Advertisement

அத்தியாயம் ஒன்பது:

நீரஜா. அவனுடைய மனைவி. அவளுக்கு தான் கொடுக்கும் மரியாதை அவ்வளவு தானா. அவளுடன் அவன் இருந்தது இரண்டு நாட்களே, அதன்பின் அவன் சென்றுவிட்டான். பத்தே மாதங்கள் அவள் வாழ்க்கை முடிந்து விட்டது. எல்லோரும் சொல்வது போல், ஆண்பிள்ளைகளுக்கு என்னப்பா மனைவி இறந்தா அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை என்பது போல் ஆகிவிட்டதா.

ஆனால் இவளை என்ன செய்வது. அவன் அந்த வார்த்தைகளை உணர்ந்து சொல்லவில்லை தானாகவே வந்துவிட்டது. இவள் பதில் கூறிய விதம். நிறைய நாட்களாக இதனை மனதிற்குள் உரு போட்டிருப்பாள் போல தோன்றியது.

ஏதோ பெரிய தவறு தனக்கு தெரியாமலே நடந்து இருக்கிறது. முதலில் அதனை அறிய வேண்டும். தன்னிடம் கிரி இந்த கேள்வியை கேட்பான் என்று எதிர் பார்த்தது போலவும் தான் இந்த பதில் கூறவேண்டும் என்று அவள் மனனம் செய்ததுபோல் கிரிக்கு தோன்றியது.  

 காலையில் இருந்து எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் திருமணத்தை பற்றிய யோசனை ஓடிக்கொண்டிருப்பது தெரியும். கிரி மிகவும் குழப்பமாக உணர்ந்தான். சரியோ தவறோ அதை பற்றி பேசும் தருணம் இதுவல்ல. அவளை வீட்டில் இருக்க வைப்பது மட்டும் தான் அவனது நோக்கமாக இருந்தது. அவனை அறியாமல். அவள் வார்த்தைகளின் அலட்சியத்தில் உரைத்துவிட்டான்.

உஷாவினுடைய சித்தி, உள்ளே நுழைந்தார். குழந்தை உஷாவினுடைய கையில் இருப்பதை பார்த்ததும் அருகில் வந்தார்.

 “என்ன கண்ணு பேசிட்டிருக்க பாப்பா கூட.”, என்றார். அவர்  நுழையும்போதே வேண்டாம் என்று ஏதோ உஷா கூறிக்கொண்டு இருப்பது கேட்டது. உஷா பேசாமல் இருக்க.,

அவர் கிரியிடம், “இப்படிதான் தம்பி தீடீர்னு வேணாம்.? வேணாம்.? அப்படீன்ற வார்த்தையை சொல்லிகிட்டிருப்பா. என்னன்னு கேட்டா பதில் பேசமாட்டா.”,  என்றார். கிரிக்கு தான் நினைத்தது சரி என்று தோன்றியது.

அவரை மேலே பேசவிடாமல் உஷா அவரிடம் பேச்சை மாற்ற, “யார் சித்தி போன்ல.”, என்றாள்.

“கணேஷ்மா.” என்றார். அவருடைய பையன்.

“என்ன சொன்னான் சித்தி, நான் பேசியிருப்பேன்ல.” என்றாள்.

“இல்லைம்மா ஸ்கூல் முடிஞ்சிடுசான். உன்னை பாக்க ஹாஸ்பிடல் வரட்டுமான்னு கேட்டாங்க. வேண்டாம்டா! நாங்க நாளைக்கு வந்துடுவோம்னு சொன்னேன். “கேக்கலை. ரெண்டு பேரும் பஸ் ஏறி வரோம்னு ஒரே அடம். நானும் சரின்னு சொல்லிட்டேன்”. கிரியை பார்த்து, “நாங்க எப்போ தம்பி ஹாஸ்பிடல் போறோம்., டாக்டர் இன்னும் ஒரு நாள் இருக்கனும்னாறு. மதியம் வந்துடுவோம்னு நந்தினி பொண்ணு சொல்லுச்சு. இப்போவே நாலு மணி ஆயிடுச்சு.”, என்றார்.

“ நாலரை மணிக்கு வர்ஷாவை பார்க்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வராங்க. நானும் நந்தினியும் இருந்தா பரவாயில்லைன்னு பார்க்கிறேன். ஒண்ணும் பிரச்சனையில்லை., நான் டாக்டர் கிட்ட பேசிடறேன். கொஞ்சம் லேட் ஆனாலும் பரவாயில்லை”, என்றான்.

அவனுக்கு பயம் எங்கே தான் இல்லாத சமயத்தில் தனது அம்மாவோ பாட்டியோ ஏதாவது சொதப்பி விட்டால், ஏனோ உஷாவையும் தனியாக விட மனமில்லை.

“அதுக்கில்லீங்க தம்பி, பசங்க வந்து காத்துட்டு இருப்பாங்க. “ என்று தயக்கமாக சொன்னார்.

“நீங்க போங்கம்மா. நான் இவளை கூட்டிட்டு வரேன்.”, என்றான்.

“இல்லை நான் சித்தியோட போறேன்.”, என்றாள் உஷா.

 சிறிது கூட கிரி அவளை கண்டுகொள்ளவில்லை. “நீங்க போங்கம்மா நான் முத்து கிட்ட கூட்டிட்டு போகசொல்றேன்.”, என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

“நான் போகட்டுமா.” என்றார் சித்தி அவளை பார்த்து, “நானும் வரேன்.” என்றாள் உஷா.

“அந்த தம்பி அனுப்பமாட்டேங்குதே., என்ன கண்ணு பண்ணறது. அப்படி எடுத்தேன் கவுத்தேன்னு எல்லார் கிட்டயும் நடந்துக்க முடியுமா.”.

உஷா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“சரி நான் போகலை. நான் உன்னோடவே இருக்கேன்.!”.

“ஒண்ணும் வேண்டாம் நீங்க போங்க. அங்க ரெண்டு பேரும் பாத்துட்டு இருப்பாங்க.”, என்றாள்.

“சரி என்று கூறி அவர் கிளம்ப, மறுபடியும் உஷாவும் குழந்தையும் தனித்து விடப்பட்டனர்.

இப்போது குழந்தை தூக்கத்தில் இருந்து நன்றாக முழித்து “ங்கா.” என்றது. அவள் குழந்தையை கையில் ஏந்தியிருக்க முகத்தை அவளை நோக்கி திருப்பி சேலையில் முட்டியது. ஒரு இனம் புரியாத உணர்வு அவளுக்குள்.

அந்த நேரம் பார்த்து நந்தினியும் அருணும் வர, நந்தினி அவளிடம், “குழந்தையை குடு அன்னு பசிக்கும். பால் குடுக்க சொல்லலாம்.!” என்றாள். அவள் உஷாவிடமிருந்து குழந்தையை வாங்க. அதன் கைகளில் உஷாவினுடைய புடவை கெட்டியாக பிடிபட்டிருந்தது.

 நந்தினி அதனை எடுத்துவிட போக. உஷா அதனை மறுத்து, “அக்கா பால் இங்கேயே கொண்டு வர சொல்லுங்களேன். நான் குடிக்க வைக்கிறேன்.”, என்றாள்.                      

“உனக்கு தெரியுமா. “,என்றாள் நந்தினி.

“கத்துப்பேன்.”, என்றாள் உஷா. குழந்தையை அப்படியே கட்டில் மேல் போட்டு விளையாட்டு காட்ட ஆரம்பித்தாள்.

“சரி.”, என்று சொல்லி நந்தினி போக அருண் உஷாவிடம் பேச்சு கொடுத்தான்.

“நான் உன்னை எப்படி கூப்பிடட்டும். ஒரே குழப்பம் இவ அன்னலட்சுமின்றா. அன்னுன்றா., உஷான்றாங்க., ப்ரத்யுன்னு., கிரி கூப்பிடறான். என்றான்.

“உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படியே கூப்பிடுங்க அண்ணா.”,  என்றாள்.

“ஏன் வம்பு.? என் வீட்டுக்காரம்மா எப்படி கூப்பிடறாளோ அப்படியே கூப்பிடறேன்.!”, என்றான்.

அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது, குழந்தையிடம் விளையாடிக்கொண்டே பதில் அளித்தாள், “பாட்டி கூட அப்படிதான் கூப்பிடுவாங்க அண்ணா.”, என்றாள்.

“ஆனா நீ என்னை அண்ணான்னு கூப்பிடற. நந்தினியை அக்கான்னு கூப்பிடற. கிரியை மாமான்னு கூப்பிடற., அவ அக்கான்னா நான் அண்ணாவா. எங்கயோ உதைக்குதே”, என்றான். அவன் அவளை பார்த்த நாள் முதல் இவனுக்கு சந்தேகம் நந்தினியை அக்கா. என்கிறாள். ஆனால் கிரியை உறவு முறைப்படி மாமா. என்றே அழைக்கிறாள். ஏன்.? 

அந்த சமயம் பார்த்து கிரி உள்ளே நுழைந்தான் ஆனால் அவள் குழந்தையிடம் விளையாடும் ஆர்வத்தில் அவனை கவனிக்கவில்லை. இவர்கள் பேசியதை கேட்ட அவன் இவள் என்ன பதில் சொல்லபோகிறாள் என்று அறிவதற்காக அப்படியே நின்றான்.

“அது சின்ன வயசுல இருந்தே பழகிருச்சு.நந்தினிக்காவை அக்கான்னு கூப்பிடுவேன்.  மாமாவைகூட அண்ணான்னு தான் கூப்பிடுவேன் ஆனா பாட்டி திட்டுவாங்க. கல்யாணம் பண்ணிக்க போறவங்கள அப்படி கூப்பிட கூடாது. மாமான்னு தான் கூப்பிடனும்னு சொல்லிட்டாங்க. மறந்து போய் மாத்தி சொல்லிட்டா என்கூட பேசவே மாட்டாங்க. அதனால பழகிருச்சு.”, என்றாள். குழந்தையிடம் விளையாடிக்கொண்டே பதில் அளித்தாள். அவள் கூறிய பதிலை அவளே உணரவில்லை.

இந்த பதிலை கேட்டு இருவருமே அதிர்ந்தனர். கிரி அருணிடம் சைகையாலேயே மேலே பேச்சை வளர்க்குமாறு காட்டினான்.

“பாட்டி சொன்னாங்கன்னா., நீ யார்க்கிட்டேயுமே அதை பத்தி சொன்னதில்லையா.?”,

“யார் கிட்ட சொல்லனும்.?”,

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அருணிற்கு தெரியவில்லை. கிரி அவனிடம் சைகையாலேயே தன்னிடம் என்பது போல் காட்ட. அருண் உஷாவிடம், “கிரி கிட்ட.”, என்றான்.

“கிரி.!” என்ற வார்த்தையை கேட்டதுமே அவள் நிகழ்வுக்கு வந்தாள். டக்கென்று தலையை திருப்ப அங்கே அருணுடன்  கிரியும் இருந்ததை பார்த்து அப்படியே அமைதியாகி விட்டாள்.

“பதில் சொல்லு ப்ரத்யு.” என்றான் கிரி.

அவனை ஒரு முறை பார்த்துவிட்டு தலையை கீழே குழந்தையை நோக்கி திருப்பினாள்.

அந்த பார்வையில் என்ன இருந்தது புரியவில்லை.

“கேட்டா பதில் சொல்லனும் ப்ரத்யு.”, என்றான் சிறிய அதட்டலோடு குரலில்.

“சொல்லலைன்னா என்ன செய்வீங்க.”, என்றாள் அவனை பார்த்து குரலில் அலட்சியத்தோடு.

அருண் அவனிடம் பேசாதே என்பது போல் தலையாட்டி, அவள் அருகில் சென்று, “ப்ளீஸ். எனக்காக சொல்லேன். நான் தானே உன் கிட்ட பேசிட்டு இருந்தேன். அவன் அதிகப்ரசங்கி நம்ம அனுமதியில்லாம என்ட்ரி குடுத்துடுவான்.”, என்றான்.

“என்ன அவங்களுக்கு நீங்க டப்பிங் வாய்ஸ்ஸா.”, என்றாள் நக்கலாக,

“இப்படி பேசினா எப்படி அன்னும்மா. லைப்ல யாரையாவது நம்பனும்”, என்றான் நயமாக.

“நானு நம்பலையா.”, கிரியை நோக்கி கைகாட்டி, “தோ இங்கே நிக்கறாங்களே. இவங்களை நம்பி தான் இப்படி ஆயிட்டேன்.”, என்றாள்.

“நான் என்ன பண்ணினேன்.”, என்றான் கிரி அவளிடம்.

பதில் பேசாமல் இருக்க நந்தினி பாலோடு உள்ளே நுழைந்து உஷாவிடம் கொடுக்க., அதை வாங்க அவள் நீட்டிய கையை பற்றிய கிரி அவளை அந்த இடத்தை விட்டு வேகமாக இழுத்து எழுப்பினான்.

“விடு கிரி அவளை.”, என்று நந்தினி பதற, கிரி அவளிடம், “இது எனக்கும் அவளுக்கும். நீ தலையிடாதே. குழந்தையை கவனி.”, என்றான்.

“விடு. விடு.” என்று இப்போது கத்தியது உஷா.

“பதில் சொல்லு நீ.”, என்றான் கிரி.

“மொதல்ல நீ விடு. எனக்கு கை வலிக்குது”, என்று கத்தினாள் உஷா.

கிரி அப்போதும் கையை விடாமல் பிடியை மட்டும் சற்று தளர்த்தி, “இப்போ சொல்லு.”, என்றான்.

“சொல்லுன்னா எதை சொல்ல.”, என்றாள். பாட்டி சொன்னதை, “நீ ஏன் சொல்லலை.”, என்றான்.

“நான் பாட்டி இறந்ததுக்கு அப்புறம் எப்போ உன்னை பார்த்தேன்.”, என்றாள்.

மரியாதையெல்லாம் பறந்து விட்டது அவனை நோக்கி ஆவேசமாக, “சொல்லு எப்போ நான் உன்னை பார்த்தேன் சொல்லு.”, என்று மறுபடியும் ஆவேசமாக கத்தினாள்.

யாரிடமும் இதற்கு பதில் இல்லை. பாட்டி இறந்த அன்று அவளை பார்த்தது அதன் பிறகு அவளை பார்க்கவே இல்லை. அதுதான் நிஜம். ஏன்.? “விதி” யா.? “சதி” யா.? இரண்டும் வாழ்கையில் ஒன்றோடு ஒன்று மிகவும் தொடர்புடையது. இந்தகேள்விக்கு பதில் யாரிடமும் கிடையாது.    

“அது.”, என்று கிரி இழுக்க. , “தயவு செய்து எதுவும் சொல்லிடாத.! இனியும் நான் உன்னை நம்ப மாட்டேன்.”, என்றாள்.

“அப்படி என்ன தான் சொன்னேன்.”, என்று கிரிக்கு சுத்தமாக தெரியவேயில்லை.

“என்னன்னு சொன்னாதானே ப்ரத்யு தெரியும்”, என்றான் ஆயாசமாக.

“நீ வரேன்னு சொல்லிட்டு போயிட்டு வரவேயில்லை.”, என்றாள்.

இன்னும் அவனுக்கு தெரியவில்லை.

அவளை புரியாமல் பார்க்க, “பார்த்தியா உனக்கு அந்த ஞாபகம் கூட இல்லை”, என்றாள் அழுகையுடன். “பாட்டி இறந்தப்போ நீங்க ரெண்டு பேரும் என்ன சொன்னீங்க. நாங்க இருக்கோம் அழகூடாதுன்னு தானே சொன்னீங்க.”.

பாட்டி இறந்த அன்று நந்தினிக்கும் கிரிக்கும் ஞாபகம் வர உஷா உரைத்தது. அன்று உஷா அழுத அழுகை கொஞ்சமல்ல. அழுது அழுது மயங்கிக்கொண்டே இருந்தாள். கிரியும் நந்தினியும் அவளோடே இருந்தனர். அவர்கள் அவளை சாப்பிட வைப்பதற்குள் படாத பாடு பட்டனர். நந்தினி அவளிடம், “நாங்க இருக்கோம் கவலைப்படாதே.! என்று கூறிகொண்டே இருந்தாள்.

கிரியும் அதையே சொல்லிகொண்டிருந்தான். பாட்டியின் ஈமைகிரியை முடிந்த அடுத்தநாளே அவர்களுக்கு செமஸ்டர் எக்ஸாம் இருந்தது. கிரியும் நந்தினியும் இரட்டையர்கள் என்பதால் ஸ்கூலிலும் ஒரே வகுப்பு, காலேஜ் செல்லும் போதும் இருவர் ரசனையும் ஒத்துபோனதால் அங்கேயும் ஒரே பிரிவு. அதனால் இருவருமே செல்ல வேண்டி இருந்தது. அதனால் கிளம்புவதற்காக தாங்கள் இருக்கிறோம் என்று அவளை சமாதானபடுத்துவதர்க்காக கூறினர். உணர்ந்து சொல்லவில்லை. என்றாளும் அவளை விட்டுருக்க போவதில்லை.

 ஆனால் பாட்டி மட்டுமே அவளுடைய உலகம். அவரை விட்டு வீட்டில் அவள் அதிகம் பழகும் நபர்கள் கிரியும் நந்தினியும். அதனால் நாங்கள் இருக்கிறோம் என்றது அவள் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதிலும் கிரி செய்த தவறு அவர்கள் பேகை எடுத்துக்கொண்டு ஊருக்கு போவதற்காக காரில் ஏறிவிட்டனர் ஆனாலும் அவளுடைய அழுத முகம் என்னவோ செய்ய, திரும்பவும் இறங்கி அவசரமாக அவளிடம் ஓடினான்.அவனை பொறுத்தவரையில் உஷா சிறு குழந்தையை போன்றவள். ஓடி அவன் உஷாவிடம் உரைத்த வார்த்தைகள்,

“ப்ரத்யு அழக்கூடாது. ரொம்ப யாரையும் படுத்தக்கூடாது. டைம்க்கு சாப்பிடு. அப்பா அம்மா என்ன சொன்னாலும் கேளு. நான் இருக்கேன். உன்னை விடமாட்டேன். எக்ஸாம் முடிஞ்சவுடனே வந்துடறேன்.”, என்று கூறி அவளை சமாதானபடுத்திவிட்டு சென்றான்.

 அவன் அந்த வார்த்தைகளை சமாதானப்படுத்தும் எண்ணத்துடன் தான் கூறிச்சென்றான். ஆனால் பத்தாவது முடித்த சிறு பெண் உஷா. அதுவும் கிரி அவளை திருமணம் செய்து கொள்ளபோகிறவன் என்று பாட்டியால் கூறப்பட்டவன். அதை அப்படியே அவள் பிடித்துக்கொண்டு அவன் வருவான் என்று நிறைய நாட்கள் அவனை நம்பிக்கொண்டு இருந்து விட்டாள். அவன் அப்பா அம்மா என்ன சொன்னாலும் கேளு என்று சொன்னதால் தான் தந்தையோடு போனாள். இல்லாவிட்டாள். என்ன ஆனாலும் வீட்டை விட்டு சென்றிருக்க மாட்டாள். 

இப்போது அவள் அதைத்தான் கூறினாள். “நீதான் வரவேயில்லையே.? அப்புறம் நான் யார்கிட்ட சொல்வேன். நீ அப்பா அம்மா என்ன சொன்னாலும் கேளுன்னு சொன்னதால தான் அவங்க அப்பாவோட போக சொன்னப்ப போனேன். அப்பா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் எத்தனை நாள் நீங்க வருவீங்கன்னு பாத்துட்டே இருப்பேன் தெரியுமா. ஸ்கூல் விட்டு வரும்போது இன்னைக்காவது வந்திருப்பீங்களான்னு பாத்துட்டே வருவேன். வீட்டுக்குள்ள இருக்கும் போது ஏதாவது கார் சத்தம் கேட்டதுன்னா ஓடி வருவேன். வாசலையே பார்த்துட்டே இருப்பேன். நான் என்ன செஞ்சேன் ஏன் என்ன பாக்க யாரும் வரலைன்னு எப்போவுமே யோசிச்சிட்டே இருப்பேன். எப்போவும் ஒரே யோசனைதான். யோசிச்சு. யோசிச்சு.  எப்படி பைத்தியமாகாம தப்பிச்சேன்னு எனக்கே தெரியலை.

 டெய்லி வீட்டுக்கு போன் பண்ணுவேன். ஆனா வேலைக்காரங்க தான் எடுப்பாங்க நீங்க இருக்கீங்களான்னு கேட்டா இல்லைன்னு சொல்லிடுவாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் நீங்க யாரும் வரமாட்டீங்கன்னு புரிஞ்சது. சில சமயம் செத்துடலாமான்னு தோணும். ஆனா வலிக்குமே அப்படின்னு அதை கூட செய்ய தைரியம் இல்லை”.

“அப்படியும் ஒரு நாள் ஸ்கூல் விட்டு நடந்து வந்துட்டு இருக்கும்போது பஸ் முன்னாடி விழுந்துடலாம்னு வேகமா போனேன். ஆனா கணேஷ் கரக்டா சென்ஸ் பண்ணி இழுத்துட்டான். அன்னையில இருந்து என்னை அவங்க யாரும் தனியா கூட விட்டதில்லை. அவங்க இல்லைன்னா நான் இல்லை இன்னைக்கு.”, என்றாள் அழுதபடியே. “அப்போ கூட மனசுக்குள்ள உங்களுக்கு சாதகமா ஏதாவது காரணம் கண்டுபிடிச்சு எப்படியும் வந்துடுவீங்கன்னு இருந்தேன்”.

 “ஒரு நாள் அப்பா இறந்ததுக்கு அப்புறம் இங்க வீட்டுக்கு நானும் கணேஷும் வந்தப்போ இன்னும் பிரச்சனை ஆயிடுச்சு. பாட்டி சொன்ன மாதிரி எதுவுமே இல்லைன்னு தெரிஞ்சது. அப்புறம் நான் உங்களை பார்க்கவே கூடாதுன்னு முடிவெடுத்து அதுக்கான வாய்ப்புகளை சுத்தம்மா அவாய்டு பண்ணிடுவேன். அப்போயிருந்து நான் டெய்லி ஒரு தடவையாவது சொல்லிப்பேன் நீங்க எனக்கு வேண்டாம்னு. இப்போ எதுக்கு நான் இங்கே வந்தேன்னு தெரியல்ல. நான் வந்திருக்கவே கூடாது”, என்றாள் கண்களில் கண்ணீரோடு.

கேட்டுகொண்டிருந்த நந்தினி விம்மி அழவே ஆரம்பித்து விட்டாள். கிரியின் கண்களிலும் நீர் நிறைந்தது. தனக்கு தெரியாமலே தன்னை வைத்து அவளிடம் உரைக்கப்பட்டது தானும் அவளை பார்க்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு. பாட்டி அந்த சிறு பெண்ணிடம் கூறியது தன்னிடம் ஏன் கூறவில்லை. கிரிக்கு குற்றவுனர்ச்சியில் மனம் இன்னும் அதிக அழுத்தத்திற்கு ஆளானது.

 பார்த்து கொண்டிருந்த அருணிற்கு யாரை சமாதனப்படுத்துவது என்றே தெரியவில்லை. நந்தினியும் அழ. உஷாவும் அழ. கிரி. என்ன நிலைமை என்றே தெரியவில்லை.                                              

Advertisement