அத்தியாயம் 3:

மயிலிறகாய் வருடும்

உன் நினைவுகள்!

சில நேரங்களில் கூர்முனை கத்தியாகி

என்னை குத்தி கிழிப்பதேனோ?

கல்லூரியில் இருந்து வேக வேகமாய் வெளியேறியவன் தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அங்கு இருந்த தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை அடைந்தான் இளா.

ஏற்கனவே தான் புக் செய்திருந்த அந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்தில் ஏறியவன் தனக்கான இடத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ நினைவுகளை விரட்டி அடிக்கும் முயற்சியில் தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளவும் பேருந்து புறப்பட தொடங்கவும் சரியாய் இருந்தது.

சாப்பிட்டு கொண்டிருந்த தனுஷாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சஜன் அதற்கு மேலும் பொறுக்காது “இன்று எப்படியாவது அவளிடம் பேசி அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று முடிவெடுத்தவன் அவர்களை நோக்கி நடந்தான்.

தனுவிற்கு அருகில் வந்த போது சிவ பூஜையில் கரடி போல அவனது தொலைப்பேசி சிணுங்க அதில் கடுப்பானவன் போனை அட்டென்ட் செய்து “ஹலோ..! நான் முக்கியமான ஃபங்ஷன்ல இருக்கேன்… கால் யூ லேட்டர்…” என எதிர்முனையில் பேசுவது யார் என்று கூட பார்க்காமல் பட படவென்று பேசிவிட்டு  இணைப்பை துண்டிக்க முற்பட்ட நேரம்,

“சார்… சார்..! நான் உங்க பி.ஏ வினோத் பேசுறேன்…. இங்க டீலர்ஸ் கொஞ்சம் பிரச்சனை பண்றாங்க சார்…. நீங்க இப்போ உடனே வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்…”

“அவங்களை நாளைக்கு வர சொல்லுங்க வினோத்… இப்போ என்னால வர முடியாது… எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசி ஃபைனலைஸ் பண்ணிக்கலாம் சொல்லிடுங்க…”

“சாரி சார்..!  நான் ஏற்கனவே என்னால முடிந்த அளவு பேசி பார்த்துட்டேன் சார்… உங்களை பார்த்துட்டு தான் போவேனு அடம் பிடிக்குறாங்க…”

“ஃபுல்ஷிட்… போனை வைங்க… இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்…” என்றவாறு கடைசியாக ஒருமுறை அவளின் உருவத்தை தன் கண்களில் நிரப்பிக் கொண்டு தன் விதியை நொந்தபடி அங்கிருந்து கிளம்பினான் சஜன்.

“ஹேய் தனு போகலாமா..? இல்ல உன் ப்ரெண்ட்ஸ் கூட இன்னும் டைம் ஸ்பென்ட் பண்ணனுமா..” என்று தியா கேட்க,

“என்னாச்சு தியா..? உன் முகமே சரி இல்லையே… உடம்புக்கு ஏதும் சரியில்லையா..? அப்படினா சொல்லிடு … உடனே வீட்டுக்கு போயிடலாம்…”

“இல்லை தனு…! லைட்டா தலை வலிக்குது…. நீ வேணும்னா உன் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வா…. நான் ஆட்டோல வீட்டுக்கு போயிக்குறேன்…”

“இல்லை தியா… நாம சேர்ந்தே போகலாம்… ஒரு டூ மினிட்ஸ் அவங்ககிட்ட சொல்லிட்டு வந்திடுறேன்….” என்றவாறு தோழிகளிடம் சொல்லிக் கொண்டு இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

காரில் இருந்து இறங்கியவன் வேகமாக கான்பிரன்ஸ் ஹாலில் நுழைய, அங்கிருந்த அனைவரும் மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்க பதிலுக்கு தன் கண்ணசைவில் அதை ஏற்றவன் ஒய்யாரமாய் தனது நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அவன் அமர்ந்திருந்த தோரணையே ஒரு அரசனை போல் தோன்ற அங்கிருந்த அனைவருக்குமே சற்று உதறலாகத் தான் இருந்தது.

“என்னை பார்த்துட்டு தான் போவோம்னு சொன்னீங்களாம்… சொல்லுங்க என்ன விஷயம்..?” என அவன் கேட்ட விதமே தவறாக ஏதும் சொன்னால் அவ்வளவு தான் என்பது போல் இருக்க,

“சார்.. டெக்கரேஷனுக்கு தேவையான மரங்களுக்கு கான்ட்ராக்ட் போட்டு இருக்கோம்ல அதுல தான்” என இழுக்க

“ஆமா..! இப்போ அதுல என்ன பிரச்சனை..? நாங்க தான் நீங்க சப்ளை பண்ண பண்ண அமௌன்ட் செட்டில் பண்றோம்னு சொல்லிட்டோமே…”

“சார் அந்த அமௌன்ட்ல தான் கொஞ்சம்…” என மறுமடியும் இழுக்க

பொறுமை இழந்த சஜன் “சி எனக்கு இந்த வழ வழ கொழ கொழனு பேசுறது பிடிக்காது… நீங்க என்ன கேட்கணுமோ அதை வெளிப்படையா சொல்லுங்க அது சரியா இருந்தா கண்டிப்பா கன்ஸிடர் பண்றேன்”

“இல்லை சார்..!  கான்ட்ராக்ட் போடும் போது ஒரு பீஸ்க்கு மூவாயிரம்னு இரண்டு வருஷத்துக்கு போட்டோம்… ஆனா இப்போ மார்க்கெட்ல ஒரு பீஸ் நாலாயிரம் ரேஞ்சுக்கு போகுது.   நீங்க அந்த அமௌண்ட் குடுத்திங்கனா நல்லாயிருக்கும்…”

“இங்க பாருங்க… கான்ட்ராக்ட் போடும் போது அப்போ இருந்த மார்க்கெட் ரேட்ல தான் டீல் பேசுனோம்… இப்போ ரேட் கூடிருச்சுனு சொன்னா எப்படிங்க? இப்போ விலை அதிகமாகிடிச்சுனு நாங்க எங்க கஸ்டமர்ஸ்கிட்ட போய் இன்னும் கொஞ்சம் பே (pay)  பண்ணுங்கனு சொல்ல முடியுமா…? நீங்களே சொல்லுங்க…”

“நீங்க சொல்ல வர்றது புரியாம இல்லை சார்…. இது ஒண்ணு தான் சார் எங்க பொழைப்பே… அதுல கொஞ்சமாவது லாபம் வந்தா தான் எங்களுக்கும் சந்தோஷம்…”

“உங்களுக்கு அது பொழப்புனா எனக்கு இது… சும்மா உட்கார்ந்துட்டு யாரும் சம்பாதிக்க முடியாது…. சரி இருந்தாலும் இவ்வளவு சொல்றீங்க… பட் நீங்க சொன்ன அமௌன்ட் முடியாது… வேணும்னா பெர் பீஸ்க்கு 3500 குடுக்கலாம் ஓகேனா அக்ரீமென்ட் கன்டினியூ பண்ணலாம்… யோசிச்சுட்டு சொல்லுங்க..!”

வந்தவர்கள் ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டவர்கள் பின் சம்மதமாக தங்களுக்குள் சைகை செய்து கொண்டு “எங்களுக்கு இந்த அமௌன்ட் ஓகே சார்..!” என சொல்ல

“சரி..! அப்போ நாளைக்கு பழைய அக்ரீமென்ட் கேன்சல் பண்ணிட்டு புதுசு ஒன்னு போட்டுடலாம்…. இப்போ நீங்க கிளம்புங்க…”

“நன்றி சார்…!” என்றுவிட்டு அவர்கள் விடைபெற தன் கைகடிகாரத்தை நோக்க அது மணி ஐந்தை காட்டியது.

“வினோ..! நாளைக்கு டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணிட்டு அவங்ககிட்ட சைன் வாங்கிடுங்க…. நான் கிளம்புறேன் பை..” என்றுவிட்டு தன் ஆடி காரை உயிர்ப்பித்து வீட்டை நோக்கி செலுத்தினான்.

இது தான் சஜன் எதையும் சற்று யோசித்து தனக்கும் அதில் பாதிப்பில்லை என்றால் மட்டுமே ஏற்றுக் கொள்வான். இந்த கொள்கை செல்லாத ஓரே ஒரு இடம் அவனது வீடு மட்டுமே. அவனுக்கு என சுதந்திரம் இருந்தாலும் அவர்களின் அன்புக் கட்டளையை என்றுமே தட்டியதில்லை. இது இனி வரும் பொழுதுகளில் நீடிக்குமா?

@@@@@@@@@@@@@@

வீட்டுக் கதவு தட்டப்படும் ஒலி கேட்க அதில் விழித்த விசாலாட்சி ஒரு எதிர்பார்ப்புடன் வேகமாக வந்து கதவை திறக்க அவரது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை என்பதாய் அங்கு நின்றிருந்தான் அவரின் செல்ல மகன் இளா.

விநாயகம் – விசாலாட்சியின் மூத்த புதல்வன் தான் இளா. அனன்யாவின் பாசமலர். விநாயகம் நல்ல விவசாயி. தோப்பு, நிலபுலன்கள் என பணத்திற்கு மட்டுமல்ல அன்பிற்கும் குறைவில்லா மேல்தட்டு குடும்பம். இப்போது விநாயகம் உயிருடன் இல்லை. விசாலாட்சி தான் குடும்பத்தை திறம்பட நடத்தி வருகிறார்.

“இளா கண்ணா வந்துட்டியா..? என்னடா இப்படி மெலிஞ்சு போயிருக்க… ஒழுங்கா சாப்பிட்டியா இல்லையா..?” என மூச்சு விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க

“அம்மா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் வந்துட்டேன்… மெலியலை உங்களுக்கு தான் அப்படி தெரியுது…அப்புறம் ஹான் ஒழுங்கா தான் சாப்பிட்டேன்… இனி ஒரு ஒரு கேள்வியா கேளுங்க… ஹப்பா என்னால முடியலை…” என கேலியில் இறங்க

“படவா..! நக்கலா பண்ற… நாளைக்கு உனக்குனு பிள்ளைங்க வரும்ல… அப்போ தெரியும் பிள்ளைகளை பத்தின பெத்தவங்களோட கவலை….”

“ஹும் எங்க தெரியுறது…. இன்னும் கல்யாணமே ஆகலை… அதுக்குள்ள நாளைக்கு எப்படிம்மா தெரியும்…? ஆனாலும் உங்களுக்கு ஓவர் கற்பனைம்மா..”

“உனக்கு வாய்கொழுப்பு கூடி போச்சு…“என்றவாறு அவன் காதை பிடித்து திருக

“என் செல்ல அம்மால விட்ருங்க…” என்று கூறியபடி அவரது கன்னத்தில் இதழ் பதிக்க

“யாரை எப்படி தாஜா பண்ணனும்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கடா… போக்கிரி..!” என்றபடி தன் மகனை அணைத்துக் கொண்டார்.

“எங்க அந்த குட்டி கும்பகர்ணி அதுக்குள்ள தூங்கிட்டாளா?”

“உனக்கும் அவளுக்கும் மாத்தி மாத்தி காலை வாரலைனா தூக்கமே வராது. கொஞ்ச நேரம் கழித்து பார்த்தா பாசமலர் பார்ட் டூவை ஓட்டிக் காட்டுவீங்க.உங்களுக்கு இடையில் நான் தான் மாட்டிகிட்டு முழிக்கணும் போடா”

“அம்மா இதெல்லாம் சகஜம்மா ஹி ஹி…. அதை விடுங்க வேலை விஷயமா போனேன்ல என்ன ஏதுனு எதுவுமே நீங்க கேட்கலை…”

“என் புள்ளை எதிலயும் தோற்கமாட்டானு தான் எனக்கு தெரியுமே…. அதெல்லாம் நல்லபடியா முடிச்சுருப்ப… “என்று பெருமை பொங்க கூற,

அந்த சந்தோஷம் இளாவின் முகத்தில் கடுகளவும் இல்லை. அவனது சோர்ந்த முகத்தை பார்த்த விசாலாட்சி “கண்ணா மணி  ஆகுது… போய் ப்ரெஷ் ஆயிட்டு வா… சாப்பாடு எடுத்து வைக்குறேன்” என்று சொல்ல

“வேண்டாம்மா பசியே இல்லை… நான் போய் தூங்குறேன்… நீங்களும் போய் படுங்க”

“நைட் சாப்பிடாம படுக்க கூடாது… ஒரு கிளாஸ் பாலையாவது குடிச்சுட்டு படுப்பா…” என அன்பு கட்டளை விடுக்க,

சரி என்பதாய் தலை அசைத்துவிட்டு ப்ரெஷ் ஆகி அன்னை தந்த பாலை குடித்தவன் தனது அறையில் மெத்தையில் போய் விழுந்தான்…. ஆனால் கண்ணில் ஒரு பொட்டு தூக்கம் இல்லை.

தனது தலையணை கீழ் இருந்த அந்த சிறிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்தவன் “ஏன்டி..! ஏன் என்னை இப்படி கொல்ற..? என்னை சுத்தமா மறந்தே போயிட்டியா..? சொல்லுடி சொல்லு…”

அந்த போட்டோவில் இருந்த அவளது சிரித்த முகம் அவனை கேலி செய்வது போல் தோன்ற

“எங்க அம்மா அவங்க பிள்ளை எதிலையும் தோற்றதில்லைனு நினைச்சுட்டு இருக்காங்க… ஆனா நான் திரும்பி எழ முடியாதபடி உங்கிட்ட தோற்று கீழே விழுந்து கிடக்குறேனு பாவம் அவங்களுக்கு தெரியாது… எனக்கு இதுல எந்த வருத்தமும் கிடையாது ஏன்னா எனக்கு உன்னை அவ்வளோ பிடிக்கும்டி…. நான் தான் இப்படி நினைச்சுட்டு இருக்கேன்…. ஆனால் நீ? உனக்கு என்னை பிடிக்குணும்ன்றது கூட இரண்டாவது விஷயம்… நீ என்னை மறந்துட்ட அப்படிங்குறத தான் என்னால தாங்கிக்க முடியலைடி…. என்கிட்ட வந்திருடி ப்ளீஸ்…“ என தன் கம்பீரத்தை விட்டு விட்டு ஊமையாய் அழுதவன் சுடும் கண்ணீரால் தன் வலியை நீர்த்து போக வைக்க முயன்று கொண்டிருந்தான் இளா.  

@@@@@@@@@@@@@@@@@@

வீட்டிற்கு வெளியே இருந்த போர்டிகோவில் அமர்ந்து ஆன்மீக புத்தகத்தை படித்தவாறு தன் மகள்களுக்காக காத்துக் கொண்டிருந்தார் தாமோதரன். அந்நேரம் ஸ்கூட்டியில் தனுவும் , தியாவும் உள்ளே நுழைந்தனர்.

எதிர்பார்த்த நேரத்தை விட முன்னதாக வந்த மகள்களை நோக்கியவாறு “என்ன தனும்மா இவ்வளோ சீக்கிரம் வந்துட்டீங்க…  ஃபங்ஷன் அதுக்குள்ள முடிஞ்சுருச்சா?”

“இல்லப்பா…! தியாவிற்கு லைட்டா தலைவலி… அதான் இயர்லியரா வந்துட்டோம்”

“தியாகுட்டி என்னாச்சுடா? ரொம்ப வலிக்குதா..? டாக்டர்கிட்ட வேணும்னா போயிட்டு வரலாமா?”

“அப்பா ஹாஸ்பிட்டலாம் ஒண்ணும் வேணாம்ப்பா… லேசான வலி தான்… தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்… நீங்க பதட்ட படுற அளவுக்கு ஒண்ணும் இல்லைப்பா”

“சரிடா வெறும் வயித்துல படுக்க வேண்டாம்…. ரெண்டு தோசையை சாப்பிட்டு ரெஸ்ட் எடு”

“வேண்டாம்ப்பா…. காலேஜ்ல சாப்பிட்டேன் இப்போ சாப்பிட முடியாதுப்பா”

“ஹே தியா எங்கடி சாப்பிட்ட…? அணில் கொறிச்ச மாதிரி தான்ப்பா சாப்பிட்டாள். நான் அவளுக்கு தோசை ஊத்தி குடுத்துட்டு உங்களுக்கு சாப்பிட கொண்டு வர்றேன்ப்பா”

“எனக்கு இருக்கட்டும் முதல்ல அவளுக்கு குடு தனும்மா…. குட்டி முகமே சரியில்லை” என தந்தையாய் வருத்தப்பட

இவர்களது பாசத்தில் குளம் கட்டிய கண்ணீரை மறைத்தபடி தனுவை பின் தொடர்ந்தாள் தியா.

தங்கைக்கு தோசை ஊற்றி தந்துவிட்டு அவள் படுக்க போனதும் தனக்கும் தந்தைக்குமான இரவு உணவை முடித்து கொண்டு பாத்திரங்களை ஒதுக்கி சுத்தம் செய்தவள் தங்கையின் அறைக்கு சென்றாள்.

கதவு திறக்கவும் ஒலி கேட்டதும் கண்களை மூடிக் கொண்ட தியா தூங்குவது போல் பாசாங்கு செய்ய, அவளது அருகில் வந்த தனு தியாவின் நெற்றியை வருடி முத்தமிட்டு விட்டு அவளது மேல் கிடந்த போர்வையை சரி செய்தவள் மெதுவாக கதவை சாத்திவிட்டு தனதறைக்கு சென்றாள்.

தனு போனதும் எழுந்தவளின் கண்களில் இருந்து நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருக்க அதை துடைக்கும் திராணி கூட இல்லாமல் தனது நாட்குறிப்பை எடுத்து மன உணர்வுகளை அதில் பதிக்க ஆரம்பித்தாள்.

மறந்து போனதாய் நினைத்த

உன் நினைவுகள் மேலெழும்பி

உலை கலனை போல கொதிக்க…

அதில் தினமும் வெந்து

கொண்டிருக்கிறேன் நான்..!

தீயாய் காந்துகின்ற என் நிலைமை

உனக்கு தெரியாது என்பது தான்

கொடுமையிலும் கொடுமை!

செனோரீட்டா வருவாள்.