Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு :

அருளை, எலும்பு முறிவு சரி செய்ய.. ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் சரவணன் அனுமதித்தான்.

அவர்கள் அனுமதிக்கும் போது இரவு எட்டரை மணி. முன்பே டாக்டரிடம் சொல்லி, எல்லா ஏற்பாடும் செய்திருந்தான். அவர்கள் பேஷண்டைப் பார்த்த பிறகு தான்.. என்ன மேனேஜ் செய்ய போகிறோம், என்று சொல்வோம்..என்று சொல்லிவிட்டனர்.

செல்வி அருளின் அருகிலேயே தான் இருந்தாள். அருள் மருந்தின் வீரியத்தால்.. முழிப்பதும், உறங்குவதுமாக இருந்தான்.  அவளின் துணை.. அவனுக்கு பெருத்த நிம்மதியை கொடுத்தது.

அருளை பார்த்த பிறகு.. அப்படியே கட்டு போட்டு, ரெஸ்டில் இருப்பதை விட.. சர்ஜெரி செய்தால், அருள் சீக்கிரம் நடக்கலாம் என்றனர். ஏனென்றால் இரண்டு இடங்களில் இருப்பதால்.. கட்டு போட்டால், நடக்க வைப்பதற்கு மாதக்கணக்கில் ஆகும் என்றனர்.

சரவணன், செல்வியை பார்க்க.. “சர்ஜெரி பெஸ்ட்”, என்றாள். அவள் டாக்டருக்கு படிக்கிறாள்.. என்பதால் அவளின் யோசனையையே கேட்டான். அந்த இரவு நேரத்திலேயே.. அவசரமாக சர்ஜெரிக்கு ஏற்பாடு ஆனது.

அருளிடமும் சொன்னாள்.” ஆபரேஷன் செஞ்சா தான் சீக்கிரம் நடக்கலாம். அதனால, அதுவே சரின்னு சொல்லிட்டோம்” என்றாள்.

“ரொம்ப வலிக்குமோ?” என்றான்.

அவனுக்கு தைரியம் சொல்லும் அவசியத்தை உணர்ந்தவளாக.. “ரொம்ப இல்லை. ஆனா.. கொஞ்சம் வலிக்கும்.” என்றாள், அவனை சமாதானப்படுத்தும் பொருட்டு.

அவளின் மனம் மட்டும்.. அவளின் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம், ஆயிரம் வேண்டுதல்களை வைத்துக்கொண்டு இருந்தது.

“பிள்ளையாரப்பா.. அவருக்கு அதிகம் வலிக்ககூடாது. அவருக்கு சீக்கிரம் நல்லா ஆகிடணும். உனக்கு, நான் நூத்தியெட்டு தேங்காய் உடைக்கிறேன்.” என்று மனம் விடாமல் ப்ரார்த்தித்தது. 

அந்த நேரத்திலும் சரவணன் அருளை கடிந்தான். “ஏண்டா பார்த்து விலகக்கூடாது.. ஒரு இடம்னா கூட பரவாயில்லை. ரெண்டு இடத்துல காலை முறிச்சு வச்சிருக்கியேடா..” என்று அங்கலாய்த்தான்.    

இரண்டு இடங்களில் ஆபரேஷன் என்றதால்.. கிட்டதட்ட நான்கைந்து மணி நேரம் ஆனது.

ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த போதே.. கோதையும் பூபதி பாண்டியனும் வந்துவிட்டனர்.  செல்விக்கு அவர்களிடம் சென்று பேசுவதா.. வேண்டாமா என்று தெரியவில்லை. பேசாமல் இருக்க முடியாது. என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. கோதையை பார்த்து, “வணக்கம்மா.” என்றாள். பூபதி பாண்டியனை பார்த்து, “வணக்கம் அய்யா.” என்றாள். வேறு எதுவும் பேசவில்லை.

அவர்களும் எதுவும் பேசவில்லை.

செல்வியும் எதுவும் சாப்பிடவில்லை. சரவணனும் எதுவும் சாப்பிடவில்லை. பரத்தும் எதுவும் சாப்பிடவில்லை. பரத்தும் அங்கேயே தான் இருந்தான்.

நேரமாவதை உணர்ந்த செல்வி தான். “எல்லாரும் இருக்காங்கள்ல.. நீ போ பரத். நான் மேனேஜ் பண்ணிக்குவேன்.” என்று கட்டாயபடுத்தி அனுப்பி வைத்தாள்.

சர்ஜெரி முடிய இன்னும் நிறைய நேரம் ஆகும் என்பதால்.. பூபதி பாண்டியன் தான்.. சரவணனிடம் போய்.. “சாப்பிட்டிட்டு வா சரவணா.” என்று கட்டாயப்படுத்தி அனுப்ப.. சரவணன் செல்வியையும் வற்புறுத்தி கூட்டிச் சென்றான்.

“இல்லை, எனக்கு வேண்டாம்.” என்று செல்வி எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள்.

அவளின் சோர்வை பார்த்த சரவணன்.. “அவனால படுறது போதாதுன்னு.. நீ வேற இன்னும் படுத்தாத..” என்று அவளை கடிந்தவன், அவளை அதட்டி சாப்பிட அழைத்துப்போனான்.

இரண்டு பேருமே.. ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி எழுந்தனர்.

சரவணன், கோதை, பூபதி பாண்டியன் ஒருபக்கம் அமர்ந்திருக்க. செல்வி ஒரு பக்கம் அமர்ந்திருந்தாள்.

வெகு நேரம் கழித்தே டாக்டர்ஸ் வெளியே வந்தனர். “எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சு. இன்னும் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல, ஐ சீ யு க்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க. நாளைக்கு மதியமா ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க.” என்று தகவல் சொல்லி.. டாக்டர்கள் சென்று விட்டனர்.  

அருளை ஐ சீ யு ஷிப்ட் செய்தனர்.

முதலில் கோதை சென்று பார்த்து வந்தார். கண்விழித்திருந்தான். புன்னகைக்க முற்பட்டான்.. முடியவில்லை. “என்னடா அருளு, இப்படி செஞ்சிகிட்ட..” என்று கவலைப்பட்டார் கோதை.

“எதிர்பார்க்கலைமா.” என்றான் அருள்.

“ரொம்ப வலிக்குதா?” என்றார்.

வலித்தாலும் அவருக்காக.. “இல்லைமா. அவ்வளவா இல்லை.” என்றான்.

அங்கிருந்த நர்ஸ், “தொந்தரவு பண்ணாதீங்க”, எனவும் வெளியே வந்துவிட்டார். பின்பு பூபதி பாண்டியன் போய் பார்த்து வர.. பின்பு செல்வி போய் பார்த்து வந்தாள்.

அவளும் கேட்டது. கோதை கேட்ட அதே கேள்வியைத்தான். “வலிக்குதா?”

“கொஞ்சம் வலிக்குது தான்.” என்றான்.

“குறைஞ்சிடும்”, என்றாள், அவனை சமாதானப்படுத்தும் விதமாக. முயன்று புன்னகைத்தான்.

“தூங்குங்க.. நான் வெளில தான் இருக்கேன்.” என்று சொல்லி வெளியே வந்தாள்.

சரவணன், கோதையையும் பூபதி பாண்டியனையும்.. “அம்மா அவன் இப்போ  நல்லா தான் இருக்கான். நைட் ரெண்டு மணியாகுது. நீங்க வீட்டுக்கு போய் தூங்குங்க.” என்றான்.

“நீ என்ன பண்ற?” என்றார் பூபதி பாண்டியன்.

“எல்லாரும் எப்படி போறது. நான் இருக்கேன்.” என்றான்.

இதை பார்த்த செல்வி.. “நீங்களும் போயிட்டு வர்றதுன்னா வாங்க அய்யா. நான் இருக்கேன்.” என்றாள்.

“இல்லை. நான் இருக்கேன்.” என்றான் சரவணன். “ரூம்னா கூட பரவாயில்லைன்னு விட்டுட்டு போகலாம். ஐ சீ யு ல இருக்கும் போது.. எப்படி விட்டுட்டு போறது.” என்றவன்

கோதையையும் பூபதி பாண்டியனையும் அனுப்பி விட்டு வந்தான். அவர்களுக்கு ஒரு ரூமை அல்லாட் செய்ய சொல்லி, செல்வியை அங்கே ரெஸ்ட் எடுக்க சொல்லியவன்.. அவன் ஐ சீ யு வாசலிலேயே உட்கார்ந்தவாக்கில் தூங்கினான்.

மறுநாள் அருளை ரூமிற்கு மாற்றி விட்டனர்.  

கோதை, பூபதி பாண்டியன் எல்லாரும் அங்கே தான் இருந்தனர். ராதிகாவிற்கு ஏழு மாதம் என்பதால்.. அவள் வந்து பார்த்து, உடனே சென்றுவிட்டாள். எழிலரசியும் அவள் வீட்டினரும் வந்து பார்த்து சென்றனர். 

கோதையும் பூபதி பாண்டியனும் இருந்தாலும்.. செல்வியுடன் ஒன்றும் பேசமாட்டார்கள் அவர்கள்.

ஆனால் செல்வி.. அவர்கள் பேசுவதில்லை என்று பேசாமல் எல்லாம் இருக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொண்டுத் தான் இருந்தாள். பூபதி பாண்டியனுக்கு.. அவளுடைய அந்த குணம் பிடித்தது. தாங்கள் எவ்வளவு தான் அவளை ஒதுக்கினாலும்.. முகம் சுழிக்காமல் இருக்கிறாளே என்று.  

சரவணன், செல்வி இருப்பதால் அவள் பார்த்துக்கொள்வாள் என்று.. பிறகு வருவதாக கூறிச் சென்றான்.

செல்வி அருளை விட்டு எங்கும் நகரவில்லை.  அவளுக்கு உடை கூட.. ஆனந்தி தான் எடுத்து வந்து கொடுத்தாள்.

அருளும் சோர்வாகவே உணர்ந்ததால்.. யாரிடமும் அதிகமாக பேசவில்லை. அமைதி காத்தான். அவனின் காதலை நன்கு உணர்ந்துவிட்ட செல்விக்கு, அது பெரிய விஷயமாக தெரியவில்லை.

“எப்படி.. இப்படி கவனிக்காம விழுந்துட்ட அருளு..” என்றார் பூபதி பாண்டியன்.

“ஏதோ என் மேல விழ வந்த.. மாதிரி தோணினதுனால, என்னையறியாம நகர்ந்தேம்பா. விழுந்துட்டேன்.”

“என்ன அப்படி தூக்கி வீசுனாங்க.. அவனங்க”,

“ஆசிட் முட்டைப்பா அது.” என்றான்.

எல்லோருக்கும் இது புதிய செய்தி.. அதிர்ந்தனர். இன்னும் அது பட்டிருந்தால்.. என்னவாயிருக்கும்..

“ஏன், அருள் உன் மேல அப்படி..”

“என் மேலன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாதுப்பா. சும்மாவே கலவரக்காரங்கள்ள ஒருத்தன் அடிச்சிருக்கான். அது என் மேல பட வந்திடுச்சு.. அவ்வளவு தான். அவனை அப்புறம் பிடிச்சிட்டாங்க.”

அது மட்டும் மேல பட்டிருந்தா?. “பிள்ளையாரப்பா நீ காப்பாத்திடப்பா..” என்று பிள்ளையாருக்கு மனமுருக மனதிற்குள்.. நன்றி கூறினாள் செல்வி.

ஆனாலும் அவளின் முகத்தில் இருந்த அதிர்ச்சி விலகவில்லை. அருள் அதை கவனித்தான். அவளுக்கு இந்த ஆசிட் விஷயத்தை, கேள்வி பட்டதில் இருந்து.. நிறைய அதிர்ச்சியாகிவிட்டது என்றுணர்ந்தான் அருள்.

மாலை ஆனதும்.. கோதையும் பூபதி பாண்டியனும், அருளை செல்வியிடத்தில் ஒப்படைத்துவிட்டு கிளம்பினர். அவளாக, நான் இருக்கிறேன் என்று சொல்லவில்லை. அவர்களும், நீ இருக்கிறாயா என்று கேட்கவில்லை. அவர்களாகவே விட்டு சென்றனர். 

அவர்கள் சென்றதும்.. “கொஞ்சம் தூக்கி உட்கார வை.. செல்வி.” என்றான் அருள். அவளாக அவனைத் தொட்டு.. அவன் எழுந்திருக்க உதவினாள்.

அவளின் அருகாமையில்.. வேண்டுமென்றே அவள் மேல் சாய்ந்தான். அவள் அதை உணர்ந்தாலும், ஒன்றும் சொல்லவில்லை.

“அட.. அம்மணி கோபப்படுவான்னு பார்த்தா.. அமைதியாவே இருக்கா. ஒரு வேளை.. நம்ம முடியாம சாயறோம்னு நினைச்சிட்டாளோ” அவளுக்குப் புரிந்து தான்.. அவள் அமைதியாக இருக்கிறாள், என்று அவனுக்குப் புரியவில்லை.

 நேற்றிலிருந்து, இப்போது தான் அவளுக்கு.. அருளிடம் தனியாக பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

“என்னங்க நீங்க.. இப்படியா அஜாக்கிரதையா இருப்பீங்க. ரெண்டு இடத்துல எலும்பு முறியர மாதிரி.”

“அப்போ, ஒரு இடத்துல முறிஞ்சிருந்தா பரவாயில்லைன்னு சொல்றியா.. நீ.” என்றான் இடக்காக.

“இது தானே வேணாங்கறது.”

“எது?”

“இந்த இடக்கு பேச்சு.”

“பின்ன.. நேத்து இருந்து மாத்தி மாத்தி.. ஏதோ சின்ன பிள்ளையை கேட்கற மாதிரி.. எப்படி ரெண்டு இடத்துல ஆச்சுன்னு.. எல்லாரும் கேட்டா, நான் என்ன சொல்வேன். முதல்ல சரவணன். அப்புறம் அம்மா. அப்புறம் அப்பா. அப்புறம் நீ.”

“ம்ம்ம்! அப்புறம் விழுப்புரம்.” என்றாள் நக்கலாக. “எங்களுக்குத் தானே தெரியும்.. எவ்வளவு பதறிடோம்னு.”

“அதுக்கென்ன பண்ண.. வேணும்னா செஞ்சேன்.”

“வேணுன்னு பண்ணினாலும்.. வேணான்னு பண்ணினாலும்.. வலி யாருக்கு? உங்களுக்குத் தானே.” என்றாள் அதட்டலாக.

தன்னையே மிரட்டுகிறாளா.. எது கொடுத்தத் தைரியம் இது?.

அவனின் காதல் கொடுத்த தைரியம்.. என்று அவனிற்குப் புரிய, இன்னும் காலம் வரவில்லை.

“சரி விடுங்க. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு நினைச்சிக்கலாம்..” என்றாள் பெரிய மனுஷியாக.

இவள், இவ்வளவு பேசுவாளா.. என்றிருந்தது அருளுக்கு.

செல்வி, சகஜமாக இப்போதெல்லாம் பேச ஆரம்பித்து இருந்தாலும்.. அதில் ஒரு தயக்கம் உணர்ந்திருக்கிறான் அருள். இன்று.. அந்த தயக்கத்தை எல்லாம் விட்டு, ஒரு உரிமையோடு பேசுவது போல அவனுக்குத் தோன்றியது. மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.  

“என்னடி.. நீ இவ்வளவு பேசற.”

அதைகேட்டவள்.. “நீங்க எப்படி.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சேர்ந்திங்க?” என்றாள் சீரியசாக.

“ஏன்? ஆசைப்பட்டுத் தான் சேர்ந்தேன். ஏன் கேட்கற..”

“இல்லை.. நான் இவ்வளவு பேசுவேன்றதை கண்டுபிடிக்கவே.. இவ்வளவு நாள் ஆகிடுச்சே. அப்புறம் எப்படி கேசை கண்டுபிடிக்கிறது..” என்றாள் ராகமாக.

அவள் தன்னை கிண்டலடிப்பது, அருளுக்கு நன்கு புரிந்தது. “அடிங்க! என்னால எந்திரிக்க முடியாதுன்னு.. என்னை கலாய்க்கறியா.. நீ.  நான் மட்டும் எந்திரிச்சேன்னு.. வையி..” அவன் வார்த்தையை முடிக்க கூட இல்லை..

“என்ன பண்ணுவீங்க..” என்று தூர இருந்தவள்.. அவனின் அருகில் வந்தாள்.

“தைரியம்டி உனக்கு.” என்று, அவளை அப்படியே இழுத்து மார்பில் போட்டுக்கொண்டான்.

“அச்சோ.. கால். கால்.”, என்றாள் பதறினாள் செல்வி.

“ஏண்டி, அதுக்கு இப்படி காள்.. காள்ன்னு கத்தற. என் கால் மேல நீ படவேயில்லை. அப்படியே இரு.” என்றான், அவளை அணைத்துத் பிடித்தவாறே.

“இப்போ தானே மேல சாஞ்சீங்க. அதுக்குள்ள எதுக்கு என்னை சாய்ச்சுக்கிடீங்க..”

“அப்போ.. நான் வேணும்னே சாஞ்சது உனக்கு தெரியுமா..”

“அதுகூட வா தெரியாம இருப்பேன்.”

“அப்போ.. உனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லு.” என்றான் இரு பொருள்பட.

 அது புரியாமல்.. “பின்ன.. நான் தான் கிளாஸ்ல டாப்பர் தெரியுமா..” என்றாள் பெருமையுடன்.

தான் எதை சொல்கிறோம்.. இவள் எதை பேசுகிறாள்.. என்று புரிய, வாய்விட்டு சிரித்தான்.

எப்பொழுதும் போல கண்களில்.. அதை படம் பிடித்தாள் செல்வி.

அவள் தன்னை விழிஎடுக்காமல்  பார்ப்பதை உணர்ந்தவன்.. “ஏய்! என்ன நீ சைட் கூட அடிப்பியா?”

“அப்படியா.. நான் சைட் அடிக்கறேனா, என்ன?”, என்றாள் வேண்டுமென்றே இமை கொட்டி.

“சான்சே இல்லைடி. நிஜமாவே உனக்கு ஏதோ ஆகிடுச்சு. இந்த நேரம் பார்த்து.. நான் இப்படி படுத்துட்டு வேற இருக்கேனே..” என்று அங்கலாய்த்தான்.

செல்வியின்.. வாய் பூட்டு திறந்துவிட, நிறைய வாயாடினாள். அவள்.. இப்படி எல்லாம் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டவன் தான் அருள். ஆனால்.. அவள் திடீரென்று இப்படி சகஜமாக நடந்துகொள்ளும் அளவுக்கு.. என்ன நடந்தது என்று தெரியவில்லை.

அப்போது பார்த்து.. அவனுடைய போன் அடிக்க.. அதில் ரிங் டோன் ஒலித்தது.

“என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன்”   

 அவன் பேசும் வரை பொறுமையாய் இருந்தவள்.. “ஆமாம், இது என்ன ரிங் டோன்?”

“உனக்கு பிடிக்கலையா?”

“எப்படி பிடிக்கும்.. என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்னு.. தானே வருது.”

புன்னகைத்தவன்.. ‘’பின்னாடியே.. உன்னை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன்னு.. வருதே, அதைக் கேட்கலையா..”

“அது தான் எனக்கு தெரியுமே. தெரிஞ்ச விஷயத்தையே யாராவது தெரிஞ்சிப்பாங்களா.”

“ஐயோ! சான்சே இல்லைடி! நிஜமாவே நீ ரொம்ப ப்ரில்லியன்ட் தான்! கிளாஸ் டாப்பர் தான். நான் ஒத்துக்கறேன்”, என்றான் ரைமிங்காக.

இவன் பொய் சொல்கிறானா.. உண்மை சொல்கிறானா என்று, செல்வி தலையை தூக்கிப் பார்க்க.. வெகு அருகில் அவன் முகம். எல்லா பேச்சும் அவன் மேல் சாய்ந்து கொண்டே நிகழ்ந்தது. 

வெகு அருகில்.. இருவர் முகமும் ஒருவரை ஒருவர் இழுக்க.. இதழ்களின் விசையால் மிகவும் நெருங்கி.. ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதோடு நில்லாமல், அருளின் இதழ்களின் ஊர்வலம்.. அவளின் முகம் முழுக்கவே நடந்தது. செல்வியும் எதுவும் சொல்லாமல் இசைந்து நின்றாள். முன்பு தயங்கி நின்றவள்.. இப்போது மயங்கி நின்றாள்!

அதற்குள், ரூம் கதவு தட்டப்பட.. மனமேயில்லாமல் இருவரும் விலகினர். அவசரமாக செல்வி அந்த மயக்கத்தில் இருந்து விலகி.. தன்னிலைப் படுத்தினாள், தன்னை.

“இங்கே வா”, என்று அழைத்த அருள்.. அவளின் கூந்தலை ஒதுக்கி விட்டான்.

“சரியா இருக்கேனா..” என்றாள் செல்வி.

சிறு புன்னகையோடே.. “சரியாத்தான் இருக்க. கதவை திற” என்றான் அருள் பாண்டியன்.

கதவை திறந்து பார்த்தால், வந்தது நர்ஸ். சாப்பிட்ட பிறகு.. இந்த மாத்திரையை கொடுங்கள் என்று சொல்லி.. எடுத்துக்கொடுத்து சென்றார்.

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக கேட்டாள். “ஆசிட் ஒரு வேளை, உங்க மேல பட்டிருந்தால்..” என்றாள் பயத்தோடு. “அது, இதை விடவும் பெரிய நிரந்தர காயம் ஆகியிருக்கும்.”

“அதான் ஆகலைல..”  என்றான் அருள்.

“ஒரு வேலை ஆகியிருந்தா.. நினைக்கவே பயமாயிருக்கு.” என்றாள்.

“ஏன்.. என்னை விட்டு போயிருப்பியா.. நீ” என்றான்.

அந்த பேச்சு மிகுந்த கோபத்தை கொடுத்தது செல்விக்கு.

“சும்மா லூசு மாதிரி உளறகூடாது. ஏன்.. நீ மட்டும் தான் என்னை காதலிப்பியா? எனக்காக எல்லாம் செய்வியா? நான் உன்னை காதலிக்க மாட்டேனா?” என்றாள் இன்னும் கோபமாக.

“சும்மா.. ஒரு பேச்சுக்கு தான், ஹனி சொன்னேன். கூல்.. கூல்.” என்றான் அருள்.

“என்ன கூல் இப்படி அசட்டுத்தனமா எல்லாம் உளறக்கூடாது. எனக்குப் பிடிக்காது”, என்றாள் தெளிவாக.

“உனக்கு என்னென்ன பிடிக்காதுன்னு லிஸ்ட் சொல்லிடு. அதெல்லாம் செய்யவே மாட்டான் இந்த அருள்.” என்று அவளுக்கு வாக்குறுதிய அள்ளி வீசினான்.

“போலீஸ் தானே நீங்க. அரசியல்வாதி இல்லையே. இப்படி வாக்குறுதியை அள்ளி வீசறீங்க.” என்று அவள், கிண்டலாக சொல்லிக்கொண்டு இருக்கும் போதே.. கதவு மறுபடியும் தட்டப்பட்டது.   

அங்கே ஒரு கான்ஸ்டபிள், ராதிகா கொடுத்துவிட்ட டிபனை தூக்கிக்கொண்டு வந்திருந்தார்.

“இந்த அக்கா சொன்னா கேட்கவே மாட்டேங்கறாங்க. கரெக்டா டைம்க்கு கொடுத்துவிட்டறாங்க. அவங்களுக்கே முடியாம இருக்கு. இப்போ செவன்த் மன்த். ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க.. சொன்னா கேட்டாதானே?” என்று சலித்துக்கொண்டே அவனுக்கு டிபன் வைத்துக்கொடுத்தாள். அவளும் உண்டாள். மாத்திரைகளை கொடுத்தாள். ஒரு பெர்பெக்ட் மனைவியாக நடந்து கொண்டாள்.

ஹாஸ்பிடலில் இருந்த பத்து நாட்களும்.. இருவருமே ஒருவரின் அருகாமையை மற்றவர் அனுபவித்தனர். சில பல அணைப்புகள்.. செல்ல சீண்டல்கள் என்று.. செல்விக்கு ஒரு புது அன்பான உலகத்தைக் காட்டினான் அருள். செல்வியும் அவனோடு இருக்கும் பொழுதுகளை ரசித்தாள். அனுபவித்தாள்.

இப்போது வாக்கர் வைத்து மெதுவாக.. காலில் அவ்வளவாக வெயிட் கொடுக்காமல்.. நடந்தான் அருள். 

பத்து நாட்கள் ஹாஸ்பிடல் வாசத்திற்குப் பிறகு..  வீடு போகும் நாளும் வந்தது. செல்விக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. யாராவது அவளையும் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்களா.. என்றிருந்தது.

ஹாஸ்பிடலுக்கு யாரும் கூப்பிடாமலேயே வந்து விட்டாள். வீட்டிற்கு அப்படி போக மனது தடுத்தது.  

என்ன செய்வது என்ற யோசனையிலேயே மனம் தவித்தது. அவளின் தவிப்பு யாருக்காவது புரியுமா?    

Advertisement