Advertisement

அத்தியாயம் பதினான்கு :

அருள் பாண்டியன் ஐ பி எஸ். ட்ரைனிங் முடித்து ஆந்திரா நெல்லூரில் போஸ்டிங் ஆகினான். முதல் இரண்டு வருடங்கள் அங்கு மிகவும் நல்ல படியாக செயல்பட்டான். போலீஸ் வேலை அவனுக்கு மிகவும் பிடித்தது. அவனுடைய அண்ணன் போல.. அவன் அதை மிகவும் விரும்பி எடுக்கவில்லை. ஒரு நல்ல வேலை.. அவனுடைய அண்ணனைபோல.. என்றே நினைத்தான். ஆனால் சேர்ந்த பிறகு மிகவும் பிடித்து விட்டது.   

இயல்பிலேயே  அருள் நல்ல புத்திசாலி. அதனால் தான் அவனால் முதல் அட்டெம்ப்டிலேயே அவனால் ஐ பி எஸ் பாஸ் செய்ய முடிந்தது. சரவணன் போல மிகவும் சிரமப்பட வில்லை. 

வேலை ஒருபக்கம் நன்றாக சென்று கொண்டு இருந்தாலும்.. மனதில் நீக்கமற நிறைந்திருந்தாள் செல்வி. அவனுக்கு செல்வியைhf குறித்து எந்த முடிவும் எடுக்கும் முன்னர்.. எழிலரசியின் திருமணம் முடிய வேண்டி இருந்தது.

தன்னுடைய காதல்.. எழிலரசியின் திருமணத்தை பாதித்து விடக்கூடாது.. என்று எண்ணினான். செல்வியும் தன் காதலை உணர்ந்தாளா? உணர்வாளா? தெரியவில்லை. அப்படி உணராத பட்சதில்… தான் காதல் சொன்னாலும் அதில் பிரயோஜனமில்லை. அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று தெரியும்.

தன் வீட்டில் சொல்வதாலும் பிரயோஜனமில்லை. அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். என்ன செய்வது ஏதாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான். செல்வியை  பார்க்க வேண்டும் என்ற ஆவல்.. மித மிஞ்சி நின்றாலும், இந்த இரண்டு மூன்று வருடமாக அவன் அதற்கு முயலவேயில்லை.

தன் காதலின் தீவிரத்தை.. அவனே உணர வேண்டி.. பேசாமல் இருந்தான். இப்போது தமிழ்நாட்டிற்கு.. மாற்றலுக்கு முயன்று கொண்டிருந்தான்.

இவன் ஆந்திராவில் இருந்ததால்.. செல்விக்கும் இவனைப் பற்றிய விஷயம் எதுவும் தெரியவில்லை. அவன் ஆந்திராவில் இருக்கிறான் என்று தெரியும். அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. அவள் தெரிந்து கொள்ள முயலவுமில்லை. அது தான் நிஜம். அவளுக்கு.. கடைசியாக அவன் பார்த்த போது சொன்ன.. “உன் படிப்பை கூட  நிறுத்திடுவாங்க”, என்ற வார்த்தை நெஞ்சை விட்டு அகலவில்லை. 

உண்மையிலேயே.. தான் காதல் சொல்லி, செல்வியின் படிப்பிற்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது.. என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தான் அருள். சரவணனுக்கு தெரிந்து விட்டால்.. ஏதாவது பிரச்சினை ஆகிவிடுமோ என்று நினைத்தான். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடே.. அன்று அந்த வார்த்தை வாயில் வந்துவிட்டது.          

செல்வி இப்போது நான்காமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். சரவண பாண்டியனுக்கு சென்னைக்கு மாற்றல் ஆகியிருந்தது.  இருந்தாலும்.. அவள் ஹாஸ்டலில் தான் தங்கி படித்துக்கொண்டிருந்தாள்.

எழிலரசியின் திருமண விஷயமாக.. அவள் தாய் தந்தை என்று வர போக இருந்ததால்.. அவள் அதிகம் சரவணன் வீட்டிற்கு செல்வதில்லை. அதுவுமில்லாமல், ராதிகாவின் தம்பி அங்கே தங்கித் தான்.. காலேஜ் போய் வந்து கொண்டிருந்தான்.

அதனால்.. முன்பு போல் இல்லாமல், செல்வி நிறைய ஒதுங்கியே இருந்தாள். அவள் போகாவிட்டாலும்.. ராதிகா வந்து பார்த்து சென்றுவிடுவாள். அவள் அன்பில் எந்த மாற்றமும் இல்லை.

குழந்தை இன்னும் இல்லை என்பதால்.. ராதிகா தான் சற்று மனம் வருந்தி இருந்தாள். முன்பு போல கலகலப்பு இல்லை. கம்மியாக இருந்தது.

ராதிகாவின் கவலையை செல்வியும் உணர்ந்தே இருந்தாள். அவளை மிகவும் தேற்றுவாள், “கவலைப்படாதீங்க அக்கா. இருபத்தஞ்சி வயசு எல்லாம் பெரிய வயசு இல்லை. கட்டாயம் குழந்தை பிறக்கும்”.

ராதிகா அதற்கு ஒரு புன்னகையை மட்டுமே பரிசாகத் தருவாள். மனதளவில் மிகவும் தளர்ந்து போய் இருந்தாள். திருமணமாகி ஆறு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை இல்லை என்று.

சரவணனை டாக்டரிடம் கூப்பிட்டால் அவன் வரவும் மாட்டேன் என்றான். “நமக்கு இன்னும் வயசாகலை.. எனக்கு நம்பிக்கை இருக்கு. இன்னும் இரண்டு வருடம் பார்க்கலாம்”, என்றான்.

யாரை நொந்து கொள்வது என்று தெரியாமல் இருந்தாள் ராதிகா.

குழந்தையின்மை.. சரவணனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவனுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. ராதிகாவிற்கு சிறு வயது தான்.. கட்டாயம் பிறக்கும் என்று. அவளின் கவலை அவனுக்கு புரிந்தாலும்.. அதை பற்றி அதிகம் பேசி.. அவளின் கவலையை அதிகரிக்க செய்ய மாட்டான்.

இதற்குள்.. எழிலரசியின் திருமணத்திற்கு வேறு.. அவன் பெற்றோர்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தனர்.

சென்னையில் இருந்து ஒரு ஜாதகம் வந்திருந்தது. வரன் சாப்ட்வேர் லைனில் இருந்தான். எல்லாம் சரியாக வரும் போல தோன்றியது. அதை பற்றி பேச.. அந்த  வாரம் அவனின் தாயும் தந்தையும் வருவதாக இருந்தது.

எல்லாம் சரியாக தகைய வேண்டுமே என்றிருந்தது ராதிகாவிற்கும் சரவணனிற்கும். இல்லையென்றால்.. அவன் அம்மாவை அவர்களால் சமாளிக்க முடியாது என்று தெரியும்.

அந்த வார இறுதியில்.. பூபதி பாண்டியனும் கோதையும் எழிலரசியும் வந்தனர். சரவணன் வீட்டிலேயே பெண் பார்க்கும் படலம் வைத்திருந்தனர்.

மாப்பிள்ளை சுரேஷ், தன் தாய் தந்தையுடன் பெண் பார்க்க வந்தான். அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஊர்.. இவர்கள் ஊர் தான். ஆனால் முன்பே சென்னையில் வந்து செட்டில் ஆகியிருந்தனர். அவர்களின் உறவுகள் எல்லாம் இன்னும் ஊரில் தான் இருந்தனர். அவர்கள் மூலமாக வந்த வரன் தான் இது.

மாப்பிள்ளையைப் பற்றி சரவணன்.. அக்கு வேறு ஆணி வேறு ஆக விசாரித்து விட்டான். ஏன்.. ஆள் வைத்து பதினைந்து நாட்கள் பின்தொடர்ந்தும் பார்த்துவிட்டான்.  எல்லாம் நல்லபடியாகத் தான் இருந்தது.  

அவன் மனதிற்கு திருப்தி தான். அவனுக்கு முழு சம்மதம் என்ற பிறகு தான்.. வீட்டில் சொல்லி இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சுரேஷை எல்லோருக்கும் பிடித்தது. முக்கியமாக எழிலரசிக்குப் பிடித்தது. அவர்களுக்கும் பெண்ணை பிடித்தது. அந்தஸ்து என்று பார்த்தால்.. சரவணன் வீட்டினர் அவர்களை விட.. ஒரு படி மேலே தான் இருந்தனர். இருந்தாலும் ஒரே பையன்.. நல்ல வேலையில் இருக்கிறான்.. நல்ல சம்பளம். அவர்களின் ஊர்காரர்களாக இருக்கிறான்.. என்ற காரணத்தால் சரி என்றனர்.

திருமணம் மூன்று மாதத்தில் என்று தேதி குறிக்கப்பட்டது. திருமண வேலைகள் ஆரம்பித்ததால்.. ராதிகா கொஞ்சம் பிசியானாள். எழிலரசிக்கு பாத்திரம் பண்டம் வாங்குவது.. துணி எடுப்பது என்று. எழிலரசியும் அங்கேயே இருந்து விட்டாள், திருமண பர்ச்சேஸ் இருந்ததினால்.

அதனால் செல்வியும் ராதிகாவின் வீட்டிற்கு வரவில்லை. ராதிகாவும் செல்வியை பார்க்கப் போகவில்லை. இதற்குள் எழிலுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்ததினால்.. அருள் பாண்டியன் சென்னை வந்தான். அவன் கிளம்பும் சமயம்.. சில மாதங்களாக முயன்று கொண்டிருந்த.. வேலை மாற்றலும் சென்னைக்கு வந்தது. அவன் சென்னை வந்தே.. இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

வந்தால்.செல்வியைப் பார்க்காமல் போக முடியாது. அவன் மனம் அதற்கு இடம் கொடுக்காது.. என்பதால் வராமலேயே இருந்தான். இப்போது தான் சென்னையில் கால் வைக்கிறான், இரண்டு வருடங்களுக்குப் பிறகு.    

ஆனால்.. அதற்கு முன்பும் செல்வியைப் பார்த்து.. வெகு நாட்கள் ஆகியிருந்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள். மனம் பரபரத்தது அவளைப் பார்க்க. பார்க்க வேண்டும் என்று துடித்தது மனம். ஆம் துடித்தது என்றே சொல்ல வேண்டும்.

மதியம் அவள் எப்போதும் இருக்கும்.. மரத்தடியில் இருக்கிறாளா  என்று பார்க்கலாம்.. என்று தன்னை முயன்று அடக்கினான். மூன்று வருடங்களாக.. அவள் அங்கேயவா இருப்பாள்.. என்று கூட மனம் ஆராய முயலவில்லை.

நேராக சரவணன் வீட்டிற்கு சென்றான். பெல் அடித்து காத்திருந்த நேரத்தில்.. ஒரு வேளை செல்வி வந்து திறப்பாளோ.. என்று மனம் வீணாக கற்பனை செய்து ஆசைப்பட்டது.

ஆனால் வந்து திறந்தது எழிலரசி. “அண்ணா”, என்று இவனை பார்த்து முகம் மலர்ந்தாள்.

“எப்படி அண்ணா இருக்க. வர்றேன்னு சொல்லவேயில்லை”.

இவன் வந்ததை பார்த்த ராதிகா. “அவங்க எப்போதும் அப்படிதான் எழில். சொல்லாமல் கொள்ளாமல் தான் வந்து நிற்பாங்க.”

“என்ன அண்ணி நீங்க வேற.. நான் எதையும் பிளான் பண்ணி செய்யறது இல்லை. எல்லாம் திடீர்ன்னு தான் முடிவெடுப்பேன்”, என்றான்.

“எப்படி இருக்க அருள்”, என்றாள் ராதிகாவும்.

“நல்லா இருக்கேன் அண்ணி. என்ன கல்யாணப் பொண்ணு, எப்படியிருக்க? மாப்பிள்ளை ஒரு நாளைக்கு.. ரெண்டு தடவை தான் போன் பேசறாங்களாம்..?”

“இல்லையே.. ஒரு தடவை தானே பேசறாங்க”, என்று எழில் வாய்விட்டாள்.

“அப்போ டெய்லி பேசறாங்கன்னு சொல்லு.”

“அச்சோ.. நீ போட்டு வாங்கினியா..”

“நான் போட்டு வாங்கலை. நீதான் உளறிட்ட”, என்றான் அருள்.

இருவரும் பேசுவதைப் பார்த்த.. ராதிகாவிற்கு சிரிப்பு வந்தது. நிறைய நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தாள். 

“என்ன அண்ணி இதுல சிரிப்பு. அண்ணாக கூடத் தானே.. கல்யாணத்துக்கு முன்னாடி உங்க கூட பேசினாங்க..”, என்று அவளையும் சப்போர்டிற்கு இழுத்தாள்.

“நான் எப்போ இல்லேன்னு சொன்னேன்”, என்று ராதிகா இழுக்கும் போது தான் சரவணன் ரூமில் இருந்து வந்தான்.

“டேய்.. அருள் எப்ப வந்த?”,

“வந்துட்டேன்”, என்றவன் பெட்டியை திறந்து.. ஒரு கவரை எடுத்து சரவணனிடத்தில் கொடுத்தான்.

“என்ன கவர்”, என்று புரியாமல் வாங்கினான் சரவணன். பிரித்து படித்து பார்த்தால்.. அவனின் சென்னை மாற்றலுக்கான ஆர்டர்.

“அருள்.. இனிமே நீயும் இங்கேயேவா.. சந்தோஷம்டா”, என்றான்.

ராதிக்காவும் எழிலரசியும் புரியாமல் பார்க்க.. அருளுக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிருக்கு என்றான். இருவரும் சந்தோஷப்பட்டனர். உடனே அந்த செய்தியை.. அவன் அன்னையை கூப்பிட்டு சொன்னான் அருள்.

லேட்டாக சொன்னால்.. அதற்கும் கோபம் வந்துவிடும் கோதைக்கு. அவன் அன்னையை அறிவான். அதனால் உடனேயே கூப்பிட்டான்.

கோதைக்கு அவன் தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு மிகுந்த சந்தோஷம். அந்த சந்தோஷத்தை பூபதி பாண்டியனும் பகிர்ந்து கொண்டார். பிறகு எழிலரசியின் திருமண விவகாரங்கள் குறித்து பேசினர்.

சென்னையில் தான்.. அருளுக்கும் சரவணனுக்கும் பணி. அதுவும் சரவணனுக்கு கீழேயே அருளுக்கு பணி. சரவணன் கண்ட்ரோலில் அருள் இருந்தான். பணி இடம்.. வேறு வேறு தான். இருந்தாலும் அவனுக்கு கீழே வருவான் அருள் பாண்டியன்.

“மற்ற இடங்கள் மாதிரி இல்லைடா. இங்க உள்ளயே நிறைய பாலிடிக்ஸ் இருக்கு.. பார்த்து நடந்துக்கணும்”, என்றான் அண்ணனாக.. சரவணன், அருளுக்கு.

“அதான் நீ இருக்கியே. அப்புறம் என்ன?”, என்றான் அலட்சியமாக அருள்.

“நான் இருக்கிறது கூட.. சில சமயம் உனக்கு பிரச்சினை ஆகும். நான் யாருக்கும்.. எதுக்கும் வளைஞ்சு கொடுக்கறது இல்லை. அந்த கடுப்புல உனக்கு யாராவது டார்ச்சர் கொடுக்கலாம்.”

“எவன் வந்தாலும் பார்த்துக்கலாம். விடு சரவணா”, என்றான் இன்னும் அலட்சியமாக.

தனது தம்பியின் தைரியத்தைப் பார்த்து.. சிரித்துக்கொண்டான் சரவணன். தன்னை போலவே அவனும் இருக்கிறான் என்று மகிழ்ச்சிக் கொண்டான். 

“அண்ணி எனக்கு டீ கிடைக்குமா.. கிடைக்காதா?”, என்றான்.. இவர்கள் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த.. ராதிகாவையும் எழிலரசியையும் பார்த்து.

“இதோ போறேன்”, என்று ராதிகா எழுந்து அவசரமாக போக.. செல்வி இருந்தால்.. இந்நேரம் சுடச் சுட டீ வந்திருக்கும் என்ற நினைப்பை.. அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் நினைவில்.. மனம் ரகசியப் புன்னகை பூத்தது. அவளை காணவேண்டும் என்ற ஆவல் கிளர்த்தெழுந்தது.

“எப்போடா ஜாயின் பண்ற?”, என்ற சரவணனின் கேள்விக்கு.

“இன்னும் ஒரு வாரம் கழிச்சு..”,

“ஏன் அவ்வளவு நாள் எடுத்துக்கற?”,

“ஊருக்கு ஒரு ரெண்டு நாள் போயிட்டு வர்றேன். அப்புறம் வந்து ரெஸ்ட் எடுத்துட்டு.. ஜாயின் பண்றேன்”, என்றான். மனதிற்குள், “செல்வியை வேற.. ஒரு ரெண்டு மூணு நாளாவது பார்த்துட்டு.. அப்புறம் தான்”, என்று நினைத்துக்கொண்டான். 

“சரி.. உன் இஷ்டம்”, என்ற சரவணன், அதற்கு மேல் அவனை துருவவில்லை. சரவணன் என்னக் கண்டான்.. அருள் செல்வியை நினைத்து.. ஒவ்வொரு வேலையும் செய்துகொண்டிருப்பதை.

சீக்கிரமாக ரெடியாகி.. அருள் பன்னிரெண்டு மணிக்கே.. காலேஜ் வளாகத்தினுள் வந்துவிட்டான். மனம் செல்வியை காணப்போகும் ஆவலில் பரபரத்தது. அந்த மரத்தடியைப் பார்த்தான். அங்கே இருந்த பெஞ்சில் யாரும் இல்லை. அவள் அமரும் பெஞ்ச் என்பதால்.. அவள் வருவதற்க்கு முன்.. அங்கே சென்று சிறிது நேரம் அமர்ந்து கொண்டான்.

பின்பு அவள் வரும் நேரம் நெருங்கவும் ..அங்கே இருந்து எழுந்து மறைவாக நின்றுகொண்டான். அவன் எதிர்ப்பார்ப்பு வீணாக வில்லை. செல்வி வந்தாள். கூட யாரும் வரவில்லை. அவள் மட்டுமே வந்து அமைதியாக ..அந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

அவள் வரும்போதே அவளைப் பார்த்துவிட்டான் அருள். நிறைய மாற்றங்கள் செல்வியிடம். அவளுடைய படிப்பு கொடுத்த நிமிர்வு அவளிடம் நன்றாக தெரிந்தது. அவளுடைய தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள். சுடிதாரில் இருந்தாலும்.. முன்பெல்லாம் அது தொள தொள வென்று இருக்கும்.

இப்போது அவளுடைய உடல் அமைப்பிற்கு தகுந்த மாதிரி கச்சிதமாக இருந்தது. அது அவளுக்கு நல்ல தோற்றப் பொலிவை கொடுத்தது. தோற்றமும் நிறைய மாறியிருந்தது. முன்பு அவன் பார்த்த செல்வியை போல இல்லை. இன்னும் நன்றாக இருந்தாள்.

வந்தவள்.. சிறிதும் நேரம் கண்மூடி அமர்ந்தாள். பின்பு அமைதியாக ஏதோ படித்துக் கொண்டு இருந்தாள். மெதுவாக அவளை நெருங்கினான். பேச வேண்டும் போலவும் இருந்தது.. பேசுவதற்கு தயக்கமாகவும் இருந்தது.

இருந்தாலும் நெருங்கி, “செல்வி”, என்றான். நிமிர்ந்து எதிரில் யார் என்று பார்த்தாள். குரல் அருளோ என்று நினைக்கத் தூண்டி.. அவனை எதிர்ப்பார்த்தே நிமிர்ந்தாள்.

இருந்தாலும்.. அவனை எதிர்ப்பார்க்காத அதிர்ச்சி.. செல்வியின் முகத்தில் நன்றாக தெரிந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல்.’’ நீங்களா?”, என்றாள்.

அருள் அமைதியாகத்தான் நின்றான். இந்த முறை அதிகப் பிரசிங்கித்தனமாக எதுவும் தான் பேசி.. அவளை கண்கலங்க வைக்க கூடாது.. என்பதில் மிகுந்த கவனமாக இருந்தான். அதனால் அமைதியாக நின்றான்.

பேசாமல் தன்னையே பார்த்தபடி நிற்கும் அருளை.. செல்வியும் பார்த்தாள். எப்போதும் அவனை சற்று பயத்தோடு தான் பார்ப்பாள். இந்த முறையும்.. தயக்கமாகவே அவனைப் பார்த்தாள்.     

அருளின் தோற்றத்திலும் நிறைய மாற்றம். சாப்ட்வேர் லுக்கில் இருந்து.. போலீஸ் லுக்கிற்கு மாறியவன்.. செல்வியின் கண்களுக்கு இப்போது கம்பீரமாக தெரிந்தான். இத்தனை நாட்கள் வராமல் இருந்தவன்.. இப்போது எதற்கு திடீரென்று வந்து குதித்தான்.. என்று நினைக்கத் தோன்றியது செல்விக்கு.

இவ்வளவு நாட்களாக.. அவன் தன் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்று சொன்னதால் நினைத்திருந்த கோபம்.. இப்போது அவனை பார்த்ததும், வரும் போல தோன்றவில்லை. அவளும் அமைதியாகவே இருந்தாள்.

“நான் ஆந்திரா நெல்லூர்ல போஸ்டிங்க்ல இருந்தேன். அதான் இவ்வளவு நாளா வரமுடியலை”, என்றான்.

“நானே.. இவனை பார்க்க வரவேண்டாம்னு தானே சொன்னேன். இவன் எதற்கு.. இதற்கு விளக்கம் சொல்கிறான்..” என்றிருந்தது செல்விக்கு.

“எப்படியிருக்க செல்வி?”,

“நல்லா இருக்கேன்”, என்றாள் இந்த முறை வாயைத்திறந்து.

எப்போதும் ‘’இந்த பக்கம் வந்தேன்.. பார்க்க வந்தேன்.”, என்று சொல்லும் அருள்.. இந்த முறை’’ உன்னைப் பார்க்க தான் வந்தேன்”, என்றான்.

“எதுக்கு?”, என்றாள் தைரியத்தை எல்லாம் திரட்டி.

“ஏன்.. நான் பார்க்க வந்தா, என்ன?”, என்று எதிர்கேள்வி கேட்டான்.   

இது என்ன பதில் ..என்பது மாதிரி செல்வி பார்க்க..

“டேய் அதிகப் பிரசங்கி.. வாயை மூடுடா. சொதப்பாத.”, என்று அவன் மனசாட்சி குரல் கொடுக்க..

“சும்மா தான் வந்தேன்”, என்று மறுபடியும்.. ஒரு பதில் அளித்தான்.

செல்விக்கு மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால்.. இவன் தன்னை வந்து பார்ப்பது சரியல்ல என்று மனது உணர்த்த.. தயக்கமாக அவனிடம் பேச ஆரம்பித்தாள். 

“நான் உங்ககிட்ட முன்னாடியே சொன்னேன்.. இப்படி நீங்க வந்து என்னை பார்க்கறது சரியில்லைன்னு”,

“நீ சொன்னதுக்கு அப்புறம் நான் வரவேயில்லையே”, என்று அவசரமாக பதில் அளித்தான்.

“இப்போ வந்திருக்கீங்களே..”,

“ரொம்ப நாள் ஆச்சே. நீ எப்படி இருக்கன்னு பார்க்க வந்தேன்”,

“அதான்.. ஏன் வந்தீங்கன்னு கேட்கறேன்..”

“நான், ஏன் உன் பின்னாடியே வர்றேன்னு.. உனக்கு இன்னும் புரியலையா?”, என்றான் அவனையறியாமல்.

அவனின் வார்த்தைகள் எதையோ செல்விக்கு உணர்த்த.. “ஏன் வர்றீங்க”, என்றாள் கலவரமாக.

“நிஜமாவே.. உனக்கு என்னைப் புரியவேயில்லையா? இல்லை.. புரிஞ்சிக்க முயற்சி பண்ணவேயில்லையா?” என்றான் ஆயாசமாக அருள்.

“இல்லை.. எனக்குப் புரியலை”, என்றாள் தடுமாற்றமாக புரிந்தும் புரியதவளாக. அவளுக்குப் புரிந்த விஷயமமும்.. அவ்வளவு உவப்பானதாக அவளுக்கு இல்லாததாக. 

ஒரு க்ஷணம் போதும்.. தன் மனதை உரைக்க அருளுக்கு. ஆனால் அவன் அதை செய்யவில்லை. அவனுக்கு எழிலரசியின் திருமணம் முடிய வேண்டி இருந்தது. அதுவரை அவன் எந்த பிரச்சனையும் தன்னால் உருவாவதை விரும்பவில்லை.

“நீதான் கண்டுபிடியேன்.. நான் உன் பின்னால.. ஏன் சுத்தறேன்னு?”, என்றான் சற்று அதிகாரமாக.

“என்ன! நீங்க என் பின்னால சுத்தறீங்களா!”, என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை. கம்மிய குரலில் வார்த்தை வெளிப்பட்டது.

இந்த வார்த்தை சொல்லும் அர்த்தம் ஒன்றுதானே. ஒரு பையன்.. ஒரு பெண்ணின் பின்னால்.. எதற்கு சுற்றுகிறான்.. என்ற அர்த்தம் கூட தெரியாமல் இருப்பவளா.. செல்வி.

“நீங்க என்ன சொல்றிங்க?”, என்றாள் மிதமிஞ்சிய கலவரத்துடன்.

அருள் ஒன்றும் பேசாமல் ஒரு புன்னகையே சிந்தினான். காதல் கொண்டவர்களை மயக்கும் புன்னகை. ஆனால் செல்வியை அது நிறைய கலவரப்படுத்தியது. கண்களில் கண்ணீர் குளம் கட்டுவேனா.. என்றது மறுபடியும்.

அதற்குள் ஆனந்தி.. இன்னும் யாரோ ஒரு பையனுடன் வந்தாள். பக்கத்தில் வந்ததும் தான் அருளை பார்த்தாள். நிறைய வருடங்கள் ஆகினாலும்.. சட்டென்று அடையாளம் கண்டு கொண்டாள். முதல் சந்திப்பு அப்படிப்பட்டதல்லாவா. செல்வி அவன் வந்த போது.. எவ்வளவு மூட் அவுட் ஆக இருந்தாள்.. என்று பார்த்தவள் தானே.

அவனைப் பற்றிய விவரங்களை.. எவ்வளவு நைச்சியமாக பேசி.. செல்வியிடம் வாங்கினாள் என்று அவளுக்குத் தானே தெரியும். பிச்சி பிச்சி.. கொஞ்ச கொஞ்சமாக.. அவள் சொன்னதில், ஆனந்திக்கு தெரிந்தது என்னவென்றால்.. அருள் முன்பு எப்பொழுதும்  அவளை வம்பிழுத்துகொண்டே  கொண்டே இருப்பான்.. அதை இப்போதும் தொடர்கிறான்.. என்று செல்வி சொல்ல அந்த மாதிரி இல்லை என்றே ஆனந்திக்கு தோன்றியது.

ஒரு, இரண்டு மூன்று முறை பார்த்திருந்தால்.. நோக்கம் என்ன என்று கணித்திருப்பாள். ஒரு முறை தானே பார்த்தாள்.. அதனால் தெரியவில்லை.

“ஹாய் அண்ணா! எப்படி இருக்கீங்க..”,

ஆனந்தியை பார்த்து அருளும் சந்தோஷமாக புன்னகைத்தான். “நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க..”,

“நானும் நல்லா இருக்கேன் அண்ணா” என்றவள், பக்கத்தில் நின்ற பையனை அருளுக்கு அறிமுகபடுத்தினாள்.

“அண்ணா.. இது பரத், எங்க கிளாஸ் மேட்.”,  என்றவள்.

“இவங்க”, என்று அருளை எப்படி பரத்திடம் அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாற..

அருளே அந்த வேலையை செய்தான். “நான் அருள். சூப்பரின்டென்டென்ட் ஆப் போலீஸ்! செல்வியோட கார்டியனோட பிரதர்”, என்றான் சரளமாக.

அவனின் பதவி கேட்டு வியந்த பரத்தும்.. “ஹலோ சார்”, என்று படு பவ்யமாக கையை குலுக்கினான்.

இது எதுவும் ரசிக்கவில்லை செல்விக்கு. ஆனந்திக்கு, அவள் முகம் பார்த்தே.. அவளின் மூட் சரியில்லை என்று தெரிந்தது. இருந்தாலும்.. அங்கே எதுவும் காட்டிக்கொள்ளாமல் சரளமாக பேசினாள்.

“எங்கே அண்ணா.. உங்களை ரொம்ப நாளா காணோம்?”,

“ரொம்ப நாளா.. இல்லை வருஷமா?”, என்று எடுத்துக்கொடுத்த அருள்…

“ஐ பி எஸ் பாஸ் பண்ணதுக்கு அப்புறம்.. ஆந்திரா, நெல்லூர்ல போஸ்டிங். இப்போ தான் சென்னை ட்ரான்ஸ்பர் ஆனது. இனிமே இங்கே தான். அடிக்கடி மீட் பண்ணலாம்”, என்றான்.

பரத் அருளையே தான் கவனித்துக் கொண்டிருந்தான். அருள் தங்களோடு பேசிக்கொண்டிருந்தாலும்.. அவன் கவனம் முழுவதும் செல்வி மீதே இருந்ததை உணர்ந்தான் பரத்.   

“என்ன.. இனிமே சென்னையிலா..”, என்று மனதிற்குள் அதிர்ந்தாள் செல்வி. “அப்போ அடிக்கடி என்னை வந்து பார்ப்பானா அய்யாவுக்கும் அக்காவுக்கும் தெரிஞ்சா.. என்னை பத்தி என்னநினைப்பாங்க?”, என்ற கவலையே அதிகமாக இருந்தது செல்விக்கு.

அவளின் அதிர்ந்த முகம்.. அவள் நிறைய அதிர்ச்சியில் இருக்கிறாள் என்பதைக் காட்ட.. இன்றைக்கு இது போதும் என்று நினைத்தவன்.. பொதுவாக அவர்களிடம் விடைபெற்று கிளம்பினான்.

அவர்கள் இருந்ததினால் செல்வியால் ஒன்றும் பேசமுடியவில்லை. சிறிது தூரம் சென்றவன் அவள் அருகில் வந்து, “செல் இருக்கா” என்றான்.

“இருக்கு”, என்றவள் தலையசைக்க.

“ஒரு நிமிஷம் கொடு”, என்றான்.

அவள் எதற்கென்று புரியாமல் கொடுக்க..

அவள் செல்லில் இருந்து.. தனக்கு ஒரு கால் கொடுத்துக்கொண்டு.. அவளிடம் கொடுத்து சென்றான்.

அவனின் இந்த செய்கையைப் பார்த்து.. ஆனந்தியும் பரத்தும் ஆச்சர்யமாக புன்னகைக்க செல்வியின் முகம் இன்னும் கலவரத்தை அப்பியது.   

அருள் சென்ற பிறகு.. பரத் செல்வியை பார்த்து.. “அவர் உன்னை லவ் பண்றாரா.. செல்வி”, என்றான் பளிச்சென்று.

செல்வியின் கண்களில் நீர் நிறைய

“ஏண்டா அப்படி கேட்கற?”, என்றாள் ஆனந்தி.

“எனக்கு அப்படிதான் தோணுது”, என்றான் தெளிவாக பரத்.

செல்வி அந்த வார்த்தையைக் கேட்டு.. சித்தம் கலங்கி நின்றாள்.. என்றே சொல்ல வேண்டும்.                 

Advertisement