Advertisement

அத்தியாயம் இரண்டு:

செல்விக்கு பணம் கொடுத்த பிறகு அவளை மறந்து விட்டான் சரவண பாண்டியன். வேறு பிரச்சனைகள் அவனை ஆக்கிரமித்தன. அவனை ஆக்ரமித்த பிரச்சனைக்கு பெயர் ராதிகா. பிரச்சினை என்னவென்றால் அவள் அவன் மனதை ஆக்ரமித்திருந்தாள்.

அவனுடைய அத்தை பெண். இவர்களை விட வசதியில் பலமடங்கு குறைந்தவர்கள்.  அதுவும் ஒரு பிரச்சனையாக முளைத்தது. இன்னொரு பிரச்சினை அவனின் அத்தையின் குணம். அத்தைக்கு வாய் கொஞ்சம் அதிகம். அது அவனின் அன்னைக்கு பிடிக்கவே பிடிக்காது. ஏதோ அப்பாவின் தங்கை என்பதால் நிறைய விஷயத்திற்கு பொருத்துப்போகிறார் என்று தெரியும்.    

தற்போது ராதிகாவிற்கு  திருமணதிற்கு பார்த்துக்கொண்டிருந்தனர். திருமணமும் நிச்சயமாகிற சூழ்நிலையில் இருந்தது. இதை கேள்விப்பட்டதில் இருந்து மிகுந்த டென்ஷனில் இருந்தான்.

அவர்கள் வசதியில்லாதவர்கள் என்பதால் அவன் அம்மா ராதிகாவோடு சரவணனின் திருமணத்தை யோசித்ததுக் கூட கிடையாது. நேற்று தான் அவனின் அத்தை வீட்டிலிருந்து அவன் அத்தையும் மாமாவும் வந்திருந்தனர். ராதிகாவை அந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாகவும், தாய்மாமனாக முன்னின்று எல்லாவற்றையும் செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி சென்றனர்.

ராதிகா மனதில் என்ன இருக்கிறது என்றெல்லாம் சரவணனுக்கு தெரியாது. அவளிடம் அவன் விருப்பத்தை தெரிவித்தது கிடையாது. ஆர்வமாக பார்த்தது கிடையாது. ஏன் சிறு ஜாடை கூட கிடையாது. சொல்ல போனால் அவளை பார்த்தே ஆறுமாதம் இருக்கும். அவள் ப்ளஸ் டூ முடித்து ஒரு வருடம் ஆகிறது. அவளை மேலே காலேஜ் எல்லாம் அவள் வீட்டில் படிக்கவைக்கவில்லை. அவளை திருமணம் செய்து கொடுத்துவிடும் எண்ணத்தில் தான் இருந்தனர்.

எப்படியாவது இன்று அப்பாவிடமும் அம்மாவிடமும் பேசிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தான். அன்று இரவு சாப்பிடும் போது பேச்சை ஆரம்பித்தான் சரவணன். எப்படி பேசுவது.. என்ன வார்த்தைகள் போடுவது.. என்றே தெரியவில்லை. முதலில் அப்பாவிடம் பேசுவோம்.. அவரின் தங்கை மகள் தானே என்றெண்ணியவன்

“அப்பா நீங்க ராதிகாவை பொண்ணு பார்க்கிற விஷேசத்துக்குப் போறீங்களா”, என்றான்.

“ஆமாம் சரவணா, ஏன் கேக்கற?”,

“அப்பா!. எனக்கு”, என்று தயங்கியவன், பிறகு தைரியத்தை வரவழைத்து, “எனக்கு ராதிகாவை கல்யாணம் செஞ்சி வைக்கறீங்களா?” என்றான்.

சாம்பாரை ஊற்றிக்கொண்டிருந்த கோதை அப்படியே நின்றார். “என்ன சரவணா சொல்ற..”, என்றார் அதிர்ச்சியாக.

“எனக்கு ராதிகாவை பிடிச்சிருக்கும்மா. அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்”, என்றான் தெளிவாக.

இதை அவனிடமிருந்து, அவனின் அன்னையும் தந்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதை.. அவர்களின் முகமே தெளிவுபடுத்தியது.

“இது சரிவராது சரவணா”  என்றார் பட்டென்று கோதை.

“ஏன்மா? ஏன் சரிவராது?”..

“அவங்க நம்ம அளவுக்கு வசதியில்லை. நமக்கு சரியா சீர் செய்ய மாட்டாங்க”..

“சீராம்மா முக்கியம். பொண்ணு தானேம்மா முக்கியம்”.

என்ன சொல்வது என்று கோதைக்குத் தெரியவில்லை. “இல்லை சரவணா! எங்களுக்கு இதுல இஷ்டமில்லை”.

“உங்களுக்கு மட்டும் சொல்லுங்கம்மா, ஏன் அப்பாவையும் சேர்த்துக்கறீங்க”..

“உங்கப்பா வேற நான் வேறையாடா?”

“அப்போ நீங்க ஏன், நான் கல்யாணம் பண்ணிக்க கேக்கறது அப்பாவோட தங்கச்சி மகளைன்னு நினைக்க மாட்டேங்கறீங்க”?

“இங்க பாரு. எனக்கு உன்னை மாதிரி எல்லாம் பேசத்தெரியாது. எனக்கு இதுல இஷ்டமில்லை”, என்றார் அவன் அன்னையும் தெளிவாக.

“ஏம்மா இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறீங்க. அவ கொண்டுவந்து தான் நம்ம வீட்ல நிறையப் போகுதா?”

“நிறையுதோ இல்லையோ எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை.”

“நீங்க என்ன சொன்னாலும் சரிம்மா ராதிகாவைத் தான், நான் கல்யாணம் பண்ணிக்குவேன். நீங்களே கல்யாணம் பண்ணி வைச்சா கௌரவம். இல்லைனாலும் அவளை எப்படியும் கல்யாணம் பண்ணிக்குவேன். என்னப் பிரச்சினை அதனால வந்தாலும் சரி”, என்றான் கோபமாக.

“அவங்க பொண்ணு குடுக்கலைன்னா என்னடா பண்ணுவ?” என்றார் அவன் அன்னை புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து. எப்படியாவது ஏதாவது எசகு பிசகாக பேசி.. பெண் வீட்டாரை கோபப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்.

அதற்கெல்லாம் வாய்ப்பே கொடாமல் அவர் மகன் என நிரூபித்தான் சரவண பாண்டியன். “அம்மா பொண்ணுக்கே பிடிக்கலைன்னாலும்.. நான் அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்”, என்றான்.

எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார் பூபதி பாண்டியன். அவரின் தங்கை மகள் என்பதால் அவளையே கல்யாணம் செய்து வைக்கலாம் என்று தோன்றியது ஒரு புறம். மறு புறம் மனைவியை மீறி பேச பயமாகவும் இருந்தது. என்ன செய்வது என்றறியாதவராக மெளனம் காத்தார்.

அதை பார்த்த கோதைக்கு இன்னும் கோபம் ஏறியது. “என்ன அமைதியா இருக்கீங்க! ஒஹ்! தங்கச்சி பொண்ணுன்ன உடனே பாசம் பொங்கிடுச்சோ. அவளை பையனுக்கு கட்டி வைக்காலம்னு கனவு காண்றீங்களோ”, என்றார்.

“ஏன் கோதை இப்படி பொறியற. அவன் விருப்பத்தை சொல்லியிருக்கான். ஆற அமர பேசி முடிவெடுக்கலாம். எதுக்கு அவசரப்பட்டு உடைச்சு பேசற”.

“இதுல ஆற அமர பேசறத்துக்கு ஒண்ணுமேயில்லை. எனக்கு அந்த சம்பந்தம் இஷ்டமில்லை. வசதியில்லாதப்பவே உங்க தங்கச்சியை கைல பிடிக்க முடியலை. இதுல நான் அவ பொண்ணை வேற கட்டுனேன்னு வைங்க.. அவளை எல்லாம் கையிலயே பிடிக்க முடியாது.”

பின்பு தன் மகனிடம் திரும்பி, “உனக்கென்னடா வயசாகுது. இருபத்தஞ்சி தான் ஆகுது. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்?”

“எனக்கு ஒண்ணும் அவசரமில்லை. இப்போ கூட அந்த பொண்ணை கல்யாணம் பண்ணாம வச்சிருக்க சொல்லுங்க நான் எவ்வளவு நாளானாலும் நீங்க சொல்ற வரைக்கும் காத்திருக்கேன்”.

பதில் பேச முடியாதவராக நின்றார் அவன் அன்னை. அவன் அன்னைக்கு ராதிகாவின் அம்மாவை நினைத்தாலே.. வயிற்றில் புளியைக் கரைத்தது.    

தங்கை குணம் தெரிந்த பூபதி பாண்டியனும் அமைதியாக இருந்தார். கோதை சொல்வது போல் அவர் தங்கை சற்று அலட்டல் பேர்வழிதான். யார் பரம்பரை?. அடிபணிந்து போகத்தெரியுமா என்று அதற்கும் தன்னையே சிலாகித்து கொண்டார். வெளியே சொல்லவில்லை. சொன்னால் அவர் மனைவி சாமியாடிவிடுவார் என்று தெரியும்.

சாப்பிட்டு கொண்டிருந்த சரவணன் சரியாக சாப்பிடாமலேயே எழுந்து கொண்டான்.

“சரவணா சாப்பாடு மேல கோபத்தை காட்டாதே!”, என்று அன்னையும் தந்தையும் கூறியும் கேளாமல் அப்படியே சென்று படுத்துக்கொண்டான்.

அவன் பசி தாங்க மாட்டான் என்று அவன் அன்னைக்கும் தெரியும், தந்தைக்கும் தெரியும்.

எவ்வளவு சமாதனப்படுத்தியும் அவன் நிலையிலேயே நின்றான். மறுநாளும் சாப்பிடவில்லை.

“என்னங்க இவன் இப்படி படுத்தறான்”, என்று கோதை பூபதி பாண்டியனிடம் கேட்க

“எனக்கு அதைபத்தி ஒண்ணும் தெரியாது கோதை. நீயாச்சு! அவனாச்சு!”

“என்ன நானாச்சு! அவனாச்சு! இப்படியே பேசி உங்க தங்கச்சி மகளை கட்டி வைக்கலாம்னு பாக்கறீங்களா, அதெல்லாம் முடியாது.”

“தோ பார்! நான் நினைக்கிறது.. நீ நினைக்கிறது எதுவும் முக்கியமில்லை. அவன் நினைக்கறது தான் முக்கியம். பொண்ணுக்கே விருப்பமில்லைன்னாலும் அவளைத்தான் கட்டுவேன்னு சொல்றான். இதை மீறி நாம என்ன பண்ண முடியும்னு நீ நினைக்கிற?.”

“வேற பொண்ணை நாம கல்யாணம் பண்ணிவைக்கலைனாலும்.. ஒண்ணும் தெரிவிக்காது இவ என் தங்கச்சிப் பொண்ணு, நாளைக்கு அவனா போய் கல்யாணம் பண்ணிட்டு வந்தா.. நமக்கு தான் அசிங்கம். முறை இருந்தும் நாம செய்யலைன்னா, ஊர்ல நாலு பேர் நம்மளைத்தான் கேவலமா பேசுவாங்க.”

“கல்யாணம் பண்ணி வைக்கலைன்னறதுக்கு என்ன காரணம் சொல்வ. நமக்கும் அவங்களுக்கும் பகைன்னா கூட.. சொல்லலாம். அப்படியும் இல்லை.. நீயே யோசி. ஒண்ணு உன் பையன் மனசை மாத்து. இல்லைன்னா கல்யாணத்துக்கு ஒத்துக்கோ”

“எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவெடு. ஏன்னா இன்னும் ரெண்டு நாள்ல அந்த பொண்ணை பொண்ணு பார்க்க வராங்க. அதுக்குள்ள நம்ம எதாவது செஞ்சா தான். இல்லைன்னா உன் பையன் ஏதாவது செஞ்சிடுவான்”, என்றார்.

கோதைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படியாகும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இப்படி இந்த பையன் செய்துவிட்டானே என்று வருத்தமாக இருந்தது.                            

சரவணன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் போது என்ன செய்வது என்று அவர் மனதை.. அவரே தேற்றிக்கொண்டார் கோதை. முடிவெடுத்து பிறகு அவர் கணவரிடம் சென்று சொன்னார்.

அவருக்கு சந்தோஷமே. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “நல்லா யோசிச்சிக்கோ கோதை, அப்புறம் நீங்கல்லாம் தான் சொன்னீங்கன்னு எங்களை கைகாட்ட கூடாது. இது உன் முடிவு தான்”, என்றார் ஒன்றும் தெரியாதவர் போல.

“அப்பாவும் புள்ளையும் நினைச்சதை சாதிச்சிடீங்க இல்லை. நீங்க இப்படி தான் பேசுவீங்க”, என்று நொடித்தார்.

நீ என்னவோ பேசிக்கொள்.. எனக்கொன்றுமில்லை என்று எப்பொழுதும் போல மனதில் நினைத்த பூபதி பாண்டியன். “எப்போ அவங்க வீட்டுக்கு போகலாம்?” என்றார்.

“நடத்தறதுன்னு ஆகியாச்சு. இன்னும் எப்போ போனா என்ன.. கிளம்புங்க.”, என்று தன் கணவனை ஓட்டினார் கோதை.

இருவரும் சென்று சரவணனிடம் கூறினர். அவன் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே.

எல்லோருக்கும் மேல இருக்கான் இவன். சந்தோஷத்தை கூட சிரிச்சுக் காட்ட மாட்டான் என்று நினைத்த அவன் அன்னையும் தந்தையும் தங்களின் மகன் குணம் தெரிந்து, பக்கத்து ஊரில் இருந்த தங்கை வீட்டிற்கு கிளம்பினர்.

எழிலரசிக்கு ஆச்சர்யம். “எப்படியோ நினைச்சதை சாதிச்சிட்ட அண்ணா. இரு நான் அருள் கிட்ட சொல்றேன்”, என்று தொலைபேசியில் தன் சின்ன அண்ணனை தொடர்பு கொண்டாள்.

அவள் சின்ன அண்ணன் அருள் பாண்டியன். பி இ (இ சி இ) இரெண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தான்.

“அருள். அண்ணா இருக்காருல்ல. அவரு.”, என்றாரம்பித்து அவன் நேற்றிலிருந்து வீட்டில் வாக்குவாதம் செய்தது பின்பு சாப்பிடாமல் இருந்தது இப்போது அவர்களின் அன்னையும் தந்தையும் பெண் கேட்கப் போயிருப்பது.. என்றத்தனையும் சொன்னாள்.

“என்ன! நம்ம ராதிகாவை அண்ணன் ஆசைபடுறாரா!” என்றான் அருள். ராதிகா அவனிடம் நன்கு வாயடிப்பாள். ஆனால் சரவணனிடம் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள். அவனைப்பார்த்தாலே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவாள்.   அண்ணன் காதலிப்பது அவனுக்குமே இது புதிய செய்தி தான். ஏனென்றால் அவனின் ரோல் மாடலே அவன் அண்ணன் தான்.

அவனின் அண்ணன் காதலிக்கிறான். வீட்டில் ரகளை செய்கிறான். என்பதெல்லாம் அவனால் யோசிக்கவே முடியவில்லை. இந்த காதல் எல்லோரையும் ஒரு வழியாக்கிவிடுகிறது என்று தங்கையிடம் பேசி போனை வைத்தான்.

அவன் போனை வைத்ததும், வேலை எழிலரசிக்கு நெட்டித் தள்ளியது. வீடெல்லாம் கூட்டி.. பின்பு பாத்திரம் விளக்கி.. அப்பாடா என்று நிமிர்ந்தாள். “இந்த செல்வி எப்போதான் வருமோ தெரியலையே”, என்ற எண்ணம் தான் அவள் மனதில் ஓடியது. “வந்து தொலையேண்டி”, என்று அவளை திட்டிக்கொண்டே வேலையை பார்த்தாள்.

அங்கே தன் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார் பூபதி பாண்டியன். தன் அண்ணனையும் அண்ணியையும் திடீரென்று அவரின் தங்கை கற்பகம் எதிர்பார்க்கவில்லை.

ஆச்சர்யத்தை அப்படியே வெளிக்காட்டினார். “என்ன அதிசயம் அண்ணா இது. தங்கச்சி வீட்டு பக்கம் வராதவங்க வந்திருக்கீங்க”, என்றார்.

“ஏன், நான் உன் வீட்டுக்கு வந்தேதேயில்லையா?”, என்றார் பூபதி.

“நீயே சொல்லு. எப்ப வந்த?”, என்றார் கற்பகம்.

“சரி அதை விடு, மச்சான் இல்லை?”,

“இப்போ தான் வெளியே போனார். பக்கத்துல தான் போயிருக்கார். போன் பண்ணி வரச்சொல்றேன்”, என்று கற்பகம் அவரை தொலைபேசியில் அழைத்து தன் அண்ணனும் அண்ணியும் வந்திருப்பதாக கூற வராதவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அவரும் அடித்து பிடித்து ஓடிவந்தார்.

“வாங்க, வாங்க, மச்சான். வாங்க” என்றார்.

“எங்க பொண்ணையும் பையனையும் காணோம்”, என்றார் கோதை.

ராதிகாவுக்கு இளையவன் சேகர். அவன் பத்தாம் வகுப்பு மாணவன்.

“ராதிகா கோயிலுக்கு போகனும்னு சொன்னா அண்ணி, இப்போதான் சேகரை துணைக்கனுப்பி கோயிலுக்குப் போயிட்டு வர சொன்னேன்”.

“நல்ல சகுனந்தாம்”, என்றார் கோதை.

எதற்கென்று புரியாமல் கற்பகமும் அவர் கணவரும் பார்க்க

அவர்களின் பார்வையை தாங்கியவராக பூபதி பாண்டியன் வாயைதிறந்தார்.

“நம்ம சரவணனுக்கு ராதிகாவை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்”, என்றார்.

இதை கற்பகமும் அவள் கணவரும் எதிர்பார்க்கததால் அப்படியே நின்றனர்.

“நிஜமா தான் சொல்றீங்களா”, என்று அசட்டு தனமாக ஒரு கேள்வியை உதிர்த்தார் கற்பகம்.

“நிஜம்தான் கற்பகம்”, என்றார் கோதை.

“என்ன அண்ணி திடீர்ன்னு. நாங்க பொண்ணு பார்க்க வரபோறாங்கன்னு சொன்னப்ப கூட ஒண்ணும் சொல்லலை”.

மகனின் விருப்பம் என்று கூறாமல். “அதுக்கப்புறம் தான் தோணிச்சு”, என்றார் கோதை. 

தன் அண்ணனும் அண்ணியும் அவர்களின் மகனுக்கு தங்கள் பெண்ணை கேட்டு வந்திருக்கிறார்கள் என்றவுடனே  மகிழ்ச்சி பொங்கியது கற்பகதிற்கு. அவர் தன் கணவர் முகத்தை பார்க்க அவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

“ரொம்ப சந்தோஷம் அண்ணா”, என்றார் கற்பகம். தனது தாய் வீடு என்பது ஒரு புறம் இருக்க. அவர்களின் வசதியை நன்கு அறிந்தவர் கற்பகம். அவரை திருமணம் செய்து கொடுத்த போதெல்லாம் அவர்களின் வசதி வாய்ப்பு சாதாரணமாக தான் இருந்தது.

பின்பு அது பல்கி, நல்கி, பலமடங்கு பெருகிவிட்டது.. கற்பகதிற்குத் தெரியும். தாங்கள் இப்பொழுது பார்த்திருக்கும் மாப்பிள்ளைய விட இவர்கள் பல மடங்கு வசதியில் உயர்ந்தவர்கள். அதையும் விட சரவணனைப் பற்றி ஒரு குறையும் சொல்ல முடியாது. அவர்களின் கண்ணெதிரே வளர்ந்தவன்.

மிகுந்த சந்தோஷமே. பூரித்து விட்டது நெஞ்சம்.

உடனே சரியென்று தலையாட்ட வைத்தது. அவர்கள் சரியென்று தலையாட்டவும்.. ராதிகா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

இவர்களை பார்த்தவுடன், “வாங்க மாமா, வாங்கத்தை”, என்று வரவேற்றவள் தன் அன்னையின் புறம் சென்று நிற்க

“மாமாக்கும் அத்தைக்கும் குடிக்க காபி போடு”, என்றார் அவளின் அன்னை கற்பகம்.

வேகமாக உள்ளே சென்றாள் ராதிகா. “சேகர் எங்க ராதிகா”, என்று அவளின் அம்மா கேட்க.

“பிரண்ட்ஸ்ஸோடப் பேசிட்டு நிக்கறான்மா”, என்று குரல் கொடுத்தவள் மளமளவென காபி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள்.

எதற்கு வராதவர்கள் வந்திருக்கிறார்கள் என்று மனம் எண்ணிகொண்டிருக்க கைகள் தானாக அதன் வேலையை செய்தது.

வெளியே கற்பகம் தன் அண்ணனிடம், “அண்ணா, உனக்கு தெரியாததில்லை. எங்களால உங்க நிலைமைக்கு ஏத்தமாதிரி சீர்செனத்திஎல்லாம் பண்ண முடியாது. அது உங்களுக்கு சரி வருமான்னு யோசிச்சுக்கங்க. நாள பின்ன.. என் பொண்ணை ஏதாவது குத்தி காட்டினா என்னால தாங்க முடியாது”, என்றார் கண்கள் கலங்கியவராக.

“நீ ஏன்மா கண்கலங்கற. சீர்வரிசையெல்லாம் ஒரு விஷயமேயில்லை. நீ செய்யறதை செய்”, என்றார்.

இங்கே கோதைக்கு எரிந்தது. “எப்படி சீன் போடறா பாரு. கண்ல தண்ணிய எப்பவும் ரெடியா வச்சிருப்பாளோ. முனுக்குங்கவும் கண்ல தண்ணி கொட்டுது.”

நடுவில்.. “ஓவரா வார்த்தையை விடாதீங்க”, என்று தன் கணவனுக்கு சமிஞ்சைக் காட்டவும் மறக்கவில்லை கோதை. மனைவியின் பாஷை புரிந்த பூபதி அப்படியே அமைதியாகிவிட்டார்.

அதற்குள் காபி எடுத்து வந்தாள் ராதிகா.

அத்தைக்கும்   மாமாவிற்கும் கொடுக்க.. அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது. எதற்கு இந்த அமைதி என்று புரியாதவளாக.. காபி கொடுத்து ஒதுங்கி நின்றாள்.

அவளுக்கு சரவணனுக்கு தன்னை பெண் கேட்டு வந்திருப்பார்கள் என்றெல்லாம்.. எண்ணம் உதிக்கவேயில்லை. சிறிது நேரம் நின்றவள் யாரும் பேசுவதாக காணோம்.. என்றவுடனே உள்ளே சென்றாள்.

அதற்குள் சேகர் வர அவனிடம், “என்ன படிக்கற? எப்படி படிக்கற?,” போன்ற பேச்சுக்கள் எழ நேரம் ஓடியது. சிறிது நேரம் இருந்தவர்கள்.. “நான் அப்புறம் என்ன ஏதுன்னு தகவல் சொல்றேன்”, என்று சொல்லிக் கிளம்பினர். போகும்போது ராதிகாவைக் கூப்பிட்டு மறக்காமல் சொல்லிச் சென்றனர்.

இவர்கள் போனதுமே.. நாளை மறுநாள் பெண் பார்ப்பதற்கு முன்னே நின்ற தரகருக்கு, போன் செய்த ராதிகாவின் அப்பா தங்கள் பெண்ணுக்கு முறைப்பையனே தகைந்து விட்டதால்.. இந்த சம்மந்தம் வேண்டாம்.. பெண் பார்ப்பதும் வேண்டாம், என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது அவளின் காதுகளில் நன்றாக விழுந்தது.

“என்ன சொல்கிறார் இந்த அப்பா”, என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே.. உள்ளே வந்த அவளின் அம்மா.. “ராதிகா, உன்னை நம்ம சரவணனுக்கு பொண்ணு கேட்டாங்கம்மா. நாங்க சரின்னு சொல்லிட்டோம்”, என்றார்.

“என்ன! சரவண மாமாவுக்கா”, என்றாள் அதிர்ச்சியாக.

அவளுக்கு சரவணனை பார்த்தால்.. எப்பொழுதும் சற்று பயம். அவனோடு தனக்கு திருமணமா.. என்றிருந்தது. அவனும் அவன் உயரமும் முரட்டு தோற்றமும்.. சிறுது பயம் எழுந்தது. கனிவாக அவன் அவளை, ஒரு பார்வை பார்த்தது கூட கிடையாது. அவன் பார்ப்பதே அவளுக்கு மிரட்டலாகத் தான் தோன்றும். 

“அம்மா! மாமாவுக்கா?”, என்றாள் மறுபடியும்.

“ஆமாம் ராதிகா! ஏன்மா?”, என்றார்.

“எனக்கு அவரைப் பார்த்தா பேசவே வராது. நான் எங்கப்போய் அவரை கல்யாணம் பண்ணிக்கறது”, என்றாள் மனதை மறைக்காது.

“அதெல்லாம் ஒரு விஷயமேயில்லை இல்லை ராதிகா. போகப்போக எல்லாம் சரியா போகும். புதுசா ஒரு மாப்பிள்ளையை பார்த்தா.. அவங்க என்ன ஏதுன்னு, நமக்கு என்னத் தெரியும்?. இதுன்னா என் கண்முன்னாடி வளர்ந்த பையன். சொக்கத் தங்கம். ஒரு குறையும் சொல்ல முடியாது. நாங்களே அவங்க பொண்ணு கேட்டுட்டாங்கன்னு எவ்வளவு சந்தோஷமா இருக்கோம். நீ அதையும் இதையும் சொல்லாத”, என்றார்.

இன்னும். “எனக்கு கல்யாணம் சரவணன் மாமாவோடயா..”, என்று தான் அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு அவள் எதையும் வெளிக்காட்டவில்லை.

பெண் கேட்டுவிட்டு வந்துவிட்டனர் தான், பூபதி பாண்டியன் தம்பதியினர். ஆனால் திருமணம் எப்போது செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. தற்போது சரவணனுக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை அவர்களுக்கு. அவனுக்கு இப்போது தான் இருபத்தி ஐந்து வயது. இருபத்தி ஏழில் தான் திருமணம் செய்யலாம் என்றிருந்தனர்.  இப்போது செய்வதா.. தள்ளிப் போடுவதா.. எதுவும் தெரியவில்லை.

பேசாமல் பெண் வீட்டினரிடமே கேட்டு விடுவோம், என்று அவர்களுக்கு தொலைபேசியில் அழைக்க

“என்ன அண்ணா இப்பதான் போனீங்க”,

“அது அம்மா.. கல்யாணம் கொஞ்சம் தள்ளி வைக்கலாமான்னு பார்க்கிறோம். அதான்”,

“ஏன் அண்ணா?”,

“அவன் படிச்சிட்டு இருக்கான். அவனுக்கு ஒரு வேலை வந்துடட்டும்னு பார்க்கிறோம்”, என்றார்.

“என்ன வேலையா”, என்றிருந்தது கற்பகத்திற்கு.  அவருக்குப் பயம் கிளம்பியது. நாட்களை கடத்தி, அவன் பெரிய வேலையில் அமர்ந்த பின்பு.. கல்யாணம் வேண்டாம் என்று அவர்கள் ஏதாவது சொல்லிவிட்டால்.. என்ன செய்வது என்று. அவருக்கு தெரியாதே சரவணன் தான், பிடிவாதம் பிடித்து இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறான் என்று. அதனால் பயந்தவர் தன் அண்ணனிடம்

“இப்போ தான் அண்ணா ராதிகாக்கு கங்கணப் பொருத்தம் இருக்கு. இதுக்கு அப்புறம் இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் வருதாம். நாம அதுவரைக்கும் பொறுமையா இருக்க முடியாதே”, என்றார்.   

“சரிம்மா, என்ன செய்யலாம்னு பார்க்கலாம்”, என்று போனை வைத்தார். பிறகு தன் மனைவியிடம். “அவ இப்போவே கல்யாணத்தை வைக்கணும்னு சொல்றா”, என்றார்.

“உங்க தங்கச்சிக்கு பயமா இருக்கும். நாம பின்னால ஏதாவது பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டா.. அதான் அவசரப்படறா. வேற ஒண்ணுமில்லை”, என்றார் பளிச்சென்று. மனிதர்களின் மனங்களை எடை போடுவதில் வல்லவர் கோதை.  

பிறகு சரவணனிடம் பேச அவன் “இன்னும் மூன்று மாதத்தில் எனக்கு மெயின் எக்ஸாம் வருது. அது முடிந்த பிறகு தான் திருமணம்”, என்றுவிட்டான்.  அவன் ஏற்கனவே ப்ரிலிமினரி எக்ஸாம் பாஸ் செய்து விட்டான். 

அதனால் இப்போது சிம்பிள் ஆக திருமணத்தை நிச்சயம் செய்துவிடுவது.. பின்பு அவன் பரீட்சை முடிந்தவுடன் கல்யாணத்தை வைத்துக்கொள்வது.. என்று முடிவெடுத்து பெண் வீட்டிலும் தகவல் கூறினர்.

Advertisement