Advertisement

அத்தியாயம் ஐந்து :

அவர்கள் வீடு சேர.. “என்ன பண்ணீங்க இவ்வளவு நேரம். நல்ல நேரம் முடியறதுக்குள்ள  மறு வீட்டுக்கு போகவேணாமா?”, என்று கோதை ஒரு அதட்டு அதட்டி அவர்களை சாப்பிட வைத்து உறவுகளுடன் அவசரமாக அனுப்பினார்.

ராதிகாவின் வீட்டிற்கு செல்ல.. அங்கே மகளையும் மருமகனையும் சிறப்பாக கவனித்து அனுப்பினர் . 

அந்த ஒரு வார கால வாழ்க்கையிலேயே.. சரவணனுக்கும் ராதிகாவிற்கும்.. இடையில் நல்ல நெருக்கம் வந்திருந்தது. சரவணனின் கண்ணசைவில் வேலை செய்யும் மகளை பார்த்து ராதிகாவின் தந்தை கூட அசந்து போனார். போன் செய்யும் போது கொடுத்தால்.. எடுப்பதற்கு கூட தயங்கிய தன் மகளா இவள் என்றிருந்தது. கற்பகதிற்கு மகள், மருமகனின் அன்னியோன்யம் பார்த்து சந்தோஷமே. சேகரிடம் கூட முன்பெல்லாம் அளவாகத்தான் பேசுவான் சரவணன். இப்போது சகஜமாக பழகினான். 

அது சேகருக்கும் சந்தோஷமே, “மாமா, மாமா..” என்று சரவணனின் புகழ் பாட ஆரம்பித்திருந்தான்.

தங்கள் வீடு திரும்பியிருந்தனர். அங்கே மெதுவாக வீட்டு வேலைகளுக்கு தன்னை பழக்கபடுத்திக் கொண்டாள் ராதிகா. அவள் நன்றாக சமைப்பாள் என்பதினால்.. அவள் சமையல் வேறு அங்கு எல்லோருக்கும் பிடித்தம் ஆகிப்போனது. அதுவும் அவள் மாமனார், “எங்கம்மாவோட கைப்பக்குவம் உனக்கு அப்படியே இருக்கும்மா”, என்று சொன்னதினால் கோதையிடம் வேறு ஒரு முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டார்.

தினமும் மாலை செல்வி வந்து வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அதுவும் சரவணனும் ராதிகாவும் அவள் படிப்புக்கு உதவுகிறோம் என்று சொன்னதில் இருந்து.. இன்னும் கண்ணும் கருத்துமாக படிக்க ஆரம்பித்திருந்தாள்.

எழிலரசி எப்பொழுதும் போல அவள் அண்ணனுக்கு தெரிந்தும் தெரியாமலும் செல்விக்கு வேலைகளை வைத்துக்கொண்டு இருந்தாள். பன்னிரெண்டாவது படிக்கிறாய்.. நல்ல மதிப்பெண்களுடன் தேற வேண்டும்.. படி, படி, என்று வீட்டிலுள்ளவர்கள் காட்டுக்கத்தல் கத்தினாலும்.. அது அவள் காதில் கூட ஏறவில்லை. காதில் ஏறினால் தானே மண்டையில் ஏறுவதற்கு. ரொம்பவும் சுமாராக மட்டுமே அவளுக்கு படிப்பு மண்டையில் ஏறியது.  

சரவணனுக்கு ரிசல்ட் டென்ஷனே அதிகமாக இருந்தது. ராதிகாவிற்கும் அது தெரிந்து தான் இருந்தது. புதிதாக மணமான ஒரு உற்சாகமே இல்லை. எல்லாம் அவன் எக்ஸ்சாம், அவன் ரிசல்ட், அவன் வேலை, என்றே சுழன்றது. அவன் உளத்திக்கொள்வதைப் பார்த்த ராதிகா அவனை தேற்ற முற்பட்டாள்.  

“நல்லபடியா தான் ரிசல்ட் வரும். ஏன் அதையே நினைச்சிட்டு இருக்கீங்க?”.

“வந்துடணும் ராதிகா. இல்லைன்னா.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும். இதுவே எனக்கு ரெண்டாவது அட்டெம்ப்ட். நிறைய கஷ்டப்பட்டு படிச்சேன். மறுபடியும் ஒருமுறை எல்லாம் என்னால யோசிக்க கூட முடியலை ” என்றான் ஒரு பெருமூச்சை வெளியேற்றி.

“வந்துடும், நல்ல படியா வந்துடும். கவலைப்படாதீங்க.”, என்று அவனைத் தேற்றினாள்.

“நான் பாஸ் பண்ணிடுவேனில்ல” என்றான் மறுபடியும் சிறுபிள்ளை போல.

“நீங்க பாஸ் பண்ணலைன்னா.. வேற யார் பண்ணுவா?”, என்று பெரிய மனுஷியாய் அவனுக்கு ஆறுதல் சொன்னாள் ராதிகா.

அவர்களின் சம்பாஷணை நடந்து இரண்டு நாட்களுக்குள் ரிசல்ட் வந்தது. நல்ல மதிப்பெண்களுடன் தேறியிருந்தான்.

ரிசல்ட் வந்ததற்கு பிறகு பாஸ் செய்த சந்தோஷத்தை விட.. இன்னும் நன்றாக செய்து.. இன்னும் முன்னணி இடத்தில் இருந்திருக்கலாமோ.. என்று தோன்றியது. அது அவனுக்கு சற்று வருத்தமாகவும் இருந்தது.

வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பூபதி பாண்டியனுக்கு அப்போதே தன் மகன் ஐ. பி. எஸ். ஆகிவிட்டது போல ஒரு மகிழ்ச்சி.. இறுமாப்பு. ஊரில் எல்லோரிடமும் மகன் பாஸ் செய்த விஷயத்தை சொல்லிக்கொள்ள..

“அப்பா.”, என்று அவரிடம் ஒரு அதட்டல் போட்டவன்.. “இன்னும் இன்டர்வியூ இருக்குப்பா. அதுக்குள்ள எல்லார்கிட்டயும் ஏன் விளம்பரப்படுதறீங்க..” என்றான்.

“டேய், நீ அதெல்லாம் பாஸ் பண்ணிடுவடா”, என்றார்.

ஆனால் சரவணனுக்கு இன்டர்வ்யூ டென்ஷன் மிக அதிகமாக இருந்தது . அவனின் டென்ஷன் ராதிகாவையும் தொற்ற வைத்தான்.

“நல்லா பண்ணுவீங்க நீங்க..” என்று அவனையும் சமாதானப்படுத்தி.. கூடவே தன்னையும் தேற்றிக்கொண்டாள். அவளும் பத்தொன்பது வயது யுவதி தானே. முயன்றவரை பெரிய மனுஷியாய் நடந்து கொண்டாள். 

முதல் நாள் இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுகொண்டிருந்த செல்வி.. மறுநாள், “இது எங்க முனியப்ப சாமிக்கு பூசை பண்ணின திருநீறு. அய்யாக்கு வெச்சிவிடுங்க. ரொம்ப சக்தி வாய்ந்தது. நான் வேண்டியிருக்கேன்.. அய்யா பாஸ் பண்ணிடுவாங்க. ஐயா ஊருக்கு போகும்போது குடுத்துவிடுங்க.. அக்கா”, என்று திருநீறையும், இரண்டு மூன்று எலுமிச்சை பழங்களையும் ராதிகாவிடம் கொடுத்தாள் செல்வி.

அவளின் எஜமான பக்தி கண்டு நெகிழ்ந்தாள் ராதிகா. “கட்டாயம். உங்க அய்யாக்கு நான் இந்த திருநீறை பூசி விடறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தவள்.. அதை செய்யவும் செய்தாள்.

இன்னும் ஒரு வாரத்தில் இன்டர்வியூ டெல்லியில் என்றிருக்க.. ட்ரெயினில் டெல்லி கிளம்பினான் சரவணன். அவன் எண்ணத்தில் முழுக்க முழுக்க.. இன்டர்வியூ மட்டுமே இருந்தது.

ஆனால், ராதிகாவிற்கு அவனை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டுமே.. என்ற வருத்தம் மட்டுமே மேலோங்கி இருந்தது. எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவள் சிரித்த முகமாகவே வளைய வந்தாள்.

அவனை ட்ரெயின் ஏற்றி விடுவதற்காக அருள் வந்திருந்தான். அண்ணனுக்கும் தம்பிக்கும் ரொம்ப பேச்சுவார்த்தை உண்டு என்று சொல்ல முடியாவிட்டாலும்.. ஒரு நல்ல புரிதல் இருவருக்குள்ளும் உண்டு. அருள், சரவணனை பெயர் சொல்லி தான் அழைப்பான்.

அவனை டெல்லிக்கு ட்ரெயின் ஏற்றி விடும்போது. “கட்டாயம் நீ ஐ. பி. எஸ். ஆவ சரவணா.. ”, என்று வாழ்த்தி அவனை வழியனுப்பி வைத்தான்.  

தான் செலக்ட் ஆகிவிடவேண்டும் என்று போகும் போது.. வழி நெடுக இருக்கும் எல்லா கடவுள்களிடமும் பிரார்த்தனை வைத்தான் சரவணன். இது அவனின் கனவு, லட்சியம்.. ஏன்.. காதல் என்று கூட சொல்லலாம். அதன் பிறகு தான் ராதிகா கூட வருவாள். அந்த அளவிற்கு அந்த வேலை மீது நேசம் வைத்திருந்தான் சரவணன். 

இண்டர்வியூ ஹாலுக்கு போய் பார்த்தால்.. எல்லாரும் இவனை விட சிறப்பாக செய்ய கூடியவர்களாகவே தோற்றமளித்தனர். மிகவும் டென்ஷன் ஆன அவன்.. சற்று முயன்று, என்னால் முடியும் என்று உருபோடத் துவங்கிஅதை ஜபமாகவே ஜபித்தான். பின்பு நீண்ட மூச்சுகள் எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டப் பிறகே சற்றுத் தெளிந்தான்.      

சற்று டென்ஷனாக இருந்த போதும்.. சில கட்டங்கள் கொண்ட நேர்முகத்தேர்வை சிறப்பாகவே செய்தான் சரவணன்.  

இன்டர்வியூ முடிந்ததும் வீட்டிற்கு போக அவசரப்படவில்லை சரவணன்.  எத்தனை நாட்கள் ஆனாலும்.. ரிசல்ட் தெரிந்து கொண்டு தான் வீட்டிற்கு போவது.. என்று முடிவெடுத்து ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி விட்டான்.

பின்பு ரிசல்ட் வரும்வரை டெல்லியின் தெருக்களில் சுற்றினான். அங்கிருந்த சுற்றுலாத்தளங்களுக்கு சென்றான். இங்கே ராதிகா எங்கே அவனை இன்னும் காணோம் என்று கவலைப்பட துவங்கினாள். அவனை விட்டுப் பிரிந்து இருப்பது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தாங்கமாட்டாமல், “எப்போ வருவீங்க”, என்று ராதிகா அவனிடம் கேட்டாள்.

ராதிகா போன் செய்த போது கூட.. “இங்க என் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. கொஞ்சம் தங்கி வர்றேன்”, என்று சமாளித்தான். அப்பா அம்மாவிடம் கூட அதையே கூறினான்.     

இறுதியில் செலக்ட் ஆகிவிட்டான். அவனுடைய சிறுவயது முதல்.. அவன் கண்ட கனவான போலீஸ் உத்தியோகம் நிறைவேறியது. ஐ. பி. எஸ். காடரில். பதினான்காவது இடத்தில் இருந்தான். வான்தொட்ட சந்தோஷத்தில் இருந்தான் சரவணன். வீட்டிற்கு போன் செய்யலாம் என்று நினைத்தவன்.. இறுதியில் நேரில் போய் சொல்லிக்கொள்ளலாம்.. என்று அங்கிருந்தே விமானம் மூலம் ஊர் திரும்பினான். 

இனி அதன் பின்னர் அவன் மிசெளரியிலும், ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அகாடமியில் ஒரு வருட ட்ரைனிங் போகவேண்டி இருந்தது. ட்ரைனிங் முடிந்த பிறகே எங்கே வேலை என்று தெரியும். ட்ரைனிங்கில் சிறப்பாக செய்துவிட்டால்.. அவன் போஸ்டிங் தமிழகத்திலேயே கூட கிடைக்கும்.

ஒரு வருட ட்ரைனிங். ராதிகா தன்னை பிரிந்து இருக்க வேண்டுமே என்று தோன்றியது. பேசாமல் வேலை கிடைத்தப் பிறகே  திருமணம் செய்திருக்கலாமோ.. என்று இப்பொழுது தோன்றியது. ஐ. பி. எஸ். தேர்வாகியிருந்தது மிகுந்த சந்தோஷம் இருந்தாலும்.. அவளை தனியாக விட்டு இருப்பதற்கு  அவள் சம்மதிக்க வேண்டுமே.. என்ற எண்ண அலைகளும் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது.

இப்பொழுது மனம் முழுவதும் ராதிகா மேலேயே இருந்தது. எப்படி தன்னை விட்டு அவள் பிரிந்து இருப்பாள்.. இருக்க வேண்டுமே என்று மனம் முழுவதும்.. அதையே யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான். யாரிடமும் வருகிறேன் என்று சொல்லாமல் சர்ப்ரைஸ்ஸாக பயணித்தான்.

அதிகாலை ஐந்து மணி அவன் வந்த போது. அவன் பெல் அழுத்த.. வந்து கதவை திறந்தது பூபதி பாண்டியன்.

இவனை பார்த்ததும், “சரவணா வந்துட்டியா?. என்ன ஆச்சு ரிசல்ட்?”, என்றார் வாஞ்சையாக.

“அப்பா நான் இனிமே சரவணன் இல்லை. இனிமே நான் சரவணப் பாண்டியன் ஐ. பி. எஸ்., என்றான். அந்த நேரத்தில் வீடு அவசரமாக.. ஆனால் சந்தோஷமாக விழித்தது.

“அண்ணா”, என்று ஓடி வந்து வாழ்த்துக்கள்.. என்று சொன்ன தங்கையைத் தூக்கி.. ஒரு சுற்று சுற்றி இறக்கி விட்டான்.

இறக்கி விடும்போதே.. கண்கள் அன்னையையும் மனைவியையும் தேடின. அன்னையும் மனைவியும் அவன் சந்தோஷத்தை பார்த்து ரசித்தவாறே நின்றிருந்தனர். ராதிகாவை பார்த்து யாரும் அறியாமல் கண்சிமிட்டியவன்.. தன் அன்னையை நோக்கி சென்று தன் வெற்றியை பகிர்ந்து கொண்டான்.

அப்படியே அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து.. அவன் என்னென்ன நடந்தது என்று அன்னையிடமும் தந்தையிடமும் சொல்லத் துவங்க.. ராதிகா அவன் பசியோடு இருப்பான் என்று அவசரமாக உள்ளே சென்று காபி கலந்து எடுத்து வந்தாள்.

சிரித்தபடியே அதை வாங்கியவன்.. அதன் பின்பும் மேலும் ஒரு அரை மணிநேரம் பேசிய பிறகே ரூமிற்கு வந்தான்.

“எங்கே இருந்தீங்க இத்தனை நாளா? போன்லையும் சரியா பேசலை, ஏன்?”, என்ற கேள்வியோடு ராதிகா ரூமிற்குள் நின்றிருந்தாள்.

“முதல்ல எனக்கு வாழ்த்து சொல்ல மாட்டியா?”

“நீங்க செலக்ட் ஆகிடுவீங்கன்னு எனக்கு தெரிஞ்ச விஷயம் தான். அதனால வாழ்த்து மெதுவா சொல்லலாம். முதல்ல நீங்க ஏன் என்னை தவிர்த்தீங்க..” என்று பேசிக்கொண்டே இருந்தவள் அப்படியே அழத்துவங்கினாள். இந்த மாதிரியான ஒரு செய்கையை சரவணன் எதிர்பார்க்கவேயில்லை.

பதறிய அவன். “ஏய்.. எதுக்குடி அழற?” என்று அவசரமாக அவளை அணைத்தவன் “சொல்லு! அழாத.”, என்று அவளை சமாதானப்படுத்த துவங்க.. அவன் கேட்க கேட்க அழுது கொண்டே இருந்தாள்.

அவளுக்கேத் தெரியவில்லை எதுக்கு அழுகிறாள் என்று. ஆனால் நிறைய அழுகை வந்தது. சரி அழட்டும் அவள் என்று விட்டுவிட்டான் சரவணன். சிறிது நேரம் அழுது முடித்த பிறகே நிமிர்ந்தாள்.

“எதுக்கு ராதிகா இப்படி அழுத..”,

“எனக்கு தெரியலை, உங்களை பார்த்ததும் அழுகை வந்துடிச்சி”,

“வீட்ல யாராவது ஏதாவது சொன்னாங்களா?”,

“அதெல்லாம் இல்லை”, என்று அவசரமாக மறுத்தாள்.

“பின்ன எதுக்குடி இப்படி தேம்பி தேம்பி அழுத..”,

“நீங்க இண்டர்வியூ முடிஞ்சும் வரலை. என்கூட சரியா பேசலை. அதான் பயந்துட்டேன்”, என்றாள் மனதை மறையாது.

“போடி லூசு! இதுல பயப்பட என்ன இருக்கு”, என்று அணைப்பை இறுக்கினான்.

“தெரியலை”, என்று தேம்பினாள்.

“இதுக்கே இப்படின்னா.. இன்னும், நான் ஒரு வருஷம் ட்ரைனிங் போகப்போறேனே.. அதுக்கு என்ன சொல்லுவ..”, என்றான்.

“என்ன.. ஒரு  வருஷமா?”, என்று வாயை பிளந்தாள் ராதிகா.

“ஒரு வருஷமா இல்லை. ஒரே வருஷம் தான். நிமிஷத்துல போயிடும்”, என்று அவளை சமாதானப்படுத்தினான்.

ராதிகா தேறியதாக தெரியவில்லை.

வெகு நேரம் அவளிடம் பேசி.. அவளை சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கிக் கொண்டிருந்தான். 

குளித்து முடித்து அவளை அழைத்துக்கொண்டு.. மாமனார் வீடு சென்றான் தான் தேர்வானத்தை சொல்ல. அங்கேயும் உற்சாகம் பற்றிக்கொண்டது. அங்கே வந்த பிறகு சற்று ராதிகா தெளிந்த மாதிரி இருந்தாள்.

ராதிகாவின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அளவிட முடியாதா சந்தோஷம்.  “நீங்க தான் அத்தை சந்தோஷப்படறீங்க. உங்க பொண்ணு பாருங்க முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கா.”, என்று தன் அத்தையிடம் போட்டுக்கொடுத்தான்.

“ஏன் ராதிகா”, என்று கற்பகம் பதட்டத்தோடு கேட்டார்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லைம்மா”, என்றாள். அவள் சொன்ன விதத்திலேயே சோர்வு கலந்திருந்தது. மகளின் மனவோட்டத்தை நிமிடத்தில் படித்த அவளின் அன்னை..

“அது ஒண்ணுமில்லைப்பா.. அவளுக்கு உங்களை விட்டு பிரிஞ்சிருக்கணும்னு கவலை”.

“ஒரு வருஷம் தானே அத்தை. நிமிஷத்துல பறந்துடும்”, என்றான்.

“புரிஞ்சுக்குவா”, என்று மகளை தாங்கி பேசினார்.. அவளின் அன்னை.

“கட்டாயம் புரிஞ்சே ஆகணும். இல்லைனா, நான் எப்படி அங்க நிம்மதியா இருப்பேன்”, என்றான் .

அவனின் நிம்மதி பாதிக்குமென்று உணர்ந்த ராதிகா.. “நான் இருந்துக்குவேன்”, என்று வாக்குறுதி கொடுத்தாள்.

அப்போது தான் சற்று நிம்மதி ஆகிற்று சரவணனுக்கு.

மாலையில் வேலைக்கு வந்த செல்வி.. “அய்யாக்கு வேலை கிடைச்சிடுச்சுத் தானே”, என்று குதுகலித்தாள்.

“எங்கய்யா.. இனிமே போலிஸா.. அக்கா?. எங்க வேலைக்கு போறாங்க.. எப்ப போறாங்க?”, என்று ஆயிரம் கேள்வி கேட்க..

“இன்னும் ஒரு வருஷம் பயிற்சி எடுக்கணும். அதுக்குப் பிறகு தான் வேலை”, என்று அவளுக்கு ராதிகா விளக்கி கொண்டிருக்கும் போது.. அங்கே வந்த அருள் “அதையெல்லாம் கேட்டு.. இவ என்னப் பண்ண போறா?”, என்றான்.

மதியம் தான், தன் அண்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருந்தான்.  வெகு நேரமாக ராதிகாவிடம்.. செல்வி வளைத்து வளைத்து.. வேலையைப் பற்றி கேள்வி கேட்பதைப் பார்த்தவுடனே.. அவனுக்குப் பொறுக்க முடியவில்லை. நடுவில் புகுந்து விட்டான்.

“ஏன்.. அருள் கேட்டா என்ன?”, என்று அவளுக்கு வக்காலத்து வாங்கி ராதிகா வர..

“இவ கேட்டு என்னப் பண்ண போறா?”, என்று மறுபடியும் கேட்டான் அருள்.

செல்வியின் முகம் சுருங்கி விட்டது. மனதிற்குள்ளேயே, “நானும் போலீஸ் ஆகப்போறேண்டா. அதனால தெரிஞ்சுக்கறேன்..” என்று நினைத்துக்கொண்டவள்.. அதை வெளியில் சொல்லவில்லை. அவன் எள்ளி நகையாடுவான் என்று தெரியும்.   

அதற்குள் கோதை, ராதிகாவை அழைக்க.. ராதிகா உள்ளே சென்றாள்.

அவனுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்.. என்ற உந்துதலில் யாருமில்லாததால் தைரியமாக அருளைப் பார்த்து செல்வி.. “நான் கேட்டா என்ன? கேட்க கூடாதா?”, என்றாள் தைரியமாக.

“என்னடி எதிர்த்து பேசற..” என்றான் காட்டமாக.. அவள் தைரியத்தை பார்த்து.

“நீங்க எப்போ பார்த்தாலும் என் விஷயத்துல தலையிடறீங்க.. நல்லா இல்லை”, என்றாள் தைரியமாக.

வெகு நாளாக மனதில் நினைத்து இருந்தது.. வெளியில் வந்துவிட்டது.

“ஏய், என்னடி.. பேச்சு நீளுது. நீயெல்லாம் இவ்வளவு பேசற. வந்தம்மா.. வேலையைப் பார்த்தமா.. போனமான்னு இருக்கணும்.”, என்று அவன் மிரட்டலாக சொல்லிக்கொண்டிருக்க.. அதற்குள் ராதிகா வந்துவிட்டாள்.

ராதிகா வந்தவுடன், “இந்தப் புள்ள நிறைய பேசுது அண்ணி, நல்லாயில்லை. சொல்லி வைங்க”, என்று அவளிடமே புகார் வாசித்தான்.

“ஏன் அக்கா? நான் கேள்வி கேட்கக்கூடாதான்னு கேட்டேன், அக்கா”, என்றாள் விளக்கமளித்தாள்.

“ரெண்டு பேரும் இது என்ன தர்க்கம்..” என்று அதட்டிய ராதிகா..

“நீ உள்ள போ அருள்.” என்று அவனிடம் சொன்னாள்.

“நீங்க சொல்றீங்கன்னு போறேன்.. அண்ணி. இல்லை இவளை..” என்று இழுக்க..

“என்ன பண்ணிடுவாய்..” என்ற அலட்சியப் பார்வை செல்வியினடத்தில் இருந்து வந்தது.. அருளை நோக்கி.

“என்ன திமிரு இவளுக்கு.” என்று மனதிற்குள் நினைத்தவன்.. அப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாமல், அவளைப் பார்த்து முறைத்த படியே சென்றான்.

“என்ன செல்வி நீ.. இந்த வாயடிக்கற. தப்பு.” என்று ராதிகா அவளையும் கடிந்தாள்.

“இனிமே பேசலை அக்கா”, என்று உடனே தழைந்து வந்தாள் செல்வி. ஆனால் விட்டேனா என்று அதன் பிறகும்.. சரவணனின் வேலை விவரங்களை கேட்டே சென்றாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அருள்.. செல்வி போனபிறகு ராதிகாவிடம் வந்து, “இந்த வேலைக்காரங்களுக்கு எல்லாம் எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க அண்ணி. அவங்களை எல்லாம் தள்ளியே நிறுத்தணும்.” என்றான்.

“சின்ன பொண்ணு.. கேட்டா சொன்னேன். அது ஒரு தப்பா?. விடு அருள், இது ரொம்ப சின்ன விஷயம்”, என்று சமாதானப்படுத்தினாள்.

“என்னவோ போங்க! அந்த பொண்ணைப் பார்த்தாலே.. எனக்கு எரிச்சலா வருது”, என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான்.

இரவில் சரவணனிடம் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தாள் ராதிகா. “இந்த அருள் இன்னைக்கு செல்வியை.”, என்று ஆரம்பித்தவள்.. நடந்ததனைத்தையும் சொன்னாள்.

“அது ஒண்ணுமில்லை ராதிகா. அவங்க பார்வையே அப்படிதான். வேலை செய்யறவங்கன்னா அவ்வளவு இளப்பம். அவங்களும் மனுஷங்க தான்னு இவங்களுக்கெல்லாம்  புரியறதேயில்லை. எப்பவும் அவன் அப்படிதான். அவன் மட்டும் இல்லை.. எழிலரசி கூட அப்படிதான்.”

“இங்க வீட்ல.. அப்பா இப்படி எதுவும் பண்ணமாட்டாங்க. ஆனா யாராவது பண்ணினா கண்டுக்க மாட்டாங்க. அம்மா சில சமயம் ரொம்ப கனிவா நடந்துப்பாங்க. சில சமயம் ரொம்ப கடினமா நடந்துப்பாங்க. எப்ப என்ன பண்ணுவாங்கனேத் தெரியாது.’’ என்றான் பெருமூச்சை வெளியேற்றியபடி.

“இந்த ஏற்றத்தாழ்வுகளை.. நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. நீயும் என்னை மாதிரியே எல்லார்கிட்டயும் சகஜமா நடந்துக்கற.. அதுவரைக்கும் பரவாயில்லை. நமக்கு நல்லா ஒத்துப்போகுது.” என்று சந்தோஷப்பட்டான்.

“எல்லாரும் மனுஷங்க தான். அதை எப்போ தான் இந்த அருள் புரிஞ்சிக்குவானோ தெரியலை. எப்பவுமே வேலை  செய்யறவங்கன்னா.. அவன் அப்படி தான் நடந்துக்கறான். நானும் பல தடவை சொல்லிட்டேன். காலம் தான் அவனை திருத்தணும்”.

“இந்த ஒரு பிரச்சினை மட்டும் இல்லாம இருந்தா.. அருள் மாதிரி நல்ல பையனை பார்க்க முடியாது.” என்று இவ்வளவு, தன் தம்பியை பற்றி குறை சொன்னவன்.. நிறை சொல்லவும் அதேசமயம் தயங்கவில்லை.

மறுநாள் இவர்கள் கண்விழிக்கும்போதே.. அருள் கிளம்பியிருந்தான்.

“அம்மா, அருள் எங்கே?”,

“அவன் அஞ்சு மணிக்கே கிளம்பிட்டான் சரவணா. உன்கிட்டையும் ராதிகாகிட்டயும் சொல்லிட சொன்னான். அவனுக்கு நாளைல இருந்து செமஸ்டர் ஆரம்பிக்குது. உனக்கு தெரியுமில்ல.. அதான் சீக்கிரம் கிளம்பிட்டான். ஏன் என்ன விஷயம்?”.

“விஷயமெல்லாம் எதுவும் இல்லைம்மா. காலைல எங்கடா காணம்னு கேட்டேன்”, என்று பேச்சை முடித்தான் சரவணன்.  

அடுத்த முறை வரும்போது.. கட்டாயம் அவனிடம் இதைப் பற்றி பேசவேண்டும் என்று நினைத்தான் சரவணன்.

அதற்குள் அவனுக்கு ட்ரைனிங் கால் ஃபர் வந்திருந்தது. அது வந்ததிலிருந்து.. ராதிகாவின் முகத்தில் இருந்த உற்சாகம் அப்படியே குறைந்து விட்டது. அவனை விட்டு பிரிய வேண்டும் என்ற எண்ணத்தினால்.

“ஒரு வருஷம் தான் ராதிகா. சீக்கிரம் ஓடிடும். அதுவரைக்கும் நீ ஏதாவது படிக்க சேர்றையா?. நான் சேர்த்துவிடட்டா?”, என்றான்.

“அம்மாடியோ.. படிப்பா?”, என்றலறினாள் ராதிகா.

“எனக்கும் அதுக்கும் கொஞ்சம் தூரம். அதெல்லாம் வேண்டாமே”, என்றாள் பரிதாபமாக.

“எப்படிடி.. என் பொண்டாட்டியா இருந்துட்டு.. படிப்பைப் பார்த்து பயப்படற”, என்று சிரித்தான்.

“உங்களை கூட தான் பார்த்துப் பயந்துட்டு இருந்தேன். இப்ப எனக்கு ஒரு பயமும் இல்லையே..”,

அதையும் கேட்டு சிரித்தான்.

“நானே நீங்க ஊருக்கு போறீங்கன்னு வருத்தத்துல இருக்கேன். நீங்க சிரிக்கறிங்களா?”, என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்தாள் ராதிகா.    

அதை பார்த்தவன். “இன்னும் ரெண்டு நாள்ல.. நான் கிளம்பனும் ராதிகா. நீ இன்னும் இப்படியே பேசிட்டு இருக்க”, என்றான் சலிப்பாக.

“கிளம்புங்க”, என்றாள்.

“இப்படி நீ முகத்தை தூக்கி வச்சிருந்தா, நான் எப்படி சந்தோஷமா கிளம்பறது?”

“அதுக்குன்னு வருத்தம் இல்லாத மாதிரி காட்ட முடியுமா.? நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க. நான் தேறிக்குவேன்.” என்றாள் அவனை சமாதானப்படுத்தும் விதமாக.

அவன் முகம் தெளியாததை கண்டு, வேறு சில வகையிலும் சமாதான முயற்சியில் இறங்க.. அங்கே ஒரு இனிய தாம்பத்தியம் உதையமாகியது.

அது கொடுத்த இனிமையான நினைவுகளுடன்.. வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு.. பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கி.. எழிலரசியை கொஞ்சி..  ராதிகாவைத் தேற்றி.. செல்வியிடமும், “உங்க அக்காவைப் பார்த்துக்கோ..” என்று பெரிய மனுஷியாக.. அவளுக்கும் ஒரு பொறுப்பையும் கொடுத்து.. மிசெளரியில் தனக்காக காத்துக்கொண்டிருந்த கடுமையான பயிற்சி நோக்கிப் பயணப்பட்டான் சரவண பாண்டியன்.

தன் ஐயா, தனக்கிட்ட கடமையை.. தலையாயதாக எண்ணிக்கொண்டாள் அந்த சிறுமி.

Advertisement