IAS 19 1 10909 இவன் ‘ஆதி‘ சிவன் 19 விடியற்காலை போல தான் அம்பை தூங்க சென்றதே. இரவு சிவனேஷ்வரனை கண்டுபிடித்து, அவனை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்து, பிரபாகரன் குடும்பம் வந்த பிறகு கிளம்பி வந்து வீடு சேரவே விடியற்காலை தான். மனதில் பிரபாகரன் பேச்சினால் உண்டான சஞ்சலம் இருந்தாலும், ஏற்று கொள்ளும் பக்குவத்தில் தான் இருந்தாள் பெண். ‘இல்லாததை அவர் சொல்லவில்லை, உன் அப்பா இப்படி என்று நீயும் தானே சண்டை போடுற..? வருத்தப்படுற..? அப்பறம் என்ன..?’ ‘உண்மையை சொல்ல போனால் சிவனேஷ்வரனுக்கு இப்படி ஒரு ப்ரண்ட், அவங்க பேமிலின்னு இருக்கிறது சந்தோஷம் தான். எனக்கு குடும்பம் இல்லை தான், ஆனா நான் அநாதை இல்லை..’ சிவனேஷ்வரன் இவளிடம் சொல்லியிருந்ததற்கு அர்த்தம் இன்று புரிந்தது. அப்படி ஒன்றும் வாழ்க்கை யாரையும் வஞ்சித்து விடுவதில்லை போல. நாமே அதனை அந்தளவு கொண்டு செல்லாதவரை..! ‘ம்ம்.. இப்போ என்ன பண்ணிட்டு இருப்பார்..? காயம் ஓகே தான்.. பெருசா இருந்திருந்தா கஷ்டம், இதுக்கும் உடனே ஹாஸ்பிடல் வந்திருக்கணும், அப்படியென்ன நம்ம உடம்பு மேல அலட்சியம்..?’ பெட்டில் படுத்து சிவனேஷ்வரனை நினைத்தாள். ‘நானும் அங்கேயே இருக்கனும் தான் நினைச்சேன், ஆனா பிரபாகரனுக்கு நான் அங்க இருந்தா கம்பர்டிபிளா இருக்காது, என்கிட்டே சண்டை போட்டுட்டே தான் இருப்பார் மனுஷன், அவ்வளவு கோவம், ஆதங்கம் போல டாடி மேல. டாடியும் சிவனேஷ்வரன் வாழ்க்கையை இப்படி கொண்டு போயிருக்க விட்டிருக்க கூடாது. சின்ன பையன் நம்ம முன்னாடி தவறான வழியில் போனால் நெறிப்படுத்தும் அந்த எண்ணம் ஏன் டாடிக்கு இல்லாமல் போனது..?’ ‘யாரோ ஒருவன், அவன் வாழ்க்கை எப்படி போனால் எனக்கென்ன..? எனக்கு என் வேலை நடந்தா நல்லது. அவ்வளவு தான்..’ ஆதிசங்கரின் இத்தகைய எண்ணங்கள் தான் அம்பைக்கு வருத்தத்தை கொடுப்பது. அதை சொன்னாலும் ஏற்று கொள்பவர் தந்தை இல்லை என்பது தான் மகளுக்கும், அப்பாவிற்கும் முட்டி கொள்ளும் விஷயங்கள். ‘அதுவும் நேத்து நைட் ஸ்டேஷன்ல வச்சு டாடி பண்ணது ரொம்ப அதிகம், சிவனேஷ்வரனுக்கு அங்க பிரச்சனை தெரிஞ்சும் மிரட்டுறார். இவருக்காக அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்திருப்பார்..? ஏன் இப்போவும் இவருக்காக பார்க்க போய் தானே பாலு இவரை குத்தினதும். கேட்டா அவன் வேலை அது என்பார், அப்படியே இருந்தாலும் மனிதனுக்கு நார்மலாகவே உள்ள இரக்கம் குணம் கூட கணக்குடன் தான் இவருக்கு வருமா..?’ ‘சுயநலம் இருக்கலாம், இந்தளவு இருக்க கூடாது..’ ஆதிசங்கரை நினைத்து டென்ஷன் ஆனாள் அம்பை. ‘இவர் இப்படி பண்ணது மட்டும் சிவனேஷ்வரனுக்கு தெரிஞ்சா..? ஒருவேளை அவருக்கு டாடி பத்தி தெரிஞ்சிருக்குமா..? அதான் அவரை போக சொன்னதற்கும் சிவனேஷ்வரன் பெருசா எதுவும் ரியாக்ட் பண்ணலையோ..?’ அம்பை யோசித்தபடி தூங்கி போனாள். முந்தய நாள் இரவின் மனஉளைச்சல், பதட்டம், தவிப்பு எல்லாம் சிவனேஷ்வரனை பார்த்ததில் நல்ல படியாக தீர்ந்தத்தில் அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம். காலை மணி பதினொன்றுக்கு தான் விழிப்பு வந்தது. கண்கள் இன்னும் தூக்கம் வேண்டி எரிச்சலை கொடுத்த போதும், சிவனேஷ்வரனை பார்ப்பதற்காக குளித்து கிளம்பி வந்தாள். ஹாலில் பூரணி டிவி பார்த்தபடி அமர்ந்திருக்க, “எப்போ வந்தீங்கம்மா..?” அம்பை கேட்டு அவர் பக்கத்தில் அமர்ந்தாள். “நான் அப்பா, மனோ கிளம்பவுமே இங்க வந்துட்டேன், நீ நல்லா தூங்கிட்டு இருந்தா, அதான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..” என்று மகளுக்கு உணவு வைத்து எடுத்து வந்தார். அம்பைக்கும் நல்ல பசி. சாப்பிட்டு முடித்தவள், “நீங்க இங்கேயே இருக்கீங்களாம்மா, நான் ஹாஸ்பிடல் போய் சிவனேஷ்வரனை பார்த்துட்டு வந்துடுறேன்..” என்றாள். அவரும் நேற்றிரவு கணவன் சொன்னதை வைத்து அம்பையிடம் பேச தான் வந்திருக்க, “நானும் வரவா..?” என்றார். “இப்போ வேண்டாம்மா, அவர் ப்ரண்ட் பேமிலி இருக்காங்க. ஈவினிங் நானே சொல்றேன்..” என்று தான் மட்டும் கிளம்பிவிட்டாள். பூரணி மகளிடம் பேசியே ஆக வேண்டும் என்பதால் அங்கேயே இருந்தார். அம்பை ஹாஸ்பிடல் செல்ல, சிவனேஷ்வரன் சண்முகம் பேசுவதை கேட்டபடி அமர்ந்திருந்தான். “ஹலோ அங்கிள்..” சண்முகத்திற்கு சொன்னவள், “இப்போ ஓகே வா..?” என்று சிவனேஷ்வரன் பக்கத்தில் சென்றாள். “ம்ம்..” சிவனேஷ்வரன் சொல்ல, “நான் மெடிசின் வாங்கிட்டு வந்திடுறேன்..” என்று சண்முகம் வெளியே சென்றார். “அவங்க எங்க..?” அம்பை கேட்டு அவன் பெட்டிற்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள். “இப்போ தான் பிரபா ஹோட்டல் ரூம் போயிருக்கான், குளிச்சிட்டு வருவாங்க..” என்றான் சிவனேஷ்வரன். “ஓகே.. ஓகே..” என்ற அம்பை, “டாக்டர் பார்த்தாரா..? என்ன சொன்னார்..?” என்று கேட்டாள். “ம்ப்ச்.. சின்ன காயம், இதுக்கு போய் என்ன சொல்வார்..?” என்றான் அவன். “என்ன மேன் ரொம்ப சலிச்சுக்கிற..? சின்ன காயம்ன்னாலும் ட்ரீட்மெண்ட் எடுத்துகிறது தான் நல்லது..” என்ற அம்பை, “ஏன் முகம் டல்லடிக்குது..?” கேட்டாள். சிவனேஷ்வரனுக்கு அவன் யோசனைகளே முழுதும் நிறைந்திருந்தது. ஆதிசங்கர் பேசி சென்றதில் இருந்து, தன்னை குறித்து அம்பையின் பதில் என்னவாக இருக்கும் என்பதே அவனை பெரிதும் அலைக்கழித்து கொண்டிருந்தது. அது அவன் முகத்திலும் தெரிய, “ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் பிடிக்கலையா..?” அம்பை கேட்டாள். “பிடிக்க, பிடிக்காம போக என்ன இருக்கு..? ஈவினிங் வரை இங்க இருந்து தானே ஆகணும்..” என்றான் சிவனேஷ்வரன். “என்ன ஆச்சு மேன்..? உன் ப்ரண்ட் உன்கிட்ட சண்டை போட்டுட்டாரா..? உன்னை அவரோட வர சொல்றாரா..? அவரோட போகணும்ன்னு உனக்கும் தோணுதா..?” அம்பை கேட்க, “அப்போ உனக்கு நான் வேண்டாமா..?” என்றான் சிவனேஷ்வரன் பட்டென. அம்பை அவனின் திடீர் கேள்வியில், அதுவும் இப்படியான கேள்வியில் அவனையே பார்க்க, பதில் சொல்லு என்பது போல் பார்த்திருந்தான் சிவனேஷ்வரன். “எனக்கு வேண்டாமான்னா..? நீ எதை மீன் பண்ணி கேட்கற..?” அம்பை கூர்மையாக கேட்டாள். “அது எனக்கும் தெரியல..” சிவனேஷ்வரன் சொல்ல, “தெரியாம எப்படி என்கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்ட..? முதல்ல ஏன் இப்படி ஒரு கேள்வி, பதில் சொல்லு..” என்றாள். “ம்ப்ச்..” சிவனேஷ்வரன் முகம் திருப்பினான். அவன் முகத்தில் அழுத்தம் தெரிந்தது. அம்பை அவனை ஆராய, அவன் நேரே வெறித்திருந்தான். சில நொடி அமைதிக்கு பிறகு, அம்பை, “என்ன ஆச்சு உனக்கு..?” கேட்க, “ஒன்னுமில்லை விடு..” என்றான். “நீங்க தூங்கவே இல்லையா..?” அவன் கண்கள் சிவப்பில் கேட்க, “தூக்கம் வரலை..” என்றான். “மெடிசின் எடுத்து எப்படி தூக்கம் வராம இருக்கு..?” அம்பை கேட்க, “இப்போ நான் தூங்கலைன்னா தான் என்ன விடேன்..” என்றான் சிவனேஷ்வரன். “முதல்ல நீங்க என்னை பாருங்க..” அம்பை அதட்டலாக சொல்ல, “பார்த்தா ஏதாவது கேட்பேன், இப்படியே என்னை விட்டுடு..” என்றுவிட்டான். “அப்படி என்ன கேட்பீங்க..? கேளுங்க..” அம்பை எழுந்து அவன் கன்னம் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தாள். “இது தான்.. இது தான் கேட்பேன்..” என்றான் தன் கன்னத்தில் பதிந்திருந்த அவள் விரல்களை பார்த்து. அம்பை புரியாமல் பார்க்க, “நீ ஏன் என்கிட்ட இவ்வளவு உரிமையா இருக்கன்னு கேட்பேன்..?” அவள் கண்களையே பார்த்து கேட்டான். “ஏன் நான் இருக்க கூடாதா..?” அம்பை திருப்பி கேட்க, “இருக்கலாம்.. ஆனா உரிமை பரிதாபத்தில வருமா..?” என்று கேட்டான். அம்பை அவள் விரலை அவன் கன்னத்தில் இருந்து எடுக்க போக, சிவனேஷ்வரன் தன் கை வைத்து அவள் விரல்களை தன் கன்னத்தோடு அழுத்தினான். “நீ எனக்காக, என்னை தேடி போலீஸ் ஸ்டேஷன் போனது என்னை அப்படி பீல் பண்ண வச்சது. உனக்கு தெரியாது உன் அப்பா என்னை போக சொன்னப்போ, எங்க போகன்னு அப்படியே அவர் முன்னாடி நின்னுட்டேன், நகரவே முடியலை, அவர் பணம் பத்தி பேசினப்போ தான் கிளம்பிட்டேன், நமக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா நான் அப்படி அவர் முன்ன நின்னு யோசிச்சிருந்திருக்க மாட்டேன்னு இப்போ வரை தோணுது..” “எல்லா நேரமும் என் அப்பா, அம்மா, தங்கச்சியை நான் மிஸ் பண்ணுவேன் தான், ஆனா இந்த ஒரு வாரமா ரொம்ப ரொம்ப அவங்களையே நினைச்சுட்டு இருக்கேன், எனக்குன்னு பிரபா இருந்தாலும் அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கே, அவங்களோட பாதுகாப்பு எனக்கு முக்கியம் ஆச்சே..” “என் உயிர் இப்போவே போயிட்டா கூட எனக்கு கவலையில்லை, ஆனா போகாம கடைசிவரை எனக்கே எனக்கான உறவு, குடும்பம் இல்லாம அல்லாடிடுவேனோன்னு பயமா இருக்கு..” என்றுவிட்டான் கலங்கிவிட்ட கண்களுடன். அம்பைக்கும் கண்கள் கலங்கிவிட, “இப்போ நான் இருக்கிற நிலைமையில யாரும் எனக்கு அன்பு காட்டினா, அக்கறை பட்டா, உரிமை எடுத்துக்கிட்டா அதையே கெட்டியா பிடிச்சுக்க தோணுது. அதுக்கு காரணம் தேடுது, பேர் கேட்குது, உரிமை உறவா மாற மனசு பரபரக்குது..” என்று சிவனேஷ்வரன் சொல்ல, அம்பைக்கு இப்போது அவன் மனம் புரிந்தது. உள்ளம் அதிர்ந்தது.