Advertisement

இதழ் 8

ப்ரனேஷ் மருத்துவ முகாமிற்கு சென்று இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.

இந்த முகாமின் மூலம் விதி தன் வாழ்வில் விளையாட போவதை அறியாமல் தீவிரமாக நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான்.

அன்று மாலை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையில் இருந்து இனியமலரை பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு புது எண்னில் இருந்து அழைப்பு வந்தது.

ஒரு நொடி அது இனியமலராக இருக்குமோ என்று நினைத்தான் ஆனால் அடுத்த நொடியே, ‘அவளுக்கு நம்ம நம்பர் தெரியாதே! ச்ச அட்லீஸ்ட் என் நம்பரையாவது கொடுத்துட்டு வந்திருக்கணும்’ என்று காலம் கடந்து வருந்தினான்.

அவன் அழைப்பை எடுத்து, “ஹலோ”

 

“நான் அசோக் பேசுறேன் டா”

 

“யாரு?”

 

“டேய் அசோக் டா! உன் ஸ்கூல் பிரெண்ட்.. மூணு வருஷம் பேசிக்கலைனா என்னை மறந்துருவியா! யாரு னு கேட்கிற! நீ நம்பரை மாத்திட்ட.. அப்படியே தொடர்வு விட்டு போ……………..”

 

“டேய்.. டேய்.. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ! நீ மாறவே இல்லை டா”

 

“ஆனா நீ மாறிட்டியே! என்னை மறந்துட்டியே!”

 

“டேய் ரொம்ப ஸீன் போடாத.. முதலில் நீ பெயரை சொல்லும் போது சரியா கேட்கலை டா”

 

“நல்லா சமாளிக்கிற!”

 

“நம்பாட்டி போ.. சரி எதுக்கு போன் பண்ண! நான் இப்போ மெடிக்கல் கேம்ப்பில் இருக்கிறேன்”

 

“தெரியும் தெரியும்.. வீட்டிற்கு போனேன்.. ஆன்ட்டி சொன்னாங்க.. அவங்க கிட்ட தான் நம்பர் வாங்கினேன்”

 

“ஓ!”

 

“நம்பர் மாத்தினா சொல்ல மாட்டியா?”

 

“அது செல் தொலஞ்சு போனதில் நிறைய காண்டக்ட் மிஸ் பண்ணிட்டேன்”

 

“ஏதோ சொல்ற! நம்புறேன்!”

 

“சரி.. என்ன திடீர்ன்னு என் ஞாபகம் வந்திருக்கிறது? என்ன விஷயம்?”

 

“எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சு மச்சி”

 

“பார் டா”

 

“ஹீ..ஹீ..ஹீ”

 

“போதும் வழியாத”

 

“சிரிச்சேன் டா”

 

“அதை தான் சொன்னேன்.. சரி யாரந்த துர்பாக்கியசாலி?”

 

“எனக்கு எதிரி வெளியே இல்லை.. கூடவே இருக்கிறீங்க! அது எப்படி டா எல்லோரும் சொல்லி வச்சது போல் இப்படியே கேட்கிறீங்க!”

 

“ஏன்னா உன்னை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும்”

 

“டேய் வேணாம்”

 

“சரி விடு”

 

“ஹ்ம்ம்”

 

“எனக்கு ஒரு டவுட் டா?”

 

“பொண்ணு என்னை பார்த்துட்டு எப்படி ஓகே சொல்லுச்சு னா?”

 

“ஹா ஹா ஹா.. அந்த சந்தேகமும் இருக்குது.. ஆனா இப்போ கேட்க வந்தது வேற”

 

“என்ன?”

 

“26 வயசு தானே டா ஆகுது.. அதுக்குள்ள என்ன டா அவசரம்.. எல்லோரும் இப்பவே கல்யாணம் பண்றீங்க?”

 

“எல்லோரும் னா! நம்ம கேங்கில்(gang) எனக்கு தானே முதலில் நடக்குது!”

 

“கொஞ்ச நாள் முன்னாடி என் சைல்டுஹுட் பிரெண்ட்க்கு கல்யாணம் ஆச்சு” 

 

“அது சரி.. உனக்கு ஏன் டா இந்த பொறாமை?”

 

“ஒரு ஆமையும் இல்லை.. இப்பலாம் பொண்ணுங்களே 26, 27 வயசில் தானே பண்ணிக்கிறாங்க அதான் கேட்டேன்”

 

“அது..” என்று அவன் சிறிது தயங்க, ப்ரனேஷ், “சரி விடு.. எப்போ கல்யாணம்?”

 

“நீ கேம்ப்பில் இருந்து வர அன்னைக்கு”

 

“சரி டா வர பார்க்கிறேன்”

 

“பார்க்கிறேன் இல்லை.. வர.. நம்ம பிரெண்ட்ஸ் எல்லோரும் வராங்க.. ஒரு கெட்-டு-கெதர் போல் இருக்கும்”

 

“சரி சரி.. வரேன்”

 

“அது”

 

“சரி டா.. வைக்கிறேன்.. கொஞ்சம் வேலை இருக்கிறது”

 

“நாங்க மட்டும் வேலை இல்லாமயா இருக்கோம்!”

 

“அப்பா ராசா நீ போய் உன் கல்யாண வேலையை பார்ப்பியோ ஆபிஸ் வேலையை பார்ப்பியோ! என்னை என் வேலையை பார்க்க விடு.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

ப்ரனேஷ் மருத்துவ முகாமில் இருந்து சென்னை திரும்பிய அன்று அவசர அவசரமாக அசோக்கின் திருமணத்திற்கு கிளம்பிச் சென்றான். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த பள்ளி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். 

சிரித்தபடியே எதேர்ச்சையாக மணமேடை பக்கம் திரும்பியவன் தீ சுட்டார் போல் எழுந்து நின்றான். அங்கே மணப்பெண்ணாக அவனது இனியமலர் இருக்கவும் சிறிது நேரம் அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

தோழன் ஒருவன் அவன் கையை உலுக்கி, “டேய் என்னாச்சு?” என்று வினவவும் சுயஉணர்வு பெற்றவன் அவனிடம், “இந்த கல்யாணம் எப்போ பிக்ஸ் ஆச்சு?”

 

“பத்து நாள் தான் இருக்கும் னு நினைக்கிறேன்”

 

“என்ன டா சொல்ற?”

 

“ஆமா டா…………………” என்று ஏதோ சொல்ல வந்தவன் கைபேசியில் அழைப்பு வரவும், “ஒன் மினிட் மச்சி” என்று எழுந்து சென்றான்.

ப்ரனேஷ் இனியமலரை பார்த்தான். அய்யர் சொன்னதை அப்படியே செய்துக் கொண்டிருந்தவள் முகத்தில் வெறுமை இருப்பது போல் தோன்றியது. அது நிஜமா அல்லது அவனது பிரம்மையா என்று அவன் கூர்ந்து நோக்கிய போது அவள் அருகில் புன்னகையுடன் அசோக் அமர்ந்தான். அதற்கு  மேல் அங்கே இருக்க முடியாமல் விறுவிறுவென்று மண்டபத்தைவிட்டு வெளியேறியவன் எப்படி வண்டியை(காரை) ஓட்டினான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் சென்று நின்ற இடம் அவனது தந்தை வேலை பார்க்கும் மருத்துவமனை.

அங்கே சென்றிருந்தாலும் அது அவன் மனதில் பதியவில்லை. அவன் வண்டியை விட்டு இறங்காமல் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தனோ அவனது கைபேசியின் அலறலிலும் கதவு தட்டப்படும் சத்தத்திலும் அவனது உடம்பில் சிறு அசைவு வந்தது. வெறித்த பார்வையுடன் மூடிய கண்ணாடி வழியே வெளியே பார்த்தவன் அங்கே தந்தை இருக்கவும் இயந்திரமாக கதவின் கண்ணாடியை இறக்கினான்.

மதிய உணவிற்காக வீட்டிற்கு செல்ல கிளம்பியவர் வெளியே வந்த போது மகனின் வண்டியை பார்த்ததும் யோசனையுடன் அவனது வண்டி அருகே வந்தார். முன் பக்க கண்ணாடி வழியாக அவன் அமர்ந்திருந்த நிலையை பார்த்தவருக்கு எதுவோ சரியில்லை என்பது புரிந்தது. 

ஐந்து நிமிடங்களாக கைபேசியில் அவனை அழைத்தபடி கதவை தட்டிக் கொண்டிருந்தவர் அவன் கண்ணாடியை இறக்கவும், “ப்ரனேஷ்.. என்னாச்சு?” என்று பதற்றத்துடன் வினவ, அவனிடம் பதில் இல்லை.

சிறந்த மனநோய் மருத்துவரான அவருக்கு மகன் இருக்கும் நிலை புரிந்தது ஆனால் காரணம் தான் புரியவில்லை. எத்தனையோ நோயாளிகளை இந்த நிலையில் பார்த்தவர் தான் ஆனால் மகனை இந்த நிலையில் பார்க்கவும் உள்ளம் கதறத் தான் செய்தது.

அவர், “தள்ளி உட்கார்”

 

அவன் புரியாமல் பார்க்க, அவர் சற்று குரலை உயர்த்தி, “தள்ளி உட்காரு” என்று கூறியபடி அவனை சிறிது தள்ளவும் அவன் இயந்திரமாக பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்பினார்.

வண்டியை கடற்கரையில் நிறுத்தியவர், ஒரு காபியை வாங்கி அவனை பருக செய்து அவனை பலமாக உலுக்கவும் அவன் சுய உணர்விற்கு திரும்பினான்.

அவர், “என்னாச்சு ப்ரனேஷ்? எதுவும் சமாளிக்க முடியாத பிரச்சனை இல்லை”

 

அவன் அவரை பார்த்த பார்வையில் அவர் துணுக்குற்றார். எப்பொழுதும் உற்சாகத்துடன் இருக்கும் மகனின் முகத்தில் அப்படி ஒரு வலியை அவர் இதுவரை பார்த்தது இல்லை.

அவனது கன்னத்தில் கைவைத்து, “என்னாச்சு டா?”

 

“..”

 

“இனியமலருக்கு ஏதும் பிரச்சனையா?”

 

அவன் இல்லை என்று தலையை ஆட்டினான்.

“என்னனு சொல்லு.. அப்பா சரி பண்றேன்”

 

“ஒன்னும் பண்ண முடியாது.. எல்லாமே முடிஞ்சு போச்சு பா..” என்றவன் நெஞ்சை சுட்டிக்காட்டி, “இங்கே வலிக்குது பா.. ரொம்ப வலிக்குது.. என்னால முடியலையே!”

 

“உன் காதலை அவளிடம் சொன்னியா? அவள் மறுத்துட்டாளா?”

 

“அவ என்னை லவ் பண்ணது நிஜம் பா.. அதை அவ கண்ணில் நான் பார்த்தேன்.. ஆனா ஏன் இப்படி பண்ணா னு தெரியலை.. செத்திரலாம் போல இருக்……………”

பட்டென்று அவன் கன்னத்தில் அடி வைத்தவர் கோபத்துடன், “எந்த பிரச்சனைக்கும் முடிவு தற்கொலை இல்லை.. ஒரு மருத்துவன் பேசும் பேச்சா இது?”

 

“நான் ஒரு காதலானா யோசிக்கும்……………………..”

 

“நீ ஒரு காதலன் மட்டுமில்லை ஒரு மகனும் கூட, நாளைய சிறந்த மருத்துவனும் கூட”

 

கண்ணில் வலியுடன் அவரை பார்த்தவன், “சாரி பா” என்று அவரை கட்டிக்கொண்டு அழுதான்.

அவனது முதுகை வருடியபடி சிறிது நேரம் அழ விட்டவர், மெல்ல அவனை தன்னிடமிருந்து பிரித்து, “இப்போ சொல்லு.. என்னாச்சு?”

 

“இனியாவுக்கு கல்யாணம் ஆகிருச்சு”

 

அவருக்கு அதிர்ச்சி தான் ஆனால் அதை வெளியே காட்டாமல், “உனக்கு எப்படி தெரியும்? இது உண்மை தானா னு உறுதி செய்தாயா?”

 

“இப்போ அவ அசோக் மனைவி”

 

“ஓ”

 

“ஏன் பா இப்படி செய்தா? நாங்க காதலை சொல்லிக்கொள்ள வில்லை தான்.. ஆனா நிச்சயமா எனக்கு தெரியும்.. அவளும் என்னை காதலித்தாள்.. நான் என்னப்பா தப்பு செய்தேன்? எனக்கு ஏன் இந்த தண்டனை?”

 

“அவள் சூழ்நிலை என்னவோ?”

 

“என்னிடம் சொல்லி இருக்கலாமே! ச்ச்.. பத்து நாளில் கல்யாணம் பேசி முடிச்சு இருக்காங்க.. என் போன் நம்பர் அவளுக்கு தெரியாது.. நான் கேம்ப் போகாமல் இருந்து இருக்கலாம்! கடவுள் ஏன் பா என் வாழ்க்கையில் இப்படி விளையாடிட்டான்?”

 

“நடந்ததை நம்மால் மாற்ற முடியாது.. நடந்ததை பற்றியே யோசிக்காமல் நடக்க போவதை பற்றி யோசி”

 

“ச்ச்”

 

“நான்கு முறை சந்தித்து பழகிய ஒரு பெண்ணிற்காக உன் வாழ்க்கையை அழிச்சுக்க போறியா? உனக்காகவே சிரித்து உனக்காகவே அழும் உன் அம்மாவை பற்றி யோசிக்க தோணலையா? அப்பா எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. இதுவும் கடந்து போகும்.. போகணும்..”

 

“முடியலையே பா! மனசு ஆறவே மாட்டேங்குதே!”

 

“முடியனும்.. என் மகனால் முடியும்..”

 

அப்பொழுது அவரது கைபேசி அலறியது. அழைத்தது அவர் மனைவி அமுதா.

அதை எடுத்து, “கொஞ்சம் பிஸியா இருக்கிறேன் மா.. நான் இன்னைக்கு சாப்பிட வீட்டிற்கு வர முடியாது.. எனக்கு வெயிட் பண்ணாம நீ சாப்பிடு” என்றவர் அவரது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தார். நோயாளிகளுடன் இருக்கும் சில நேரங்களில் இப்படி பேசி அழைப்பை துண்டிப்பதுண்டு என்பதால் அமுதாவிற்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

 

அவன், “ஏன் பா என் காதல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது?”

 

“ஒருவேளை அவள் உன் காதலை மறுத்திருந்தால் என்ன செய்திருப்ப?”

 

“அப்படி நடக்கவில்லையே! அவளும் என்னை காதலித்தாள்………….”

 

அவர் சற்று குரலை உயர்த்தி, “நீ தான் அப்படி சொல்ற.. உன்னை காதலித்து இருந்தால் எப்படி இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருப்பாள்?”

 

“அது தான் எனக்கு புரியலை”

 

“என்ன புரியலை.. அவ உன்னை காதலிக்கவில்லை”

 

மகனுக்கு வலிக்கும் என்று தெரிந்தே இப்படி பேசினார். வலி இல்லாமல் காயத்தை சரிபண்ண முடியாதே!

அவன், “இல்லை பா.. அவ…………..”

 

“அவள் உன்னிடம் காதலை சொன்னாளா?”

 

“அவ கண்கள் சொலுச்சு பா”

 

“ப்ரனேஷ்! ப்ராக்டிகலா யோசி”

 

“ச்ச்.. நான் சொல்வது உண்மை பா” என்று வலியுடன் கூறிய மகனை பார்த்தவர் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “ஆல்ரைட்.. அதை விடு.. இனி நடக்க போவதை பற்றி பேசலாம்”

 

“..”

 

“நானும் ஒரு வெகஷன் எடுக்கணும் னு நினைத்தேன்.. ஒரு வாரம் எங்கேயாவது டூர் போகலாம்”

 

“எனக்கு டூர் போகும் மூட் இல்லை”

 

“உனக்கு இப்போ இடம் மாற்றம் தேவை”

 

“அது நடந்ததை மாற்றி விடுமா!”

 

“இல்லை தான் ஆனால் உன் மனநிலையை மாற்றும்”

 

அவன் விரக்த்தியுடன் உதட்டை பிதுக்கினான்.

அவர், “மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது”

 

“அப்போ இன்றைய சூழ்நிலை மாறி இனியா எனக்கு கிடைப்பாளா?”

 

“ப்ரனேஷ்!”

 

“நண்பனின் மனைவியை காதலிக்கும் அளவிற்கு நான் மோசமானவன் இல்லை டாட்…………”

 

“நீ………….”

 

“ஆனா என் காதல் என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கும்..”

 

“இப்போ அவ……….”

 

“அசோக்கின் மனைவி தான்.. நான் காதலித்தது இனியமலரை.. இனியமலர் அசோக்கை இல்லை.. அவளது நினைவுகள் எப்பொழுதும் என்னுடன் இருக்கும்” என்றவன் கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “சரி டூர் போகலாம்” என்றான்.

 

“இப்போ சாப்டுட்டு வீட்டுக்கு போகலாம்..”

 

“எனக்கு வேணாம்”

 

“பட்டினி கிடந்தால்……………”

 

அவன் எரிச்சலுடன், “எதுவும் மாறாதுன்னு எனக்கும் தெரியும் டாட்.. இனி சாப்பிடவே மாட்டேன்னு சொல்லலை.. இப்போ வேணாம் னு தான் சொல்றேன்”

 

“சரி.. சரி..” என்று அவனது கையை தட்டிக் கொடுத்தவர், “வீட்டுக்கு போகலாம்.. தலைவலி னு சொல்லி உன் ரூமுக்கு போய் தூங்கு.. அம்மா கேள்வி கேட்காமல் நான் பார்த்துக்கிறேன்..”

 

“..”

 

அவனை ஆழ்ந்து நோக்கியவர், “எந்த விதமான தப்பான முடிவும்……………..”

 

“நிச்சயம் மாட்டேன்.. அது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன்.. சாரி பா” என்று சற்று இறங்கிய குரலில் கூறினான்.

 

அவன் தோளை தட்டியபடி, “குட்” என்றவர் வண்டியை கிளப்பினார்.

அதன் பிறகு அன்று அவனுடனே இருந்து சொன்னது போல் குடும்பத்துடன் பத்து நாட்கள் ஷிம்லா சென்றவர் அங்கேயே தினமும் மனைவி அறியாமல் அவனுக்கு ஆலோசனை(Counseling) வழங்கி அவனது மனநிலையை மாற்றினார்.

சென்னை திரும்பியதும் மேல் படிப்பிற்காக லண்டன் செல்வதாக கூறினான். அவன் அன்னை மறுத்தபோது, அவனது மனநிலை அறிந்த ஆனந்தன் மனைவியை சமாதானம் செய்தார்.

அன்னையின் கெஞ்சலிற்கு சிறிதும் மனம் இறங்காமல் லண்டன் சென்றவன் இன்று தான் இந்தியா திரும்புகிறான். 

இதழ் திறக்க காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥

Advertisement