கசாட்டா 12:

அணுவைக் கூடப் பிளக்கும்

சக்தி கொண்ட என் மனதுக்கு

ஏனோ உன் கடுகளவு விலகலை

தாங்க முடிவதில்லை!

அதிகாலையில் அடித்த கடிகாரத்தின் அலார்ம் ஒலியில் கண்விழித்த கௌதமின் மனம் ஏனோ லேசாக இருப்பது போல் தோன்ற ஒரு வித உற்சாகத்துடன் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான்…நேரம் ஏழு மணியைக் கடந்து கொண்டிருக்க மது எழுவதாகத் தெரியவில்லை.

“எப்படித் தூங்குறா பாரு இன்னைக்குக் காலேஜ் ரீ ஓபன்… சீக்கிரம் கிளம்பி போவோம்னு இல்லாம கும்பகர்ணனுக்குக் கசின் சிஸ்டர் மாதிரி குறட்டை விட்டு தூங்குது இவளெல்லாம்…” என நினைத்து விட்டு டேபிளில் தான் குடிப்பதற்காகக் கொண்டு வந்திருந்த சூடான காபி டம்ளரில் அவளது விரலை விடச் சூடு தாங்காமல் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் மது.

தூக்கம் கலைந்து எரிச்சலில் மது கௌதமை முறைத்து வைக்க

“என்ன முறைப்பு..! சீக்கிரம் எழுந்திருச்சுக் காலேஜ் கிளம்புற வழியைப் பாரு….காலேஜ் பஸ் 8.30 க்கு வந்திடும்…”

“காலேஜ் பஸ்-ஆ எதுக்கு..? “எனக் கேட்க

“ஓ காலேஜ்க்கு மகாராணியைப் பல்லக்குல தூக்கிட்டு போகணுமா..?”

“அது.. கவி உங்ககூடப் போலாம்னு சொன்னா..?” என இழுக்க

“அப்படி ஒரு ஆசை வேற இருக்கா..? நான் பைக்ல தான் போவேன் உன்னைலாம் கூட்டிட்டு போக முடியாது…. பேசாம காலேஜ் பஸ்ல போ..!”

“சரியான திமிரு பிடிச்சவன்..! போற வழியில இறக்கி விட்டா என்ன கேடு இவனுக்கு…” என முணு முணுக்க

“ஹலோ..! முறைக்குறது… முணு முணுக்குறது… இந்தப் பிஸினஸ்லாம் எங்கிட்ட வேணாம் …காட் இட்..!”

“ஆமா..! பெரிய ஹாவாலா பிஸினஸ் பண்றேன்… அதுல இவர் சேரமாட்டாரு…” இம்முறை மனதுக்குள் நினைக்க ,

“நீ பண்ணுனாலும் பண்ணுவ..! “எனப் போகிற போக்கில் சொல்லி விட்டு தன் வேலையைத் தொடர,

“ச்ச இவங்கிட்ட பல்ப் வாங்குறதே என் வேலையா போச்சு…” எனத் தானும் கல்லூரி செல்ல தயாரானாள்…ஒரு வழியாகக் கிளம்பி கீழே வர காலை உணவு தயாராய் இருந்தது.

“அண்ணி..! ஆ ல் தி பெஸ்ட் “  கவி மதுவிடம் வாழ்த்து தெரிவிக்க,

“என்ன கவி..? இன்னைக்குத் தான் புதுசா காலேஜ் போற மாதிரி ஆல் தி பெஸ்ட் சொல்ற…”

“ஆமா..! ஏன் ஒரு ஆல் தி பெஸ்ட் வீணாக்குற… என்ன சொல்லி அனுப்புனாலும் அவ படிக்கப் போறது இல்லை… “என கௌதம் மதுவிற்கு கேட்கும் குரலில் முணு முணுக்க

அதைக் கேட்டு விட்ட மது அவன் தொடையில் நறுக்கென்று கிள்ள கௌதம் வலி தாங்காது  “அம்மா..! “எனக் கத்தினான்.

பரிமாறிக் கொண்டிருந்த ஜானகியோ மகனின் கத்தலில் பதறியபடி “என்னாச்சுடா..?” என கேட்க,

“ஒன்னும் இல்லமா..! ரெண்டு இட்லி வைங்க… அத சொல்ல தான் கூப்பிட்டேன்…”

“ரெண்டு இட்லிக்கா இந்தக் கத்து கத்துன…. நல்ல ஆளுடா நீ” என சலித்துக் கொண்டவர் அவன் கேட்டதை தட்டில் வைத்ததும்,

“ஹி ஹி..! “என அசடு வழிந்து விட்டு, தன்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த மதுவின் இடுப்பில் கிள்ள இம்முறை கத்துவது மதுவின் முறை ஆயிற்று.

“உனக்கு என்ன ஆச்சு மதிம்மா..?” என ஜானகி கேட்க,

அவன் இடுப்பில் கிள்ளுவான் எனச் சற்றும் எதிர்பார்க்காத மது ஏற்பட்ட பதட்டத்தில் ஜானகி கேட்டதற்கு “ஹாங்..! எனக்குக் கொஞ்சம் சட்னி வேணும் அத்தை..” என உளறி வைக்க,

அவளது பதிலில் கௌதமிற்கும் சிரிப்பு வர

ஜானகியோ “சட்னியா..??? ரெண்டு பேரும் சரியான ஜாடிக்கேத்த மூடி தான் போங்க…” என்று சிரித்துக் கொண்டார்.

அவளிடம் கோபப்படும் தான் அவளை உரிமையாகத் தொட்டு கிள்ளியதை அவனும் உணரவில்லை. அவன் கிள்ளிய போது தனக்கு ஏன் கோபம் வரவில்லை என அவளும் உணரவில்லை…. இவ்வாறு சில பல கலாட்டாக்களுடன் கிளம்பிய போது மணி 8.30 ஐ கடந்திருந்தது.

பஸ் போயிருக்குமே என்ன பண்றது என யோசனையில் இருந்த மதியை பார்த்த கௌதம் “இன்னைக்கு ஒரு நாள் உன்னை நான் ட்ராப் பண்றேன்….நாளையில இருந்து கரெக்ட் டைம்க்கு கிளம்பி பஸ்ல போய்டு…!” என்றான்.

“ட்ராப் பண்றேன் ஒரு வார்த்தை சொல்றதுக்கு இவ்ளோ பேச்சா கடவுளே…”என நொந்த படி அவனுடன் கல்லூரிக்கு பயணமானாள்.

மதுவை கல்லூரியில் இறக்கி விட்டவன் அதே சாலையின் கடைக் கோடியில் இருக்கும் தான் வேலை பார்க்கும் கல்லூரியான ஜி.என் கல்லூரிக்குள் தன் பல்சரில் நுழைந்தான் கௌதம்.

நண்பர்களின் உற்சாகக் குரலிலும் கலாட்டா பேச்சுகளிலும் கலைக் கட்ட தொடங்கியிருந்தது… மது தன் நான்காம் வருட வகுப்புக்குள் நுழைய அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஸ்வேதா அவளை ஆவலாக வரவேற்க அங்கு வேறு இரு கண்களோ மதுவை தன் பார்வையால் வருடிக் கொண்டிருந்தது… ஸ்வேதாவின் பார்வையில் நட்பின் உரிமையுடன் கூடிய அன்பு வெளிப்பட, வேறு இரு கண்களிலோ காதல் அப்பட்டமாக வழிந்தோடியது.

“மது வாடி… ஏன்டி லேட்..? நீ காலேஜ் பஸ்ல வருவேனு பார்த்துட்டே இருந்தேன்… உன்னைக் காணோம் எங்க இன்னைக்கு வரமா போயிருவியோனு நினைச்சுட்டே இருந்தேன்… நல்லவேளை வந்துட்ட”

“நல்லா நினைச்ச போ..! நினைப்பு தான் பொழைப்ப கெடுக்குமாம்… வீட்டுல ஒரு வாத்தியை புருஷனா வச்சுக்குட்டு காலேஜ்க்கு மட்டம் போட முடியுமா..? இதுல குடும்பமே ஆல் த பெஸ்ட் சொல்லி வழி அனுப்புறாங்க… இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்ல..?”எனக் குறைபட

ஸ்வேதா சிரிக்கத் தொடங்கினாள். மது “ஹே..! இப்போ எதுக்குப் பேய் மாதிரி சிரிக்குற..?” எனக் கேட்க

ஸ்வேதா சிரிப்பதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அதில் கடுப்பான மது “இப்போ நிறுத்த போறியா இல்லையாடி..? எதுக்குச் சிரிக்குறனாது சொல்லி தொலைஞ்சுட்டு சிரியேன்..? காலையிலயே கடுப்பேத்திக்குட்டு இருக்கா..!”

“இல்லடி ..அது வந்து… ஹா ஹா… நீ ஒரு தடவை சொன்னல ஓவர் படிப்ஸ கல்யாணம் பண்ணா “நைஞ நைஞ” திரியணும்னு சொன்னியே… அதே மாதிரி உன்னைக் கற்பனை பண்ணேன்… சிப்பு வந்துச்சு மச்சி சிப்பு…”

“உன்னைலாம்…! என்னைப் பார்த்தா உனக்குச் சிரிப்பா இருக்கு… எல்லாம் என் நேரம்டி… “எனச் சலித்துக் கொள்ள

“ஹே..! கூல் மச்சி… ஒரு குவார்ட்டர் சொல்லவா..? இல்லை புண்பட்ட மனச பீர் விட்டு ஆற்றுவோமா?”

“மச்சி ஃபுல்லே சொல்லு…“ எனச் சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர். வழக்கம் போல் மதுவின் குறும்புகளோடு அந்த வாரம் கழிந்தது…அன்று ஞாயிற்றுக் கிழமை வழக்கத்திற்கு மாறாக மது முதலில் கண்விழித்தாள்… ஏனோ எழுந்துதுமே பசி வயிற்றைக் கிள்ள ரெப்ரெஷ் பண்ணிவிட்டு கீழே சென்றாள்.

கீழே யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்கத் தன் அத்தையைத் தேடி கிச்சனில் நுழைந்தாள்… அங்கும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

மது “ச்ச என்ன யாரையும் காணோம் பசி வேற எடுக்குது” எனப் புலம்பியபடி இருக்க அந்நேரம் வீட்டில் உள்ள தொலைபேசி தான் இருப்பதை அறிவிக்க அதை எடுத்துக் காதில் வைத்தாள்.

ஜானகி “மதிம்மா இப்போ தான் எழுந்தியா?”

“ஆமா அத்தை நீங்க எங்க இருக்கீங்க”

“நானும் கவியும் காஞ்சிபுரம் கோவில் வரை போறோம்டா… ஈவினிங் வந்திருவோம் சரியா..?”

அதற்குள் போனை வாங்கிய கவி “அண்ணி..! இன்னைக்கு அண்ணன் கூட வெளிய எங்கேயாவது போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க….”

“ஹேய்..! போனை குடுடி “ என மகளிடம் இருந்து வாங்க முற்பட,

“அண்ணி..! அம்மா ஏதோ சொல்லணுமாம்.. இருங்க அம்மாட்ட குடுக்குறேன்”

“மதி..! ப்ளாஸ்க்குல காபி வச்சுருக்கேன்… எடுத்துக்குடிடா அப்புறம் சாம்பார் சட்னியெல்லாம் ரெடி பண்ணிட்டேன் நீ இட்லி இல்ல தோசையோ மட்டும் ஊத்திக்கோடா… என்ன மதியத்துக்குச் செய்யலாம்னு நினைச்சேன்… இந்தக் கவி வேணாம் அவங்க வெளிய போய்ட்டு அங்கேயே சாப்பிட்டு என்ஜாய் பண்ணட்டும்னு சொல்லிட்டா…. நாங்க ஈவினிங் வந்துருவோம்..! கௌதம்கிட்ட சொல்லிடு சரியா..? வைக்குறேன்…”

“ம்ம் சரி அத்தை” எனப் போனை வைத்தாள்.

“அம்மா..! அண்ணன் அண்ணிகிட்ட சொல்லிட்டே வந்திருக்கலாம்… நாம கூப்பிடலைனு அண்ணி வருத்தப்படப் போறாங்க “

“சொல்ல கூடாதுனு ஒண்ணும் இல்லை… சொன்னா நானும் வரேன்னு சொல்லுவா அதுமட்டும் இல்லை உங்க அண்ணன் எதுக்கு நீங்க ரெண்டு பேரும் தனியா போறீங்க நானும் வரேன்னு சொல்லுவான்… கல்யாணம் ஆனதுல இருந்து அவங்க ரெண்டு பேரும் வெளிய எங்கேயும் போகலை… வீடு வீடு விட்டா காலேஜ்னு இருக்காங்க…. உங்க அப்பா பிஸினஸ் விஷயமா வெளியூர் போயாச்சு சரி இந்த நேரத்தை யூஸ் பண்ணிக்கலாம்னு தான் இப்படி ஒரு பிளான் போட்டேன்”

“அம்மா நீங்க கிரேட் மா..! சூப்பர் பிளான்.. “எனச் சிரிக்க ஜானகியும் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டார்…. பிறகு அப்படியே கௌதமிற்கும் போன் செய்து விபரத்தை சொல்லி விட்டார்.

இங்கே மது “அய்யோ..!சமைக்கணுமா..?” என அலற

அவள் மனசாட்சியோ “அடிப்பாவி சாதாரண ஒரு இட்லி தோசையை இரண்டு பேருக்கு பண்றதுக்கு ஏதோ பத்து பேருக்கு விருந்து வைக்கச் சொன்ன மாதிரி இந்தப் பதறு பதறுற…“கேலி செய்ய

”ஹீம்கும்” எனச் சிலிப்பிக் கொண்டவாறே குடிப்பதற்காகக் காபியை ஊற்றிக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.

அதற்குள் கௌதம் எழுந்து விட்டிருக்க அவள் அருகே வந்தவன் கையில் இருந்த காபி கப்பை வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ்..! சீக்கிரம் போய் டிபன் ரெடி பண்ணு…” எனக் கூற

“பிச்சை எடுத்துதான் பெருமாளு.. அத பிடிங்கி தின்னுச்சாம் அனுமாருங்கிறது மாதிரி பசிக்குக் கொஞ்சம் காபியை குடிக்கலாம்னு பார்த்தா அதையும் பிடிங்கிட்டானே..?!” எனப் புலம்பியபடி கிச்சனுக்குள் நுழைந்து காபியை ஊற்ற

“மது..! டிபன் ரெடியா..? சீக்கிரம்.. பசிக்குது… ரூம்க்கே கொண்டு வந்திடு…” எனச் சத்தம் குடுத்தான்.

”டேய்..! ஏன்டா இப்படிப் படுத்துற..?” எனப் புலம்பியவள் ஒருவாறு தனக்குத் தெரிந்தார் போல் இட்லியை அவித்து அதை எடுத்துக் கொண்டு மாடியேறினாள்.

“இது பேரு உங்க ஊர்ல இட்லியா..? பாறங்கல் மாதிரி இருக்கு..!” எனத் தடிமனாக இருந்த இட்லியை பற்றிச் சொல்ல, அடுத்த இட்லியோ மிகவும் மெலிதாகப் பறந்து விடுவது போல் இருந்தது.

சாம்பார் வேண்டாம் சட்னி கொண்டு வா…எண்ணெய் எடுத்துட்டு வா… என ஒவ்வொன்றுக்கும் அவளை அலைக்கழித்தவன் இறுதியில் எனக்கு இட்லி வேண்டாம் தோசை கொண்டு வா..!” என்றான்.

மனதுக்குள் அவனை அர்ச்சித்தவாறே கீழே சென்று தோசை ஊற்றியவள் அதை எடுத்துக் கொண்டு மாடி ஏறுகையில் பசியில் காது அடைக்கக் கண்கள் இருண்டு கொண்டு வர மயங்கி சரிந்தாள்.

பாத்திரங்கள் உருண்ட சத்தத்தில் என்னவென்று பார்க்க வெளியே வந்த கௌதம் மதி மயங்கி கிடந்ததைப் பார்த்ததும் அவளை நோக்கி ஓடினான்… மதுவை தன் மாடியில் ஏந்திக் கொண்டு “மது..! என்னாச்சுடி எழுந்திரு..?“என அவள் கன்னத்தைத் தட்ட அதில் அசைந்த மது ஏதோ முணு முணுத்தாள்.

“மது..!” என அவள் புறம் குனிய “இட்லிக்கும் தோசைக்கும் என்னடா வித்தியாசம்..? ஒரே இடத்துல கும்மலா ஊத்துனா இட்லி… இதே நாலா பக்கமும் பரவ விட்டா தோசை… இதுக்குப் போய் இப்பிடி அலைய விடுறியே…? இதுல இட்லிக்கு எண்ணெய் வேணுமாம் பெரிய ஜோதிகானு நினைப்பு…. இப்பிடி எண்ணெயும் நெய்யுமா சாப்பிட்டு உன் வயிறு இட்லி குண்டா மாதிரி ஆகப் போகுது….” என முனக

அதை கேட்டு புன்னகைத்த கௌதம் “மயக்கம் போட்டும் வாய் அடங்குதானு பாரு..! அப்பிடியே அந்த வாய்ல ரெண்டு போடு போடணும்…” எனச் சொல்ல

“முதல்ல என் வயித்துக்குப் புட்-அ போடுங்கடா…. அப்புறம் வாயில போடலாம்”

“இவ மயக்கமா இருக்காளா..? இல்லை நடிக்குறாளா..?” என நினைத்து மீண்டும் அவள் கன்னத்தைத் தட்ட,

மதுவோ “இட்லிக்கும் தோசைக்கும் என்னடா வித்தியாசம்…?“ நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி போல மீண்டும் முதலில் இருந்து தொடங்க,

“சரி தான்… முத்திப் போச்சு..! “என்றாவாறே அவளைக் கையில் ஏந்திக் கொண்டு மாடியேறினான்.

அவளை மெத்தையில் கிடத்தியவன் கீழே சென்று இரண்டு தோசயை ஊற்றிக் கொண்டு வந்து மதுவை தன் தோளில் சாய்த்தவாறே தோசயை ஊட்டி விட்டான்… அவளைப் படுக்க வைத்தவன் எழ முயற்சிக்க அவன் சட்டையோ மதியின் கைப்பிடியில் இருந்தது…. அதைப் பார்த்தவன் சிறு குழந்தையில் மது இதே போல் செய்தது நியாபகம் வர சிரித்துக் கொண்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்….

பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை

பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை

எதற்கு உன்னைப் பிடித்தென்று தெரியவில் லையே

தெரிந்தது கொள்ள நினைத்த மனது தொலைந்த துண்மையே