Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

அருளின் மனம் உற்சாகமாக அதற்கு நேர் எதிராக செல்வியின் மனம் சஞ்சலத்தில் இருந்தது.

“இவன் ஏன் நம்மிடம் இப்படி நடந்து கொள்கிறான்”, என்று. “கை பிடித்து ஏன் நிறுத்தினான்.. நான் இதை அக்காவிடம் சொல்வதா வேண்டாமா.. என்னைப் பற்றி தப்பாக எடுத்துகொள்வார்களா.. இல்லை தெரியாமல் கைபிடித்தற்கு.. நான் தான் அதிகப்படியாக எடுத்துகொள்கிறேனா..”

மிகவும் தன்னை குழப்பிக் கொண்டாள். ஆனாலும்.. அவன் நடவடிக்கைகளில் கண்டிப்பாக வித்தியாசம் இருந்ததை உணர்ந்தாள். முன்பு போல் இப்பொழுது எல்லாம் அவன் தன்னை திட்டுவது இல்லை. அலட்சியப்படுத்தி பேசுவது இல்லை.

ஏதோ ரொம்ப பழக்கமானவர்களிடம் நடந்து கொள்வது போல தன்னிடம் நடந்து கொள்கிறான். யாராவது இருந்தால் தன்னிடம் பேசுவது இல்லை. யாரும் இல்லாத போது தான் தன்னிடம் பேசுகிறான்.

யாரிடமாவது அவனை பற்றி சொன்னால் கூட.. யாரும் நம்ப மாட்டார்கள். அவன் எப்படி தன்னிடம் நடந்து கொள்வான்.. என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது மாறி நடந்து கொள்கிறான் என்றால் யார் நம்புவர்.

முதலில்.. இவர்கள் தனக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள். இவர்களின் வீட்டு ஆளைப் பற்றி குறை சொல்வது சரியாகுமா.. அவன் ஏன் தன்னிடம் அப்படி நடந்து கொண்டான்.

“ஏன்”, என்று கேட்டால் “கண்டுபிடி”, என்கிறான். “எதை கண்டுபிடிக்க..” யோசித்து யோசித்து தலை வலித்தது.  

இவ்வளவு குழப்பங்களிலும்.. அவன் தன்னை விரும்பக்கூடும் என்று.. அவள் மனம் எள்ளளவும் நினைக்கவில்லை.

ஒரு வேளை.. சினிமாவில் எல்லாம் காட்டுவது போல.. பெரிய இடத்து பையனாக, தன்னை.. ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்ய போகிறானோ.. என்பது வரை அவளின் நினைவலைகள் போனது.

முற்றிலும் குழம்பி போனாள். இந்த முறை தானே.. இப்படி நடந்து கொண்டிருக்கிறான். அடுத்த முறை பார்ப்போம். பார்த்துவிட்டு பேசிக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

வந்த பிறகே.. தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.  பிறகு எப்பொழுதும் போல.. தன்னுடைய வேலைகளை சற்று கவனிக்க முடிந்தது அவளால். இருந்தாலும்.. மனதில் ஒரு இனம் புரியாத பயம். என்ன ஏதென்று சொல்லத்தெரியவில்லை. இருந்தாலும்.. மனதின் மூலையில் அது இருந்தது. ஆனால்.. அவள் நடந்தது எதையும் ராதிகாவிடமோ சரவணனிடமோ சொல்லவில்லை.

அது அவள் செய்த தவறோ? அவளுக்கேத் தெரியவில்லை. 

அங்கே அருள்.. மும்முரமாக பரீட்சைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தான். அப்போதும்.. அவனின் மனதின் மூலையில் செல்வி இருந்து கொண்டே இருந்தாள். அவனின் பரீட்சையும் வந்தது. நன்றாக எழுதினான்.

எழுதிமுடித்தவுடன் செல்வியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும்.. அம்மாவை பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது என்றுணர்ந்தவன்..  அன்னையை பார்க்க அவனின் ஊருக்கு சென்றான்.

அவனை பார்த்த அவனின் அன்னை கோதைக்கு கோபம் கூட. “ஏண்டா.. ஊருக்கு வந்துட்டு போய் எவ்வளவு நாளாச்சு. எத்தனை தடவை கூப்பிடறது. இனிமே இத்தனை நாள் எல்லாம் பண்ணாதே. உன்னை பார்க்காம இருக்கமுடியலைடா”, என்றார் உணர்ச்சி பூர்வமாக. 

“அவ்வளவு தானே அம்மா, இனிமே இப்படி பண்ணலை”, என்று தழைந்து போனான்.

“நீ இப்படி தான் சொல்ற. ஆனா மாசம்.. மாசம் வரமாட்டேங்ற”, 

சரவணனை விட அருளை.. கோதை நிறைய தேடுவார். அவரின் செல்ல மகன் என்று கூட சொல்லலாம். அவனை இரண்டு மாதமாக பார்க்காத ஏக்கத்தில்.. அவனை கடிந்து கொண்டார். 

“என்னம்மா நீ? நான் தான் பரீட்ச்சைக்கு படிச்சிட்டு இருந்தேன்னு தெரியுமில்லை”.

“ம்! இப்படி தான் உங்கண்ணன் வேலையை வாங்கிட்டு போயிட்டான். நாங்க தான் போய் பார்க்க வேண்டி இருக்கு. இதுல ஒரு பொண்ணை வேற படிக்க வைக்கிறான். ஏதாவது பணத்தை கொடுத்து கழிச்சு விடுவானா. இல்லாத ராமாயணம் பேசறான். அந்த பொண்ணு இருந்தா.. அவனும்  வரமாட்டான். நமக்கும் போக சரிபடாது. ஒரு ஆத்திர அவசரம்னா வர்றானா..”

“இப்போ நீயும் போலிஸ் ஆகறன்னு நிக்கற. நீ என்ன செய்யப்போறியோ..”, என்று வார்த்தைகளை கொட்டினார்.

“அம்மா”, என்றான். என்ன சொல்வது என்று அவனுக்கே தெரியவில்லை. வார்த்தைகளை விட அவனுக்கு மனமில்லை. ஏனென்றால்.. அவன் என்ன செய்யப் போகிறான்.. அவனுக்கும் தெரியவில்லை. செல்வியை அவன் மனம் சுற்றிக்கொண்டிருந்ததால்.. அவன் அன்னைக்கு பொய் வாக்குறுதி எதையும் கொடுக்க விழையவில்லை. அமைதியாகிவிட்டான்.

ஒன்று மட்டும் நிச்சயம் அவனுக்கு. செல்வியை அவன் சேருவது என்பது.. சாதாரணமாக நடக்க கூடிய விஷயமல்ல என்பது. எப்படி.. தனக்கு அவளை இவ்வளவு பிடித்து விட்டது.. அவனுக்கேத் தெரியவில்லை. அதுவும் யார் வந்தாலும் எதிர்த்து நிற்கும் அளவிற்கு. அதுவும் அவன் ஆசை அன்னை வந்தாலும் எதிர்த்து நிற்கும் அளவிற்கு.

இவ்வளவு யோசிக்கும் அவன் செய்த தவறு.. செல்வி அவனை விரும்புவாளா.. மாட்டாளா.. இதை யோசிக்க அவன் மறந்துவிட்டான். செல்வியை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவனுக்கு பிடித்திருக்கிறது. அவளுக்கும் பிடிக்கும் என்று அவனாகவே நினைத்துக்கொண்டான்.

“என்னடா.. பேச்சையே காணோம்”, என்று அவன் அன்னை கேட்க..

“என்னம்மா.. அண்ணன் இங்க வர்றதேயில்லையா..” என்று பேச்சை மாற்றினான்.

“எங்கடா வர்றான். போன மாசம் வந்தான். இனி அந்த பொண்ணு செல்வி ஹாஸ்டலுக்கு போற வரைக்கும் வரமாட்டான். அவ பாட்டி ராதிகாவை காப்பாத்தினாலும் காப்பாத்திச்சு.. இவன் கிட்ட எதுவும் பேசமுடியலை.”

“எப்போ தான்.. அது ஒரு வேலை வாங்கி.. ஒழியுமோன்னு இருக்கு.”

அருளுக்கு மனதில் பாரம் ஏறிக்கொண்டது. இப்படி செல்வியை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  எப்படி அவளை ஏற்றுக்கொள்வார்கள்?.

என்ன ஆனது எனக்கு என்று தெரியாமலேயே ..என் மனம் அவள் புறம் சாய்ந்து விட்டது. ஏன், எப்படி.. என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அப்படி எல்லோர் மனமும்.. அவளை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாதில்லையா? அவன் மனமே அவனுக்கு சொல்லிக்கொடுத்தது.  

செல்வியின் புறம் சாய்ந்த அவன் மனம் மட்டும் சற்றும் அசையவில்லை. வரும் போது.. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று உறுதி எடுத்தது.

ஒன்று மட்டும் அவனுக்கே புரியவில்லை. என்ன கண்டோம்.. திடீரென்று நாம் அந்தப் பெண்ணிடம்.. இவ்வளவு பைத்தியமாகி விட்டோம் அவள் மேல். காதல் எதற்கு வருகிறது.. எப்படி வருகிறது.. யார் மேல் வருகிறது.. என்று வரையறுக்க முடியாதது. அது அவனுக்கு புரிந்தும்.. புரியாமலும் இருந்தது.

அதற்குள் அவன் அன்னை மறுபடியும் ஆரம்பித்தார். “நம்ம எழிலுக்கு வேற வயசாகுது. மாப்பிள்ளை பார்க்கணும்டா”, என்றார்.

“அப்பா இதை பத்தி என்ன சொல்றார்”, என்றான் பொறுப்புள்ள அண்ணனாக.

“அவர் என்ன சொல்றார். முதல்ல ஜோசியம் பார்க்கலாம்னார். பார்த்தா அவளுக்கு இருபத்தி மூணுல தான் பேச்செடுக்கனும்னு  சொல்றார். இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே டா அதுக்கு”,

“சரவணன் என்ன சொன்னான் மா..”

“அவன்.. மறுபடியும் அவளை காலேஜ்ல மேல்படிப்புக்கு சேர்த்து விடுங்க.. ரெண்டு வருஷம் போகட்டும்றான்.”

“சரி. அப்படி தான்  போகட்டுமே மா.”

“என்னடா நீயும் இப்படி சொல்ற. பொண்ணை எத்தனை நாள்தான் வீட்ல வெச்சிருக்க முடியும். மனசு அடிச்சுக்குது”,

“நம்ம மனசு அடிச்சுக்கறதுகாக.. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதுவும் செய்ய முடியாது. அவ நல்லா இருக்கணும்மா..”

“அப்படி சொல்லு, அண்ணா”, என்று பேசியபடியே வந்தாள் எழில்.

“எப்போ பார்த்தாலும்.. கல்யாணம் கல்யாணம்னு.. பொலம்பறதே வேலையா போச்சு”, என்றாள்.

“நீ அம்மாவை ஒருவேளை அவ்வளவு டார்ச்சர் பண்றியோ என்னவோ. உன்னை எப்போ தொரத்தலாம்னு பார்க்கறாங்க.” என்றான் கிண்டலாக.

“டேய் அண்ணா! உன்னை என்ன பண்றேன் பாருடா. நானா டார்ச்சர். நீதாண்டா டார்ச்சர்..” என்றபடி வந்து, அவன் தோளில் பட்டு பட்டென்று அடிக்க..

அவன் அப்படியே அசையாமல் நின்றான். அருள் நல்ல உயரமாக இருப்பான். திடகாத்திரமான உடலை கொண்டவனும் கூட. சற்றே மாநிறமானவன். மொத்தத்தில் வசீகரமானவனே.  

“எருமை மாடு கொஞ்சமாவது அசையுதா பாரு. அப்படியே நிக்குது”, என்று அருளை திட்டிய படியே.. இன்னும் ரெண்டு கொடுக்க.. அவன் அசையவேயில்லை.

“போடாங்”, என்று திட்டிய படி.. சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“கொஞ்சமாவது பொண்ணா லட்சணமா நடந்துக்கோடி”, என்று கோதை கத்த.

“அட விடும்மா. நம்ம வீட்ல இருக்கற வரைக்கும் தான் இந்த கழுதை இப்படி நடந்துக்கும்.” என்றான்.

“என்ன.. நான் கழுதையா..”, என்று எழிலரசி சண்டைக்கு வர..

“நான் எருமைன்னா.. நீயும் எருமைதானே. சாரி தப்பா கழுதைன்னு சொல்லிட்டேன்.” என்றான் சிரிக்காமல் சீரியசாக.

“டேய் அண்ணா. உனக்கு இருக்கிற ஏத்தத்துக்கு.. யார் வந்து உன்கிட்ட மாட்டப் போறாளோ..”

“யார் மாட்டப்போகிறாள். செல்வியைத் தவிர”, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“ஏண்டா இப்படி ஆகிட்ட நீ. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கூட.. உங்க அம்மா அவளை எப்படி திட்டினாங்கன்னு பார்த்துட்டு தானே இருந்த. இதுல நீ நினைக்கறது நடக்குமா?”, என்று அவன் மனசாட்சி.. அவனை கேள்வி கேட்க.. 

“நடக்கும். நடக்கணும். அது தான் அருளோட திறமை.” என்று அவனுக்கு.. அவனே சொல்லிக் கொண்டான்.

இது நடந்தால்.. செல்வியை எல்லாரும் என்ன பாடு படுத்துவர்.. என்பதை நினைக்க மறந்து போனான்.

கோதை என்றும் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று தெரியும். தெரிந்தும் அவன் மனதை.. அவனால் மாற்ற இயலவில்லை. இது வீட்டு பிரச்சினை மட்டுமில்லை. வேறு வேறு ஜாதி என்பதால் பிரச்சினை சற்று பெரியது கூட. அதற்குள் தான் ஐ பி எஸ் ஆகிவிடவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டான்.

செல்வி புறம் இருந்து.. அதிக எதிர்ப்பு வரும் என்று அவன் நினைக்கவில்லை. தனது தாய் தந்தை அதிக எதிர்ப்பு காட்டுவர் என்று அறிந்தே இருந்தான். இதிலும் அவன் செய்த தவறு.. சரவணனை பற்றி அதிகம் சிந்திக்காதது தான்.

இப்படி ஒரு மனநிலையிலேயே ஊருக்கு கிளம்பி விட்டான். செல்வியை பார்க்க வேண்டும் போல இருந்தாலும்.. சரவணன் ஊருக்கு போகவில்லை. இன்னும் தானே சற்று தெளிவாகலாம்.. செல்வியை தன் மனம் தேடுகிறதா என்று நினைத்தான்.

நினைத்து.. ஊருக்கு போகாமல் இருந்துவிட்டான் தான். ஆனால் முடியவில்லை. நாட்களை நெட்டித் தள்ள வேண்டி இருந்தது. செல்வியின் நினைவுகள் அதிகமாக இருந்தது. அதுவும் அவளை நினைக்க வேண்டாம்.. என்று நினைக்க.. நினைக்க.. நினைவுகள் அவளையே வட்டமிட்டன.

சிறு வயதில் தான் எப்படி எல்லாம் அவளை இகழ்ந்து பேசினோம். “முன்ன பின்ன பெண்களையே பார்த்ததில்லையா”, என்று தன் நண்பர்களிடம் அவளை பற்றி பேசினோம்.

ஆனால் இப்போது அவள் மலர் முகத்தை எப்போது காண்போம் என்று இருக்கிறது. என்ன விந்தை இது என்று தன்னை நினைத்தே ஆச்சர்யம் கொண்டான். 

மாதத்தை எப்படியோ தள்ளியவன்.. நாளை பிளஸ் டூ ரிசல்ட் என்றவுடன் இருக்க முடியவில்லை. அவள் ரிசல்ட் என்னவென்று தெரிந்து கொள்வதற்காக.. சரவணன் ஊருக்கு பயணமானான்.

அவர்களுக்கு வருகிறேன் என்று எந்த தகவலும் சொல்லவில்லை. காலை அங்கே போய் இறங்கி பெல் அடித்தால், எப்பொழுதும் போல வந்து கதவை திறந்தது செல்வியே தான்.

அவளை பார்த்ததும் மலர்ந்த முகத்தோடு சிரித்தான். செல்விக்கு சிரிப்பதா.. வேண்டாமா என்று தெரியவில்லை. அவன் அளவிற்கு மகிழ்ச்சியும் பொங்கவில்லை. ஆனால் தெரிந்தவர்களை பார்த்த இதம் பரவியது உண்மை தான். இருந்தாலும்.. போன தடவை அவன் கையை பிடித்து இழுத்த கலாட்டா எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

அதனால் அவனை பார்த்து புன்னகைக்க எல்லாம் இல்லை. கதவை திறந்துவிட்டு அமைதியாக உள்ளே போனாள். “அச்சோ வரவேற்பு பலமா இருக்கே.” என்று எண்ணினான்.

அவனுக்கு அவள் வரவேற்பு எதுவும் உரைக்க வில்லை. அவளை பார்த்த சந்தோஷமே அருள் மனதை நிறைத்தது.

அதிகாலை அப்போது தான் மணி ஐந்தரை என்றதால்.. ராதிகாவும் சரவணனும் விழிக்கவில்லை. அதிகாலை விழித்துவிடும் பழக்கம் உடைய செல்வி விழித்திருந்தாள்.

அவனுக்கு மெளனமாக கதவை திறந்துவிட்டு உள்ளே சென்று.. எப்பொழுதும் போல.. அவனுக்கு டீ போட ஆரம்பித்தாள். அவள் சமையலைறையை உருட்டும் போதே.. தனக்கு டீ போடுகிறாள் என்று புரிந்து கொண்டான் அருள்.

அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டான். ஒரு சமயத்தில் அவளுக்கு ரூமை கொடுத்து.. இவனுக்கு சோபாவை கொடுத்ததால் கோபித்து.. ஊருக்கு கிளம்பியவன் தான் அருள்.

இன்று பொறுமையாக.. செல்வி தரும் டீ க்காக அமர்ந்திருந்தான். மனம் பரபரப்பாக இருந்தது.

செல்வி டீ யோடு வந்தாள். வந்தவள் அவனிடம், “டீ”, என்று சொல்லி.. அதை டீ பாய் மேல் வைத்துவிட்டு.. அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.

அருளுக்கு அவளிடம் ஏதாவது பேசவேண்டும் போல தோன்றியது. ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. செல்வி ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை.

அவளை பார்ப்பது.. அவ்வளவு ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. இப்போதைக்கு அவளிடம் பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.. என்றுணர்ந்தவன் அவளைப் பார்க்கும் சந்தோஷத்தை முழுமையாக அனுபவித்தான். போனதடவைக்கு இந்த முறை இன்னும் கண்களுக்கு ரம்மியமாக தெரிந்தாள்.

ஹாலில் இருந்து கண்களுக்கு.. அவள் தெரிவது போல அமர்ந்து.. ஒரு பேப்பரை எடுத்து பிடித்து கொண்டான். கண்கள் மட்டும் பேப்பரில் இல்லை. அவள் மேல் தான் இருந்தது. சமையலறையில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தாள்.

அவளையே விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் ஏதாவது, “பேசுடா.. பேசுடா”, என்று மனம் ஆளாய் பறந்தது.

“என்னடா பேசுறது”, என்று அவன் மனம் திருப்பி வேறு கேட்டது.

“ஏதாவது பேசேண்டா”, என்று மனம் திரும்ப திரும்ப சொல்ல..

தன்னை தைரியப்படுத்தி.. எழுந்து சமையல் அறை வாசல் வரை சென்றான். அவன் “செல்வி”, என்று வாயேடுத்து கூப்பிடும் முன்னே.. அரவம் கேட்டு செல்வியே திரும்பினாள்.

“என்ன”, என்று ஒரு பார்வை மட்டும் பார்த்தாள். வாயைத்திறந்து எதுவும் கேட்கவில்லை.

“எக்ஸாம் ரிசல்ட் இன்னைக்கு வருதாமே. உனக்கு டென்ஷனா இருக்கா?” என்று கேட்க விரும்பினான். அவள் பார்வையை பார்த்ததும்.. வார்த்தை தடுமாறியது. “இன்னொரு கப் டீ கிடைக்குமா..” என்றான்.

“நீங்க போங்க.. நான் கொண்டுவர்றேன்”,  என்றாள் பட்டென்று. அவள் முன்பே முடிவு பண்ணியிருந்தாள். அடுத்த முறை அவன் வரும்போது.. அவன் தன்னை நெருங்க.. கொஞ்சமும் இடம் கொடுக்க கூடாது என்று. அதை மனதில் வைத்தே நடந்தாள்.

அவள் மறுமுறை டீ கொண்டு வரும்போது.. முயன்று கேட்டே விட்டான். “இன்னைக்கு உனக்கு ரிசல்ட் தானே”, என்றான்.

கேள்வி கேட்கும் போது.. பதில் சொல்லாமல் போவது.. மரியாதை அல்ல என்றுணர்ந்தவள். “ஆமாம்”, என்பது போல் தலையை மட்டும் ஆட்டினாள்.

“டென்ஷனா இல்லை..”

“இல்லை”, என்பது போல தலையை ஆட்டினாள்.

அவள், “இல்லை”, என்று சொல்வதே அவனுக்கு, “இருக்கு”, என்று உணர்த்தியது.

“கவலைபடாத.. நல்ல ரிசல்ட் வரும்”, என்று சொல்ல வேண்டும் போல அருளுக்கு தோன்றியது. ஆனால் அவன் சொல்வதற்கு முன்பாகவே.. இல்லை என்று தலையாட்டி சென்று விட்டாள் செல்வி.        

“என்னடா இவ. நம்ம பேச இடமே.. கொடுக்க மாட்டேங்கறாளே. நம்ம இவளைத் தான் பார்க்க வர்றோம்னு.. இவளுக்கு தெரிஞ்சிடுச்சா?”, என்று அவளை ஆராய முற்பட்டான். அவள் தான் அங்கே இருந்து சென்று விட்டாளே. அப்புறம் எப்படி ஆராய்வது..

சரவணன் அதற்குள் எழுந்து வந்தான். அருளை அவன் எதிர்பார்க்கவில்லை அவனை பார்த்ததும் முகம் பிரகாசமானது. “டேய் அருள்! எப்போடா வந்த. வர்றேன்னு சொல்லவேயில்லை.”

“லீவ் இருந்தது. திடீர்னு தான் சரவணா கிளம்பினேன்.”

அதற்குள் சரவணனை பார்த்த செல்வி.. அவனுக்கும் டீ யுடன் வந்தாள்.

அதை பார்த்த சரவணன், “அருளுக்கு கொடு செல்வி”, என்றான். அருள் ஏதாவது பதில் பேசுவான்.. என்று செல்வி எதிர்பார்த்திருக்க ..அவன் வாயே திறக்கவேயில்லை. 

பின்பு அவளாகவே, “அவங்க சாப்பிட்டிட்டாங்க அய்யா”, என்றாள் செல்வி.

“சரி கொடு”, என்று பருகிய சரவணன்.. முன்பே அருளிடம் கேட்டது தான். இருந்தாலும் கேட்டான். “எப்படி டா பண்ண எக்ஸாமை..”

“ரிசல்ட் வந்தா தான் தெரியும்”, என்று எப்பொழுதும் சொல்லும் பதிலை.. அருள் சொன்னவுடனே. 

“நீ ரிசல்ட் சொன்னவுடனே தான் ஞாபகம் வருது. நம்ம செல்விக்கும் இன்னைக்கு ரிசல்ட்”, என்றான் சரவணன்.

அப்போது தான் புதிதாக விஷயம் கேட்பது போல. “அப்படியா சரவணா”, என்றான் அருள். நான் வந்ததே அதற்குத் தானே.. என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு.

தூர இருந்த செல்விக்கு.. இவர்கள் பேசுவது நன்றாகவே கேட்டது. “இப்போது தானே நம்மிடம் ரிசல்ட் பற்றி பேசினான். இப்போது என்னவென்றால்.. ஒன்றுமே தெரியாத மாதிரி கூறுகிறானே”, என்றிருந்தது.

இவன் ஏன் பொய் சொல்லுகிறான்.. என்று அவளை அறியாமல் கேள்வி உதித்தது. அது மனதையும் நெருடியது.

ஏமாற்றுவதற்கு முதல் படி.. பொய் சொல்லுவது. காதலிலும் பொய் சொல்லுவது சகஜம். அருள் பின்னதை நினைத்து செய்ய.. செல்வி முன்னதை நினைத்திருந்தாள்.

பின்பு சரவணன் ராதிகாவை எழுப்ப கிளம்ப.. “நான் வந்திருக்கேன்னு எழுப்பாத”, என்றான் அருள்.

பின்பு சரவணன் ஜாக்கிங் கிளம்ப.. அருளும் அவனோடு கிளம்பினான்.

அவர்கள் இருவரும் ஜாக்கிங் முடித்து வந்த போது.. ராதிகா விழித்திருந்தாள்.

“வா அருள்”, என்று அவனை வரவேற்றவள். “ஏன் அருள், வர்றன்னு சொல்லவே இல்லை.”

“திடீர்னு தான் அண்ணி கிளம்பினேன்.”

“எத்தனை மணிக்கு ரிசல்ட்”, என்றாள் சரவணனை பார்த்து.

“எட்டு மணிக்கு நெட்ல பார்த்தா தெரிஞ்சிக்கலாம்”, என்றான் சரவணன். செல்வியின் கண்கள் தானாக மணி பார்க்க.. அப்போது மணி ஏழரை என்று கடிகாரம் காட்டியது.

“எதுக்கும் ரெடியா இரு செல்வி. ஒரு வேலை ஸ்கூலுக்கு போறதுன்னா”, என்று சொன்னான் சரவணன்.

“சரிங்க அய்யா”, என்றாள் செல்வி.

“பரவாயில்லை அருள் வந்துட்டான். நான் என் வேலையை பார்க்கலாம். ஸ்கூல் போறதுன்னா நீங்க அருளை கூப்டுக்கங்க..” என்றான் சரவணன்.

“அதுக்குத் தானே டா.. நான் வந்திருக்கேன்”, என்று மனதிற்குள்ளேயே நினைத்தான் அருள்.

முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல்.. கவனமாய் இருந்தான் அருள் பாண்டியன். அவனுக்கு தெரியும் சரவண பாண்டியன் ரொம்பவும் ஷார்ப் என்று.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே எட்டு மணியாகிவிட.. நெட்டில் போட்டு பார்த்தால்.. ரிசல்ட் வரவில்லை.

“உடனே வந்துடுமா என்ன.. கொஞ்சம் நேரம் முன்ன பின்ன தான் ஆகும்”, என்றாள் ராதிகா.

இவர்கள் இங்கே ரிசல்ட் எதிர்பார்த்துக்கொண்டிருக்க.. பள்ளியில் இருந்து அழைத்திருந்தனர்.

செல்வி மறுபடியும் நிறைய மதிப்பெண்கள் வாங்கி.. மாநிலத்திலேயே மூன்றாவதாக வந்திருப்பதாக பள்ளியில் இருந்து சொன்னர்.

செல்வி.. என்றழைத்து அவளுடைய மதிப்பெண்ணைக் கூறி. “நீ இந்த முறையும் ஸ்டேட் தேர்ட் வந்திருக்க.. வாழ்த்துக்கள்”, என்றான் சரவணன்.

இவ்வளவு நேரமாக டென்ஷனில் இருந்த செல்வியின் முகம் மலர்ந்தது. “நன்றி அய்யா”, என்றாள்.

எல்லோரையும் சந்தோஷம் தொற்றியது.

“கன்க்ராட்ஸ்”, என்றாள் ராதிகா.

“தேங்க்ஸ்”, என்றாள் செல்வி.

அருளும் இந்த முறை எல்லாரும் இருக்கும் போதே, “வாழ்த்துக்கள்”, என்று கூற. இவன் கூட வாழ்த்து சொல்கிறானே.. என்று ஆச்சர்யமாக ராதிகாவும் சரவணனும் பார்த்தனர்.

“தேங்க்ஸ்”, என்றாள் புன்னகை பூசிய முகத்தோடு.. அவனை பார்த்த செல்வி.

அந்தப் புன்னகை.. அருளின் முகத்தை தொற்றியது. அவளின் சந்தோஷமான முகத்தைப் பார்த்த.. அருளின் பார்வை அவனை மீறி காதலாக மாறியது.

சரவணன் அவனின் பார்வையின்.. வித்தியாசத்தை உணர்ந்தான். 

“என்ன இது.. இவன் இப்படி பார்க்கிறான்.. இந்த பெண்ணை. முன்பெல்லாம் அவளை திட்டிக்கொண்டே இருப்பான். இப்போது அவள் சாதித்ததற்கு இவன் எப்படி.. இவ்வளவு சந்தோஷப்படும் அளவுக்கு மாறினான்.?”  

“இவன் பார்வை.. அவளை ஏன் இவ்வளவு ஆர்வத்தோடு தழுவுகிறது. சரியில்லையே..”,என்று சரவணின் எண்ணம் ஓடியது.    

Advertisement