Advertisement

அத்தியாயம் பத்து :

ஸ்கூலில் இருந்து கிளம்பிய பிறகும்.. செல்வி நினைவாகவே இருந்தது அருளிற்கு. ஏன்.. என்று அவனுக்கே புரியவில்லை. அதுவும்.. அவள் கண்களில் கண்ணீரோடு சிரித்தது.. கண்களை விட்டு அகல மாட்டேன் என்றது.

“நீயேண்டா அவளை பத்தி இவ்வளவு நினைக்கிற..” என்று அவனுக்கு அவனே கடிவாளமிட முயன்றான். முடிந்தால் தானே. அவளை சுற்றியே மனம்.. திரும்ப திரும்ப வந்தது.

அவளை.. முன்பே பார்த்தது தான் என்றாலும்.. இந்த ஒரு நாளில் என்னவாயிற்று. அவளால்.. என்னுள் ஒரே நாளில்.. மாற்றத்தை கொண்டு வர முடியுமா?. இந்த எண்ணங்களில் உழன்று கொண்டிருந்ததால்.. ராதிகா தன்னை கவனிப்பதை அருள் கவனிக்கவில்லை.  

அவன் அமைதியாக வருவதாக ராதிகாவிற்கு தோன்ற. “என்ன ஆச்சு அருள்?” என்றாள்.

“என்ன ஆச்சா? ஒண்ணும் ஆகலையே அண்ணி.”

“திடீர்னு ரொம்ப அமைதியாயிட்ட”,

“நான் எப்போ.. அண்ணி அதிகமா பேசியிருக்கேன்.”

“அதிகமா பேசியதில்லை தான். இருந்தாலும்.. இப்போ என்னவோ, ரொம்ப அமைதியாயிட்ட மாதிரி இருக்கு.”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை அண்ணி.”

“நம்பிட்டேன். சரி, இந்த தடவை பெட் வச்சிபோமா”..

“எதுக்கு?”..

“இந்த முறையும்  செல்வி ஸ்டேட் ரேங்க் வாங்குவான்னு நான் சொல்றேன். நீ தான் எப்பவும்.. அவ என்ன ஸ்டேட் ரேங்க் ஆ வாங்கப்போறான்னு கிண்டல் பண்ணுவியே. பெட் வச்சிபோமா?”  

“அவ ஸ்டேட் ரேங்க் வாங்கட்டும் அண்ணி.” என்றான் மனதார.

“இது என்ன.. இப்படி சொல்லிட்ட.. பெட் வைப்பேன்னு பார்த்தா..”

“செல்வியோட தோல்வியில.. நான் ஜெயிக்கறதா? வேண்டாம்.” என்று தானாக மனதில் உதிக்க..

“இந்த பெட் வேண்டாம்.. ஒண்ணும் வேண்டாம்.” என்றுவிட்டான்.

“நிஜமா தான் சொல்றியா?”,

“நிஜமாத்தான் சொல்றேன்.”

“ஆமா.. நீ எப்போ இருந்து, இவ்வளவு நல்லவன் ஆன?.”,

“வேண்டாம் அண்ணி.. என்னை ஓட்டாதீங்க”, என்றான் சிரிப்போடு.

இருந்தாலும் ராதிகாவிற்கு மனம் தெளிவாகவேயில்லை. “என்னவோ ஒரு மாதிரி தான் இருக்கான். மாமாகிட்ட சொல்லணும். ஒரு வேளை அந்த பொண்ணைப் பார்த்து பொறாமைப்படுறானோ.. ஏற்கனவே இவனுக்கு அவளை கண்டா பிடிக்காது..”,

“ஆனால் பொறாமைப்பட்டால்.. பெட் கட்டியிருப்பானே? என்னவாயிற்று.. இல்லை அவன் எப்பொழுதும் போல தான் இருக்கிறானா.. நான் தான் ஏதாவது நினைத்துக் கொள்கிறேனா..”, என்று ஏதேதோ நினைத்துக்கொண்டாள்.    

ராதிகா, தன்னிடம் ஏதோ வித்தியாசம் காண்கிறாள் என்பதை உணராத அருள்.. அவன் உலகத்திலேயே இருந்தான்.

அவர்கள் வந்துகொண்டு இருக்கும்போதே அருளுக்கு போன் வர.. ஊருக்கு அவசரமாக கிளம்பிவிட்டான். அவனிடம் கண்ட மாற்றங்களை சரவணனிடம் சொல்ல.. ராதிகாவும் மறந்து போனாள். 

“அண்ணி நான் அவசரமா கிளம்பணும்..”

“ஏன் இன்னும் ரெண்டு நாள் இருப்பேன்னு சொன்ன..”

“அதுக்குள்ள என் கொலீக் ஒருத்தருக்கு அவசரமா லீவ் தேவைப்படுது போல. நீங்க வர முடியுமான்னு கேட்டார், சரின்னு சொல்லிட்டேன்.”

“எவ்வளவு நாளுக்கு அப்புறம்.. இப்போ தான் இருக்க.. வந்த. இப்போ போய் இப்படியா. சரி போ! அடுத்ததடவை வரும்போதாவது.. ரெண்டு நாள் இருக்கிற மாதிரி.. வா.. அருள். எழிலரசியையும் வர சொல்றேன்.”

“சரி அண்ணி.. பார்க்கறேன். அண்ணா கிட்ட சொல்லிடுங்க. அவர் போன் பிசியாவே இருக்கு.”

“சரி”, என்பது போல தலையாட்டினாள் ராதிகா.

அவசரமா அருள் ஊருக்குக் கிளம்பினாலும்.. செல்வி அவன் மனதின் ஒரு ஓரத்தில்.. ஸ்திரமாக அமர்ந்து கொண்டாள்.

செல்வியின் பரிட்சைகள் முடிந்தன. இந்த முறையும் நன்றாக எழுதியிருந்தாள் செல்வி. “கடவுளே.. நான் இந்த முறையும் ஸ்டேட் ரேங்க் வரணும்”, என்று அந்த பிள்ளையாரை வேண்டியபடியே இருந்தாள். இப்போதெல்லாம் அவர் தான் அவளுக்கு மிகவும் ஃபிரண்ட். எதுவாக இருந்தாலும்.. அவரிடம் பகிர்ந்து கொள்வதையே வழக்கமாக வைத்திருந்தாள்.

அவளுக்குத் தெரியும். இது கடவுள்.. அவளுக்கு கொடுத்த வாழ்கை என்று. எங்கோ.. யார் வீட்டிலோ.. பத்து பாத்திரம் தேய்த்துகொண்டிருக்க வேண்டிய தனக்கு சரவணன், ராதிகாவின் மூலமாக நல்ல வாழ்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று.

தன்னுடைய முந்தைய வாழ்க்கையையோ.. முந்தையை நிலையையோ.. என்றும் மறந்தாள் இல்லை அவள். எந்த நிலையிலிருந்து.. எந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.. என்பதை நன்கு உணர்ந்து இருந்தாள் அவள்.      

இந்த முறை.. ராதிகா ஏதோ ஒரு போலிஸ்காரர் துணையுடன் அவளை அழைக்க வந்திருந்தாள்.

அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றவுடனே வந்த செல்வி.. அங்கே அருள் இல்லாததை பார்த்து ஆசுவாச பெருமூச்சு விட்டாள். “ஹப்பா.. அவன் வரலை”, என்று நினைத்தவள்.. “வந்து நம்மை குழப்பி விடுவான். அன்னைக்கு மாதிரி மனசு கண்டதையும் நினைக்கும்”.  

அவள் நினைவுகளை தடுத்த ராதிகா, “எப்படி எழுதியிருக்கிற செல்வி?” என்றாள். 

“நல்லா எழுதியிருக்கேன் அக்கா”,

“இந்த முறையும் ஸ்டேட் ரேங்க் வருவியா?”

“தெரியலை அக்கா. என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செஞ்சிருக்கேன்.”

“எல்லாம் பேக் பண்ணிட்டியா செல்வி..”

“ஆச்சுக்கா.”

“கிளம்பலாமா..” என்று அவளிடம் கேட்டு.. பின்பு வார்டனிடம் சொல்லி கிளம்பினர்.

 இந்தமுறையும் அவள் சரவணன் வீட்டிற்கே வந்தாள். இந்த முறை எப்பொழுதும் போல் அல்லாமல்.. அதிக நாட்கள் தங்க வேண்டியிருக்கும்.. என்று அவளுக்கேத் தெரியும். இந்த முறை ரிசல்ட் வந்து.. காலேஜில் சேர்ந்து.. காலேஜ் ஆரம்பிக்கும் வரை.. இங்கே இருக்க வேண்டும்.. என்று அவளுக்கு தெரியும்.

சற்று சங்கடமாகவே உணர்ந்தாள். தன்னால் அவர்களுக்கு மிகுந்த தொந்தரவு என்றே நினைத்தாள். பத்தாவதில் வந்த போது.. தான் அதிக நாட்கள் தங்கினாள். அதற்கு பிறகு எல்லாம் ஒன்றிரண்டு நாட்கள் தான். அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்த முறை அதிகமாக தங்க வேண்டி இருக்கிறது. எந்த ப்ரச்சனையும் இல்லாமல் தான் தங்கி.. மறுபடியும் ஹாஸ்டல் சென்று விட வேண்டும்.. என்று வேண்டியவாறே வந்தாள்.

அவளுக்குப் பயம். அவள் இருக்கும்போது.. சரவணன் அல்லது ராதிகாவின் உறவுகள் வந்தால்.. என்ன செய்வது என்று. பொதுவாக அந்த மாதிரி சூழ்நிலை இதுவரை வரவில்லை.

இனி வந்துவிட்டால்.. என்ன செய்வது என்று பயம் செல்விக்கு. சரவணன் மற்றும் ராதிகா மட்டும் இருந்தால்.. அவளுக்கு எந்த பயமும் இல்லை. ஒரு வேளை கோதையோ, எழிலரசியோ வந்தால்.. நினைத்து பார்க்கவே அவளுக்கு பயம்.

அவர்கள் எல்லாம்.. தன்னை எப்படி நடத்துவார்கள் என்று பயம். முன்பு.. எவ்வளவோ ஏச்சுக்கள், பேச்சுகள் வாங்கியிருக்கலாம். ஆனால்.. அது போல.. இப்போதும் இருக்க முடியுமா.. அவளுக்கேத் தெரியவில்லை.

அவள் யோசனைகளை கலைக்க.. அவளின் அய்யா வந்து சேர்ந்தான்.

“எப்படி இருக்க செல்வி..” என்றான் சரவணன்.

அவனை பார்த்து முகம் மலர்ந்தவள்.. “நல்லா இருக்கேன் அய்யா. பரீட்ச்சை கூட நல்லா எழுதியிருக்கேன்.” என்றாள் அவன் கேட்காத கேள்விக்கு பதிலாக.

“என்ன பண்ணலாம்னு இருக்க?”,

“நீங்க சொல்றது தான் அய்யா.”

“நான் சொல்றதுல என்ன இருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல பரீட்சை முடிவுகள் வந்திடும். எதுக்கு மேல படிக்கலாம்னு இருக்க?”,

“நீங்க என்ன சொல்றீங்களோ.. அது தான் அய்யா.”

“மறுபடியும்.. அதையே சொல்ற பார்த்தியா. உன் விருப்பம் என்ன?”

“என் விருப்பம்னு.. நான் எதையும் யோசிக்கலை. எனக்கு எது நல்லதுன்னு உங்களுக்குத் தெரியாதா.. என்ன?”

“அப்ப.. உனக்கு விருப்பமேயில்லையா?”

தயங்கித் தயங்கி “எனக்கும், உங்களை மாதிரி போலீஸ் ஆகணும்னு ஆசை இருக்கு.” என்றாள்.

இதை எதிர்பார்க்காத சரவணன் “என்ன செல்வி சொல்ற..” என்றான்.

ராதிகாவும் அதையே சொன்னாள். “என்ன செல்வி சொல்ற. அந்த எக்ஸாம் எல்லாம் பாஸ் பண்றது ரொம்ப கஷ்டம்.”

“முயற்சி பண்ணி பார்க்கறேன்கா..”,

“முயற்சி பண்றது எல்லாம் இருக்கட்டும் செல்வி. அது அப்புறம் தான் படிச்சு எழுதணும். அதுக்கு முன்னாடி நீ ஒரு டிகிரி படிக்கணும். அதுக்கு என்ன செய்யப் போற?”

“நீங்க எது சொன்னாலும் படிக்கறேன் அய்யா.”

“அப்படி மறுபடியும், மறுபடியும் சொல்லாத செல்வி. உனக்கு என்ன விருப்பம்?”

“என் மார்க்குக்கு எது கிடைக்குதோ அதுக்கு போறேன் அய்யா.”

“உன் மார்க்கு எல்லாம் தான் கிடைக்கும் செல்வி. நீ நிறைய மார்க் எடுப்பேன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. உன் மார்க்குக்கு டாக்டர், இன்ஜினியர் எதுக்கு வேணும்னாலும் சீட் கிடைக்கும்.”

“எதுவாயிருந்தாலும்.. நீங்க தானே அய்யா படிக்க வைக்கப் போறீங்க. நீங்க சொல்லுங்க.”

“ப்ச்! என்ன செல்வி இது. அது ஒரு பிரச்சனையா. உங்க அய்யா தான்.. அவ்வளவு கேட்கறார் தானே. நீயே சொல்லு.”

“டாக்டர்க்கு கிடைச்சா அதுக்கு படிக்கறேங்கய்யா”, என்றாள் வாயைத்திறந்து.

“ஹப்பா! இதை சொல்றதுக்கு இவ்வளவு நேரமா” என்று சந்தோஷப்பட்டாள் ராதிகா.

“ஏங்க.. இவளுக்கு டாக்டருக்கு கிடைக்குமா?” என்றாள் சரவணனை பார்த்து.

“டென்த்ல எடுத்த மாதிரி.. நல்ல மார்க் எடுத்தா கிடைக்கும் ராதிகா. ஆனா, அவ சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதற மாதிரி இருந்தா.. டாக்டர் தேவையில்லை. ஏதாவது டிகிரி படிச்சாலே போதும்”, என்றான் யோசனையாக சரவணன்.

எதுவும் பேசாமல் அவன் மேலே பேசட்டும் என்பது போல அமைதியாக நின்றாள் செல்வி.

அதற்குள் ராதிகா. “டாக்டருக்கு படிச்சா.. சிவில் சர்விஸ் எக்ஸாம், எழுத முடியாதா என்ன?”, என்று கணவனிடம் பதில் கேள்வி கேட்டாள்.

“படிக்கலாமே”, என்றான் சரவணன்.

“அப்போ அவளுக்கு டாக்டருக்கு கிடைச்சா.. அதையே படிக்கட்டும்.” என்றாள் ராதிகா.

“எத்தனை பேர்.. அதுக்காக எத்தனை லட்சம் செலவழிச்சி படிக்கறாங்க. இவளுக்கு ப்ரீயா கிடைச்சா படிக்கட்டுமே. அதை நாம ஏன் வேணாங்கிறது.. படிக்கட்டுமே.” என்றாள்.

“நீ சொன்னா.. அதுக்கு நான் என்ன மறுத்தா பேசப்போறேன். அவளுக்கு கிடைச்சா.. அவ படிக்கட்டும்.” என்றான் சரவணன்.

“நீங்க எப்படி சொன்னாலும் சரி”, என்பது போலவே நின்றாள் செல்வி.

இரவு தனிமையில், ராதிகா சரவணனிடம்.. “அவ டாக்டருக்கு படிக்கறதுல நமக்கு நிறைய செலவாகும்னு யோசிக்கறீங்களா?”

“இல்லை! அப்படி இல்லை! ராதிகா. அவளுக்கு ப்ரீ சீட் கிடைச்சா.. நமக்கு ஒண்ணும் செலவில்லை.”

“அப்புறம் என்ன ஏன் தயங்கறீங்க..”,

“அவ டாக்டருக்கு படிக்கறது.. வேஸ்டா போகுமேன்னு தான்.”

“ஒரு வேளை, அவளால போலீஸ் எக்ஸாம் பாஸ் பண்ண முடியலைன்னா.. என்ன பண்றது? அவளுக்கு ஒரு தொழில் வேணுமே. எத்தனை நாள் நம்ம பார்க்க முடியும். சமூகத்துல.. ரொம்ப கௌரவமான இடம் டாக்டருக்கு இருக்கு. அதான் அதை படிக்கட்டுமேன்னு பார்த்தேன்”, என்றாள் ராதிகா.

“நீ என்ன சொன்னாலும், நான் சரின்னு தானே சொன்னேன்.”

“இருந்தாலும்.. எனக்கு நிறைய தெரியாதில்லையா. நான் சரி சொல்றனா.. தப்பு சொல்றனான்னு.. நீங்க தானே சொல்லணும்.” என்று சிணுங்கினாள்.

“நீ ஒழுங்கா கேட்டாலே நான் மறுத்து பேசமாட்டேன். இப்படி கொஞ்சிட்டு கேட்டா.. நான் என்ன பண்ணுவேன்.” என்று அவசரமாக அவளை அணைத்தான்.

“அய்யே.. ஆரம்பிச்சிடீங்களா. எனக்கு உங்ககிட்ட பேசணும்.”

“நீ பேசுடி.. நான் என் வேலையைப் பார்க்கறேன்.”

“சும்மா.. அதையும் இதையும் பண்ணிட்டு இருந்தீங்கன்னா நான் எப்படி பேசுவேன்..”,

“எதையும் எதையும் பண்ணிட்டு இருக்கேன்..” என்றான் உல்லாசமாக.

“ப்ச்! நீங்க என்னை திசை திருப்பறீங்க. நான் பேச ஆரம்பிச்சாலே.. இப்படித் தான் செய்யறீங்க.” 

“எதையும் திருப்பலை. இப்போ நம்ம வேலையை பார்ப்போம். எதுவா இருந்தாலும் காலைல பேசலாம்.” என்றான்.

மறுபடியும் ராதிகா ஏதோ பேச வர.. “உன்னை பேசவிட்டா.. நீ பேசிட்டே இருப்ப. இரு.. முதல்ல உன் வாயை மூடுறேன்.” என்றவன், அந்த வேலையை தனது உதடுகளால் செய்ய செல்வியை மறந்தாள் ராதிகா.

காலையில் ராதிகா எழும்முன்னரே.. செல்வி எழுந்து பாதி வேலைகளை செய்து முடித்திருந்தாள். “வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா..” என்று அவளை கடிந்து கொண்டே வந்தாள் ராதிகா.

“இருங்கக்கா.. நான் செய்யறேன்”, என்று அவளுக்கும் சரவணனுக்கும் டீ வைத்துக்கொடுத்தாள் செல்வி. ஏனோ சம்மந்தமில்லாமல்.. அன்று அருள் டீ போட்டு கொடுத்தது நினைவிற்கு வந்தது.

அசட்டுத்தனமாக ஏதாவது சொல்லியிருப்பாள். “எங்க அருள் கூட”, என்று ஆரம்பிக்கும்போதே சரவணன் வர.. கவனம் அவன் பக்கம் திரும்பழ்ழ அவனை கவனிக்க விரைந்தாள் ராதிகா.

“என்ன சொல்ல வந்தாங்க இவங்க. அருள்ன்னு வேற ஆரம்பிச்சாங்க. என்ன?”, என்று தெரிந்துகொள்ள செல்விக்கு ஆர்வம் பொங்கியது.  ஆனால், இனி ராதிகாவிடம் கேட்க முடியாது. அது செல்விக்கே தெரியும். அவள் மறந்து விடுவாள்.

எப்பொழுதும் இப்படித்தான்.. ராதிகா சொல்ல வருவதை பாதியில் நிறுத்திவிடுவாள். அதற்கு பிறகு என்னவென்று கேட்டால் அவள் மறந்து விடுவாள்.  

செல்விகூட அவளிடம் சொல்லுவாள். “அப்படி என்ன மறதி உங்களுக்கு. எங்க அய்யாவோட அம்மா எல்லாம்.. சின்ன சின்ன விஷயத்தை கூட.. அவ்வளவு ஞாபகம் வெச்சி இருப்பாங்க. நீங்க என்னடான்னா..” என்று சலிப்பாள்.

“யாரை.. என் மாமியாரையா.. சொல்ற.”

“அவங்களையேதான் சொல்றேன். உங்களுக்கு.. அவங்களை மாதிரி விவரம் பத்தாது.”

“உங்க அய்யாவையே பெத்து இருக்காங்களே. சும்மாவா..” என்று அதற்கும் சிரிப்பாள் ராதிகா.

“சரி.. இந்த முறை எந்த கிளாஸ் சேர்ற.” 

“இது என்ன கேள்வி? நீங்க எதுல சேர்த்து விடறீங்களோ.. அதுல தான்.”

“ஸ்போகன் இங்கிலீஷ்… இன்னும் தேவையா என்ன?”

“போறேனே”, என்றாள் செல்வி.

“சரி. போனதடவை மாதிரியே இந்த முறையும் அந்த ரெண்டு கிளாஸ்க்குமே போ.” என்று சொன்னாள் ராதிகா.

முன்பு மாதிரியே.. இந்த முறையும் அந்த இரு கிளாஸ்களுக்கும் போக ஆரம்பித்தாள் செல்வி.

மாதம் ஒரு முறை வந்துவிடும் அருள் இந்த முறையும் வந்தான். செல்வி அங்கிருப்பாள் என்று எதிர் பார்த்தே வந்தான். எப்போது அவளை பார்ப்போம் என்று எதிர்ப்பார்த்தே வந்தான்.

அவன் வந்த போது அதிகாலை. அப்போது செல்வி மட்டும் தான் எழுந்திருந்தாள். ராதிகாவும் சரவணனும் உறங்கிக்கொண்டு இருந்தனர்.

பெல் அடித்ததும்.. அவள் தான் கதவை திறந்து விட்டாள். இவனை எதிர்பார்க்கவில்லை. தூக்கம் விழித்து.. அப்பொழுது தான் எழுந்திருப்பாள் போல.. கலைந்த ஓவியமாக நின்றாள்.. அவள், அவன் பார்வைக்கு.

அவளை ரசனையோடு கண்கள் தழுவ இவனை எதிர்பார்க்காததால், “வாங்க சர்”, என்று உள்ளே சென்றாள்.

“என்ன சாரா..” என்று விழித்தான் அருள். எப்பொழுதும் சரவணனை அய்யா என்று அழைப்பாள். இவனை என்னவென்று கூப்பிடுவது என்று.. செல்விக்குத் தெரியவில்லை.

முதலாளி வர்க்கம்.. ஏதாவது கூப்பிட வேண்டுமே என்பதற்காக, “சர்”, என்றே அழைத்தாள்.

உள்ளே வந்தவன் கண்களை சுற்ற விட அதை பார்த்தவள்.. தன் அண்ணனையும் அண்ணியையும் தேடுவானாய் இருக்கும் என்று நினைத்து “அய்யாவும், அக்காவும் தூங்கறாங்க”, என்று சொல்லி சென்றாள்.

என்ன செய்வது என்று அறியாதவனாக.. சோபாவில் அமர்ந்தான். சிறிது நேரத்திலேயே ஆவி பறக்கும் டீ வந்தது. செல்வி போட்டுக்கொண்டு வந்தாள். வந்த களைப்புக்கு அந்த டீ அருளுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது.

“தேங்க்ஸ்”, என்றபடி அந்த டீ யை வாங்கினான்.

அவன், “தேங்க்ஸ்”, சொன்னதும்.. என்னவாயிற்று இவனுக்கு.. என்று வித்தியாசமாக பார்த்தாள் செல்வி.

தேங்க்ஸ்சோடு நிறுத்தாமல்.. “டீ நல்லாயிருக்கு”, என்றான்.

என்னவாயிற்று இவனுக்கு. இவன் என்னோடு பேசுவதை கூட.. கௌரவ குறைச்சலாய் நினைப்பானே.. என்று எண்ணியவள், “உங்களுக்கு உடம்பு சரியில்லையா.. சார்”, என்றாள்.

இப்போது வியப்பது அருளின் முறையாயிற்று.

“இல்லையே.. நல்லா தானே இருக்கேன்”, என்றான் புரியாதவனாக.

“இல்லை.. சும்மா தான் கேட்டேன்”, என்று சொல்லி சென்றாள்.

எதற்கு கேட்டாள்.. என்று அவள் சென்ற பிறகு.. தன் மூளையை கசக்கி அருள் ஆராய.. அவளிடம் தன் நடவடிக்கைகளை வைத்து.. அவள் அப்படி கேட்டிருப்பாள் என்று அனுமானித்தான். முகம் புன்னகையை பூசியது.

கண்கள் மறுபடியும் அவளை தேட.. உள்ளே போய் பார்க்கவும் ஏதோ ஒன்று தடுத்தது. அதற்குள் ராதிகா எழுந்து வந்திருந்தாள்.

“வா அருள், எப்போ வந்தே..” என்றபடியே வந்தாள் ராதிகா.

“இப்போதான் அண்ணி. கொஞ்சம் நேரம் ஆச்சு.”

“ஒரு போன் கூட பண்ணலை..”

“திடீர்ன்னு தான் அண்ணி கிளம்பினேன்.”

“சரி.. இரு டீ எடுத்துட்டு வரேன்.” என்று உள்ளே போகப்போக..

“இப்போ தான் அண்ணி குடிச்சேன். செல்வி கொடுத்தா”, என்றான்.

“ஒஹ்.. சரி, குடுத்துட்டாளா..”, என்றபடியே உள்ளே போனாள்.

அருளின் பார்வை மறுபடியும் செல்வியைத்தான் தேடியது. ஆனால் அவள் கண்ணில் பட்டால் தானே. இந்த சின்ன வீட்டிற்குள்.. அப்படி.. எங்கே இருப்பாள் என்று எண்ணிக்கொண்டே அமர்ந்திருந்தான்.

ராதிகா அவனிடம் ஏதோ கேட்க பதில் கூட சொல்லாமல், அவன் சிந்தனையிலேயே இருந்தான்.

“அருள், அருள்..” என்று அவள் இருமுறை கத்தி கூப்பிட்ட பிறகே தெளிந்தவன்..

“என்ன அண்ணி..”, என்றான்.

ராதிகா கத்திய கத்தலில்.. சரவணனே எழுந்து வந்தான்.

“டேய் வாடா.. எப்படா வந்த.. இவ ஏன் இந்த கத்து கத்தறா..”

“இப்போ தான் சரவணா வந்தேன். அவங்க ஏன் கத்தறாங்கன்னு அவங்க கிட்ட தான் கேட்கணும்”, என்றான்.

“தோ பார்றா! என்ன பேசறேன்றது கூட தெரியாம.. ஏதோ யோசனையில இருந்துட்டு.. என்னை சொல்றியா நீ”, என்றாள் ராதிகா அருளை பார்த்து.

அப்போதும் அருளின் கண்கள் செல்வியைத்தான் தேடின. இத்தனை சத்தத்திற்கும் வராமல் எங்கே இருக்கிறாள் என்று.

ஆனால் செல்வி.. அவர்கள் பேசும்போது எல்லாம் வரவே மாட்டாள்.

அருளின் மனது அவளை தேடுவதை உணராத செல்வி.. குளித்து முடித்து காலை உணவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை.. சமையல் அறையில் செய்து கொண்டு இருந்தாள். 

Advertisement