Advertisement

பகுதி-1

யார் இவன்? நேற்றோ அந்நியன்;
இன்றோ என்னுள் பாதி!!!

“அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ரேகா. 

“அம்மா…தயவு செய்து எதுவாக இருந்தாலும் உள்ளே சென்று பேசிக் கொள்ளலாம்.” என்றான் ஆதி கெஞ்சும் குரலில். காரணம் அப்பார்ட்மண்ட் வாசிகளின் மொத்த கண்களும் ஆதியின் வீட்டு வாசலை விட்டு நகர மறுத்தன.

“உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை தம்பி. உன் கல்யாணத்துக்காக நாங்கள் எவ்வளவு கனவு கண்டு வைத்திருந்தோம் தெரியுமா? எல்லாத்தையும் நீ வீணாக்கிட்ட. அதுவும் ஒரு வேலைக்கார பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்க. கொஞ்சமாவது நம்ம தகுதியை பத்தி யோசித்து பார்த்தியா?” என்று தன் பங்கிற்கு அடிக்குரலில் எகிறினார் ஆதியின் தந்தை கோபால். 

மாதத்திற்கு இலட்சத்தை தொட்டு இன்னும் பல இலட்சங்களை தன் வசப்படுத்த முயன்று கொண்டிருக்கும் தன் பிள்ளை படிப்பறிவின்றி வயிற்றை நிரப்ப வீட்டு வேலைகள் செய்யும் பெண்ணை மணம்முடித்ததில் அவன் பெற்றோருக்கு சற்றும் விருப்பமில்லை.

“நான் இங்கிருந்து போயிறேன். என்னால் உங்க குடும்பத்தில் சண்டை வேண்டாம்.” என்று இவர்கள் பேச்சில் இடைப்புகுந்து அழு குரலுடன் முணுமுணுத்தாள் சற்றுமுன் அனு ஆதித்யா ஆன அனு.

அவளை ஒரு முறை முறைத்து அடக்கி, அவள் கையை தனக்குள் இறுகப் பற்றிக்கொண்டான் ஆதி, “நீ கொஞ்ச நேரம் அமைதியாக இரு.” என்றுவிட்டு தன் பெற்றோர் புறம் பார்வையை செலுத்தினான். 

“நீங்கள் முடிவா என்ன தான் சொல்ல வரிங்க? நான் என் மனைவியோட உள்ளே வரலாமா கூடாதா?” தன் அருகில் நிற்கும் புது மனைவியின் அழுகை ஏதோ செய்ய அதை சகித்து கொள்ள முடியாமல் தன் பொறுமையை இழந்தான் ஆதி.

“என் முடிவில் மாறுதல் இல்லைனு சொல்லுங்க அவன்கிட்ட. அந்த வேலைக்காரியை தலைமுழுகி வருவதாக இருந்தால் உள்ள வரட்டும் இல்லையென்றால் வாசல்கதவு திறந்துதான் இருக்கிறது, அவன் தாராளமா வீட்டை விட்டு போகலாம்.” என்ற ரேகாவின் கண்களை கோபம் எனும் கொடிய ஆவி மறைத்தது. அவர்களை குறை சொல்லியும் பயனில்லை மக்கள் குருதியில் தான் சிவப்பணுக்களோடு சேர்த்து பதவி, பகட்டு, தகுதி என்று மனிதம் குறைந்து செயற்கை களிப்பு பாய்ந்தோடுகிறதே.

“இது தான் உங்கள் முடிவுனா இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. என்னால் என் மனைவியை விட்டுவிட முடியாது. திருமணம் செய்வது வாழ்வதற்குத் தான். எதிர்பாராத சூழலில் என் திருமணம் நடந்திருந்தாலும் அவளை அப்படியே நற்றாற்றில் விடமுடியாது. அறிந்தோ, அறியாமலோ அவள் இப்போது என் மனைவியாகிவிட்டவள். இந்த உறவை நான் மதிக்கிறேன். அவளுக்கான உரிமையை கொடுக்க விழைகிறேன்…” என்று இடைவெளி விட்டவன் மீண்டும் தொடர்ந்தான், 

“மேலும் ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அவளால் நான் இந்த வீட்டை விட்டு போகவில்லை, உங்களால்தான். என் முதுகுக்கு பின்னால் யாரும் அவளை குறை கூறக் கூடாது. நான் என்றுமே உங்கள் சொல் பேச்சு கேட்கும் பிள்ளை தான், இன்றும் உங்கள் போதனைகளால் கவர்ந்து இழுக்கபட்டு தான் இவளை நான் மணந்தேன். அது தவறு என்றால் என்னை மன்னித்துவிடுங்கள்.” என ஆதி ஒரே மூச்சில் கூறிவிட்டு தன் வீட்டை விட்டு நகர்ந்தான் தன்னவள் கைப்பற்றி.

மனைவியாகிய அவள் கைப்பற்றி இழுத்துச் சென்றவன் மனதில் இரண்டு மணி நேமாக தன் வாழ்வில் நடந்த எதிர்பாரா அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஒரு படம் போல் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தன.

சில மணி நேரங்களுக்கு முன்பு…

“அம்மா நான் ஆஃபீஸ்க்கு கிளம்புறேன். நேரம் ஆகிடுச்சு ஆஃபீஸ் கேஃபிடெரியாவில் சாப்பிட்டுக் கொள்கிறேன்.” என்று ஆதி அவசர அவசரமாக ஷூ மாட்டி கொண்டே வாசலிலிருந்து கத்தினான்.

“நில்லு டா. சீக்கிரம் எழுப்பினால் எழுந்திருப்பது கிடையாது. அப்புறம் சாப்பிட நேரம் இல்லையென்று ஓட வேண்டியது. இவனை எல்லாம் வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?” என்று ரேகா தன் பங்குக்கு ஒரு பக்கம் சவுண்ட் விட்டார்.

“எல்லாம் ஒரு கல்யாணம் நடந்தா சரி ஆகிடும்.” என காலம்காலமாய் கூறப்படுவதையே வெளிப்படுத்தினார் கோபால். தன் கூற்று உண்மை ஆகப் போகிறது அதுவும் இன்னும் சிறிது நேரத்தில் என்பதை அறியாது கோபால் தன் புதல்வனுக்கு வக்காலத்து வாங்க,

“ஆமாங்க, நம் ஆதிக்கு உங்க தங்கச்சி பெண்ணை கேட்டு பார்க்கலாமா? அவள் தான் படித்து முடித்து விட்டாளே. ஆதி கம்பெனியில் தான் வேலைக்கு சேர்ந்து இருக்கா. இரண்டு பேருக்கும் நல்லா ஒத்து போகும். நீங்க என நினைக்கிறீங்க?” என்று ரேகா தன் கனவுகளுக்கு உயிர் கொடுக்க நினைத்தார்.

“ஆதிக்கிட்ட கேட்போம். அவன் விருப்பப்பட்டால் நாம் போய் பேசுவோம்.” என்று தற்காலிகமாக ரேகா கனவுக்கு முற்று புள்ளி வைத்தார் கோபால்.

ம்ம்… போட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தார் ரேகா.

***

“டேய்… முரளி வாடா…ஆஃபீஸ்க்கு நேரம் ஆகுது.” என்று கத்தினான் ஆதி, அவன் வீட்டு வாசலில் நின்று. முரளியின் வீடும் ஆதி இருக்கும் அப்பார்ட்மெண்டிலே முதல் தளத்தில் இருக்கிறது.

“வரேன் டா நில்.” என்று பதிலுக்கு அவன் குரல் கொடுத்தான்.

“நான் பார்க்கிங்கில் வெய்ட் பண்றேன் வாடா.” என ஆதி சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

வெகு நேரம் ஆகியும் முரளி வராததால் அதற்குள் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு அப்படியே ஒரு காபி குடித்து பசியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்று தன் பைக்கை எடுத்தான். எடுத்ததுதான் தாமதம் அவன் கண்கள் அவர்களின் அபார்ட்மெண்ட் கேட்டை தாண்டி வாசலில் நின்றிருந்த ஆட்டோவில் படிந்து அதில் அழுது கொண்டிருக்கும் அனு, பக்கத்துவீட்டில் வேலை செய்யும் பெண் தென்பட்டாள்.

ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை ஊந்த அனுவையே கூர்ந்து கவனித்தான். அவள் கைகளை மத்தியவர்க ஆடவன் ஒருவர் இறுகப் பிடித்திருப்பது போல் தெரிந்தது. அவள் கண்களில் அருவி போல் கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. அவள் மேல்வரிசை பற்கள் மேல்இதழை இழுத்து பிடித்து வைத்திருந்தன. அவள் தோற்றம் ஆதி மனதை பிசைய அவளை நெருங்கியவன் என்னவென்று பார்க்க திகைத்துப் போனான். அவள் இடது கை மணிக்கட்டில் ஒரு பெரிய கட்டு இருந்தது. இரத்தம் அவள் கட்டையும் மீறி வெளி வந்து வெள்ளை துணியை நனைத்துச் செந்நிறமாய் மாற்றி இருந்தது. பதறிப்போய் பாய்ந்து இன்னும் நெருங்கி அருகில் சென்றால் இன்னோரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆண் அவள் கட்டை பிடித்து அழுத்திக்கொண்டு இருந்தான்.

அவள் அழுகை அவனுள் ஏதோ இனம் புரியாத வலியை கொடுக்க, தாமதிக்காமல் அருகே சென்று அந்த ஆடவனை இழுத்து கீழே தள்ளி விட்டு, அவள் வலக்கையை பிடித்து அவளை கீழே இறக்கினான்.

அதற்குள் ஐம்பது வயது மதிக்கத்தக்க இன்னொரு ஆண் வந்து அவள் இடக்கையை பிடித்து இழுத்தான்.

“வலிக்குது அப்பா..” என்ற அனுவின் அழுகுரல் கேட்டு தான் தெரிந்தது அந்த புதியமனிதர் அவளுடைய அப்பாவென்று.

“சார், என்ன பண்றிங்க. அவுங்க கைல அடிபட்டிருக்கு.” என்று பதறிப்போனான் ஆதி.

“நீ யாரு? உன் வேலையை பார்த்….துட்டு போ..வியா அதை விட்டுட்டு சும்மா…” என்ற அனுவின் தந்தை தன் பேச்சிலே குடி நிலையை தெரிவுப்படுத்தினார். அதை கேட்டு இன்னுமே அதிர்ந்தான் ஆதி.

அவன் திகைப்பிலிருந்து வெளி வருவதற்குள் எழுந்த கீழே விழுந்த ஆண் அனுவை தர தரவென்று சாலையில் இழுத்துச் சென்று அருகில் இருந்த கோவிலுக்குள் புகுந்தான்.

அவள் கை தன்னிடம் இல்லை என்று உணர்ந்த அடுத்த நொடி, “ஏ…நில்லு…வெய்ட்…” என்று கத்திகொண்டே பின்னால் ஓடினான் ஆதி.

உள்ளே சென்றால் அதிர்ச்சியின் உருவமாய் அனுவை அவள் அப்பா வலுக்கட்டாயமாக பிடித்துக் கொள்ள ஆட்டோவில் இருந்த ஆண் அவள் கழுத்தில் தாலி கட்ட முற்பட்டான்.

அப்புறம் என்ன, நம்ப ஹீரோ அதை தடுத்து நிறுத்த, பெரிய சண்டை வெடிக்க, அவள் தந்தை அவனை யார் என கேட்க, அவனோ தன்னால் முடிந்த அளவு அவருக்கு புரியவைக்க, முடியாமல் தோல்வியுற்றவன் அயர்ந்த நேரம் அந்த ஆடவர் அனுவை ஓடவிடாமல் மடக்கிப்  பிடித்து அவள் கண்ணீர், கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் வலுக்கட்டாயமாக தாலிகட்ட முற்பட்ட நேரம், ஆதி சுதாரித்து கடைசியில் சினிமாத்தனமான கதை போல் தாலியை எடுத்து ஆதி அனு கழுத்தில் கட்டி விட்டான். அதை சற்றும் எதிர்பாராத அனு மயங்கி விழ ஆதி தாங்கிப்பிடித்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று குளுகோஸ் ஏற்றி தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

இலட்சத்தில் ஒரு திருமணம் எதிர்பாராத விதத்தில் நடக்கும் அப்படியான ஒரு திருமணமே ஆதி-அனுவுடையது. செய்தித்தாள்களில் ஓர் மூலையில் இது போன்ற  செய்திகளை என்றாவதுப் படித்துக் கடந்திருப்போம். அந்த செய்திகளில் ஒன்றாய் மாறிப்போயினர் அனுவும், ஆதியும். பார்த்து, பேசி, பழகி, பிடித்து, காதலித்து மணக்கும் தம்பதிகளே நீதிமன்றத்தின் வாயிலில் பிரிவு வேண்டி வரிசையில் நிற்கும் இக்காலத்தில் இப்படியான எதிர்பாராத, எல்லா விதத்திலும் ஏற்றத்தாழ்வு மிக்க இத்தம்பதிகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை வடிவமைக்க போகிறார்கள்? சிறு துரும்பு கிடைத்தாலே மலையாக்க காத்திருக்கும் சமூகத்தில் இவர்களின் வாழ்க்கைப் பயணம் எப்படியாகப் போகிறது? வாழ்க்கையின்  அதிமுக்கிய திருப்புமுனையான திருமணம், இருமனம் மட்டும் உறவு கொண்டு காதல் வளர்த்து வாழ்ந்து மடிவதல்ல; அது இரு குடும்பம் சார்ந்தது என்பதை வீட்டை விட்டு வெளியேறிய இவ்விருவரும் உணருவார்களா? திருமண பந்தத்தில் இணைய தற்போதுள்ள கண்டிஷனில் முக்கியமாக பார்க்கப்படும் பொருத்தங்கள் எதுவும் இவர்களிடத்தில் இல்லை. ஆனால் அந்த பந்தத்தை தூக்கி சுமந்து அதை வெற்றிகரமாக வழிநடத்த தேவையான காதலில் மூழ்கி முத்தெடுப்பார்களா? 

&*&*&

Advertisement