Advertisement

அத்தியாயம் பதினெட்டு :

அருளின் தெனாவெட்டான பதிலை கேட்ட செல்வி.. இன்னும் கோபமானாள். அவனை கோபத்தோடுப் பார்க்க.. அந்த கோபம் அருளுக்கு பிடித்திருந்தது.

“பயப்படாத.. உன்னோட படிப்பை கெடுத்து.. எதுவும் செய்யும் எண்ணம், இப்போதைக்கு எனக்கு இல்லை. அந்த எண்ணம் அப்படியே இருக்கறது.. உன் கையில தான் இருக்கு. சொல்லப் போனா.. இப்போ கல்யாணத்துக்கு கூட, எனக்கு அவசரமில்லை தான். ஆனா.. இவங்க அத்தனை பேர்கிட்டையும் சொல்லி.. பெர்மிஷன் வாங்கி.. உன்கிட்ட சொல்லி.. பெர்மிஷன் வாங்கி.. இதுவெல்லாம் நடக்கும்னு தோணலை. அது தான்..” என்றான்.

எவ்வளவு தன்னிலை விளக்கம் கொடுத்தாலும்.. நடந்த தவறு இல்லையென்று ஆகிவிடுமா.. என்றிருந்தது செல்விக்கு. அது தவறாகவே தான் பட்டது செல்விக்கு.

அவளுக்கு தன் அய்யா, முகம் திருப்பிய விதம்.. அக்கா எதுவும் பேசாதது.. என்று மனதை அதுவே வட்டமிட.. சோர்வில் தானாக கண்கள் மூடின.

இதை பார்த்த அருள், “என்ன பண்ணுது”, என்று பதறினான்.

“ஒண்ணுமில்லை”, என்று தலையசைத்தாள். அவளுக்கு காலையில் இருந்தே.. உடல் ஏதோ கஷ்டமாகவே இருந்தது. வாமிட் வரும் போலவே இருந்தது. வயிற்றில் ஏதாவது இருந்தால் தானே வாமிட் வரும். மிகவும் சோர்வாக உணர்ந்தாள். நடந்த நிகழ்வுகள் மனதையும் உடலையும் அழுத்தின.

அருள் இனி என்ன பேசினாலும்.. கேட்கும் மனநிலையில் இல்லை, செல்வி.

அப்போது தான்.. அவள் முகத்தில் மித மிஞ்சிய சோர்வை உணர்ந்தவன்.. அவள் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று ஞாபகம் வந்தவனாக.. இப்போது, தான் சாப்பிட சொன்னாலும்.. சாப்பிடுவாளா தெரியலையே என்று நொந்தவன்.. முதலில் ஒரு காபிவை வாங்கி வர எழுந்து போனான்.

எங்கோ போகிறான் என்று நினைத்தவள்.. நேரம் பார்த்தாள். மாலை ஆறரை என்று காட்டியது. இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறதா.. என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே.. காபியோடு வந்தான் அருள்.

“இதை முதல்ல குடி”, என்றான்.

“இல்லை வேண்டாம்”, என்று மறுத்தாள்.

“குடி செல்வி! நமக்குள்ள இருக்கிற பிரச்சினை இப்போ முடியறது கிடையாது. அதை இதுல காட்டாத. பேசாம குடி.”, என்று அதட்டினான்.

அவளுக்கு இருந்த சோர்வில்.. காபி வேண்டுமாக தான் இருந்தது. பேசாமல் வாங்கி குடித்தாள். குடித்தது தான் போதும்.. வருமோ வருமோ என்றிருந்த வாமிட் வந்தே விட்டது.

ரயில்வே ட்ராக்கிற்கு அவசரமாக ஓடி வாமிட் எடுத்தாள். “என்ன பண்ணுது செல்வி”, என்று பதறினான் அருள். அவளால் பேசக்கூட முடியவில்லை குமட்டியது.

அவசரமாக போய், ஒரு தண்ணி பாட்டில் வாங்கி வந்து கொடுத்தான். மறுக்காமல் வாங்கி கொண்டாள். அவளால் ஒன்றும் முடியவில்லை. அதிலேயே வாய் கொப்பளித்து, முகம் கழுவியவள்.. மெதுவாக நடந்து வந்து.. அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

அவள் பேக் கூட வேறொரு பெஞ்சில் தான் இருந்தது. அவளுடைய  பேகை கொண்டு வந்து அருகில் வைத்தான் அருள். அதன் மேல் சாய்ந்து கொண்டாள். “இரு வந்துறேன்..”, என்று அவசரமாக அருள் எங்கோ போனான்.

மெடிக்கல் ஷாப்பில் போய்.. வாமிட் நிற்கும் ஒரு மாத்திரை வாங்கி வந்தவன்.. கூடவே பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கி வந்தான்.

“இதை சாப்பிடு”, என்று மாத்திரையை கொடுத்தான்.

“எதுக்கு இது”, என்றாள் செல்வி.

அவள் ஒரு டாக்டர் என்பதையே.. சற்று நேரம் மறந்திருந்தான் அருள். அதனால் தான், அவளை கேட்காமல் போய் மாத்திரை வாங்கி வந்தான்.

“வாமிட் நிக்கறதுக்கு”,                 

அதை வாங்கி அதன் பெயரை பார்த்தவள்.. அது அதற்கு தான் என்று உறுதி செய்துகொண்டு.. அதை விழுங்கினாள்.

“இந்த பிஸ்கட் சாப்பிடு”, என்றான்.

‘’கொஞ்ச நேரம் கழிச்சு தான் சாப்பிடணும்.’’ என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து.. அந்த பிஸ்கட் உண்டாள். அது அவளுக்கு தேவையாக இருந்தது. பிறகு அவனும் எதுவும் பேசவில்லை. இவளும் எதுவும் பேசவில்லை. ட்ரெயின் வரும் வரையிலும் அமைதி நீடித்தது.

நடுவில், டிபன் வாங்கி வரட்டுமா.. என்று ஒன்றிரண்டு முறை அருள் கேட்க.. பிடிவாதமாக மறுத்துவிட்டாள் செல்வி. அதற்கு மேல், ஒன்றும் பேசமுடியாமல் அருளும் விட்டுவிட்டான்.

ட்ரெயின் வந்ததும்.. தன்னுடைய பெர்த்திற்கு செல்வி போக.. அருளும் தொடர்ந்து வந்தான். இவன் எங்கே.. தன்னோடு வருகிறான் என்பது போல.. செல்வி அவனை திரும்பி பார்க்க.. அவளின் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்தவன்.. “வரும்போதும், உன்கூட தான் வந்தேன்.. உனக்கு தெரியுமா?“, என்றான்.

“என்ன.. வரும்போதும் இவன், என்கூட வந்தானா அது கூட தெரியாமல் நான் வந்திருக்கிறேனா..” என்று தன் மீதே கோபமாக வந்தது.

செல்வியின் பெர்த்.. அப்பர் பெர்தாக இருந்தது. இவள் மேலே ஏறி படுக்க வேண்டுமா என்று யோசித்த போதே.. கீழே யாரோ ஒரு இளைஞன் தான் இருந்தான். அவனிடம் வலிய போய் அறிமுகப்படுத்திகொண்டான் அருள்.

“சர்! நான் அருள். சென்னைல ஏ எஸ் பி ஆ இருக்கேன்.”, என்றதும்.. அந்த இளைஞன் மரியாதையாக பார்த்தான். “இது என் மனைவி. உடம்பு சரியில்லை. அவளுக்கு மேலே ஏறி படுக்கறது கஷ்டம். உங்க பெர்த் கொடுக்க முடியுமா?” என்றான்.

“ஒஹ்.. சுயூர் சர்.” என்றவன் உடனே மேலேறிக்கொண்டான். அவளுக்கு எதிரே இருந்த பெர்த்தில்.. யாரோ நடுத்தர வயதுக்காரர் இருக்க.. அவரிடமும் பேசி அவரை வேறெங்கோ அனுப்பிவிட்டு.. இவன் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டான்.

இதற்கு ட்ரெயினில் நிறைய கூட்டமும் இருந்தது. “இவனும் நம் போல டிக்கெட் எடுத்திருப்பானோ”, என்று செல்விக்கு தோன்றியது. 

“இவனும்.. அய்யா எனக்கு எடுத்து கொடுத்தது போல.. டூ டையர் ஏ ஸீ யில் டிக்கெட் எடுத்திருப்பானோ..” என்று தோன்றியது.  

இவன் செய்கின்ற செயலை எல்லாம்.. முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது,, பார்த்துக்கொண்டிருந்தாள் செல்வி. வேண்டாம் என்றாலும்.. அவன் விடப்போவதில்லை என்று தெரியும். இதில், தான் வேறு ஏன்.. அவன் தன்னிடம் பேச வாய்ப்பு கொடுக்கவேண்டும்.. என்று அமைதியாகவே இருந்துவிட்டாள்.

இப்போது அவளுக்குப் பசித்தது. அவன் வாங்கி கொடுப்பது வேண்டாம் என்றாலும்.. தானவது ஏதாவது வாங்கி உண்டிருக்கலாம்.. என்று தோன்றியது. ஒரு ராத்திரி தானே.. பசி என்ன உனக்கு புதிதா.. பழயதை எல்லாம் மறந்துவிட்டாயா? என்று தனக்கு தானே கடிந்து கொண்டு.. அமைதியாக இருந்து விட்டாள்.

அருள் அமைதியாக தான் வந்தான். அவளை எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்கவில்லை. பேசவும் முற்பட வில்லை. ஒரு வகையில்.. தான் அவளிடம் நடந்து கொண்டது.. ரொம்பவும் அதிகப்படி என்றே தெரியும். அதனால் அடக்கியே வாசித்தான். ஆனால்.. தனக்கு கட்டாயம் வேறு வழியில்லை.. என்றும் அவனுக்குத் தெரியும்.

ட்ரெயின் கிளம்ப போகும் போது.. இவர்கள் கம்பார்ட்மெண்டில் ஒரு கர்ப்பிணி பெண்ணும், அவள் கணவனும் ஏறினர். வயிற்றை பார்த்தாலே தெரிந்தது.. அந்த பெண்ணிற்கு ஏழு எட்டு மாதம் இருக்கும் என்று. அவசரத்திற்கு ஏறியிருகின்றனர் என்று அவர்களை பார்த்ததில், அவர்களின் பதட்டதிலேயே தெரிந்தது.

ட்ரெயின்னும் கிளம்பிவிட்டது. அந்த பெண் எங்கேயாவது இடம் கிடைக்குமா என்று தேட.. அருளும் கண்களாலேயே அளந்தான். யாரும் விடுவது போல தெரியவில்லை. அங்கே இடமும் முதலில் இல்லை.

அருள் தான் எழுந்து.. அந்த பெண்ணிற்கு இடம் விட்டவன், “கர்ப்பிணியை கூட்டிட்டு.. இப்படி முன்பதிவு இல்லாம பயணிக்கலாமா?”, என்று கேட்டான், அவள் கணவனிடம்.

“சாரி சர். அவங்கப்பாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்குன்னு போன் வந்தது. அதான் உடனே கிளம்பிட்டோம். டி டி ஆர் கிட்ட சொல்லி.. ஏதாவது ஏற்பாடு செய்யலாம்னு நினைச்சு தான் இங்கே ஏறினோம். பார்த்தா இங்கேயே ரொம்ப கூட்டமா இருக்கு”, என்றான்.

“சரி, இங்கே உட்காருங்க”, என்று அருள் இடம் விட்டான். 

அவர்கள் இருவரும் அமர்ந்தவர்கள். “நீங்களும் உட்காருங்க சர்”, என்றனர். “எப்படிங்க! அவங்க தூங்காமயே ட்ராவல் பண்ணுவாங்க..? நான் நின்னுப்பேன். ஒண்ணும் பிரச்சனையில்லை. அவங்க தூங்கட்டும்.” என்று விட்டான், அந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்த்து.

அதே சமயம் தூர போய் நிற்கவும் மனதில்லை அருளுக்கு. நாளை எப்படியும்.. அவள் ஹாஸ்டல் போய் விடுவாள்.. என்று தெரியும். அவனும் அதை தடுக்க போவதில்லை. அவள் படிப்பை முடிக்கட்டும்.. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்.

ஆனால்.. இருக்கும் இந்த நிமிடத்தை இழக்க.. அவனுக்கு மனமேயில்லை. அந்த இடத்தை விட்டு போவதா.. வேண்டாமா என்று அவன் மனம் பட்டி மன்றம் நடத்திகொண்டிருக்க.. நடந்ததை எல்லாம் பார்த்துகொண்டிருந்த செல்வி, நகர்ந்து அவனுக்கு இடம் விட்டாள். எப்படியோ அவன் போகட்டும் என்று அவளால் விட முடியவில்லை.

“நீயே ரொம்ப டயர்டா இருக்க. நீ தூங்க வேண்டாமா?’’ என்றான் அருள்.

“பரவாயில்லை. உட்கார்ந்துட்டே தூங்கறேன். எவ்வளவு நேரம் நிற்பீங்க.”, என்றாள்.

இதுதான் சாக்கென்று அருளும் அமர்ந்து விட்டான். நேரம் ஆக ஆக எல்லாரும் உறங்கி விட்டனர். எதிரே இருந்த கர்ப்பிணி பெண் தன் கணவனின் மடியில் தலை வைத்து உறங்கி விட்டாள். அவள் கணவனும் உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கி விட்டான்.

உறங்காமல் இருந்த இரு ஜீவன் அருளும் செல்வியும் தான். செல்விக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் சோர்வில் படுத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. அருள் ஒரு ஓரமாக தான் அமர்ந்திருந்தான். இவள் காலை குறுக்கி படுக்க முடியும் தான். சாப்பிடாதது வேறு நிறைய சோர்வையும்.. ஒரு மாதிரி மயக்கத்தையும் கொடுக்க..

அவளால் முடியவில்லை.  அப்படியே சுருண்டு படுத்துகொண்டாள். செல்வி உறங்க.. இன்னும் நன்றாக, ஓரமாக நகர்ந்து.. அவளுக்கு வசதி பண்ணிக்கொடுத்தான் அருள்.

இருந்தாலும்.. இவள் கால் அவன் மேல் லேசாக உராய்ந்தது. அதை கவனிக்கும் நிலையில் கூட செல்வி இல்லை. அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டாள்.

அவள் மிகவும் சோர்வாக இருக்கிறாள். அதுதான் இந்த செய்கை என்று நன்கு உணர்ந்திருந்தான் அருள். அவள் உறங்கும் வரை அமைதியாக இருந்தவன்.. அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவுடனே.. அவள் உறக்கம் கலையாமல், அவளின் கால்களை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டான்.

வேறொரு சமயமாயிருந்தால் செல்வியின் உறக்கம் கலைந்திருக்கும். அவளுக்கு இருந்த சோர்வு.. அதையும் மீறி அருள் இருக்கிறான்.. பார்த்துகொள்ளுவான் என்ற நம்பிக்கை. அவள் உறக்கத்தை கலைய விடவில்லை.

அவள் கால்களை எடுத்து மடி மேல் வைத்துக்கொண்டது ஒரு சுகத்தை கொடுக்க.. அவனும் கண்ணயர்ந்தான். இரண்டு நாட்களாக சரியாக உறங்காதது.. அவனுக்கும் நல்ல உறக்கத்தை கொடுத்தது. 

நடு இரவிற்கு மேல், செல்விக்கு சற்று உறக்கம் கலையத் தான்.. தன் கால்கள், அருளின் மடிமேல் இருப்பதை உணர்ந்தாள். அதிர்ந்தாள்.. என்றே சொல்ல வேண்டும். அவளின் கால்களை சற்றும் கூச்சமில்லாமல் பிடித்துக்கொண்டு.. அருள் உறங்கிக்கொண்டிருந்தான்.

தன் மேல் இவ்வளவு காதலா என்ன? தன்னை காதலிக்கிறான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதை விட.. அவன் ஒரு ஐ பி எஸ் ஆபிசர். அது கூடவா மறந்து விட்டது. என்ன மாதிரியான காதல் இது.! இவன்.. முன்பு தன்னை வேலைக்காரப் பெண் என்று இகழ்ச்சியாக பேசியது என்ன?.. இப்போது நாலு பேர் வந்து போகும் இடத்தில்.. தன் கால்களைப் பிடித்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பது என்ன?

அதுவும்.. கல்யாணத்திற்கு புடவை கட்டியதால்.. அந்த புடவையிலேயே இருந்தாள். புடவையை நன்றாக கால்வரை இழுத்துவிட்டு.. பாதம் மட்டும் வெளியே தெரியுமாறு, கால்களை பிடித்துக்கொண்டிருந்தான்.  அதே சமயம் பார்த்தாள்.. புடவையின் முந்தானையையும், அவளை சுற்றி போர்த்தியது மாதிரி விட்டிருந்தான்.

செல்வியை.. இந்த செய்கை வெகுவாக அசைத்தது. உணர்ச்சி பெருக்கில், கண்களில் மறுபடியும் நீர் நிறையுமோ.. என்றிருந்தது.

அவன் கால்களை பிடித்திருந்தது.. அவள் மனதை அசைத்தாலும்.. அவள் கால்களை, அவளால் அசைக்க முடியவில்லை. அவ்வளவு கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான்.

எதிரே இருந்த கணவன் மனைவி கூட.. கணவனின் மடியில் மனைவி தலையை தான் வைத்துக்கொண்டிருந்தாள். அருளின் காதலில் வெகுவாக கலங்கினாள் செல்வி.

அப்படியே விடமுடியாது என்றுணர்ந்தவள்.. சற்று பலம் கொண்டு கால்களை இழுத்தாள். அதில் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டான் அருள். அவள் கால்களை பிடித்ததற்கு சற்றும் கூச்சம் இல்லை அவனிடத்தில். அவன் கைகளை விடுத்த பிறகே அவளால் கால்களை எடுக்க முடிந்தது. கால்களை எடுத்ததும் எழுந்தமர்ந்தாள்.

“என்ன செல்வி”, என்றான்.

“இல்லை, தூக்கம் வரலை”, என்று எழுந்தமர்ந்தாள்.

அவன் கண்களில் உறக்கம் பார்த்தவள். “நீங்க தூங்குங்க”, என்றாள்.

“இல்லை.. எனக்கும் தூக்கம் போயிடுச்சு”, என்றான்.

அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். காலையிலிருந்து கட்டியிருந்த.. அந்த சிம்பிள் ஆன பட்டு புடவை முழுதாக கசங்கியிருந்தது. அதுவும் அழகாக இருந்தது அவளுக்கு. கலைந்த ஓவியம் போல இருந்தாள் செல்வி. நாளுக்கு நாள்.. அவன் கண்களுக்கு, அவள் அழகாக தெரிந்தாள். 

செல்விக்கு பாத்ரூம் போக வேண்டும் போல இருக்க.. எழுந்து நடந்தாள். என்ன ஏதென்று கேட்கவில்லை. பின்னோடு வந்தான்.

இவள், “என்னடா இவன்”, என்பது போல பார்க்க.. “நீ போ. நான் வெளில நிக்கறேன்”, என்றான்.

எப்படி எல்லாவற்றையும் புரிந்து நடந்து கொள்கிறான் என்றிருந்தது. அவள் போய் வரும்வரை ட்ரெயின் கதவருகில் நின்றிருந்தான். அவள் இடத்தில் அமர்ந்ததும்.. வந்து அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்திலேயே ஸ்டேஷன் வர.. அவளை கேட்காமலேயே பால் வாங்கி, அவளுக்கு கொடுத்து.. அவனுக்கும் எடுத்துக்கொண்டான். காலையில் சாப்பிட்டது தான். பயங்கர பசி செல்விக்கு. வேறு வழியில்லாமல், அவன் முன்பு வாங்கி கொடுத்த பிஸ்கட்டை எடுத்து.. பாலில் தொட்டு சாப்பிட்டாள்.

தான் மட்டும் சாப்பிடுவது சரியல்ல என்று நினைத்தவள்.. “உங்களுக்கு”, என்றாள்.

“எனக்கு வேண்டாம். நீ சாப்பிடு”, என்றான். அங்கே இருந்ததே நாலோ ஐந்தோ பிஸ்கட் தான்.. என்று பார்த்து தான் இருந்தான். அவளுக்கு பத்தாது என்று நினைத்து.. வேண்டாம் என்று விட்டான்.

“இன்னும் வேணுமா.. அடுத்த ஸ்டேஷன்ல வாங்கட்டுமா?”, என்றான்.

“இல்லை. வேண்டாம்”, என்பது போல தலையசைத்தாள். என்ன இவன்.. இப்படி என்னை ராணி மாதிரி உணர வைக்கிறான்.. என்றிருந்தது செல்விக்கு.

திடீரென்று ராதிகாவின் ஞாபகம் வந்தது. இவனாவது என் மேல் காதல் கொண்டான். இப்போது மனைவி என்று எண்ணுகிறான். அதனால் பார்த்துக்கொள்கிறான்.

எந்த சொந்தமுமில்லாமல்.. அக்காவும் அய்யாவும், என்னை எப்படி பார்த்துகொண்டார்கள். அதை.. அவர்கள் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை.. உடைத்து விட்டேனே, என்று மறுபடியும் அவன் மேல் கோபம் பொங்க ஆரம்பித்தது.

மெளனமாக வெளியே வேடிக்கை பார்ப்பது போல திரும்பிக்கொண்டாள்.

இவ்வளவு நேரம்.. கொஞ்சம் நல்லாதானே இருந்தா.. இப்போ ஏன், மறுபடியும் முகத்தை தூக்கிக்கிட்டா.. என்றிருந்தது அருளுக்கு.

அவளிடம் பேச்சு கொடுக்கலாமா என்று நினைத்தவன்.. இரவின்  நிசப்தத்தில் நன்கு மற்றவர்களுக்கு கேட்கும்.. என்பதால் அமைதியாகவே வந்தான்.

பயணம் முழுவதும் ஒரு அமைதியோடே கழிந்தது. அவளோடான அந்த பயணத்தை மனதளவில்.. முழுமையாக  அனுபவித்தான் அருள். ட்ரெயின் அன்று சற்று லேட்டாகத் தான் சென்னை வந்து சேர்ந்தது. அவர்கள் வந்து சேர்ந்த போது நன்கு விடிந்திருந்தது.

இறங்கி அவளோடே நடந்தான். இவன் என்ன கூடவே வருகிறான்.. என்று சற்று மிரட்சியோடு பார்த்தாள் செல்வி. தன்னோடு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவானோ.. என்று பயந்து கொண்டே வந்தாள். அவனாக சொல்லும் வரை, தானாக எதுவும் கேட்க வேண்டாம்.. என்று அமைதியாகத்தான் வந்தாள்.

ஆனால், அவன் தன்னிடம்.. கூட வரச்சொல்லி கேட்டால்..  நான் உன்னோடு வரமுடியாது.. என்று தெளிவாக சொல்லிவிடவேண்டும்.. என்று எண்ணிக்கொண்டாள். அதே சமயம்.. அதை கேட்பானா என்றும் இருந்தது. மிகுந்த குழப்பத்தில் இருந்தாள்.  

அவனும் எதுவும் பேசவில்லை. இறங்கி அவளோடு நடந்தவன், “வா.. ஒரு டீ சாப்பிட்டிட்டு, போகலாம்”, என்றான்.

ஹாஸ்டல் வரை போக.. அவளுக்கும் தெம்பு வேண்டுமாயிருந்தது. பேசாமல் அவன் சொன்னதையெல்லாம் செய்தாள்.

டீ அருந்திய பிறகு.. ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து.. ஒரு ஆட்டோ பிடித்தான்.

இவன் போலீஸ் கட்டிங்கை பார்த்ததுமே.. இவன் போலீஸ்காரன் என்று ஆட்டோகாரனுக்குத் தெரிந்து விட்டது. டாக்ஸி பிடிக்காமல்.. ஆட்டோ கூப்பிடுகிறானே என்று, அவனும் பவ்யமாக. “எங்கே போகணும் சர்”, என்றான்.

“ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்”, என்றான்.

இவன் தன்னை ஹாஸ்டலில் தான் விடப்போகிறான் என்று தெரிந்ததும்.. “ஹப்படா”, என்று பெருமூச்சு வந்தது. ஆனால் ஏன்.. என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. கட்டாயப்படுத்தி தாலியை கட்டிவிட்டு.. இப்போது ஏன் ஹாஸ்டலில் விடுகிறான் என்றிருந்தது.

கூப்பிட்டாலும்.. நான் போகப்போவதில்லை என்பது வேறு. ஆனால்.. இவன் ஏன் விடுகிறான்.. என்று நிறைய கேள்வி, அவள் மனதில். அவனிடம் கேட்கவா முடியும்.

யோசனைகள் ஒரு புறம் இருந்தாலும்.. ஆட்டோவில் ஏறி இருந்தாள். அவனும் ஏறப்போனான்..

இவன்.. நம்மை விட வருகிறானா என்று எண்ணியவள்.. “இல்லை, தேவையில்லை. நான் போயிடுவேன்.”

“இல்லை, நான் வந்து விட்டுட்டு வர்றேன்.” என்றான் அவன் பதிலுக்கு. வெளியிடம்.. ஆட்டோகாரன் வேறு இருக்கிறான்.. அதிகம் பேசமுடியாது. அவனுக்கு நகர்ந்து இடம் விட்டாள்.

நேற்றிலிருந்து அவனோடே இருந்ததினால்.. முதலில் அவ்வளவு வித்தியாசமாக அவளுக்கேத் தோன்றவில்லை.

பிறகு சிறிதும் நேரம் கழித்து, ஒரு ஆண்மகனோடு தான் எப்படி சிறு சந்கோஜமுமில்லாமல் செல்கிறோம்.. என்று அவளை குறித்தே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. காலேஜில் கூட ஆண், பெண் வித்தியாசம் அதிகம் பார்க்காவிட்டாலும்.. ஆண் நண்பர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பாள். அதற்கெல்லாம் பரத்திடம் மட்டும் தான் சிறிது பழகுவாள்.

தன் எண்ணங்களிலேயே அவள் உழன்று கொண்டிருக்க.. அதற்குள் ஹாஸ்டல் வந்திருந்தது. அதன் வாயிலில் அவளை இறக்கிவிட்டான்.

என்ன பேசுவது என்று தெரியாமல். “நான் வர்றேன்”, என்று கூறி செல்ல ஆரம்பித்தாள் செல்வி. அவளை சிறிது தூரம் செல்ல விட்டவன்..

“ஒரு நிமிஷம் இரு செல்வி”, என்றான்.

இவள் எதற்கு என்று புரியாமல் நிற்க, அவளருகில் வந்தவன்.. “நான் இந்த உலகத்தில் இருக்கிற வரைக்கும்.. நீதான் என் மனைவி. நீ மட்டும் தான் மனைவி. அதை எப்பவுமே உன் ஞாபகத்துல வச்சிக்கோ. மறந்துடாத.” என்றவன் அவளின் பதிலை கூட எதிர்ப்பார்க்கவில்லை.. ஆட்டோ வில் ஏறி சென்று விட்டான். 

சிறிது நேரம்.. அவன் வார்த்தைகளை கேட்டதும்.. அப்படியே நின்றுவிட்டாள். “என்ன மாதிரியான காதல் இது.! நான் இந்த காதலுக்கு தகுதியானவளா? என்ன கண்டான் என்னிடம்?.” என்று தான் தோன்றிற்று, செல்விக்கு.

இப்போது.. தனக்கே அவனை பிடித்து விடுமோ? காதலிக்க ஆரம்பித்து விடுவேனோ? என்று பயமாக இருந்தது செல்விக்கு.

ஹாஸ்டல் ரூமிற்குள் நுழைந்தால்.. இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு.. தூங்கிகொண்டுதானிருந்தாள் ஆனந்தி.

செல்வியும் அவளை எழுப்பாமல்.. தன் படுக்கையில் விழுந்து படுத்துக்கொண்டாள். அருளின் நினைவுகளே முழுதாக அவளை ஆக்ரமித்தன.

சிறு வயதில் அவன் தன்னை திட்டியது. பின்பு, அவன் தன்னை அலட்சியபடுத்தியது. தன்னை ஸ்கூல் ஹாஸ்டலில் ராதிகா அக்காவோடு பார்க்க வந்தது. வீட்டில் தன் கைபிடித்து நிறுத்தியது. காலேஜில் மரத்தடியில் பார்க்க வந்தது. தன்னை விரும்புவதை மறைமுகமாக உணர்த்தியது.  ரயிலில் தனக்கு தெரியாமல் தன்னை தொடர்ந்து வந்தது. தன் சம்மதமில்லாமல் தன் கழுத்தில் தாலி கட்டியது. இப்போது வரும் போது.. அவன் தன்னிடம் காட்டிய அக்கறை.. அன்பு.. அதையும் மீறிய காதல்..  என்று அத்தனையும் அவள் கண்முன் படமாக ஓட ஆரம்பித்தது.               

Advertisement