Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

சரவணன், அருளின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தான். இது வெறும் சந்தோஷம் மட்டும் தானா.. இல்லை அதையும் மீறி ஏதாவது ஒன்றா?. சட்டென்று எதுவும் பிடிபடவில்லை.

அருளின் பார்வை.. சரவணனுக்கு காதலோடு பார்த்தது போலவே தோன்றியது. அவனின் கண்கள் அவனுக்கு பொய் சொல்லாது. சரவணன் அதை உணர்ந்தான்.   

இதற்குள் சரவணன் தன்னை பார்ப்பதை உணர்ந்த அருள்.. அங்கிருந்த பேப்பரை பார்ப்பதை போல அமர்ந்து கொண்டான். “டேய்.. இப்போவே ஏதாவது செஞ்சு மாட்டிக்காத. அடங்குடா.. அடங்கு. அவனை பாரு.. உன்னை எப்படிப் பார்க்குறான். உனக்கும் அண்ணன்டா.. இப்போவே ஏதாவது கண்டுபிடிச்சான்னா.. காரியமே கெட்டிடும். அவ ரொம்ப சின்ன பொண்ணு. இன்னும் காலேஜ் கூட போகலை. எவ்வளவு நல்லா படிக்கறா. அவ படிக்கட்டும்.. அடங்குடா”, என்று அவனுக்கு.. அவனே மனதிற்குள் பேசிக்கொண்டான் அருள்.

“இப்போ தானே அப்படி பார்த்தான். இப்போ ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு பேப்பரை படிக்கிறான். எதுடா நிஜம்..” என்று சரவணனே ஒரு நிமிடம் குழம்பி போனான்.

அதற்குள், “அண்ணி பசிக்குது”, என்று அருள் சொல்ல.. அவசரமாக சமையல் வேலையை பார்க்க சென்றனர். பிறகு பள்ளிக்கு செல்ல வேண்டுமே என்ற அவசரத்தோடு.

சரவணன் வேலைக்கு கிளம்ப தயாராக சென்றான். 

செல்வியின் மனம் உற்சாகத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பார்த்து.. செல்வியின் தோழி, ஒரு பெண் வேறு அவளை அழைத்திருந்தாள்.. வாழ்த்துச் சொல்ல . ராதிகா தொலைபேசியை கொடுக்க..

செல்வி அவள் தோழியிடத்தில் உற்சாகமாக பேசினாள். இவ்வளவு உற்சாகமாக அவள் பேசி.. அவன் பார்த்ததே இல்லை. அவளையே பார்த்தும்.. பார்க்காமல்.. பார்த்துக் கொண்டிருந்தான் அருள்.

பின்பு வேலைகள் வேகமாக நடந்தன.. அவளுடைய பள்ளிக்கு போக. அங்கே எல்லாரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ராதிகா செல்வியோடே இருந்ததினால்.. தனியாக பேசும் சந்தர்ப்பம் எதுவும் அருளுக்கு அன்று அமையவில்லை. அதுவும் அவன் ஊருக்கு கிளம்பும் நேரம்..சரவணன் வீட்டிற்கு வந்துவிட.. செல்வியிடம் விடைபெற கூட வழியில்லாமல் போயிற்று. சரவணன் காலையிலேயே தன்னை சந்தேகக்கண்ணோடு பார்த்தான்.. என்பதால் அருள் மிகவும் கவனமாக இருந்தான்.    

சரவணனும் கண்ணில்  விளக்கெண்ணையை விட்டு கொண்டு கவனித்தான். காலையில் அருள் முகத்தில் பார்த்தது பொய்யோ எனும்படி இருந்தது அவன் முகம். அவனும் செல்வியின் புறம் திரும்ப கூட இல்லை. தான் தான்.. தேவையில்லாததை நினைத்துக்கொண்டோமோ என்று நினைக்கும் அளவுக்கு.. அருளின் நடத்தை இருக்க.. சரவணனும் அப்படியே நினைத்துக்கொண்டான். 

அருளோ.. இந்த முறை செல்வியிடம் பேசின சந்தோஷம், திருப்தி.. என்று எதுவும் இல்லாமலே ஊருக்கு கிளம்பினான்.

செல்வியின் மதிப்பெண்கள் நன்றாக இருக்க.. அவளுக்கு, அவள் நினைத்தப் படியே மெடிக்கல் சீட் கிடைக்க.. சென்னையில் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜில் படிக்க சேர்ந்தாள். எல்லோரையும் விட அருளுக்கு.. அதில் மிகவும் சந்தோஷம்.

அருளும் ரிசல்ட் வந்தபோது செல்வியை பார்த்ததோடு சரி. அதற்கு பிறகு செல்வியை கவுன்சிலிங் கூட்டி வரும் போது தான் பார்த்தான்.

வெற்றிகள் கொடுத்த நிமிர்வு.. செல்வியை அழகாகவும் சற்று கம்பீரமாகவும் காட்டியது.

அருள் அவர்கள் கவுன்சிலிங் போகும்போது கூடவே இருந்தான். ஆனால் சரவணனுக்கு சிறிதும் சந்தேகம் வரும்படி நடந்து கொள்ளவில்லை. செல்வியின் புறம் பார்வையை கூட திருப்பாமல்.. சரவணனிடமே பேசிக்கொண்டு இருந்தான். ஏனென்றால்.. சரவணன் எப்படியும் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்ப்பான் என்று தெரியும்.

அருள் சந்தேகப்பட்டது போலவே இந்த முறையும்.. சரவணன் அருளை ஆராய்ந்து தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அருளின் பார்வையில்.. நடத்தையில்.. அவனுக்கு சிறு சந்தேகம் கூட எழவில்லை. அப்புறமே விட்டான்.

சரவணனுக்கு பயம். இவன் பாட்டுக்கு.. அந்த பெண்ணின் மேல் ஏதாவது ஆசையை வளர்த்துக்கொண்டால்.. அவன் அம்மா, அவனை தொலைத்து விடுவார் என்று தெரியும். எத்தனை முறை அந்த பெண்ணை வீட்டிற்கு கூட்டி வராதே.. வைத்துக்கொள்ளாதே என்றார்.. அதையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால்..

ஆம், சரவணனைப் பொருத்தவரையில்.. இது அசம்பாவிதமே.  

அதுவுமில்லாமல்.. உதவி செய்வது என்பது வேறு. காதல், திருமணம்.. என்பது சந்ததிகள் வரை செல்ல கூடியது. அது சரி வராது.. என்பது சரவணனின் எண்ணமே.

செல்விக்கு உதவும் எண்ணமெல்லாம்.. சரவணனுக்கு இருந்த போதும்.. அவள் மிகவும் நல்லப் பெண் என்று உணர்ந்த போதும்.. அதை மீறிய எண்ணம் எதுவும் சரவணனுக்கு இல்லை.

அவளை ஆளாக்கி.. அவளுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்துவிட்டால்.. அவள் வாழ்கையை அவள் பார்த்துக்கொள்வாள்.. என்ற எண்ணமே சரவணனுக்கு. அதில் செல்வி வேறு.. நன்கு படிக்கும் பெண்ணாக போய்விட்டதால்.. செய்யும் உதவியை ஆர்வமாக செய்ய வைத்தது.  

உதவி செய்தால் நான்கு பேர் பாராட்டுவர். அதே.. இந்த மாதிரி என்றால்.. சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் அந்தஸ்திற்கு.. தங்களுக்கு நிறைய கீழிறக்கம் ஏற்படும். அது மட்டுமின்றி..அவன் அன்னையும் தந்தையும் இதை தாங்க மாட்டர்.

இவன் ஏதாவது.. காதல் கீதல் என்று விட்டால்.. என்ன செய்வது என்ற பயம் சரவணனுக்கு இருந்தது. அருளின் செய்கையால்.. சற்று மட்டுப்பட்டு.. இவனுக்கு எதுவும் அந்த பெண்ணின் மேல் ஆர்வம் இல்லைப் போல.. என்ற முடிவிற்கு கடைசியாக வந்தான்.            

கோதை தான்.. அவள் டாக்டருக்கு சேர்ந்ததற்கு, அதிகமாக ஆட்சேபித்தார். “நீ அந்த பொண்ணு படிக்க இன்னும் எவ்வளவு செலவு பண்ணுவ..” என்று சரவணனிடம்.

சரவணன் தான் நிறைய விளக்கம் கொடுக்குமாறு ஆயிற்று. “அம்மா.. அந்த பொண்ணுக்கு பீஸ் ரொம்ப கம்மி தான். கவெர்மென்ட் சீட் தான் கிடைச்சிருக்கு. அதுவும் அவ நல்லா படிக்கறதுக்கு ஸ்காலர்ஷிப் வேற வரும். எனக்கு எதுவும் செலவு வராதும்மா”, என்று பலமுறை சொன்ன பிறகே அரை மனதாக விட்டார்.

உதவி புரிவது என்பது நல்ல விஷயம் தான் என்று கோதைக்கு தெரியும். ஆனால் அந்தபெண்ணின் பொறுப்பை.. சரவணன் எடுத்திருப்பது அவருக்கு இன்னுமே நெருடல் தான். எப்போது அவள் ஒழிவாளோ.. என்ற எண்ணம் தான் கோதைக்கு.

ஒரு வளர்ந்த மகன்.. அந்த பெண்ணிற்கு உதவி புரிகிறான். என்னதான் திருமணம் ஆனவன் என்றாலும்.. அவனும் ஆண்தானே. அதுவுமில்லாமல்.. இன்னொரு வளர்ந்த மகன் வேறு இருக்கிறான். பெண்ணை வைத்திருபவர்களை விட அதிகமாக.. வயிற்றில் நெருப்பை அவர் கட்டிக்கொண்டு இருந்தார் என்று சொல்லலாம்.

இதில் மகளுக்கு இன்னும் திருமணத்திற்கு பார்க்க துவங்கவில்லையே என்ற எரிச்சல் வேறு.. அவரின் மனநிலையை தொய்வடைய செய்தது.

என்னவோ இந்த முறை சரவணனிடம் மிகவும் கண்டிப்பாக சொல்லி விட்டார். “மெடிக்கல் சேர்த்த பிறகு.. முன்ன மாதிரி அந்தப்பொண்ணு வீட்டுக்கு வந்து தங்கற வேலையெல்லாம் இருக்க கூடாது. மீறி போனா ஒரு நாளோ ரெண்டு நாளோ அவ்வளவு தான்”.

“உங்களுக்கு வேணும்னா.. நீங்க போய் பார்த்துக்கோங்க”, என்று விட்டார். அருளின் பார்வை வித்தியாசத்தை.. ஒரு க்ஷனமேனும் உணர்ந்த சரவணனும்.. வெளியில் சொல்லாவிட்டாலும் அதையே நினைத்துகொண்டான்.

மனதின் ஒரு மூளையில் சிறு சந்தேகம்.. பொறியாகவே இருந்தது. அருளின் கண்களில் அவ்வளவு காதலைப் பார்த்தான் சரவணன்.

அப்படி ஒன்றும் பிறகு தெரியவில்லை.. என்று அவனுக்கு அவனே.. சரவணன் சமாதனப்படுத்திக் கொண்டான். அருள் வெகு ஜாக்கிரதையாக இருக்கிறான்.. என்று அவன் எண்ணவில்லை.

செல்வி காலேஜிற்கு போய் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அருள் செல்வியை பார்த்தும் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. அவனிற்கு இதற்குள்.. அவன் ப்ரிலிமினரி எக்ஸாம் பாஸ் செய்து.. மெயின் எக்ஸாம் அடுத்த மாதம் இருந்தது. அவளை பார்க்காமல்.. மனம் படிப்பில் செல்ல மாட்டேன் என்று முரண்டு பிடித்தது.

அவளின் காலேஜிற்கு சென்றான் அவளை பார்ப்பதற்கு. கொஞ்சம் அதிகப்படியோ.. என்று அவனுக்கேத் தோன்றியது. இருந்தாலும் பார்த்தே ஆகவேண்டும்.. என்ற எண்ணம் அதை பின்னுக்குத் தள்ளியது. அதுவும் அவன் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து.. மெடிக்கல் காலேஜ் மிகவும் பக்கம். அங்கே பக்கமாக தான் அவன் தங்கியிருந்தான்.

அவ்வளவு பக்கமாக தான் தங்கியிருந்தும்.. செல்வியை பார்த்துக்கொள்.. என்று சரவணன் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. என்று அருள் உணர்ந்தே இருந்தான். அவன் சொன்னால் என்ன.. சொல்லாவிட்டால் என்ன? நீ போடா.. என்று அவனுக்கு அவனேத் தேற்றிக்கொண்டான். 

அவன் சென்ற நேரம் செல்வி.. ஏதோ மரத்தடியில் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அவன் சென்றது மதிய உணவு நேரமே. அவள் சாப்பிட்டு விட்டு அப்போதுதான் வந்தமர்ந்தாள். கூட இரு பெண்களும் இருந்தனர்.

அத்தனை பேருக்கும் மத்தியில்.. நிமிடத்தில் அவள் இருந்த இடத்தை கண்டு பிடித்தான். படித்துக்கொண்டிருக்கும் படிப்பு.. அவளை இன்னும், அவன் கண்களுக்கு கம்பீரமாக காட்டியது.

முதலில் போய் பேசலாம் என்று நினைத்தான். பிறகு தயங்கித் தயங்கி.. அவள் பின்புறம் செல்ல.. அங்கே இருந்த ஒரு பெண் செல்வியை திட்டிக்கொண்டு இருந்தாள்.

“ஏன் செல்வி இப்படி கடுப்படிக்கற. டெய்லி சாப்பிட்டதும் இந்த மரத்துக்கு கீழ வந்து உட்கார்ந்துக்கற.  அப்புறம் அவசரமா கிளாஸ் ஓடற. ஏன் அப்படி?”..

“சீக்கிரமா கிளாஸ் போய்.. சீனியர் கிட்ட மாட்ட சொல்றியா”, என்றாள் செல்வி.

“அதுக்குன்னு வேற இடம் கிடைக்கலையா?. இந்த மரமா கிடைச்சது..”,

“என்னவோ இந்த மரம். அதுக்கு கீழ இருக்கிற இந்த பெஞ்ச். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்தி.”

“என்னவோ போ. நீயும், உன் ரசனையும்.”, என்றவள் தான்.. ஆனந்தி, செல்வியின் தோழி. இந்த இரண்டு மாதங்களில் நல்ல தோழிகள் ஆகியிருந்தனர் இருவரும். ஆனந்தியின் ஊர் ஈரோடு. அவளும் மெடிசின் படிக்க செல்வியுடன் சேர்ந்திருந்தாள். இருவரும் ஒரே ரூமை வேறு ஷேர் செய்தனர். அதனால் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவாகியது.

“ஆமாம்.. இந்த மரத்துல என்ன வெச்சிருக்க நீ..”

“இப்ப சொல்லலை. என்னைக்காவது தோணினா சொல்றேன்.” என்றாள் சிரிப்போடு செல்வி.

“அப்ப ஏதோ இருக்கு..” என்றாள் ஆனந்தி.

அதற்கும் சிரித்தாள் செல்வி.

“எதுக்காவது.. பதில் சொல்ல வேண்டாம்னு நினைச்சின்னா.. உடனே சிரிச்சிடு. இப்போ வா”, என்று இழுத்துப் போனாள் ஆனந்தி.

அருள், அவளோடு பேச நினைப்பதற்குள்ளாகவே.. அவர்கள் இருவரும் நடக்க ஆரம்பித்து இருந்தனர்.

அவர்கள் பேசியதனைத்தையும்கேட்டு இருந்தான் அருள். “இந்த மரத்திற்குப் பின்.. என்ன கதை இருக்கும்..” என்று எண்ணியவாறே.. “செல்வி”, என்று சற்று சத்தமாக அழைத்தான்.

யார் தன்னை கூப்பிடுகிறார்.. என்று அவசரமாகத் திரும்பினாள் செல்வி. அங்கே அருளை பார்த்ததும்.. சற்று அதிர்ந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

யார் கூப்பிட்டார்.. எதற்கு இவள் இப்படி நிற்கிறாள்.. என்பது போல ஆனந்தி பார்க்க.. அருள் அவளை நோக்கி வந்தான்.

“எப்படி இருக்க செல்வி?”

“நல்லாயிருக்கேன்”, என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

இவன், ஏன் இங்கே வந்திருக்கிறான்.. என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் ஓடியது.

அவள் மனதை  அறிந்தவனாக.. “ஒரு வேலையா இங்கே வந்தேன். அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..” என்று அஞ்சாது பொய் சொன்னான்.

ஊரில்.. தான் அவனிடம் மாட்டவில்லை.. என்று இங்கே பொய் சொல்லி வந்திருக்கிறானோ.. என்று தான் செல்விக்குத் தோன்றியது.

பதில் பேசாமல் நின்றாள்.

“எப்படியிருக்கு காலேஜ் எல்லாம்..”,

அதற்கும், “நல்லாயிருக்கு”, என்பது போல தலையை மட்டும் ஆட்டினாள்.

பார்த்த ஆனந்திக்கு.. யார் அவன் என்று தெரிந்து கொள்ளாவிட்டால்.. மண்டையே வெடித்து விடும் போல ஆனது.

பக்கத்தில் இருந்த ஆனந்தியின் யோசனையான முகம் பார்த்த அருள்.. செல்வியிடம், “பாரு.. உன் ஃபிரண்டுக்கு, நான் யாருன்னு தெரியலைனா.. மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு. நான் யாருன்னு சொல்லிடு.” என்றான்.

ஆனந்தி, “ஆ”, என்று வாயை பிளந்தாள். “நான் நினைக்கறதை அப்படியே சொல்றானே.. பெரிய ஆள் தான் இவன்.” என்று தோன்றியது. அப்படி தோன்றவும்.. அவனை பார்த்து சிநேகமாய் புன்னகை செய்தாள்.

ஆனந்தி புன்னகை செய்யவும், “நான் அருள்”, என்றான் ஆனந்தியைப் பார்த்து.

“நான் ஆனந்தி”, என்றாள் பதிலுக்கு ஆனந்தி.

இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்த செல்வி.. அருளை பார்த்து உறுத்து விழித்தாள்.

“உன்னை பார்க்க தான் வந்தேன்”, என்றான் அருள்.. செல்வியைப் பார்த்து. 

“பார்த்துட்டீங்கள்ல..” என்றாள் பட்டென்று செல்வி.

அவள் சொல்வதிலேயே.. கிளம்பு என்று இருந்ததை.. அருள் உணர்ந்தான்.

இருந்தாலும்.. வேறு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க

அவன் அமைதியாக நிற்பதை பார்த்த ஆனந்தி.. “நீங்க சென்னையிலா, அண்ணா இருக்கீங்க..” என்றாள்.

“என்ன.. அண்ணாவா?”, என்று செல்வி ,ஆனந்தியை ஆச்சர்யமாக பார்க்க.. அதை கண்டு கொள்ளாமல்.. ஆனந்தி அருளிடம் பேசி நின்றாள். 

“சென்னையில தான். இங்க பக்கத்துல தான் என் ஆபிஸ். நான் தங்கியிருக்குறது கூட பக்கம் தான்.” என்றான் செல்விக்கும் தெரியட்டும் என்றெண்ணி.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தான் செல்வி நின்றுகொண்டிருந்தாள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆனந்தியிடம், “கிளாஸ்க்கு டைம் ஆச்சுடி”, என்றாள் செல்வி.

“அப்போ நாங்க கிளம்பவா.. அண்ணா”, என்று அருளிடம் பெர்மிஷன் கேட்டாள் அந்த பெண்.

செல்வியை பார்த்தவாறே தலையசைத்தான்.

செல்வியும் ஆனந்தியும் கிளாஸ்சிற்கு நடக்க ஆரம்பித்தனர். சற்று தூரம் சென்ற செல்வி, “ஒரு நிமிஷம் இரு”, என்று ஆனந்தியிடம் சொல்லி, திரும்பி வந்தாள் அருளிடம்.

வந்தவள். “இப்படி.. இங்கல்லாம் வந்து பார்க்காதீங்க. எனக்குப் பிடிக்கலை.” என்றாள் பட்டென்று.

அருளும் அதே வேகத்தோடு.. அவளிடம் திருப்பிக் கொடுத்தான். “ஆனா.. எனக்கு பிடிச்சிருக்கே”, என்று. 

அவனை முறைத்துப் பார்த்தாள். இவன் சிரித்தான்.

“என்ன சிரிப்பு! நான் சீரியஸா சொல்றேன். இந்த மாதிரி எல்லாம் வந்து பார்க்காதீங்க. அப்புறம்.. நான் எங்க அய்யாகிட்டயே சொல்லிடுவேன்.”

“என்ன! அய்யாகிட்ட சொல்லிடுவியா எனக்கு பயமாயிருக்கு. ப்ளீஸ்.. சொல்லாத.” என்றான்.

இவன் நிஜமாக சொல்கிறானா.. இல்லை, தன்னை நக்கல் செய்கிறானா.. என்று சத்தியமாக செல்விக்குப் புரியவில்லை.

“நான் சீரியஸா பேசறேன், நீங்க விளையாடுறீங்களா?”,

“யார் விளையாண்டா.. நானும் சீரியஸாத் தான் சொல்றேன். நீ உங்க அய்யா கிட்ட சொன்னா பிரச்சினை ஆகும். அப்புறம் உன் படிப்பே நின்னாலும் நின்னுடும்”, என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டான்.

அப்படியே.. அதிர்ந்து நின்று விட்டாள் செல்வி.  கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

அருளுக்கு, இப்போதைக்கு அவள் சரவணனிடம் சொல்லாமல் இருப்பது தான் சரி.. என்று தோன்றவே, அவளை பயப்படுத்துவதற்காக.. அப்படி சொன்னான்.

அது.. அவளை இந்த அளவிற்கு பாதிக்கும்.. என்று அவனே எண்ணவில்லை.

“ஹேய்.. சாரி, சாரி. சும்மா சொன்னேன். அதுக்கு ஏன் அழற..”, என்று பதட்டமாக.. அவனையறியாமல் கண்துடைக்கப் போக.. அவள் அனிச்சை செயலாக பின்னடைந்தாள்.

பின் என்ன நினைத்தாளோ., “ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் இதை அய்யா கிட்ட சொல்லலை. ஆனா அடுத்த முறை வந்தீங்கன்னா.. என் படிப்பு நின்னாலும் பரவாயில்லைன்னு.. அய்யா கிட்ட நீங்க பார்க்க வந்ததை சொல்லிடுவேன்.”  என்று மட்டும் சொல்லி சென்றுவிட்டாள். 

ஆனந்தி தான் இவளைப் பார்த்ததும் பரபரத்தாள். “ஏன் செல்வி அழற. யார் அவங்க. பார்த்தா நல்லவங்க மாதிரி தானே தெரியறாங்க.”,

“நான் உன்கிட்ட கேட்டேனா?. அவங்க நல்லவங்களா.. கெட்டவங்களான்னு..”,

“இல்லை”, என்று ஆனந்தி தலையசைக்க.

“அப்போ.. வாயை மூடு”, என்று அவளிடம் எரிந்து விழுந்தாள்.

இவர்கள் போவதையேப் பார்த்துக்கொண்டு நின்றான் அருள்.

அவன் மனம் அவனிடம்.. “டேய் பெருசா சொதப்பிட்ட போலடா. உன்னை யாருடா.. படிப்பை நிறுத்திடுவாங்கன்னு எல்லாம் சொல்ல சொன்னது..”

“அது.. அப்பவாவது அவ பயந்து.. நான் வந்து பார்க்கிறதை, சரவணன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். அது மொத்தமா சொதப்பிடிச்சு.” என்று அவன் மனதிடம்.. பதில் வேறு சொன்னான்.

அவள் அழுதுகொண்டே சென்றது வேறு மனதை வருத்தியது. “இப்படி பண்ணிட்டியேடா”, என்று அவனை அவனேத் திட்டிக்கொண்டு சென்றான்.

 செல்விக்கு மனம் ஆறவேயில்லை. “எவ்வளவு ஈசியாக படிப்பை நிறுத்திவிடுவார்கள்.. என்று சொல்லிவிட்டான். இவன் வந்து பார்த்தால்.. நான் என்ன செய்வேன். வருவது வரட்டும் என்று அய்யாவிடம் சொல்லிவிடுவோமா? இவன் ஏன் வந்து.. என் உயிரை எடுக்கிறான்”, என்றிருந்தது.

அவளின் எண்ணத்தை கலைப்பதுப் போல.. அவளுக்கு அனாடமி கிளாஸ் நடக்க.. படிப்பில் ஆர்வமான செல்வி ..அருளை தற்காலிகமாக மறந்தாள். ஆனால் அருள்  அவளை அழவைத்து விட்டோமே.. என்ற எண்ணத்திலேயே உழன்றான். அது அவனை பெரிதும் பாதித்தது.

தனக்கு காதலிக்கத் தெரியவில்லையோ.. அல்லது காதலிக்க வரவில்லையோ.. என்று எண்ணிக்கொண்டான்.  அவனுக்கு மனதே சரியில்லை. படிக்கும் பெண்ணை.. தேவையில்லாமல் தொந்தரவு செய்துவிட்டோமோ.. என்று தோன்றியது.

அடுத்த நாளும்.. சரியாக முதல் நாள் சென்ற நேரத்திற்கே சென்றான். இந்த முறை, அவளை தூரம் இருந்து.. பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டான், பக்கத்தில் செல்லவில்லை. நிறைய ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்ததால்.. செல்விக்கு இவன் தன்னை பார்ப்பது தெரியவில்லை.

அவளைப் பக்கத்தில் போய்.. தொந்தரவு செய்யும் எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை. அவள் எப்படி இருக்கிறாள்.. என்று பார்த்தான். அமைதியாக தான் அமர்ந்திருந்தாள். ஆனந்தி தான் அவளிடம் வளவளத்துக் கொண்டிருந்தாள்.

அமைதியாக அவனும் திரும்ப சென்றுவிட்டான். அடுத்த நாளும் வந்தான். இந்தமுறை அவள் சற்று பரவாயில்லை. ஒரு வாரம் விடாமல் வந்தான். மறைந்திருந்து தான் பார்த்தான். அது கூட்டம்மான இடமாக இருந்ததால்.. யாருக்கும் தெரியவில்லை.

அவள் முகத்தில் மகிழ்ச்சி மீண்டு.. அவள் எப்பொழுதும் போல.. ஆனந்தியிடம் பேசுவதைப் பார்த்த பிறகே.. வருவதை நிறுத்தினான். இப்பொழுது அதிகமாக போனால்.. அவள் தன்னை பார்த்துவிடக்கூடும். அது அவள் படிப்பைப் பாதிக்கும் என்பதால்.. எப்பொழுதாவது ஒரு முறை பார்ப்பதை வழக்கப்படுத்திகொண்டான்.

தான் சொன்னதால்.. அவன் பிறகு வரவில்லை.. என்பதை கண்ட செல்வி நிம்மதியாக உணர்ந்தாள். அவளின் நிம்மதிக்காகத் தான்.. அவன் வராமல் இருக்கிறான்.. என்று உணரவில்லை அவள்.

அதற்குள் அவன்.. ஐ பி எஸ் எக்ஸாம் வர.. சற்று அதில் மும்முரமானான். எக்ஸாம் எழுதி.. அதில் வெற்றியும் பெற்று.. மொத்த குடும்பமும் வழியனுப்ப.. அவளுக்கேத் தெரியாமல்.. அந்த மரத்தடியில், அவளை கண்களில் நிரப்பிக்கொண்டு.. ஐ பி எஸ் பயிற்சிக்குப் பயணமானான். வந்தவுடனே.. எழிலரசியின் திருமணம் முடிந்தவுடனே.. வீட்டில் பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே..                         

Advertisement