அத்தியாயம் 15:

மண்ணில் புதைந்த செடியை

வேரோடு பிடுங்கினாலும் அதோடு

ஒட்டிக் கொள்ளும் மண் போல

என்னில் இருந்து உன்னை நீ விலக்கினாலும்

உனை விட்டு போகாது என் நேசம்!

மண்டபத்தில் அனைத்து சடங்குகளையும் முடித்த பின் தியாவை சஜனின் வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு தாமோதரினின் குடும்பமும் உடன் சென்றனர். தனுஷா தான் வரவில்லை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்திருக்க, தியாவோ பற்றிய தனுவின் கைகளை விடவே இல்லை. சரி இதற்கு மேலும் எதுவும் செய்தால் தங்கையின் மனம் வருத்தப்படும் என உணர்ந்தவளாய் உடன் சென்றாள்.

சஜன் தியா இருவருக்கும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்து சென்று, தியாவின் கையால் விளக்கேற்றி வைத்து கடவுளை வணங்க சொல்ல, தியா கண்களை மூடி மனமுருகி வேண்ட, சஜனோ வேடிக்கை பார்ப்பவன் போல் எனக்கென்ன என்றவாறு நின்றிருந்தான்.

பூஜையை முடிந்ததும் அனைவரும் ஹாலில் அமர இதற்காகவே காத்திருந்தது போல் தனது அறைக்குள் சென்று மறைந்தான் சஜன். கயல்விழி தியாவை கீழே இருந்த அறையில் சென்று ஓய்வெடுக்குமாறு கூறி தனுஷாவை துணைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கிருந்த அறையினுள் நுழைந்ததும் தனுஷாவை கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள் தியா. அவளின் அழுகையை கண்டு பதறியவளாய் “ஹே தியா என்னடி இப்போ எதுக்கு அழுகுற. இது நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம். கண்ணை துடை” என்று சொல்ல,

“நீ சந்தோஷமா இல்லையே? கல்யாண மண்டபத்துல வைத்து நான் உன்னை கவனிச்சுட்டே தான்கா இருந்தேன். எதையோ பறிகொடுத்தவ மாதிரி நீ இருக்கதை என்னால பார்க்க முடியலை”

“அப்படிலாம் ஒண்ணும் இல்லைடி நீயா எதையாவது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத சரியா?” என்று தியாவை தெளிவு படுத்த முயல,

“அக்கா நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே” என்று தயங்கி தயங்கி கேட்க,

“என்கிட்ட என்னடி தயக்கம். புதுசா அனுமதியெல்லாம் கேட்குற ம்ம் சொல்லு என்ன விஷயம்”

“இல்லை உனக்கு அமைய வேண்டிய வாழ்க்கை. சூழ்நிலையால இதுல நான் வந்துட்டேன் உனக்கு என் மேல வருத்தம் ஒண்ணும் இல்லையே”

“அட லூசு. உன்னை நான் தப்பா நினைப்பேனாடி.என்னை நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா? “

“அய்யோ இல்லைக்கா என் மனசுல உறுத்திக்கிட்டே இருந்திச்சு அதான் கேட்டேன் என்னை மன்னிச்சுருக்கா”

“இப்போ சொல்றேன் தெளிவா கேட்டுக்கோ. எனக்கு எந்த வருத்தமும் இல்லை எனக்காக யோசிக்குறேனு உன் வாழ்க்கையை கோட்டை விட்டுடாதே. இப்போ இருக்குற சூழ்நிலையில சஜன் மனநிலை எப்படினு யாருக்கும் தெரியாது. உன் மனநிலை தான் அவருக்கும் இந்த திடீர் கல்யாணத்துல உங்க ரெண்டு பேர் மனதும் குழம்பி போகியிருக்கும் சோ சஜன் கோபப்பட்டு எதும் சொன்னாலும் நீ பார்த்து நடந்துக்கோ சரியா. நீ சந்தோஷமா இருக்கணும் அது தான் எங்களுக்கு வேணும்”

“ம்ம்ம் சரிக்கா நீ சொல்ற மாதிரி நடந்துக்குறேன். அக்கா நீயும் ஒரு நல்ல முடிவா எடுக்கா அத்தான் “என்று ஆரம்பித்தவளை கை காட்டி நிறுத்தியவள்,

“நீ என்ன சொல்ல வர்றேனு புரியுது என் மனநிலை தெரிஞ்சும் நீயே இப்படி சொன்னா எப்படி தியா”

ஒருத்தரை மனதால் நினைத்து படும் துன்பத்தை அனுபவிச்சவ அக்கா நான் அந்த வேதனை எப்படி பட்டதுனு எனக்கு நல்லா தெரியும் என்று மனதிற்குள் நினைத்தவளாய்,

“உன் நிலைமை எனக்கு புரியாம இல்லைக்கா. அத்தான் செய்தது தப்பு தான் ஆனால் அதுக்கு பின்னாடி மறைந்து இருக்கது உன் மேல உள்ள அன்பு தானேகா”

“ப்ளீஸ் இதுக்கு மேல இதை பற்றி பேச வேண்டாம்” என்று சொல்லிவிட, தியாவும் அக்காவின் மனதை வருத்தப்பட வைக்க விரும்பாதவளாய் அமைதியானாள்.

மாலையில் தாமோதரன் குடும்பம் கிளம்ப தயாராக அருண் சஜனை தனியாக அழைத்து “ சஜன் தியா ரொம்ப சின்ன பொண்ணு. செல்லமா வளர்ந்தவ எதும் தப்பு பண்ணினா கூட எடுத்து சொல்லுங்க புரிஞ்சுப்பா அவளை பார்த்துக்கோங்க. உன்கிட்ட இப்படி சொல்றது தப்பு தான் எனக்கு உங்க குணம் பற்றி தெரியும் இருந்தாலும் ஒரு அண்ணனாய் இதை சொல்ல வேண்டியது என் கடமை”

“ம்ம் சரி” என்ற ஒற்றை வார்த்தையோடு சஜன் நிறுத்திவிட,

“அப்போ நாங்க கிளம்புறோம்” என்றவாறு விடைபெற, தியாவின் கண்களிலோ அருவி போல் கண்ணீர் பொங்க, ஆறுதல் சொல்ல வேண்டியவனோ, எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

மணித்துளிகள் நிமிடங்களாக விரைந்தோட இரவும் வந்தது. ஆலிவ் நிற காட்டன் புடவையில், கழுத்தினில் பொன் தாலி மினுங்க நெற்றியினில் வைத்திருந்த குங்குமம் ஜொலிக்க அழகு சிலையென நின்றிருந்தவளை கண்டு திருஷ்டி வழித்த கயல்விழி அவளை சஜனின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

காலையில் இருந்த மனகுழப்பம் அக்காவிடம் பேசியதில் சற்றே தெளிவடைந்திருக்க, புதுப்பெண்ணிற்கே உரிய நாணத்துடனும் இனி இது தான் நம் வாழ்வு இதை வெற்றிகரமாக மாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டவள், அறையின் முன் வந்து நின்றாள்.

பூட்டியிருந்த கதவை திறப்பதற்கே ஐந்து நிமிடம் பிடித்தது அந்த அளவு மனமும் உடலும் நடுங்கி போயிருந்தது. ஒருவாறு தன்னை சமன்படுத்திக் கொண்டவாறு உள்ளே நுழைய அந்த அறையே ஒரு வீடு போல் இருந்தது.

ஒரு சிறிய ஷோபாவுடன் கூடிய வரவேற்பரை தான் முதலில் இருந்தது. அதையடுத்து ஒரு கதவை திறந்து தான் படுக்கையறைக்கு செல்ல வேண்டும். வரவேற்பரையில் அவனைக் காணாது மெல்ல எட்டு வைத்து அங்கிருந்த மற்றொரு கதவையும் திறந்தாள்.

திறந்தவளின் மனம் வலியால் துடித்தது. காரணம் அங்கு சஜன் தூங்கியிருந்தான். அவளை அணைத்து காதல் மொழி பேசுவான் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்க்கவில்லை தான். குறைந்தபட்சம் தன் கோபத்தையாவது காட்ட பேசுவான் என நினைத்திருந்த தனது நினைப்பை நொந்து கொண்டவாறு அவனால் கீழே வீசப்பட்டிருந்த தலையணையை எடுத்துக் கொண்டு வரவேற்பரையில் இருந்த சோபாவினுள் தன்னை முடக்கி கொண்டாள்.

ஆனால் தூக்கம் தான் வந்த பாடாக இல்லை. உன் கண்ணீர் என்றும் ஓயப்போவதில்லை என்று யாரோ அழுந்த சொல்வது போல் மனதில் துயரம் சூழ தலையணையை நனைத்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தனுஷா தன் அறையில் தலையை பிடித்த வண்ணம் அமர்ந்து இருந்தாள். வெண்பாவிற்கு அழைக்க, எடுக்கப்படவில்லை அப்போது தான் அவளை திட்டியது நியாபகம் வர தன்னையே நொந்து கொண்டாள்.

தங்கையும் வெண்பாவும் ஒரே விஷயத்தை கூறியிருக்க, இனி தன் வாழ்வில் அடுத்து என்ன? என்ற கேள்வி அவள் முன் விரிய, அதை பற்றி யோசிக்க யோசிக்க தலை தான் வலித்தது.

மாங்கல்யம் என்பது புனிதம் அது எப்படி பட்டவனானாலும் சரி எந்த ஒரு சூழ்நிலையில் கட்டப்பட்டாலும் சரி அதை போற்றி காக்க வேண்டும் என்றே வளர்க்கப்பட்டதால் அவளால் தாலியை கழற்றி எறியவும் முடியவில்லை. அதே சமயம் தன் விருப்பமே இல்லாமல் தன்னை மனைவியாக்கி கொண்ட  அவனை ஏற்கவும் முடியவில்லை.

என்ன தான் சிந்தனைகளிலும் நடை உடை பாவனைகளிலும் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் இது போன்ற பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதை மனம் ஏற்பதில்லை. திருமணம், கணவன் என்ற உறவுகளில் இன்னும் பழமை தான் நீடிக்கிறது. அது ஒரு வித மனநிறைவை சில நேரங்களில் தருவதையும் மறுப்பதற்கில்லை.

இப்படியே உழன்று கொண்டிருந்தவளின் நினைவை கலைத்தது அருணின் கோபக்குரல். “அண்ணா இந்த நேரத்துல யார்கிட்ட பேசிட்டு இருக்கான் அதுவும் இவ்வளவு கோபமா?” என்று நினைத்தவள் சன்னலின் வழியே கீழே பார்க்க அங்கு தோட்டப் பக்கம் யாருடனோ தொலைப் பேசியில் பொரிந்து கொண்டிருந்தான் அருண்.

“காலையில இருந்து தொந்திரவு பண்ணிட்டே இருக்க. உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க. எனக்கு உன்கிட்ட பேசவே பிடிக்கலை”

“அரு ப்ளீஸ் கோபப்படாதீங்க ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க”

“என்னடி ப்ளீஸ் என்னனு கேட்குறேன். நீ சொல்றதையெல்லாம் கேட்க முடியாது மரியாதையா போனை வச்சிடு இன்னொரு தடவை போன் செய்து தொந்திரவு பண்ணனு வைச்சிக்கோ என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது”

“அரு “என்ற வார்த்தையை முடிக்கும் முன் போனை கட் செய்தான் அருண்.

அவன் கட் செய்ததை கூட அறியாமல் “ஹலோ அரு கேட்குதா ம்ம்” என்றவளுக்கு மௌனமே பதிலாய் வர, அப்போதும் போனை கட் செய்து இருப்பான் என நினைக்காதவளாய் “ஹலோ அருண் அருண் லைன்ல இருக்கீங்களா” என்க, சத்தமே இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தவளாய் போனை காதில் இருந்து எடுத்து பார்க்க கட் ஆகி மூன்று நிமிடம் ஆகியிருந்தது.

போனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் தேம்பிக் கொண்டே இருந்தாள். ஒரு மணி நேரமாய் அழுததில் சக்தியனைத்தும் வடிந்தவளாய் கண்களை மூடிக் கொண்டாள்.

போனை கட் செய்துவிட்டு அதை தன் த்ரீ போர்த் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்தவன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான். பேசி அவளை திட்டிய பின்பும் மனம் கொதிப்பில் இருந்து அடங்கவில்லை.

இளாவின் மேல் இருந்த கோபம் அனைத்தும் வழித்தடம் மாற்றி விட்ட நதி போல் அனுவின் மேல் சீறீப் பாய்ந்தது. அண்ணன் செய்ததற்கு அவள் என்ன செய்வாள் என்பதையெல்லாம் பகுத்தறியும் நிலையில் அவன் இல்லை.

ஒரு தங்கையின் வாழ்வு மதில் மேல் பூனை போல் இருந்தாலும் சஜனின் குணத்தையும் அவனுடையை பெற்றோர் குணத்தையும் காணும் போது நிச்சயம் தவறாய் போகாது என்றே நம்பினான்.

மூத்தவளின் வாழ்க்கையை எப்படி சரி செய்வது என்று எண்ணியவளனுக்கு ஒரு வழியும் பிடிபடாததால் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

அருண் கோபமாக பேசியதை கண்ட தனுஷா அவனிடம் கேட்கலாம் என்று கீழே இறங்கி வந்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையில் கண்விழித்த சஜன் நேராக குளியலறையில் நுழைந்து கொண்டான். எப்போதும் உடற்பயிற்சியை முடித்த பின் தான் மற்ற வேலைகளை தொடருபவன் இன்று குளித்துவிட்டு வந்தான்,

வீட்டில் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற நினைப்புடன் அவசர அவசரமாக உடை மாற்றியவன் அலுவலகம் செல்ல தயாரானான்.

தனது அறையை விட்டு வெளியே வந்தவனின் கண்ணில் ஷோபாவில் தன்னை குறுக்கி கொண்டு படுத்திருந்த தியாவை கண்டு இயல்பான அவனது குணம் வெளிப்பட்டு அவளுக்காக வருத்தப்பட்டாலும்  அடுத்த நொடியே மனம் இறுகியவன் தனது கோபத்தை அறைக் கதவை சாத்தியதில் காண்பிக்க,

படாரென்று சாத்தப்பட்ட கதவின் ஓசையில் அடித்து பிடித்து எழுந்தவள் அங்கு நின்றிருந்த சஜனை கண்டு “சாரி எழுந்திரிக்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்று சொல்ல,

“எனக்கு இது அவசியம் இல்லாதது” என்பது போலான பார்வையை அவள் மேல் செலுத்திவிட்டு கீழே சென்றான்.

டைனிங் டேபிளில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சிவப்பிரகாசம் படிகளில் இறங்கும் சத்தம் தன் மகனுடையது தான் என்று எண்ணியவராய் “குட்மார்னிங் சஜன்” என்று கூறியபடி நிமிர்ந்து பார்க்க,

சஜன் கிளம்பி இருப்பதையும் அவன் கையில் லேப்டாப் பேக் இருப்பதை கண்டு புருவத்தை சுருக்கியவர் “இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்ட சஜன்” என்று கேட்க,

“பார்த்தா தெரியலையா? ஆபிஸ்க்கு” என்று கூறிய நேரம் கிட்சனில் இருந்து வெளி வந்த கயல் “ என்னது ஆபிஸ்க்கு போறியா? ஏன்டா நேற்று தான் கல்யாணம் முடிஞ்சுருக்கு அதுக்குள்ள இன்னைக்கு போயே ஆகணுமா?”

சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுட்டீங்களா? எனக்கு நேரமாச்சு என்பதை தன் கை கடிகாரத்தை பார்த்து சைகையாக கூற,

“சஜன் என்னடா இது. அந்த பொண்ணு என்ன நினைக்கும் ம்ம் போடா அவளுக்கு இந்த இடமெல்லாம் புதுசு நம்ம கூட அட்ஜஸ்ட் ஆக கொஞ்ச டைம் எடுக்கும். அப்படியே அவளை வெளிய கூட்டிட்டு போய் கம்பர்டபிளா பீல் பண்ண வைக்குறத விட்டுட்டு ஆபிஸ் போறேனு சொல்ற”

அதை கேட்டும் கேட்காதது போல் அங்கிருந்து நகர முற்பட “டேய் சொல்றது காதுல விழலையா? ஆபிஸ் ஒண்ணும் ஓடி போகாது அதனால இன்னைக்கு போக வேண்டாம்”

“இப்போ வரைக்கும் ஆபிஸ் மட்டும் தான் போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன். இப்படியே பேசி பேசி என்னை வீட்டை விட்டு வெளிய போக வச்சுராதீங்க அவ்வளவு தான் சொல்வேன்” என்றபடி கிளம்பிவிட,

சஜனின் இந்த புதுவித தோற்றத்தில் அதிர்ச்சி அடைந்த சிவப்பிரகாசமும் கயல்விழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரும்ப அங்கு நின்றிருந்த தியாவின் கண்களில் நீர் நிறைந்து இப்பவா அப்பவா என சடுகுடு ஆடியவாறு இருந்தது.

அவளை கண்ட கயல்விழி அருகே சென்று “ச்ச அழக்கூடாதும்மா அவன் ஏதோ வேலை டென்சன்ல பேசிட்டு போறான். நான் அவன் வந்ததும் அவங்ககிட்ட பேசுறேன் சரியா? வா வந்து உட்காரு. அத்தை உனக்கு காபி எடுத்துட்டு வர்றேன்” என சொல்லிவிட்டு திரும்பியவர் “நீ காபி குடிப்பல்ல இல்லை கீரீன் டீ அப்படி எதுவும் குடிப்பியா?” என கேட்க,

“காபியே குடுங்க” என்று சொல்ல, சரி என்றுவிட்டு அவரும் காபியை கொண்டு வந்து கொடுத்தார்.

நேற்று இருந்த குழப்பத்தில் சரியாக சாப்பிடாததால் ஒரே வாயில் கப்பில் இருந்ததை கவிழ்த்தவள் “சாரி அத்தை இன்னைக்கு எழுந்துக்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு நாளைக்கெல்லாம் சீக்கிரம் எழுந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.”

“பரவாயில்லைடா நான் பார்த்துக்குறேன். புது இடம்ல கொஞ்சம் பழகட்டும் அப்புறம் எல்லாம் செய்யலாம்” என்றவாறு அவளது தலைக்கோதி நிமிர,

“தியா சாப்பிட்டு ரெஸ்ட் எடுமா மாமாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வர்றேன்” என்க,

“சரிங்க மாமா” என்று சொன்னதும் சிவப்பிரகாசம் தன் மனைவியிடம் கண்களால் ஏதோ ஜாடை காட்டிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.

அவர் சென்றதும் “தியா நைட் அவன் ஏதும் கோபப்பட்டானா?” என்று கேட்க,

அவளின் மௌனமும், கலங்கிய கண்களுமே ஏதோ நடந்திருக்கிறது என உணர்த்த,

“தியா உனக்கு தெரியாதது ஒண்ணும் இல்லை எந்த மாதிரி சூழ்நிலையில இந்த கல்யாணம் நடந்துச்சுனு உனக்கே தெரியும். அவன் கோபப்பட்டு வார்த்தையை விட்டாலும் நீ எதும் மனசுல வைச்சுக்காதம்மா. உனக்கு எதாவது கஷ்டமா இருந்தா என்கிட்ட நீ தாராளமா சொல்லலாம். வார்த்தைக்காக சொல்லலை நிஜமா நீ என்னு பொண்ணு மாதிரி தான்.சரியா ? இந்த அம்மாகிட்ட சொல்வியா” என்றதும் ,

“ம்ம் சொல்றேன்” என்று கூறி அவரது கழுத்தைக் கட்டி கொண்டாள் தியா

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலை சூரியன் தன் முழு உயர்த்திற்கு எழ தன் கதிர்கள் மூலம் முயற்சித்துக் கொண்டிருக்க, குளித்து முடித்து வந்தவள் இன்னும் அவன் எழும்பாமல் இருப்பதை கண்டு இவரோட இதே ரோதனையா போச்சு என்றவாறு படுக்கையின் அருகில் வந்து இளாவின் மேல் இருந்த போர்வையை இழுத்து விட்டு “செழியன் எழுந்திரிங்க நேரமாகுது” என்று  உலுக்க, இளாவோ அசையாமல் இருக்க மீண்டும் ஒரு முறை அவனை தட்டி எழுப்ப,

அவனோ “டூ மினிட்ஸ் சின்னு” என்றபடி விலகியிருந்த போர்வையை காதுவரை இழுத்து போர்த்திக் கொண்டு கலைந்த தூக்கத்தை மறுபடியும் தொடர,

சிறு பிள்ளை போல் செய்வதை கண்டு புன்னகைத்தவள் “செழியன் இப்போ எழுந்திரிக்க போறிங்களா இல்லையா?” என்றுவிட்டு அவனது காதில் ஊத அதில் சிலிர்த்தவன் “ஹே கூசுதுடி சின்னு” காதை மூடிக் கொண்டு கண்களை திறக்காமல் இருக்க,

“பக்கெட் நிறைய தண்ணியை எடுத்து ஊத்த போறேன் அதுக்கு பிறகும் எப்படி எழுந்திரிக்காம இருக்கீங்கனு பார்க்குறேன்” என்றபடி குளியலறை நோக்கி திரும்ப அடுத்த நொடி இளாவின் அணைப்பில் இருந்தாள் அவனது சின்னு.

செனோரீட்டா வருவாள்.