இவன்ஆதிசிவன் 21

அப்படியே அமர்ந்திருந்தார் ஆதிசங்கர். பூரணி சொன்ன வார்த்தைகள் கேட்டு அமர்ந்தவர் தான். பேச்சு இல்லை. தலை கீழே குனிந்திருக்க, கைகள் கட்டப்பட்டு அமர்ந்திருந்தார். நிமிடங்கள் நகர, அசைவில்லை

“நான் நீங்க சொன்னீங்கன்னு அம்பைகிட்ட பேசினேன், ஆனா அம்பை மனசுல சிவனேஷ்வரன் தான் இருக்கார். ரொம்ப உறுதியா இருக்கா, அவன்.. அவர் சிவனேஷ்வரனுக்கும் விருப்பம் இருக்கு, அம்பையை தேடி வீட்டுக்கு வந்தார்..” என்று பூரணி சொன்னதும் தான் இப்படி.

பூரணி பங்க்ஷனுக்கு செல்ல வேண்டியவர் கணவரை இப்படி பார்த்து நின்றுவிட்டவர், “ஏங்க..” தோள் தட்டி கூப்பிட்டும் பதில் இல்லை. சிறிதும் அசையாமல் சிலை போலே அமர்ந்திருந்த கணவனை பார்த்த பூரணிக்கு கலக்கம். “ஏங்க.. என்ன இது..? எதாவது பேசுங்க, இப்படி இருந்தா எனக்கு பயமா இருக்காதா..?” பூரணி படபடவென சத்தமாக பேச, பலனில்லை

மூச்சு விடும் மெல்லிய சத்தம் மட்டும் தான் அவரிடம். மற்றபடி கண்கள் கீழே வெறிக்க அமர்ந்தவர் தான் மனிதர். மனோ இரவு உணவிற்கு கீழே வந்தவன், “ப்பா.. சாப்பிடலாமா..?”  அவர் பக்கம் இயல்பாய் அமர்ந்து கேட்க, அப்போதும் ஆதிசங்கர் அப்படியே தான். “ப்பா.. ப்பா..” மனோ அவர் தொட்டு கூப்பிட்டும் பதில் இல்லாமல் போக, பூரணியை பார்த்தான்

அவர் கலங்கி போய் அமர்ந்திருந்தவர், “நீ.. நீ போய் சாப்பிட்டு ரூம்க்கு போ மனோ..” என்றார்

நீங்க..” மனோ கேட்க வந்தவன், பெற்றவர்கள் முகத்தில், வீட்டில் நிலைத்த அசாத்திய அமைதியில், ஞானம் பரிமாற சாப்பிட்டு மேலேறிவிட்டான். படிக்க உட்கார, மனம் அதில் அவனுக்கு நிலைக்கவில்லை

அக்காகிட்ட பேசுவோமா..?’ என்று போன் எடுத்தவன், ஒருவேளை அக்காக்கு எதுவும் தெரியலன்னா..? என்று எடுத்த போனை வைத்துவிட்டவன், சிறிது நேரம் சென்று ரூமை விட்டு வெளியே வந்து பார்க்க, அப்போதும் வீடு அப்படியே தான் இருந்தது

அப்பாவும், அம்மாவும் அதே சோபாவில் தான். ஞானம் தள்ளி டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, ‘அப்படியென்ன ஆச்சு..? அப்பாக்கு பிஸ்னஸ்ல ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..?’ என்ற யோசனையுடன் பெட்டில் படுத்த மனோ, தூங்கிவிட்டான்

மறுநாள் காலேஜ் கிளம்ப அலாரம் அடிக்க, அணைத்தவன் குளித்து கீழே வர, இன்னும் ஆதிசங்கர் அங்கேயே இருந்ததில் அதிர்ந்து தான் போனான். ஞானம், பூரணி கூட குளித்து டேபிளில் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க, இந்த மனிதர் சிலையாகவே மாறி போயிருந்தார். “ம்மா.. என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?” நேரே பூரணியிடம் சென்று சிறு குரலில் விசாரித்தான் மகன்

அது.. அது ஒன்னுமில்லை மனோ.. நீ சாப்பிட்டு காலேஜ் கிளம்பு, உனக்கு லேட் ஆகிடும்..” பூரணி சொல்ல

இல்லைம்மா.. அப்பா இன்னும் அப்படியே இருக்கார், என்னனு சொல்லுங்க, எனக்கு பயமா இருக்கு..” என, பதினெட்டு வயது மகனிடம் நடப்பது பற்றி என்னவென்று சொல்ல..? 

மனோ.. அது வேற டென்ஷன், சமாளிச்சுக்கலாம், நீ சாப்பிடு..” பூரணி மகனை சமாளித்து சாப்பிட வைத்து, கல்லூரிக்கு வழியனுப்பி, உள்ளே வந்தார்

பூரணி போ, கொஞ்சம் அதட்டி எழுப்பு, இப்படியே இருந்தா உடம்பும், மனசும் என்னத்துக்கு ஆகும்.. போ..” ஞானம் அவரை விரட்டினார்

எனக்கும் பயமா தான் இருக்கு அண்ணி, இவர் மனசுல என்ன ஓடுதுன்னு புரியல, அம்பை, சிவனேஷ்வரன் பத்தி சொன்னதுல இருந்து அமைதியானவர் தான், எதாவது ஏடாகூடமா யோசிச்சா நான் என்ன பண்ணுவேன்..? மகளுக்கு பார்க்கிறதா, இவருக்கு பார்க்கிறதா..? இரண்டு பேரும் கொஞ்சம் கூட இறங்கி வராதவங்க, அப்பாவும் மகளும் ஒரே போல இருந்து என்னை தான் சிக்க வைக்கிறாங்க..” பூரணி புலம்பவே செய்தார்

பூரணி.. இப்போ நீ கலங்கினா யார் இவங்களை சமாளிக்கிறது, நீ முதல்ல தைரியமா இரு, நமக்கு தெரியும் யார் சரி, யார் தப்புனு, அப்புறம் என்ன..?” ஞானம் சொல்ல

அம்பை சிவனேஷ்வரன் விஷயத்தை எனக்கு குறிப்பு காட்டினதே இவர் தான் அண்ணி, நீ போய் அவகிட்ட பேசு, அவ பரிதாபத்தை வேற மாதிரி எடுத்துக்கிட்டு இருக்கா, பேசி புரிய வைன்னு அனுப்பி வைச்சா, அங்க இவர் பொண்ணு எனக்கே கிளாஸ் எடுத்து அனுப்புறா..?”

பூரணி.. அம்பை சிவா தம்பியை பத்தி பேசும் போதே அந்த உரிமை அவகிட்ட தெரியும், நாம கண்ணை மூடிக்கிட்டா நடக்கிறது மாறிடுமா..? இவரே ஏதோ புரிஞ்சுமகள் இந்தளவு போயிட கூடாதுங்குற பயத்துல தான் சிவாவை அனுப்பி வைச்சது, அது பலனில்லாம போச்சு. அம்பை சிவாவை தேடி போலீஸ் ஸ்டேஷனே போயிட்டா, இதுக்கு மேலயும் அவகிட்ட கேட்டு தெரிஞ்சுக்க என்ன இருக்கு..? நீ அவகிட்ட பேசி புரிய வைக்க என்ன இருக்கு..? நம்ம பொண்ணோட உறுதிகட்டுப்பாடு, வளர்ப்பு நினைச்சு கர்வப்பட்டுக்கிட்ட நாம, அவளோட விருப்பத்தையும் புரிஞ்சுக்க முயற்சிக்கணும், இவர் இப்படி இடிஞ்சு போய் உட்கார அளவு சிவா தம்பி இல்லை. அவரை விட இவருக்கு மருமகன் கிடைச்சிடுவாரா..?” ஞானம் சத்தமாகவே பேச

அண்ணி உங்களுக்கு எப்போவும் அம்பை  முடிவு சரி தான், ஆனா எங்களுக்கு அப்படி சட்டுன்னு ஏத்துக்க முடிய மாட்டேங்குதே என்ன செய்ய..? நேத்து அவகிட்ட  சரின்ற மாதிரி பேசிட்டு வந்துட்டாலும், மனசு ஆறமாட்டேங்குது. அம்பைகிட்ட பேசினா  நம்மளையே பேசி கன்வின்ஸ் பண்ணிடுவா. அவ சொல்றதுக்கு எல்லாம் சரின்னு தலையாட்டிட்டு வர ஆப்ஷன் மட்டும் தான் நமக்கு வைக்கிறா, நேத்தும் இப்படி தான் ஆச்சு. அவளை நினைச்சு நைட் எல்லாம் தூக்கம் வரலை..” பூரணி மகளை நினைத்து ஆதங்கப்பட்டு கொள்ள

அங்கு மகளும் அந்த இரவு தூங்கவில்லை. இவர்கள் போல் கவலையில் இல்லாமல், இனிய கனவுகளில். காரணம் காதலாகி போனது. தங்களின் விருப்பத்தை பரிமாற கொள்ளாத வரை இருந்தவர்கள், இந்த அம்பை, சிவனேஷ்வரன் இல்லை. முன்பு விருப்பம் மட்டுமே இருந்தது. இப்போது அதையும் கடந்து அடுத்த நிலைய எட்டினர்

சிவனேஷ்வரன் சொன்ன வார்த்தைகள் அம்பை தூக்கத்தை கெடுத்தது. ‘இவர்  கோவப்பட்டா கூட பரவாயில்லை. என்ன இப்படி பேச ஆரம்பிச்சுட்டார்..?’ அவன் உரிமையான பார்வையில், ஒற்றை விரல் தொடுகையில், மனதை வெளிப்படுத்திய வார்த்தைகளில் பெண் தூக்கத்தை இழக்க, சிவனேஷ்வரனும் அங்கு கட்டாந்தரையில் படுத்து அம்பையை நினைத்து தான் இரவை கழித்தான்

இத்தனை வருடங்களில் அவன் இரவு தூக்கத்தை பல விரும்ப தகாத நிகழ்வுகள் களவாடியிருக்க, முதல் முறையாக இன்று விரும்பும் பெண் அவன் தூக்கத்தை எடுத்து கொண்டாள்அதுவும் அவ்வளவு பிடித்தது. பார்த்த நாளில் இருந்து அவளின் அதிரடி, மிரட்டல், ஒரு வார்த்தையை கூட விட்டு கொடுக்காமல் சரிக்கு சரி நிற்கும் அம்பையை மட்டும் பார்த்தே  விருப்பம் கொண்டவனுக்கு, அவளின் புதிதான தடுமாற்றமும், வெட்கமும், கன்ன சிவப்பும் அவளை ரசிக்க பெரிதும் தூண்டியது

அடுத்து எப்போது அவளை பார்ப்போம் என்று புதிதான தேடலும் சேர்ந்து கொள்ள, மறுநாள் சீக்கிரமே அவள் பிளாட் முன் நின்றுவிட்டான். அம்பை குளித்து, ஸ்டுடியோ செல்ல கிளம்பி கொண்டிருந்தவள், இவனை பார்க்கவும் முகம் வெளிச்சம் கண்டது. அவளும் என்னை தேடியிருக்கிறாள் என்று புரிய, “கார்ல இருங்க..” என்று கீயை கொடுத்தாள் அம்பை

அவனோ வாங்காமல் அவள் மேல் பார்வையை பதித்திருந்தான். எப்போதுமே முகத்தை மட்டும் பார்ப்பவன் கண்களுக்கு இன்று அவள் உடையும் கண்ணுக்கு தெரிந்தது. ஸ்லீவ் டிஷர்ட், முட்டி வரையிலுமான ஸ்கர்ட்டில், குளித்து ப்ரெஷாக நின்றிருந்தாள் பெண். சிவனேஷ்வரன் கண்கள் அவளை வெகு உரிமையாக அளவிட, அம்பை சிவந்துவிட்ட முகத்துடன் கீயை அவன் மேல் தூக்கி எரிந்து கதவடைத்து சென்றாள்

சிவனேஷ்வரன் கீயை பிடித்து நெற்றியை நீவி விட்டு கொண்டே காருக்கு சென்றான். ‘வந்து ஆட போறா..?’ அவளை எதிர்பார்த்து காத்திருக்க, அம்பையும் எப்போதுமான உடை ஜீன்ஸ், டிஷர்ட்டில் வந்தவள் காரில் ஏறி கதவை அறைந்து சாத்தினாள்

யப்பா..’ சிவனேஷ்வரன் நேரம் பார்த்து சிரிப்புடன் காரை எடுத்தவன், ட்ரைவ் இன் ஹோட்டலில் நிறுத்தினான். வெய்ட்டர் வர ஆர்டர் கொடுத்தவன், அவளை பார்த்தபடி அமர, “நேரா உட்காரு.. கொன்னுடுவேன்..” என்றாள் அம்பை மிரட்டலாக

நீயும் நைட் தூங்கலையா..?” என்றான்

இவரும் தூங்கலையா..?’ அம்பை அவன் முகத்தை பார்த்து திரும்பி கொண்டவள், “யார் சொன்னா நான் நல்லா தூங்கினேன்..” என்றாள்

அப்படிங்களா மேடம்.. அப்புறம் கண்ணு ஏங்க சிவந்திருக்கு..?” என்றான் சிரிப்புடன்

நான் நேத்தே சொன்னேன் என்கிட்ட இப்படி சிரிச்சு பேசாதன்னு, உன் உர் மூஞ்சே பார்த்து இது எனக்கு பிடிக்கலை..” என்றாள் பெண்

நானும், இனி உன்கிட்ட இப்படி தான், பழகிக்கோன்னு சொல்லிட்டேன்..” என்றவன், அவள் விரல்களை பிடிக்க வர, முறைத்து தள்ளி வைத்து கொண்டாள்

நேத்து போல ஒரு விரல் மட்டும் கொடேன்..” என்றான்

அதை வச்சு ஊறுகாய் போட போறியா..?” அம்பை கிண்டலாக கேட்க

கொடுத்தா தெரியும்..” என்றான் கண்களில் விஷம சிரிப்புடன்

என் விரல் என்கிட்டே இருக்கட்டும்..” அம்பை சொல்ல

அப்போ என் விரலை  நீ வச்சுக்கோ..” என்று நீட்டினான். அம்பைக்கு அந்த விரலை பார்க்க, பிடித்து கொண்டால் என்ன என்று கைகள் பரபரத்தது. ம்ஹூம்.. அவளின் இரு கைகளையும் சேர்த்து கொண்டாள்

அதுக்குள்ள என் ஒரு விரலை மட்டும் வச்சுக்கிட்டா என்னவாம்..?” சிவனேஷ்வரன் சொல்ல

வச்சுக்க முடியாது போயா..” என்றாள் அம்பை. சிவனேஷ்வரன் நொடி தாமதித்து ஹாஹா.. என்று சத்தமாக சிரித்துவிட்டான். “எதுக்கு இப்போ சிரிக்கிற..?” அம்பை சந்தேகமாக  பார்க்க

இல்லை வச்சுக்காம எப்படி என்னை துரத்தன்னு பார்த்தேன்..” என்று மேலும் சிரிக்க

உன்னை..” அம்பை அவன் தோளில் வேகமாக அடித்தாள். “ரொம்ப மோசமா  பேசுற. இனி என்கிட்ட இப்படி பேசின..?” என்று விரல் நீட்டி மிரட்டியவள் சிவனேஷ்வரன் பார்வையில் படக்கென விரலை மடக்கிவிட்டாள். சிவனேஷ்வரன் மிஸ் ஆகிடுச்சே என்று பார்க்க, உணவு வந்துவிட்டது

அம்பை ஸ்டுடியோ செல்ல நேரமும் ஆகிவிட, உணவை முடித்து அவளை ஸ்டுடியோவில் விட்டவன், அங்கேயே இருந்து கொண்டான். அம்பை பார்த்தவள், இங்கேயே இருக்க போறாரா..? தலை ஆட்டி உள்ளே சென்றாள்

சிவா வந்துட்டானா..?” மாறன் இவளிடம் கேட்டு வெளியே வந்து அவனை பார்த்து பேசிவிட்டு ரிக்கார்டிங்குக்கு வந்தார். மாலை வரை கம்போஸிங் இருக்க, முடிக்கவும் அம்பை கிளம்ப எடுத்து வைத்தாள். “அம்பை..” மாறன் அவளை அவரின் அறைக்கு கூப்பிட்டவர், “சிவா உன்கிட்ட தான் ட்ரைவரா இருக்கானா..?” என்றார்

ட்ரைவரா.. அப்படி இல்லை, எனக்கு ஹெல்ப் போல..” அம்பை சொல்ல

அவன் அப்படி தான் சொன்னான், சிவனேஷ்வரன்.. அவனை போய் ட்ரைவரா..? என்ன அம்பை இது..?” என்றார் அங்கலாய்ப்பாக

அவர்  ட்ரைவரா இருந்தா என்ன..?” அம்பை வேகமாக கேட்க

அவன் மதிப்பு உனக்கும் தெரியறதில்லை, உன் அப்பாக்கும் தெரியறதில்லை. அவன் கூட இருந்தா எவ்வளவு பெரிய பலம்ன்னு அவன் மதிப்பு புரிஞ்சுதானே உங்களுக்கு தெரியும்..” என்றார் அவர் அதிருப்தியாக

எனக்கு நீங்க சொல்ற அவரோட அந்த மதிப்பு தெரியவே வேண்டாம், நீங்க எல்லாம் தான் அவரை அந்த லைனுக்கே இழுத்துட்டு போறது, மத்தவங்களுக்காக  அவர் கத்தி குத்து வாங்கிறதுக்கு, என்கிட்ட ட்ரைவரா இருக்கிறது எவ்வளுவோ பெட்டர்..” அம்பை பட்டென சொன்னவள், வெளியே வந்தாள்

சிவனேஷ்வரன் காரை சரியாக அவள் முன் நிறுத்த, ஏறிக்கொண்டவள் முகம் பார்த்து, “என்ன ஆச்சு..?” என்று கேட்டு காரை கிளப்பினான்