Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

ஓரளவு.. தன்னை அருள் பாண்டியனின் மனைவியாக.. நினைக்க துவங்கி இருந்தாள் செல்வி. அவளாக முயற்சி செய்யாமல்.. தானாகவே அது வந்திருந்தது. அருள் வர வைத்திருந்தான்.

எழிலரசியும் உண்டாகியிருந்தால்.. மருமகளை பார்க்காமல் இருக்கலாம்.. ஆனால் மகளை பார்க்காமல் இருந்தால் நிறைய பேச்சு வரும்.. என்று சென்னை பயணப்பட்டார் கோதை, பூபதி பாண்டியனுடன்.

அதுவுமில்லாமல் இது ஏழாவது மாதம் ராதிகாவிற்கு. ஒன்பது மாதத்தில் தான் வளைக்காப்பு செய்யலாம் என்று முடிவெடுத்து இருந்தனர். இப்போது தான் கற்பகம் வேறு.. மகளுடன் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து.. அவளை சீராட்டி விட்டு வந்தார். தான் மட்டும் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காதே.. என்று சென்னைக்குப் பயணப்பட்டார் கோதை. 

ராதிகா, “அம்மா வர்றாங்க”,  என்றான் சரவணன். மேடிட்ட வயிறுடன் தன் மனைவி நிற்பதைப் பார்த்துக்கொண்டே.

அவனின் பார்வையை பார்த்தவள், “என்ன பார்க்கறீங்க..” என்றாள்.

“என் பொண்டாட்டி எவ்வளவு அழகுன்னு பார்த்தேன்.”

“அது இப்போ தான் தெரிஞ்சதா..” என்று நொடித்தாள்.

“முன்னயே நீ அழகு தாண்டி. ஆனா என் குழந்தைக்கு அம்மா ஆனப் பிறகு, இன்னும் அழகாயிட்டடி..” என்றான் ஆசையாய், அவளை நெருங்கி வந்து அணைத்தவாறே.

“என்ன சொல்லிட்டு இருந்தீங்க.. என்ன பண்றீங்க?” என்று ராதிகா கேட்க.

“அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது.” என்றவன், “அம்மா வர்றாங்க.”

“எப்போ?”

“இன்னைக்கு சாயந்தரம்.”

“போன்ல திட்டினது போதாதுன்னு.. நேர்ல திட்ட வர்றாங்களா?”

“அவங்க என்ன.. வேணும்னா திட்றாங்க. அவங்க ஆற்றாமைடி.. கொஞ்சம் பொறுத்துக்கோ.” என்றான் கெஞ்சலாக.

“உங்களுக்காக தான் நான் பொறுத்துக்கறேன். இல்லைன்னா அவங்க போன் பண்ணினா கூட.. நான் எடுக்க மாட்டேன்.”

“அப்படியெல்லாம் செஞ்சிடாத. ஏற்கனவே அருள்னால நொந்து போயிருக்காங்க. அவங்களை நோகடிச்சிடாத..”, என்றான்.

“எல்லாம் எனக்கும் தெரியும்”, என்றாள் ராதிகா.  

சரவணன் வீட்டில் தான் தங்கினார் கோதை. அருளை பார்க்க வேண்டும் என்ற.. ஆவல் கொழுந்து  விட்டு எரிந்தது. சொன்னால் பூபதி பாண்டியன் திட்டுவார் என்று.. சந்தர்ப்பம் கிடைப்பதற்காக பார்த்துக்கொண்டிருந்தார்.

எழிலரசியின் வீட்டுக்கு எல்லாரும் சென்று வந்தனர். அவளை விருந்துக்கு, வீட்டுக்கு அழைத்துவிட்டு வந்தனர்.

கோதைக்கு அருளின் ஞாபகம் அதிகமாகியது. “தாங்கள் எல்லாரும் இங்கு சந்தோஷமாக.. இருக்க தன் பையன் அனாதை போல தனியாக இருப்பதா?” என்று.

எழிலரசி கூட தன் அம்மாவிடம் சண்டை பிடித்தாள். “நீ என்னை பார்க்க வந்த மாதிரியே தெரியலைம்மா. எப்பவும் அண்ணன் பேரை சொல்லியே புலம்பிட்டு இருக்க..” என்றாள்.

“எப்படி.. என்னால அவனை விட முடியும்.” என்று கண்ணில் இருந்து மளமளவென்று கண்ணீர் வழிந்தது கோதைக்கு.

வீட்டிற்கு வந்தும் அது தொடர்ந்தது.

அவர் கண்கலங்குவதை பார்த்த சரவணன்.. “எதுக்கும்மா அழறீங்க. அழுது.. அழுது உடம்பை கெடுத்துக்காதீங்கம்மா. இப்போ என்ன.. அவனை பார்க்கணுமா? நான் வரச்சொல்லட்டா..” என்றான்.

அவருக்கு பார்க்க வேண்டும் போல தான் இருந்தது. பூபதி பாண்டியன் என்ன சொல்வாரோ என்று அவரின் முகத்தை பார்க்க.. “பார்க்கணும்னா பாரு. அப்புறம் ஊருக்கு வந்து புலம்பிட்டே இருக்காத..” என்றார்.

சரவணன் அருளுக்கு போன் செய்தான். “அம்மா வந்திருக்காங்க. உன்னை பார்க்கணும்கறாங்க..” என்றான்.

பக்கத்தில் தானே அருளுடைய குவார்ட்டர்சும். அடுத்த ஐந்து நிமிடத்தில் இருந்தான் அருள்.

அருளை பார்த்தவுடன். “ஏண்டா.. இப்படி பண்ணின?” என்று பழைய பல்லவியை பாடினார் கோதை.

“அம்மா நடந்ததை இனி மாத்த முடியாது. வேற பேசு”, என்றான் சரவணன் அதட்டலாக.

“வேற என்னடா பேசுவேன்”, என்று அழுதார் மறுபடியும்.

“இப்படி அழறதுக்கு தான்.. என்னை வரச்சொன்னியாம்மா?” என்றான் அருள்.

“வேற என்னடா பண்றது..” என்றார் மறுபடியும் கண்கள் கலங்கியவாறே.

இதிலெல்லாம் தலையிடவில்லை பூபதி பாண்டியன். அவர்கள் பேசுவதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

“சரி! கல்யாணம் கட்டினது தான் கட்டின! ஏண்டா சேர்ந்து பொழைக்காம இருக்க..” என்றார்.

“அவ படிப்பு முடியட்டும் மா..”

“ஏன்.. கல்யாணமான பொண்ணுங்க படிக்கறது இல்லியா?” என்றார். திருமணம் செய்தது கோதைக்கு பிடிக்கவில்லை தான். அதற்காக தன் மகன் தனியாக இருப்பதை.. எப்படி பார்த்துகொண்டிருப்பது என்று கேட்டார்.

 இந்த கேள்விக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அருள் தடுமாற.. 

“ஏன்.. அந்த மகாராணி வந்து இருக்க மாட்டாளாமா?” என்றார் அழுகையோடே கோபமாக.

“இல்லைம்மா.. நான் கூப்பிடவேயில்லை”, என்றான் அருள்.

“அது இன்னும் தப்பாச்சேடா”, என்றார் கோதை. “ஏண்டா.. ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு.. அப்படியே விட்டுடுவியா?” என்றார்.

அருள் குழம்பியே போய்விட்டான். “தாலியை கழட்ட சொன்ன அம்மாவா இது.. நமது காதலுக்கு.. இது எதிரியா.. இல்லை நண்பியா?”என்று.

கோதைக்கும் பூபதிக்கும் இப்போது உள்ள எண்ணம்.. தங்களுக்கு பிடிக்கிறதோ.. இல்லையோ மகன் நன்றாக வாழவேண்டும், என்பது தான்.

“நீ எப்படி சொல்றீயோ.. அப்படி செய்யறேன் மா.” என்றான் பணிவாக அருள்.

“அப்போ.. அந்த பொண்ணை விட்டுடுனு சொன்னா.. விட்டுடுவியா?” என்றார் பூபதி பாண்டியன்.

“அது என்னால முடியாதுப்பா.” என்றான்.

“அப்போ ஏண்டா.. வாக்குறுதிய அள்ளி வீசுற..” என்றார் அவனின் தகப்பனாக.

“அவளோட வாழறதுக்கு தான்ப்பா.. அம்மா சொல்றதை கேட்கறேன்னு சொன்னேன்.”

“நாங்க என்னடா சொல்றது. தாலி கட்டின உனக்கு தெரியாது. நாங்க இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு?”

“அப்போ.. இப்போ எதுக்கு அம்மா கேட்கறாங்க.”

“அவளோட ஆற்றாமை.. அவ கேட்கறா. சொன்னா ஒரு பேச்சுல விடறாளா. எப்பவும் அருளு.. அருளுன்னு உன்னைப் பத்தின பேச்சு தான். விட்டா அந்த பொண்ணைக் கூட்டிட்டு வந்து.. உன் வீட்டுல விட்டுட்டு தான், விடுவா போல இருக்கு.”  என்றார் மிகவும் கோபமாக.

“சேர்ந்து வாழலையான்னு அம்மா கேட்கறாங்க. நீங்க இவ்வளவு கோபமா பேசறீங்க, என்ன தான் பண்றது.” என்றான் அருள்.

“ஒண்ணு அந்த பொண்ணை விட்டுட்டு வந்துடு. இல்லை அந்த பொண்ணோட வாழு. இப்படி ரெண்டுங்கெட்டானா சுத்திட்டு திரியாத. ஊர்ல அப்படி தாலி கட்டினான்.. இப்போ சேர்ந்து பொழைக்கலைப் போல இருக்கு.. இதுக்கு அந்தப் பொண்ணை, அவங்க பாட்டி செத்தப்போவே விட்டு இருக்கலாம்னு பேசறாங்க. படிக்க வேற வச்சு.. தாலியை வேற கட்டி.. இப்போ அம்போன்னு விட்டுட்டாங்கன்னு ஊருக்குள்ள பேசறாங்கடா.”

“ஊருக்குள்ள பேசறானா.. எவன் அவன்.” என்று எகிறினான் அருள்.

“டேய்.. நீ என்னடா எகிர்ற. ஊருன்னு இருந்தா, நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. நீ கல்யாணம் பண்ணினது பெருசில்லை. சேர்ந்து பொழைக்கனும்டா. நீ வேற ஊர்ல இருந்தா கூட பரவாயில்லை. ஒரே ஊர்ல இருக்கும் போது.. நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க.” என்றான் சரவணன். 

“எழில் வீட்டுல கூடத் தான் என்கிட்ட கேட்டாங்க.  ஏன் கல்யாணம் பண்ணியும்.. தனித்தனியா இருக்காங்கன்னு. அதுக்கு நாங்க என்னடா சொல்றது..” என்றார் கோதை.   

“என்னவோ சொல்லுங்க. எல்லார் இஷ்டத்துக்கு எல்லாம் இருக்க முடியாது.”

“இப்படி பேசினா.. எப்படி அருள்.” என்று ராதிகா இடையில் புகுந்தாள். இப்போது தான் எல்லாம் சற்று, சரி வருகிற மாதிரி தெரிகிறது. இவனின் வாய் துடுக்குத்தனத்தால்.. அதை கெடுத்துக் கொள்ளக் கூடாதே என்று இருந்தது.

“எல்லாரும் சொல்றாங்கன்னா..  கேட்கணும். எப்படி வேணா வாழறது வாழ்க்கை கிடையாது. இப்படின்னு ஒரு வரையறையோட வாழறது தான் வாழ்க்கை. நடந்ததை பேசி ப்ரோயோஜனமிலை. நடக்கறதை பேசுவோம். ஒரு நல்ல நாள் பார்த்து.. நாங்க போய் அவளைக் கூட்டிட்டு வந்து விடவா..” என்றாள் ஆவலாக ராதிகா.

“அவ படிப்பை முடிக்கடும்னு யோசிச்சேன்.” என்றான் அருள்.

“இன்னும் நிறைய நாளா இருக்கு.. படிப்பை முடிக்க. ஒரு மூணு மாசம் தானே இருக்கு. அவ நல்லா படிக்கிற பொண்ணு தான், படிச்சிடுவா”, என்றாள் ராதிகா, சரவணின் முகத்தை பார்த்துகொண்டே. அவன் மறுத்து எதுவும் சொல்லிவிடுவானோ என்று.

சரவணன் மறுத்து எதுவும் கூறவில்லை.

ஆனால் கோதை, “ஏன்.. நாம ஏன் கூப்பிடணும். இவன் தானே கல்யாணம் பண்ணிகிட்டான். இவனே போய் கூட்டிட்டு வரட்டும், என்னவோ பண்ணட்டும். நாம சொல்லத்தான் முடியும். வேற எதுவும் செய்ய முடியாது.” என்றார்.

இவர் என்னடா.. மாற்றி.. மாற்றி பேசுகிறார், என்று எல்லாரும் பார்த்தனர்.

அவர் தான் என்ன செய்வார் பாவம். ஒரு புறம் மனது அருள் நன்றாக வாழ வேண்டும் என்றது. இன்னொரு புறம் செல்வியை ஏற்கவும் மறுத்தது. அவரே குழப்பத்தில் இருந்தார். இன்னும் அவரை குழப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அவரை புரிந்தே இருந்தனர்.

அருள் என்ன செய்வது என்று அறியாதவனாக, “நான் வீட்டுக்கு போறேன்”, என்று கிளம்பினான்.

“இருடா.. இப்போ எழிலும் அவங்க வீட்டுக்காரரும் வர்றேன்னு சொன்னாங்க”, என்று அவனை நிறுத்தினார் கோதை.

“இல்லைமா. ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டி இருக்கு. வந்தா இருப்பாங்கள்,. நான் போயிட்டு வந்திடுறேன்”,  என்று கிளம்பினான்.

அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சரவணனுக்கு போன் வந்தது. அதில் பேசியவன் அருளிடம். “அருள் உன்னை திருநெல்வேலிக்கு ஸ்பெஷலா டெபுயூட் பண்ணியிருக்காங்க. அங்க ஏதோ கலவரமாம். அங்க நிலைமை கண்ட்ரோல்ல வர்ற வரைக்கும்.. அங்க போட்டு இருகாங்க”, என்றான்.

“எப்போ கிளம்பணும்?”

“இப்போவே.”

“அம்மா எதுவா இருந்தாலும் வந்து பேசிக்கலாம். இப்போ நான் கிளம்பறேன்.” என்று சொல்லி.. யாரையும் எந்த கேள்வியும் கேட்க விடாது, உடனே கிளம்பிவிட்டான்.

பணி அழைக்க.. எல்லாவற்றையும் மறந்து திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டான். இடையில் செல்விக்கு அழைத்து விபரம் சொல்லவும் மறக்கவில்லை.

செல்விக்கு அவன் போகிறானா.. என்றிருந்தது.  திருநெல்வேலி, கலவரம்.. என்றதும் மனதுக்கு சஞ்சலமாக இருந்தது.

அவளின் மனசஞ்சலத்துக்கு தகுந்த மாதிரியே.. எல்லாம் நடக்க போவது தெரியாமல்.

திருநெல்வேலியில் கலவரம் சற்று அதிகமாகத் தான் இருந்தது. இரண்டு நாட்கள் பல போலீஸ்காரர்கள் போராடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கலவரத்திற்கு காரணம், ஒரு பிரிவினர் ஏற்றிய கொடிக்கு.. மற்றொரு பிரிவினர் செருப்பு மாலை அணிவித்தது தான்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

கலவரத்திற்குப் பின் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன.   அங்கங்கே செருப்புகளும், பலரின் உடமைகளும்.. தெருவில் சிதறிக்கிடந்தன.

பல பேர் கைது செய்யப்பட்டு.. பின்பு விடுவிக்கப்பட்டனர். வீதிகளில் இவர்கள் ரோந்து செல்லும் போது.. எவனோ ஒருவன் எதையோ தூக்கி போலீஸ் மேல் வீச.. அது சரியாக அருளின் மேல் வந்து விழப் பார்க்க.. அருள் தன்னிச்சையாக சைடாக நகர்ந்தான். அங்கே ஒரு பள்ளம் இருப்பதை கவனியாமல், அதன் உள்ளே கால் செல்ல தடுமாறி விழுந்தான்.

பள்ளத்தில் கால் மாட்டியதில் காலில் பலமாக அடிபட்டது. முட்டியில் ஏதோ மளுக்கென்று சத்தம் கேட்டது. எல்லாம் நொடிகளில் நடந்து விட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட வந்த போலீசார் அவனை தூக்கினர்.

வலியை பொறுத்துக்கொள்ள தான் பார்த்தான். அவனால் கால் ஊன முடியவில்லை. கால் வேறு, மளமளவென்று.. கண் முன்னாடியே வீங்க ஆரம்பித்தது.

கட்டாயம் ஏதோ எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.. என்பது அவனின் எண்ணம். வலி தாங்க முடியவில்லை.

“ஹாஸ்பிடல் போயிடலாம்..’’ என்றான் தீனமான குரலில்.

அங்கே போனால் அவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.  இரண்டு இடங்களில் எலும்பு முறிவு என்றனர். முட்டியில்.. கணுக்காலில்.. அவனே எதிர்பார்க்கவில்லை, இரண்டு இடங்களில் இருக்கும் என்று. வலி உயிர் போனது.

டாக்டர், “ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கவா?” என்று கேட்க.. சரவணனுக்கு போன் செய்தான். அத்தனை வலியிலும்.. அவனே நடந்ததை சொன்னான். அவனுக்கு, வலியில் என்ன செய்வது என்று ஓடவில்லை.

“சர்.. நீங்க பர்ஸ்ட் எயிட் மட்டும் பண்ணி.. அம்புலன்ஸ்ல அனுப்ப முடியுமா?. அதுக்குள்ள எதுவும் ஆகாதே..”  என்றான் டாக்டரிடம்.

“நீங்க.. முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கறது பெட்டர்.” என்றார் டாக்டர்.

“சர், நாங்க அவனை மதுரை கூப்பிட்டு.. அங்கே இருந்து பிளைட்ல கூப்பிட்டுக்கிறோம்.” என்று உடனே பிளான் செய்தான் சரவணன்.

சரவணனுக்கு பேசிய உடனே.. அருளின் போனில் சார்ஜ் முடிந்து.. ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. அதனால் அவனால் செல்வியுடன் பேசமுடியவில்லை. 

வேகமாக எல்லாம் நடந்தது. காலை அசைக்க கூடாது.. என்று சொல்லி டெம்பரரி ஸ்லிங் போட்டு, உடனே அனுப்பினார் டாக்டர். அவனை மூன்று பேர் சேர்ந்து.. காலை அசைக்காமல் தூக்கி தான் சென்றனர். காலையில் பதினோரு மணிக்கு இப்படி ஆனது.. மாலையில் ஏழுமணிக்கு சென்னையை ரீச் ஆகிவிட்டான் அருள்.

செல்விக்கு விஷயத்தை.. போன் செய்து சொல்லியிருந்தான் சரவணன். கேட்டதில் இருந்து செல்விக்கு அழுகையாக வந்தது. எலும்பு முறிவுதான். அதற்கு என்ன செய்வார்கள் என்று அறிந்திருந்தும்.. அழுகையை அடக்கவே முடியவில்லை.  

அருள் தான்.. சரவணனுக்கு போன் செய்து சொன்னான் என்று.. அவளும் கேள்விப்பட்டதில் இருந்து, அருளை அழைக்க.. அது ஸ்விச் ஆப் என்றே வந்தது. அது வேறு, அவளுக்கு அதிகமான பதட்டத்தை கொடுத்தது.

ஆனந்தி தான் அவளுக்கு சமாதானம் கூறிக்கொண்டே இருந்தாள். “அண்ணாவே போன் பண்ணி சொல்லியிருங்காங்கன்னா.. அவர் கான்ஷியஸா இருக்கார்ன்னு தான் அர்த்தம். பெருசா எதுவும் இருக்காது. சரி ஆகிடும். கவலைப்படாதே.” என்று தேற்றிக்கொண்டே  இருந்தாள்.   

கோதை, பூபதி பாண்டியன் எல்லாரும் சென்னையில் தான் இருந்தனர். அவர்களும் ஒரு பக்கம் பதறி விட்டனர்.  “போகும்போதே.. அவனோட சண்டை போட்டு அனுப்பினேனே. இப்படி ஆகிடுச்சே” என்று கோதை ஒருபக்கம் புலம்பிக் கொண்டே இருந்தார்.

சரவணன் மட்டுமே ஏர்போர்ட் வந்திருந்தான். “நான் பார்த்து கொள்கிறேன். நான்  ஹாஸ்பிடலில் சேர்த்த பிறகு, நீங்கள் வந்தால் போதும்.” என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டான்.

செல்வியிடமும் அதைத்தான் சொல்லியிருந்தான். ஆனால் அவள் கேட்கவில்லை. பரத்தை அழைத்து கொண்டு  ஏர்போர்டிற்கு வந்துவிட்டாள். அவள் முகம் வெகுவாக கலங்கி இருந்தது.

அவளின் கலங்கிய முகத்தை பார்த்த சரவணன்.. “நான் தான் பார்த்துட்டு கூப்பிடறேன்னு சொன்னேன் இல்ல..”

“இல்லை. நான் இருக்கேன் அய்யா.” என்றாள். அவளின் இறைஞ்சிய குரலில் என்ன கண்டானோ. “சரி இரு.” என்று விட்டான்.

“இவரை வேணா போக சொல்லிடேன்..” என்றான் பரத்தை பார்த்து.

“பரவாயில்லை சர். நான் இருக்கேன்.” என்றான், அவனின் தோழிக்கு துணையாக. 

அதன் பிறகு.. அருள் வரும் வரையிலும் பேச்சில்லை.

அடிக்கடி செல்வி, அவளின் கண்களை துடைப்பதை.. பார்த்துக்கொண்டு தானிருந்தனர் பரத்தும் சரவணனும்.

இதைப் பார்த்த சரவணனுக்கு.. அதற்குள் அவ்வளவு அன்பு வந்துவிட்டதா.. அவன் மீது என்றிருந்தது.

அவனை கால்களை அசைக்காமல்.. தூக்கி வருவதை பார்த்ததுமே.. செல்வி பயந்து விட்டாள். டாக்டருக்கு படிக்கிறவள். நிறைய ரத்தம் தோய்ந்த கேஸ்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பவள் தான். வெளிப் பார்வைக்கு, அருளிடம் எதுவும் தெரியவில்லை. நன்றாகவே இருந்தான். ஆனால் அதற்கே பயந்துவிட்டாள் செல்வி.

பார்பவர்கள், ஏன் இவ்வளவு பெரிய மனிதனை தூக்கி வருகிறார்கள்.. என்று எண்ணத்தான் தோன்றும். ஏனென்றால் ஒரு காயமும் இல்லை.

கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

பரத் தான் அவளை தேற்றினான். “ஹேய், செல்வி என்னதிது? கண்ட்ரோல் பண்ணு. நீ அவங்களுக்கு தைரியம் சொல்லணும். நீயே அழலாமா?” என்றான்.

“புரிந்தது”, என்பது போல.. தலையாட்ட மட்டுமே செல்வியால்   முடிந்தது. கண்ணீரை வேறு அடக்க முடியவில்லை.

சரவணனும் செல்வியும் வேகமாக அருளை நெருங்கினர். செல்வியை முதலில் கவனிக்கவில்லை அருள். சரவணனை பார்த்தவுடனே, “செல்விகிட்ட சொல்லிட்டியா..” என்றான்.

“நான் இங்க தான் இருக்கேன்”, என்று அவன் முன் நின்றாள்.

“வந்துட்டியா.” என்றவன், பிறகு வலியில் கண்ணை மூடிக்கொண்டான்.  இரண்டு இடங்களில் எலும்பு முறிவு என்பதால்.. வலி உயிர் போனது. வலி நிவாரணி, கொடுத்து தான் இருந்தனர். ஆனால், இவ்வளவு நேரமாக வலி குறைந்த மாதிரியே தெரியவில்லை. இப்போது செல்வியை பார்த்ததும்.. மருந்தின் வீரியத்தில், தூக்கம் கண்களை அழுத்த தூங்கினான்.

செல்வி, அவன் கண்களை மூடியதும்.. பயந்து போனாள். பரத் தான் பல்ஸ் பார்த்துவிட்டு, அவனை ஆராய்ந்து பார்த்துவிட்டு.. “தூங்கறாங்க போல..” என்றான். அதன் பிறகே கொஞ்சம் நிம்மதியானாள் செல்வி.

“இவ்வளவு நேரமா.. கண்ணை மூடி கொஞ்சம் படுங்க சார்ன்னு, எவ்வளவோ சொன்னோம். கேட்கவேயில்லை. இப்போ, உங்களை எல்லாம் பார்த்தப் பிறகு தான்.. சர் கண்ணை மூடுறாங்க.” என்றனர் கூட வந்த கான்ஸ்டபிள்கள்.

“அது என்னை பார்த்து இல்லை. அவன் பொண்டாட்டியை பார்த்து.” என்ற மனதிற்குள்ளேயே.. அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டான் சரவணன்.

என்ன காதல் இவனது. அவ்வளவு செல்வியை.. தன்னைவிடவும் நேசிக்கிறானா? எப்படி இவ்வளவு நேசம் வந்திருக்கும். இந்த பெண் கொடுத்துவைத்தவள் தான்.. என்று எண்ணிக் கொண்டான்.

செல்வி உணர்ந்ததும் அதே தான். அந்த வலியிலும் தன்னை தேடுகிறான் என்பதே. தன் அருகாமை அவனுக்கு, அவ்வளவு நிம்மதியை கொடுக்கிறதா.. என்றிருந்தது.

அவனின் காதலில் உருகிப்போனாள். இந்த அளவிற்கு முடியவில்லை.. என்றாலும் தன்னால், இயன்றளவு அவனிடம் காதலை காட்ட வேண்டும்.. என்று மனதிற்குள் புதிய உறுதியே எடுத்துக்கொண்டாள்.

முன்பிருந்தே.. அவன் மீது சாயத்துவங்கி இருந்த மனது தான். ஆனால், இந்த உறுதி எடுத்த பிறகு.. அவன் மீது அதிகமாக காதல் பொங்கியது. சிறு வயதில் ,முன்னாள் நின்றால் கூட திட்டும் அருளுக்கும்.. இப்போது தன்னை பார்த்ததும், கண் மூடி உறங்கும் அருளுக்கும்.. எத்தனை வித்தியாசம்!!

அப்படி என்ன கண்டான் என்னிடம். ஒன்றுமே இல்லாதவள் நான். படிப்பை கூட ,அய்யாவாகப் பார்த்து.. யாசகமாக போட்டதுதான். அந்தஸ்து. இதை பற்றி என்னால் யோசிக்க கூட முடியாது. அவர்கள் வீட்டிலும், என்னை திருமணம் மூலமாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.. எத்தனையோ கேள்விப்படும் காலகட்டத்தில்.. அவர்கள் தன்னை ஒன்றும் செய்யாமல் தான்.. விட்டுவிட்டனர்.

அவன் தன் மேல் வைத்த காதல் தான்.. யாரையும் தன்புறம் நெருங்க கூட விடவில்லை. என்ன.. நான் இதற்கு செய்வது? அவனுக்கு ஒரு நல்ல மனைவியாக இருப்பதைத் தவிர. ஆம். நான் அவனுக்கு ஒரு சிறந்த துணையாக.. இருந்து காட்ட வேண்டும்.

என்னால் முடியுமா?  முடியும். முடியணும். மனது.. உறுதியையே, மிகவும் உறுதியாக எடுத்தது.          

Advertisement