Advertisement

இதழ் 10
உயிரியல் ஆய்வகத்தில் (Biology Lab) அமர்ந்திருந்த ப்ரனிஷா தன் அருகில் அமர்ந்திருந்த அன்பரசியின் கையின் மீது தன் கையை வைத்து ஆறுதலாக தட்டிக் கொடுத்தபடி, “அன்னைக்கு என்ன நடந்தது?” என்று வினவினாள்.
அன்பரசி தன் அழுகையை கட்டுபடுத்தியபடி, “முந்தாநேத்து சாயுங்காலம் லேபில் தான் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினேன்.. ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து ஸ்டுடென்ட்ஸ் கிளம்பியதும் ஒரு ப்ரோக்ராம் போட்டுட்டு இருந்தேன்.. அதில் எரர் வந்துட்டே இருந்துது.. அதை சரி செய்வதில் மும்மரமா இருந்த நான் நேரம் போனதை கவனிக்கவே இல்லை.. திடீர்ன்னு என் பின்னால் யாரோ இருப்பது போல் இருக்கவும் திரும்பி பார்த்தா ராகுல் சார்.. கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கிறீங்க னு கேட்டார்.. நான் சிஸ்டம்மை பார்த்தபடி ப்ரோக்ராம் பற்றி சொன்னதும்.. ‘உயிரில்லாத இந்த கம்பியூட்டரையே எவ்வளவு நேரம் பார்ப்பீங்க! உயிருள்ள என்னையும் கொஞ்சம் பாருங்களேன்’ என்றதும் தான் அவரை கவனித்தேன்.. அவர் பார்வையே சரி இல்லை.. மணி அப்போ ஏழு.. அவசரமா சிஸ்டம்மை ஷட்டௌன் பண்ணி ‘சாரி சார்’ னு சொல்லிட்டு நான் கிளம்பினா அவர் என் கையை பிடிச்சி இழுத்து.. இழுத்து” என்று கூறி அவள் அழவும் 
ப்ரனிஷா, “அழாதீங்க அன்பு.. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கண்ணீர் கிடையாது.. நீங்க அமைதியா இருக்க இருக்க தான் அதிகமா பேசுவாங்க..  நிமிர்ந்து நில்லுங்க.. தைரியமா எதிர்த்து கேள்வி கேளுங்க.. அவதூறு பேசுற வாய் தானா மூடிரும்”
அன்பரசி அமைதியாக பார்க்கவும், ப்ரனிஷா மெல்லிய புன்னகையுடன், “சொல்றது ஈஸி.. நீ என் இடத்தில் இருந்தால் தெரியும் னு நினைக்கிறீங்களா!!! நீங்க நினைப்பது சரி தான்.. என்னிடம் இருக்கும் இந்த நிமிர்வு பிறப்பில் வந்தது இல்லை.. அடிபட்டு அடிபட்டு நானா வளர்த்துகிட்டது.. இது கூட கொஞ்ச நாளா தான்.. என் பொண்ணுக்காக என்னை நானே மாத்திகிட்டது தான்..”
“உங்களுக்கும் என்னை போல் யாரும் இல்லையா?”
“எனக்கு என் மகள் இருக்கிறாள்.. உங்களுக்கு நானும் என் மகளும் இருக்கிறோம்”
“தேங்க்ஸ்” என்று நெகிழ்ச்சியுடன் அவள் கையை பற்றியவள் சிறு தயக்கத்துடன், “உங்கள் கணவர்?” என்று இழுக்கவும்
ப்ரனிஷா மெல்லிய புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
அன்பரசி ‘எதற்கு?’ என்பது போல் பார்க்கவும் ப்ரனிஷா அதே புன்னகையுடன், “என் பெயருக்கு முன் இருக்கும் மிஸ்-ஸில் பல விமர்சனங்கள் இருப்பது எனக்கு தெரியும்”
“தெரிந்தும் ஏன் அமைதியா இருக்கிறீங்க?”
“என்னிடம் நேரிடையா யாரும் கேட்டது இல்லை.. சரி என்னை பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்.. இப்போ உன் பிரச்சனைக்கு வா.. வாங்க”
“ஒருமையிலேயே பேசுங்க.. உங்களை விட சின்னவளா தான் இருப்பேன்”
“இரண்டு வயசு வேணா சின்னவளா இருப்ப.. நீயும் ஒருமையில் பேசு”
“சரி”
“ஹ்ம்ம்.. சொல்லு.. என்ன பண்ணான் அந்த ராஸ்கல்?”
“கையை பிடித்து இழுத்து.. என்.. என்.. லிப்பில் கிஸ் பண்ணிட்டான்..” என்றபோது மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
அவள் கண்ணீரை துடைத்த ப்ரனிஷா, “அவனை தனியா கவனிக்கலாம்.. நீ என்ன பண்ண?”
“அவன் கன்னத்தில் அடிச்சு தள்ளிவிட்டுட்டு வெளியே போய்டேன்.. உடனே கிளம்பி ஹாஸ்டல் போய்ட்டேன்..”
“தைரியமா தானே செயல் பட்டு இருக்கிற! இப்போ ஏன் கோழை மாதிரி அமைதியா இருக்கிற?”
“அன்னைக்கு நைட்டே எனக்கு காச்சல் வந்துருச்சு.. நேத்து ஒரு நாள் நான் வரலை.. அதற்குள் பிளேட்டை மாத்தி போட்டு எல்லோரையும் நம்ப வச்சிட்டானே! எப்படியெல்லாம் பேசுறாங்க தெரியுமா! சிலர் என் காதுபடவே பேசுறாங்க” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.
ப்ரனிஷா, “இன்னொரு முறை அழுத அடி விழும்” என்று அதட்டவும் அழுகையை கட்டுப்படுத்தினாள்.
அன்பரசி, “எனக்கு னு யாரும் இல்லை னு தானே அவன் இப்படி நடந்துக் கிட்டான்.. எல்லோரும் இப்படி பேசுறாங்க.. அனாதையா பிறந்தது என் தப்பா! எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை.. ரிசைன் பண்ற முடிவிற்கே வந்துட்……………”
“என்ன பேச்சு இது? நீ போய்ட்டா உன் மேல் இருக்கும் பழி அழிந்திருமா? உன்னை நிரூபிக்க வேண்டாமா?”
“ச்ச்”
“இப்போ எனக்கு அபி இருக்கிறாள் ஆனா முன்னாடி! நான் உன்னை மாதிரியா சொல்லிட்டு இருக்கிறேன்! பிறக்கும் போது யாரும் அனாதை கிடையாது.. இனி அனாதை என்ற எண்ணமே உனக்கு வர கூடாது.. நானும் அபியும் உன்னுடன் இருக்கிறோம்.. உனக்குன்னு ஒருவன் நிச்சயம் வருவான்..”
“எனக்கு அந்த நம்பிக்கை இல்லை”
“இதை பற்றி அப்பறம் பேசலாம்.. ராகுல் நடந்துகிட்டதிற்கு காரணம் உன் நிலைமை இல்லை.. அவன் மனதில் இருக்கும் வக்கிர புத்தி..”
“என்னிடம் மட்டும் ஏன் அப்படி நடந்துகிட்டான்?”
“சூழ் நிலை காரணமாக இருக்கலாம்.. அந்த நேரத்தில் தனிமையில் நீ இல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் கூட அவன் அப்படி நடந்து கொண்டிருக்கலாம்.. இதில் உன் தவறு ஏதுமில்லை”
“..”
“உனக்கும் சுகுணா மேடமிற்கும் என்ன பிரச்சனை?”
“எப்போதுமே ஆகாது.. அவங்க பேசுற புரளியை நான் ஆதரிக்க மாட்டேன்.. சில நேரம் எதிர்த்து கூட பேசியிருக்கிறேன்.. அப்பறம் இந்த முறை டென்த்-க்கு என்னை கிளாஸ் டீச்சரா போட்டது வேற சேர்ந்துருச்சு”
“சர்வேஷ் சாரிடம் பேசலாம் வா”
“வேண்டாம்”
“ஏன்?”
“நான் ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்ததும்.. அவசரப் படாதீங்க.. நான் நல்ல முடிவா சொல்றேன் னு சொல்லி அனுப்பிட்டார்.. அவர் ஏதோ ஒரு முடிவில் தான் இருக்கிறார்..”
“ஓ அதான் இந்த திடீர் மீட்டிங் ஆ!” என்றவள், “அதான் சார் சொல்லியிருக்காரே அப்பறம் ஏன் இந்த கலக்கம்?”
“ச்ச்”
“மறுபடியும் என்ன?”
“அவர் முடிவு எனக்கு சாதகமா தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் மற்றவர்களின் எண்ணம்?”
“எனக்கு தெரிந்து இப்போ சுகுணா மேடமும் அவங்களுக்கு ஜால்ரா போடுற இரண்டு பேர் மட்டும் தான் தப்பா பேசிட்டு இருக்கிறாங்க.. அவங்களை யாரும் கண்டுக்கலை”
“அப்படியா!” என்று கண்ணில் சிறு மகிழ்ச்சியுடன் கேட்டாள்.
ப்ரனிஷா ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டவும் அன்பரசி, “எனக்காக சொல்றியா?”
“லூசு.. நிஜமா தான் சொல்றேன்.. நான் மஹா மேடம் கிட்ட கேட்டேன்.. நான் காலையில் பேசியதை கேட்டும், உன் முகத்தை பார்த்தும் எல்லோரும் அந்த பொறுக்கி மேல் தான் தப்பு இருக்கும் னு சொல்றாங்களாம்.. சுகுணா மேடம் பற்றி எல்லோருக்கும் தெரியும் தானே! கவலையை விடு..”
“ஹ்ம்ம்”
“இன்னும் என்ன! சிரி” என்றதும் மெலிதாக சிரித்தாள். 
அவள் கன்னத்தை லேசாக தட்டிய ப்ரனிஷா, “குட் கேர்ள்.. வா சாப்பிடலாம்” என்று கூறி அழைத்துச் சென்றாள்.
செல்லும் வழியில், “சுகுணா மேடம் ஏதாவது சொன்னால் கண்டுக்காதே.. தைரியமா இரு” என்று கூறினாள்.
உணவை எடுத்துக் கொண்ட போது யார் முகத்தையும் அன்பரசி பார்க்கவில்லை. சுகுணா அருகில் இருந்த ஆசிரியரிடம் ஏதோ முணுமுணுத்ததையும் கண்டுக்கொள்ளவில்லை.
ணவை முடித்துக் கொண்டு அனைவரும் சர்வேஷ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு சென்றனர். பள்ளியில் வேலை செய்யும் அனைவரும்.. அதாவது பெருக்குபவர், காவலாளி முதற்கொண்டு அனைவரும்  வந்திருந்தனர். குழந்தைகள் காப்பகத்தில் இருப்பவர்கள் கூட வந்திருந்தனர். குழந்தைகள் காப்பகத்தை சொர்ணத்தின்(அவன் வீட்டில் வேலை செய்பவர்) பொறுப்பில் விட்டிருந்தான்.
அனைவரும் வந்ததை உறுதி செய்தவன் அந்த அறையில் இருந்த அழைப்பு மணியை அழுத்தவும் பியூன் உள்ளே வந்தான்.
சர்வேஷ், “நீங்களும் இங்கே இருங்க” என்று கூறி இருக்கையை காட்டினான்.
அவன் காவலாளி அருகே அமர்ந்தான்.
சர்வேஷ் கம்பீர குரலில் பேசத் தொடங்கினான்.
“இப்படி ஒரு நிகழ்வு நம்ம ஸ்கூலில் நடந்ததில் வருத்தமும் கோபமும் வருகிறது.. இப்படி தரம் கெட்ட ஆளை ஆசிரியராக தேர்ந்தெடுத்ததில் என் மீது தான் கோபம் முதலில் வருகிறது.. பிறகு கீழ் தனமாக நடந்துக் கொண்ட ஆள் மீது கடும் கோபம் வருகிறது” என்றவனது பார்வை ரௌதிரத்துடன் ராகுல் மேல் பதிந்தது.
அவன் கண்ணில் தெரிந்த ரௌத்திரத்தில் அனைவருக்குமே சிறு பயம் எழுந்தது என்றால் தவறு செய்த ராகுலின் நிலையை சொல்லவா வேண்டும்! 
“என்ன ராகுல்!” என்ற சர்வேஷின் குரலில் எழுந்து நின்ற ராகுல் தன் பயத்தை மறைத்து, “சார்.. நான் எதுவும் பண்ணலை.. அன்பரசி மேடம் தான்………………………”
“போதும்.. நிறுத்துடா” என்ற அவனது கர்ஜனையில் ராகுலிற்கு சர்வமும் நடுங்கியது.
ராகுலின் முகத்தில் ஒரு காகிதத்தை விட்டேறிந்தவன், “இது.. நீ முன்பு வேலை செய்த ஸ்கூலில் உன் கைப்பட நீ எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம்.. அங்கே +2 மாணவியிடம் தவறாக நடந்துக்க முயற்சி செஞ்சிருக்க யூ ——–“ என்று கெட்ட வார்த்தையில் திட்டியவன் அடுத்து சொல்ல வந்த வார்த்தைகளை பெண்கள் இருப்பதால் வாய்க்குள்ளேயே அடக்கினான்.
“சார்.. இந்த லெட்டர் உண்மை தான்.. ஆனா இங்கே நிஜமாவே நான் எதுவும் செய்யலை.. இவ தான் என் கையை பிடித்து இழுத்தா…………..”
“நீ எல்லாம் திருந்தாத ஜென்மம்.. உன்னிடம் பேசுவதே வேஸ்ட்………..”
“சார்.. நான் தான் தவறு செய்தேன் என்பதற்கு என்ன ஆதாரம்?”
அவனை இகழ்ச்சியாக பார்த்த சர்வேஷ், “நீ தப்பு செய்யவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?”
“அது…” என்று அவன் திணற, அந்த அறையில் இருந்த கணினியை சர்வேஷ் இயக்கினான். அதில் கணினி ஆய்வகத்தை விட்டு பதற்றத்துடன் அன்பரசி வெளியே வருவதும், அவள் சென்றதும் கோபத்துடனும் கடுப்புடனும் வெளியே வந்த ராகுல் தெரிந்தான். அதன் பிறகு கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி சர்வேஷ் அறையை தான்டி செல்லும் அன்பரசி தெரிய, அதன் பிறகு சர்வேஷ் அறைக்கு சற்று தள்ளி இருக்கும் இடத்தில் கோபத்துடனும் வேட்டை ஆடும் குரூர பார்வையுடன் ராகுல் தெரிந்தான்.  
கணினியை அனைத்த சர்வேஷ், “என் ஸ்கூலில் அறைகளுக்குள் கண்காணிப்பு கேமரா கிடையாது ஆனால் வெளியே பல இடங்களில் யாரும் கண்டு பிடிக்க முடியாத வகையில் கேமரா இருக்கிறது..” என்றவன்,
பின் கோபத்துடன், “முன்பு காலில் விழுந்தும் பல ஆயிரங்களை கொடுத்தும் நல்ல காண்டக்ட் சர்டிபிகேட் வாங்கி வெளியே வந்திருக்க.. அது எதுவும் என்னிடம் நடக்காது.. இனி எங்கேயும் நீ வேலை பார்க்க முடியாது.. கெட் லாஸ்ட்” என்றான்.
பிறகு சுகுணா பக்கம் திரும்பியவன் குறையாத கோபத்துடன், “இனி தகாத வார்த்தையில் யாரையாவது பேசுறீங்க னு தெரிந்தது உங்களுக்கும் இந்த நிலை தான்” என்றதும் எழுந்து நின்ற சுகுணாவிற்கு ‘ஓகே சார்’ என்று சொல்வதற்கு கூட வாயை திறக்கும் தைரியம் வரவில்லை.  
சர்வேஷை அனைவரும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றால் ப்ரனிஷாவோ சிறு பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம்” என்றவன் ஒரு நொடி இடைவெளி விட்டு, “உங்கள் வேலையை மட்டும் சரியா செய்தால் உங்களுக்கு நல்லது.. ஹ்ம்ம்.. கிளம்புங்க” என்றான்.
அனைவரும் அமைதியாக வெளியே செல்ல, ராகுல், அன்பரசி மற்றும் ப்ரனிஷா அங்கேயே இருந்தனர். அன்பரசியின் கைபிடியில் ப்ரனிஷா நின்று கொண்டிருந்தாள்.
ராகுலை பார்த்த சர்வேஷ், “கெட் லாஸ்ட்.. இனி என் கண்ணில் பட்ட நீ இருக்கும் இடம் ஜெயில்-ஆ தான் இருக்கும்” என்று கர்ஜிக்க ராகுல் வேறு வழியில்லாமல் வெளியேற அன்பரசி பயத்துடன் ப்ரனிஷாவின் கையை இறுக்கமாக பற்றினாள்.
சர்வேஷ் இவர்களை ‘என்ன?’ என்பது போல் பார்க்கவும் அன்பசரி, “தே..ங்க்..ஸ் சா..ர்” என்று தந்தியடித்தாள்.
“இட்ஸ் ஓகே.. உங்கள் பிரெண்ட் சொன்னது போல் நிமிர்ந்து நில்லுங்க.. எப்பொழுதும் தைரியமா இருங்க” என்றவனது பார்வை முடிக்கும் போது ப்ரனிஷாவிடம்.
அவனது கூற்றை கேட்டு முதலில் ப்ரனிஷாவின் கண்ணில் ஆச்சரியம் வந்தது பிறகு சிறு கோபம் தெரியவும் சர்வேஷ் மெல்லிய புன்னகையுடன், “ஒட்டுகேட்கலை.. அந்த பக்கம் வந்தப்ப கேட்டது.. நீங்க என்ன கதவை மூடிட்டா பேசுனீங்க?”
ப்ரனிஷா, “கதவை மூடிட்டு பேசுறதுக்கு நாங்க ஒன்றும் ரகசியம் பேசலையே!”
“அப்பறம் எதுக்கு முறைக்கிறீங்க?”
“நாங்க ரகசியம் பேசலை தான்.. அதே நேரத்தில் எங்களுக்கு தெரியாம நாங்க பேசுறதை கேட்பது சரியில்லையே!”
“இல்லை தான் ஆனால் அதனால் நன்மை தானே நடந்திருக்கிறது!”
அவள் கண்ணில் போலி ஆச்சரியத்துடன், “ஓ அப்போ நாங்க பேசினதை கேட்டு தான் சார் அவனை வெளியே அனுப்புனீங்களா!”
அவளை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்தவன், “இல்லை தான்.. ஆனால் நீங்க பேசியதை கேட்டதால் கூடுதல் தெளிவு கிடைத்தது”
“ஓ!”
“அப்பறம்.. சாரி”
அவனது மன்னிப்பில் முதலில் புருவ சுளிப்புடன் யோசித்தவள் புரிந்ததும் மென்னகையுடன், “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க!”
நடப்பதை பெரும் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த அன்பரசி சர்வேஷின் மன்னிப்பிலும் ப்ரனிஷாவின் பதிலிலும் பிரம்மிப்பின் உச்சிக்கே சென்றாள்.
சர்வேஷ், “அதற்கும் சேர்த்து சாரி சொல்லனுமா?”
“போதும் சார்.. உங்களது முதல் சாரியே அதிகம் தான்.. உங்க சூழ்நிலை என்னை தவறாக நினைக்க வைத்தது.. அதை மறந்துருங்க”
“நீங்க மறந்துட்டீங்களா?”
“நிச்சயமா?”
“அப்போ பிரெண்ட்ஸ்!!!” என்ற கேள்வியுடன் கையை நீட்ட ப்ரனிஷா சிறு இறுக்கத்துடன், “சாரி சார்.. கிளாஸ்க்கு நேரமாச்சு.. நாங்க கிளம்புறோம்” என்று கூறி தோழியை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.
சர்வேஷ் அந்த நொடியில் மனதில் பட்டதை கேட்டான். தான் ‘பிரெண்ட்ஸ்’ என்று கேட்டு கையை நீட்டியதும் அவள் முகத்தில் வந்த இறுக்கத்தில் ‘இந்த பெண் ஒரு புரியாத புதிர்’ என்ற எண்ணம் தான் அவன் மனதில் எழுந்தது. அவள் சென்றதும்  சிறு தோள் குலுக்கலுடன் தன் வேலையை தொடர்ந்தான். 
இருப்பினும் அவனது சிந்தனையில் அவ்வபோது ‘அப்படி என்ன நடந்தது அவள் வாழ்க்கையில்! ஏன் இந்த ஒதுக்கம்?’ என்ற கேள்வி வந்து சென்றது. 
வெளியே சென்றதும் அன்பரசி, “இப்போ உனக்கு கிளாஸ் இருக்குதா?”
“இல்லை.. உனக்கு?”
“இல்லை..” என்றவள், “சர்வேஷ் சாரிடம் உன்னை போல் இவ்வளவு தைரியமா யாரும் பேசியது இல்லை”
“நான் சாதாரணமா தான் பேசினேன்”
“அதை தான் சொல்றேன்.. சாதாரணமா பேசுறது அதுவும் அவர் சொன்ன சாரியை கிண்டல் பண்ணது! எனக்கு பேச்சே வரலை”
“நாராயணன் சார்?”
“அவர் எக்ஸ்செப்ஷன்.. அவர் சாரோட அப்பாவோட க்ளோஸ் பிரெண்ட்.. அந்த எக்ஸ்செப்ஷன் லிஸ்ட்டில் நீயும் சேர்ந்திருக்க.. அதுமட்டுமில்லை சர்வேஷ் சார் யாருடனும் இப்படி ப்ரீயா பேசி நான் பார்த்தது இல்லை” என்றதும் ப்ரனிஷாவின் இறுக்கம் கூடியது.
அன்பரசி, “என்னாச்சு?”
“ஒன்றுமில்லை..”
“உன் ஒன்றுமில்லையில் ஏதோ இருக்கிறது”
“ஹ்ம்ம்.. என்னையும் அறியாமல் எக்ஸ்செப்ஷன் லிஸ்ட்டில் வந்துட்டேன்.. இனி கவனமா இருந்துக்கிறேன்”
“புரியலை”
ப்ரனிஷா புன்னகைக்கவும் அன்பரசி, “நீ சில நேரங்களில் புரியாத புதிர் தான்”
“..”
“இதற்கும் சிரிப்பு தானா! சரி அபி பத்தி சொல்லு” என்றதும் ப்ரனிஷாவின் முகம் இயல்பாக மலர்ந்தது. 
ப்ரனிஷா, “பாலைவனத்தில் பூத்த மலரை போல் கடவுள் எனக்கு கொடுத்த பூ.. அறிவும் சுட்டித்தனமும் நிறைந்த குட்டி தேவதை.. என்னை போல் இல்லாமல் சட்டுன்னு எல்லோரையும் பிரெண்ட் ஆக்கிப்பா.. இன்னைக்கு உன்னை அவளுக்கு அறிமுகம் செய்றேன்” 
“குட்டி தேவதையின் அருள் பார்வை என் மேல் பட காத்திருக்கிறேன்” என்று கூறவும் இருவரும் சிரித்தனர்.
சிரித்தபடி ஆசிரியர் அறையினுள் வந்த இருவரையும் பார்த்து சுகுணாவிற்கு வயிறு எரிந்தது.
.  
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement