கசாட்டா 16:

சூரியனின் ஒளி கொண்டு

பிராகசிக்கும் சந்திரனை போல

உன் காதலால் ஒளி வீசுகிறேன் நான்!

அன்றைய பொழுது கௌதம் மது இருவருக்கும் மிக ரம்மியமானதாக விடிந்தது. அன்று கல்லூரியில் பிரிவு உபச்சார விழா இருப்பதால் மது அதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள்…பர்ல் நிறத்தில் கோல்டன் வொர்க் செய்யப்பட்டுக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த புடவையில் ஒரு ப்லீட்டில் மட்டும் பின் செய்து முதுகு வரை நீண்டிருந்த கூந்தலை விரித்து விட்டுச் சென்டரில் மட்டும் கிளிப் செய்திருந்தாள். அப்படியே தேவதை போல் ஜொலித்தவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

ஒரு வழியாகக் கிளம்பி கீழே ஜோடியாகச் சென்ற இருவரையும் கண்ட ஜானகி சந்தோஷம் அடைய அவர்களுக்குத் திருஷ்டி கழித்தார். திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் இன்று தான் ஜோடியாகக் கீழே வருகின்றனர்.

காலை உணவை முடித்த போது கௌதம் “மது..! இன்னைக்கு நானே உன்னைக் கொண்டு போய்க் காலேஜ்ல ட்ராப் பண்றேன்… “ என்றதும் மதி மயக்கம் போட்டு விழாத குறையாகத் தலையை ஆட்டி வைத்தாள்.

அந்நேரம் அங்கு வந்த கவிதா “ வாவ்… அண்ணி! செமயா இருக்கீங்க போங்க… “ என்றபடி கன்னத்தில் முத்தம் வைக்க மது ஓரக் கண்ணால் கௌதமை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கௌதமும் அதைக் கண்டும் காணாதது போல் இருக்க மது மனதிற்குள் ”நான் எதுக்கு இவனைப் பார்க்குறேன்..? அது புரியாம என்னதோ இவங்கிட்ட லட்ச ரூபாய் கடன் கேட்ட மாதிரி கண்டுக்காம இருக்கான்… மரமண்டை… மரமண்டை… சரியான டியூப்லைட்டா நீ..!” என வசை பாடிக் கொண்டிருந்தாள்.

அது ஒன்றும் இல்லை இன்னும் கௌதம் அவள் எப்படி இருக்கிறாள் என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை அந்தக் கடுப்பு தான் நம் மதுவிற்கு..!

இருவரும் கௌதமின் பல்சரில் கல்லூரிக்குக் கிளம்பக் கௌதம் ஏதாவது சொல்வான் என மது எதிர்பார்த்திருக்க, அவனோ வழி முழுவதும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ரியர்வியூ மிரரில் அவளைப் பார்ப்பதும் அவள் தன்னைப் பார்க்கும் போது திரும்பிக் கொள்வதுமாய் இருந்தான்.

“நீ வெயிட் பண்றது சுத்த வேஸ்ட்… உனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்… இவன் இப்போதைக்கு வாயை திறக்க போறது இல்லை…” என்று மது மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க அதற்குள் கல்லூரியை அடைந்துவிட்டான் கௌதம்.

அவன் வண்டியை நிறுத்தியதும் இறங்கியவள் வர்றேன் என்பதாய் தலையசைத்து விடைபெற்று இரண்டு எட்டு வைத்தவளை “மது…!” என்றழைத்தான் கௌதம்.

அவன் அழைத்ததும் திரும்பியவள் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்திக் காட்ட “ஏஞ்சல் மாதிரி இருக்க…!” என்று கூறி கண்ணடித்தவன் அடுத்த நிமிடம் தன் பல்சரில் பறந்திருந்தான்.

கௌதமின் செய்கையில் முகம் சிவந்தவள் புன்னகைத்தவாறே கல்லூரியை நோக்கி நடந்தாள்.

நாட்கள் அதன் போக்கில் ஓட, ஒரு மாதம் கழித்து அனைவரும் குற்றாலம் நோக்கி புறப்பட்டனர்… இன்னும் சிறிது நாட்கள் கழித்துக் கௌதம்-மதியின் முதல் திருமண நாள் வருவதால் அதைக் கொண்டாட வேண்டி இளையவர்கள் திட்டமிட அதன்படி குற்றாலம் செல்வது என முடிவு செய்யப்பட்டு  அனைவரும் கிளம்பினர்…

இடைப்பட்ட காலத்தில் கௌதம் மது ஒருவரை ஒருவர் பார்வையால் வருடிக் கொண்டிருந்தாலும் இன்னும் இருவரும் தங்கள் மனதிலிருப்பதைச் சொல்லிக் கொள்ளவில்லை.

கௌதம் மதுவின் திருமண நாளும் வந்தது… இருவரும் குளித்துப் புத்தாடை அணிந்து வேதா-கிருஷ்ணாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின் மற்ற பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்க அதன் பின் கோவிலுக்குச் சென்று வந்தனர்.

பிரசன்னா கவிதா சந்தோஷ், சந்தியா அனைவரும் அவர்கள் கோவிலுக்குச் சென்ற கேப்பில் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தனர். கௌதம் மது வந்ததும் கேக் கட் செய்து கேலி கிண்டல்களோடு அன்றைய பொழுது முடிய இரவும் வந்தது… தங்கள் அறையில் ஒருவொருக்கொருவர் முதுகாட்டி படுத்திருந்த இருவரும் தூங்காமல் ஒரு வித யோசனையில் இருந்தனர்.

மது “ஹேய்..! அவன் சொல்லட்டும்னு நீ வெயிட் பண்ண… மவளே அறுபதாம் கல்யாணம் வந்தாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை… சோ நீயே களத்துல இறங்கிட வேண்டியது தான்… “ என நினைத்தாள்.

கௌதமும் அதே மனநிலையில் தான் இருந்தான் இன்னைக்கு அவகிட்ட சொல்லிட வேண்டியது தான் என முடிவெடுக்க இருவரும் ஒரே சமயத்தில் திரும்பி “உன்கிட்ட சொஞ்சம் பேசணும்..” என்று ஒரே மாதிரியாகக் கூற, சிரித்துக் கொண்ட இருவரும் பால்கனியை நோக்கி சென்றனர்.

சிறிது நேரம் மௌனத்தில் கரைய கௌதம் “மது… ஐ லவ் யூ..! “ எனப் பட்டென்று போட்டு உடைக்க,

மதுவோ “அடப்பாவி..! இவ்வளோ நாள் கழித்துச் சொல்றானே அதை ஈடுகட்டுகிற மாதிரி கொஞ்சம் பொயட்டிகா சொல்ல கூடாது…” என நினைக்க

மனசாட்சியோ “அதுக்கு இன்னும் இரண்டு வருஷம் ஆகும் பரவாயில்லையா உனக்கு..?” கேலி செய்ய

“என்னது..? இன்னும் இரண்டு வருஷமா… இது வேலைக்கு ஆகாது..” என எண்ணியவள்,

‘ஐ லவ் யூ டூ கௌதம்…!“என்றாள்.

“ஒரு நிமிஷம்” என்றவன் உள்ளே செல்ல மது அங்கிருந்து வானத்தில் தெரிந்த பௌர்ணமியை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளின் பின்னால் கௌதம் அணைத்தாற் போல் வந்து நிற்க,

அதை அறியாத மதி “ஐ லவ் யூ னு இந்த மூணு வார்த்தையைச் சொல்ல உனக்கு இவ்ளோ நாள் ஆகியிருக்கு…. சரியான மாங்காடா நீ…” என முணுமுணுக்க அது கௌதம் காதில் விழுந்து வைத்தது.

அதைக் கேட்டதும் அவள் கன்னம் நோக்கி குனிந்தவன் தன் பற்களால் அவளின் கன்னத்தைப் பதம் பார்க்க அவனது தீடீர் செய்கையில் அதிர்ந்த மது வலித்த கன்னத்தைத் தடவியபடி திரும்பி “ஏன்டா இப்படிப் பண்ண? எனக் கேட்க

“மறுபடியும் டாவா…?” என்றவன் பொய்யாய் அவளை முறைக்க,

“அப்படித் தான்டா சொல்லுவேன்…! “ என மதுவும் வம்பிழுக்க,

“அப்போ நானும் சொல்லுவேன்… போடி முட்டைகோஸ்…!”

“முட்டைக்கோஸ்னு சொல்லாதிங்க….”

“ஆமா முட்டைகோஸ்னு சொல்லகூடாது… போடி பூசணிக்கா…” எனச் சொல்ல

“நான் பார்க்க பூசணி மாதிரியா இருக்கேன்….” என புசு புசுவென மூச்சு விட,

“பூசணி மாதிரி இல்லை… குண்டு பூசணி மாதிரி இருக்க…” எனச் சொல்லிவிட்டு ஓடினான்.

மது அவனை அடிக்கத் துரத்த சிறிது நேரம் அவள் கைகளில் சிக்காமல் போக்கு காட்டியவன் மெத்தையில் அமர அவளும் அவனருகில் வந்து அமர்ந்தாள். பிறகு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து அவளுக்கு அணிவித்தவன் அவள் கைகளில் தன் இதழ் பதித்தான். அவன் மீசை தன்னில் ஏற்படுத்திய குறுகுறுப்பைத் தாளாமல் அவன் மார்பினில் முகம் புதைத்தவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து விடுவித்தவன் பின் அவள் இதழோடு தன் இதழ் பொருத்தினான்.

இனி இரவே இல்லை கண்டேன்

உன் விழிகளில் கிழக்குத் திசை

இனி பிரிவே இல்லை அன்பே, உன்

உளறலும் எனக்கு இசை

இனி மேல் நமது இதழ்கள்

இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின்

களங்கம் துடைக்கக் கைகள் கோர்க்குமே

அங்கு இல்லறம் எனும் இனிய அத்தியாயம் புரிதலுடன் கூடிய காதல் என்ற தூரிகையால் அழகுற வண்ணம் தீட்டப்பட்டது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு:

தன் பிஞ்சு கால்களால் தத்தி தத்தி மெத்தை மேல் ஏறிப் படுத்திருந்த கௌதமின் வயிற்றில் அமர்ந்த அவனது மூன்று வயது செல்ல மகள் அஷ்மிகா தன் தந்தையை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

“ம்ச்… என்ன செல்லம் அப்பாவை தூங்கவிடுங்க….” என்று தன் மேல் அமர்ந்திருந்த குழந்தையைத் தன் மார்பில் சாய்த்தபடி தட்டிக் குடுத்தான்.

குழந்தையோ “அப்பா எந்திரு எந்திருபா” என்று அவனை அடிக்க அதில் தூக்கம் கலைந்தவன் “என்ன அம்லு… “ எனக் கேட்க

குழந்தை “ம்மா அச்சிட்டா…” என அம்மா அடித்ததைத் தன் தந்தையிடம் புகார் வாசித்தாள்.

அதைக் கேட்டதும் எழுந்து அமர்ந்தவன் “என்ன செல்லத்தை அடிச்சாளா..? அம்மாவை கூப்பிட்டு அடிக்குறேன் சரியா..” என மகளிடம் சமாதானம் சொல்லி விட்டு,

“மது… மது கொஞ்சம் மேல வா….” எனக் குரல் கொடுத்தான்.

கௌதம் தன்னை அழைத்துதும் மாடியேறியவள் “அப்பாக்கும் பொண்ணுக்கும் இதே பொழப்பு தான்… எப்போ பாரு எதாவது வேலை ஏவிக்கிட்டே இருக்குதுங்க…” எனச் சலித்துக் கொண்டவள்,

அறைக்குள் வந்ததும் கௌதம் “ஏன்டி… என் பொண்ணை அடிச்ச…? எத்தனை தடவ சொல்றது அம்முலு மேல கை நீட்டாதனு..?”

“ஹீம்கும் இருக்குற வேலை பத்தாதுனு அங்க எல்லாத்தையும் இழுத்து போட்டுட்டு இருக்கா… போடினு லைட்டா முதுகுல தட்டுனதுக்கு விசாரணை கமிஷன் வச்சுட்டாளா..? எல்லாம் என் நேரம் இந்தச் சின்ன வாண்டு கூட என்னைப் பத்தி புகார் வாசிக்குற அளவுக்கு இருக்கு என் நிலைமை…. இதுக்குத் தான் சமைச்சுட்டு இருந்தவளை கூப்பிட்டீங்களா..?” என கடுப்படிக்க,

“யாரு நீ சமைச்சுட்டு இருந்த இத நான் நம்பணும் சமைச்சு வச்சத டேஸ்ட் பார்க்குறேன்ற பேர்ல மினி பிரேக் ஃபாஸ்ட் முடிச்சுருப்பியே..?”

“என்னமோ பக்கத்துல இருந்து ஊட்டி விட்ட மாதிரி பேசுறீங்க..? வளர்ற பிள்ளை ஏதோ கொஞ்சமே கொஞ்சம் சாப்பிட்டதுக்கு இவ்ளோ அக்கப் போறா..” என சலித்துக் கொள்ள,

“நீ வளர்ற பிள்ளை அது சரி…. நான் ஊட்டி விடணும்னு ஆசை இருந்தா டேரக்டா சொல்லுடி… எனக்கு நோ ப்ராப்லம்…” என கூறி கண்சிமிட்ட,

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கண்டு பொறுமை இழந்த அவர்களின் புதல்வியோ “ப்பா..! கவ்விடப் போம்…” கவியிடம் போவதாகக் கூறி ஓடி விட்டாள்.

தன் மகள் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மதுவிடம் திரும்பி “ ஏன்டி.. நீ தான் அவளைக் கவ்வினு கூப்பிடுறனா.. அம்முலுவையும் அப்படிக் கூப்பிட பழக்கி வச்சுருக்க…”

“ஆமா என் பொண்ணு என்னை மாதிரி புத்திசாலியா இருக்கணும்ல அதான் இப்போ இருந்தே ட்ரைன் பண்ணிட்டு இருக்கேன்”

“உன்னை மாதிரி இருக்க அவளை ட்ரைன் பண்றேன்னு வேணும்னா சொல்லிக்கோ…ஆனா புத்திசாலினு உன்னை நீயே சொல்லிக்கிறது கொஞ்சம் ஓவர் …“ என்றவனின் குரலில் கேலி இழையோட,

“ஏன்.. ஏன்..?  என்ன பார்த்தா புத்திசாலியா தெரியலையோ?”

“காமெடி பண்ணாதடி..! தொண்டை தண்ணி வத்த சொல்லி குடுத்த எனக்கே டிமிக்கி குடுத்துட்டு வச்சிருந்த 12 அரியர் பேப்பரை ஐந்து வருஷமா ட்ரை பண்ணி போன செமஸ்டர்ல தான் கிளியர் பண்ணிருக்க… அதுவும் பார்டர்ல….”  என சொல்லி அவள் தலையில் குட்ட,

“சரி.. சரி.. விடுங்க பாஸ்… கம்பெனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லிகிட்டு… நாம அப்படியா பழகி இருக்கோம்…. வெட்டி கதை பேசாம சீக்கிரம் ரெடியாகுங்க பங்ஷனுக்கு டைம் ஆகுது”

“உன்னைப் பத்தி பேசுறேன்ல… அப்போ அது வெட்டி கதை தான் ஹா ஹா…”

“ஹீம்கும் பொண்டாட்டியையே நிறைய மார்க் எடுக்க வைக்க முடியலை… இதுல நீங்க எங்க மத்த பிள்ளைங்களை எடுக்க வைக்குறது விளங்கிரும்….”

“அடிங்க” எனத் துரத்துவது போல் சைகை செய்ய மது ஓடிவிட்டாள்.

என்ன பங்ஷனு பார்க்குறீங்களா? இன்னைக்கு நம்ம கவி –பிரசன்னாவிற்கு நிச்சயதார்த்தம்.

இரண்டு வருடங்களுக்கு முன் மது வளைகாப்பின் போது இருவரது பார்வையும் ஒருவரை ஒருவர் தொடர்வதைக் கண்ட கௌதம் பிரசன்னாவிடம் பேச, அதன் பின் அவன் வேலையில் செட்டில் ஆனதும் தான் வீட்டில் அவர்களின் திருமணம் குறித்துப் பேசுவதாக வாக்குக் குடுத்தான் கௌதம்.

பேஷன் டிசைனிங் படித்திருந்த பிரசன்னா சொந்தமாக டிசைனர் ஷோரூம் நிறுவி நிர்வகித்து வர இந்த மூன்று ஆண்டுகளில் அது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது… கவியும் தன் படிப்பு முடியும் தருவாயில் இருக்கக் கௌதமின் முயற்சியால் இவர்களது திருமணம் அடுத்த மாதம் நிச்சயிக்கப்பட இன்று அவர்களுக்கு நிச்சயம் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கௌதம் தயாராகிக் கீழே வரவும் அவனது மொபைல் ஒலிக்கவும் சரியாய் இருந்தது. ராகுல் தான் அழைத்திருந்தான். இருவரில் யார் அழைத்தாலும் மதுவும்-ஸ்வேதாவும் தான் முதலில் பேசுவார்கள் எனவே அவன் மொபலை மதுவிடம் தர அவளும் ஸ்வேதாவும் பரஸ்பரம் விசாரித்து விட்டுக் கௌதமிடம் மொபைலை தந்துவிட்டு சென்றாள் மது.

“என்ன மச்சான்… ஹனிமூன் ட்ரிப் செமயா என்ஜாய் பண்ற போல…” என கௌதம் ராகுலை கேலி செய்ய,

“வாடா நல்லவனே ஏன் சொல்ல மாட்ட? அடுத்த வருஷம் அஷ்மிகா ஸ்கூலுக்கே போயிருவா…. நான் இப்போ தான் ஹனிமூனுக்கே வந்திருக்கேன் நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ…?”

“ஹா ஹா ஹா… “கௌதம் சிரிக்க

“நல்லா சிரி… பிஜி பண்றேன் பி.ஹெச்.டி பண்றேனு ஐந்து வருஷம் இழுத்தடிச்சுட்டு உன் தங்கச்சி என் மேல கருணை காட்டி போன மாசம் தான் கல்யாணமே முடிஞ்சுது…. இதுக்குத் தான்டா படிப்பாளிகளை லவ் பண்ணக் கூடாதுங்குறது…. நானும் என் தங்கச்சியும் தான் பாவம் உங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்குறோம்” என புலம்ப,

“டேய்..! போதும் ரொம்ப ஓவரா பேசாத… உங்க அண்ணன் – தங்கச்சி பாசத்தை இங்க வந்ததுக்கு அப்புறம் புழிஞ்சிக்கலாம்…. “

“என் கஷ்டம் எனக்கு..?! சரிடா… கவி – பிரசன்னா கிட்ட வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிரு… பை டா…”

கௌதம் “ என்ஜாய் தி ட்ரிப்டா..!”  என்றுவிட்டு போனை வைத்தான்.

எல்லோரும் வந்ததும் நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க பிரசன்னா கவிதாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கச் சிறிது நேரம் கழித்துக் கவி அழைத்து வரப்பட்டாள்.

கிருஷ்ணா ஆச்சி பிரசன்னாவின் கைகளில் குங்குமத்தை தந்து கவியின் நெற்றியில் வைக்கச் சொல்ல அதுவரை குனிந்து தலை நிமிராமல் இருந்த கவி தலை உயர்த்திப் பிரசன்னாவை பார்க்க அவனோ “ நீயா??” என்றான்.

அவர்களுக்குப் பின் நின்றிருந்த கௌதம் – மது இருவரும் “மறுபடியும் முதல்ல இருந்தா..?” என ஒரே மாதிரி கோரசாகக் கேட்க ,

அதிர்ந்த பிரசன்னா “அய்யோ..! அத்தான் அந்த நீயா நீங்க உங்க நிச்சயத்தப்போ சொன்னது மாதிரி இல்லை…  நீயா தேவதை மாதிரி இருக்கனு சொல்ற இந்த நீயா…“ என அசடு வழிய

“அதான பார்த்தேன் உங்க அக்கா ஒரு தத்தி நான் சொல்லும் போது அமைதியா இருந்தா… ஆனா என் தங்கச்சி அப்படி இல்லை பத்ரகாளி ஆட்டம் ஆடிருப்பா மவனே தேவதைனு சொன்னதுனால தப்பிச்ச நீ” எனச் சொல்லி புன்னகைத்து விட்டு திரும்ப அங்கு ராகவன் கௌதமை முறைத்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த கௌதம் மதுவிடம் “ஏன்டி..! உங்கப்பா என்ன இந்த முறை முறைக்குறாரு…. முறைப் பொண்ண கூட யாரும் இந்த அளவு முறைச்சிருக்க மாட்டாங்க.. இன்னும் அவர் என்னை சைட் அடிக்குறதை விட மாட்டார் போலயே…”

“நிச்சயம் முடிஞ்ச பிறகும் அவர் பொண்ண வேண்டாம்னு சொன்னா முறைக்காம தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா…?”

“வேண்டாம்னு சொன்னதும் விட்டுட்ட மாதிரி சொல்ற? அதான் உன்னை என் தலையில கட்டிட்டாங்களே… இப்போ எதுக்கு இவரு நானும் ரவுடி தன் நானும் ரவுடி தான்ற ரேஞ்சுக்கு முறைச்சுட்டு இருக்காரு….”

“ஓ அப்படி ஒண்ணும் யாரும் என்னைக் கஷ்டபட்டு சகிச்சுக்க வேண்டாம்…. அம்மா கல்யாண வேலையில ஹெல் பண்ண ஆளு வேணும்னு சொன்னாங்க… சோ நானும் அஷ்மியும் போறோம்… நீங்க ஜாலியா இருங்க”

“ஹேய் என் அம்லுவ விட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டேனு தெரிஞ்சு பிளாக் மெயில் பண்றீயா?”

“அய்யா சாமி..! அப்பாவையும் பொண்ணையையும் பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம்… அம்லு உங்ககிட்ட இருக்கட்டும் நான் என் அப்பா கூடப் போறேன்…”

“அம்லுவையே விட்டுட்டு இருக்க முடியாது… இதுல அம்லுவை எனக்குத் தந்த என் டார்லிங்க மட்டும் விட்டு எப்படி இருப்பேன்… “என அவள் காதோரம் கிசு கிசுப்பாக சொல்ல, அதைக் கேட்ட மது கன்னம் சிவந்து முகம் முழுவதும் புன்னகை படர கௌதமை பார்த்தாள்.

அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் “ சும்மா சொல்லி பார்த்தேன்…. இது தான் சாக்குனு போகாம இருந்துறாத….” என்று கூறி கண்ணடிக்க

“உங்களை…!” என மது அவனை அடிக்கத் துரத்த இதைக் கண்ட அனைவரும் புன்னகைக்க, ராகவனும் புன்னகைத்துக் கொண்டார் பிறர் அறியாதவாறு…

வேதாவின் கண்களில் நீர் திரையிட “மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு கிருஷ்ணா…!” என்று கூற வழிந்த கண்ணீரை தன் கைகளால் துடைத்த கிருஷ்ணா “எனக்கும் தாங்க…!” என்றவாறே ஆதரவாய் தன் கணவரின் தோள் சாய்ந்தார்.

ஒரு வழியாக நிச்சயம் முடிந்து குடும்பப் புகைப்படம் எடுப்பதற்காக அனைவரும் ஒன்று கூடினர்.

ஒரு சிக்ஸ் ப்ள்ஸ் டூ சீட்டர் கொண்ட பெரிய ஷோபாவில் நடு நாயகமாக வேதா தாத்தா – கிருஷ்ணா ஆச்சி அமர அவர்களின் மாடியில் கௌதம் –மதுவின் அம்லு @ அஷ்மிதா அமர்ந்திருந்தாள்.

வேதா தாத்தாவின் பக்கத்தில் வரிசையாகச் சிதம்பரம், வெற்றி, ராகவன் அமர கிருஷ்ணாவின் அருகில் ஜானகி, மீனாட்சி, தாமரை இருக்கத் தாமரையின் அருகில் மது நின்றிருக்க, ராகவனின் பக்கம் கௌதம் நின்றிருந்தான். அவர்களுக்குப் பின் சந்தோஷ், பிரசன்னா, கவிதா, சந்தியா நின்றிருந்தனர்.

மது தாமரையின் தோளில் கை போட்டவாறு ஷோபாவின் கைப்பிடியில் அமர , கௌதமும் ராகவனின் தோளில் கையைப் போட பார்க்க ராகவன் முறைத்த முறைப்பில் கையைக் கீழிறக்கி கொண்டான்.

சிறிது நேரத்திற்கு முன் ராகவன் சிரிப்பதை கண்டு கொண்டிருந்தவன் இப்போது அவர் முறைக்கவும் “யோவ் மாமனாரே..! நீரு எப்போ அம்பியா இருக்குறீரு.. எப்போ அந்நியனா மாறுறீருனே தெரிய மாட்டீங்குது..?” என முணு முணுக்க, “ஹீம்கும்…!” என்ற ராகவனின் செறுமலே அவர் அதைக் கேட்டுவிட்டார் என்பதைத் தெரிவிக்கக் கௌதம் அமைதியாக ஷோபாவின் கைப்பிடியில் அமர்ந்து கொண்டான்.

புகைப்படக்காரர் “ஸ்மைல் ப்ளீஸ்..! ஒன்… டூ… த்ரி… “ எனச் சொல்ல ராகவன் தானே கௌதமின் கைகளைத் தன் தோளை சுற்றி போட்டுக் கொண்டு கௌதமை பார்த்து புன்னகைத்தார்

இதைக் கண்ட அனைவரும் “ஓ ஹோ “ எனச் சந்தோஷ கூச்சலிட அந்த அழகிய தருணத்தைக் கேமிரா பொக்கிஷமாகத் தனக்குள் படமாக்கி கொண்டது.

இனி இவர்களின் வாழ்நாள் முழுதும் இதே போல் காதலெனும் கசாட்டா உருகி குளுமையோடு இனிமையும் சேர்க்கட்டும் என எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்தி விடைபெறுவோம்.

சுபம்!