காதில் வாங்காதவனாக. “என்ன இது சிகப்பு கலரு.. சிங்கு சான்னு.. இப்படி அடிக்கற ரெட்ல, புடவை கட்டியிருக்கிற..”.

“ரொம்ப நாளா கட்டாம வச்சிருந்தேன். என்னவோ இன்னைக்கு கட்டணும்னு தோணிச்சு, அதுவா முக்கியம்.. நீங்க என்னோட கோயிலுக்கு வாங்க”,

“நீ போயிட்டு வாயேன் ராதிகா. எனக்கு டயர்ட்டா இருக்கு”

“தினமும் நான் தனியா தானே போறேன். இன்னைக்கு நீங்க வாங்க”, என்றாள் பிடிவாதமாக.  

“விடமாட்டியே நீ. இப்போதான் மணி ஏழாகுது. நான் ஒரு அரை மணிநேரம் தூங்கி எழுந்துக்கறேன். அப்புறம் போகலாம்”, என்றான்.

அந்த மட்டும் வருகிறேன்.. என்று சொன்னானே என்று திருப்தியுற்றவள், “சரி தூங்கிட்டு ரெடி ஆகுங்க. அதுக்குள்ள நான் டிஃபன் வேலையை முடிச்சிடறேன்”, என்றாள்.

“அம்மா தான் என்னோடவே இருக்க சொன்னாங்களே. அப்புறம் என்ன டிபன் வேலைன்னு போற”,

“நீங்க தூங்கற நேரம் தானே போறேன்.  நீங்க அமைதியா தூங்குங்க. நான் இருந்தன்னா சும்மா தொணத் தொணன்னு பேசி.. தூங்க மாட்டீங்க. தூங்குங்க” என்று விளக்கை அணைத்து ரூமை இருட்டாக்கி சென்றாள்.

அரை மணி நேரம் என்பது.. அவன் எழுந்துகொள்ள ஒரு மணி நேரமே ஆகிவிட்டது. பிறகு ரெடியாகி கோவிலுக்கு கிளம்பினர்.

கோவிலுக்கு உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தால்.. ஊர்காரர் ஒருவர் சரவணனை பேச நிறுத்திக்கொண்டார்.

ராதிகா சுற்றும் முற்றும் பார்க்க.. அப்போதுதான் கடையை போட்டு கொண்டிருந்தார்கள்.. செல்வியும் அவள் ஆயாவும்.

அவர்களை நோக்கி நடந்தாள். “என்ன ஆயா, எப்படி இருக்கீங்க?”, என்று அவள் பேச்சு கொடுக்க.. “எனக்கென்ன தாயி, நீ எப்படி இருக்க?”, என்றார்.

செல்வி. “ஐயா வந்துட்டாங்களா அக்கா”, என்று கேட்டாள்.

“வந்துட்டாங்க பாரு, அங்க பேசிட்டு இருக்காங்க”, என்று காட்டினாள்.

“எப்போ வந்தாங்க அக்கா”, என்று செல்வி கேட்டுகொண்டிருக்கும்போதே அவளின் ஆயா, “கண்ணு.. அந்த பொறி உருண்டை வச்சிருந்த பையை.. வீட்லயே விட்டிட்டோம் போல. போய் எடுத்துட்டு வர்றியா கண்ணு”, என்று சொல்ல. “இதோ ஆயா”, என்றவள்.. “நான் போய் எடுத்துட்டு வந்துடறேன் அக்கா” என்று ராதிகாவிடம் சொல்லி ஓடினாள்.

“எம் பேத்திய நல்ல.. பெரிய படிப்பாப் படிக்க வச்சிடுங்க கண்ணு”, என்று அவளின் ஆயா, ராதிகாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் ஊர்காரோடு  பேசிக்கொண்டிருந்த சரவணன் பார்த்தான்.. ஒரு காளை ராதிகாவை நோக்கி வேகமாக வருவதை. அதைப்பார்த்தவன் “ராதிகா.. தள்ளு”, என்று கத்திக்கொண்டே  ஓடி வர அவனின் கத்தலில்.. அவனைத் தான் திரும்பி பார்த்தாள். தன்னை நோக்கி தறிகெட்டு.. முட்ட வந்துகொண்டிருக்கும்  காளையை.. அவள் கவனிக்கவேயில்லை.

அதற்குள் செல்வியின் ஆயா இடை புகுந்துவிட. .ராதிகாவை முட்ட வந்த காளை செல்வியின் ஆயாவை குத்திக்கிழித்தது. க்ஷணத்தில் நிகழ்ந்து விட்ட இந்த நிகழ்வை.. யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதற்குள் இரண்டு மூன்று பேர் வந்து அந்த காளையை பிடித்திருந்தனர். ஆனாலும் நிகழ்ந்து விட்ட நிகழ்வை யாராலும் தடுக்க முடியவில்லை.

எதிர்பாராத நிகழ்வு. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டான் சரவணன். ராதிகா அப்போது தான் நிகழ்ந்த நிகழ்வை உணர்ந்தவள், “பாட்டி..”, என்று கத்திக்கொண்டே ..கீழே விழுந்திருந்த செல்வியின் ஆயாவை பார்க்க.. வயிற்றுப் பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

ராதிகாவிற்கு மயக்கம் வரும் போல இருந்தது. பிறகு சரவணன், அந்த பாட்டியைப் பார்க்க.. அவர் இறந்தேயிருந்தார். வயதானவர் என்பதால் மரணம் உடனே நிகழ்ந்து விட்டது.

அந்த பாட்டி மட்டும் குறுக்கே வராமல் இருந்திருந்தால்.. இந்த நிகழ்வு ராதிகாவோடு நடந்திருக்கும்.. என்ற எண்ணமே சரவணனுக்கு.. நெஞ்சு கூடு காலியான ஒரு உணர்வை கொடுத்தது.

ஆட்கள் கூடியிருந்தனர். “ஐயோ.. பாவம்.”, என்று எல்லாரும் பரிதாப்பட்டனர். செல்வி அப்போது தான் வந்தாள். கூட்டம் கூடியிருப்பதை பார்த்ததும்.. பதறி வந்து விலக்கி பார்க்க.. அவளின் ஆயா தெருவில் கிடந்த கோலம் தான் தெரிந்தது. 

“ஆயா”, என்று பதறி.. கிட்டே ஓடி வந்து பார்த்தாள். ரத்தம் வடிந்து இருந்தது.. வயிற்று பகுதியில் இருந்து. “என்ன ஆச்சு?”, என்று பரிதாபமாக அவள் கேட்க.. சுற்றி நின்ற யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.

நிதர்சனம் சிறிது நேரத்தில் அவளுக்கு புரியவைக்கப்பட்டது. அவள் அழுத அழுகை.. கல்மனதுக்காரர்களையும் கரைப்பதாக இருந்தது. ராதிகாவிற்கு, அவளை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை. தான் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால்.. இதை தவிர்த்திருக்கலாமோ.. என்று என்னென்னவோ யோசனைகள் தோன்றியது.

போய் வெகு நேரம் ஆயிற்றே.. இன்னும் இவர்களை காணவில்லையே.. என்று வீட்டில்  கோதை கவலைப்பட்டு.. இவர்களுக்கு தொலைபேசியில் அழைக்க.. அதை எடுக்கும் மனநிலையில்  சரவணன் இல்லை.

என்னவோ.. ஏதோவென்று அருளை அனுப்பினார். அங்கே வந்து அவன் பார்த்தது.. தன் ஆயாவின் மேல் விழுந்து.. அழுது கொண்டிருக்கும் செல்வியைத் தான்.  என்னவாயிற்று.. என்று தன் அண்ணனிடம் கேட்க.. அவன் நடந்தவற்றை சொன்னான். தன் அண்ணியின் உயிர் காப்பதற்காக.. அந்த மூதாட்டி இறந்தது.. அருளுக்கும் அதிர்ச்சியே.

“அம்மாவிடம் விஷயத்தை சொல்லி.. பணம் வாங்கி வா”, என்று அருளை அனுப்பினான் சரவணன்.  

அதற்குள் செல்வியின் உறவுக்காரர்கள் திரண்டிருந்தனர். அருள் வந்தவுடன்.. அவர்களில் பொறுப்பானவனாய் தெரிந்த ஒருவரிடம் பணம் கொடுத்து.. ஈமக் கிரியையை கவனிக்க சொன்னான் சரவணன்.

விஷயம் கேள்விப்பட்டு அவனின் தந்தையும் வந்திருந்தார். ஊர் பெரிய மனிதர் அவர் சொல்லவும்.. வேகமாக எல்லா காரியங்களும் நடந்தன. இல்லையென்றால் போலீஸ் கேஸ், போஸ்ட் மார்ட்டம்.. என்று நிறைய நேரம் இழுத்திருக்கும்.

அந்த அதிர்ச்சியில் இருந்து ராதிகாவும் மீளவில்லை. சரவணனும் மீளவில்லை. அந்த ஆயா இறந்து போனது அவனுக்கு வருத்தமாக இருந்தாலும்.. அந்த ஆயா ஒரு நிமிடம் தயங்கி இருந்தால்.. இப்போது ராதிகா உயிருடன் இல்லை. நினைக்க, நினைக்க சிந்தை கலங்கியது.

வீட்டிற்கு வந்தும்.. இருவரும் ஏதோ மாதிரியே இருந்தனர். “விடு நடந்தது நடந்திடுச்சு. இனி என்ன பண்ணமுடியும்”, என்று கோதை எவ்வளவோ சமாதனப்படுத்தியும் தெளியவில்லை.

அதுவும் ராதிகா. “என்னால அந்த பாட்டி இறந்திடிச்சு”, என்று அழுதபடியே இருந்தாள்.

“ப்ச்! அதைவிடு. இனிமே அதை பத்திப் பேசாத”, என்று எரிந்து விழுந்தான் சரவணன்.

“நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா”, என்றாள் அழுதபடியே ராதிகா.

“நீ எதுவும் பண்ணலை. யாரும் தப்பு பண்ணலை. நடந்திடுச்சு. என்ன பண்ண முடியும். ஒண்ணும் பண்ணமுடியாது.  அமைதியா இரு”, என்று கடினமாக சொன்னான். அவனுமே நிகழ்ந்த நிகழ்வில் இருந்து வெளியே வரவில்லை. அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால்

இப்போது.. அவன் மனமெல்லாம் செல்வியின் நிலை என்ன என்பதில். நடந்ததற்கு யாரும் பொறுப்பல்ல. இனி நடக்கப்போவதற்கு யார் பொறுப்பு என்பதே கேள்வி.

அவன் மனம் அதையே சிந்தித்து கொண்டிருந்தது. அவனுக்குத் தெரியும்.. அவள் ஆயா மட்டுமே அவளுக்கு துணை என்று. வேறு உறவுகள் அவளை பார்த்துக்கொள்வார்களா.. தெரியவில்லை. பேசி விட வேண்டும் என்று யோசித்துக்கொண்டான்.

இரவு முழுக்க ராதிகா ஒரே பிதற்றல், “என்னால தானே இப்படி ஆகிடுச்சு”, என்று.

“வாயை மூடுடி”, என்று அவளை சத்தம் போட்டவன்.. “உனக்கு ஏதாவது ஆகியிருந்ததுன்னா.. என்னால நினைச்சு பார்க்கவே முடியலை. அவங்க வயசானவங்க. விடு.. நடந்ததுக்கு நம்ம பொறுப்பில்லை. அவங்களுக்கு செய்யற நன்றிக்கடனா.. அவங்க பேத்திய.. நல்லா படிக்க வைச்சு ஆளாக்கி விடுவோம்”, என்று சமாதானப்படுத்தினான்.   

மறுநாள் அந்த பாட்டியின் காரியங்கள் முடிந்த பிறகு தனது தந்தை மூலமாக அவர்களின் சொந்தங்களை அழைத்தான் சரவணன். பத்து பேர் திரண்டிருந்தனர். செல்வியும் இருந்தாள். ஒரே நாளிலே உருக்குலைந்து இருந்தாள். 

அவன் தந்தையே கேட்டார். “யார் பார்த்துகறீங்க.. இந்தப் பொண்ணை”, என்று. யாரும் வாயைத்திறக்கவில்லை. அவர்கள் வாயை திறக்காததே.. அவர்களின் சம்மதமின்மையை காட்டியது.

“செலவுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்காதீங்க. பண உதவியை நாங்க பண்றோம். எங்களுக்கு பார்த்துக்க தான் ஆள் வேண்டும்”, என்றான் சரவணன்.

“எங்க எல்லோர் வீட்லயும் பொட்டபுள்ளைங்க இருக்குங்கையா. அதை கரை சேத்தறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு பொண்ணையெல்லாம்.. எங்களால பார்க்க முடியாது ஐயா. இன்னைக்கு ஒரு வீராப்புல கூட்டிட்டு போய் வெச்சிக்கறேன்னு சொல்லிட்டு..  நாளைக்கு பார்க்க முடியாம.. நாங்க திண்டாட கூடாது இல்லையா”, என்று எல்லோருமே மறுத்தனர்.

மறுத்தது மட்டுமில்லாமல்.. “நடந்ததுக்கு.. நீங்க தான் பொறுப்பேற்கணும். உங்க வீட்டு பொண்ணைக் காப்பாத்த போய் தான்.. இன்னைக்கு அந்த பொண்ணு அனாதையா நிக்குது. நீங்களே, அதுக்கு ஒரு வழிபண்ணுங்க.. அய்யா”, என்றனர்.

எவ்வளவு வாதாடியும் முடிவாக.. “நீங்கள் தான் அந்த பொண்ணை பார்த்துக்கொள்ள வேண்டும். மீறி முடியாதுன்னா எப்படியோ போகட்டும் அது..” என்று சொல்லி சென்று விட்டனர்.. அவள் ஜனம் முழுதும். 

செல்வியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக அவளைப் பார்த்து.. அருளுக்கு கூட பாவமாக இருந்தது. ஆனால் அவளின் சொந்தங்கள் யாரும் பாவப்படுகிற மாதிரி தெரியவில்லை. தீர்மானமாக முடியாது என்று கூறி சென்று விட்டனர்.

செல்வி தனித்து விடப்பட்டாள்.                                            

“என்ன சரவணா.. அவ சொந்தக்காரங்க எல்லாம் இப்படி சொல்லிட்டு போறாங்க. இப்போ என்ன பண்றது”, என்று அவன் தந்தை கேட்க..

செல்வியை அந்த புறம் அனுப்பியவன்.. “நம்ம தான்பா ஏதாவது செய்யணும்”, என்றான் தீர்மானமாக.

“நம்ம என்னப்பா செய்ய முடியும்?”

“ஏதாவது செஞ்சு தானேப்பா ஆகணும். அந்த பாட்டி என்ன தானாவா இறந்துச்சு. நம்ம ராதிகாவை காப்பாத்தப் போய் இறந்துச்சு. அதனால கட்டாயம் நம்ம தான்பா செய்யணும். இந்நேரம் அந்த பாட்டி இல்லைன்னா.. நம்ம ராதிகா இல்லைப்பா. அதுவுமில்லாம நம்ம விட்டோம்னா.. ஊருக்குள்ள பெரிய மனுஷங்கன்னு.. சொல்ற நமக்கு தான்பா நல்லா இருக்காது.”

“சரி, என்ன பண்ணலாம் நீயே சொல்லு.”

“செல்வியை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடலாம்பா. செலவை நான் ஏத்துக்கறேன்”, என்றான் முடிவாக.

“இது சரி வருமா?”,

“ஏன் சரிவராது. அதெல்லாம் சரி வரும்”, என்றான் இன்னும் தீர்மானமாக.

இதையெல்லாம் குடும்பத்தில் மற்றவர்களும் கேட்டு கொண்டுதான் இருந்தார்கள். இதை கேட்ட கோதை.. “கண்டிப்பா நம்ம தான் அவ பொறுப்பை ஏத்துக்கணுமா? வேற எதுவும் செய்ய முடியாதா?” என்றார்.

“நம்மளை விட்டா யாரும்மா செய்வாங்க.. அந்த பாட்டி மட்டும் நடுவுல வரலைன்னா.. என்னோட ராதிகா எனக்கில்லை. அதை நினைச்சு பார்க்கவே என்னால முடியலை. நம்ம தான்மா செய்யணும்”.

“அந்த பொண்ணுக்கு போய் செஞ்சா.. யாராவது ஏதாவது சொல்லப் போறாங்க சரவணா”.

“சொல்லிட்டு போறாங்க. நம்ம தான் மா ஊர்லயே பெரிய ஆளுங்க. நம்மளை பகைச்சிட்டு எவன் இருப்பான்.. சொல்லுங்க. நம்மளாலேயே செய்ய முடியலைன்னா.. வேற யார் செய்வா?”, என்றான் காட்டமாக.

“கோபப்படாத சரவணா. சொந்தக்காரங்களே எல்லாரும் கைவிட்டுட்டாங்க. இதுல ஒரு பொண்ணோட பொறுப்பை.. நம்ம ஏத்துக்கறதுன்னா சும்மாவா?. நாலும் யோசிக்கணும்”. 

“நீங்க எவ்வளவு வேணா யோசிங்க. ஆனா.. அந்தப் பொண்ணை என்னால எப்படியோ போகட்டும்னு விடமுடியாது. என் ராதிகாவை காப்பத்தியிருக்காங்க. நான் அவளுக்கு செய்ய கடமைப்பட்டிருக்கேன். இதுக்கு மேல யோசிக்கவோ.. பேசவோ ஒண்ணும் இல்லை”, என்று விட்டான் ஒரே முடிவாக.

அவன் அவ்வளவு சொல்லும்போது.. தாங்கள் மட்டும் என்ன செய்ய முடியும்.. என்று விட்டு விட்டனர் அவன் பெற்றோர். 

Advertisement