Advertisement

அத்தியாயம் பதினாறு :

அருளுக்கு நன்கு புரிந்தது.. செல்விக்கு தன் மீது காதல் வருவது என்பது சற்று சந்தேகமே. ஏனென்றால் அவள் அந்த மாதிரி யோசிக்க கூட மாட்டாள். யோசித்தால்தானே காதல் இருக்கிறதா.. இல்லையா என்று தெரியும்.

அவளுக்குத் தன் அய்யா மீதும்.. அக்கா மீதும் நிறைய நன்றிக்கடன் இருக்கிறது. அவள், அவர்களைப் பற்றி மட்டுமே நினைப்பாள். தன்னை பற்றி நினைக்க கூட மாட்டாள்.. என்று அறிந்து வைத்திருந்தான்.

அவர்களை மீறி.. அவள் தன்னை திருமணம் செய்வது என்பது.. நடக்கக்கூடிய காரியமல்ல. சரவணன் தன் காதலை ஒத்துக் கொள்வான்.. என்ற நம்பிக்கையும் அருளுக்கு இல்லை. அதுவும், தன் அன்னையும் தந்தையும்.. நிச்சயமாக ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.  

இவர்களையெல்லாம் நினைத்தே செல்வி பயப்படுவாள். அப்புறம் எப்படி, தன் மீது காதல் வரும்.. என்று யோசித்தான். பிறகு.. எல்லாரும் காதலித்தா திருமணம் செய்கிறார்கள்?. அவளுக்கு காதல்.. தன் மீது திருமணத்திற்கு பிறகு வரட்டுமே.. என்று நினைத்தான். அந்த எண்ணம்.. அவனிடத்தில் தீவிரமாக வேரூன்ற ஆரம்பித்தது.

அவனுக்கு நம்பிக்கையில்லை.. திருமணத்திற்கு முன் செல்விக்கு தன் மீது காதல் வரும் என்று. என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான். யோசித்தவன்.. யோசிக்காமல் சில முடிவுகளை எடுத்தான். அது செல்வியை பாதிக்குமா.. இல்லையா என்று கூட யோசிக்கவில்லை.

அவன் எடுத்த முடிவை செயல்படுத்துவதற்காக.. அன்றே சில காரியங்களை செய்தான். பிறகே நிம்மதியானான். என்ன விளைவுகளை.. அது ஏற்படுத்தும் என்பது பற்றியெல்லாம்.. அவன் கவலைப்படவில்லை.

எழிலுக்குத் தான்.. முள் மேல் நிற்பது போல இருந்தது. தனக்கு தெரிந்ததை.. யாரிடமாவது சொல்லலாம் என்றால்.. அருளை நினைத்து பயமாக இருந்தது. மனதைத் தேற்றிக்கொண்டாள்.

தன் திருமணம் வரை தானே.. யாரிடமும் சொல்ல வேண்டாம் என்கிறான். அதன் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். இந்த முடிவை எடுத்த பிறகு தான்.. சற்று ஆசுவாசப் பெருமூச்சு வந்தது எழிலுக்கு.

அதற்குள் சுரேஷ் போன் செய்ய.. தன் அண்ணனின் பிரச்சனையை தற்காலிகமாக மறந்தாள்.

திருமண நாள் நெருங்கியது. திருமணம் அவர்களின் சொந்த ஊரிலேயே வைத்திருந்தனர். அதுதானே மாப்பிள்ளையின் ஊரும் கூட. சரவணனும் ராதிகாவும் சேர்ந்து சென்று.. செல்வியையும் திருமணத்திற்கு வருமாறு அழைத்தனர்.

செல்வியை அழைத்து வந்ததில் இருந்து.. அவள் மறுபடியும் அவர்கள் ஊருக்கு வரவேயில்லை. அதனால் செல்வியின் சொந்தங்களுக்கு காட்டுவதற்காகவாவது.. செல்வியை திருமணத்திற்கு அழைத்து வர நினைத்தான் சரவணன்.

தாங்கள் ஒன்றும்.. அந்த பெண்ணை விட்டுவிடவில்லை. நல்ல முறையில் ஆளாக்கியிருக்கிறோம். அதுவும் டாக்டருக்கு படிக்க வைக்கிறோம் என்று காட்டுவதற்காகவே.. செல்வியை திருமணத்திற்கு கூட்டி செல்ல நினைத்தான் சரவணன்.

அதை சொல்லி கோதையிடம் அனுமதியும் வாங்கியிருந்தான். சரவணனுக்கு தெரியவில்லை. தான் எவ்வளவு பெரிய சிக்கலுக்கு அணிவகுக்கிறோம் என்று. செல்வியை அந்த திருமணத்திற்குக் கூட்டி வருவதால்.. அவளை எவ்வளவு பெரிய பிரச்சனையில் மாட்டி வைக்க போகிறோம்.. என்று சரவணனுக்குத் தெரியவில்லை.

வருவதை யார் அறிவார்? கடவுளைத் தவிர. யார் என்ன நினைத்தாலும்.. அவன் நினைப்பது மட்டுமே நடக்கும். அதை தடுக்கும் சக்தி உலகில் எவருக்கு உள்ளது.

இதையறியாத செல்வி.. ஊருக்கு போவதற்கு, ஒரு வகையில் ஆவலாகவே இருந்தாள். அவள் பிறந்து வளர்ந்த ஊர். பார்த்து எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன. அதுவுமில்லாமல், அவளை பார்த்துக்கொள்ள முடியாது.. என்ற சொந்தங்களுக்கு மத்தியில்.. தான் ஒரு டாக்டர் இப்போது.. என்று பெருமைப்பட்டுக்கொள்ள நினைத்தாள். அதனால் ஊருக்கு போவதை எதிர்பார்த்திருந்தாள்.. வரப்போவதை தெரியாமல்.

அருள்.. அதற்கு பிறகு செல்வியை பார்க்க முயலவில்லை. ஆனால் எஸ் எம் எஸ் அனுப்புவதையும் நிறுத்தவில்லை. வீட்டில், சரவணனும் ராதிகாவும் பேசுவதை வைத்தே.. செல்வியும் திருமணத்திற்கு வருகிறாள் என்பதை அறிந்து கொண்டான்.

அவள் வராமல் இருந்தாலும் எதையாவது சொல்லி.. அவளை திருமணத்திற்கு அழைத்து வரும்.. நோக்கத்தில் தான் இருந்தான்.

கோதை, ராதிகாவையும் எழிலையும்.. பத்து நாட்களுக்கு முன்பே ஊருக்கு அழைத்துக் கொண்டார். சரவணன் மூன்று நாட்களுக்கு முன்பு கிளம்புவதாக இருந்தது. செல்வி முதல் நாள் வருவதாக இருந்தாள்.

அருள், என்றைக்கு ஊருக்குப் போவது என்பது பற்றி முடிவெடுக்கவில்லை. கோதை அம்மாவுக்கு.. அவன் முன்பே வரவில்லை என்று வருத்தம். எதையோ சொல்லி சமாளித்தான். சரவணன் கேட்டதற்கு கூட மழுப்பலான பதிலே.

ராதிகாவின் மூலம்.. செல்வி என்றைக்கு ஊருக்கு வருகிறாள் என்று தெரிந்தவன்.. அன்றைக்கே ஊருக்கு போக முடிவெடுத்தான். செல்வியைப் பற்றிய எல்லா விஷயங்களையும்.. ராதிகாவின் மூலமே தெரிந்து கொண்டான் அருள்.

செல்வி போகும் ட்ரெயின்னை தெரிந்து கொண்டவன்.. அதே ட்ரெயினில் அவனும் வந்தான். வேறு வேறு கம்பார்ட்மெண்ட் என்பதால் செல்விக்குத் தெரியவில்லை. ஆனால் செல்வியை அவன் பார்வையிலேயே வைத்திருந்தான்.

இரவு நேரம் என்பதால்.. ஏறின சிறிது நேரத்திற்கெல்லாம் உறங்கி விட்டாள் செல்வி. தூங்கும் முன் நினைத்தாள் இன்று குட் நைட் மெசேஜ் வரவேயில்லை என்று.  ஊருக்கு சென்றதும் தன்னை மறந்து விட்டுருப்பான். “ஹப்படா”, என்று பெரு மூச்சு விட்டாள். ஆனால் அருள் உறங்கினால் தானே.. அவளுக்கு மெசேஜ் அனுப்பியிருப்பான். அருள் தன்னை தொடர்ந்து வருவது அவளுக்குத் தெரியவேயில்லை.

புறப்படும் முன்னரே.. ஒரு வகையான சஞ்சலத்தில் தான் இருந்தாள் செல்வி. சஞ்சலதிற்க்குக் காரணம்.. அங்கே அருளை பார்க்க நேரிடுமே என்பது தான்.  அவள் பயந்துகொண்டே தான் இருந்தாள்.. அவனை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்று.

எல்லாரும் இருப்பதால்.. தன்னிடம் அவன் எதுவும் வம்பு செய்ய மாட்டான்.. என்றே நினைத்தாள். நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன ? பேதைப்பெண்.

அருள், தான் செய்வது சரியா.. என்று ஒரு நிமிடம் கூட நினைக்கத் தயாராயில்லை. அவ்வளவு பையித்தியமாக இருந்தான் அவள் மீது. இல்லையென்றால்.. அவளை தனியாக கூட அனுப்ப மனமில்லாமல்.. அவளைப் பின் தொடர்ந்து வருவானா என்ன?

அடிக்கடி, அவள் உறங்கும் முகம் பார்த்து.. அந்த இரவைக் கழித்தான். காலையில் ஸ்டேஷன் வந்ததும்.. செல்வி இறங்க பின்னோடு இறங்கினான் அருள் பாண்டியன். அப்போது தான் செல்விக்கு.. அவன் தன்னோடு வந்ததே தெரியும்.

அவன் பாட்டுக்கு அவன் வந்திருப்பான்.. நீயும் வந்திருப்பாய்.. என்று அவளை அவளே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அவனை அழைத்துப்போக கார் வந்திருந்தது. இவள் பஸ் நிற்கும் இடம் நோக்கி போகப் போக.. அவளருகில் வந்த அருள்,’’கார்ல ஏறு’’ என்றான்.

“இல்லையில்லை.. நான் பஸ்ல வர்றேன்”, என்றாள் பதட்டமாக.

ஒன்றும் பேசாமல்.. ராதிகாவிற்கு போன் அடித்தான். “அண்ணி, நான் வந்த ட்ரெயின்ல தான்.. இந்தப் பொண்ணு செல்வியும் வந்தா. என்னோட கார்ல அழைச்சிட்டு வரட்டுமா?” என்றான்.

ராதிகாவிற்கு தெரியவில்லை. கோதை ஏதாவது சொல்வார்களோ என்று பயம்.. செய்வதறியாமல் சரவணனிடம் போனை கொடுத்து விட்டாள்.

சரவணன் எதுவும் புரியாமல் போனை வாங்கி, “ஹலோ”, என்றான். சரவணனை அருளும் எதிர்பார்க்கவில்லை. எதிர்புறம் அருள் என்றவுடன், “என்னடா”, என்றான் சரவணன்.

“இந்த பொண்ணு செல்வி.. நான் வந்த ட்ரெயின்ல தான் வந்தது. நம்ம கார் வந்திருக்கு.. அழைச்சிட்டு வரட்டுமான்னு கேட்டேன்..”

கோதை என்ன சொல்வார்களோ என்ற பயம் தான் சரவணனுக்கும் இருந்தாலும்.. செல்வியை தனியாக விட மனமின்றி..

“சரி, அவளை அழைச்சிட்டு வா”, என்றான்.

“நீயே. அந்த பொண்ணு கிட்ட சொல்லு..” என்று போனை கொடுத்தான் அருள்.

“செல்வி, நம்ம கார் தான். அதுலயே வந்துடும்மா”, என்று சரவணன் சொல்ல.. அவன் பேச்சிற்கு மறு பேச்சு பேசாமல், “சரிங்க அய்யா”, என்றாள் செல்வி.

அவள் போனை வைத்தவுடன். “இதை முன்னாலயே செய்யறதுக்கு என்ன? நான் என்ன.. உன்னைக் கடிச்சா சாப்பிட்டிடுவேன்” என்றான்.

டிரைவர் இருந்ததால் அதற்கு பதில் சொல்லாமல்.. அமைதியாக இருந்தாள் செல்வி.

“சரியான கல்லுளிமங்கி.. வாயை தொறக்கறாளா பாரு..” என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்தான்.

“என்ன.. இவன் ஊருக்கு வந்தால் அமைதியாகி விடுவான்.. என்று பார்த்தால் இங்கேயும் வம்பு செய்கிறானே..” என்றிருந்தது.

சற்று பயமாகவும் இருந்தது. இப்படி இவன் ஏதாவது.. வம்பு செய்வதை யாராவது பார்த்துவிட்டால்.. அதுவும் கோதையம்மா பார்த்துவிட்டால்.. நினைக்கையிலேயே பயமாக இருந்தது.

அவள் முகத்தில்.. அந்த பயமும் அப்படியேத் தெரிந்தது. அவள் முகத்தில் பயத்தைப் பார்த்தவன்.. என்ன நினைத்தானோ பிறகு அமைதியாகி விட்டான்.

செல்விக்கு மனதில் இனம் புரியாத பயம் ஆரம்பித்தது. திருமணத்தில் எந்த கலாட்டாவும்.. இவன் செய்யாமல் இருக்க வேண்டுமே என்று. அது கொடுத்த பயம்.. சிறிது பதட்டமாக இருந்தாள்.

கார் பயணம் முழுவதும் அமைதியாகவே கழிந்தது. அந்த டிரைவர், சளசள என்று பேசும் ஆள் தான்.. இருந்தாலும், அருள் போலீஸ் ஆபிசர் என்பதால் அடக்கியே வாசித்தான்.

அவனுக்கு என்னத் தெரியும் செல்வியைப் பற்றி.. யாரோ தெரிந்த பெண் போல, என்று அமைதியாக வந்தான்.

வீடு, நெருங்க.. நெருங்க செல்விக்கு ஒரு இனம் புரியாத பதட்டம். கார் நின்ற சத்தம் கேட்டு கோதை வந்தார்.. அருளை பார்க்க ஆவலாக. அவன் முன் கதவை திறந்து இறங்கினான். செல்வி, கார் உள்ளே இருந்தே கோதையை பார்த்து விட்டாள். அவளுக்கு பதட்டம் அதிகமானது.

“ஏண்டா.. இப்போவா வர்றது? ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாலேயே வர்றதுக்கு என்ன?”, என்று கோதை, அருளை அதட்டும் போதே.. காரின் பின் கதவை திறந்து செல்வி இறங்கினாள்.

கோதைக்கு செல்வியை அடையாளம் தெரியவில்லை. யாரோ.. அருள் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்து. “யாருடா இந்த பொண்ணு?”, என்றார் அவனுக்கு மட்டும் கேட்கும் தாழ்ந்த குரலில்.

“உனக்கு தெரியலையாம்மா? உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்”, என்றான்.

“எனக்கு தெரிஞ்ச பொண்ணா.. யாரது?”, என்று யோசனையாக கோதை.. செல்வியை உற்றுப் பார்த்தார்.

அதற்குள் செல்வி பக்கத்தில் வந்து “வணக்கம்மா” என்றாள். செல்வியை இப்போது கோதைக்குத் தெரிந்தது.

“செல்வியா நீயி!”, என்ற கோதை “ஆளு அடையாளமே தெரியலை புள்ள..” என்றார். செல்வியின் தோற்றத்தைப் பார்த்து வியந்து போனார்.

“நம்ம வீட்ல.. கூட்டிப் பெருக்கி.. பத்து பாத்திரம் தேச்ச பொண்ணா இவ..” என்று மனதிற்குள்ளேயே வியந்தார். ”நல்ல பெரிய இடத்துப் பொண்ணு மாதிரியே இப்போ இருக்காளே!. சும்மாவா.. டாக்டருக்கு இல்லை படிக்கறா. என் மவன் தான்.. காசை கொட்டி படிக்க வைக்கிறானே. அதுக்குன்னு, அவுங்க சாதி சனம் ஜாடை.. எப்படிக கொஞ்சம் கூட இல்லாம போச்சு?” என்று மனதிற்குள் பேசியபடி ஆராய்ச்சி பார்வை பார்த்தார்.

எப்படி பார்த்தாலும்.. அவள் மக்களின், கீழ் தட்டு ஜாடை அவளிடத்தில் இல்லை. அவள் பார்க்க நன்றாக இருந்தாள். இவளுக்கு வந்த வாழ்வை பாரேன் என்றிருந்தது. ஆனால்.. இவள் ஏன் அருளுடன் வருகிறாள்? என்று பார்வையை அருளிடம் திருப்ப..

அவன் அன்னையின் பார்வையை புரிந்தவன்.. “நான் வந்த ட்ரெயின்ல தான் வந்தாம்மா. சரி, நம்ம வீட்டுக்கு தானே வர்றா.. அப்படின்னு சரவணன் சொன்னதால கூட்டிட்டு வந்தேன்”, என்றான் சரவணன் பெயர் சொல்லி.

“அவனுக்கு என்ன புத்தியில்லையா? இந்த பொண்ணைப் போய்.. அருளை கூட்டிட்டு வர சொல்லியிருக்கான். வயசுப் பொண்ணு. வயசுப் பையனை எப்படி கூட்டிட்டு வர சொல்றதுன்னு.. தெரிய வேண்டாம். ஊர்ல பார்க்கறவங்க.. என்ன சொல்லுவாங்கன்னு அறிவு வேண்டாம்..” என்று திட்டியவர்..

யாரும் பார்க்கும் முன்னர் அருளை பார்த்து.. “இன்னும் ஏன் நிக்கற உள்ள போடா”, என்றார் சற்று கோபமாக.

அதற்குள் சரவணனும் ராதிகாவும் வெளியே வந்தனர். செல்வியை பார்த்த ராதிகா, “வா செல்வி”, என்று அவளை அழைத்து போனாள்.

அவள் அந்த புறம் போனதும்.. சரவணனை ஒரு பிடி பிடித்தார் கோதை. “ஏண்டா அறிவிருக்கா உனக்கு. அந்த பொண்ணை போய்.. அருளை கூட்டிட்டு வர சொல்லி இருக்கியே? நம்ம தாண்டா இருக்கற ஜாக்கிரதைல இருக்கணும்..”

“ஏன் மா.. ரெண்டு பெரும் இங்க வர்றாங்கன்னு.. சொல்லி அழைச்சிட்டு வர சொன்னேன்.”

“என்ன போலீஸ் ஆனியோ போ. உனக்கு இன்னும் விவரமே பத்தலை. ஒரு வயசு பொண்ணை, அவன் கூட்டிட்டு வந்தா.. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க” என்று மேடை ரகசியம் பேசினார்.

எரிச்சலான சரவணன்.. “யாரும் பேசறாங்களோ இல்லையோ.. நீயே சொல்லிக்குடுப்ப போல இருக்கு.” என்று அவரை அதட்டியவன்,’’ போம்மா.. போய் வேலையைப் பாரு’’ என்று அனுப்பினான்.

“என்னவோ.. என் பேச்சை நீ கேக்கறதே இல்லை. ஏதாவது பிரச்சினை ஆச்சு.. அப்புறம் பாருடா இந்த கோதையை.” என்று பதிலுக்கு அவனை அதட்டி விட்டு போனார் அவரும்.

அவர் பேசும் விதத்திலேயே.. சரவணனுக்கு சற்று பயம் வந்தது. அருளைப் பற்றி, ஏற்கனவே நமக்கு சந்தேகம் இருக்கும் பட்சதில்.. நாம் செல்வியை, அவனுடன் ஒரே காரில் வர சொன்னது தவறோ.. என்று தோன்றியது.

இனி, ஜாக்ரதையாக பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து கொண்டான். காலம் கடந்து விட்டது.. என்று அவனுக்குத் தெரியவில்லை. 

திருமண வேலைகள் சற்று அருளுக்காக காத்துக்கொண்டிருக்க.. அதை செய்தான். ராதிகா, செல்வியை விருந்தாளி போலவே.. நன்றாக கவனித்துக்கொண்டாள்.

பூபதி பாண்டியனையும் பார்த்து.. ஒரு வணக்கத்தை சொன்னாள் செல்வி.

“என்னம்மா டாக்டர் ஆகிட்டியா..”, என்றார், அவர் சற்று சந்தோஷமாக.. மரியாதையாகவே.

“இன்னும் ஒரு வருஷம் இருக்குங்க.. அய்யா”, என்றாள், பணிவாகவே செல்வி.

“உங்க ஆளுங்களை போய் பார்த்துட்டு வர்றியா?”

“இல்லைங்கய்யா. யாரையும் பார்க்கலை. ஸ்கூல்லை மட்டும் போய் பார்த்துட்டு வர்றேங்க.. அய்யா” என்றாள்.

“சரி.. போய் பார்த்துட்டு வாம்மா”, என்றார் பூபதி பாண்டியன்.

எல்லாரும் திருமண வேளைகளில் பிசியாக இருக்க.. செல்வி போய் ஸ்கூல்லை பார்த்து.. அங்கே இருந்த ஆசிரியர்களைப் பார்த்து வந்தாள். வரும் போது தனக்குத் தெரிந்த எதிர்பட்டவர்களிடம்.. எல்லாம் பேசி வந்தாள். மனம் சற்று சந்தோஷமாக இருந்தது.

இங்கே வந்து பார்த்தால்.. எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்பி கொண்டிருந்தனர். ராதிகாவோடே  செல்வியும் கிளம்பினாள்.

திருமணத்திற்கு ராதிகா எடுத்துக்கொடுத்த உடைகளில்.. சற்று தன்னை ஸ்பெஷல் ஆக அலங்கரித்துக் கொண்டாள். இன்னும் அழகாக தெரிந்தாள் செல்வி. திருமணத்தில் இருந்தவர்களின் அலங்காரத்தை எல்லாம் பார்த்தால்.. செல்வியினது ஒன்றுமே இல்லை தான். ஆனால்.. அதுவே அவளுக்கு ஸ்பெஷல். உடைக்கு மேட்சாக.. ஆனந்தியின் அணிமணிகள் சிலவற்றை.. ஆனந்தி வற்புறுத்தி கொடுத்து விட்டிருந்தாள்.

ஆனாலும்.. அவர்கள் போட்டுக்கொண்டிருந்த.. நகையை எல்லாம் பார்த்தால் ஆசையாக இருந்தது. அவளிடம் தங்கம் என்று எதுவுமே இல்லை. ஒரு தோடு, கூட தங்கத்தில் இல்லை. சம்பாரிக்க ஆரம்பித்தவுடன் முதலில் ஒரு தோடு தங்கத்தில் வாங்கி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.   

அவள் சாதரணமாக இருக்கும் போதே.. அருளின் கண்கள் அவளை சுற்றும். இப்போது கேட்கவே வேண்டாம் அவளையே பார்வை தொடர்ந்தது. யாருக்காகவும்.. அவன் பயந்து பார்க்கவில்லை. தைரியமாகவே பார்த்தான்.

இது கோதையின் கண்களுக்கும் தப்பவில்லை சரவணன் கண்களுக்கும் தப்பவில்லை. அதே சமயம் இருவருக்குமே புரிந்தது.. செல்வி அவன் புறம் திரும்ப கூட இல்லை.. இவன் தான் பார்க்கிறான் என்று.

மண்டபம் முழுவதும் உறவுகள் நிரம்பியிருக்க.. எதுவும் சொல்ல கூட முடியாதவராகினர் இருவரும். எதுவாக இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர். அவர்களால் ஒன்றும்.. செய்ய முடியாமல் போகப்போகிறது.. என்று தெரியவில்லை.

மண்டப த்தில் இரவு விருந்து முடிந்து, காலை முகூர்த்த நேரமும் வந்தது. எழிலரசி மணப்பெண்ணாயிருக்க.. சுரேஷ் மணமகனாக இருக்க மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்ட உறவுகள் ஆசீர்வதிக்க.. திருமணம் இனிதே முடிந்தது. திருமணம் முடிந்தவுடனே.. தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கு நடக்க பிறகு மணமக்களை எல்லாரும் ஆசீர்வதிக்க ஒரு பக்கம் விருந்து நடக்க மண்டபம் பரபரப்பாக இருந்தது.

செல்வி அங்கேயிருந்து.. நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். திருமணம் வெகு சிறப்பாக நடக்க.. தனக்கும் இப்படி என்றாவது திருமணம் நடக்குமா? தனக்குத் தான்.. அப்பா அம்மாவே இல்லையே? இப்படி.. இத்தனை உறவுகள் சூழ.. திருமணம் நடப்பது என்பது, ஆகாத வேலை என்றே நினைத்தாள்.

அவள் மணமகனை பற்றியெல்லாம் நினைக்கவில்லை. திருமணம் என்ற.. ஒரு நிகழ்வைப் பற்றி மட்டும் தான் நினைத்தாள். அவள் பாட்டிற்கு, அவளின் நினைவுகளில் உழன்று கொண்டிருக்க.. யாரோ அவள் கையைப் பற்றி இழுக்க கண்டாள்.

“யார்?”, என்று பார்க்க அருள். பதறி விலக போனாள். ஆனால் அவள் விடுபட முடியாத அளவிற்கு.. கையை இறுகப் பற்றியிருந்தான்.

திருமணம் முடிந்து நேரம் ஆகியிருக்க நெருங்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர். அருள் பார்த்த போது.. அப்போது தான், அவன் அன்னையும் தந்தையும் சற்று அமர்ந்திருந்தனர். சரவணனும் ராதிகாவும் அவர்களிடம் நின்று.. ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.  இப்போது விட்டால்.. சந்தர்ப்பம் கிடைக்காது என்று நினைத்தவன் செல்வியின் கைப்பற்றி, அவர்கள் இருக்கும் இடம் நோக்கி அழைத்துப் போனான்

என்ன முயன்றும்.. செல்வியால் கையை இழுத்து விடுபட முடியவில்லை. “விடுங்க, விடுங்க”.. என்று மெல்லிய குரலில் தான் சொல்ல முடிந்தது. கத்தக்கூட முடியவில்லை. எல்லாரும் பார்த்துவிட்டால் என்ன செய்வது.. என்று மெதுவாகவே சொன்னாள்.

அதற்குள்.. செல்வியின் கையைப் பற்றி.. அருள் இழுத்து வருவதை.. அவன் குடும்பத்தினர் அனைவரும் பார்த்தனர். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தவன் “என்னடா”, என்று சரவணனும் கோதையும் கேட்க செல்வி செய்வதறியாது விக்கித்து நிற்க

அவள் கையை விட்டவன் தன் மற்றொரு கையில் மறைத்து வைத்திருந்த.. தங்கச் சங்கிலியில் கோர்த்த தாலியை.. செல்வியின் கழுத்தில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அணிவித்து விட்டான்.!!!!

அவன் அணிவித்த பிறகே குனிந்து.. அது என்னவென்று செல்வி பார்க்க.. மற்றவர்களும் பார்த்தனர். அதுவொரு பொன் தாலி. செல்வியின் உடம்பில் படும்.. முதல் பொன். ஒரு பொன் தாலியாகிவிட்டது.!!

அதிர்ச்சி.. எல்லோருக்கும் அதிர்ச்சி!. இந்த நிகழ்வை அங்கிருந்த சில உறவுகளே பார்த்தனர். எல்லாரும் பார்க்க கூட இல்லை.  கோதைக்கும் சரவணனுக்கும் பேச்சே எழவில்லை. ராதிகாவிற்கு மயக்கமே வரும் போல இருந்தது. எழிலுக்கு அழுகை வரும் போல இருந்தது. தான் முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ.. என்று குற்ற உணர்ச்சியாக இருந்தது. 

செல்விக்கு.. அதிர்ச்சி.. பயம் எல்லாம் ஒரு சேரத் தாக்கியது. அவளின் கால்கள் வேரோடியது போல ஆனது நிற்க முடியாமல் அப்படியே மடிந்து அமர்ந்தாள். தன் ஐயாவையும், அக்காவையும் ஏறெடுத்து கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு.. இப்படி செய்துவிட்டானே என்று.. ஆத்திரமாக வந்தது அருள் மீது. இனி எல்லோர் முகத்திலும்.. எப்படி விழிப்போம் என்றிருந்தது.  

அவள் என்ன செய்கிறாள் என்பது போல அருள் பார்க்க அவள் நிற்க முடியாமல், மடிந்து அமர்வது தெரிந்தது.

பூபதி பாண்டியன் தான் முதலில் “என்னடா இது? இப்படி பண்ணிட்ட?”, என்றார்.

“இவளை எனக்கு பிடிச்சிருக்குப்பா. சொன்னா.. யாரும் ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும். நீங்க ஒத்துக்க மாட்டீங்க. செல்வியும் ஒத்துக்க மாட்டா. அதனால தான்.. நான் இப்படி பண்ணிட்டேன்.” என்றான். அவன் குரலில்.. இப்படி செய்ததற்கு வருத்தமோ.. பதட்டமோ.. பயமோ எதுவும் இல்லை.

“அப்போ உனக்குத் தெரியும்.. நாங்க ஒத்துக்க மாட்டோம்னு. தெரிஞ்சும் பண்ணியிருக்க. உனக்கு பண்ணனும்னா.. நீ பண்ணியிருக்க வேண்டியது தானேடா? அதுக்கு ஏண்டா.. என் பொண்ணு கல்யாணத்துல இப்படி பண்ணின? சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு.. நாங்க என்னடா பதில் சொல்வோம்?” என்றார் கோதை ஆவேசமாக.

அதற்கும் பதில் வைத்திருந்தான். “நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்”, என்றான்.                                                                         

“படிச்சுப் படிச்சு சொன்னனே கேட்டீங்களாடா? இப்போ, எதுல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாருங்க. உதவணும்னா.. கொஞ்சம் காசை கொடுத்து, கழிச்சு விட்டிருக்கணும். இப்படி.. நாங்க பாத்துக்கறோம்னு சொல்லி.. குடும்ப மானத்தையே வாங்கிடீங்களேடா”, என்று சரவணன் மீதும், ராதிகாவின் மீதும் பாய்ந்தார்.

சரவணன் சொல்வதறியாது திகைத்து நின்றான். 

எல்லாரும் சுத்தி இருந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். பூபதி பாண்டியன் தான் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, ராதிகாவின் அம்மா கற்பகத்தை கூப்பிட்டு.. “கற்பகம் நீ அருளையும், அந்த பொண்ணையும் கூப்பிட்டுட்டு வீட்டுக்கு போ. நாங்க கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டு பொண்ணு மாப்பிள்ளையை அனுப்பி வச்சிட்டு வர்றோம்.” என்று நிலைமையை கையில் எடுத்தார்.  

Advertisement