Advertisement

அத்தியாயம் மூன்று :

அன்று தான், தன் தந்தை இறந்த பிறகு செல்வி பெரிய வீட்டிற்கு வேலைக்கு வருகிறாள். வீடே பரபரப்பாக இருந்தது போல தோற்றமளித்தது. இவளை பார்த்ததும் எழிலரசி. “அம்மாடி வந்துட்டியா, இவ்வளவு நாளா வர்றதுக்கு”, என்று கடிந்தாள்.

“இல்லைக்கா வரக்கூடாது. தீட்டு”, என்றாள். தன் தந்தை இறந்ததிலிருந்து வெளியே வந்திருந்தாள் செல்வி. தந்தையோடு அவ்வளவாக ஒட்டுதல் இல்லாததால்.. சீக்கிரமே மனம் தேறிக்கொண்டாள் செல்வி.  

“என்னவோ சொல்லு. போ போய் கூட்டு”, என்று வேலையை ஏவினாள் எழிலரசி.

செல்வி எப்பொழுதும் போல மெளனமாக எல்லா வேலையும் பார்க்க.. அப்போது தான் பார்த்தாள் எழிலரசியின் சின்ன அண்ணனும் வந்திருப்பதை.  “எல்லாரும் இருக்காங்க. வீட்ல ஏதாவது விசேஷமா”, என்று தோன்றியது.

யோசித்துக்கொண்டே கூட்டுவதை விட்டு அப்படியே நின்று விட்டாள். அந்த பக்கமாக எதற்கோ வந்த அருள்.. அவள் அப்படியே நிற்பதைப் பார்த்ததும்..  போகிற போக்கில், “ஏய், என்ன வேடிக்கை. ஒழுங்கா கூட்டு”, என்று சொல்லிவிட்டு போனான். 

“இவனுக்கு என்ன.. இவன் வேலையை பார்த்துட்டுப் போக வேண்டியது தானே”, என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டினாள் செல்வி. சரவணனிடத்தில் மட்டும் தான் பயம், மரியாதை எல்லாம் செல்விக்கு. வேறு யாரிடத்திலும் கிடையாது. 

அவளுக்கு விஷயம் தெரியவில்லை என்றால்.. மண்டையே வெடித்துவிடும் போல  இருந்தது. வேக வேகமாக கூட்டி முடித்து, மற்ற வேலைகளையும் செய்து.. எழிலரசியிடம் வந்து நின்றாள்.

“வீட்ல ஏதாவது விஷேசமா அக்கா”, என்றாள்.

“தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற?”, என்றாள் எழிலரசி பட்டென்று. அவள் எப்போதும் அப்படித்தான். எதிரே இருப்பவர்களின் மனம் புண்படுமா.. இல்லையா, எதுவும் பார்க்க மாட்டாள்.. பட்டென்று பேசிவிடுவாள்.

இப்படி பேசக்கூடாது என்று அவள் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்று.. யார் கூறியும் அவள் இயல்பை மாற்றிக் கொள்ளவேயில்லை.

அவள் அப்படி கூறியதும் செல்வியின் முகம் சுருங்கிவிட்டது. “பெரிய இவ, இவ. பதில் சொன்னா என்ன குறைஞ்சா போய்டுவா..” என்று மனதினில் நினைக்க முகம் சற்று அதை காட்டியது.

“ஏய் என்னடி, முறைக்கறவ..”, என்று எழிலரசி அதற்கும் சத்தம் போட 

“வீட்ல ஏதாவது விஷேசமா?”, என்றாள் மறுபடியும். பிடிவாதமாக பதிலை தெரிந்து கொண்டு தான் ஆவேன் என்று.

“என்னடி உன்னோட ஒரே ரோதனை. ஆமாம்டி விஷேசம் தான்”,

“என்ன விஷேசம்”..

“தெரிஞ்சிக்கலைனா விடமாட்டியே நீ”, என்று சலித்தபடியே “எங்க சரவணன் அண்ணாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் நடக்க போகுது”, என்றாள் தெளிவாக.

“என்ன ஐயாவுக்கு நிச்சயமா”, என்றாள் முகம் மலர்ந்து செல்வி. உடனே மறுபடியும். “பொண்ணு யாருக்கா”, என்றாள்.

“கேட்டு நீ என்னப் பண்ண போற..”, என்றாள் மறுபடியும் எழிலரசி.

“ஐயே தெரிஞ்சிக்கறேன்.. சொல்லுங்கக்கா”, என்றாள் பிடிவாதமாக செல்வி.

“எங்க அத்தை பொண்ணு ராதிகா தான்”, என்றாள் எழிலரசி.

“அந்தக்காவா! எம்புட்டு அழகா இருப்பாங்க. அவங்க தானா?”, என்றாள் சந்தோஷத்துடன் செல்வி. பின்பு தான் எழிலரசியை விட்டாள். விட்டவள் நேரே சென்ற இடம் கோதை.

“அம்மா, நம்ம சின்ன ஐய்யாக்கு நிச்சயமா?. எனக்கென்ன வேலை?”, என்றாள்.

“உனக்கொண்ணும் வேலையில்லை. நாளைக்கு பள்ளிகூடத்துக்கு லீவு போட்டுட்டு வந்துடு. உனக்கு வேலை இருக்கும். சரியா?” என்றார் கோதை.

“சரிம்மா”, என்று சந்தோஷமாக தலையாட்டி சென்றாள் செல்வி.  மீதம் குடுத்த சாதத்தை எல்லாம் எடுத்துகொண்டு சிட்டாக வீட்டிற்கு ஓடினாள், தன் பாட்டியிடம் விஷயத்தை பகிர்ந்து கொள்ள.  

“ஆயா, நாளைக்கு பெரிய வீட்ல சின்ன ஐய்யாக்கு நிச்சயம்மா. என்னை பெரிய வீட்டம்மா ஸ்கூலுக்கு போகாம வர சொல்லியிருக்காங்க. நான் போகப் போறேன்”, என்று தகவல் தெரிவித்தாள்.

“தாராளமா போய்ட்டு வா கண்ணு”, என்றார் அவள் ஆயா.

“நான் என்ன உடுப்பு போட்டுக்கட்டும் போன தடவை எழிலரசி அக்கா சின்னதாப் போச்சுன்னு குடுத்ததே அந்த பாவாடை சட்டையை போட்டுக்கட்டும்மா?”, என்றாள்.

“போட்டுக்க கண்ணு”, என்றார் அவளின் ஆயா அவளை ஒத்தே.

அடுத்த நாள் சந்தோஷமாக கிளம்பினாள். காலை உணவுக்கு ஏற்பாடு செய்திருக்க.. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க பின்கட்டில், சமையல் செய்கிறவர்கள்  கேட்கும்  பொருளையெல்லாம் எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அன்று நல்ல பாவாடை சட்டை போட்டுக்கொண்டிருந்ததால் கண்ணுக்கு லட்சணமாக இருந்தாள் செல்வி. மாநிறமாக இருந்தாலும் செல்விக்கு நல்ல களையான முகம். அவளுடைய ஏழ்மை, அவளுடைய உடைகள் தான் அவளை கீழிறக்கி காட்டும். மற்றபடி அவள் அழகான சிறு பெண்ணே. இன்று சற்று நல்ல உடுப்பு போட்டுகொண்டிருந்ததால் நன்றாக இருந்தாள்.

சிட்டு போல சுழன்று சுழன்று, சொல்லும் வேலைகளை நிமிடத்தில் முடித்தாள். சமையல் செய்கிறவர்கள் கூட “உன்னை மாதிரி எங்களுக்கு வேலை செய்ய யாராவது இருந்தா, எங்க வேலையெல்லாம் சுளுவா முடியும். எங்களோட வேலைக்கு வந்துடுறியா”, என்றனர்.

“நான் படிச்சிட்டு இருக்கேன். படிச்சு பெரிய வேலைக்கு போவேன். இன்னைக்கு எங்கய்யா கல்யாணம்னு லீவு போட்டிருக்கேன்”, என்றாள்.

“என்ன, நீ பெரிய வேலைக்கு போகப்போறியா?”, என்று சிரித்த அந்த சமையல் செய்யும் அம்மா. “என்ன வேலைக்கு போவ?”, என்றார்.

“எனக்கதெல்லாம் தெரியாது. எங்கய்யா மாதிரி பெரிய வேலைக்கு போவேன்”, என்றாள் கல்மிஷமில்லாமல். ஆனால் சொல்லும் போது நிறைய உறுதி தெரிந்தது.

“உங்கய்யா போலீஸ் ஆகப்போராறாமில்ல புள்ள.”, என்றார் பதிலுக்கு அந்த சமையல் செய்யும் அம்மா.

“அப்போ நானும் அது தான் ஆவேன்.” என்றாள் உறுதி நிறைந்த குரலில்.

“ஆகுடியம்மா ஆகு”, என்று அந்த பெரியவள் அவளை வாழ்த்தினார்.  அவருடைய ஆசீர்வாததின் சந்தோஷம் அவள் முகத்தில் பளிச்சிட்டது. 

எல்லாரும் நிச்சயம் செய்து வர ராதிகாவின் ஊருக்கு கிளம்பினர். இரண்டு காரும், ஒரு பஸ்சும் கிளம்பியது. வீட்டை பார்த்துக்கொள்ள அருளையும், இரண்டு வேலைக்காரர்களையும், சமையல் செய்பவர்களையும், செல்வியையும் விட்டுக் கிளம்பினர்.

இரவு விருந்து தயாரிக்க வேண்டி இருந்ததால்.. சமையல் செய்பவர்களை விட்டு அவர்களுக்கு ஒத்தாசை செய்ய செல்வியையும் விட்டுச் சென்றனர்.

அருளோடு அவன் நண்பர்கள் இரண்டு மூன்று பேர் இருந்தனர். நிச்சயம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கிளம்பி ஒரு ஒருமணிநேரத்திற்கு பிறகு, அருள் அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் காபி கேட்டான்.

சமையல் செய்யும் அந்த அம்மா காபியை தயாரித்து செல்வியிடம் கொடுத்தனுப்பினார்.

செல்வி எடுத்துகொண்டு வந்து கொடுத்தாள். “யாருடா இது”, என்றான் அருளிடம் ஒருவன் செல்வி இருக்கும் போதே.

“வீட்ல வேலை செய்யற பொண்ணுடா”, என்றான் அலட்சியமாக அருள்.

“என்னடா.. வீட்ல வேலை செய்யற பொண்ணே, இவ்வளவு ஷோக்கா இருக்கா”, என்றான் கிண்டலாக.

கேட்டுகொண்டிருந்த செல்விக்கு உள்ளம் கொதிக்க ஆரம்பித்தது.

அதற்கு அருள் அமைதியாக இருந்திருந்தாலாவது பரவாயில்லை. ஆனால் அவன் கெட்ட  நேரம் அவனை பேச வைத்தது. “ஏண்டா டேய்.. நீ பொண்ணையே பார்த்ததில்லையா?. இதையெல்லாம் போய் ஷோக்கா இருக்கான்னு சொல்ற”, என்று அவன் மிகுந்த அலட்சியத்துடன் சொல்ல

அவன் சொன்னவுடனே, பக்கத்தில் இருந்த நண்பர்கள் எல்லாம் பெருங்குரலெடுத்து சிரிக்க.. செல்விக்கு மிகுந்த அவமானமாகிப்போனது.

அவர்களுக்கு ஏதாவது பெரிதாக பதில் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. திமிர்.. திமிர் உடம்பு முழுக்க.. இவன்களுக்கு திமிர் என்று மனது ஓலமிட்டது. இருந்தாலும் தான் சிறு பெண். அவர்களிடம் இப்போது என்ன சொன்னாலும் மேலே மேலே பேசி.. தன் மனதை தான் காயப்படுத்த முற்படுவர் என்றறிந்து அமைதியாக திரும்பிவிட்டாள்.

கிண்டலாக சொல்லி, செல்வியின் முகத்தை பார்த்தான் அருள். அவள் முகத்தில் அடக்கப்பட்ட வேதனை நன்றாக தெரிந்தது. பார்த்தவன் இன்னும் அலட்சியமாக தோளை குலுக்கினான்.  

அழுகை கண்ணை முட்டியது செல்விக்கு. அடக்கும் வழி தெரியாமல் அது கண்ணை விட்டு.. சற்று கீழேயும் விழுந்தது. சமையல் அம்மா பார்த்துவிட்டு. “என்ன பொண்ணு அழற, என்னாச்சு?”, என்றார் சற்றுப் பதறி.

“ஒண்ணுமில்லைம்மா.. கால்ல இடுச்சிக்கிட்டேன்”, என்றாள் அழுகையினோடே.

“என்ன புள்ள நீ உங்கய்யா மாதிரி போலீஸ் ஆகப்போறேன்னு சொல்ற.. இப்படி பொசுக்குன்னு அழற. தைரியமா இருக்க வேண்டாமா?”, என்றார்.

அவரின் வார்த்தைகள் அவளுக்கு சற்று ஆறுதலை கொடுத்தன.

“ஆமா, நான் தைரியமா இருக்கணுமில்ல..”, என்று அவளுக்கு, அவளே சொல்லிக் கொண்டாள்.  “நான் போலீஸ் ஆனதுக்கு அப்புறம், உங்களை மாதிரி ஆளுங்களை என்ன பண்றேன் பாருங்கடா”, என்று மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டாள்.

சற்று அவளின் கோபம், ஆத்திரம், இயலாமை, எல்லாம் மட்டுப்பட்டது. மனதை சற்றுத் தேற்றி கொண்டாள். ஆனால் அப்போதிலிருந்து அருள் மேல் இனம் தெரியாத கோபம் பெருக ஆரம்பித்தது.

திடீரென்று போய்.. அங்கே இருந்த நிலைக்கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள் அந்த சிறு பெண். “என் மூஞ்சி நல்லாதானே இருக்கு. அப்புறம் ஏன் அவன் பொண்ணுங்களையே முன்ன பின்ன பார்ததில்லையான்ற மாதிரி சொன்னான்..”, என்று அவளுக்கு அவளே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

விடை தான் தெரியவில்லை.

அங்கே நிச்சயம் நன்கு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. எந்த சண்டை சச்சரவுமில்லாமல்.. நொட்டை நொள்ளை சொல்லாமல்.. மிக நன்றாக நடந்தது. உறவுகள் கூடும் போது இந்த மாதிரி எல்லாம் நடப்பது மிக சகஜமே. அந்த மாதிரி எதுவும் நடக்காமல்.. பூபதி பாண்டியன்  தன் மகனின் நிச்சயத்தை சிறப்பாக நடத்தினார்.

ராதிகாவிற்கு தான் மிகுந்த பதட்டமாக இருந்தது. அவளை அலங்கரித்து.. எல்லோர் முன்னிலையிலும் கூட்டி வந்து நமஸ்காரம் செய்ய சொல்ல.. அவளுக்கு கைகள் ஏனோ அவளையறியாமல் நடுங்கியது.

அவளோடு இருந்த எழிலரசி, “எதுக்கு அண்ணி பதட்டம், ஒண்ணுமில்லை”, என்றாள் பெரிய மனுஷி போல. சிரிக்க முயன்றாள்.. முடியவில்லை. எல்லோரையும் நமஸ்கரித்து ஓரிடத்தில் அமர வைக்கப்பட.. அவள் பதட்டம் மட்டும் குறையவேயில்லை.

இரண்டு கண்கள் அதை பார்த்துக்கொண்டு தான் இருந்தன. அந்த கண்களுக்கு சொந்தக்காரன் சரவணப் பாண்டியன்.

“இதென்னடா.. இவ இந்த நடுக்கம் நடுங்கறா”, என்று அவளை பார்த்த மாத்திரத்தில் கண்டு பிடித்தான். போலீஸ்காரன் மனைவியா.. லட்சணமா, தைரியமா இருக்க வேண்டாம். இவளை என்னப் பண்ண..”, என்று மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டான்.

வெளியில் இந்த வார்த்தைகளை பேசியிருந்தாலே.. பதட்டத்தில் அவள் காதுகளுக்கு கேட்டிருக்காது. இவன் மனதிற்குள் பேசுவதை அவள் எப்படி உணர்வாள். ஆனால் அவளுக்கு எப்படியாவது உணர்த்திவிடும் நோக்கத்தில்.. அவளையே கண் எடுக்காது பார்த்திருந்தான். 

மெதுவாக இமைதூக்கி எதிரே இருந்தவர்களை ராதிகா பார்க்க.. அங்கே ஓரிடத்தில் சரவணனும் இருந்தான். இவளை பார்த்து புன்னகைக்க “நம்மை பார்த்தா அவன் புன்னகைக்கிறான்”, என்று ராதிகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும், தலையை மறுபடியும் பட்டென்று குனிந்து கொண்டாள்.   

அவ்வப்போது ராதிகா தலையை தூக்கி பார்ப்பதும்.. அவள் பார்க்கும்போதெல்லாம் சரவணன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிய “என்ன இவங்க இப்படி பார்க்கறாங்க. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..” என்று அவள் பதட்டம் குறைவதற்கு பதிலாக அதிகம் ஆகியது.

இதையெல்லாம் யோசித்தவள் பின்பு குனிந்த தலை நிமிரவேயில்லை. சிறிது நேரம் கழித்து அவளை உள்ளே அனுப்பி விட்டு நாள் குறித்து பத்திரிக்கை எழுதினர். திருமணத்திற்கு இன்னும் சரியாக நான்கு மாதங்கள் இருந்தன.

தனியாக பேசும் சந்தர்ப்பம் எதுவும் அமையவில்லை. ராதிகாவின் பார்வையும் அதன் பிறகு அவன் புறம் திரும்பவில்லை. ஒரு வழியாக நிச்சயம் முடிந்து வீடு திரும்பும் வேளையும் வந்தது.

இன்றைக்கு இவ்வளவு தான் போல.. என்று சரவணன் அவன் மனதை அவனே தேற்றிக்கொண்டு.. ஒரு வழியாக வீடு திரும்பினான்.

மறுபடியும் இங்கே இவர்கள் வீட்டிற்கு வந்து.. உறவினர்களுக்கு எல்லாம் இரவு விருந்து முடித்து.. எல்லாரும் கிளம்பி செல்ல பத்தரை மணியானது. அதுவரை செல்விக்கு வேலை இருந்தது.

அவள் ஆயா வந்து அவளுக்காக காத்து உட்கார்ந்திருந்தது. பிறகு அவர்களும் ஒரு ஓரமாக உண்டு கிளம்பினர்.

மறுநாள் செல்வி வேலைக்கு வந்த போது, வீட்டில் சரவண பாண்டியனும் இல்லை.. அருள் பாண்டியனும் இல்லை. எல்லாரும் அவரவர் படிப்பைப் பார்க்க கிளம்பியிருந்தனர்.

எழிலரசி மட்டுமே இருந்தாள். அவள் அண்ணன் இல்லாத தைரியத்தில் இஷ்டத்திற்கு செல்விக்கு வேலை வைத்து தான் அனுப்பினாள். நாட்கள் வேகமாக ஓடின.

ஒரு போன் செய்தாவது ராதிகாவிடம் பேசவேண்டும் என்று சரவணன் மனது ஆசைப்படும். ஆனால் அது அவளின் வீட்டினருக்கு புரிந்தால் தானே. ஒரு முறை ராதிகாவின் வீட்டிற்கு அழைத்திருந்தான் தான், ஆனால் அவன் மாமாவே பேசி வைத்துவிட்டார்.

அவருக்கு புரிந்தது அவன் ராதிகாவிடம் பேச தான் அழைத்திருக்கிறான் என்று.. ஆனால் இந்த பெண் பேசினால் தானே. அவளிடம் தொலைபேசியை கொடுக்க பலமுறை முயன்றும்.. அவள் வாங்கவே இல்லை.

அதை சரவணனிடம் சொல்ல முடியாதவராக.. அவரே பேசி போனை வைத்துவிட்டார். அன்று நொந்துகொண்டவன் தான் சரவணன்.. பிறகு அவன் கூப்பிடவேயில்லை.

திருமணம் நடக்க இடைவெளி இருந்த நான்கு மாதத்தில், மூன்றாம் மாதத்தில் அவன் பரீட்சையும் வந்தது. நன்றாகவே செய்தான். அவனுக்கு நம்பிக்கை இருந்தது. ஐ.பி.எஸ் கேடரில் தேர்வாகிவிடுவோம் என்று. அவனுடைய இரண்டு வருட இடைவிடாத உழைப்பு அதில் இருந்தது. போலிஸ் ஆபிசர் ஆகவேண்டும் என்பது அவன் வெறி என்று கூட சொல்லலாம். ஒரு முறை எழுதி தேர்வாகவில்லை. இது இரண்டாம் முறை. அவனுக்கு நிச்சயம் நம்பிக்கை இருந்தது.

பரீட்ச்சை எழுதி முடித்த கையோடு வீட்டிற்கு வந்துவிட்டான். திருமண வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தன. பத்திரிக்கை விநியோகம் கூட ஆரம்பித்திருந்தனர். ரிசல்ட் வந்தால், பிறகு இன்டர்வியூ.. பிறகு ட்ரைனிங் என்று அவனுக்குத் தெரியும். திருமணமானாலும்.. புது மனைவியை பிரிந்திருக்கதான் வேண்டும்.. என்று அவனுக்குத் தெரியும். ஆனால் ராதிகாவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

மீண்டும் அவளோடு தொலைபேசியிலாவது பேசுவோம் என்ற ஆர்வம் கிளர்ந்தெழ… அவள் வீட்டிற்கு போனை அடித்தான். இந்த முறையும் அவன் மாமாவே எடுக்க.. “என்ன மாமா உங்களை விட்டா யாரும் வீட்ல போனே எடுக்க மாட்டாங்களா?”, என்றான் கடுப்பாகவே.

“யார் கிட்ட நீங்க பேசணும் சொல்லுங்க.. அவங்களையே போன் எடுக்க வைக்கிறேன், மாப்பிள்ளை”, என்றார் அவன் மாமனார் அவனுக்குத் தக்கபடி.

அவரின் மரியாதை பன்மை எல்லாம் புதிதாக இருந்தது. எப்போதும் நீ, வா, போ என்று தான் பேசுவார். சிறுவயதில் இருந்து அது தான் பழக்கம். மாப்பிள்ளை என்ற அடைமொழியும் புதிது. அவனுக்கு என்னவோ ஒரு ஒட்டாத தன்மை போல தோன்றியது.

“என்ன மாமா நீங்க? என்னை சரவணான்னு கூப்பிடுங்க”, என்றான்.

“அது மரியாதையா இருக்காது, மாப்பிள்ளை”, என்று அவர் மறுத்தார்.

“யார்கிட்டயாவது சொல்லும் போது மாப்பிள்ளைன்னு சொல்லுங்க மாமா. கூப்பிடும்போது பேர் சொல்லியே சொல்லுங்க. புதுசா பேசறது.. நீங்க யாரோ மாதிரி தள்ளி நிறுத்துது.”   

“சரிங்க மாப் சரி சரவணா”, என்றார்.

“ராதிகா கிட்ட போனை குடுக்கறீங்களா. கொஞ்சம் அவளோட விவரம் எல்லாம் கேட்கணும்”, என்றான்.

“தோ குடுக்கறேனே”, என்று அவர் சொல்லும்போதே அங்கே வந்த கற்பகம்

“யாரு சரவணனா குடுங்க, நான் பேசறேன்..” என்று சொல்லி போனை வாங்கி. “என்ன சரவணா பரீட்சை எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?”,

“முடிஞ்சது அத்தை.”

“நல்லா இருக்கல்ல?”,

“நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க. சேகர், ராதிகா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்றான்.

“நீயே கேளு அவகிட்ட”, என்று இங்கிதம் தெரிந்தவராக ராதிகாவை அழைத்தார். “ராதிகா உனக்கு போன்.”

“எனக்கா? எனக்கு யாரு போன் பண்ணுவா?”, என்று அவள் கேட்டுக்கொண்டே வருவது சரவணன் காதில் நன்கு விழுந்தது.

பதில் பேசாமல் கற்பகம் போனை கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர. “யாரு”, என்றபடி போனை வாங்கி அங்கேயும் “யாரு”, என்றாள்.

“யாரா?. யாரா இருந்தா நீ பேசுவ..” என்றான் அதட்டலாக சரவணன்.

குரல் கேட்டதும்.. அவன் தான் என்று தெரிந்துவிட்டது. அப்படியே குரல் உள்ளே போய்.. அவள் அன்னையையும் தந்தையையும் தேட அந்த இடத்தில் ஒருவரும் இல்லை.

“எல்லாரும் எங்க போய் தொலைஞ்சாங்க”, என்று மனதிற்குள்ளேயே எரிந்து விழுந்தாள்.

“என்ன பதிலை காணோம். யாராயிருந்தா நீ பேசுவேன்னு கேட்டேன்”, என்றான் மறுபடியும் அதட்டலாக. இந்த அதிகாரமாக, அதட்டலாக பேசும் பாணியே ராதிகாவை சரவணனிடமிருந்து தள்ளி நிறுத்தியது. என்ன செய்வது சுட்டுப் போட்டாலும்.. கொஞ்சல் மொழிகள் சரவணனுக்கு வருமா என்பது சந்தேகமே.   

இந்த புறம்.. போனை வைத்துக்கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

“நான் யாருன்னாவது தெரியுதா..” என்றான்.

“தெரியும்”, என்பது போல தலையாட்டினாள். அவள் தலையாட்டுவது போனில் சரவணனுக்கு எப்படி தெரியும்.

“பதிலே பேசமாட்டியா நீ”, என்று மறுபடியும் ஒரு அதட்டல் போட.

“தலையாட்டினேன்”, என்றாள் வாயை திறந்து ரோஷமாக.

“அப்பாடா ஒரு வழியா பேசிட்டியா. இந்நேரம் பத்து வார்த்தை பேசியிருக்க வேண்டாமா. என்கிட்ட பேசறதுல உனக்கு என்ன தயக்கம்”, என்றான்.

“அது தயக்கமில்லை, பயம்”, என்று மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டாள்.

“கஷ்டப்பட்டு உங்கப்பாவை உங்கம்மாவை தொரத்தி விட்டுட்டு உன்கிட்ட பேசவந்திருக்கேன். ஏதாவது பேசு ராதிகா”, என்றான் சற்று கனிவாக.

அந்த குரல் சற்று தைரியத்தை கொடுக்க. “எப்படி பரீட்ச்சை எழுதுனீங்க”, என்றாள் வாயை திறந்து.

“நல்லா எழுதியிருக்கேன். பாஸ் பண்ணிடுவேன்னு நம்பறேன். எதுக்கும் சாமிகிட்ட நல்லா வேண்டிக்கோ.”

“என்னன்னு”, என்றாள் புரியாதவளாக.. 

“என்னன்னா? கிழிஞ்சது போ. எம் புருஷன் பெரிய போலிஸ் ஆபிசர் ஆகிடணும்னு வேண்டிக்கோ. என்ன புரிஞ்சுதா?” 

“சரி”, என்று வாயால் சொல்லாமல் தலையாட்டினாள்.

“என்ன தலையாட்டுறியா..” என்றான் அவளை உணர்ந்தவனாக.

“எப்படி கண்டுபிடிச்சீங்க”, என்றாள் ஆர்வமாக. 

“ம் என் போலிஸ் மூளையை வச்சு”, என்றான் நக்கலாக.

“நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா?”, என்றாள் சீரியசாக ராதிகா.

“ச்சே, ச்சே.. உன்னை போய் யாராவது கிண்டல் பண்ண முடியுமா..” என்று மனதிற்குள்ளேயே நொந்து கொண்டவன்.. “போலிஸ்காரன் பொண்டாட்டி ஆகப்போற, தைரியமா இருக்கணும்”, என்றான் அவளைப்பற்றித் தெரிந்தவனாக.

உடனேயே “மண்டையை மண்டைய ஆட்டாம.. வாயைத்திறந்து பதில் சொல்லு.. என்ன?”, என்றான் அதட்டலாக.

“சரி”, என்றாள்.

“உனக்குத் தெரியுமா? நான் பரிச்சை பாஸ் பண்ணிட்டா.. ஒரு வருஷம் ட்ரைனிங் போகவேண்டி இருக்கும். அதுக்கப்புறம் எங்க போஸ்டிங் போடறாங்களோ.. அங்க போகவேண்டி இருக்கும். எல்லாம் தெரியுமா?”, என்றான்.

“தெரியாது”,

“அப்போ, என்னைவிட்டுட்டு ஒரு வருஷம் இருக்கணும். உனக்குத் தெரியாதா?” என்றான்.

“ஹப்பாடா.. தொல்லை ஒருவருஷத்திற்கு இல்லையா..”, என்று மனதிற்குள்ளேயே சந்தோஷப்பட்டாள் அறியாமையால்.

இந்தப்புறம் பெருமூச்சு விட்டவன்.. “நீயென்ன பண்ற.. தினமும் சாயந்திரம்.. நான் நாலு மணிக்கு போன் செய்வேன். நீதான் எடுத்துப் பேசணும். யாராவது எடுத்தா.. அப்புறம் நான் உடனே அங்கேயே வந்திடுவேன். எப்படி வசதியோ செஞ்சிக்கோ”, என்றான்.

அவன் நேரில் வந்தால் “அம்மாடியோ வேணாம், வேணாம்.. போன்லயே இந்த மிரட்டு மிரட்டுறாங்க.”, மனதினில் உணர்ந்தவள்..“இல்லையில்லை.. நானே போன் எடுக்கறேன்”, என்றாள் பதட்டமாக.

அவளின் பதட்டத்தை உணர்ந்தவன்… “முதல்ல என்னைப் பார்த்து, இந்த மாதிரி பதட்டப் படறதை விடு. நான் என்ன புலியா? சிங்கமா? உன்னை கடிச்சு திங்கவா போறேன்?”.

“இல்லையில்லை, நான் பதட்டப்படலை”, என்றாள் பதட்டமாக.

“உன்னை திருத்த முடியாது”, என்று சொல்லி.. “இப்போ போனை வைக்கிறேன். நாளைக்கு கூப்பிடறேன்.. நீதான் எடுக்கணும்”, என்று சொல்லி போனை வைத்தான்.

“ஹப்படா”, என்று பெருமூச்சு விட்டவள் உடனேயே.. “அம்மா!!”, என்று கத்தினாள்.

அவள் கத்திய கத்தலில் ஓடி வந்த கற்பகம்.. “என்னடி”, என்று கேட்க..

“எதுக்கு மாமாவோட என்னைத் தனியா பேசவிட்டுட்டு போன?. எனக்கு அவரோட பேசறதுன்னா பயம்ன்னு தெரியாது..”

“போடி.. கூறுக்கெட்டவளே! இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சிட்டு.. இன்னும் பயமாம் பயம். நல்லா பொழைப்படி போ! போ! வேலையைப் பாரு”, என்று அதட்டி அவளை அனுப்பி வைத்தார். 

Advertisement