Advertisement

அத்தியாயம் பதினைந்து :

பரத்தின் வார்த்தைகளை கேட்டு.. உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தாள் செல்வி. சற்று முன் அருளும் அதைத்தான் உணர்த்தினான். அதுவே அவளுக்கு அதிர்ச்சி. இன்னும் அதை மற்றவர் வாய் மொழியாக.. கேட்கும் போது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

“அதுவும்.. தன் அய்யாவுக்கும் அக்காவுக்கும் தெரிய வரும்போது.. தன்னை தப்பாக நினைத்து விட்டால்… இத்தனை வருடங்கள் உதவியவர்களுக்குத் தான் செய்யும் கைம்மாறு இதுதானா?”..

“ஐயோ! நான் யாரையும் விரும்பவில்லையே. இவனை மட்டுமல்ல.. தான் யாரையும் அப்படி நினைத்ததுக் கூட இல்லையே”. அவளின் முகத்தில் ஏற்பட்ட கலவையான உணர்ச்சிகளைப் பார்த்த ஆனந்தி

“சும்மாயிரு பரத்”, என்று அவனை அடக்கியவள்.. “கிளாஸ் போகலாம் செல்வி, டைம் ஆச்சு பாரு..”, என்று அவளை திசை திருப்ப முயன்றாள்.

இப்போதுள்ள மனநிலையில்.. தன்னால் கிளாஸ் கவனிக்க முடியும்.. என்று தோன்றவில்லை செல்விக்கு. ஆனந்தியிடம், “இல்லை. நான் வரலை, நீ போ!”, என்றவள் அமைதியாக அந்த மரத்தின் கீழ் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.

ஆனந்தியும் அவளுடன் அமரப்போக. “ப்ளீஸ்.. ஆனந்தி, நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கேன். நீ போ”, என்றவள்

“அவளை கூட்டிட்டு போ.. பரத்”, என்று அவனையும் பணித்தாள்.

பரத் ஏதோ சொல்ல வாயெடுக்க. “ப்ளீஸ் பரத்.. ஐ டெஸ்பரேட்லி நீட் சம் பிரைவசி. அவளை கூட்டிட்டுப் போ”, என்று தனியாக அமர்ந்து கொண்டாள்.

வேறு வழியில்லாமல்..  ஆனந்தியும் பரத்தும் அவளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி கிளம்பினர்.

அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தவள்.. வெகு நாட்களுக்குப் பிறகு “ஏன் ஆயா.. என்னை விட்டுட்டு செத்துப்போன..’’ என்று மெளனமாக கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தாள். அந்த மரத்தடி அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் அந்த மாதிரி ஒரு மரத்தின் பக்கத்தில் தான்.. அவர்களின் குடிசை அமைந்திருந்தது.

சிறு வயதில் இருந்து அங்கே.. அந்த மரத்தடியில் தான் விளையாடுவாள், படிப்பாள். அவள் தனியாய் இருக்கும்போது.. துணையாய் இருந்தது அந்த மாதிரி ஒரு மரம் தான்.

அதே மாதிரி அமைப்புடைய ஒரு மரத்தை.. காலேஜில் காணவும் தினமும் மதிய உணவு நேரத்தில் வந்து.. அதன் கீழ் அமர்வதை வழக்கமாக கொண்டாள். செல்வி அவள் வந்த நிலையை என்றும் மறக்கவில்லை.

“தான் பிறந்து, வாழ்ந்து.. வளர்ந்த குடிசை எங்கே? இவர்களின் வீடு எங்கே?”, என்று தன் அய்யாவின் வீட்டைப் பற்றி நினைத்தாள். ஏதோ ராதிகாவை காப்பாற்ற போய், தன் பாட்டி இறந்து விட்டதால் தான்.. தனக்கு இந்த வாழ்வு என்று தெரியும்.

“இதில்.. இவன் பையித்தியக்காரன் மாதிரி.. நான், ஏன் உன் பின்னால் சுற்றுகிறேன்.. என்று கண்டுபிடி..”, என்று சொல்ல வேறு செய்கிறான். இவனை என்ன செய்ய.. என்று பயங்கர கோபமாக வந்தது செல்விக்கு.

அய்யாவிடமும் அக்காவிடமும் சொல்லிவிடுவோமா என்று நினைத்தாள். இப்போது அவர்கள் கல்யாண வேலையில் பிஸியாக இருக்கிறார்கள் என்று தெரியும். இப்போது சொன்னால் திருமண வேலைகளை பாதிக்கும். தன் ஆசை தங்கை. அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே பெண் மகவு. இப்போது எதுவும் சொல்ல வேண்டாம்.. திருமணம் முடியட்டும் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

ஆனால், முடிந்த பிறகு.. கட்டாயம் சொல்லிவிட வேண்டும்.. என்று நினைத்தாள். தன் படிப்பு தொடர்ந்தாலும் சரி.. நின்றாலும் சரி. படிப்பிற்கும் தற்போது பெரிதாக பங்கம் வரும்போல தோன்றவில்லை. இது நான்காமாண்டு.. இதற்கு பீஸ் கட்டியாகிவிட்டது. அடுத்த வருஷம் ஹவுஸ் சர்ஜன். ஸ்டைபண்ட் கிடைக்கும்.

அதனால் மறைக்க ஒன்றுமில்லை. எழிலரசியின் திருமணம் முடிந்த பிறகு.. சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அந்த தீர்மானம் எடுத்த பிறகே.. அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. தாய் மடி தேடும் மனதுடன் அந்த மரத்தின் கீழேயே, ஆனந்தியும் பரத்தும்.. மறுபடியும் வரும் வரை அமர்ந்திருந்தாள்.

கண்மூடி அவள் அமர்ந்திருந்த கோலம்.. ஆனந்தியையும் பரத்தையும் அசைத்தது. “ஹேய் செல்வி! நீ இன்னுமா இங்கே உட்கார்ந்திருக்க. நீ ஹாஸ்டல் போயிருப்பன்னு நாங்க நினைச்சோம்”, என்றபடி வந்தாள் ஆனந்தி.

“இல்லை! நீ எப்படியும் என்னை தேடி வருவன்னு தெரியும். வந்த பிறகு போகலாம்னு தான் வெயிட் பண்றேன்”, என்றபடி எழுந்தாள் செல்வி.

இப்போது செல்வி சற்று தெளிவாக இருப்பதாகவே பரத்துக்கும் ஆனந்திக்கும் பட்டது.

பரத் அவர்களுடன் படிக்கும் மாணவன். இவர்கள் இருவருக்கும் நல்ல நண்பன். “சாரி! நான் ஏதாவது உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா”, என்றான் செல்வியிடம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. அதை மறந்துடுவோம். வேற பேசலாம்”, என்றாள் செல்வி.. அருளின் நினைவை தவிர்த்தவளாக. 

இப்போது, அவளுக்கு தன் மீது இருந்த கழிவிரக்கம் எல்லாம் மாறி.. ஒரு கோபம் கனன்று கொண்டிருந்தது அருள் மேல்.

“அவன் காதல் சொன்னால்.. தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ?”, என்று கோபம் எழுந்தது. அவளின் மனசாட்சி அவளிடம் இன்னொரு புறம் கேள்வி கேட்டது. “அவன் எப்போது.. உன்னிடம் காதல் சொன்னான்?”, என்று. சற்று குழம்பினாள்.

“அவன் தானே சொன்னான். அவன் என் பின்னால் சுற்றுகிறான். ஏன் என்று கண்டுபிடிக்க சொல்லி.”,

சொன்னான் தான். இருந்தாலும் காதல் சொன்னானா என்று மனம் எடுத்துரைத்தது. “இது சரிபடாது. எதுவாக இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு.. நான் அய்யாவிடம் கட்டாயம் சொல்லிவிடுவேன். என்ன வந்தாலும் சரி”, என்று தனக்குத் தானே கூறிகொண்டாள்.

இவன் உளறுவது.. கோதைக்கு தெரிந்தால் என்ன ஆகும்? நினைக்கவே நெஞ்சு பதறியது. பூபதி பாண்டியனை நினைத்தால் இன்னொரு புறம் பயமாக இருந்தது. இவனுக்கு என்ன ஆசை.. என்னை இத்தனை பேரிடம் மாட்டி விட வேண்டும்.. என்று அருளின் மீது கோபம் பொங்க ஆரம்பித்தது.

இங்கே ஒருபக்கம் அருளுக்கு செல்வியைப் பார்த்ததில் மிகுந்த சந்தோஷம். அதுவும் அவளின் போன் நம்பர் வாங்கினதில் இருந்து அவளிடம் பேச மனம் துடித்தது. அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் ஆவது அனுப்பு.. என்று கை பரபரத்தது. இன்றைய அவளின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

அதற்குள் அதிகப்ரசங்கித்தனமாக எதுவும் செய்ய வேண்டாம் என்று மனதை முயன்று அடக்கினான். அதுவும் இன்றைக்குத் தான்.. தன் மனதை வேறு அவளுக்கு மறைமுகமாக உணர்த்தியிருந்தான். அதனால் முயன்று.. தன்னை கட்டுபடுத்திக்கொண்டான்.

ஆனால்.. அவன் முகம், அவன் சந்தோஷ மனநிலையை.. துல்லியமாக காட்டியது.

வீட்டிற்கு வந்ததும், அவனை பார்த்த எழிலரசி, “என்ன அண்ணா, முகத்துல பல்ப் எரியுது”, என்றாள்.

“அப்படியாடா உன் முகம் சந்தோஷத்தை காட்டுது”, என்று அவனுக்கு அவனே சொன்னவன். “அது ஒண்ணுமில்லை எழில். என் பழைய ஃபிரண்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். அதான்”, என்று சொல்லி சமாளித்தான்.

“அவரை பார்த்தீங்களா அண்ணா”, என்றாள் எழிலரசி ஆர்வமாக.

“எவரை”, என்றான் புரியாமல்.

“அதான் அண்ணா அவரை”, என்றாள் மறுபடியும்.

அவள் சுரேஷை தான் கூறுகிறாள் என்றுணர்ந்தவன்.

“இனிமே தான் எழில் பார்க்கணும்”, என்றான்.

“உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் பார்க்க டைம் இருக்கு. அவரை பார்க்கமாட்டியா?”, என்று செல்லமாக முறுக்கினாள் எழிலரசி.

“ஏய் லூசு.. காலைல மாப்பிள்ளை ஆபிஸ் போய் இருக்க மாட்டாரு.. சாயந்தரம் அவரைப் பார்க்க போறேன்”, என்றான்.

பிறகு மாலை சென்று மாப்பிள்ளை சுரேஷை பார்த்து வந்தான். அவனுக்கும் திருப்தி தான்.

வந்தவுடனே எழிலிடம் சொன்னான். “மாப்பிள்ளை உனக்கு பொருத்தமா இருப்பார் எழில்”, என்று. அதை கேட்டதும் அவ்வளவு சந்தோஷம் எழிலுக்கு. தனது தங்கையின் மகிழ்ச்சியை பார்க்க அவனுக்கு குதூகலம் பொங்கியது.

உடனேயே.. அருளுக்கு என்றாவது தன் பெயரை கேட்டு.. செல்விக்கும் இது போல மகிழ்ச்சி பொங்குமா.. என்று தோன்றியது. எந்த விஷயம் எடுத்தாலும்.. எங்கு நின்றாலும்.. அவள் நினைவே.. மாற்றி மாற்றி வந்து இம்சித்தது.

இருந்தாலும்.. எழிலரசியின் திருமணம் வரை.. அமைதியாக இருக்க வேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்தான். இரண்டு நாட்கள் ஊருக்கு சென்று வந்தான். கோதையை, செல்வி விஷயத்தில் சமாளிப்பது என்பது.. முடியாத காரியம் என்றே தோன்றியது. காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று நன்கு உணர்ந்தான்.

ஒரு வாரம் கழித்து ஜாயின் பண்ணுகிறேன்.. என்று சொன்னவன் ஊருக்கு போய் வந்ததுமே வேலையில் சேர்ந்தான். என்னதான் போலிஸ் ஆகினாலும்.. ஆந்திராவில் தானே இருந்தான். தமிழ் மண்ணில் யூனிபார்ம் போடுவது.. அது ஒரு தனி சந்தோஷத்தை கொடுத்தது.

செல்வியை சென்று பார்த்தால்.. அவள் ஞாபகம் அதிகம் ஆகிறது. நிறைய மனதளவில்.. அவளை தேடுகிறது என்றுணர்ந்தவன்.. அதன் பின்னர் அவளை சென்று காண முயலவில்லை. அவளுக்கு தெரியாமல் பார்க்கலாம் என்றாலும்.. யுனிபார்மில் இருக்கும் போது.. அந்த வேலை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. அதுவுமில்லாமல் யுனிபார்ம்.. சீக்கிரம் அடையாளம் வேறு காட்டி கொடுக்கும்.. என்பதால் அடக்கியே வாசித்தான்.

அவளை பார்க்காவிட்டாலும்.. இரண்டு நாட்களாக ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பித்திருந்தான். அது அவளுக்கு மெசேஜ் செய்வது. காலையில் அவன் எழுந்ததும் அவளுக்கு, “குட்மார்னிங்”, என்று ஒரு மெசேஜ் போகும். இரவு படுக்குமுன் மறுபடியும், “குட் நைட்”, என்று ஒரு மெசேஜ் போகும்.

செல்வி அவன் நம்பர்ரை நோட் செய்யாததால்.. முதலில் யாரிடம் இருந்து இந்த “குட்மார்னிங்”, என்று புரியவில்லை. திடீரென்று தான் அவளுக்குத் தோன்றியது.. இது ஒரு வேளை அருளிடம் இருந்து இருக்குமோ என்று.

கால் ஹிஸ்டரி சென்று அவன் கால் செய்த தினத்தில் பார்த்தால்.. இந்த நம்பர் தான் இருந்தது.

“என்னடா.. போன் நம்பர் தெரிஞ்சிட்டு போனானே.. அமைதியா இருக்கான்னு பார்த்தா.. இப்போதான் ஆரம்பிக்கிறானா”, என்று எரிச்சலாக வந்தது செல்விக்கு. 

“டோன்ட் வான்ட் யுவர் குட் மார்னிங்”, என்று பதில் மெசேஜ் கொடுப்போமா என்று நினைத்தாள். பின்பு இதற்கு ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டாள். எழிலரசியின் திருமணம் முடிந்தவுடனே.. சரவணனிடம் சொல்லிவிட வேண்டும்.. என்ற அவளின் உறுதி மட்டும் அதிகமாகியது.

இதை அறியாத அருள், காலையில் அவன் எழுந்தவுடனே ஒரு மெசேஜ். இரவு அவன் தூங்கும் முன்னர் ஒரு மெசேஜ் அனுப்புவதை வழக்கமாக்கி கொண்டான். அவளிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.. என்பதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவே இல்லை.

ஒரு வாரம் இது தொடர.. அவன் காலையில் கண்விழிக்கும் நேரமும்.. இரவு உறங்கும் நேரமும் செல்விக்கு அத்துப்படியானது. அது தானே அருளுக்கும் வேண்டியிருந்தது. அவளை.. தனக்குப் பழக்கப் படுத்திக்கொண்டிருந்தான்.  அவளையறியாமலேயே செல்வியும்.. அவனுடைய விழிக்கும், உறங்கும் நேரத்தை தெரிந்து கொண்டிருந்தாள்.  

 அவள்.. தன்னைத் திட்டியாவது ஒரு மெசேஜ் அனுப்பக்கூடாதா.. என்று சில சமயம் ஏங்கினான் அருள். ஆனால்.. அவள் எந்த வகையிலும்.. அவனுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. ஆனால்.. காலையில் இன்னும் மெசேஜ் காணோம்.. என்று அவளையறியாமல் எண்ணம் தோன்றும். அதைத் தானே அருள் விரும்பினான்.

எழிலரசிக்கு துணிமணிகள் வாங்கும் போது செல்விக்கும் சிறிது எடுத்தாள் ராதிகா. அதை.. அவளைப் பார்த்து கொடுப்பதற்காக.. ஒரு ஞாயிறு, அவளைப் பார்க்க எழிலரசியையும் அழைத்துக்கொண்டு வந்தாள். கூட்டிக்கொண்டு வந்தது.. சாட்சாத் நம் அருளே தான்!. சரவணன் மினிஸ்டர் மீட்டிங் என்று விட்டான்.

அருள் ப்ரீயாக தான் இருந்தான். பிஸியாக இருந்தாலும்.. செல்வியை பார்க்க போவதென்றால்.. ப்ரீ செய்துகொண்டிருப்பான் என்பது வேறு விஷயம். ஆனால் சரவணன் இருந்ததால்.. மிகுந்த  பிகு செய்து கிளம்பினான். அவர்களை இறக்கிவிட்டு.. ஒரு பத்து நிமிடத்தில் வருகிறேன்.. என்று வேண்டுமென்றே கூறிச் சென்றான். அவனை பார்த்தால்.. செல்வி டென்ஷன் ஆகிவிடுவாள் என்று தெரியும். அவள் சற்று அவர்களிடம்.. நன்றாக பேச இந்த பத்து நிமிட டைம்.   

எழிலரசி செல்வியை பார்த்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. அவள் டாக்டருக்கு படிக்கிறாள் என்று தெரியும். ஆனால் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

அவளைப் பார்க்க காத்துக்கொண்டிருந்த போது..செல்வி வந்தாள். அப்படி ஒரு செல்வியை சத்தியமாக எழிலரசி எதிர்பார்க்கவில்லை. “இவளா செல்வி..”, என்றாள் ராதிகாவிடம் கிசுகிசுப்பாக.

“இதுதான் செல்வி. உனக்கு அடையாளம் தெரியலையா? எழில்”, என்றாள் வெள்ளந்தியாக.

“இல்லவேயில்லை..”, என்று சொல்லி தலையாட்டிய எழில் விழிஎடுக்காமல் செல்வியை பார்த்தாள். “நம்ம வீட்ல வேலை செஞ்சிட்டிருந்த சின்ன பொண்ணா இவ..  எப்படியிருந்த இவ.. இப்படி ஆகிட்டா. இவ்வளவு அழகா. அதைவிட.. நிஜமாவே பெரிய டாக்டர் மாதிரி மிடுக்கா இருக்காளே..” என்றிருந்தது.

“அக்கா”, என்று ராதிகாவை பார்த்து அழைத்த செல்வி.. எழிலையும் பார்த்து, “எப்படி இருக்கீங்க அக்கா”, என்றாள்.

செல்வியிடம் பேசவே மிகுந்த தயக்கமாக இருந்தது எழிலரசிக்கு. “எப்படியிருக்க செல்வி..”, என்றாள் சம்பிரதாயமாக.

“நல்லாயிருக்கேன் அக்கா,” என்றவளுக்கும்.. மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை.

பிறகு, “கல்யாணம் நிச்சயமாகியிருக்காம் அக்கா.. வாழ்த்துக்கள்”, என்றாள். திருமண பேச்சை எடுத்ததும் அழகாக வெட்கப்பட்டாள் எழில். அதை பார்த்த ராதிகாவின் முகத்திலும்.. செல்வியின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

மலர்ந்த புன்னகை.. எதையோ பார்த்த செல்வியின் முகத்தில்.. அப்படியே மறைந்தது. அவளைப் பார்த்து கொண்டிருந்த எழிலரசி.. இவள் எதை பார்த்தாள் என்பது போல பார்க்க.. அங்கே அருள் வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் விரிந்த புன்னகை ஒன்று இருந்தது.

அண்ணன் முகத்தில் புன்னகை இருக்கிறது. அண்ணனை பார்த்ததும் இவள் சிரிப்பு ஏன் மறைய வேண்டும்.. என்று யோசனையானாள் எழில். இரண்டு போலீஸ் அண்ணன்களின் தங்கை அல்லவா.. எங்கோ மணியடித்தது.

“இது அருள். உனக்கு தெரியும் தானே. பார்த்து ரொம்ப வருஷமாச்சு இல்லையா..” என்று செல்விக்கு அறிமுகபடுத்தினாள் ராதிகா. செல்வி முகத்தில் சிறு சங்கடம் தோன்றியது. அருளின் முகத்தை பார்க்க.. அவன் செல்வியையே பார்த்துக்கொண்டிருந்தான். எழில் எதுவும் பேசாமல் இவர்கள் இருவரையுமே ஆராய்ந்து கொண்டிருந்தாள். வெகுநாள் கழித்து பார்க்கும் பாவனை இருவர் முகத்திலும் இல்லை.    

ராதிகா.. அவளுக்கு வாங்கிக்கொண்டு வந்த துணிகளை எல்லாம் கொடுத்தாள். “நிறைய இருக்கு அக்கா. இப்போ எதுக்கு இது..”, என்று தயங்கி நின்றாள் செல்வி.

“நீ வாங்கு”, என்று கட்டாயபடுத்தி கொடுத்தாள் ராதிகா. அதை மெளனமாக அருளும் எழிலும் பார்த்திருந்தனர்.  

எப்போதும் ராதிகா எது கொடுத்தாலும் செல்வி வாங்கிக்கொள்வாள். இன்று அருளும் எழிலும் இருக்க.. அவளுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது. தன்னுடைய நிலையை எண்ணி.. அவளுக்கே கழிவிரக்கமாக இருந்தது.

அருளின் பார்வை செல்வியை விட்டு அகலவேயில்லை. அவன் எப்போதும் போல.. ராதிகா இருப்பதால் அவள் பெரிதாக கண்டுகொள்வாள்.. என்று நினைக்கவில்லை. ஆனால் எழிலை மறந்துவிட்டான்.

எழிலும் உணர்ந்தாள். அருள் வருவதற்கு.. முன் சகஜமாக இருந்த செல்வி.. அருள் வந்ததும் ஒரு தயக்கதோடே நிற்கிறாள் என்று.

சிறிது நேரம் ராதிகா ஏதேதோ பேச.. செல்வி ஒரு தயக்கதோடே எல்லாவற்றிற்கும் பதில் அளித்துக்கொண்டு இருந்ததை.. அருள் உணர்ந்தான். எழிலும் உணர்ந்தாள். தான் இருப்பதால் தான்.. செல்விக்கு இந்த தயக்கம் என்று அருளுக்குத் தெரியும். இருந்தாலும் சட்டமாக நின்றான்.

எதையோ நினைத்தவன்.. செல்வி கையில் வைத்துக்கொண்டிருந்த செல்லை பார்த்தவன், “என்ன மாடல் இது.. ரொம்ப பழசா இருக்கே”, என்பது போல கையை நீட்ட, வேறு வழியில்லாமல் அந்த செல்லை கையில் வைத்தாள் செல்வி.

அதில் தன்னுடைய மெசேஜ்கள் இருக்கிறதா.. அழிக்கபாட்டு விட்டதா.. என்று அருள் பார்க்க.. அது அப்படியே தான் இருந்தது. அவன் முகத்தில் ஒரு ரகசிய புன்னகை மலர்ந்தது. அதை பார்த்த செல்வி.. அதை அழிக்காத தன் செய்கையை எண்ணித் தானே நொந்து கொண்டாள்.

அவன் செய்தது ஒரு சாதாரண செய்கை தான். இருந்தாலும் எழில் அதை சந்தேகத்தோடு பார்த்தாள். இதையெல்லாம் அறியாத ராதிகா.. செல்வியிடம் விடாமல் பேசிக்கொண்டு இருந்தாள்.    

பின்பு ராதிகாவும் எழிலும் விடைபெற்று கிளம்ப. .அருள் உரிமையோடு, ஒரு சிறு தலையசைப்பு மூலம்.. செல்வியிடம் விடை பெற்றான். இதையும் எழில் கவனித்து தான் இருந்தாள்.

அவளுக்கு.. அருளின் இந்த செய்கைகள் புதுமையாக இருந்தது. வந்ததில் இருந்து செல்வியை விழியகற்றாமல் பார்த்திருக்கிறான். வரும்போது உரிமையோடு தலையசைத்து விடை பெறுகிறான். அந்த பெண்ணின் முகத்தில்.. இவனை பார்த்ததில் இருந்து சிரிப்பே இல்லை. ஒரு வகையான சங்கடத்திலேயே நிற்கிறாள். என்னவோ நடப்பதாகவே அவள் மனதிற்கு பட்டது.

வேண்டுமென்றே வீடு திரும்பும் போது.. ராதிகாவிடம் செல்வியை பற்றியே அதிகம் பேசினாள் எழில். அதே நேரம்.. தன் அண்ணனின் முக பாவனைகளை ஆராய்ந்து கொண்டு.

“ஏன் அண்ணி.. அந்த பொண்ணு செல்வி, நம்ம வீட்ல இருந்த பொண்ணு மாதிரியே இல்லை.. அண்ணி. இப்போ ரொம்ப அழகா, நல்லா ஆகிடுச்சு. பார்க்கவே நல்லா இருக்கு, அண்ணி”, என்றாள்.

அருளின் முகத்தில் சட்டென்று ஒரு புன்னகை.. கீற்றாக தோன்றி மறைந்தது. அதை எழில் கவனிக்க தவறவில்லை. சுரேஷின் மேல் காதல் கொண்ட மனதல்லவா எழிலுக்கு. அவளுக்கு தன் அண்ணன்.. அது மாதிரி ஏதோ ஸ்பெஷல் ஆக.. செல்வியை பார்ப்பது போலவே தோன்றியது.

எழில், செல்வியை பற்றிய பேச்சை எடுத்ததும்.. ராதிகா செல்வியை பற்றியே வாய் ஓயாமல் பேசினாள். அவளின் படிப்பு.. அதில் அவளின் சூட்டிப்பு.. என்று செல்வியை பற்றியே பேசினாள். அதையெல்லாம் ஒரு புன்னகையோடு அருள் கேட்டிருக்க.. எழில் தன் அண்ணனின் முகத்தையே ஆராய்ந்து கொண்டு வந்தாள்.                      

வீடு வந்ததும்.. மதிய உணவு உண்டு அருள் சற்று உறங்க..  அவனுக்கு அருகில் இருந்த அவனின் மொபைலை எடுத்து நோண்டினாள். ராதிகாவின் மொபைலில் இருந்து.. செல்வியின் நம்பரை பார்த்திருந்தாள் எழில்.

அவள், அருளின் அருகில் இருந்து மொபைலை எடுக்கும் போதே.. அருள் பார்த்துவிட்டான். அப்போது தான் உறங்க ஆரம்பித்தான். அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு போகும் முன்னரே.. எழிலின் கொலுசு சத்தம்.. அவள் வருகையை காட்டிக் கொடுத்தது. அதுவும் அவள் சத்தமில்லாமல்.. மொபைலை எடுக்கவும்.. என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்.. என்று அதை அரைக் கண்ணால் பார்த்தபடியே படுத்திருந்தான்.  

அந்த நம்பர்.. அருளைடைய மொபைலில், “ஹனி”, என்று ஸ்டோர் ஆகி இருந்தது. இது எழிலுக்கு பெரிய அதிர்ச்சி. அவளின் வாய்.. அவளையறியாமல், “என்ன ஹனியா!”, என்று முனுமுனுத்தது. அது அறையின் அமைதியில் நன்றாக அருளுக்கு கேட்டது.

இவள் செல்வியை பற்றித் தெரிந்து கொண்டாள்.. என்று அருளுக்கு நன்கு உணர்த்தியது. கண்களை நன்றாக திறந்து, “என்ன எழில்”, என்றான்.

சட்டென்று பிடிபட்டவுடன்.. எழிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “அது அண்ணா”, என்று தடுமாறியவள்.. “என் போன்ல பேலன்ஸ் இல்லை. அது தான் அவர்கிட்ட பேசலாம்னு.. போன் எடுத்தேன்”, என்றாள்.

“பேசிட்டியா”, என்றான் அருள்.

“இல்லை! இப்போ பேசலை. அப்புறம் பேசறேன்”, என்றாள் தடுமாற்றமாக.

“சரி! என்னவோ பண்ணு!”, என்று மறுபடியும் கண்மூடி உறங்க ஆரம்பித்திருந்தான் அருள். எழிலுக்கு புரியவேயில்லை. போன் எடுத்தவுடன்.. சிறு பதட்டம் கூட அண்ணனிடம் இல்லையே. என்னவென்று கேட்போமா.. வேண்டாமா என்று அவளுக்கு பயங்கர குழப்பம்.

பேசாமல் போனை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு கிளம்பிபோனாள். அவளுக்கு அண்ணனிடம் பயம் வேறு.. செல்வியைப் பற்றி கேட்பதற்கு. பேசாமல் பார்த்ததை பெரிய அண்ணனிடம்.. சொல்லிவிடுவோமா என்று எண்ணினாள். பிறகு வேண்டாம். முதலில் அண்ணியிடம் சொல்வோம்.. என்று நினைத்தாள். 

அவள் கிளம்புமுன்.. அருளின் குரல் தடுத்தது. “யார்கிட்டயும் சொல்லாத. உன் கல்யாணம் முடியட்டும். அப்புறம் சொல்லலாம்”, என்று.

பயங்கர அதிர்ச்சியில் நின்றாள் எழில்.

அவளால் தாளவே முடியவில்லை. “எப்படி அண்ணா.. இப்படி. அந்த பொண்ணு எப்படி ஒத்துக்குச்சு?. அவ்வளவு தைரியமா அந்த பொண்ணுக்கு..”, என்று அவளின் வாய், முதலில் செல்வியை தான் சாடியது.   

“அவளை எதுக்கு பேசற. எதா இருந்தாலும் என்னை பேசு.” என்று எழுந்தமர்ந்தான் அருள்.

“இதுகெல்லாம் நம்ம வீட்ல யாரும் ஒத்துக்கமாட்டாங்க. முதல்ல அந்த பொண்ணு.. அவ எப்படி ஒத்துகிட்டா?”, என்றாள் கோபமாக.

“அவ ஒத்துகிட்டான்னு.. உன்கிட்ட யார் சொன்னா? அந்த பொண்ணுகிட்ட.. நான் இன்னும் சொல்லவேயில்லை. ”, என்றான் அருள்.

“என்ன.. அவ ஒத்துக்கலையா.?  நீ இன்னும் சொல்லலையா.. அப்போ என்ன தைரியத்துல.. இதை நீ பண்ற.”,

“இதோ பார்.. எனக்கு யாரைப் பத்தியும் கவலையில்லை. எனக்கு அவளை பிடிச்சிருக்கு. லவ் பண்றேன். அவ்வளவு தான். உன் கல்யாணம் முடியறவரைக்கும்.. நீ அமைதியா இருக்க. இதை பத்தி.. நீ யார்கிட்டயும் பேசக்கூடாது. புரிஞ்சதா? நீ பேசுனன்னு தெரிஞ்சது.. அப்புறம், உனக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இருக்காது.” என்றான் மிரட்டலாக.

அவன் குரலில் இருந்த தீவிரத்தை பார்த்து எழில் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

அதே தீவிரத்துடன் யோசனையில் இறங்கினான் அருள். “இன்னும் செல்வி ஒத்துக்கொள்ளவில்லையே.. என்ன செய்வது?”, என்று.

Advertisement