எனக்கொரு வரம் கொடு – 1

அழகானதொரு பொன்மாலைப் பொழுதில், தஞ்சாவூர் திலகர் திடலில் செல்வி சௌதாமினியின் நாட்டிய விழா ஏற்பாடாகியிருந்தது. அந்த ஜில்லாவில் புகழ்பெற்று விளங்கும் இளம் பரத நாட்டிய கலைஞர்களுள் அவளும் ஒருத்தி ஆவாள். அவளின் பெயருக்கென்றே கூடும் கூட்டமும் ஏராளம். அவ்விழாவிலும் அவ்வாறே! அரங்கம் நிரம்பி வழிந்தது!

நாட்டிய மேடையில், தூண் பதாகைகள் (banners) வலப்புறம் மூன்றும், இடப்புறம் மூன்றுமாகச் சாய்வான வரிசையில் மேடையை அலங்கரித்தபடி அமைந்திருக்க, வலது புறம் நடராஜர் சிலையும், அதன் முன்பு இரண்டு ஐமுக குத்துவிளக்குகளும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது.

மேடையின் பின்புறம் அடர் நீல வண்ணத்திலான திரைத்துணியும், அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த லைட் செட்டிங்ஸும் அந்த மேடையின் அழகை மேலும் மெருகேற்றி காட்டியது.

சற்று நேரத்திற்கெல்லாம் சௌதாமினியின் நாட்டிய விழா தொடங்கிற்று. சிவந்த வண்ணத்தில், பச்சை கரையிட்ட பட்டாடையில் உரிய ஆபரணங்களோடும், அலங்காரத்தோடும் இருந்தவளின் நாட்டியம் தொடங்க, அவளின் அடவுகளிலும், அபிநயங்களிலும் கூட்டத்தினர் மெய் மறந்த நிலையிலிருந்தனர்.

முதல் சில நிமிடங்கள் கடவுளை நமஸ்கரிக்கும் அலாரிப்பில் தொடங்கி, ஜதீசுவரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம் மற்றும் மங்களம் என்ற அத்தனை உருப்படிகளையும் வெகு நேர்த்தியாக ஆடினாள். அவளின் ஆடலில் நளினமும், லாவண்யமும் நிறைந்திருந்தது. அது சூழ இருப்போரை வெகுவாக வசீகரித்தது.

அவளின் கரங்கள் காட்டும் முத்திரைகளில், விழிகள் காட்டும் பாவனைகளில், ஒயிலாக திரும்பும் நீள் கழுத்தில், ஒய்யாரமாக ஒடியும் இடையில், லாவகமாகத் தூக்கி நிறுத்தும் கால்களில், வசீகரிக்கும் முகபாவனைகளில் சூழ இருந்தோர் வசீகரிக்கப்படாமல் இருந்தால் தானே அது அதிசயம்!

விழா நிறைவு பெறும் வரையிலும் மெய்மறந்து ரசித்த கண்கள் ஆயிரமாயிரம்! சில இளைஞர்களின் விழிகளில் ஆர்வமும், ஆசையும், கனவும் மிதந்து கொண்டிருந்தது! இன்றும் ஒரு ஜோடிக்கண்கள் சௌதாமினியை சற்று கூடுதல் ஆர்வமாகவே ரசித்திற்று!

இதை எதையும் உணராதவளோ தன் கலைப்பணியை நல்லவிதமாக முடித்து மேடையிலிருந்து அகன்றிருந்தாள். ஒப்பனை அறையில், தன் அலங்காரங்களைக் கலைத்து, நகைகளை உரிய இடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தவளை நெருங்கிய அவளின் தம்பி வசந்தன், “அக்கா…” எனத் தயக்கமாக அழைத்து நிறுத்தினான்.

காதணிகளைக் கழற்றியவாறே, என்ன என்பதாக நிமிர்ந்து பார்த்தவளிடம், சொல்ல வந்ததை மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயக்கமாக விழித்தான்.

“பீஸ் எதுவும் கட்ட வேண்டியதிருக்கா?” என்று ஊகித்துக் கேட்டவளிடம், தலை தாழ்த்தி இல்லையென்று மறுப்பாகத் தலையசைத்தான்.

“மார்க் எதுவும் கம்மியா? இல்லாட்டி ஸ்கூல்ல எதையும் உடைச்சிட்டியா?” என்றாள் நெற்றி சுருங்க. மீண்டும் இல்லை என்று மறுப்பாகத் தலையசைத்தவனின் தலை இன்னுமே தாழ்ந்தது.

“ஏதோ பணம் தேவைன்னு மட்டும் புரியுது…” என்று மெல்லிய பெருமூச்சுடன் கூறியவள், எதையோ கணித்தவளாய், “வீட்டில் காணாம போன ஒரு பவுன் தங்க மோதிரத்துக்கும், எட்டாயிரம் பணத்துக்குமான காரணம் உன்கிட்ட கிடைக்கும் போல…” என்று கூர்மையாகக் கேட்க, பதறி நிமிர்ந்தான் வசந்தன். அவனது முகமெங்கும் வியர்த்திருந்தது.

‘அக்கா எப்படி கண்டுகொண்டாள்?’ என்ற பதற்றத்தில் அவனின் இதயம் அதிவேகமாகத் துடித்தது. அச்சத்தில் அவனது தொண்டை உலர்ந்து, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவனது முகபாவனையே கசப்பான உண்மையைத் தமக்கைக்கு உணர்த்த, “சொல்ல வந்ததை சொல்லு…” என்று இறுக்கமாகக் கேட்டாள் சௌதாமினி.

அவளது இளக்கமற்ற தன்மையும், தள்ளி நிறுத்தும் செய்கையும் வெகுவாக அச்சுறுத்த, “அக்கா…” என்று தயக்கமாக அழைத்தான், எங்கு எப்படித் தொடங்க என்று புரியாதவனாய்.

“ம்ப்ச்…” என்று அவள் வெளிப்படையாக சலித்துக் கொள்ள, “டிரஸ் மாத்திட்டு வாங்க கா. போகும்போது பேசிக்கலாம்” என்று ஒருவாறு இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டு விட்டுச் சொன்னவன், ஒப்பனை அறையிலிருந்து வேகமாக வெளியேறினான்.

செல்பவனின் முதுகையே வெறித்தது சௌதாமினியின் விழிகள். இன்று என்ன பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறானோ என அவளால் கவலையோடும், சலிப்போடும் எண்ண மட்டுமே முடிந்தது.

அவளுடைய பெற்றோர் தவறிய பிறகு அவளையும், அவளின் தம்பி பூபாலனையும் பராமரிக்கும் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டனர் அவளின் சித்தப்பா குடும்பத்தினர். சித்தப்பா செல்லத்துரையும், சித்தி கற்பகவள்ளியும் சரி நல்ல முறையிலேயே இவர்களை கவனித்தும் வந்தனர். அதில் யாராலும் துளி குறை கூடச் சொல்ல இயலாது. அத்தனை கனிவும், பாசமுமான நபர்கள் அவர்கள்.

சித்தப்பாவின் மகன் வசந்தன் கூட, அதுவரை ஒற்றை பிள்ளையாய் வளர்ந்தவன், இவர்கள் வருகை தந்தபோது வெகு ஆர்வமாகவே வரவேற்றான்.

எல்லாம் நல்லமுறையில் சென்ற சமயம், பணியிடத்தில் நேர்ந்த விபத்தொன்றில் தலையில் பலமாகப் பட்ட அடியின் விளைவாய் செல்லத்துரையின் சித்தம் கலங்கிற்று. அவரது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

செல்லத்துரையை ஆதாரமாக கொண்ட குடும்பம் ஆட்டம் கொண்டது. ஏற்கனவே சேமிப்பிலிருந்த பணம், பணியிடத்தில் தந்த இழப்பீட்டுப் பணம் என்று கணிசமாக இருந்தபோதும்… குந்தித்தின்ன நேர்ந்தால் அது எதற்குக் காணும்?

நல்லவேளையாக சௌதாமினி தன் படிப்பை முடித்திருந்தபடியால், தன் கல்வித்தகுதிக்கு ஏற்ப நல்லதொரு வேலையில் தன்னை இணைத்துக் கொண்டாள். குடும்ப செலவு, சித்தப்பாவின் வைத்திய செலவு, தம்பிகளின் கல்வி செலவு என்ற நெருக்கடியில் அவளது சம்பளம் காற்றில் பறக்கும் சாம்பலின் நிலை தான்!

எதுவுமே எஞ்சாது என்பதோடு, ஆத்திர அவசரத்திற்குக் கூட சேமிப்பில் கைவைத்தால் தான் ஆயிற்று என்னும் இக்கட்டான நிலை! இதுபோன்ற நிலையில் தான், ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய குழுவிலிருந்து, இவளின் நடனப் பள்ளியின் மூலம் கிடைத்த பரிந்துரையின் பேரில் இவளுக்கு அழைப்பு வந்திருந்தது.

வழக்கமாக நடனப்பள்ளியின் மூலமாக ஏற்பாடு செய்யும் நடன நிகழ்ச்சிகளில் அவள் கலந்து கொள்வதுண்டு என்றாலும், அது அதிகம் இருக்காது. இதே பரதநாட்டிய குழு என்றால் சற்று அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதோடு, பெயரும் நன்கு பரிச்சயமாகும்.

சித்தியிடம் கலந்தாலோசித்து, பரதநாட்டிய குழுவினரிடம் உள்ளூரில் இருக்கும் விழாக்களில் பங்கேற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவித்தாள். காலையில் அலுவலக வேலை, மாலையில் நடனப் பயிற்சி அல்லது நடன விழா என சௌதாமினி சுழன்றதில் அவளின் குடும்பம் சற்று நல்ல நிலையை எட்டியது.

அவளின் திறமைக்கும், கடின முயற்சிக்கும், ஈடுபாட்டிற்கும் ஏற்ப அவளுடைய பெயர் விரைவிலேயே அந்த வட்டாரத்தில் பிரபலமாக தொடங்கியது. பெயரும், புகழும் கூடியதால், தனிப்பட்ட வாய்ப்புகளும் வந்தன. குழுவினரின் ஆலோசனைப்படி அதன்பிறகு அவளது விழாக்கள் பெரும்பாலும் தனியாகத்தான்!

இதற்கிடையில், சமீபமாகப் பூபாலனும் படிப்பை முடித்துத் தலையெடுத்திருந்தான்.

குடும்பம் சற்று நிலை பெறுவதற்காகப் போராடிய தருணம், செல்லத்துரையின் உடல்நிலை குறித்த கவலையில் மேற்கொண்டு என்ன என்று யோசிக்க முடியாத தருணங்களில் பதின் வயதிலிருந்த இளைய தம்பி வசந்தன் எப்படியோ வழி தவறியிருந்தான்.

கூடா நட்பு ஒருபுறமென்றால், பொய், கோபம், ஆத்திரம் போன்ற கொடும் நோய்கள் மறுபுறம். கற்பகவள்ளி கணவனைக் கவனிப்பதிலும், வீட்டைக் கவனிப்பதிலுமாக இருக்க, இவனது சறுக்கல்கள் அவருக்குத் தெரியவே இல்லை.

அந்த சமயத்தில், பூபாலன் வெளியூரில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்ததால் அவனுமே எதுவும் அறிந்திருக்கவில்லை.

சௌதாமினியும் வேலை, நடனம் என்று ஓய்வில்லாமல் இருந்ததில், கட்டவிழ்த்து விட்ட காளையென சுற்றித்திரித்தவனைக் குறித்து ஒரு விவரமும் அவளுக்குத் தெரியவரவில்லை.

ஒருவன் மூலம் செய்தி வந்திருந்தது தான்! என்னவோ அவனைக் கண்டாலே ஒதுங்கிச் சென்று விட வேண்டும் என்று உள்ளுணர்வு எச்சரிக்கும் காரணத்தால், அவனது பேச்சையும் இவள் நின்று கவனித்ததேயில்லை. கைப்பேசியின் அழைப்பைக் கூட நிராகரிக்க, அவன் என்ன நினைத்தானோ மேற்கொண்டு எதையும் தெரிவிக்க முயன்றதில்லை.

ஒருவழியாக சௌதாமினி இளைய தம்பி குறித்து அறிய நேர்ந்தபோது, வசந்தன் வெகுதூரம் சென்றிருந்தான். வீட்டினரிடம் அச்சம் கொண்டவன் போல வெளித்தோற்றத்தில் காட்சியளித்தாலும், அவனது பிழைகள் குறைவது போலத் தெரியவில்லை.

வசந்தனின் தொடர் பிழைகளும், அதை கற்பகவள்ளியிடம் மறைக்க இவள் மேற்கொள்ளும் முயற்சிகளுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தாலும் தம்பியிடம் சிறு மாறுதலைக் கூட காண முடியாதது, அவளுக்கு சொல்லொண்ணா வேதனையை அளித்தது!

 

இப்பொழுது என்ன இழுத்து வைத்திருக்கிறானோ? இவனை எப்படி நல்வழிப்படுத்துவதோ என்று வேதனையோடு எண்ணியவள், உடையை மாற்றி விட்டு, தன் உடைமைகளை சேகரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

காரின் அருகில் இன்னமுமே தலையைத் தொங்க போட்டுக்கொண்டு நின்றவனை எரிச்சலோடு பார்த்தாள். எந்த பிழை செய்தாலும், வசந்தனின் வருத்தத்திற்கு வஞ்சனையே இருக்காது. வண்டி வண்டியாக வருந்துவான் என்று சொன்னால், அது அத்தனை பொருந்தும்.

ஆனால், வருத்தம் என்பது அதோடு முடியக்கூடிய ஒன்றா? உண்மையாக வருந்துபவர்கள் அடுத்த முறை அந்த பிழையைச் செய்யத் துணியவே கூடாது அல்லவா? வசந்தன் ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. அவனது பிழைகள் கூடிக்கொண்டே இருக்கும். அதிலும் பல பிழைகள் இவ்வளவு துணிந்து விட்டானா என்ற பேரதிர்ச்சியை கொடுக்கும். வீட்டிலேயே திருடியிருக்கிறான் என்று இப்பொழுது அறிய நேரிட்டது போல!

சௌதாமினி நெருங்குவதைக் கண்டதும், வசந்தன் முன்பக்க காரின் கதவை அமைதியாகத் திறந்து விட்டான். அவன் முகத்தைப் பார்த்தபடியே உள்ளே ஏறி அமர்ந்தாள். காரில் பயணிக்கும்போதும் அவன் மௌனத்தையே தொடர்ந்தான்.