Chapter 5

டாக்ஸி டிரைவர் சாமானை வாசலிலேயே வைத்து விட்டு செல்ல, ராணி அவனை வாசலில் காத்திருக்க சொல்லி விட்டு உள்ளே போய் ஆரத்தி கரைத்து எடுத்து வந்தாள். தட்டில் ஆரத்தி கரைத்து நடுவே வெற்றிலையில் கற்பூரம் எரிந்து கொண்டிருந்தது.

செல்வம் போகும் போதே சொல்லி விட்டு போயிருந்தார். பலருடைய கண் திருஷ்டி தான் மாப்பிள்ளை இந்த அளவிற்கு பெரிய விபத்தில் சிக்க நேர்ந்ததற்கும் தன் மகள் சில நாட்கள் விதவை கோலத்தில் இருந்ததற்கும் காரணமாம்.

அதனால் அவர் ராஜா வீட்டிற்கு வரும் போது திருஷ்டி போக ஆரத்தி எடுக்க சொல்லியிருந்தார்.

ராணி அவர் சொன்னது போலவே செய்து ஆரத்தியை தொட்டு அவன் நெற்றியில் வைத்து உள்ளே போக சொன்னாள்.

ஆரத்தியை நடுத்தெருவில் கொட்டி விட்டு போகும் போதே ஒரூ பையை கொண்டு போகலாம் என்று குனிந்து பெரிய பையைத் தூக்க கூடவே அந்த பையை இன்னொரு கையும் பிடித்தது.

ராணி ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். உள்ளே வரும் போது ராஜா அங்கே நின்றிருந்தான். நன்றாக இருந்த காலத்திலேயே அவளுக்கு உதவ மாட்டான். இப்போது மட்டும் உதவி விடப் போகிறானா என்ன என்று தான் அவள் அவனிடம் பைகளை கொண்டு வந்து தரும்படி கேட்கவில்லை.

அவர்கள் வீட்டில் குழாயில் வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கும். சமையலுக்கும் குடிப்பதற்கும் நல்ல தண்ணீர் தெரு முனையில் தான் போய் பிடித்து வர வேண்டும்.

தண்ணீர் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வரும் என்பதால் ராணி அவசரத்தில் இரண்டு மூன்று குடங்களை எடுத்துக் கொண்டு ஓடுவாள். அப்போது கூடத்தில் சோபாவில் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பானே தவிர அவள் கஷ்டத்திற்கு எழுந்து வந்து கையில் பிடித்திருக்கும் குடங்களில் ஒன்றை போய் வாங்க மாட்டான்.

அடியெல்லாம் வாங்கி மறத்துப் போனதில் அவன் உதவவில்லையே என்று என்றுமே ராணி எதிர்பார்த்ததில்லை. தானே எல்லா வேலைகளையும் செய்து பழகி கொண்டாள்.    

தூக்க முடிந்தால் தூக்குவாள். அல்லது இழுத்து செல்லுவாள். அதுவும் முடியவில்லையென்றால் அக்கம் பக்கத்தில் யாரையாவது உதவி கேட்பாளே ஒழிய அவனிடம் போய் நின்றதில்லை. நின்றால் மட்டும் என்ன ஆகி விடப் போகிறது?

‘தடிமாடு போல வீட்டில் தின்று தின்று தூங்குறே! இந்த வேலை கூட  உன்னால செய்ய முடியாதா என்று திட்டுவான். ஏன் வம்பு?’ என்று ஒதுங்கி விடுவாள். மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளை கூட அவன் அவளுக்கு செய்ததில்லை.

அப்படியிருந்த ஒருவன் இப்போது உதவினால் அவளுக்கு ஆச்சரியம் தானே தோன்றும்?

அவள் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்த ராஜா “இந்தப்பை ரொம்ப வெயிட்டா இருக்கு. நீ ஒருத்தியா எப்படி தூக்குவே? வா நானும் ஒரு கை கொடுக்கிறேன்.” என்று சொல்ல ராணி எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்ததால் அவன் மெல்ல நடக்க ஆளுக்கொரு கைப்பிடியாக பிடித்து இருவருமாக எல்லா பைகளையும் ஒரு வழியாக வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.

பைகளை வெகு நேரமாக தூக்கி வந்ததில் ராணியின் முகம் வேர்வையில் மின்ன, அதை கவனித்தவன் அங்கிருந்த துண்டை எடுத்து மென்மையாக அவள் முகத்தை துடைத்தான். ராணி மீண்டும் பிரமித்து போனாள்.

அவனை வியப்புடன் பார்க்க, “இந்த ஒரு மாசமா என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்டா. நான் வேற என் கூடவே இருன்னு உன்னை படுத்தியெடுத்திட்டேன்.

எனக்கு அங்க என்னவோ உன்னைத் தவிர யாரையும் நம்ப முடியல. இப்ப தான் நம்ம வீட்டுக்கு வந்திட்டோமில்ல. இனிமே நான் உன்னை படுத்த மாட்டேன்டா.”

முகத்தில் வந்து விழுந்த முடியை ஒரு விரலால் ஒதுக்கி விட்டு ஆதரவாக பேசினான்.

ராணி வினோதமாக ‘இது எத்தனை நாளைக்கோ’ என்பது போல அவனைப் பார்த்து விட்டு மதிய உணவை சமைக்கப் போனாள். அவள் சமையலுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது ராஜா வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு வந்தான்.

ராணியின் வீட்டோடு ஒப்பிடும் போது இது பெரிய வீடு தான். இரண்டு அறைகள், கூடம், சமையலறை என அவர்கள் இருவருக்கு தாராளமாக இருந்தது.

ஒரு அறை படுக்கையறையாக இருக்க, மற்றொரு அறை பூஜையறை, ஸ்டோர் ரூம், உடை மாற்றயென பல விதங்களில் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ராணி முதல் நாள் என்பதால் எளிமையாக இருப்பதை வைத்து சமையல் செய்திருந்தாள். பருப்பு துவையல், வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், ரசம் அவ்வளவு தான்.

முன்பாக இருந்தால் இந்த சாப்பாட்டிற்கு தட்டு பறந்திருக்கும். சாப்பாட்டில் தினமும் அசைவம் இருக்க வேண்டும். ஒரு நாள் கூட தவறக் கூடாது.

இன்று என்ன சொல்லப்போகிறானோ என்று பயந்து கொண்டே சாப்பாட்டை அவன் வழக்கமாக அமர்ந்து சாப்பிடும் டேபிளில் வைத்தாள். அவனுக்கு மட்டும் தட்டை வைத்து விட்டு சாப்பிட அழைத்தாள்.

வீட்டை பார்த்து விட்டு களைப்பில் மருத்துவமனையில் இருந்து வரும் போது போட்டிருந்த உடையிலேயே அவன் தூங்கியிருந்தான்.

அவன் உடைமாற்ற வசதியாக ஒரு லுங்கியையும் டீ ஷர்ட்டையும்  எடுத்து வைத்தாள்.

அவனுக்கு ஒரு கையில் மாவுக்கட்டு போட்டிருந்ததால் உடை மாற்ற அடுத்தவர் உதவி தேவைப்பட்டது. மருத்துவமனையில் இருந்தவரை ஆண் தாதியர் செய்து விடுவர். இப்போது ராணியை தொந்தரவு செய்யக் கூடாதென்று அவனே முயன்று பார்த்தான். ஆனால் கைலி இடுப்பில் நிற்காமல் வழுக்கியது.

உடை மாற்ற சென்று வெகு நேரமாகியும் அவனைக் காணவில்லையே என்று ராணி தேடி வர ராஜா லுங்கியை ஒரு கையால் கொத்தாக பிடித்துக் கொண்டு அசடு வழிய நின்றான்.

ராணி கைலியை அவிழாத வண்ணம் கட்டி விட்டு மெளனமாக வெளியே வந்தாள்.

ராஜா “சாரிமா! திருப்பி உனக்கு தொந்தரவு குடுக்கிறேன்” என்று சொன்னதற்கும் அவள் தலையை மட்டுமே அசைத்தாள்.

சாப்பிடுவதற்காக டேபிளின் முன் அமர்ந்தவன், அவளைப் பார்த்து “நீ சாப்பிடலியா?” என்று கேட்டான்.

“நீங்க சாப்பிட்டதும் சாப்பிடறேன்” என்று சொல்லி விட்டு அவனுக்கு சாதம் பிசைந்து ஸ்பூனை போட்டு தட்டை அவன் முன்னால் வைத்தாள்.

ஒரு வாய் எடுத்து வாயில் போட்டவன் அதை சுவைத்து விட்டு

“ரொம்ப நல்லாயிருக்குடா. ஹாஸ்பிடல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. இப்ப இந்த குழம்பை சாப்பிட்டவுடனே தான் நிறைவாயிருக்கு” என்று பாராட்டியவன் ஒரு வாய் உணவை ஸ்பூனில் எடுத்து அவள் வாயருகே நீட்டி “சாப்பிட்டு பாரு” என்று வற்புறுத்தினான்.

அவன் வற்புறுத்தலால் வாயில் வாங்கிக் கொண்ட ராணி சுவைத்துப் விட்டு திகிலுடன் அவனைப் பார்த்தாள். குழம்பில் காரம் தூக்கலாக இருக்க உப்பை குறைவாகப் போட்டிருந்தாள்.

முன்பு ஒரு முறை இப்படி சமைத்தபோது அவன் வழக்கம் போல் தட்டை விட்டெறிய அதில் இருந்த குழம்பு ஒரு சொட்டு அவள் கண்ணில் பட்டு துடித்துப் போனாள்.கண் சிவந்து போனது.

அதைப் பற்றி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் வெளியே போனவன் மீண்டும் இரவு வந்த போது ஒரு வார்த்தை கூட ‘எப்படியிருக்கு’ என்று கேட்கவில்லை.

கண் பழையபடி ஆக ஒரு வாரம் ஆனது. கண் குருடாகி விட்டதோ என்று அவள் பயந்த பயம்?

இப்போது ஒன்றுமே சொல்லாமல் சாப்பிடுபவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“என்னமா?” அவன் பரிவுடன் கேட்டான்.

“இல்ல. குழம்புல உப்பு கொஞ்சம் கம்மியா…….” அவள் தயக்கத்துடன் இழுத்தாள்.

“அதுக்கென்ன? போட்டுக்கிட்டா போச்சு.” என்று சொல்லி அவனே கொஞ்சம் உப்பை போட்டு கலந்தான். ராணி அதிசயத்தில் ‘பே’ என்று அவனை பார்த்தபடியிருந்தாள்.

“உனக்கு பசியில கண்ணு பஞ்சடைஞ்சு போச்சு. என் சாப்பாட்டை வெறிச்சு பாத்தேன்னா எனக்கு வயிறு வலிக்கும். நீ உக்காரு” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து நாற்காலியில் அமர வைத்தவன் அவளுக்கும் தனக்குமாக  தட்டில் இருந்த உணவை கொடுத்தான். இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

ராணி அவனுக்கான மாத்திரைகளைக் கொடுத்தாள். ஓரளவு உடல் நிலை தேறியிருந்தாலும் அவனுக்கு அவ்வப்போது ஓய்வு தேவைப்பட்டது. அதனால் மீண்டும் படுக்கப் போனான்.

ராணியும் வேலையேதும் இல்லாததால் சற்று நேரம் படுக்கலாம் என அறைக்குள் போனவள், மூலையில் இருந்த அவள் பாயை எடுத்து விரித்தாள். கட்டிலில் இருந்த தலையணை ஒன்றை எடுக்க அவள் நீட்டிய கையைப் பிடித்து கொண்டு

“நமக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் தானே ஆச்சு? இல்ல அறுபது வருஷம் ஆச்சா?” என்று திடீரென்று சந்தேகம் கேட்டான் ராஜா.

ராணி இதே கேள்வியை ஏன் இவன் அடிக்கடி கேட்கிறான் என்பது போல பார்த்தாள்.

“இல்ல. இப்படி என் பக்கத்துல படுக்கறதை விட்டுட்டு கீழே படுக்கறியே? அதான் கேட்டேன். ஹாஸ்பிடல்ல பேஷண்ட் பெட்ல மத்தவங்க படுக்கக் கூடாது. ஆனா இங்கே அப்படியில்லையே? அதுக்குள்ளயா உனக்கு அலுத்து போய்ட்டேன்? நீ ஏன் வசதியா இந்த பெட்ல படுக்கறதை விட்டுட்டு கீழ படுத்துக்கற?”

ராணிக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.

இரவில் அவன் தேவை முடியும் வரை மட்டுமே அந்த கட்டிலில் படுக்க அவளுக்கு அனுமதி உண்டு.

அதன் பிறகு அவன் புரண்டு தாராளமாக படுக்க வேண்டும் என்று மற்ற நேரங்களில் அவள் கீழே தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும்.

இது அவன் சொன்ன சட்டம் தான். இப்போது அவனே கேள்வி கேட்கிறான். இதற்கு என்ன பதில் சொல்வது?  

அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து விட்டு

“ஓ! பட்டப்பகலில் என் பக்கத்தில் படுத்தால் நான் ஏதும் கணவனாக உரிமையெடுத்துக்குவேனோன்னு யோசிக்கிறியா?

பாருமா! ஒரு கை ஒரு கால் வேலை செய்யல. நான் உன்னை என்ன பண்ண முடியும்? ஒரு வேளை நீ எதாவது ஆசைப்பட்டால் தான் உண்டு. நான் அதிக பட்சம் உன் இடுப்புல கையைப் போட்டுட்டு தூங்கலாம்னு நினச்சேன். அவ்வளவு தான்.” என்று குறும்பாக சொன்னான்.

அவனது ஒவ்வொரு பேச்சும் முன்னர் இது போல நடந்த சம்பவத்தை அவளுக்கு நினைவு படுத்துவதோ அது அவள் மனதில் சூறாவளியை உண்டாக்குவதையோ அவன் அறியவில்லை.

“இல்ல. நான் கீழயே படுத்துக்கறேன். உங்க கை காலில் இடிக்காம இருக்கும்.” என்று சமாதானம் சொன்னாள்.

“அப்ப நானும் கீழயே படுத்துக்கறேன்” என்று ராஜா எழுந்திருக்க வேறு வழியின்றி “வேண்டாம். அப்புறம் உங்களுக்கு எழுந்திருக்க கஷ்டமா இருக்கும்” என்று பதில் சொல்லி ராணி அவன் கைக்கு இடைஞ்சல் இல்லாதபடி முதுகை காட்டிப் படுத்து கொண்டாள்.

ராஜா நினைத்ததை சாதித்த புன்னகையோடு அவள் இடையின் மேல் கையை போட்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அங்கேயே மென்மையாக ஒரு முத்தம் பதித்து விட்டு கண்ணை மூடியவன் உடனே உறங்கி விட்டான்.

ராணிக்கு தான் தூக்கம் போனது. இதற்கு முன் அவன் அவளோடு இதை விட நெருக்கமாக இருந்த போதெல்லாம் தோன்றாத சிலிர்ப்பு அந்த ஒற்றை முத்தத்தில் வந்தது.

திருமணமான புதிதில் எல்லா இளம் பெண்களையும் போல அவளும் பல கற்பனைகளுடன் வந்தாள் தான். ஆனால் ராஜா நடந்து கொண்ட விதம் நாளடைவில் அவள் மென்மையான உணர்வுகளை மரத்துப்  போகச் செய்ததோடு வெறுக்கவே செய்து விட்டது.

இன்று அவன் மென்மையாக நடந்த விதம் இறந்து போன அந்த உணர்வுகளை எழுப்பி விட அதை அனுபவித்தபடி ராணி உறங்காமல் வெகு நேரம் படுத்திருந்தாள்.

மாலையில் ராணி எழுந்து காபி போடப் போனதும் அவனும் அவள் பின்னாலேயே எழுந்து வந்து விட்டான்.

“நீ எழுந்திட்டியா? அதுக்கு அப்புறம் எனக்கும் தூக்கம் வரலை. அதான் நானும் எழுந்துட்டேன்” என்று வெகுளியாக சிரித்தபடி சொன்னான்.

அவன் முகபாவனை சின்ன குழந்தைகள் தூங்கும் போது அம்மா எழுந்து போனால் பின்னோடு எழுந்து வருமே அது போல இருந்தது.

ராணி ஒரு சின்ன சிரிப்புடன் அவனிடம் காபி டம்ளரை கொடுத்தாள். அதை வாங்கி கொண்டு சமையல் மேடையில் சாய்ந்து நின்று கொண்டவன் அவள் முகத்தை பார்த்தபடி

“உனக்கு தெரியுமா? இந்த ஒரு மாசத்துல இப்ப தான் முதல் முறையா என்னை பார்த்து நீயா சிரிச்சிருக்கே?” என்று குற்றம் சாட்டும் தொனியில் சொன்னான்.

அவள் இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தர்மசங்கடத்துடன் அவனை பார்த்தாள்.

“அது மட்டும் இல்ல. நீயா என் கிட்டே ஒரு வார்த்தை கூட பேசறதே இல்லை. கேட்ட கேள்விக்கு பதில். அவ்வளவு தான்.

நான் கூட நீ ரிசெர்வ்ட் ஆன ஆள். அதிகம் பேசாத அமைதியான பொண்ணுன்னு நினைச்சிருந்தேன். ஆனா உன் தம்பி தங்கச்சி வந்தா அவங்க கிட்ட அப்படி பேசி சிரிக்கிறே.

என் கிட்டே மட்டும் என்ன கஞ்சத்தனம்? நானும் உன் கிட்ட எத்தனையோ தடவை கேட்டு பாத்துட்டேன். உனக்கு என் மேல என்ன கோபம்னு தெரியவே இல்ல.

நீ கோபமா இருந்தாலோ ஒதுங்கி போனாலோ இங்க வலிக்குது ராணி.” என்று காபி டம்ளரை மேடையின் மேல் வைத்து விட்டு தன் நெஞ்சை தொட்டுக் காட்டினான்.

கையிலும் காலிலும் கட்டுடன் பரிதாபமாக அவன் கேட்டது ராணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

ராணிக்கு அவள் கோபத்தை இழுத்துப் பிடித்து கொண்டு தொங்க முடியவில்லை. சற்றுமுன் உணர்ந்த சுகமான உணர்வுகளும் அவளை அவனிடம் கடுமையாக நடந்து உள்ள விடவில்லை. அதோடு பழைய கசப்பான சம்பவங்களை இப்போது நினைக்க அவளுக்கே பிடிக்கவில்லை.

அதனால் நிஜமாகவே கண்களிலும் சிரிப்புடன் “சரி உங்க கிட்டயும் நல்லா பேசறேன். இப்ப இந்த சிரிப்பு போதுமா?” என்று விளையாட்டாக கேட்டபடி ஈயென்று பல்லை காட்டினாள்.

“சிரிக்க தானேம்மா சொன்னேன்? அதுக்கு இப்படி பயமுறுத்தணுமா? நானே பயந்து போயிருக்கேன். நீ வேற ஏம்மா?”  என்று ராஜா அவளை கிண்டல் செய்ய “உங்களை…..” என்று வாய் கொள்ளா சிரிப்புடன் செல்லமாக அவன் நெஞ்சில் குத்தினாள்.

“உனக்கு தெரியுமா? இதுதான் நீயா முதல் தடவை என்னை தொடறது?”

ராணி முகம் வாடி கையை எடுக்கப் போக “நீ இப்படியே இருடா ப்ளீஸ்” என்று அவள் கையை பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டான்.