Advertisement

அத்தியாயம் இருபது :

கோதையின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கேட்டு.. சரவணன், ராதிகா, ஏன் பூபதி பாண்டியனுக்கு கூட ஆச்சர்யமே. இவர்களுக்கு மட்டுமா ஆச்சர்யம் கோதைக்குமே ஆச்சர்யம் தான். “நல்லா பொழைச்சுக் காட்டு”, என்று சொன்னவர் போனை வைத்துவிட்டார்.

பேசிமுடித்தவர் பூபதி பாண்டியனை.. தான் பேசியது சரிதானா என்பது போல பார்க்க.. அவர் கண்களில் இயலாமையோடு கூடிய மெச்சுதல் தெரிந்தது. வேறு என்ன செய்வது. தன் மகனின் செய்கை பிடிக்கவில்லை என்றாலும்.. ஒதுங்க தான் வேண்டுமே தவிர.. விரோதம் பாராட்ட முடியாதே. என்ன இருந்தாலும் அவரின் ரத்தம் அல்லவா. ஆனால் இப்படி செய்துவிட்டானே.. என்ற ஆதங்கம் நிறைய இருந்தது. 

ராதிகாவிற்கு இதையெல்லாம் பார்க்க பார்க்க. “இவர்கள் கோபம் குறைந்து தெரிகிறதே. சரவணன் கோபம் மட்டும் குறைய மாட்டேன் என்கிறதே..”, என்று கவலையாக இருந்தது. அந்த கவலை அவளுக்கு சோர்வை கொடுத்தது. எப்படியாவது இதை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.

சோர்வு கவலையினால் மட்டும் அல்ல. வேறு காரணமும் இருந்தது. இத்தனை நாட்களாக அவள் தவமிருந்த காரணம். பத்து நாட்களுக்கு மேல் தள்ளி போயிருந்தது அவளுக்கு. அந்த மாதிரி எல்லாம் இதுவரை ஆனதில்லை. அதில்லாமல் புதிதாக சோர்வு.. தலைசுற்றலும் வேறு இருத்தது.   

 அவளுக்கு சற்று சந்தேகமாக தான் இருந்தது. நடந்த களேபாரத்தில் யாரிடம் கேட்பது.. யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. அம்மாவிடம் சொல்லலாம். ஆர்ப்பாட்டம் பண்ணி விடுவார்கள். பிறகு இல்லையென்று ஆகிவிட்டால் கஷ்டம்.

சரவணனிடம் சொல்லலாம் என்றால்.. அவன் எப்போதும் கோபமாக இருந்தான். இல்லையென்றால் வருத்தமாக இருந்தான். தனக்கு தெரிந்து.. பெரியவர்களிடம் சொல்லாமல் போக மனமும் இல்லை.

இதை தெரிந்து கொள்வதற்காகவே.. சரவணனுடன் ஊருக்கு போகத் துடித்தாள்.

ஊருக்கு போனால்அங்கே அருள் இருப்பான்.. இவர் என்ன சொல்வாரோ.. என்று சரவணனை நினைத்தும் கவலையாக இருந்தது. முடிவில் ஊருக்கு போயே.. சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள், ஊருக்கு கிளம்பி விட்டாள்.

சரவணனுக்கு சற்று ராதிகாவின் மேலும் வருத்தம் தான். தன் வீட்டில் எல்லாரும் கவலையாக இருக்கும் போது.. சற்றும் புரிந்து கொள்ளாமல் கூட வருகிறேன் என்கிறாளே என்று.

ராதிகா தான் அவனிடம் விஷயத்தையே சொல்லவில்லையே. சந்தேகமாக சொல்லி அதனால், “நீ இங்கேயே இருந்து ரெஸ்ட் எடு”, என்று விட்டு விட்டுப் போய்விட்டால்.. அவரைவிட்டு இருப்பதா.. என்ற கவலை அவளுக்கு. அதனாலேயே சரவணனிடம் விஷயத்தை சொல்லவில்லை.

ஒரு வழியாக ஊருக்கு கிளம்பி.. ஊரும் வந்து சேர்ந்தனர். வந்த போது அருள் இல்லை. அவன் அதிகாலையிலேயே வேலையாக கிளம்பியிருந்தான். இவர்கள் வருவது தெரியாது. இவர்களும் அருளை பார்த்தால்.. அவன் இல்லை. 

பிறகு தான் விஷயத்தை மெதுவாக ஆரம்பித்தாள் ராதிகா.

“என்னங்க.. நீங்க இன்னைக்கே டுயுட்டி ல ஜாயின் பண்ணனுமா.. என்ன?”,

“ஏன் ராதிகா..”,

“இன்னைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறீங்களா.. என்னை?”,

“ஏன்.. என்ன ஆச்சு?”,

“எனக்கு நாள் தள்ளி போயிருக்கு. கொஞ்சம் தலைசுத்தலும் இருக்கு. நாம டாக்டரை போய் பார்க்கலாமா?” என்றாள்.

“ஏய்! என்னடி! இவ்வளவு பெரிய விஷயத்தை.. இவ்வளவு சாதரணமா சொல்ற.. என்றான் அவன் சந்தோஷ மிகுதியால்.

“இருங்க! இருங்க! ரொம்ப சந்தோஷப்படாதீங்க. முதல்ல நிச்சயம் ஆகட்டும்”, என்றாள் கலக்கமாக.

அந்த கலக்கம் சரவணனையும் தொற்றியது.

“எந்த டாக்டர்கிட்ட போகலாம்.. யாரு நல்லா பார்ப்பாங்க.. எனக்கு தெரியாதே”, என்றான் சரவணன்.

“எனக்கும் தெரியாது”, என்றாள் ராதிகா. சற்று யோசித்தவளாக.. “இருங்க நான் கேட்டுக்கறேன்”, என்றாள்.

“யார்கிட்ட?”, என்றான் சந்தேகமாக சரவணன்.

“நான் யார்கிட்டயோ கேட்கறேன். நீங்க இதுல தலையிடாதீங்க..” என்றாள்.

“நீ யார் கிட்ட வேணா கேளு. ஆனா செல்வி கிட்ட கேட்க கூடாது.”, என்றான் அவளை தெரிந்தவனாக. 

“நான் அவகிட்ட தான் கேட்க போறேன். நமக்கு தெரிஞ்சவளை விட்டுட்டு.. யார்கிட்டயாவது போய் கேட்க முடியாது.”, என்றாள்.

“நான் தான் வேண்டாம்னு சொல்றேன் இல்லை”, என்றான் கோபமாக.

“நடந்ததுக்கு அவ என்னங்க பண்ணுவா.. பாவம். வேணுன்னா நீங்க பேசாதீங்க. நான் பேசிட்டு இதை மட்டும் கேட்டுட்டு உடனே வச்சிடறேன். இது நம்ம குழந்தை விஷயம். இதுல ரிஸ்க் எடுக்க முடியாது”, என்று அவனை சமாதானப்படுத்தினாள்.

“எனக்கு இஷ்டமில்லை. நீ என்ன வேணா செஞ்சிக்கோ”, என்று எரிந்து விழுந்தான். குழந்தையை சொல்லி.. ப்ளாக் மெயில் செய்கிறாளே என்று எரிச்சலாக  வந்தது.

அதையே சம்மதமாக எடுத்த ராதிகா.. அந்த காலை நேரத்திலேயே செல்வியை அழைத்தாள்.

ராதிகாவிடம் இருந்து போன் என்றதும்.. செல்விக்கு நம்ப முடியவில்லை. தூங்கிக்கொண்டு இருந்தவள்.. பரபரப்பாக எழுந்து, “சொல்லுங்க அக்கா”, என்றாள்.

“எங்க இருக்க?”,

“ஹாஸ்டல்ல.”,

“இவள் ஏன் இன்னும் ஹாஸ்டலில் இருக்கிறாள்..”, என்ற கேள்வி ராதிகாவுக்கு எழுந்தாலும்.. இப்போது குழந்தையை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்ததால்..  ராதிகா வேறு எதுவும் பேசாமல், “யாரு இங்க லேடீஸ் டாக்டர்.. ரொம்ப நல்லா பார்ப்பாங்க?”, என்றாள்.

செல்வி பெயரை சொல்லாமல், “ஏன்? எதுக்கு?”, என்றாள்.

“அதெல்லாம் சொல்ல முடியாது. யாரு நல்லா பார்ப்பாங்க.. அதை மட்டும் சொல்லு முதல்ல”, என்றாள் வீம்பாக.

அதைக்கண்ட செல்வி. “என் மேல கோபம் இருந்தா.. என்னை திட்டிக்கங்க. அதுக்காக என்ன விஷயம்னு சொல்லாம இருக்காதீங்க.  யாருக்கு என்ன சொல்லுங்க..”, என்றாள் பதட்டமாக.

போனிலேயே அவளின் பதட்டத்தை உணர முடிந்தது. அவளின் பதட்டத்தை பார்த்தவள், “யாருக்கும் ஒண்ணுமில்லை. எனக்கு தான் நாள் தள்ளி போயிருக்கு”, என்றாள்.

“நிஜமாவா அக்கா சொல்றீங்க”, என்று போனிலேயே துள்ளிக் குதித்தாள் செல்வி.

“நான் அங்க வரட்டுமா.. அக்கா?. அதுக்கு ஒரு கார்டு இருக்கு. அதை வச்சு டெஸ்ட் பண்ணினாலே தெரிஞ்சிடும். உங்களுக்கு இப்பவே என்ன ஏதுன்னு தெரிஞ்சிடும். அப்புறம் நம்ம ஹாஸ்பிடல் போயிக்கலாம்.”,

“என்ன.. அவள் இங்கே வீட்டுக்கு வருவதா? இவருக்கு கோபம் அதிகமாகிவிட்டால்… விட்டால் தான் என்ன?. அப்புறம் பிரச்சனைகள் எங்கிருந்து தீருவது. என்ன மிஞ்சி மிஞ்சி போனால் அவளிடம் பேசமாட்டார். பேசாவிட்டால் போகட்டும்.”, என்று யோசித்தவள்.

“சரி வா”, என்றாள். “தனியா வராத.. ஆனந்தியை கூட்டிட்டு வா. இவர் எல்லோர் முன்னாடியும் பேசமாட்டார்”, என்று அவளுக்கு ஐடியா வேறு கூறினாள்.  சரவணனிடம் செல்வி வீட்டுக்கு வரும் விஷயத்தை எல்லாம் சொல்லவில்லை. 

ஆனால் செல்விக்கு ஆனந்தியை கூட்டி கொண்டு வரும் எண்ணம் எல்லாம் இல்லை. பேசினால் பேசட்டுமே. யாரு பேசுவது.. என் அய்யா தானே பேசுறாங்க. கேட்டுட்டா போச்சு.” என்று தன்னை தானே சமாதனப்படுத்தி கொண்டாள்.

ஆனந்தி, இவள் வீட்டுக்கு போகும் விஷயம் என்று தெரிந்தவள்.. இவள் அந்த புறம் கிளம்பி போனதும்.. இதை இந்தபுறம் உடனே விஷயத்தை, போன் செய்து அருளுக்கு தெரிவித்து விட்டாள்.

“எதுக்கு வீட்டுக்கு போறா.. ஆனந்தி?”,

“எனக்கு தெரியலையே அண்ணா. ராதிகா அக்கா போன் பண்ணியிருந்தாங்க. உடனே இவ கிளம்பறா. நான் என்ன விஷயம்னு கேட்டேன். வந்து சொல்றேன்னு சொல்லறா.” 

ஆனந்தி சொன்னதும் தான் அவர்கள் ஊரில் இருந்து வந்த விஷயமே தெரியும் அருளுக்கு. என்ன பிரச்சனையோ தெரியலையே.. என்று இருந்தது அருளுக்கு. உடனே போக முடியாதா நிலையிலும் இருந்தான் அருள்.

என்ன.. அவளின் அக்கா, அய்யா தானே.. சமாளித்துக்கொள்ளுவாள்.. என்று சற்று தைரியம் இருந்தது அருளுக்கு. ஆனாலும் ஒரே கேள்வியாகத்தான் இருந்தது. இவள் எதற்கு வீட்டுக்கு வருகிறாள் என்று.

ராதிகா உள்ளே வேலையாக இருக்க.. செல்வி வந்தாள். கதவு திறந்து தான் இருந்தது. சரவணன் உட்கார்ந்து பேப்பர் வாசித்துக்கொண்டு இருந்தான். செல்வி வந்ததை கவனிக்காமல்.. அவன் பேப்பரிலேயே மூழ்கி இருந்தான்.

செல்விக்கு அவனை தாண்டி போவதா.. இல்லை அவனிடம் பேசுவதா என்று தயக்கமாக இருந்தது. பிறகு பேசாமல் போவது முறையாகாது என்று நினைத்தவள், “அய்யா”, என்றாள்.

செல்வியை அங்கு எதிர்பார்க்கவில்லை சரவணன். அவள் கூப்பிட்டதும் நிமிர்ந்தவனுடைய முகத்தை பார்த்தவளுக்கு.. அவன் அவளை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.

அவன் ஒன்றும் பேசாமல்.. என்ன என்பது போல பார்த்துக்கொண்டிருக்க., “அக்காவைப் பார்க்க வந்தேன்”, என்றாள் தயக்கமாக.

“ராதிகா”, என்று அவளை கூப்பிட்டு விட்டான் சரவணன். அவன் முகத்தை திருப்பிக்கொண்டான். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத செல்வி.. அவள் பாட்டிற்கு உள்ளே சென்றாள்.  

சரவணன் அவனின் விருப்பையும் காட்டவில்லை.. வெறுப்பையும் காட்டவில்லை. குழந்தை விஷயம், அவன் கோபத்தை சற்று மட்டுப்படுத்தியிருந்தது. இப்போது அந்த விஷயத்தை பார்ப்பது தான் முக்கியமாக தெரிந்தது.

ராதிகா, “வா செல்வி, வா.. வா..” என்று உற்சாகமாக ஆரம்பித்தவள்.. சரவணன் திரும்பி பார்ப்பதைப் பார்த்து.. “நான் உன்னை போன்ல தானே கேட்டேன். நீ நேராவே வந்துட்டியா..”, என்று இழுத்தாள்.

சரவணனுக்குத் தெரியும்.. ராதிகா சொல்லாமல் செல்வி வீட்டிற்கு வந்திருக்க மாட்டாள் என்று. “என்னமா ஆக்‌ஷன் விடறா டா.. என் பொண்டாட்டி.”,என்று மனதிற்குள்ளேயே சலித்தான்.

குரல் ஒன்று சொன்னாலும்.. ராதிகாவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்த செல்விக்கு.. அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அக்காவுக்கு என் மீது கோபம் இல்லையென்று.

செல்வி வரும் போதே.. கர்ப்பத்தை உறுதி செய்யும் கார்டை வாங்கி வந்திருக்க.. அதை வைத்து பரிசோதித்தனர்.  கர்ப்பம் உறுதியானது. ராதிகாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

எத்தனை வருட காத்திருப்பு. எத்தனை வருட தவம். உள்ளத்தில் உவகை பொங்கியது. 

ஓடினாள் வெளியே.. சரவணனிடம் விஷயத்தை சொல்ல. “இனிமே.. நீங்க இப்படி எல்லாம் வேகமா போகக்கூடாது.” என்று செல்வி சொல்ல.. சொல்ல.. வேகமாக போனாள்.

தன் முன், மூச்சு வாங்க வந்து நின்றவளைப் பார்த்தவன், “என்ன”, என்றான். ராதிகாவின் புன்னகை பூசிய முகத்தை பார்த்தவுடனே விஷயம் சரவணனுக்கு புரிந்து விட்டது.

“உறுதியாயிடுச்சா..”, என்றான். அவன் குரலில் சிறு நடுக்கம் கூட தெரிந்தது. அது பயத்தில் தெரிந்ததா. சந்தோஷ மிகுதியில் தெரிந்ததா. கடவுளுக்கே வெளிச்சம்.

அவள், “ஆமாம்”, என்று தலையாட்டின உடனே.. அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ் ராதிகா”, என்றான் உணர்ச்சி மிகுதியோடு. தாய் என்ற சொல் பெண்ணை முழுமையாக்குவது போல.. ஆண்களுக்கும் தந்தை என்ற சொல் தானே முழுமையை கொடுக்கிறது.  

“எனக்கு எதுக்கு தேங்க்ஸ். உங்க நம்பிக்கை பொய் ஆகலை”, என்றாள் சந்தோஷமாக.

“இன்னைக்கே டாக்டரை பார்த்துடுவோம். எந்த டாக்டர் சொன்னா?”, என்றான், செல்வி என்ற அவளின் பெயரை சொல்வதை கூடத் தவிர்த்து.

“நான் எனக்கு சந்தோஷமா இருந்ததா.. அவகிட்ட அதைக் கேட்கவே இல்லை. வந்துட்டேன்.”, என்றாள் முகம் முழுக்க சிரிப்போடு.

“இப்போ போய்.. கேட்டுட்டு வா”, என்று அனுப்பினான். அங்கே செல்வி அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் முகத்திலும் நிறைய சந்தோஷம்.

“வாழ்த்துக்கள் அக்கா. அய்யா என்ன சொன்னாங்க..”,

“எந்த டாக்டரை பார்க்கலாம்னு.. உன்னை கேட்க சொன்னாங்க.”

செல்வி மகப்பேறு மருத்தவதிற்கு புகழ் பெற்ற ஒரு மருத்துவமனையை கூறி.. “அங்க பார்க்கலாம் அக்கா. அய்யாவை அங்க அப்பாயின்மென்ட் வாங்க சொல்லுங்க.” என்றாள்.

“இரு. நான் போய் சொல்லிட்டு வர்றேன்”, என்று மறுபடியும் போனாள் ராதிகா.

அய்யா.. தன்னோடு பேசாதது வருத்தம் தான் செல்விக்கு. ஆனால் அதையெல்லாம் மீறி ராதிகா கர்ப்பமான சந்தோஷம் நிறைந்திருந்தது.

சரவணனுக்கும் செல்வி மேல் கோபம் இருந்தாலும்.. அதையெல்லாம் தகப்பனாகிற சந்தோஷம் பின்னுக்கு தள்ளியிருந்தது.

“செல்வியையும் நான் ஹாஸ்பிடல் கூப்பிட்டுக்கட்டா.. எனக்கு ஏதாவது தெரியலைன்னா.. அவ கேட்டுப்பாள்ல. எனக்கு அதிகம் தெரியாது தானே”, என்றாள், முகத்தை பாவம் போல வைத்து.. ராதிகா சரவணனிடம்.

சரவணனுக்கு என்ன தெரியும்? என்ன கேட்க வேண்டும்.. என்ன கேட்க கூடாது என்று.. ஏதோ பெரிதாக இருக்கும் போல என்று நினைத்தவன்.. அரை மனதாக சரி என்றான்.

சரியாக அந்த நேரம் பார்த்து.. என்னவோ ஏதோவென்று அருள் வர.. சந்தோஷமாக இருந்த சரவணன் முகம் சுருங்கியது.

ராதிகா அப்படியே முகம் மலரவே அருளை பார்த்தாள். சரவணன் முன்னிலையில் பேசவும் பயமாக இருந்தது.

அருளின் கண்கள் செல்வியை தேட.. அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று தெரியும். அவளின் காலணிகளை வெளியே பார்த்துவிட்டு தான் உள்ளே வந்தான்.

இங்கே சரவணன் முகம் திருப்ப.. அருளிடம் பேசுவதா வேண்டாமா என்று தெரியாமல்.. ஒரு நிமிஷம் தான் சரவணின் முகம் பார்த்தாள் ராதிகா. பிறகு அவளுக்கே.. பேசாமல் இருப்பது பெரிய தப்பு போல தோன்ற.. “வா அருள் காலையிலயே கிளம்பி போயிட்டியா”, என்றாள்.

“ஆமாம் அண்ணி.. காலையிலயே கொஞ்சம் வேலை இருந்தது”, என்று சகஜமாக பேசமுயன்றான் அருள்.

அருளின் குரல் கேட்டதும்.. ஒரு இனிய படபடப்பு செல்விக்கு. ஏனென்று அவளுக்கே புரியவில்லை. முகம் மலர்ந்து விகசிக்க.. முகத்தில் எந்த உணர்ச்சியும் கட்டாமல் இருக்க ..பெருமுயற்சி எடுத்தாள்.

செல்வி வந்தவுடனே.. குழந்தையை ஆவலாக எதிர்பார்த்ததால்.. ராதிகா, செல்வியை பற்றியோ.. அருளை பற்றியோ.. எதுவும் கேட்கவில்லை. அவள் ஏன் இன்னும்.. ஹாஸ்டலில் இருக்கிறாள் என்று ராதிகாவுக்கு தெரியவில்லை.

ஏதாவது இப்போது கேட்கலாம் என்றால்.. சரவணன் இருந்தான். கேட்கவும் பயமாக இருந்தது.

செல்வியை பார்க்கும் ஆர்வம்.. அருளின் கண்களில் நன்கு தெரிந்தது ராதிகாவிற்கு. சரவணன் பார்க்காமல்.. உள்ளே இருக்கிறாள் என்று.. அருளுக்கு சைகை செய்தாள் ராதிகா.

ராதிகாவின் செய்கையை பார்த்த அருளுக்கு புன்னகை மலர்ந்தது. அதற்குள் சரவணன் தான் அம்மாவிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க.. போனை எடுத்துக்கொண்டு உள்ளே போக..

ராதிகாவிடம் வந்த அருள். “நீங்க என்ன ரொம்ப சந்தோஷம்மா இருக்கீங்க. என்ன விஷயம் அண்ணி?” என்றான்.

“நீ சித்தப்பா ஆகப்போற”, என்றவள் கேட்காத தகவலாக.. “உன் பொண்டாட்டி தான் கன்பார்ம் பண்ணினா.” என்றாள் சந்தோஷமாக ராதிகா.

“கன்க்ராட்ஸ் அண்ணி! ரொம்ப சந்தோஷம்.” என்றான் அருள். குழந்தையில்லாமல் ராதிகா ஏங்கிய ஏக்கம், தவித்த தவிப்பு அவனுக்கும் தெரியும்.

“உள்ள தான் இருக்கா. நீ போய் பாரு. நான் போன்ல அத்தைகிட்ட பேசிட்டு வந்துடறேன்.” என்று சரவணனை தொடர்ந்து ராதிகாவும் உள்ளே போனாள்.

அவள் போனபிறகு அருள் மெதுவாக உள்ளே வர.. இவன் வரவை பார்த்தும்.. பார்க்காதவள் போல செல்வி அமர்ந்திருந்தாள்.

அருகே வந்து, “எப்போ வந்த செல்வி..” என்று இவள் வந்தது தெரியாதது போல பேச்சுக் கொடுத்தான்.

இவன் ஏன்.. நமக்கு இவ்வளவு பக்கத்தில் வந்து பேசுகிறான்.. சிறிது அவஸ்தையாய் உணர்ந்தாள் செல்வி. “கொஞ்ச நேரம் ஆச்சு”, என்று தடுமாற்றத்துடன் பதில் கொடுத்தாள்.

அவளின் அவஸ்தையை உணர்ந்தவன்.. அவள் டைனிங் டேபிள் அருகில் இருந்த சேரில் அமர்ந்திருக்க.. இவன் டைனிங் டேபிள் மேல் சுவாதீனமாக ஏறி அமர்ந்தான். இப்போது அவன் இறங்கினால் தான்.. சேரில் இருந்து செல்வி எழ முடியும். மீறி எழுந்தால் அவன் கால்களை உரசிக்கொண்டு தான் எழமுடியும்.

அவளுக்கு.. அய்யாவோ அக்காவோ வந்துவிட்டால்.. என்ன செய்வது என்று டென்ஷனாக இருந்தது.

அருளுக்கு தெரியும். ராதிகா சரவணனை, இப்போதைக்கு வெளியே.. இவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுமதிக்க மாட்டாள். அவனும் வரமாட்டான் என்று.

“அதுக்குள்ள டாக்டர் ஆகிட்ட போல. நல்ல விஷயமெல்லாம் அண்ணிக்கு சொல்லியிருக்க.” என்றான் அவளை சற்று சீண்டுவது போல.

“என்னை பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலையா..” என்றாள் பதிலுக்கு ரோஷமாக செல்வி.

“நிஜமாவே.. நீ எங்களுக்கு பெரிய டாக்டர் தான்”, என்றான் உணர்வுபூர்வமாக. “எங்க குடும்பத்தையே.. தழைக்க செய்யற செய்தியை சொல்லியிருக்க.” என்றான்.

இவன் என்னடா.. இப்போதுதான் என்னை கிண்டல் செஞ்சான். அதுக்குள்ள இவ்வளவு எமோஷனல் ஆகிறான்.. என்று அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தாள்.

அவளின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டான். முதல் முறையாக தன்னை நேர்கொண்டு பார்க்கிறாள். நினைத்த அவன் பதிலுக்குப் பார்க்க.. அவளின் பார்வையை தூக்கி சாப்பிட்டது.. அருளின் பார்வை.

முதலில் பார்வையை விலக்கியது செல்வி தான். “இவன் என்னடா.. இப்படி சந்து கிடைச்சா, காரே ஓட்டறான் அதுல..” என்று புதிய பழமொழியை வேறு கண்டுபிடித்தாள்.

ராதிகா வந்தால் கிளம்பிவிடலாம்.. என்று நினைத்தாள் செல்வி. இந்த பார்வையை எல்லாம்.. நம்மால் தாங்க முடியாது என்றே நினைத்தாள்.அப்படி ஒரு ஆளை ஊடுருவும் பார்வை பார்த்தான் அருள்.

அங்கே இருந்து எங்கே போவது.. எப்படி எழுவது.. எழுந்தால் அவன் மேல் படாமல் எழ முடியாது. எப்படி எழுவது என்று செல்விக்குத் தெரியவில்லை.. தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.  

அருளுக்கு அவளைத் தொடவேண்டும்.. என்ற ஆசை கட்டுக்கடங்காமல் இருந்தது. மிகவும் முயன்று கட்டுபடுத்தி.. நல்ல பிள்ளையாக உட்கார்ந்திருந்தான். இல்லையில்லை, உட்கார முயற்சித்தான். செல்விக்கு மிகவும் அருகில் இருந்தான். அவளின் அருகாமை.. அவனை தன்னிலை இழக்க செய்தது.   

அவனுக்கு அது நல்ல பிள்ளை. ஆனால் அதுவே செல்விக்கு கெட்ட பிள்ளை. இவன் என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறான்.. என்று ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள்.

“உன் தலையில ஏதோ தூசி இருக்கு”, என்று அவன் தலையில் கைவைத்து அதை எடுக்க.. செல்விக்கு மேனி சிலிர்த்தது. ஒரு பதட்டம் ஆரம்பித்தது.

அவளின் பதட்டம்.. அருளுக்கு உற்சாகத்தை கொடுக்க.அவனால், அவனை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ”ஏன் இப்படி நடுங்கற.. நான் என்ன செய்வேன்னு நினைச்ச. இப்படி செய்வேன்னா..” என்று, அவளின் கைகளை எடுத்து.. கையில் வைத்துக்கொண்டான்.

செல்விக்கு கைகள் நடுங்கியது. இழுக்கப் பார்த்தாள். முடியவில்லை.

“ஷ்! அமைதியா உட்கார்”, என்று அவளை அடக்கினான்.

“இல்லை.. இப்படி செய்வேன்னா”, என்று அவள் எதிர்பாராமல்.. அவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டான். அவளை தொடவேண்டும் என்றெல்லாம்.. அவன் எதுவும் நினைக்கவில்லை. ஆனால் அவள் அருகில் இருந்தவுடனே.. அவனால் தொடாமல் இருக்க முயன்றும் முடியவில்லை.  

அவ்வளவு தான் செல்விக்கு பயமாகி.. அவன் கால்களை இடித்துக்கொண்டு அவசரமாக எழுந்து நின்றாள். கத்தவும் முடியாது. திட்டவும் முடியாது. அவளின் அய்யாவும் அக்காவும் இருகிறார்கள்.

அவள் எழுந்து நின்றது.. அவனுக்கு வாகாய் போய்விட. “இல்லை. இப்படியா..”, என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் அவனை தள்ளிக்கொண்டு வெளியே வர முற்பட.. “இப்படியே உட்காரலைன்னா.. அப்புறம் வேற இடத்துல தான் குடுப்பேன்..” என்று அவளின் இதழ்களை பார்க்க..  பதட்டமானாள் செல்வி.

“ப்ளீஸ்.. அக்காவும் அய்யாவும் வெளிய தான் இருக்கிறாங்க. அவங்க ஏதாவது உள்ள வந்துட்டா.. எனக்கு அசிங்கமா போய்டும். விடுங்க..” என்றாள் குரலில் மன்றாடலுடன்.

“அப்போ அவங்க இல்லைனா பரவாயில்லையா..”, என்று அருள் உற்சாகமாக கேட்க..

“அவங்க இருக்கறதுனால தான்.. அவங்க முன்னாடி எதுவும் காட்டிக்க வேண்டாம்னு.. நான் அமைதியா இருக்கேன்.”

“இல்லைனா என்ன பண்ணுவ..”,

“இப்படி தள்ளி விட்டுட்டு போயிடுவேன்.” என்று அவன் எதிர்பாரதபோது அவனை தள்ளி.. வெளியே ஹாலுக்கு வேகமாக வந்துவிட்டாள்.

மனம் அவளிடமே கேள்வி கேட்டது. “உனக்கு அவனை பிடித்திருக்கிறதா என்ன? அவன் செய்வதற்கு எல்லாம் அமைதியாக இருக்கிறாய். அவன் உனக்கு கட்டாயத் தாலி கட்டியதில்.. உனக்கு ஒரு கோபம் இல்லையா? வருத்தம் இல்லையா? அவ்வளவு தானா உன் உறுதி. அவன் தொட்டால் கரைந்து போவாயா? போடா நீ.. நான் இந்த கல்யாணத்தை எல்லாம் ஒத்துகொள்ள மாட்டேன்.. என்று நீ ஏன் அவனிடம் சொல்லவில்லை? நீ.. எனக்கு யாருமில்லை.. என்று தைரியமாக அவனிடம் சொல்வதை விட்டு.. அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம்.. உன் மனதை அலைபாய விடுகிறாயா?”, என்று கேட்க..

அவளுக்கே.. அவளின் எதிர்ப்பில்லாத தன்மை பிடிக்காமல் போக.. கண்களில் நீர் திரண்டது.

அப்போது தான் ரூமை விட்டு வெளியே வந்த.. சரவணன் கண்களுக்கும் ராதிகாவின் கண்களுக்கும்.. செல்வியின் இந்த நிலை தப்பவில்லை. ஹாலுக்கு வந்த அருளுக்கும் தப்பவில்லை.

அவளின் கண்களில் கண்ணீர்.. அருளுக்கு  நிறைய வேதனையை கொடுத்தது. தான் சற்று அதிகப்படியாக நடந்து கொண்டோமோ.. என்ற வருத்தத்தையும் கொடுத்தது.

“ஏன் செல்வி, கண்கலங்கற..”, என்றாள் ராதிகா.

அதற்குள் சமாளித்துக்கொண்டாள் செல்வி. “ஒண்ணுமில்லைக்கா. ஏதோ தூசி கண்ல விழுந்திடுச்சு”, என்று சமாளிக்க முற்பட்டாள்.

அவள் சமாளிக்கிறாள்.. என்று கூட தெரியாத அளவிற்கு.. அங்கே யாருமில்லை. 

அவளின் கண்ணீரை பார்த்த சரவணன்.. ஏதோ ஒரு இரக்கம் அந்த நிமிடத்தில் செல்வியிடம் தோன்ற.. அருளிடம் பாய்ந்தான்.

“தாலி கட்டறதுக்கு எங்க சம்மதம் எல்லாம் தேவையில்லைன்னு.. நீ நினைச்சு இருக்கலாம்டா. ஆனா பொண்ணு சம்மதம் கூடவா தேவையில்லை. அவ சம்மதமில்லாம.. அவ கழுத்துல நீ தாலி கட்டினது ரொம்ப தப்பு. ஏதோ என் தம்பியா இருக்கவும், அது அப்படியே அடங்கிடுச்சு. வேற யாராவதா இருந்தா, நடந்திருக்கறதே வேறடா..” என்று கோபமாக சொன்னான். இந்த மூன்று நாட்களாக சரவணனின் மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம் அது. 

அவனின் கோபம் அருளுக்கும் கோபத்தை கொடுக்க.. “அவ சம்மதம், எனக்கு தேவையில்லைன்றதுனால தான்.. நான் அவகிட்ட கேட்கவே இல்லை. நீ என்ன நினைக்கற.. அவளை கேட்டா.. அவ என் பின்னாடியே வந்திருப்பாளா என்ன? அவளுக்கே.. இந்த கல்யாணம் பிடிச்சாலும் சரி.. பிடிக்காட்டாலும் சரி.. அவ தான் என் பொண்டாட்டி. உன் தம்பியா நான் இருக்கலைனா.. என்ன ஆகியிருக்கும். ஒண்ணும் ஆகியிருக்காது.” என்றான் குரலில் உறுதியுடன்.

“ஏய்! நீ சொன்னியாடி இவங்ககிட்ட.. உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு.” என்று செல்வியிடம் பாய்ந்தான். அவள், அவனின் வார்த்தை பிரயோகங்களை கேட்டு.. விக்கித்து நின்றாள், என்ன சொல்வது என்று தெரியாமல்.  

“நீ ஏண்டா அந்த பொண்ணை மிரட்டுற. உன்னை கேள்வி கேட்டவன்.. நான். எல்லாத்தையும் பிளான் பண்ணி செஞ்சிட்டு.. அந்த பொண்ணு மேல ஏன் பாயற. அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலைன்னா.. என்ன பண்ணுவ?”

அவளுக்கு பிடிக்கலை என்ற வார்த்தை.. கட்டுக்கடங்காமல் அருளுக்கு கோபத்தை கிளப்ப..

“உன்கிட்ட சொன்னாளா அவ.. என்னை பிடிக்கலைன்னு. அப்படியே இருந்தாலும்.. நீ இதுல தலையிடாத. உன்னை யாரும் பஞ்சாயத்து பண்ண கூப்பிடலை.”

“நான் தலையிடாம.. வேற யாருடா தலையிடுவா. நான் வளர்த்த பொண்ணுடா அவ. நான் தான் அவளுக்கு கார்டியன். நான் அப்படித்தான் கேட்பேன்”, என்றான் சரவணன் காட்டமாக.

“தோ பாரு! நீ அந்த பொண்ணுக்கு கார்டியனா இரு.. வளர்தவனா இரு.. யாரா வேணா இரு. இப்போ.. அவ என் பொண்டாட்டி. அது எதனாலையும் இல்லைன்னு ஆகிடாது. உன்னால முடிஞ்சதை நீ பண்ணிக்கோ..”

“என்னடா இப்படி பேசற. நீ பண்ணினது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா. வெளில இந்த மாதிரி நடக்கறதே தப்பு. ரெண்டு போலிஸ்காரங்க இருக்கற வீட்டுல நடந்திருக்கு. தப்பு செஞ்சவனும் போலீஸ்காரன். அவ உன்மேல ஒரு கம்ப்ளைண்ட் குடுத்தா, என்ன ஆகும் தெரியுமா?”

“ஒண்ணும் ஆகாது. எல்லாம் நான் பார்த்துக்குவேன். தோ பார் சரவணா, நீ அதையும் இதையும் சொல்லாத. அவ இனிமே என் மனைவி தான். யார் நினைச்சாலும் அதை மாத்த முடியாது. உன்னாலையும் முடியாது. அவளாலையும் முடியாது. முடிஞ்சா அவளுக்கு.. என்னோட வந்து குடும்பம் நடத்த சொல்லி வேணா.. அட்வைஸ் குடு.”, என்று அவனை பார்த்து கோபமாக சொன்னான்.

எல்லாவற்றையும்.. எதுவும் செய்யமுடியாமல்.. செல்வியும் ராதிகாவும் கேட்டிருந்தார்கள்.. பார்த்திருந்தார்கள்.     

செல்வி எதிர்பார்க்கவேயில்லை.. தன் அய்யா தனக்காக இவ்வளவு பரிந்து பேசுவார் என்று. ராதிகாவுமே எதிர்பார்க்கவில்லை.. சரவணன் செல்விக்காக, அருளிடமே சண்டை போடுவான் என்று.

அருள் எதை பற்றியும் கவலை படவில்லை. யார் வந்தாலும், எதிர்த்து நிற்கும் முடிவில் தான் இருந்தான். அது சரவணனாக இருந்தாலும் அவனுக்கு கவலையில்லை. ஏன்.. அது செல்வியாக இருந்தாலுமே அவனுக்கு கவலையில்லை.   

Advertisement