Advertisement

இலக்கணம் – 8
தேர்வுக்காய் கிளம்பிக் கொண்டிருந்தனர் விக்ரமும் வினோத்தும்.
“டேய் விக்ரம்…… இன்னைக்காவது உன்னோட மனசில் உள்ளதை இலக்கியாகிட்டே சொல்லப் போறியா… இல்லை சொல்லாம திரும்ப வந்திடுவியா….” என்றான் வினோத்.
“ம்ம்….. எக்ஸாம் முடிஞ்சதும் அவகிட்டே பேசறேன் டா…. இன்னைக்கு கண்டிப்பா சொல்லிடறேன்….” என்றான் விக்ரம்.
“ம்ம்…. சரிடா….. உன் மனசுல உள்ளதை ஓபனா சொல்லிடு….. அப்புறம் அவ விருப்பம்….. வா கிளம்பலாம்…..” என்றவன் கல்லூரிக்கு கிளம்பினான்.
இலக்கியாவை சந்திக்கும்போது என்னவெல்லாம் பேச வேண்டும்…. தன் மனதை எப்படி அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று யோசித்துக் கொண்டே நண்பனுடன் கிளம்பினான் விக்ரம். அவன் மனதில் தேர்வின் வெற்றியைப் பற்றிய சிந்தையை விட இலக்கியாவின் மனதை வெற்றி கொள்வோமா என்ற சிந்தையே நிறைந்திருந்தது.
தேர்வை வெற்றிகரமாய் எழுதி முடித்து சந்தோஷத்துடன் வெளியே வந்தனர் இலக்கியாவும், வீணாவும்.
“ஏய் இளா….. நான் காலைலயே கேக்கனும்னு நினைச்சேன்… எக்ஸாம் டென்ஷன்ல விட்டுட்டேன்… இன்னைக்கு என்ன உன் மூஞ்சி நாலஞ்சு சூரியன் ஒரே நேரத்துல உதிச்ச போல பளபளன்னு மின்னுது….. உன் அத்தான் அதிகமா அங்கங்கே பரிசு கொடுத்துட்டாரா…..” என்றாள் குறும்புடன்.
“அடச்சீ….. போடி….. அசிங்கமா பேசிட்டு….. அதெல்லாம் இல்லை….” என்றவளின் முகம் நாணத்தில் பிரகாசிக்க, “அப்புறம் இந்த வெக்கத்துக்கும், சிணுங்களுக்கும் வேற என்ன காரணம்……” என்று யோசனையாய் பார்த்தாள் வீணா.
“நாம கேண்டீன்ல உக்கார்ந்து பேசுவோம்…. ஸ்வீட்டோட சொல்லறேன் வா….” என்றவள் அவளையும் அழைத்துக் கொண்டு காண்டீனுக்கு சென்றாள். வாசல் சுவரை ஒட்டி இருந்த மேசை எதிரில் அமர்ந்தவளின் முகத்தில் மாறாத சிரிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
“என்னடி….. என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு…. ரொம்ப தான் பண்ணாத…..” என்ற வீணா, அவளே ஸ்வீட் வாங்கி வந்து அமர்ந்தாள்.
“நேத்து வீட்ல எங்க கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருந்தாங்க….. நானும் படிக்கற மாதிரி பாவ்லா பண்ணிட்டு அவங்க பேசுறதை கவனிச்சுட்டு இருந்தேன்….. திடீர்னு அப்பா என்னைக் கூப்பிட்டு அத்தானைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பம் தானான்னு கேட்டார்….. அய்யய்யோ… என்னடா இது அப்பாவே நேரடியா கேக்கறாரே… எனக்கு ரொம்ப இஷ்டம்தான்னு எப்படி சொல்லறதுன்னு முழிச்சிட்டு, உங்களுக்கு என்ன விருப்பமோ அதுவே என் விருப்பம் பான்னு நல்ல பொண்ணா சொல்லிட்டு ஓடிட்டேன்…..” என்று சிரித்தாள் இலக்கியா.
“ஹஹா….. அடிப்பாவி….. எப்படா கல்யாணம் வைப்பாங்க… அத்தானோட கையைப் பிடிச்சுட்டு உலகத்தை சுத்தலாம்னு காத்திட்டு இருக்கவ நீ…. ஒண்ணும் தெரியாத அப்பாவியா அப்பாகிட்டே நல்லவளாட்டம் சொல்லிட்டு வந்தியாக்கும்….. சரி அப்புறம் என்ன பேசிகிட்டாங்க….. அத்தானும் அங்கே இருந்தாரா……”
“ஹலோ…. அவர் என்னோட அத்தான்….. நீ அண்ணான்னு தான் சொல்லணும்….” என்றவள் அவள் முறைக்கவும் சிரித்தாள்.
“இதைப் பத்தி பேசும்போது அத்தான் வீட்ல இல்லைடி….. அவர்கிட்டே பேசிட்டு ஜோசியரை வரச்சொல்லி நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க…… நைட் அத்தான் சொன்னார்….. அவர்கிட்டே அப்பா பேசினார்னு….. அவரும் மாமாவோட விருப்பம் தான் தன் விருப்பம்னு சொல்லிட்டாராம்….” என்று சிரித்தவள்,
“என்னுடைய எத்தனை வருஷக் கனவு….. இப்ப நினைவாகப் போறதை நினைச்சா எனக்கு அப்படியே சிறகில்லாம வானத்தில் பறக்குற போல சந்தோஷமா இருக்கு……..” என்றவளின் முகத்தில் வழிந்த சந்தோஷம் வீணாவையும் தொற்றிக் கொண்டது.
“ஓ……. உஜாலா போடாமலே உன் முகம் டாலடிச்சதன் காரணம் இப்ப விளங்கிருச்சு…. உன் அத்தை மகன் அத்தானை கை பிடிக்கப் போகும் சந்தோஷமா…… சூப்பர்மா….. அப்ப இந்த ஸ்வீட் எல்லாம் பத்தாது….. சூப்பரா ஒரு ட்ரீட் கொடுத்தே ஆகணும்…… எப்படியோ… விடுதலை… விடுதலை…. உன் அத்தான் புராணத்தில் இருந்து எனக்கு விடுதலை….. இனி எதுவா இருந்தாலும் அவர்கிட்டயே பேசிப்ப….. சரி எப்ப கல்யாணம்……” என்றாள் உற்சாகத்துடன்.
“ஜோசியரைப் பார்த்து அடுத்த நல்ல நாள்லயே நிச்சயம் வச்சுக்கறதா பேசிட்டு இருந்தாங்க…. கூடிய சீக்கிரமே கல்யாணம் வச்சிருவாங்கன்னு நினைக்கறேன்……” என்று சிறு வெக்கத்தோடு கூறினாள் இலக்கியா. “ஓ… சூப்பர்டி… உன் ஆசை நிறைவேறப் போகுது… இல்லன்னாலே கண்ணைத் திறந்து உன் அத்தானோட டூயட் பாடிட்டு இருப்பே… இப்போ கல்யாணமும் நிச்சயம் ஆகப் போகுதுன்னா எங்களை எல்லாம் யாருன்னே தெரியாது…… எப்படியோ நீ சந்தோஷமா இருந்தாப் போதும்… உன் மனசுக்குப் பிடிச்சவரோட அழகான மணவாழ்க்கை அமைய உன் அன்புத் தோழியின் மனமார்ந்த வாழ்த்து…..” என்று சிரித்தவள், வெளியே விக்ரம் சென்று கொண்டிருப்பதை ஜன்னலில் பார்த்து அவனை அழைத்தாள்.
“அண்ணா…. விக்ரம் அண்ணா…. இங்க வாங்க…..” கைகாட்டி அழைத்தவளைத் திரும்பி பார்த்தான்.
இலக்கியாவிடம் தன் மனதைத் திறக்க வந்தவன், அவர்கள் காண்டீனில் உள்ளதை அறிந்து அங்கே வந்திருந்தான். சந்தோஷத்தோடு அத்தானைப் பற்றி அவள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டவன் வந்த சுவடு தெரியாமல் திரும்பி விட நினைத்தான். அதற்குள் அவனைக் கண்டு விட்ட வீணா அழைக்கவும், மறுக்க முடியாமல் உள்ளே வந்தவன் இலக்கியாவின் எதிரில் இருந்த நாட்காலியில் அமர்ந்தான்.
“ஹாய் கேர்ள்ஸ்…. எக்ஸாம் எப்படி எழுதினிங்க…..” என்றான் சாதாரணமாய் தன்னைக் காட்டிக் கொண்டு.
“அதெல்லாம் வழக்கம் போல சொதப்பல் தான் அண்ணா…. அதை விடுங்க…. நம்ம இலக்கியாவுக்கு அவ அத்தானோட கல்யாணம் முடிவாகிருக்கு….. அதுக்கு முதல்ல ட்ரீட் கேளுங்க….” என்றாள் வீணா.
“ஓ…… அப்படியா…. ரொம்ப சந்தோஷம்….. வாழ்த்துக்கள் இலக்கியா…… சொல்லவே இல்லை……” என்றான் தன் ஏமாற்றத்தை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு.
“ம்ம்…. நேத்து தான் வீட்ல முடிவு பண்ணினாங்க விக்ரம்….. சீக்கிரமே நிச்சயம் இருக்கும்னு நினைக்கறேன்… பரீட்சை முடிஞ்ச கையோட கல்யாணப் பேச்சை எடுப்பாங்கன்னு நினைக்கலை……” என்றவளின் முகத்தில் தெரிந்த நாணமும் சந்தோஷமும் அவள் மனதில் இருந்த விருப்பத்தைத் தெரிவிக்க அவன் மனதுக்குள் அவள் மீதிருந்த எதிர்பார்ப்புகள் கரைந்து போகத் தொடங்கின.
வீணா, சத்யா இலக்கியாவின் காதல் பற்றியும், அவர்களுக்குள் இருந்த உறவு முறை பற்றியும், இலக்கியாவின் அத்தான் புராணம் பற்றியும் வாய் ஓயாமல் சொல்லி சத்யாவின் போட்டோவையும் காட்டி பெருமை பேசிக் கொண்டிருக்க அதை ஒரு மூன்றாம் மனிதனைப் போல கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனதில் வேறு ஓடிக் கொண்டிருந்தது.
“நல்ல வேளை…. அவளுடைய விருப்பம் இதுவென்று தெரியாமல் என்னுடைய விருப்பத்தை சொல்ல இருந்தேனே….. சொல்லி இருந்தால் அவளுக்கும் சங்கடம்… எனக்கும் சங்கடம்…. என் மனதில் உள்ளதெல்லாம் எனக்குள்ளேயே புதைந்து போகட்டும்……” என்று தன்னை சமாதானித்துக் கொண்டவன், சத்யாவின் வேலை, படிப்பைப் பற்றி இலக்கியாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அவனைத் தேடி வினோத் அங்கு வரவும் அங்கு நடந்தவைகளைக் கேட்டு நண்பனின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான். அவன் முகத்தில் சிறு ஏமாற்றம் தெரிந்தாலும் தோழியின் கல்யாண சந்தோசமும் இருந்தது. வினோத் தன்னையே பார்ப்பதை உணர்ந்த விக்ரம், அவனை நோக்கி மெல்ல கண்ணை சிமிட்டி சிரித்தான்.
நண்பனின் மனமறிந்த வினோத்தும் பிறகு அவர்களிடம் சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருந்தான். இலக்கியாவின் வகுப்புத் தோழிகள் சிலர் அவர்களிடம் வரவும் வினோத்தும், விக்ரமும் அங்கிருந்து விடைபெற்றனர்.
“விக்ரம்…. உனக்கு நிஜமாலுமே வருத்தமா இல்லையாடா…….”
கேட்ட நண்பனைக் கண்டு விரக்தியாய் சிரித்த விக்ரம், “ஏமாற்றம் எனக்குப் புதுசா டா….. எனக்குப் பிடிச்சவங்க யாருமே எனக்கு நிரந்தரம் இல்லை….. உன்னை மட்டும் தான் கடவுள் போனாப் போகுதுன்னு எனக்காக விட்டு வச்சிருக்கார்…… அவ என் வாழ்க்கைல வந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்….. இழந்த எல்லா சொந்தங்களையும் அவளோட கலகலப்பு ஈடாக்கிடும்னு எதிர்பார்த்தேன்….. அவளோட விருப்பம் வேறயா இருக்கும்போது அது நடக்கட்டும்டா….. அவ சந்தோஷமா இருக்கட்டும்…..” என்றான் சோர்வுடன்.
நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்தவன், “உன் நல்ல மனசு இந்த கடவுளுக்கு ஏன்தான் புரிய மாட்டேங்குதோ…. சரி…. வா…. நம்ம பசங்க எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…..” என்றவன், அவனை அழைத்துக் கொண்டு நடந்தான்.
கல்லூரியின் இறுதி நாள் ஆனதால் மாணவர்கள் பல திட்டமிடல்களுடன் இருந்தனர். இவர்கள் ரெஸ்டாரன்ட் சென்றுவிட்டு சினிமாவுக்கு செல்வதாய் முடிவு செய்திருந்தனர். மனம் இலக்கியாவின் கல்யாணம் பற்றிய நினைவுகளே நிறைந்திருந்தது.
“நீ விரும்பாத என்னை
உன் நினைவுகள் மட்டும்
எதற்காக விரும்புகிறது பெண்ணே…..”
“சத்யா அழகா, படிச்சவரா இருக்கார்….. இலக்கியாவோட முறைப்பையனும் கூட….. வீட்டோட இருந்து தொழிலையும் பார்த்துக்கறார்….. சின்ன வயசுல இருந்து பழகினவங்க…… இலக்கியாவை நல்லா புரிஞ்சு வச்சிருப்பார்….. அவங்க கல்யாணம் பண்ணினா வாழ்க்கை கண்டிப்பா சந்தோஷமா இருக்கும்….. அவ நல்லாருக்கட்டும்…..” மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவன் வினோத்தின் அழைப்பில் திரும்பினான்.
“என்னடா…. யோசிச்சது போதும்…. வேற ஏதாவது சாப்பிட வேணுமா…..” என்றான். அவன் வேண்டாம் என்றதும் சாப்பிட்டு முடித்து எழுந்தவர்கள் சினிமாவுக்குக் கிளம்பினர். வரவில்லை என்று மறுத்த நண்பனை வலுக்கட்டாயமாய் அழைத்துச் சென்றான் வினோத்.
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே….
இளங்கிளியே கிளியே….
அங்கு வரவா தனியே…. வந்து தொடவா கனியே…..
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே….
தோட்டத்தில் அமர்ந்து கிளியைக் கொஞ்சிக் கொண்டே பாடிக் கொண்டிருந்தாள் இலக்கியா. இத்தனை நாள் கவனிப்பில் கிளியும்  நன்றாகப் பழகி விட்டிருந்தது. மதிய உணவு முடிந்து அவளது தந்தையும் தாயும் ஜோசியரைப் பார்ப்பதற்காய் சென்றிருக்க பாட்டியும் ஓய்வெடுக்க சென்றிருந்தார்.
அவளது கல்லூரித் தோழி ஒருத்தியின் வீட்டில் பேசும் கிளி இருந்தது. அதைக் கேள்விப்பட்டு தனது கிளியையும் பேச வைக்கும் முயற்சியில் அதனுடன் பேசிக் கொண்டிருப்பாள் இவள். அது என்னடாவென்றால் கீ… கீ… என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு எதுவும் பேசுவேனா…… என்ற அடம் பிடித்தது.
“வருங்காலக் கணவன் இங்கிருக்க கிளியை கொஞ்சினது போதும் மிசஸ் சத்யா……” என்றது பின்னிலிருந்து வந்த சத்யாவின் குரல். அதைக் கேட்டதும் அவளது மனதுக்குள் ஒரு குளிர்மை பரவ சட்டென்று எழுந்தவளின் முகத்தில் நாணத்தின் கோலங்கள்.
“வா… வாங்க அத்தான்… காபி சாப்பிடறீங்களா….” என்றாள் பதட்டத்துடன்.
“என் டார்லிங்க்கு என்னாச்சு…. இன்னைக்கு ஒரு பதட்டம் தெரியுது……” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.
“அ…. அதெல்லாம் ஒண்ணும் இல்ல, அத்தான்…. சட்டுன்னு பின்னாடி குரல் கேட்டதும் கொஞ்சம் பயந்துட்டேன்…….” என்றவள் கிளியை கூண்டுக்குள் விட்டாள்.
“ம்ம்…. மாமாவும் அத்தையும் இல்லை போலருக்கு……”
“ஆமாம்…. ஜோசியரைப் பார்க்கப் போயிருக்காங்க….” என்றாள் சுரிதாரின் துப்பட்டாவை விரலில் சுற்றிக் கொண்டே.
“ஓ… நீ மிசஸ் சத்யாவா ஆகறதுக்கு நாள் குறிக்கப் போயிருக்காங்களா…..” என்றவன், “என்ன டார்லிங்….. இன்னைக்கு நீ பண்ணுறது எல்லாம் புதுசாவே இருக்கு….” என்று அவளது குனிந்த தலையை நிமிர்த்தினான். அவன் முகத்தை நோக்கியவள், அவனது ஊடுருவும் பார்வையைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.
“என்ன அத்தான்…… புதுசாப் பார்க்கற போலப் பாக்குறிங்க…….”
“இவ்ளோ நாள் மாமன் மகளா இருந்த என் டார்லிங் இனி என் மனைவியா, எனக்கு உரிமையானவளா மாறப் போகுதே…. அதான் பார்க்கறேன்….” என்றவன் அவளது கையைப் பிடித்து அருகில் இழுக்க சிலிர்த்தாள்.
“அச்சோ…. விடுங்க அத்தான்….. பாட்டி பார்த்திடப் போறாங்க…..” வார்த்தையில் சிணுங்கினாலும் அவள் மனது அவனது அருகாமைக்காய் ஏங்கியது. அவனிடமிருந்து வீசிய பர்ப்யூமின் மணம் அவள் நாசியைத் தாக்க பரவசத்துடன் நின்றவளை பின்னிருந்து மெல்ல அணைத்து அவள் கழுத்து வளைவில் இதழ் பதித்தான் சத்யா.
அவள் தேகமெங்கும் உணர்வு அலை ஸ்வரம் படிக்க சிலிர்ப்புடன் கண்ணை மூடி நின்றிருந்தாள்.
“இளா…………”
“ம்ம்…………..”
“பிடிச்சிருக்கா……” அவனது குரல் குழைவுடன் வர, சட்டென்று கண்ணைத் திறந்தவள், “பிடிக்காமலா கல்யாணம் வரைக்கும் வந்திருக்கேன்….” என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் ஓடிவிட்டாள். கைக்குட்டையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு தலை முடியை அழகாய் கையால் ஒதுக்கி விட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சத்யா.
“இளா…. எனக்கு காபி குடேன்…. நான் கிளம்பனும்…..” என்று குரல் கொடுத்துவிட்டு ஹாலில் அலைபேசியுடன் அமர்ந்தான். அதில் நோண்டிக் கொண்டிருந்தவன் இலக்கியா காபியுடன் வரவும் வாங்கிக் கொண்டான். அப்போது பாட்டியும் அங்கு வந்து அமர்ந்தார்.
“என்னப்பா, இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டே……”
“ஆமாம் பாட்டி……. இன்னைக்கு வெளியூர் கிளம்பனும்….. அதான் வந்துட்டேன்……” என்றதும் இலக்கியாவின் முகம் சுருங்கியது.
“பாரு…… நீ வெளியூர் கிளம்பறேன்னு சொன்னதுமே அவ முகம் சுருங்கிப் போயிருச்சு….. இதுக்கெல்லாம் வேற யாரையாவது அனுப்பலாம்லப்பா…..” என்றார் பர்வதம்.
“யார் போனாலும் நாம பேசி ஆர்டர் பிடிக்கறது போல வராது பாட்டி….. அதான் நானே போறேன்…. சரியான மார்கெட்டிங் இல்லைன்னா தொழில் எப்படி முன்னேறும்……” என்றான்.
“ம்ம்… என்னமோ தம்பி….. இனி நீ வர்ற வரைக்கும் இவ இப்படிதான் மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருப்பா….. உன் மாமா நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருவான்னு நினைக்கறேன்…. சீக்கிரமா வந்திடு….” என்றார்.
“எனக்கு மட்டும் இப்படி போறது இஷ்டமா பாட்டி… இன்னும் கொஞ்ச நாள் தான்…. அப்புறம் எல்லாத்துக்கும் ஒரு மாற்றம் கொண்டு வந்திடலாம்……” என்றவன் இலக்கியாவை நோக்கிக் கண்ணடிக்க, அவள் சிரிப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“சரிப்பா……. பத்திரமாப் போயிட்டு சீக்கிரம் வந்திடு….. ஏய் கருவாச்சி…… அதான் உன் அத்தான் சீக்கிரம் வந்திடறேன்னு சொல்லிட்டான்ல…. எனக்கும் ஒரு காப்பி எடுத்திட்டு வா……” என்றவர் அவள் முறைக்கவும்,
“என்னடி முறைக்கறே…… உன்னை மாதிரி கட்டங்காப்பி போடாம நல்லா பால் ஊத்தி என் பேரன் மாதிரி நிறமா எடுத்திட்டு வா…..” என்றதும் அவள் கண்ணில் தீ பறந்தது.
“பாட்டி….. என் பொண்டாட்டியாகப் போறவளை இப்படில்லாம் கூப்பிட்டா நான் சும்மாருக்க மாட்டேன்….. சொல்லிட்டேன்….” என்று சத்யா கூறவும் அவள் முகம் மலர்ந்தது.
“ஹூக்கும்…. அவ இந்த உலகத்துக்கே ராணியா ஆனாலும் முதல்ல என் பேத்தி…. அப்புறம் தான் உன் பொண்டாட்டி….. அதை மறந்துடாதே……” என்றவர், “என் பேத்தியை நான் சொல்லாம யாரு சொல்லுவா….. இல்ல…. சொல்லத்தான் விட்டிருவனா……” எனவும் இலக்கியாவின் மனம் நெகிழ்ந்தது.
வெளிச்சத்துக்கு
நிழலைப் போல்
உன்னைத்
தொடந்திருப்பேன்…
வாழ்நாள்
முழுதும் நான்…..

Advertisement