Advertisement

அத்தியாயம் 18

அறைக்குள் வந்த மீனா கட்டிலில் அமர, அலைபேசியை நோண்டியபடி படுத்திருந்தான் குமரன்.

அலைபேசியைத் தூர வைத்து விட்டு, புரண்டு வந்து உரிமையாக அவள் மடியில் தலை வைக்க, மெல்லச் சுகமாகத் தலை கோதியவள், “என்ன இன்னைக்கு எல்லாம் புதுசா இருக்கு?” என்றாள் விசாரணையாக.

குரல் கொஞ்சுகிறதோ என்பதில் சந்தேகம் தான். “யார்? நானா? நீ தான் இன்னைக்குக் காலையில இருந்து புதுசா இருக்க..” என்றான் சரசமாக. கைகளோ அவள் இடையை அழுத்தமாக இறுக்கி அணைத்துக் கொள்ள, புது சுகத்தில் நெளிந்தாள்.

“அப்படியெல்லாம் எதுவுமில்லை, உங்க பிறந்தநாள்.. கோயிலுக்குப் போனோமே..” எனப் பதிலளிக்க திணறியவளுக்கு வார்த்தை கோர்வையாக வர மறைத்தது.

பொதுவாக குமரா என்பவளுக்கு அவ்வப்போது மரியாதையும் வார்த்தைகளில் வந்து போகும். அதில் அவள் மனநிலையை சரியாக புரிந்து கொள்வான் குமரன்.

அவள் உள்ளங்கையைப் பற்றியவன் இதழ் ஒற்றியபடி, “ஆமாம், பிறந்தநாள் எனக்குத் தானே? ஆனால் காலையில இருந்து பரிசும் நானே தாறேன்னே..” என்றவன் வார்த்தையில் தூண்டில் போட, நாணம் பொங்கச் சிரித்தவள் பதிலேதும் சொல்லவில்லை.

ரசனையோடு ரசித்தவன், உல்லாசமாக எழுந்தமர்ந்து அவள் கன்னங்களில் மாறி மாறி இதழ் பதித்தான்.

லேசாக உடல் நடுங்கினாளே தவிர, மறுக்கவில்லை. அவள் அனுபவிக்கிறாள் என்பதே போதுமானதாக இருக்க, மேலும் போதையேறியவன் அவள் வழுவழு கன்னத்தோடு தன் கன்னம் உரசிப் பதிய அணைத்துக் கொண்டான்.

அவன் முன்னேறுவதும் அது முடியும் இடமும் மீனாவிற்கு புரிந்தது. மேலும் குழைந்து கொஞ்சினாள்.

அவள் மேனி சிவப்பும் கன்னங்களின் வனப்பும் குமரனைத் தன்னிலை மறக்க வைத்தது. மேலும் மயக்கம் கொண்டவன், அவளை அணைத்துக் கழுத்தோரம் முகம் புதைய உரசியபடி, “ஏன் அழகு, எனக்குப் பிறந்தநாள் பரிசு எதுவுமில்லையா?” என்றான், குரலில் ஏக்கமும் ஆசையும் வழிந்தோட.

அதைப் புரிந்தும் எப்படி அவளால் மறுக்க முடியும்? ஆசை என்பது பெண் உடலுக்கும் உண்டு தானே? என்ன வேண்டுமென்று கேட்டு அவனும் ஏடாகூடமாக ஏதவாது கேட்டுவிட்டால்? அந்த எச்சரிக்கை உணர்வும் மனதில் இருக்க, மேலும் மௌனமானாள்.

அதே நேரம் அவள் இதழ் நோக்கி, இன்ச் இடைவெளியில் இருந்தவன் அவள் பதிலுக்காகக் காத்திருக்க, அவளோ விழி மூடி வரவேற்றாள். புரிந்தது, முன்னேறினான்.

இதழோடு இதழ் பதித்தான், அவளோ தன்னை தொலைத்தாள். எத்தனயோ முத்தங்கள் இட்டிருந்த போதும் இதழ் முத்தம், இது முதல் முத்தம். இவருக்கும் சுகமானதும் நினைவில் அழியாததுமானது.

மூச்சு முட்டிய போதே விருப்பமின்றி விலகியவன், “சொல்லு அழகி..” என உசுப்பேற்றினான்.

‘விடாக்கண்டன்! சொல்லாமல் விடமாட்டான் போல்  இருக்கே’ மனம் சிணுங்க, ஒரு நொடி யோசித்தவள், “அதான் ஸ்வீட் செஞ்சேனே?” என்றாள் சட்டென.

கலகலவெனச் சிரித்தவன், “எது? ஸ்வீட்டே இல்லாம செஞ்சியே அந்த ஸ்வீட்டா?” என்றான் கேலியாக.

முறைத்தவள் உதட்டைச் சிலுப்பிக்கொண்டு, “அது, உங்க அப்பத்தா எப்படியும் திருடித் திங்கும்னு தெரிஞ்சே சுகர் கம்மியா போட்டேன்” என்றாள்.

பொங்கிச் சிரித்தவன், “அடியே.. ஏன்டி வந்த நாள்ல இருந்து அப்பத்தாவை இந்தப்பாடு பாடுத்துற?” என அவரை நினைத்து பரிதாபமாகக் கேட்க, “ம்ம்.. அதுவா? சின்ன வயசுல என் முடியைப் பிடிச்சி இழுத்து திட்டுனாங்களே அதுக்குத் தான்..” என்றாள் சிலுப்பலாக.

பழி வாங்க வேண்டுமென்று செய்யவில்லை, அவர் நன்மைக்குத்தான் செய்தாள். ஆனால் அவன் கேட்டதால் வம்பு வளர்க்க நினைத்து, விளையாடினாள்.

வியந்தவன், “சின்ன வயசுல நடந்ததை எல்லாம் இன்னுமா ஞாபகம் வைச்சிருக்க?” என்க, “என்னவோ உடைஞ்ச பொம்மையைத் தூக்கி எறியிற மாதிரி நீயும் தான் என்னை வீட்டை தூக்கி எறிஞ்சிட்டுப் போன..” என்றாள் சட்டென.

குரலே வெம்பி வர, குமரனுக்கு முகமே சுருங்கிவிட்டது.

தொட்டதும் உடைந்துவிட்ட நீர்க் குமிழி போன்று உடைந்தது, அதுவரை இருவருக்குள்ளும் இருந்த இன்பநிலை.

“அது ஏதோ அப்போ சின்ன வயசு தெரியாம செஞ்சிட்டேன். மன்னிச்சிடு அழகு..” என்றான் மெத்தையிலிருந்த அவள் கரத்தைப் பற்றியபடி.

“என்னை, எங்க உறவை வேணும்னு நினைச்சிருந்தா அப்படி செஞ்சிருப்பியா? வேண்டாம்னு தான் தூக்கி எறிஞ்சிட்ட..” என்றாள் பெரும் குறையாக, குரலே கேவியது.

அவள் கலங்கிய முகம் அவனையும் கலங்கடிக்க, “சாரிடி அழகு.. எனக்கு அப்போ இவ்வளவு எல்லாம் விவரம் தெரியலை. நீ இவ்வளவு வருத்தப்படுவேனும் எனக்குத் தெரியாது.. சாரி.. சாரி..” என்றவன் இறங்கிய குரலில் வேண்டினான்.

“உனக்கு தெரியாது சரி, ஆனால் உங்க அப்பத்தா? அவங்க எவ்வளவு பெரிய மனுஷி..! அவங்களுக்குத் தெரிய வேண்டாமா? ஒரு சின்னப் பிள்ளையை எப்படியெல்லாம் திட்டக்கூடாதுன்னு தெரிய வேணாமா? இரண்டு குடும்பத்துக்குள்ள பிரச்சனைன்னா நான் என்ன செஞ்சேன்? எனக்கு அந்த அளவுக்கு அர்த்தமோ விவரமோ கூடத் தெரியாது, என்னைப் அப்படிச் சொல்லுவாங்களாமா?” என்றவள் தேம்பியபடியே, இன்று அவனிடம் நியாயம் கேட்டாள்.

தற்சமயம், படிப்பும் அறிவும் குமரனும் என அத்தனையும் மறந்தவள், மனமுடைந்து நின்ற அதே சிறு பெண்ணாகத்தான் நின்றாள். உள்ளத்தில் அத்தனை கொதிப்பு, மாறாகக் கண்களிலோ கண்ணீர் வழிந்தது.

“அப்படியென்ன சொன்னாங்க? எனக்குத் தெரியாது அழகு..” என்றவன் சாமாதனத்திற்கு வர, அவளோ மேலும் சீறினாள். இப்போதும் அவள் நெஞ்சம் கொதித்தது, மனம் தாங்கவேயில்லை.

“ஆமாம், உனக்கு எப்படித் தெரியும் நீ தான் என்னை வீசி எறிஞ்சிட்டு ஓடிட்டியே..” எனக் குற்றச்சாட்டினாள்.

‘ஐயோ..!’ என்றிருந்தது குமரனுக்கு.

இப்போதைக்கு அவள் விட மாட்டாள் என்பதும் புரிந்தது. இருந்த இன்பமான மனநிலை கெட்டதில் சற்றுக் கோபம் துளிர்த்தது.

“நான் உன்னை மயக்கப்பார்க்குறேனாம், வளைக்கப் பார்க்குறேனாம்.. எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை. வீட்டுப்பக்கம் வரக்கூடாது, உங்ககிட்ட எல்லாம் பேசக் கூடாதுன்னு சொன்னாங்க” என்றாள் அனலாய் முகம் சிவக்க.

‘வேலுநாச்சி’ பற்களை கடித்தவனுக்கு நெற்றியில் அறைந்து கொள்ளலாம் போன்றிருந்தது.

“அது வரைக்கும் என் ஜெயராணி அத்தை மகன்னு உன் மேல பாசமிருந்தது, அப்புறம் தான் பிடிக்காம போச்சி. அப்போ புரியலைன்னாலும் வளர வளர அர்த்தம் புரியவும் வாழ்கையில என்ன நடந்தாலும் உன்னை மட்டும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு முடிவா இருந்தேன்” என்றும் வலியோடு வார்த்தையை விட்டாள்.

குமரனுக்கு சுருக்கென்று இதயத்தில் குத்தியது போன்றிருந்தது.

அவளோ விடாது, “இது வரைக்கும் யாரும் என்னை கீழா நினைக்கக் கூடாது, என் கேரக்டரைப் பேசிடக்கூடாதுன்னு கவனமா இருந்தேன். ஆனால் நான் எதை நினைச்சுப் பயந்தேனோ அந்தப் பெயரை தான் நீ எனக்கு வாங்கிக் கொடுத்திருக்க..” என்றவள் வெடித்து அழுதாள்.

குமரனுக்கு ரோஷமும் கோபமும் பொங்கிக்கொண்டு வந்தது.

“ஏய் நானாடி உன்னை வீட்டை விட்டு ஓடி வரச் சொன்னேன்? இல்லை, உன் பிரண்ட்ஸ்க்கு உதவி பண்ணச் சொன்னேனா? நீ சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தா அதுக்கு நான் பொறுப்பாவேனா?” என்றான் சீற்றமாக.

ஊரே சொல்லும் வார்த்தையை உண்மை அறிந்த அவனுமே சொல்லிக்காட்டிவிட, வெடித்தவள் பொங்கி பொங்கி அழுதாள்.

கோபமும் அவன் கண்ணை மறைக்க, அவள் அழுவதும் ஒருபுறம் நெஞ்சைப் பிசைந்தது.

“இப்போ ஏன் நீ அழுகிற? அன்னைக்கு நான் தாலி கட்டலைன்னா சுரேஷ் கட்டியிருப்பான், அப்புறமா உன்னை விட்டுட்டு ஓடியிருப்பான். அப்போ மட்டும் உனக்கு நல்ல பெயர் வருமோ? என்னால தான் கெட்டப்பெயர்னு நீ எப்படிச் சொல்லாலம்?” எனக் குரலின் தொனியே உயர, நியாயம் கேட்டான்.

அவள் மனதில் அவனை எந்த இடத்தில் வைத்திருக்கிறாள் என்பதும், அவள் மீதான தன் நேசம் மதிப்பற்றுப் பொய்த்துப் போனதையும் குமாரனால் சிறிதும் தாங்க முடியவில்லை.

“உனக்கே நல்லாத் தெரியும், நான் உன் மேல உசுரையே வைச்சிருக்கேன்னு, உனக்கும் பிடிக்கும் தானே? அப்புறம் என்னவோ நான் கட்டாயத் தாலி கட்டின மாதிரி பேசுற? நானும் நீயும் காதலிக்கிறோம்னு சொல்லிக்கிறதுல உனக்குக் கௌரவக் குறைச்சலா? அவமானமா? கெட்டப் பெயர்னு நீ எப்படிச் சொல்லலாம்?” என உலுக்கினான் குமரன்.

மீனாவிற்கு வார்த்தையே வரவில்லை. இதையெல்லாம் அவள் யோசிக்கவில்லை, தன் வேதனையை சொன்னாலே தவிர, அது அவனைக் காயப்படுத்தும், இப்படி யோசிக்க வைக்கும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

பதிலேதுமில்லாது மீனாவின் கண்ணீர் இன்னும் அதிகமாக, “தாலி கட்டுனேன் தான், அதுக்குன்னு உன்னை அப்போன்னு விட்டுட்டேனா? வைச்சி வாழுறேன்ல? ஒருவேளை உனக்கு இதான் பிடிக்கலையா? உனக்கு எந்தவிதக் கட்டாயமும் இல்லை. உனக்கு இந்த உறவை முறிக்கணும்னா தாராளமா இந்த வீட்டை விட்டுப் போகலாம்..” என்றவன் அவ்வளவு தான் வாக்குவாதம் முடிந்தது என்பது போல், இழுத்து மூடிக் குப்புறப்படுத்து விட்டான்.

குடும்பங்களுக்கிடையிலிருக்கும் பிரச்சனையில் நடக்கவே வாய்ப்பற்றுப் போன தங்கள் திருமணம் இப்படியாவது நிகழ்ந்ததே என்ற நிம்மதியிலிருந்த குமரனிற்குத் தன்னை மட்டும் அவள் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவிலிருந்தாள் என்பதை அறிய, தாங்கமுடியவில்லை.

மறுபுறம் முகுதுகாட்டிப்படுத்துவிட்ட மீனாவிற்கு விசும்பல் நின்றபாடில்லை.

அன்றும் வெளியே வீசினான், இன்றும்போ என்கிறானே? அவ்வளவு தானா, அவன் காதலும் பாசமும்? பெற்றோர்களின் நம்பிக்கையும் இழந்து விட்டேனே? என்ன வாழ்வு? என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

என்னவோ யாருமற்றுப் போனதைப் போல் அநாதரவாக உணர்ந்தவளுக்குக் கண்ணீர் மட்டும் துணையானது.

எப்போதும் அறைக்குள் குடும்ப விஷயங்களைப் பேசுவர். இன்றேனோ அது இப்படிப் போய் முடிவுமென இருவரும் எதிர்பார்க்கவில்லை.

காலையிலிருந்து இருந்த இதமான, இன்பமான மனநிலையைத் தொலைத்து விட்டுத் தான் உறங்கினர் இருவரும்.

மறுநாளிலிருந்து இருவரும் முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவர் அறியாது ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டனர்.

இருவருக்குமிடையில் ஒரு விரிசல் விழத் தொடங்கியிருந்தது. அது வீட்டிலிருக்கும் பெரியவர்களின் கண்களுக்கும் நன்கு புலப்பட்டது.

குமரனை அழைத்த வேலுநாச்சி, “ஏப்பு, அவளை எதுவும் சொல்லிட்டியப்பு? புள்ளை முகமே வாடிக்கிடக்கு?” என விசாரித்தார்.

சுந்தரமூர்த்தியோ, “வீராவேசமா தாலி கட்டுறது மட்டும் பெருசில்லை குமரா.. நம்மளை நம்பி வந்த புள்ளையை மனம் கஷ்டப்படாம, சந்தோஷமா வைச்சிகிறதுல தான் இருக்கு உன் பாசம். அதுவும் மீனா பிறந்த வீட்டு ஆதரவு இல்லாம உன்னையே நம்பி வந்திருக்கு.. விட்டுக்கொடுத்து சந்தோஷமா வைச்சிக்கோ அவ்வளவு தான் சொல்லுவேன்” என அறிவுரைக் கூறியிருந்தார்.

யோசித்துப்பார்த்தால், சற்று தன்மையாக பொறுமையாக புரிய வைத்திருக்க வேண்டுமோ? நாமும் இவ்வளவு கோபமாகப் பேசியிருக்கக் கூடாதோ? என்ற உறுத்தல் தோன்றியது குமரனுக்கு.

அன்று டவுனில் குமரனைப் பார்த்த அசோக்கின் தந்தை மாடசாமி வீட்டுக்குச் சில பொருட்களை வாங்கிக் கொடுத்து அனுப்பினார்.

காலை எட்டுமணிக்குப் பணி முடிந்து இறங்கிய குமரனுக்கு மீனாவின் நினைவு தான், இந்த நேரம் அவளும் தான் பணிக்குச் சென்றிருப்பாளே? என்ற ஏக்கமும்.

நேராக அசோக்கின் வீட்டிற்குச் செல்ல, கதவு மூடியிருந்தது.

சுற்றிப்பார்க்க, நந்தினி வள்ளியின் வீட்டு வாசலில் நிற்பது தெரிய, “என்னாச்சும்மா நந்தினி?” என்றபடி அங்கே சென்றான்.

“வள்ளியத்தை மாடு கண்ணு ஈன சிரமப்படுதுண்ணே.. ராமநாதன் மாமா வீட்டுல இல்லை போல, கம்பவுண்டர் நம்பர் கொடுத்தாங்க.. கால் பண்ணிப் பார்க்கிறேன், கால் போகலை” என்றாள் டென்ஷனாக.

அவளே நிறை மாதத்தோடு பெரு மூச்சு வாங்கியபடி இருக்க, “திண்ணியில உக்காரு.. நீ டென்ஷனாகாதே.. நான் பார்க்கிறேன்” என்றபடி விறுவிறுவென உள்ளே சென்றான்.

அசோக்கின் அன்னை கமலம் அடுப்படியில் சுடுதண்ணீர் வைத்துக்கொண்டிருக்க, வள்ளி மாட்டின் அருகிலிருந்தார்.

மீனா, லட்சுமி எனக் குறிப்பிட்டிருந்த அதே மாடு.. கண்ணீர் வழிய மெல்லிய முனங்கல் கனைப்போடு சிரமப்பட, வள்ளியும் கண்ணீர் வடிய பதைபதைப்போடு பார்த்திருந்தார்.

விவாச வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் அவர்கள் வாழ்வாதரம் மட்டுமின்றி அவர்கள் பிள்ளைகளுக்கு நிகரான பாசம் கொண்டவைகள்.

“என்னாச்சு அத்தை?” எனக் குமரன் வர, “இரண்டு நாளா மாட்டுக்குச் சுவமில்லைப்பா.. ஒருபொட்டு இரைகடிக்கலை.. இந்த நேரம் பார்த்து கண்ணு ஈன வர, ரொம்பவும் சிரமப்படுதே..” என விம்மினார்.

அவ்வப்போது ஜாடை மாடையாகப் பேசுபவர், அந்த பழக்கத் தோஷத்தில் பதைபதைப்பில் தன்னிலை உணராது நேரடியாகவே குமரனிடம் பேசியிருந்தார். அந்த மாட்டைப் பார்க்கையில் அவனுக்கும் பரிதாமாக இருந்தது, பிரசவம் என்பது அத்தனை எளிதல்ல!

வாயில்லா ஜீவனுக்கு வலிக்கிறது எனச் சொல்லத் தெரியாதே!

பார்த்த குமரனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை, “இதோ வருகிறேன்..” எனச் சென்றவன் அடுத்த நில நிமிடங்களில் எல்லாம் கையோடு கால்நடை உதவியாளரை அழைத்து வந்திருந்தான்.

அவர் வந்து பரிசோதித்து, சிகிச்சை கொடுக்க, அதன் உதவியோடு அடுத்தச் சில நிமிடங்களில் சிரமத்தோடு கன்றை ஈன்றது லட்சுமி.

செம்பழுப்பு நிறத்தில் அழகான பெண் கன்றுக்குட்டி.. பார்க்கப் பார்க்க அள்ளிக் கொஞ்ச ஆசையாக இருந்தது.

பார்த்த வள்ளிக்கும் குமரனுக்கும் ஒருசேர அழகு மீனாளின் நினைவு தான்.

நந்தினிக்கு முடியவில்லை என கமலம் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அதன் பின்னே குமரன் தன் வீட்டிலிருப்பது உரைத்தது வள்ளிக்கு. வாவென்று அழைக்கவும் மனம் வரவில்லை, போ என்று விரட்டவும் முடியவில்லை.

“அவர் வர நேரமாகும்..” என்றார் ராமநாதனை குறிப்பிட்டு.

எதுவாக இருந்தாலும் அவரோடு மட்டும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளுமாறு பொருள்.

“சரிங்க அத்தை, நான் மாமாவைப் பார்க்க வரலை..” என்றவன் ஒரு நொடி அமைதிக்குப் பின், “அழகு மீனா மேல இன்னும் கோபமா இருக்கீங்களா?” என்றான்.

அவர் முகம் திருப்பியபடியே, “நாயை வளர்த்தாலும் நன்றியோடு இருந்திருக்கும்..” எனப் பொருமினார்.

சட்டென, “அப்படிச் சொல்லாதீங்கத்தை.. ஏதா இருந்தாலும் என்னைச் சொல்லுங்க. மீனாவை வெறுக்காதீங்க. அவ எந்தத் தப்புமே செய்யலை..” என பரிந்து பேசினான்.

“என்ன? என்ன தப்பு செய்யலை? பொய் சொல்லிட்டுட்டு வீட்டை விட்டு ஓடலையா?” என்றார் சினமாக.

“இல்லை. பொய் சொல்லிட்டு வீட்டைவிட்டு ஓடி வரலை,சுரேஷூக்கு உதவி செய்யத் தான் வந்தாள்” என மறுத்தவன், அனைத்து உண்மைகளையும் சொல்லி விளக்கினான்.

நம்ப இயலாது அதிர்ந்த வள்ளி, பொத்தென்று பின்கட்டுத் திண்ணையில் அமர்ந்தே விட்டார்.

இந்த நேரம் மட்டும் மீனா கண் முன்னே இருந்திருந்தால் அடி பின்னி எடுத்திருப்பார்.

தன் மகள் மீது தவறில்லை என்பதற்கு மகிழ முடியவில்லை. எவ்வளவு பெரிய விஷயத்திற்குத் துணை போயிருக்கிறாள், அது மட்டுமின்றி எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறாள்.. இருப்பதே உயிருக்கு உயிரான ஒற்றை மகள் அவளுக்கு ஒன்று என்றால் தாங்க இயலுமா? 

“இதுல மீனாவோட தப்பு எதுவுமில்லை. அவ சூழ்நிலையை எனக்குச் சாதகமாக நான் தான் யூஸ் பண்ணிக்கிட்டேன். மீனா உங்களுக்குக் கொடுத்த வாக்கை மீறலை. உங்க வளர்ப்பு தப்பா போகலை அத்தை. எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடுக்க. மீனாவை வெறுக்கக் கூடாதுத்தை..” என மீண்டும் வேண்டினான்.

அவன் கெஞ்சி நிற்பதிலும் வேண்டுவதிலும் மீனாவின் மீது குமரன் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

உண்மையில் குமரன் மீது கூட கோபமில்லை.

பிரச்சனை, எல்லாம் செய்த நன்றியை மறந்த சுந்தரமூர்த்தியுடனும் சொல்லிக்காட்டிய வேலுநாச்சியுடனும் தான். அதிலும் கோபம் என்றில்லை, வருத்தம் தான் ஆகையாலே ஒதுங்கிக் கொண்டனர்.

“என்ன இருந்தாலும் மீனா உங்க மகள் அத்தை, நீங்க சொல்லிக் கொடுத்த பண்பும் நல்ல குணமும் தான் எங்க வீட்டை ராஜ்ஜியம் பண்ணுது. எங்க தொழிலும் உங்களால உண்டாகி வளர்ந்தது தானே அத்தை? அது மாதிரி, நீங்க ஏத்துக்கிட்ட ஆசீர்வாதம் பண்ணா தான் எங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும்.. நீங்கதான் எங்களுக்கு எல்லாமும்” என்றவன் வார்த்தைகளில் வெண்ணையை தடவ, வள்ளி உருகினார்.

வள்ளியின் குணமே அதுதானே, தன்னைச் சார்ந்து வருபர்களுக்கு மறுக்காது அள்ளி அள்ளிச் செய்பவர்.

அவர் மௌனமாகவே யோசனையிலிருக்க, சொல்ல வேண்டியதை சொல்லிவிட்ட திருப்தியில் குமரன் கிளம்பிவிட்டான்.

Advertisement