Advertisement

Epilogue
“காமன் காமன் பரா. யு கேன் டு இட்” பிரசவ அறைக்குள் இருந்து கொண்டு பராவை உட்ச்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் ஜெராட்.
“வாய முடுயா யோவ். எனக்குத் தானே வலிக்குது. டாக்டர் இந்தாள வெளிய போக சொல்லுங்க” வலியில் ஜெராடை கண்டபடி திட்ட ஆரம்பித்தாள் பரா.
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது” பராவை கொஞ்சலானான்.
ஜெஸிக்கு இப்பொழுது தானே மூன்று வயதாகிறது. இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் இன்னும் இரண்டு வருடங்களாவது போகட்டும் என்று நினைத்திருந்தாள்.  மாதாந்த ருது ஒழுங்காக வருவதில்லை அதனாலயே கர்ப்பத்தடை மாத்திரைகளை பரா உட்கொள்ளவுமில்லை.
குழந்தை உண்டாகி இருப்பதே நான்கு மாதங்கள் நிறைவடைந்த பொழுதுதான் உணர ஆரம்பித்தாள். கர்ப்பகால அறிகுறிகள் எதுவுமில்லாத பொழுது குழந்தை உண்டாகி இருப்பதை அவள் எப்படி அறிவாள்?
வயிறு கொஞ்சம் தெரிய ஆரமித்திருக்க, வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத் துடிப்பு வேறு பராவை பீதியடைய செய்தது.
தனக்கு எதோ தீராத நோய் வந்து விட்டதாகவும், ஐவியை போல் தானும் கூடிய விரைவில் இறந்து விடப் போவதாகவும், தானும் அவளை போலவே ஜெராடை விட்டும் குழந்தைகளை விட்டும் சென்று விடுவேன் என்றும் புலம்ப ஆரம்பித்தாள்.
“புலம்புறத நிறுத்திட்டு வா முதல்ல ஆஸ்பிடல் போய் என்ன? ஏது? செக் பண்ணலாம்” என்றான் ஜெராட்.
குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஜெராடுக்கு கூட வரவில்லை. மூன்று சகோதரிகளோடு பிறந்தவன் என்றாலும் யாருடைய பிரசவ நேரத்திலும் அவன் கூட இருந்ததில்லை.
குழந்தை பிறப்பு, பிரசவம் பற்றி அறிந்து வைத்திருக்கவுமில்லை. பரா தானும் பீதியடைந்து ஜெராடையும் பீதியடைய செய்து கொண்டிருக்க, அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை.
“முடியாது. முடியாது” என்று மறுத்தவளை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தான்.
“என்னது பிரேக்னன்ட்டா….” பரா எப்படியெல்லாம் அலப்பறை செய்தாள் என்று ஒருகணம் கண்முன் வந்து போக, அடுத்த கணம் முகம் மலர்ந்தான் ஜெராட்.
“யாரு நானா…” நம்பாமல் சத்தமாகவே சிரித்தாள் பரா.
ஸ்கேன் எடுத்து நான்கு மாதம் பரிபூரணமான கருவை பார்த்த பின்புதான் நம்பவே ஆரம்பித்தாள்.
சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடியவள் “என்னடா அவசரம் உனக்கு…” வயிற்றை தடவி குழந்தையிடம் பேசியவள் ஜெராடின் சந்தோஷமான முகத்தை பார்த்து அமைதியானாள்.
நான்கு மாதங்களாக பரா வீட்டு வேலைகளை பார்த்தவள் தான். கரு தரித்திருப்பதை அறிந்த நொடியிலிருந்து ஒரு டீ கப்பையாவது அவளை சுமக்க விடாது அன்புத் தொல்லை செய்தான் ஜெராட்.
காரியாலயம் சென்றால் வேலையில் மூழ்குபவனுக்கு வீட்டுக்கு வரும் பொழுதுதான் பராவின் ஞாபகமும், குழந்தைகளின் ஞாபகமுமே வரும். இப்பொழுது என்னவென்றால் ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை அலைபேசி அழைப்பு விடுத்து பரா என்ன செய்கின்றாள். ஜூஸ் சாப்பிட்டாளா? டிப்பன் சாப்பிட்டாளா? என்று விசாரிப்பான்.
அவளிடம் விசாரித்தது போக, தலைமை வேலையாள் ஜானை அழைத்து பரா சொன்னது எல்லாம் உண்மையா என்றும் சரி பார்த்துக்கொள்வான்.
“என்னது நாலு மாசமா பிரேக்னன்ட்டா இருக்காளா? ஏன் முன்னாடியே சொல்லல. நீ தான் சொல்ல வேணாம் என்று பராவையும் மிரட்டி இருப்ப” எஸ்தர் பிடி பிடி என்று ஜெராடை பிடிக்கலானாள்.
மருமகளை அவள் ஒரு குற்றமும் சொல்லவில்லை. கர்ப்பமாக இருக்கிறாளாம்.   
ஜான்சிக்கு பராவின் உடல்நிலை தெரியுமானதால் “ஓஹ்… அப்படியா” என்று புரிந்து கொண்டாள்.
எஸ்தரை ஒருவாறு ஜெராட் சமாளித்து விட்டு திரும்புகையில் பரா பிரசவத்தில் ஏற்படும் சந்தேகங்களை அவனிடம் கேட்கலானாள்.
“ஏன்டி எனக்கென்னடி தெரியும்” ஜெராட் முழிக்க,
“உங்க கிட்ட கேட்காம நான் வேற யார் கிட்ட கேட்க” பரா ஜெராடை முறைத்தாள்.
“வீட்டுல ப்ரீயா உன் கூட பேச நான் மட்டும்தான் இருக்கேன் என்கிறதுக்காக இதெல்லாம் ஏன்டி என் கிட்ட கேட்குற? நான் என்ன கைநொகொலோஜிஸ்ட்டா?” பாவமாக அவளை பார்த்து வைத்தான் ஜெராட்.
உண்மையில் பரா ஐவியிடம் தான் தனக்குள் எழும் சந்தேகங்களை கேட்கலானாள்.
பாவம் ஐவி. ஒரு குழந்தையை பிரசவித்திருந்தால் பராவின் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பாள். தெரியாத கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஐவி பராவின் முன் வராமல் கண்ணாமூச்சி ஆடலானாள்.
“ஏன்டி உனக்கு மட்டும் உலகத்துல இல்லாத சந்தேகமெல்லாம் வருது. டாக்டர் கிட்ட போனா இதெல்லாம் கேட்க மாட்டியா?”
“அந்தம்மா கிட்ட போனா எல்லாத்தையும் மறந்துடுறேன். அப்போ அப்போ தோணுற சந்தேகங்களை. உடனே கேட்டு தீர்க்கணும். யார்கிட்ட கேக்குறது அதான் உன் கிட்ட கேட்டேன்” ஒருவழிவழியாக பராவின் சந்தேகங்களை பாத்திமா தீர்த்து வைத்தாள்.
குழந்தை பிரசவிக்கும் வரையில் உடற்பயிற்சி வகுப்புகள், தாயுக்கும் சேயுக்குமான வகுப்புகள் மாத்திரமன்றி தந்தையும் சேர்ந்து கலந்துகொள்ளும் வகுப்புக்களும் இருக்க, பரா ஜெராடோடு கலந்துகொண்டு, நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருந்தாள்.
நாங்களும் வருகிறோம் என்று லெனினின், ஜெஸியும் வேறு ஆர்வமாக சில வகுப்புகளுக்கு வருகை தர, சகோதர்களும் புதிதாக வர இருக்கும் குழந்தையை வரவேற்க ஆர்வம் காட்டுவது அவர்களுக்குள் இணைபிரியாத அன்பையும், பிணைப்பையும் உருவாக்கும் என்று மகிழ்ந்தனர்.
வகுப்பில் படித்தது என்னவோ, பரீட்ச்சையில் வந்தது என்னவோ என்ற கதை தான் பிரசவ அறையில் பராவின் நிலை.
பிரசவ அறைக்குள் செல்லும் பொழுது விட்டு விட்டுத்தான் வலிப்பதாக கூறினாள்.
“இதெல்லாம் ஒரு வலியா? நான் அஞ்சு புள்ளய பெத்தெடுத்தேன். உங்கம்மா ரெண்டு புள்ளைய பெத்தெடுத்தாங்களே. தைரியமா போம்மா…” எஸ்தர் ஜீசஸை மனதுக்குள் பிராத்தனை செய்து கொண்டிருந்தாலும் மருமகளை தைரியமூட்டி பிரசவ அறைக்கு அனுப்பி வைத்தாள்.
பராவுக்கு ஒன்பதாம் மாதம் நெருங்கும் பொழுதே எஸ்தர், ஜான்சி மற்றும் பால்ராஜ் இலங்கையிலிருந்து வந்திருந்தனர்.
வலி அதிகமாகவும் “ஜீசஸ் என்னால முடியல” என்று கத்த ஆரம்பித்தவள் ஜெராட் வம்பிழுக்க, கடுப்பாகி அவனை வெளியே துரத்தும்படி டாக்டரிடம் வலியில் கெஞ்சலானாள். 
உயிர் போய்  உயிர் வந்து ஒருவழியாக ரோஜா குவியல் போல் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் பரா.
பராவின் நெஞ்சின் மேல் குழந்தையை வைக்க, ஆசையோடு கொஞ்ச ஆரம்பித்தாள். 
“என்னடி இது நான் பொண்ணுதானே வேணும்னு சொன்னேன். பையன பெத்தெடுத்திருக்க” ஜெராட் மிரட்டுவது போல் சிரிக்க, பரா அவனை நன்றாகவே முறைத்தாள்.
பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஜெராட் அடம் பிடிக்க “ஏன் ஐவி என்று பேர் வச்சி செல்லம் கொஞ்சவா? ஜெஸி மட்டும் போதும்” என்று இவள் சொல்ல அருகில் இருந்த வாஸ் தானாகவே விழுந்தது.
“ம்ம்… இங்க ஒருத்தி இருக்காளே இவள வச்சிக்கிட்டு …” ஐவியை வாய்க்குள்ளேயே வசை பாடியவள் “எனக்கு பையன்தான் வேணும். லெனினும் நீதனும் என்னோட வலது பக்கத்துலையும், இடது பக்கத்துலையும் நின்னு யாரும் என்ன நெருங்க விடாம பாதுகாக்கணும்”
“பொறக்காத புள்ளைக்கு பேரு கூட வச்சிட்டாளா?” புருவம் உயர்த்தி பார்த்த ஜெராட் “யாரு என்னய நெருங்க விடாம பண்ண உனக்கு பாடிகார்ட் போர்சுக்கு ஆள் செக்குறியா? பிச்சுப்புடுவேன் பிச்சி. எனக்கு பொண்ணுதான் வேணும். இல்ல ஜெஸி” மகளையும் தன்னோடு கூட்டு சேர்க்கலானான்.
ஆணோ, பெண்ணோ சுகப்பிரசவம் ஆனால் போதும் என்றிருந்தவனுக்கு பரா வலியில் கதறுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் தான் அவளை வம்பிழுத்தான்.  
“சரி சரி அடுத்த வருஷம் இதே நாள். இங்க வந்து ஒரு பொண்ண பெத்து கொடு” சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவன் பரா முறைக்கவும் “ஐயோ வெளிய எல்லாரும் என்ன கொழந்த பொறந்தது என்று தெரிஞ்சிக்க ஆவலா இருப்பாங்க. நான் போய் சொல்லிட்டு வரேன்”
“போங்க. வராதீங்க” கையில் ஏதும் கிடைக்காததால் காற்றில்லையே கையை வீசினாள் பரா. 
உண்மையிலயே அடிபட்டது போல் துள்ளிக் குதித்தவாறே பிரசவ அறையிலிருந்து வெளியேறினான் ஜெராட். 
“தம்பி பாப்பா பொறந்துட்டான்…” ஓடி வந்து லெனினியும், ஜெஸியையும் கட்டிக்கொண்டான். 
நல்லபடியாக குழந்தை பிறந்ததில் எஸ்தர், ஜான்சி, பால்ராஜ் மூவருமே நிம்மதியோடு புன்னகைத்தனர்.
சற்று நேரத்திலையே தாதி குழந்தையை சுமந்து கொண்டு வர, ஜான்சியின் கையில் கொடுக்கும்படி கூறினாள் எஸ்தர்.
தனது மூத்த மகனின் வாரிசு. தனது குடும்ப வாரிசு என்று எண்ணாமல் எந்த பேரக் குழந்தையையும் ஜான்சி கையில் வாங்கியதில்லையே இந்தக் குழந்தையை வாங்கட்டும் என்று பால்ராஜையும் சேர்ந்து நின்று கையில் தூக்கச் சொன்னாள். 
“இல்ல சம்பந்தி. நல்லா வாழ்ந்த நீங்களே வாங்குங்க பிறகு நாங்க தூக்குறோம்” மறுத்தாள் ஜான்சி.
“நான் சொல்லுறேன் இல்ல” பிடிவாதமாக அவர்களிடம் குழந்தையை கொடுத்திருந்தாள்.
இலங்கையிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கும், பாத்திமாக்கும் வீடியோ கால் விடுத்து குழந்தையை காட்டி மகிழ்ந்தனர்.
அடுத்து குழந்தைக்கு பெயர் வைக்க அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.
ஐவியால் ஆலயத்துக்குள் செல்ல முடியாததால் அவளை மாளிகையிலையே இருக்கும்படி பரா கூறியிருக்க, ஐவியால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆலயத்தின் எல்லை பகுதிக்குள் வளம் வந்துக் கொண்டிருந்தாள். 
“ம்மா… பிளவர் ஆன்டி ஏன் வரல?” குடும்பத்தார் மட்டும் வந்திருக்க, பக்கத்து வீட்டு ஆன்டியை ஜெஸி கேட்பதாக நினைத்தான் ஜெராட்.
எஸ்தர், ஜான்சி, பால்ராஜ் என்று அனைவரும் வந்து விட்டதால் குழந்தைகளின் முன் வராமல் இருந்த ஐவி பிரசவ அறையில் பராவின் அருகில் தான் இருந்தாள்.
நீதனுக்கு அழகான வெள்ளை உடை அணிவிக்கப்பட்டு ஜெராட் கையில் தூக்கிக்கொண்டு வர, பராவும் லெனின், ஜெஸி இருவரும் கூடவே ஆலயத்துக்குள் நடந்தனர்.
பாதிரியார் குழந்தையின் நெற்றியில் புனித எண்ணெயை அபிஷேகம் செய்து, ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீரைத் தெளித்து நீதான் என்று பெயரிட்டார்.
கர்த்தரை பிராத்தித்து ஆசி பெற்று மனநிறைவோடு அனைவரும் வீடு திரும்ப ஐவியும் அவர்களோடு இணைந்து கொண்டாள்.
குழந்தையை தொட்டிலில் இட்ட பரா “பயத்தினால் ஒரு நிமிஷம் உன்ன வேண்டாம்னு நினச்சேன்டா. உங்க அப்பா முகத்துல இருந்த சந்தோஷத்தை பார்த்ததும்தான் என்ன ஒரு முட்டாள்தனமான யோசனனு தோணிருச்சு. சாரி அம்மாவ மன்னிச்சுடு”
“ஆமாண்டா நான் கூட உங்கம்மா என்ன பார்த்துடவே கூடாது என்று ஓடிக்கிட்டு இருந்தேன். கடைசில நானே தான் போய் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன். அப்படி நான் கேட்கலானா நீயுமில்ல. உன் அண்ணா, அக்கா ஏன் உங்கம்மா கூட இப்போ என் கூட இல்லாம இருப்பாங்க” பராவின் தோளில் நாடிவை வைத்தவாறு எட்டி குழந்தையை பார்த்தவாறு கூறினான் ஜெராட்.
ஜெராட் ஓடியொழிந்த கதை பராவுக்கு தெரியாதே “என்ன உங்க பையன் வளர்ந்து அம்மாவ எப்படி கல்யாணம் பண்ணீங்க என்று கேட்டா சொல்ல கதை ரெடி பண்ணுறீங்களா?” குழந்தையை பார்த்தவாறே கேட்டாள் பரா.
“நான் நடந்தத சொல்லப் போறேன்”
“அப்போ முதல்ல எனக்கு சொல்லுங்க” அவனை இழுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
குழந்தை சிணுங்கவே தொட்டில் தானாக ஆடியது. அதை பார்த்தவாறே ஜெராட் கூறப் போகும் கதையில் ஆர்வமானாள் பரா.
ஐவியை பற்றி ஜெராடிடம் கூறும் எண்ணம் பராவுக்கு இல்ல. என்றோ ஒருநாள் அவன் அறிந்துகொள்ளத்தான் போகிறான். அறிந்துகொண்ட நொடி ஐவியை மன்னிக்க மாட்டேனே என்று கத்தியது போல் பராவையும் மன்னிக்க மாட்டேன் என்று கத்தத்தான் போகிறான்.
அதுவரை….
அதுவரை அவர்களின் வாழ்க்கையில் யாரும் எந்த பிரச்சினையும் செய்ய இயலாது. ஐவி அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பாள். 
பராவும், ஜெராடும் மனதாலும், உடலாலும், உயிராலும் ஒன்றாய் இணைந்து விட்டார்கள்.

Advertisement