Advertisement

இதழ் 12
அன்று ப்ரனிஷா உயிரியல் ஆய்வகத்தில் தனியாக ஏதோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது “அம்மா” என்ற மகளின் குரலில் ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் திரும்பியவளின் பார்வை முதலில் மகளின் உடம்பை ஆராய்ந்தது. குழந்தை நன்றாக இருக்கிறாள் என்றதும் நிம்மதியுடன் மகளிடம் சென்றவள் மண்டியிட்டு அமர்ந்தபடி மகளின் இரு தோள்களையும் பற்றி, “என்ன குட்டிமா! உங்க கிளாஸ்ஸில் இல்லாம இங்கே எதுக்கு வந்தீங்க?” என்று வினவியவள் அருகில் இருந்த அன்பரசியை பார்வையால் ‘என்ன?’ என்று வினவினாள்.
அன்பரசி, “உன்னை பார்க்கணும் னு ரொம்ப அடம் பிடிச்சி இருப்பா போல! லன்ச் கூட சாப்பிடலை போல.. ஆயம்மா கூட்டிட்டு வந்தாங்க.. நான் இங்கே கூட்டிட்டு வந்தேன்”
அப்படியே தரையில் அமர்ந்தவள் மகளை மடியில் அமர்த்தி, “என்ன டா? எதுக்கு அம்மாவை தேடுனீங்க?”
“திச்சா(கிச்சா) தச்சு தாம்(ராம்) அப்பா இருத்தா(இருக்கா).. பாப்பா இல்ல.. பாப்பா அப்பா எங்த(எங்க)?” என்ற கேள்வியில் ப்ரனிஷா அதிர்ந்தாள்.
அன்பரசி தோழியின் தோளில் ஆதரவாக கையை வைத்தாள்.
ப்ரனிஷா, “பாப்பாக்கு அப்பா இல்லை செல்லம்” என்று சிறு திணறலுடன் கூறினாள்.
அபிசாரா, “ஏன்?”
ப்ரனிஷா பதில் சொல்வதறியாது திணற குழந்தை அடுத்த கேள்வியை கேட்டது, “பாப்பா பேத்(பேட்) தேர்ள்(கேர்ள்) ஆ? அதா பாப்பா அப்பா இல்லவா(இல்லையா)?” என்று முடித்தபோது குழுந்தை உதட்டை பிதுக்கி அழுகையை கட்டுப்படுத்தியது.
“அப்படி இல்லை டா குட்டிமா.. பாப்பா வெரி குட் கேர்ள்” என்ற ப்ரனிஷா கலங்கிய கண்களுடன் மகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 
குழந்தை தோளில் சாய்ந்தபடியே, “அப்போ ஏன் மிஸ் அப்தி(அப்படி) சொன்னா?” 
சட்டென்று குழந்தையை பிரித்து முகத்தை பார்த்து, “யாரு குட்டிமா அப்படி சொன்னது? காயு மிஸ் ஆ?”
“தாயு(காயு) மிஸ் இல்ல.. வேத(வேற) மிஸ்”
“யாரு? பெயரென்ன?”
“தெரியாது”
“அம்மாக்கு அவங்களை தெரியுமா?” என்றதும் குழந்தை வேகமாக ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியது.
ப்ரனிஷா, “யாரா இருக்கும் அன்பு?” என்று யோசனையுடன் கேட்டபோது குழந்தை அடுத்த குண்டை தூக்கி போட்டது.
அபிசாரா, “மிஸ்.. பாப்பா சத்வா எப்தி தூபிதுவேன் தேட்டா?”
ப்ரனிஷா அதிர்ச்சியுடன், “என்ன டா சொல்றா?” என்று வினவ அன்பரசி, “என்ன சொல்றா?” என்று வினவினாள்.
ப்ரனிஷா அன்பரசியிடம், “இவ சர்வேஷ் சாரை எப்படி கூப்பிடுவா னு கேட்டிருக்காங்க” என்றதும் அன்பரசி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
ஒரு முடிவிற்கு வந்த ப்ரனிஷா கலங்கிய கண்களை துடைத்து குழந்தையை பார்த்து தீர்க்கமான குரலில், “பாப்பா என்ன சொன்னீங்க?”
“சத்வா(சர்வா) துப்பிது(கூப்பிடு) சொன்னா”
“வேற என்ன கேட்டாங்க?”
“வேத வேத.. ஒன்னு இல்ல”
“சரி” என்று கூறி மணியை பார்த்தாள். மதிய உணவு இடைவேளை முடிய பத்து நிமிடங்கள் இருந்தது. குழந்தையின் கையை பற்றிக் கொண்டு ஆசிரியர் அறை நோக்கி நடந்தாள். அன்பரசி சிறு பதற்றத்துடன் அவர்களை பின் தொடர்ந்தாள்.
வழியில் வணக்கம் சொன்ன மாணவர்களுக்கு சிறு தலை அசைப்பை மட்டும் பதிலாக தந்தவள் வேகமாக ஆசிரியர் அறையினுள் நுழைந்தாள்.
அங்கே ஒரு சில மாணவர்கள் சந்தேகம் கேட்டபடியும், புத்தகத்தில் கையெழுத்து வாங்கியபடியும் இருந்தனர்.
ப்ரனிஷா, “ஸ்டுடென்ட்ஸ் ப்ளீஸ் கோ டு யுவர் கிளாஸ்.. கம் லேட்டர்” என்றதும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை பார்த்தனர். ப்ரனிஷாவை விட்டுக் கொடுக்க விரும்பாத ஆசிரியர்கள் ‘செல்’ என்பது போல் தலையை அசைக்கவும் மாணவர்கள் கிளம்பினர்.
ஆனால் சுகுணா, “என்னை பார்க்க வந்த ஸ்டுடென்ட்டை நீ எப்படி கிளம்ப சொல்லலாம்?” என்று சண்டைக்கு வந்தார்.
ஆனால் அவரிடம் கையெழுத்து வாங்க வந்த பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்கள் ப்ரனிஷா சொன்ன மறுநொடி சுகுணாவிடம் கூட கேட்காமல் கிளம்பியிருந்தனர்.
சுகுணாவை பார்த்து, “சாரி” என்றவள் மகளிடம் திரும்பினாள்.
சுகுணா, “சாரி சொன்னா ஆச்சா?” என்று சண்டையை தொடர, 
அதை சட்டை செய்யாத ப்ரனிஷா குழந்தையிடம், “குட்டிமா கிட்ட யார் அப்படி பேசினது? யாரு னு நல்லா பார்த்து சொல்லுங்க” என்றாள்.
ஒவ்வொருவராக பார்த்த குழந்தை சுகுணாவை பார்த்ததும் அப்படியே பார்வையை நிறுத்த, சுகுணா பார்வையில் குழந்தையை மிரட்டினார்.
சுகுணாவின் மிரட்டலுக்கு சிறிதும் பயமின்றி குழந்தை சுகுணாவை சுட்டிக் காட்டியது.
கோபத்துடன் சுகுணா அருகே சென்ற ப்ரனிஷா சிறிதும் யோசிக்காமல் சுகுணாவின் கன்னத்தில் ஓங்கி அரைந்தாள்.
அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, நொடி பொழுதில் சுதாரித்த சுகுணா, “ஏய்..” என்று கத்தியபடி ப்ரனிஷாவை அடிக்க வர, சுகுணாவின் கையை பற்றி தடுத்த ப்ரனிஷா, “நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. குழந்தை கிட்ட என்ன பேசுறதுன்னு புத்தி இல்லை.. நீயெல்லாம் என்ன பாடம் நடத்த போற! தைரியம் இருந்தால் என்னிடம் கேளு.. அதை விட்டுட்டு என் குழந்தை மனதை கலைத்து கஷ்டபடுத்தின!!!!!!!” என்று கோபமாக பேசியவள் சுகுணாவின் கையை வேகமாக உதறி, ஆள் காட்டி விரலை ஆட்டி, “ஜாக்கிரதை!” என்று கிட்டத்திட்ட கர்ஜித்தாள். 
ப்ரனிஷாவின் ஆவேசத்தில் சுகுணாவே ஒரு நொடி அரண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
குழந்தை பயத்துடன் அன்பரசியை கட்டிக் கொண்டது.
அன்பரசி, “ப்ரனிஷா” என்று அழைக்கவும் திரும்பியவள் அபிசாராவை பார்த்ததும் சட்டென்று கோபம் வடிய குழந்தை அருகே சென்று மண்டியிட்டு குழந்தையை இழுத்து அணைத்துக் கொண்டு முதுகை வருடினாள்.
பின் குழந்தையை பிரித்து, “பாப்பா குட் கேர்ள்.. அந்த மிஸ் தான் பேட்.. அம்மா திட்டிட்டேன்.. ஓகே.. பாப்பா சமத்தா கிளாஸ் போங்க ஓகே”
குழந்தை அப்பொழுதும் சிறு பயத்துடன் தலையை ஆட்டவும், ப்ரனிஷா, “சாரி டா குட்டிமா.. அம்மா இனிமே இப்படி கோபப்பட மாட்டேன்” என்று கூறி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
அபிசாரா, “மம்மி தோபம்(கோபம்).. அடிச்சு.. பாப்பா பயந்தா”
“அதான் மம்மி சொல்றேனே! இனிமே இப்படி கோபப்பட மாட்டேன்.. சாரி டா குட்டிமா”
இதற்குள் சுதாரித்திருந்த சுகுணா கோபத்துடன், “நான் ஒன்றும் இல்லாததை சொல்லலையே! நான் கெட்டவளா? கழுத்தில் தாலி இல்லாமல் குழந்தையுடன் இருக்கும் நீயும் உன் குழந்தையும் நல்லவங்க நான் கெட்டவளா?”
ப்ரனிஷாவும் அன்பரசியும் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் மகாலக்ஷ்மி, “அன்பரசி குழந்தையை வெளியே கூட்டிட்டு போங்க” என்றவர் அன்பரசி ப்ரனிஷாவிடம் கண்ணசைவில் விடைபெற்று குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே செல்லவும், சுகுணாவிடம், “என் கழுத்தில் கூட தான் தாலி இல்லை.. ஏன் நம்ம சேர்மன் மேடம் கழுத்தில் கூட தான் தாலி இல்லை…………….”
சுகுணா, “நீங்களும் இவளும் ஒன்றா?”
“எந்த வகையில் இவங்க குறைந்து போய்ட்டாங்க? சும்மா வாய்க்கு வந்ததை பேசாதீங்க”
“நீங்க ஏன் மேடம் இவளுக்கு சப்போர்ட் பண்றீங்க?”
“ஏன்னா இவங்களிடம் தப்பு இல்லை.. தப்பு இருந்திருந்தால் நம்ம ஸ்கூலில் வேலை கிடைத்து இருக்காது.. இவங்க பெர்சனல் விஷயம் பேசும் உரிமை உங்களுக்கு இல்லை.. அதுவும் குழந்தையிடம் போய் தப்பா பேசி இருக்கீங்க! பிஞ்சில் நஞ்சை புகுத்த பார்த்து இருக்கீங்க..” என்றவர் வெறுப்புடன் முகத்தை திருப்ப,
ப்ரனிஷா கோபத்துடன் சுகுணாவை முறைத்தபடி, “அதுமட்டுமில்லை மேடம்.. என் குழந்தைகிட்ட அவள் சர்வேஷ் சாரை எப்படி கூப்பிடுவா னு கேட்டு இருக்காங்க”
மற்றொரு ஆசிரியர், “குழந்தை கிட்ட போய் இப்படி பேசுவீங்களா மேடம்? எப்படி உங்களுக்கு மனசு வந்தது?”
வேறு ஆசிரியர், “மனசுனு ஒன்னு இருந்தால் இப்படி பேசுவாங்களா? அதுவும் குழந்தை கிட்ட?”
சுகுணா கோபமாக, “என்ன எல்லோரும் நல்லவங்க நான் கெட்டவளா? குழந்தைகிட்ட நான் கேட்ட கேள்வி உங்கள் மனதில் இல்லை னு சொல்லுங்க பார்ப்போம்? வெளியே கேட்ட நான் மட்டும் கெட்டவளா? இப்பவும் சொல்றேன் நான் கேட்டதில் தவறு இல்லை”
ப்ரனிஷா, “நான் அன்பு தவிர வேறு ஆசிரியருடன் சிரித்து பேசி நீங்க யாரவது பார்த்து இருக்கீங்களா?”
சுகுணா, “சர்வேஷ் சார் அறையினுள் நடப்பது எங்களுக்கு எப்படி தெரியும்?”   
“ஓ” என்றவள் சுகுணா அருகே செல்ல, சுகுணா தன்னையும் அறியாமல் ஒரடி பின்னால் நகர, ப்ரனிஷா சுகுணாவின் கையை பற்றி இழுத்தபடி, “என்னுடன் வா” என்றவள்,  சுகுணாவின் மறுப்பை பொருட்படுத்தாமல் அவரை இழுத்துக் கொண்டு அவள் சென்று நின்ற இடம் சர்வேஷின் அறை.
அனுமதியின்றி உள்ளே வந்து நின்ற இருவரையும் சர்வேஷ் ‘என்ன’ என்பது போல் பார்க்க,
சுகுணாவின் கையை விட்ட ப்ரனிஷா உணர்ச்சியற்ற குரலில், “எனக்கும் உங்களுக்கும் நடுவில் என்ன மாதிரி ரிலேஷன்ஷிப் னு இவங்களுக்கு தெரியணுமாம்.. அதனால் என் குழந்தை அபி கிட்ட போய் அவள் உங்களை எப்படி கூப்பிடுவா னு கேட்டு இருக்காங்க”
“வாட்?” என்று அதிர்ச்சியுடன் எழுந்து நின்றேவிட்டான்.
சுகுணாவிற்கு பயத்தில் உடல் நடங்க ஆரம்பித்தது.  
சர்வேஷ் சுகுணாவை பார்த்த பார்வையில், சுகுணா, “நா..ன்.. நா..ன்.. அந்த.. அர்த்தத்தில் பேசலை சார்”
“வேறு எந்த அர்த்தத்தில் பேசுனீங்க? அதுவும் குழந்தையிடம்?”
“சார்.. அது”
தன் கோபத்தை கட்டுபடுத்திய சர்வேஷ் ப்ரனிஷாவிடம், “சாரி” என்றான்.
பிறகு சுகுணாவிடம், “உங்களுக்கு விளக்கம் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை இருந்தாலும் ப்ரனிஷாவை தவறாக பேசக் கூடாது என்ற காரணத்திற்காக தான் இந்த விளக்கம்.. ப்ரனிஷா எனக்கு நல்ல தோழி.. அது கூட ஸ்கூலிற்கு வெளியே மட்டுமே! இங்கே அவங்க என் ஸ்கூலில் வேலை பார்க்கும் ஆசிரியர் மட்டுமே..” என்றவன் கடுமையான குரலில், “இது தான் நான் உங்களுக்கு தரும் கடைசி எச்சரிக்கை.. இனி ஒருமுறை யாரையாவது தவறாக பேசுனீங்க னு தெரிந்தால் உங்களுக்கு வேலை இல்லை..” என்றவன் வெளியே செல்லுமாறு செய்கையில் கூறினான். 
சுகுணா விட்டால் போதும் என்று வெளியே ஓடிவிட, ப்ரனிஷா, “சாரி சார்” என்று கூறி அவனது பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றாள்.
ஆசிரியர் அறைக்கு சென்றவள் பொதுவாக, “எனக்கு திருமணம் நடந்து நான் விரும்பி கேட்ட டைவர்சும் கிடைத்துவிட்டது” என்றவள் சுகுணாவை பார்த்து, “இந்த விஷயம் சாரதா மேடமிற்கு மட்டுமே தெரியும்.. சர்வேஷ் சாருக்கு இப்பவரை தெரியாது.. என் பாஸ்ட் தெரியாத போதும் என் மேல் நம்பிக்கை வைத்து என்னை தோழியாக நினைத்த ஒரு நல்ல உள்ளத்தை கேவலப் படுத்திட்டீங்க.. ச்ச்.. உங்களை சொல்லி என்ன! எல்லாம் என் கிரகம்!”
அப்பொழுது வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் ப்ரனிஷா பொதுவாக, “அடுத்து ஏன்! எதற்கு டைவர்ஸ்? நான் நல்லவளா? என் மாஜி கணவன் நல்லவனா கெட்டவனா? இப்படி ஆராய்ச்சி பண்ணாமல் உங்கள் வேலையை பாருங்க” என்றவள் அன்பரசியை தேடிச் சென்றாள்.
அன்பரசி குழந்தையை சமாதானம் செய்து குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தாள். எதிரே ப்ரனிஷாவை பார்த்தவள், “அபி குட்டி பயந்துட்டா.. நானே கொஞ்சம் பயந்துட்டேன்.. அபி இப்போ ஓகே.. நீ கோபப்பட்டு அவள் பார்த்தது இல்லையா?”
ப்ரனிஷா கசந்த புன்னகையுடன், “கோபம் என்ற உணர்ச்சி என்னிடம் வெளிப்படுவதே இங்கே வந்த பிறகு தான்” என்றவள், “சரி.. நீ போ.. நான் அபியை பார்த்துட்டு வரேன்”
“பிரேக் டைமில் பாரு”
“வெளியே இருந்து அவளுக்கு தெரியாமல் பார்த்துட்டு வரேன்”
“சரி பார்த்துட்டு வா.. சேர்ந்தே போகலாம்”
“ஹ்ம்ம்” என்று கூறி சென்றாள். 
குழந்தை அறியாமல் வெளியே நின்று பார்த்தவள் சில நிமிடங்களில் குழந்தை ஏதோ பேசி சிரித்த பிறகே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
சென்னையில் வண்டியில் சென்றுக் கொண்டிருந்த ப்ரனேஷ் அருகில் அமர்ந்திருந்த அன்னையிடம், “என்ன பர்த்டே பேபி சைலெண்ட்டா வரீங்க?” 
“ஹ்ம்ம்.. ஏதோ ஒரு யோசனை”
“அதான் என்ன யோசனை?”
“நீ மட்டும் எல்லாம் என்னிடம் சொல்லிடுற!”
“பர்த்டே பேபி! வொய் திடீர் கோபம்?” என்றவன் வண்டியை ஓட்டிகொண்டிருந்த தந்தையை பார்த்து, “என்ன மிஸ்டர் ஜாய்! உங்க டார்லிங் ஏன் திடீர் திடீர் னு கோபப்படுறாங்க?”
ஆனந்தன் புன்னகையுடன் வண்டியை ஒட்டிக் கொண்டிருக்க,
அமுதா, “அது என்னடா ஜாய்?”
“அப்பா பெயரை இங்கிலிஷில் ட்ரான்ஸ்லேட் பண்ணேன்” என்று கூறி கண்சிமிட்டினான்.
மகனை இமைக்காமல் பார்த்த அமுதா, “எப்பொழுதும் இப்படியே சந்தோஷமா இருடா” என்றார்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய ப்ரனேஷ், “எப்படி டாட் உங்க டார்லிங்கை சாமாளிக்கிறீங்க!”
“ஏன் டா! என் டார்லிங்கு என்ன?”
அன்னையை ஓரப்பார்வை பார்த்தபடி மெல்லிய புன்னகையுடன், “எனக்கு என்னவோ உங்கள் டார்லிங் உள்ளே ஒரு அந்நியன் இருகிறாளோ னு சந்தேகமா இருக்குது!” 
அமுதா மகனை முறைக்க, ஆனந்தன் மெல்லிய புன்னகையுடன், “ஏன் இந்த சந்தேகம்?”
“ஒரு நொடி கோபம் அடுத்த நொடியே பாசமா உணர்ச்சிவசப் படுறாங்களே!”
“அது தான் டா தூய்மையான குழந்தை மனம்” என்றவர் காதலுடன் மனைவியை பார்க்க அமுதா அழகாக  வெக்கப்பட்டார்.
ப்ரனேஷ் அந்த நொடியை கைபேசியில் புகைப்படம் எடுத்தான். பிறகு, “ஹலோ! ஹலோ! நானும் இங்கே தான் இருக்கிறேன்”
ஆனந்தன் விரிந்த புன்னகையுடன் சாலையில் பார்வையை பதித்தபடி வண்டியை ஓட்ட, அமுதா வெக்கம் கலந்த சிரிப்புடன் ப்ரனேஷின் கையை தட்டி, “சும்மா இரு டா” என்றார்.
மூவரும் உணவகத்திற்கு உண்ண சென்றனர். அமுதா கை கழுவ சென்ற நேரத்தில் ஆனந்தன், “என்ன ரொம்ப சந்தோசமா இருப்பது போல் இருக்குது!”
“தெரியலை பா.. என்னவோ மனசு லேசா இருக்குது”
“டிடெக்டிவ் போன் பண்ணாரா?”
“இல்லை.. ஆனா.. என்னவோ பாஸிடிவ்வா சொல்வார் னு மனசு சொல்லுது டாட்” என்று சந்தோஷமாக சொன்னவன் சில மணி நேரங்களில் அன்னை தரப்போகும் அதிர்ச்சியை பற்றி அறியவில்லை.
புன்னகையுடன், “ஹ்ம்ம்.. நல்லதே நினைப்போம்” என்றவர் அமுதா வரவும் பேச்சை மாற்றினார்.
உணவை முடித்துக் கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று திருப்தியாக சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பொழுது ப்ரனேஷிற்கு துப்பறிவாளரிடமிருந்து அழைப்பு வந்தது.
நெஞ்சம் படபடக்க அழைப்பை எடுத்தவன், “ஹலோ.. சொல்லுங்க பிரேம்.. என்னாச்சு?” என்றான் பரபரப்பாக.
அவர் சொன்னதை அமைதியாக கேட்டபடி வண்டியில் ஏறியவன், அவர் பேசி முடித்ததும், “ப்ரோசீட் பண்ணுங்க” என்றான்.
பிறகு, “டிடேல்ஸ் எல்லாத்தையும் உடனே எனக்கு மெயில் பண்ணுங்க” என்று கூறி அழைப்பை துண்டித்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.
அவன் பேசியதில் இருந்தே பேசியது துப்பறிவாளர் என்பதை புரிந்துக் கொண்ட ஆனந்தன் அமுதா இருப்பதால் அமைதியாக இருந்தார்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய அமுதா ப்ரனேஷை உலுக்கி, “டேய் என்ன யோசனை?”
“ஹ்ம்ம்.. என்ன கேட்ட மா?”
“இன்னைக்கு நான் சொல்வதை செய்றேன்னு சொல்லியிருக்க”
“எத்தனை முறை இதையே சொல்லுவ!”
“நான் என்ன சொன்னாலும் செய்யணும்.. மறுப்பு சொல்ல கூடாது”
அப்பொழுது கைபேசி ஒலி எழுப்பவும், அதில் கவனத்தை செலுத்தியவன் அவர் கூறியதை கவனிக்காமல், “சரி மா” என்று கூறி கைபேசியில் வந்த மின்னசலை பார்க்கத் தொடங்கினான்.
அமுதா, “XXXX வழியா போங்க”
ஆனந்தன், “எதுக்கு மா?”
“போங்க சொல்றேன்” என்று அமுதா மர்ம புன்னகையுடன் கூற, ஆனந்தன் சந்தேகமாக, “எங்களுக்கு தெரியாமல் எதுவும் செய்றியா?”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்”
“உன் பேச்சும் செய்கையும் எனக்கு ஏதோ சொல்லுது”
“அப்படியா!”
“விளையாடாதே.. என்னன்னு சொல்லு”
“அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும் சொல்றேனே!”
“ச்ச்.. டென்ஷன் பண்ணாதே..”
“ஒரு டென்ஷனும் இல்லை.. ப்ரனு அமைதியா தானே வரான்.. நீங்க மட்டும் ஏன்?”
“அவன் நீ சொன்னதை கவனிக்கலை.. அவன் கவனம் செல்லில் இருக்கிறது.. நீ விஷயத்தை சொல்லு”
“கொஞ்ச நேரம் அமைதியா வாங்க.. இன்னும் பைவ் மினிட்ஸ் தான்” என்றவர் தானும் கைபேசியை நோண்ட தொடங்கினார்.
‘இது எங்கே போய் முடிய போகுதோ!’ என்று மனதினுள் புலம்பியபடி ஆனந்தன் மனைவி சொன்ன வழியில் வண்டியை ஓட்டினார்.
மின்னஞ்சலில் கவனமாக இருந்த ப்ரனேஷ் பெற்றோரின் உரையாடலை கவனிக்கவில்லை..
சிறிது நேரத்தில் மனைவி சொன்ன வீட்டின் முன் வண்டியை நிறுத்திய ஆனந்தன் மனைவியை முறைத்தார்.
மின்னஞ்சலை படித்து முடித்து நிமிர்ந்த ப்ரனேஷ் வண்டி நின்றதும் வீடு வந்துவிட்டது என்று நினைத்து இறங்க போனவன் வீட்டை பார்த்து, “யாரு வீடு மா? இங்கே எதற்கு வந்திருக்கோம்?”
அமுதா, “உனக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம்” என்று நிதானமாக கூற, “என்னது?” என்று அவன் பெரிதும் அதிர்ந்தான்.  
அமுதா, “இன்னைக்கு முழுவதும் என் கூடவே இருக்கிறேன்.. நான் சொல்றதை செய்றேன்னு சொல்லியிருக்க”
ப்ரனேஷ் வாய் திறக்கும் முன் ஆனந்தன், “நீ செய்வது சரியில்லை அமுதா”
“நான் இன்னைக்கு வரதா சொல்லிட்டேன்.. பொண்ணோட அம்மா லேடிஸ் க்ளப்பில் எனக்கு பழக்கமானவங்க.. நல்ல பொண்ணு.. நிச்சயம் உனக்கு பிடிக்கும்”
ப்ரனேஷ் இறுகிய குரலில், “எனக்கு பிடிக்காது மா”
“பார்க்காமல் சொல்லாதே!”
“பார்த்தாலும் எனக்கு பிடிக்காது”
“சரி அதை பார்த்துட்டு சொல்லு”
“என்னால் முடியாது.. நான் கிளம்புறேன்”
“அப்போ நீ கொடுத்த வாக்கு”
“உன் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையை நீ உடைத்த போது அதுவும் உடைந்து விட்டது”
“அப்போ என் பிறந்த நாள் அன்று என்னை அவமானப் படுத்த போற?”
“ச்ச்.. புரிஞ்சுக்கோ மா”
“நீ என்னை புரிந்துக் கொண்டாயா?”
“வீட்டுக்கு வாக.. நான் விளக்கமா சொல்றேன்”
“அப்போ நான் வரேன்னு சொன்ன வாக்கை மீற சொல்றியா?”
அவன் இயலாமையுடன் தந்தையை பார்க்க அவர், “சரி உள்ளே போகலாம்.. பெண்ணை பார்க்க மட்டும் செய்.. பதிலை வீட்டுக்கு போய் சொல்றதா சொல்லிட்டு கிளம்பிடலாம்” என்றவர் மனைவியை பார்த்து, “அங்கே வைத்து பெண்ணை பிடிச்சிருக்குது னு ஏதாவது சொன்ன!” என்று சிறு கோபத்துடன் கூற,
கணவனின் கோபக் குரலில் ‘தான் தவறு செய்து விட்டோமோ!’ என்ற எண்ணம் அமுதாவினுள் தோன்ற சிறு குற்று உணர்ச்சியுடன், “இல்லை சொல்ல மாட்டேன்” என்றார்.
ப்ரனேஷ் மறுப்பாக தந்தையை பார்க்க அவர், “என் மேல் நம்பிக்கை இருந்தால் வா” என்று கூறி இறங்கவும் வேறு வழி இல்லாமல் மனமின்றி இறங்கினான். 
உள்ளே சென்றதும் சம்பிரதாய கேள்விகளுக்கு பிறகு பெண்ணை அழைத்தார் அவளது அன்னை. 
பெண்ணை பார்த்த ப்ரனேஷ் சிறு அதிர்ச்சியுடன் தாயை பார்க்க, அவரோ எதிர்பார்ப்புடன் ‘பிடிச்சிருக்கா?’ என்று கண்களில் வினவினார். அவன் அவரை முறைக்கவும் அவர் முகம் வாடியது.
ஆனந்தன் அவன் காதில், “பொண்ணை உனக்கு தெரியுமா?”
“நம்ம ஹாஸ்பிடலில் வேலை செய்யும் ஜூனியர் டாக்டர்”
“ஓ! முந்தாநேத்து மாலில் பார்த்த பெண்ணா?”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அப்போ தப்பு முழுவதும் அம்மா மேல் இல்லை”
“ஒரு பெண்ணை பார்த்தா உடனே கல்யாணம் செஞ்சுக்க சொல்லுவீங்களா?” என்று அவன் சிறு கோபத்துடன் கேட்டான்.
அப்பொழுது பெண்ணின் தாய், “மாப்பிள்ளை என்ன சொல்றாங்க?” என்று வினவ,
அவன் தந்தையை முறைத்தான்.
அவர் மென்னகையுடன், “எங்க ஹாஸ்பிடலில் தான் உங்க பொண்ணு வேலை செய்றதா சொன்னான்”
பெண்ணின் தாய் சிரிப்புடன், “ஆமாங்க” என்றார்.
அப்பொழுது, “நான் டாக்டருடன் தனியா பேசணும்” என்று பெண் கூற, அவளது தாய் அவளை முறைக்க அதை அவள் கண்டுக்கொள்ளவில்லை.
அதை கவனித்த ஆனந்தன், “இங்கேயும் ஏதோ மறுப்பு இருக்கும் போல தெரியுது டா.. நீ தப்பிச்ச”
“நான் இல்லை உங்கள் டார்லிங் தப்பிச்சாங்க” என்றவன் எழுந்து நின்று சிறு புன்னகையுடன், “பேசலாமே” என்றான்.
அந்த பெண் கண்ணசைவில் அவனை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றாள்.
உள்ளே சென்றதும் அவன் அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள், “டாக்டர் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை”
அவன் அறையை நோட்டமிட்டபடியே அவளிடம் பேசினான்.
அவன், “ஏன் யாரையும் விரும்புறீங்களா?”
“இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால் யாரையாவது விரும்பனுமா என்ன?”
“ஓ! சரி இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா இல்லை கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?”
“அதை தெரிந்து என்ன செய்ய போறீங்க?”
“எதுவும் இல்லை தான்.. பட் தெரிந்துக்கொள்ளலாமே!”
“தேவை இல்லை”
“அது எப்படி.. இந்த கல்யாணத்தில் தான் விருப்பம் இல்லை என்றால் அது என்னை குறிக்கும் அதாவது என்னை கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லை”
அவள் அவசரமாக, “அப்படி இல்லை.. எனக்கு இப்போ கல்யாணம் செய்துக்கிறதில் விருப்பம் இல்லை”
“ஓ!”
“டாக்டர் நான் சும்மா சொல்லலை.. சீரியஸ் ஆ பேசிட்டு இருக்கிறேன்”
“நீங்க சும்மா சொல்றீங்கனு நான் சொல்லவே இல்லையே!”
“பட் உங்க(ள்) நடவடிக்கை அப்படி தான் இருக்குது.. உங்க(ள்) கவனம் என்னிடத்தில் இல்லை”
சட்டென்று அவளை பார்த்தவன், “இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை.. அப்போ என் கவனம் உங்களிடத்தில் இல்லை என்றால் உங்களுக்கு என்ன?”
“அது.. நான் பேசுவதை நீங்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றால் பாதிப்பு எனக்கு தானே!”
அவன் மெல்லிய புன்னகையுடன், “நல்லா பேசுறீங்க.. உங்களை கல்யாணம் செய்துக் கொண்டால் லைப் சுவாரசியமா போகும் போலவே!”
“டாக்டர்!!!!”
“ஹ்ம்ம்.. உன் பெயரென்ன! அவந்திகா தானே!”
அவள் சிறு அதிர்ச்சியுடன் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.
அவன் அதே மென்னகையுடன், “உன் அப்பா அம்மா பெயரென்ன?”
“செந்தில்குமார்.. நாகேஸ்வரி”
“ஹ்ம்ம்.. வேறு எதுவும் பேசணுமா?”
“நீங்க இந்த கல்யாணத்தை.. நிறுத்திருவீங்க தானே!”
“ஏன்?”
“ச்ச்.. இப்போ தானே சொன்னேன்”
“என்ன சொன்ன? காரணம் எதுவும் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே!” 
“ப்ளீஸ் டாக்டர்”
“உனக்கு இஷடமில்லை என்றால் நீ தானே சொல்லணும்”
“நான் சொன்னதை அம்மா கேட்கவில்லை”
“ஓ!”
“டாக்டர்…………………..”
“வா போகலாம்” என்றபடி அவன் நடக்க, அவனது பேச்சிலும் ஒருமை அழைப்பிலும் அவள் குழப்பத்துடன் அவனை தொடர்ந்தாள்.
வெளியே சென்றவன் தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த செந்தில்குமாரை பார்த்து, “உங்கள் மகளை கல்யாணம் செய்துக்க எனக்கு சம்மதம்” என்றான்.
செந்தில்குமார் புன்னகையுடன், “ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை” என்றார்.
நாகேஸ்வரியின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. கூடவே அவர் கண்களில் பேராசையும் தெரிந்ததோ!
அவந்திகா அதிர்ச்சியுடன் ப்ரனேஷை பார்த்தாள். 
சந்தோஷத்துடன் மகனை பார்த்த அமுதா கணவரை பெருமையாக பார்க்க, அவரோ சிறு அதிர்ச்சியுடனும் யோசனையுடனும் மகனை பார்த்துக் கொண்டிருந்தார். 
.  
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement