அத்தியாயம் 6:

மரண வலி பொறுத்து நம்மை

ஈன்றெடுத்த அன்னையை பின்பற்றி

நானும் பொறுத்துக் கொள்கிறேன்

பிரிவெனும் வலியை என்றாவது

உன் காதல் என் கைகளில் வந்து

சேரும் என்ற நம்பிக்கையில்!

நாட்குறிப்பை மூடியவள் “அய்யோ தனு நம்மளை நோட் பண்ண ஆரம்பிச்சுட்டா இனி ரொம்ப கவனமா இருக்கணும். எதையும் முகத்துல காட்டக் கூடாது” என்று உறுதி எடுத்துவிட்டு இன்று உணவகத்தில் நடந்ததை நினைவிற்கு கொண்டு வந்தாள். உணவகத்தின் வாசலில் திகைப்புடன் நின்றிருந்த தியாவை கண்ட தனுஷா “ஹேய் தியா என்னடி பேய் அடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்க” என்று அவளை உலுக்க அதில் மிரண்டவள்,

“ஹான் என்ன தனு எதும் சொன்னியா” என்று தியா தனுவை பார்த்துக் கேட்க,

“அது சரி என்னாச்சு உனக்கு இப்போலாம் நீ அடிக்கடி ஏதோ யோசனையிலயே இருக்க எதுவா இருந்தாலும் அக்கா கிட்ட சொல்லு தியா. எதும் பிரச்சனையா?”

அவ்வளவு வெளிப்படையாவா தெரியுது என்று மனதிற்குள் முனகியவள் “ச்ச இல்லை தனு அப்படிலாம் ஒண்ணும் இல்லை எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது”

“அப்போ ஏன் இப்படி அடிக்கடி ஃப்ரீஸ் ஆகி நிற்குற”

“ஓ அது அது வந்து ஏற்கனவே ஒரு முறை ப்ரெண்ட்ஸ் கூட இந்த ஹோட்டலுக்கு வந்திருக்கேன். எந்த டிஷ்லாம் நல்லா இருந்திச்சுனு ரீகால் பண்ணிட்டு இருந்தேன் ஹி ஹி”

“நல்லா பண்ணுன ரீகால் நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். சரி வா உள்ளே போகலாம்” என்றபடி இருவரும் உள்ளே சென்றனர்.

நால்வர் அமரும் டேபிளில் இருந்தவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்து கொண்டிருக்க தனக்கு எதிரே இருந்த டேபிளை பார்த்த தியாவின் விழிகளில் அவனது பிம்பம் விழ ஆச்சர்யத்தோடு அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம்,

“ஹேய் தியா ஆர்டர் பண்ணாம எங்க பார்த்துட்டு இருக்க” என்ற அருணின் குரலில் பதற்றமுற்றவள் சட்டென்று குனிந்து மெனு கார்டை பார்த்தவாறே ஓரக் கண்ணால் அவனை ஏறிட அங்கோ வெறும் டேபிள் மட்டுமே இருந்தது. அதில் அதிர்ந்தவள் சுற்றும் முற்றும் அவனை தேட அவன் இருந்தால் அல்லவா தென்பட, நிஜத்தை உணர்ந்தவளாய் தலையில் தட்டிக் கொண்டவள்  அன்று இதே உணவகத்தில் அவனை பார்த்ததை நினைவிற்கு கொண்டு வந்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மறுநாள் சுற்றுலாவிற்கு செல்ல இருப்பதால் அன்று வகுப்புகள் மதிய வேளையோடு முடிந்துவிட தோழிகளுடன் தியா அந்த உணவகத்திற்கு வந்திருந்தாள்.இரண்டு டேபிளை ஒன்றாக இணைத்து போட்டு அனைவரும் ஒருசேர அமர அவர்களின் ஆரவாரத்தால் அந்த இடமே கலை கட்டியது.

“ஹேய் சீக்கிரம் சாப்பிட்டு போகலாம் அப்போ தான் ஷாப்பிங்க் முடிச்சுட்டு நாளைக்கு தேவையானதை பேக் பண்ண டைம் சரியா இருக்கும்” என்று தோழிகளில் ஒருத்தி சொல்ல,

மற்றவர்களும் அதை ஏற்றுக் கொண்டவர்களாய் “ஓகே அப்போ எல்லோரும் அவங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணுங்க”

ஆளுக்கொரு உணவு பதார்தத்தை ஆர்டர் செய்துவிட்டு காத்துக் கொண்டிருந்த வேளையில் இருவர் உள்ளே நுழைந்தனர்.

உணவகத்தின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்த தியா ஏதேச்சையாக திரும்ப உள்ளே வந்து கொண்டிருந்த அவர்கள் அவள் கண்களில் பட்டனர். தூரத்தில் இருந்த இருவரில் ஒருவர் மட்டும் பரிச்சயமானது போல் தோன்ற பார்வையை கூர்மையாக்கி அவர்களை அளவிட தொடங்கினாள்.

அவர்கள் நெருங்கி வந்ததும் அவனை கண்ட தியாவின் முகத்தில் பளீரென வெளிச்சம் பரவ பிரகாசமானாள். அதற்குள் ஆர்டர் செய்த உணவு வந்திருந்தது. அதை சாப்பிடுவதும் அவனை ஓரக்கண்ணால் ரசிப்பதுமாய் இருந்தாள்.

கறுப்பு நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை மடக்கிவிட்டு அதற்கேற்றார் போல் நீல நிற ஜீன்ஸூம் கூலர்ஸூம் அணிந்து அம்ர்ந்திருந்தவனின் அழகை இமைக்காமல் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

அவன் தனக்கும் தன் நண்பனுக்குமாய் நான் என்ற ரொட்டி வகையையும், பன்னீர் பட்டர் மசாலாவையும் ஆர்டர் செய்தான். உணவு வந்ததும் ரொட்டியை சிறிதாக பிட்டு அதை மசாலாவில் பட்டும் படாமல் தோய்த்து வாயில் வைத்த விதத்தை பார்த்ததுமே தியாவிற்க்கு ஆய கலைகள் அறுபத்தி நான்கும் தோற்றது போல் இருந்தது. அவன் வாயில் பட்டு கரைந்து போன உணவை கண்ட போது தானே கரைந்தது போல் தோன்றிய உணர்வில் சிலிர்த்தே போனாள்.

தோழிகள் தங்களுக்குள் பேசி சலசலத்துக் கொண்டிருக்க தியாவோ காரியமே கண்ணாக இவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது ஒவ்வொரு அசைவையும் ஏதோ அதிசயம் போல் நோக்கி கொண்டிருந்தவளின் மனதில் சத்தமில்லாமல் நுழைந்து குடியேறிக் கொண்டிருந்தான் அந்த கள்வன்.

காஃபி மஃக்கை கையில் எடுத்தவன் தன் இரு விரல்களையும் மஃக்கின் கைப்பிடியில் நுழைத்து தன் பெரு விரலை கைப்பிடியின் மேலும் ம்ஃக்கின் விளிம்பிலும் படுமாறு பிடித்து அருந்தியவன் ஒவ்வொரு சிப்பிற்கும் கீழே வைப்பதும் எடுப்பதுமாய் இருந்தான்.

அவ்வாறு செய்யும் போது மெனக்கெடுதல் போல் அல்லாது மிகவும் இயல்பாய் இருந்தது.

அதை கண்டவள் வாவ் என மனதிற்குள் சொல்வதாய் நினைத்து வெளியே கூறிவிட “ஏன்டி நான் வீட்டுல திட்டு வாங்கினதை பற்றி சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடானா வாவ்னு சொல்ற” என்று தோழிகளில் ஒருத்தி தியாவிடம் முறையிட

“ஹேய் நான் அதுக்கு வாவ்னு சொல்லலை.சாப்பாடு நல்லா இருந்துச்சா அதான் வாவ்னு சொன்னேன்”

அதைக் கேட்டதும் கூர்மையாக நோக்கியவள் தியாவையும் அவளது தட்டையும் மாறி மாறி பார்த்து வைக்க அவள் பார்வை சென்ற திசையை கண்ட தியாவின் முகத்தில் டன் கணக்கில் அசடு வழிந்தது.தட்டில் கை வைப்பதாக நினைத்து உப்பு டப்பாவில் கையை விட்டு அதை சாப்பிடுவது போலான ஃபோஸில் இருந்தாள். “ஹி ஹி ஹி கை ஸிலிப் ஆகிட்டுது” என்று சாமாளித்து வைக்க, அதன் பின் அவனும் சென்றுவிட, இவர்களும் அங்கிருந்து கிளம்பினர். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் தன் நாட்குறிப்பை எடுத்தவள்,

உயிரற்ற பொருட்களிடமும் பொறாமை

கொழுந்துவிட்டு எறியும் என

உணர்ந்தேன் உன் இதழ் தீண்டிய

கோப்பையை காணும் போதினில்! என்று எழுதி வைத்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“கயல் இன்னைக்கு மதியம் வீட்டுக்கு வர லேட் ஆகும் நீ எனக்காக காத்துக்கிட்டு சாப்பிடாம இருக்காத சரியா” என்றபடி காலை உணவை உண்டு கொண்டிருந்த சிவசங்கர் நியாபகம் வந்தவராய் “சஜன்ன சாப்பிட கூப்பிடு மணி ஆகுதுல” என்றார்.

நானும் எவ்ளோ நேரமா கூப்பிடுறேன் “வர்றேன் வர்றேனு சொல்றானே தவிர இன்னும் வந்தபாடில்லை”

“நீங்க சாப்பிடுங்க நான் போய் அவன் ரூம்ல பார்த்துட்டு வ்ர்றேன்” என்றபடி சஜனின் அறைக்கு சென்றார்.

“சஜன் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க சாப்பிட கூட வராமல்” என்று கேட்டுக் கொண்டே கதவை திறந்துவருக்கு பெட்டின் மேல் துணிகளை விற்பவர் விரித்து வைப்பதை போல் செட் செட்டாக வைக்கப்பட்டு அதற்கு அருகில் ஸ்லீவ்லெஸ் பனியனுடனும், ட்ராக் பேன்டுடன் அமர்ந்திருந்த சஜன் தெரிந்தான்.

ஆச்சர்யமடைந்தவர் அவனுக்கு அருகில் வந்து அவன் தோளை தட்டியவர் “சஜன் என்னடா இது கோலம் ஏன் இப்படி எல்லா ட்ரெஸ்சையும் வெளிய அள்ளி போட்டுருக்க”

“மாம் நீங்க ஏன் கஷ்டப்பட்டு மேல ஏறி வர்றிங்க. கீழே இருந்தே கூப்பிட்டு இருக்கலாமே”

“அட கடன்காரா எவ்ளோ நேரமாடா கூப்பிடுறது உன்னை. இப்போ என்னடானா ஒண்ணுமே கேட்காதது மாதிரி கூப்பிட்டா என்னனு சொல்ற”

“ஹி ஹி ஹி ஒரு கன்ஃப்யூஷன்ல இருந்தேனா அதான் கேட்கலை போல” என்றவன் “மாம் இதுல எது பெஸ்ட் ஒன் சொல்லுங்க”

என்றும் இல்லா திருநாளாய் ட்ரெஸ் செலெக்ட் செய்ய சொல்லும் மகனை ஒரு யோசனையோடு பார்த்தவர் லைட் பிங்க் நிற சர்ட்டும் இங்க் ப்ளூ  நிற கோட் அதே நிற பேன்ட்டையும் எடுத்து அவன் கைகளில் தர “தேங்க்யூ மாம்“என்றபடி ட்ரெஸ்ஸிங் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

குழப்ப ரேகைகளோடு கீழே வந்தவரை கண்ட சிவசங்கர் “என்ன கயல் பேயடிச்ச மாதிரி முகத்தை வச்சிருக்க என்னாச்சு சஜன் என்ன பண்றான்“ என கேட்க

“அதை ஏன் கேட்குறிங்க என்னாலமோ பண்றான். ஒரே குழப்பமா இருக்கு”

“என்ன சொல்ற கயல் ஒண்ணும் புரியலை தெளிவா சொல்லு”

கயல்விழி தன் கணவரிடம் சஜனின் அறையில் நடந்தவற்றைக் கூற அதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தார் சிவசங்கர்.

பையனோட நடவடிக்கை வித்தியாசமாக இருக்குனு சொல்லிட்டு இருக்கேன் அதை விசாரிக்காமல் இந்த மனுஷன் சிரிக்குராறே என்ற ஆதங்கத்தில் “இப்போ நான் என்ன காமெடி சொல்லிட்டேனு இப்படி சிரிக்குறிங்க” என்று கேட்க

“சிரிக்காம என்ன பண்ண சொல்ற கயல் சஜன் பண்றது எல்லாமே இயல்பு தான் இன்னும் சொல்ல போனா நம்ம பையனுக்கு லேட் பிக்கப்னு தான் சொல்லணும்.”

“என்ன உளர்றிங்க. கடுப்பேத்தாம சொல்ல வர்றதை புரியுற மாதிரி சொல்லுங்க”

“கயல் எல்லா வயசு பசங்களும், பொண்ணுங்களும் நாலுபேர் நம்மளையும் பார்க்கணும்னு தங்களோட ட்ரெஸ்ஸிங்ல கொஞ்சம் கவனமாவே இருப்பாங்க இதுல நம்ம சஜன் மட்டும் விதி விலக்கா என்ன?”

“என்னமோ போங்க நீங்களும் உங்க விளக்கமும்” என்று நொடித்தபடி தன் வேலைகளை கவனிக்கலானார்.

அன்று தன் விடுமுறை முடிந்து கோவை செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த அருணிடம் தாமோதரன் “தம்பி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூற அதை கேட்ட அருண் “சொல்லுங்கப்பா என்ன விஷயம் “என்றான்.

“தனுக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு. அதான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம்னு நினைக்குறேன். நீ என்ன சொல்றப்பா”

“நல்ல விஷயம் தான்ப்பா எதுக்கு நீங்க என்கிட்ட போய் பெர்மிஷன் கேட்டுகிட்டு இருக்கீங்க”

“இதுல என்ன தப்பிருக்கு எனக்கு பிறகு அவங்களுக்கு எல்லாம் நீ தானப்பா “என்றவர்

“என் ப்ரெண்ட் தணிகாசலம் இருக்கான்ல அவன்கிட்ட தனு ஜாதகம் குடுக்கலாம் ரொம்ப நம்பிக்கையானவன். நல்ல வரன் வந்தா சொல்ல சொல்லுவோம் என்ன சரிதானப்பா”

“ம்ம் அப்படியே பண்ணிடலாம்ப்பா. தனுகிட்டயும் ஒரு வார்த்தை கேட்ப்போம்”

“அதுவும் சரிதான் தனும்மா கிட்ட அவ விருப்பத்தையும் கேட்ருவோம்” என்றதும் சம்மதமாய் தலையசைத்தவன் கிளம்பி சென்றான்.

அன்று ரிதம் டெக்கரேஷனில் தனுவிற்கு முதல் நாள் ஆகையால் குறித்த நேரத்திற்க்கு முன்பாகவே கிளம்பி சென்றவள் வெண்பாவுடன் கம்பெனியை அடைந்தாள்.அவர்களுக்கு முன்பே வந்திருந்த சஜன் தன் கேபின் கண்ணாடி வழியே தனு உள்ளே வருவதை கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அவன்து அறைக்குள் வந்த சஜனின் பி.ஏ வினோத் “சார் புதுசா ஜாயின் பண்ணிருக்கவங்களுக்கு கேபின் அலாட் பண்ணனும் டிசைனிங் டிபார்ட்மென்ட் பழக்கத்துல இருக்க ரூம் ஓகே வா சார்” என்று கேட்க

டிசைனிங் ரூம்மா அய்யோ அது காரிடாரின் கடைசியில்ல இருக்கு அங்க இருந்தா நான் எப்படி தனுவை பார்த்துட்டே இருக்க முடியும் என்று நினைத்தவனாய் “வேண்டாம் அங்க இவங்களுக்கு டிஸ்டபன்ஸா இருக்கும். புதுசா ஜாயின் பண்றவங்க எல்லாரும் அக்கௌன்ட் செக்ஷன் ஃபீஸ் புல்லா இருந்தா தான் வொர்க் பண்ண ஈஸியா இருக்கும் சோ என்னோட ரூம்க்கு வெளியே இருக்க ஹால்ல அரேஞ்ச் பண்ணிடுங்க. அதுக்கு முன்னாடி எல்லாரையும் டிஸ்கஷ்ன் ஹால்ல அசெம்பிள் ஆக சொல்லு” என்றான்.

“சரி சார் நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடுறேன்” என்றவன் வெளியே சென்றதும் “உஃப்ப்ப் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு. இதுக்கே நாக்கு தள்ளுது இனி அவகிட்ட என் லவ்வை எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணப் போறேனு தெரியலையே” என்று பெருமூச்சை வெளியிட்டவாறு டிஸ்கஷன் ஹாலை நோக்கி நடந்தான்.

அனைவரும் டிஸ்கஷன் ஹாலில் குழுமியிருக்க புதிதாக சேர்ந்தவர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு கம்பெனியின் வளர்ச்சிக்காக தான் வகுத்து வைத்திருக்கும் திட்டங்களை விளக்கலானான். தனது கருத்துக்களை திறம்பட சொல்லிக் கொண்டிருந்தவனின் கண்களோ தனுவை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டே இருந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இவ்வாறு நாட்கள் ஓடிக் கொண்டிருக்க அன்று கையில் கவருடன் வீட்டிற்கு வந்த இளா “அம்மா அம்மா எங்க இருக்கீங்க சிக்கிரம் வாங்க ஒரு முக்கியமான விஷயம் “என்றபடி ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தான்.

சமையல் செய்து கொண்டிருந்தவர் கைகளை கழுவி விட்டு தன் முந்தானையில் துடைத்தவாறே “என்னாடா இளா அப்படி என்ன அவசரம்”என்று அவன் அருகில் அமர கையில் இருந்த கவரை தாயிடம் நீட்டியபடி “படிச்சு பாருங்க” என்றான்.

அதை பிரித்து படித்தவர் முகம் பெருமையில் மிளிர தன் மகனை அணைத்து அவனது நெற்றியில் இதழ் பதித்து “எனக்கு தெரியும் என் மகன் ஜெயிக்க பிறந்தவன்” என்று கூறியவரின் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க,

“என்னமா சந்தோஷமான விஷயம் தான எதுக்கு கண் கலங்குறிங்க”

“இந்நேரம் உங்கப்பா இருந்திருந்தா உன்னை தலையில தூக்கி வச்சு ஆடிருப்பாரு அதை பார்த்து நானும் சந்தோஷப் பட்டுருப்பேன். அந்த குடுப்பனை உனக்கும் எனக்கும் கிடைக்கலையேனு நினைக்கும் போது மனசு வலிக்குது”

“அம்மா அழாதிங்க அப்பா உருவமா தான் நம்ம கூட இல்லை ஆனா அவரோட உயிர் நம்மளை சுத்தி தான்மா இருக்கு. நீங்க கவலைப்படாதிங்க” என்று அவருக்கு ஆறுதல் கூறியவன் ஆதரவாய் அன்னையின் தோள் சாய்ந்தான்.

தன் தோள்ப்பட்டையில் ஈரத்தை உணர்ந்த விசாலாட்சி பதறிப் போய் தன் மகனின் முகத்தை தன் கைகளில் ஏந்தி வழிந்த கண்ணீரை துடைத்தவர் “என்ன கண்ணா எனக்கு ஆறுதல் சொல்லிட்டு நீ இப்படி வருத்தப்படலாமா?”

பதில் கூறாமல் இருக்கும் மகனை கண்டவர் அவனை திசை திருப்பும் பொருட்டு “என்னைக்குப்பா போகணும் சென்னைக்கு” என்றார்.

“இன்னும் இரண்டு நாள்ல வேலையில் சேரணும்மா. நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கேன்”

“ஒரு மாதம் ஆகும்ணு சொன்ன இப்போ இரண்டு நாள்ல சேரணும்னு சொல்றப்பா”

“அப்படி தான்மா முதல்ல சொன்னாங்க இப்போ பேட்ஜ் வைஸா போட்டுருக்காங்க. ஃப்ர்ஸ்ட் செட்லயே என் பெயர் வந்திடுச்சு”

“சரிப்பா தேவையானதெல்லாம் எடுத்து வைக்குறேன்.நீ போ கொஞ்ச நாள் கழித்து அம்மா உன்னை அங்க வந்து பார்க்குறேன்”

“ம்ம் சரிம்மா அங்க போயிட்டு தங்க போற இடத்தோட அட்ரஸ் சொல்றேன். கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும் வெளிய போயிட்டு வர்றேன்மா” என்றுவிட்டு கிளம்பினான்.

இரவு நாளை கிளம்புவதற்கு தேவையானவற்றை ஒருமுறை சரி பார்த்தவன் தன் தலையணைக்கு அடியில் இருந்த அவளது புகைப்படத்தை எடுத்தவன் “என்னடி பார்க்குற மாமா உன்னை தேடி வரப் போறேன். இனி நீ எப்படி என்னை தவிர்க்குறனு பார்க்குறேன். பீ ரெடி ஃபார் தி லவ் வார் மை டார்லிங். ஐ ம் கம்மிங்” என்றவாறு அவளது புகைப்படத்தில் இதழ் பதித்தவன் அதை தனது பர்ஸில் வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தவன் தன்னவளை எப்படியாவது சமாதனப்படுத்தி விட வேண்டும் என்ற முடிவுடன் கண்களை மூடியவன் அவள் நினைவுகளில் மூழ்கிப் போனான்.

மறுநாள் காலை கிளம்பி கீழே வந்த நேரம் விசாலாட்சியும், அனன்யாவும் இளாவை வழியனுப்பி வைப்பதற்காக தயாராகி அமர்ந்திருந்தனர்.

“என்னம்மா இரண்டு பேரும் கிளம்பி இருக்கீங்க. வெளிய எங்கேயும் போறிங்களா” என்று கேட்க

“டேய் அண்ணா உன்னை வழியனுப்ப தான் ரெடி ஆகி இருக்கோம்”

“அம்மா எதுக்கு வேஸ்ட்டா அலையணும். நான் இதுவரை வெளியூர்க்கு போனதே இல்லையா என்ன?”

“அதுக்கு இல்லப்பா வேலைக்கு சேர்றதுக்குனு ஊருக்கு போற சென்னை வரை வர முடியாது அட்லீஸ்ட் பஸ்டாண்ட் வரையாவது நாங்களும் உன்கூட வர்றோம். அதுல எனக்கு சின்ன திருப்தி”

“சரிம்மா போகலாம் ஒரு நிமிஷம் சாமி கும்பிட்டுட்டு வர்றேன்” என்றாவாறு பூஜை அறைக்கு சென்றவன் அங்கிருந்த தன் தந்தை புகைப்படத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள

அதை கண்டு கண் கலங்கிய விசாலாட்சி அவனுக்கு தெரியா வண்ணம் மறைத்தவர் விபூதியை எடுத்து இளாவின் நெற்றியில் பூச அன்னையின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

“என் கால்ல விழணும்னு அவசியம் இல்லை என் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு” என அனன்யா கூற,

“அடிங்க அந்த ஆசை வேறயா உனக்கு இவ கால்ல விழணுமாம்ல சின்ன புள்ளத்தனமால இருக்கு”

“என்னோட மதிப்பு உங்க யாருக்கும் தெரியலை என்ன பண்றது விதி சதி செய்யுது”

“போதும்டி கிளம்புற நேரத்துல அவனை வம்பிழுத்துட்டு இருக்க. நேரம் ஆகிட்டே இருக்கு நாம கிளம்பலாம்” என்று விசாலாட்சி கூறமூவரும் ஆட்டோவில் கிளம்பி கோவை பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

இளா சென்னை செல்லும் பேருந்தில் ஏறி தனக்குண்டான இடத்தில் தன் உடைமைகளை வைத்து விட்டு கீழே வந்து தன் அன்னை தங்கையுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.

“அம்மா நீங்க வேணும்னா கிளம்புங்க பஸ் எடுக்க லேட் ஆகும் போல தெரியுது. எதுக்கு அவ்ளோ நேரம் காத்துக்கிட்டு இருக்கணும்”

“இருக்கட்டும்பா பஸ் கிளம்புனதுமே நாங்க போறோம். கொஞ்ச நேரம் காத்துகிட்டு இருக்கதுல என்ன ஆகிடப் போகுது”

“ஹேய் இளா இளவம் பஞ்சு மாதிரி இருக்காம இந்த அனன்யாவின் சிஷ்யன் மாதிரி இரும்பை போல கெத்தா வேலை செய்யணும். புரிஞ்சுதா. நான் சொல்லி குடுத்ததுலாம் நியாபகம் இருக்குல என் மரியாதையை காப்பாத்துறது உன் கையில தான் இருக்கு” என அனன்யா தன் பாசமலரை வம்பிழுக்க

“உனக்கு இருக்கிறது வாய்யா இல்லை காவாய்யா. இப்படிலாம் பேச உனக்கு யார் சொல்லி குடுக்குறா”என்று அவளது தலையில் கொட்டு வைக்க,

“பாரும்மா எப்படி அடிக்குறான்னு” என்று சிறு பிள்ளையாய் தன் அன்னையிடம் புகார் வாசிக்க

“போதும் அனு ரொம்ப பச்சை புள்ளை மாதிரி நடிக்காத நான் நம்பமாட்டேன்” என தன் மகனுடன் ஹை-ஃபை குடுக்க

“உனக்கு ப்ரூட்டஸ் கூட்டம் வெளிய இல்லை வீட்டுக்குள்ளேயே இருக்கு” என சொல்ல அதைக் கேட்டு இளாவும், சாலாவும் சிரிக்க, அனன்யாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

பேருந்து கிளம்ப போவதற்கான விசில் அடிக்கப்பட, இளா “போயிட்டு வர்றேன்மா. பார்த்து பத்திரமா இருங்க. அனு அம்மாவை பார்த்துக்கோ” என்றபடி பேருந்தில் ஏற,

“போயிட்டு ஃபோன் பண்ணுப்பா” என்று சாலாவும் “பை அண்ணா டேக் கேர்” என்று அனன்யாவும் கையசைக்க, அவர்களை கண்டு தானும் கையசைத்த படி விடை பெற்றான் இளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சென்னை மாநகரத்தின் இரைச்சல்களில் இருந்து விலகி சற்று ஒதுக்குபுறமான இடத்தில் காற்றோட்டமான மரங்கள் இருமருங்கிலும் நின்று வருபவரை வரவேற்பது போல் தலையை ஆட்டி சிலு சிலுவென வீசும் காற்றின் மூலம் உடல் புழுக்கத்தோடு மனதின் புழுக்கத்தையும் விரட்டி அடித்துக் கொண்டு இருந்தது.

வரிசையாக பல வீடுகள் ஒரே கட்டமைப்புடன் இருக்க, அந்த பெரிய காம்பௌன்ட்டிற்கு முன்னால் ஆர்ச் வடிவில் பெரிய நுழைவு வாயில் “அரசு காவலர் குடியிருப்பு” என்ற பலகையை தாங்கி கொண்டு இருந்தது.    

அதில் தனக்கென ஒதுக்கபட்ட வீட்டில் இருந்து அலுவலக வண்டியில் அங்கிருந்து கிளம்பி காவல் நிலையத்தை அடைந்தான் செழியன். வண்டியில் இருந்து இறங்கியவனை வரவேற்க நின்றிருந்தனர் அங்கு வேலை பார்ப்பவர்கள்.

அவர்கள் தந்த வரவேற்பையும் வாழ்த்தையும் மிக பணிவோடு ஏற்றுக் கொண்டவன் தன் நன்றியை கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றான். அவனது நடையின் கம்பீரமும், முகத்தில் இருந்த தேஜசும் கூர்மையான பார்வைகளும் உதட்டில் தெரியும் சிறு புன்னகையும் பார்ப்பவர்களின் மனதை சில்லிட வைக்கும் அளவிற்கு இருந்தது.

அவன் அணிந்திருந்த காவலர் உடையோ தன்னால் அவன் அழகாக தெரிகிறானா இல்லை அவன் அணிந்ததினால் தான் மிளிர்கிறோமா என்று தனக்குள் விவாதம் நடத்திக் கொண்டிருந்தது.

அறையின் வாசலிற்க்கு மேலே ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்) என்கிற எழுத்துக்களை கண்டு மென்னகை புரிந்தவன் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்துதும் தனக்கு முன்னே டேபிளில் இருந்த பெயர் பலகையை ஒரு முறை தன் கைகளால் தடவி குடுத்துவிட்டு அதை உச்சரிக்கலானான் “வி. இளஞ்செழியன்”

செனோரீட்டா வருவாள்.