Advertisement

அத்தியாயம் எட்டு:

 

அவர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியேறுவதை பார்த்த சாம்பவி கிரி உள்ளே இருப்பதை பார்த்து உள்ளே சென்றார். அவனை நோக்கி, “ சாப்பிடலையா கிரி.”, என்றார்.

“ சாப்டுட்டேன் மா ” என்றான்.

“ எப்படியிருக்கா.”, என்றார் உஷாவை பார்த்தாவாறே.

“ கண்முழிச்சா, ஆனா என்னன்னு தெரியல. ஏதோ பழைய ஞாபகம் போல பாட்டிய கேட்டுட்டு தூங்கிட்டா.”, என்றான்.

அவன் அருகே வந்த சாம்பவி , “ என் மேல உனக்கு கோபமா “, என்றார்.

“ இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர்பாக்கறீங்கம்மா  ”.

“ எனக்கு அவ கஷ்டப்படனும்னு எண்ணம் கிடையாது. அவளை பார்த்துக்க எனக்கு விருப்பமில்லை…………. அதனால அவ அப்பாவோட அனுப்பினோம். உங்க அப்பா குடுத்த எதையுமே அவங்க வாங்கிக்கல…………. எங்க வீட்ல அவ எங்க பொண்ணா தான் இருக்க முடியும்னு சொல்லிட்டாங்க…………. மார்க்ஷீட்ஸ் கிழிச்சது.  கட்டாயம் என்னோட தப்பு தான். ஆனா அவ அன்னைக்கு ரொம்ப பேசிட்டா. அவள பத்தி தெரிஞ்சும் என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியல.Still now I am having a guilty conscious for that. Try to understand me ”.

“அம்மா ப்ளீஸ். இதையே எத்தனை தடவை சொல்வீங்க. I am sick of it. உங்கள நீங்களே ஜஸ்டிபய் பண்ணாதீங்க. ப்ரிச்சனை பண்ணிட்டீங்க. இது அவளா? நீங்களா? அப்படின்றது செகண்டரி. இதுல பாதிக்கப்பட்டது அவதான். நீங்க என்ன சொன்னாலும் நீங்க செஞ்சது தப்பு. என்ன செஞ்சு அத சரி பண்ண முடியும் பாக்கறேன். இனிமே எந்த காரணமும் சொல்லாதீங்க விட்டுடுங்க.” என்றான் கோபமாக.

“எதுக்கு ப்ராப்லம் வந்தது.?, என்ன நடந்தது அன்னைக்கு.? “, என்றான் கிரி.

“அது. என இழுத்தார்”, சாம்பவி.

அவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே அங்கே வந்தார் ருக்மணி அம்மாள். கோபமாக இருவரையும் பார்த்து பேச ஆரம்பித்தார். “என்ன மஹாராணி தூங்கறான்னு ரெண்டு பேரும் இங்க சாமரம் வீசிட்டு இருக்கீங்களா……………….”.

“ பாட்டி………, தேவையில்லாத பேச்சை குறைச்சிக்கங்க. எங்களை பத்தி எது வேணா பேசுங்க, ஆனா ப்ரத்யுவ பத்தி பேச வேணாம் ”.

“ பேசுனா என்னடா பண்ணுவ.? “

“ நான் ஒன்னும் பண்ண மாட்டேன். உன் பிரச்சினை நீயே பார்த்துக்கோன்னு சொல்லிடுவேன். அப்பறம் அவ உங்கள என்ன பண்ணாலும் நானும் வர மாட்டேன் யாரையும் வர விடமாட்டேன் “.

“ என்னடா மிரட்ற்றியா.? “

“ விளையாட்டில்ல பாட்டி. சீரியஸ்ஸா சொல்லறேன். உங்கள மாதிரி பத்து பேருக்கு சமம் அவ “.

“ அதையும் தான் பார்த்துடறேன் “.

“பாருங்க.!” உங்க நிலைமை அப்படின்னா நான் என்ன பண்ண முடியும். ஆனா இப்போ வேண்டாம். அவளுக்கு உடம்பு சரியில்லை. தயவுசெய்து எந்த பிரச்சனையும் பண்ணாதீங்க. அப்பா ஏதோ மாப்பிள்ளை சொன்னாங்க. அதை வர்ஷாக்கு பார்க்கலாம்னு நினைக்கிறேன். அவங்க சாயந்திரம் வராங்க. இப்போதைக்கு நீங்க அதை மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு ப்ரத்யுவ தொந்தரவு பண்ணும்னு நினைச்சீங்க. அப்புறம் என் பாட்டி இருந்தப்ப நடந்ததுதான் நடக்கும். நீங்க இந்த வீட்டு பக்கம் எட்டிக்கூட பார்க்கமுடியாது. என்றான்,” மிகக் கடுமையாக.

சாம்பவி, “என்ன கிரி இப்படி. பாட்டிகிட்ட மரியாதையில்லாம பேசற.”, என்று அவனை அதட்ட, “நீங்க சும்மாயிருங்கம்மா. “, என்று சீறினான்.

“உங்கக்கிட்டையும் தான் சொல்லறேன். அவ இனிமே இங்க தான் இருப்பா. அவ போறேன்னு சொன்னாலும் நான் விடப்போறதில்லை. அதனால வீணா எந்த பிரச்சனைகளும் வீட்டுக்குள்ள வேண்டாம்”.

“பார்த்தியா. நேத்துதான் அவளை பார்த்த. அதுக்குள்ளேயே நமக்குள்ள எத்தனை பிரச்சனை பண்ணிவிட்டுட்டா. இதனால தான் நான் அவள இந்த வீட்ல இருந்து அனுப்பினேன். இது என்னோட வீடு. என்னை மட்டும் நான் பார்க்கலை. எனக்கு உன்னோட நிம்மதியும் முக்கியம். அவளோட யாருமே நிம்மதியா இருக்க முடியாது. அதனால தான் அவங்க நினைச்சது நடக்கவிடலை.!”, என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமலேயே வார்த்தையை விட்டார்.

“அம்மா அவங்கன்னு நீங்க யாரை சொல்லறீங்க. என்ன நினைச்சாங்க.? என்ன நீங்க நடக்கவிடலை.?”, என்றான் கிரி மிகவும் சீரியஸ் ஆக.

“ம்., உங்க பாட்டியும் இவளும் தான் வேறே யாரை சொல்வேன்”.

“என்ன நினைச்சாங்க.?”

“இவளை உனக்கு கல்யாணம் பண்ணிவச்சு உன்னை என்கிட்டேயிருந்து பிரிக்க நினைச்சாங்க.”, என்றார் வெறுப்பாக.

“அம்மா நீங்களா ஏதாவது கற்பனை பண்ணி உளறாதீங்க.!. சட்டுன்னு, நம்ம யார் மேலேயும் பழி போடக்கூடாது. அது ரொம்ப தப்பு”,.

“நான் ஒண்ணும் உளறலை. அவ சொன்னத தான் சொல்லறேன். அவ தான் சொன்னா அவ உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவ பாட்டி அப்படிதான் சொல்லியிருக்காங்கன்னு சொன்னா.”.

இந்த தகவல் கிரிக்கு முற்றிலும் புதியது. அவனுக்குள் எழுந்த உணர்வு ஆச்சர்யமா அதிர்ச்சியா. அவனுக்கே என்னவென்று தெரியாத கலவையான உணர்வு. தனக்கு தெரியாமல் தன்னை பற்றி என்ன நடந்தது.

“நீங்க இதை ஏன் எங்கிட்ட சொல்லலை.” 

மேலே என்ன பேசியிருப்பார்களோ அதற்குள்.

“அது சின்ன வயசுல சரியா விஷயங்கள் புரியாம., மனுஷங்கள தெரிஞ்சுக்காம., அறியாமையில் பேசினது. அத விட்டுடலாமே. இனிமே அதைபத்தி எப்பவுமே பேசாதீங்க. நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லிட்டேன் இது நடக்காதுன்னு. மேல மேல இதைபத்தி பேசி என்னை அசிங்கபடுத்தாதீங்க. “, என்றாள் எரிச்சலான குரலில்  உஷா.

டக்கென்று மூவரும் திரும்பினர். கிரி இவ எப்போ கண்முழிச்சா தெரியல்லையே. என்ன என்ன கேட்டாளோ என்றான் மனதிற்குள்.

“ ஏன் இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசுற. எப்போ முழிச்ச.” என்றான் அவளை பார்த்தபடி.

“இப்போதான். சித்தி எங்க.?” என்றாள் கவனமாக அவனை பார்ப்பதை தவிர்த்தபடி.

“சாப்பிடபோயிருக்காங்க. உனக்கு இங்க சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லவா.” என்றான் கிரி.

அவள் பதில் கூறும் முன்பாகவே ருக்மணி பாட்டி, “ ஏன் எடுத்துட்டு வந்து மகாராணிக்கு அப்படியே ஊட்டி விடறது தானே” என்றார் நக்கலாக.  

உஷா பதிலே பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள். அந்த அலட்சியம் அவரை மேலும் பேச தூண்டியது. கிரியுமே பதில் பேசவில்லை. ஏதாவது பதில் கொடுத்தால் பாட்டி மேலும் பேசிக்கொண்டே போவார்கள் என உணர்ந்து அவரது கையை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு போனான்.

 பின்னோடு சாம்பவியும் வேகமாக போனார். அவருக்கு உஷாவோடு தனியாக இருக்க பயம்.

“பாட்டி. சொல்லிக்கிட்டே இருக்கேன் தயவுசெய்து பேசாதீங்க.” என்ற கிரி அங்கே நிற்காமல் வேகமாக உள்ளே சென்றான்.

அங்கே உஷா இல்லை. பாத்ரூமில் இருந்து சத்தம் வந்ததினால் அங்கேயே அமர்ந்து கொண்டான். அவன் அம்மா கூறிய செய்தி அவனுக்கு முற்றிலும் புதியது. பாட்டி அவனிடத்தில் அந்த மாதிரி எதுவும் சொன்னதில்லை. பாட்டியோடு அவன் அதிகம் நேரம் செலவளித்ததில்லை தான். ஆனாலும் சொல்ல வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் கட்டாயம் சொல்லி இருக்கலாம். உஷாவுமே இதை தன்னிடம் சொல்லாமல் ஏன் அம்மாவிடம் சொல்ல வேண்டும். ஆனால் அவன் கடைசியாக அவளை பார்த்தபோது அவள் மிகவும் சிறிய பெண் திருமணத்தை பற்றி பேச வாய்ப்பில்லை. அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அதற்கு பிறகு அவன் உஷாவை பார்க்காதது மிகபெரிய தவறோ என்று தோன்றியது. ஆனால் அதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை. இப்போது யோசித்தால் ஒரு வேளை சந்தர்பம் அமையாமல் பார்த்துக்கொண்டார்களோ என்று தோன்றியது. உஷா , நந்தினி , கிரி மூவரும் ஒரே பள்ளியில் படித்ததினால் , வீட்டில் அதிகமாக பேசுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றாலும் ஸ்கூலில் பார்த்துக்கொள்வார்கள்.

அதுவும் அவளை எல் .கே .ஜி யில் இருந்து அவன் தான் கிளாஸிற்கு கொண்டு போய் விடுவான். அவன் அம்மாவிற்கு தெரியாமல் அவன் பாட்டியிற்காக செய்வான். நந்தினி போய் அவன் அம்மாவிடம் சொல்லிவிடுவாள். அவன் அம்மா அவனிடம் கோபித்து கொள்வார்கள். அதனால் பெரிய வகுப்பிற்கு வர வர யாருக்கும் தெரியாமல்தான், ஏன் உஷாவிர்க்கே தெரியாமல் அவள் மீது கவனம் வைத்துகொள்வான். போக போக நந்தினிக்கு உஷாவை மிகவும் பிடித்து விட்டதால், ஸ்கூலில் நடப்பது எதுவும் வீட்டிற்கு தெரியாது.

ஸ்கூலில் எப்போதுமே ஏதாவது பிரிச்சனை செய்து விடுவாள் உஷா. அதை தீர்த்துவைக்க நந்தினியோ அல்லது கிரியோ ஓட வேண்டியிருக்கும். அத்தனை கலாட்டாக்கள் ஸ்கூலில் செய்வாள். வீட்டிலும் சரி வேலையாட்கள் அத்தனை பேருமே அவளுக்கு தான் பயப்படுவர். அவளுக்கு கை என்றுமே கொஞ்சம் நீளம். அப்படின்னா எல்லோரையும் சட்டென்று அடித்துவிடுவாள். இல்லாவிட்டால் எதையாவது தூக்கி வீசிவிடுவாள். ஆனால் அவன் மனதில் திருமணம். அவளை. என்ற எண்ணமே இல்லை.

இப்போது தான் அவன் உஷாவையே பெரிய பெண்ணாக பார்க்கிறான். அவன் ஸ்கூல் முடித்து காலேஜ் போகும்போது அவள் எயிட்த் படித்த கொண்டிருந்த ஒரு சிறிய பெண். இப்போது அவன் பார்வைக்கு அவள் புதிய பெண்ணாய் தெரிந்தாள். அவளோடு போனில் பேசுவதற்கு அவனுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் நேரில் அதுபோல் பேச முடியுமா என்று தோன்றியது. அதனால் தான் அவளிடம் நேற்று ஹாஸ்பிட்டலில் கூட பேசாமல் வந்தான்.

அவன் யோசனையை தடை செய்வது போல் யோசனையின் நாயகியே வெளியே வந்தாள். மெதுவாக சுவரை பிடித்தவாறே நடந்து வந்தாள். கட்டில் ஹாலின் நடுவில் இருந்தது. சுவரில் இருந்து கை எடுத்து அவள் ஐந்து ஆறு நடையாவது எடுத்து வைக்க வேண்டும். அவள் சுவரை பிடித்து நடந்ததினாள். அவளுக்கு உதவுவதற்காக கிரி அவளுக்கு கை கொடுக்க. வேண்டாம் என்று மறுத்துவிட்டு தடுமாறியபடி கட்டிலை அடைந்து உட்கார்ந்துகொண்டாள்.

இந்த உஷா கிரிக்கு முற்றிலும் புதியவள். முன்பெல்லாம் இரண்டு நிமிடம் கிடைத்தால்கூட அவனிடம் வாய் ஓயாமல் பேசுவாள். கிரிகூட அவளிடம் எரிந்து விழுவான். “எதுக்கு இப்படி தொனதொனன்னு பேசுற. உனக்கு வாயே வலிக்காதா.” என்பான். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே தான் இருப்பாள். ஆனால் இப்போது அவள் வந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது.! ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஏன் அவனை பார்க்ககூட இல்லை. தடுமாறியபடி வந்து அமர்ந்தவள் கண்களை மூடியவாரே அமர்ந்திருந்தாள்.    

அதற்குள் அவளது சித்தி சாதம் பிசைந்து எடுத்துவர. ஒரு ஸ்பூன்போட்டு அவர், “நான் ஊட்டட்டுமா.” என்று கேட்க, “வேண்டாம்.” என்று தலை அசைத்து மறுத்தவாரே, அவளே வாங்கி உண்ண ஆரம்பித்தாள். கைகள் சிறிது நடுக்கமாக இருந்தது. ஆனாலும் விடாமல் அவளே உண்டாள்.

எவ்வளவு பிடிவாதம். என்று மனதிற்குள் நினைத்தவாறே கிரி ரூமை விட்டு வெளியேர நினைக்க. இரு குழந்தைகளையும் தூக்கியவாறே நந்தினியும் அருணும் உள்ளே நுழைந்தனர்.        

அவள் தடுமாறியபடி உணவு உண்டு கொண்டிருப்பதை பார்த்த நந்தினி தன் கையில் இருந்த குழந்தையை கிரியிடம் கொடுத்துவிட்டு உஷா கையில் இருப்பதை ஏறக்குறைய பிடுங்கி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவள் மறுத்து பேச இடமே கொடுக்கவில்லை.

உஷா ஏதோ சொல்ல வர “வாய்ய மூடிட்டு சாப்பிடு……….” என்றாள்நந்தினி. அருண் சும்மா இருக்காமல், “வாயை மூடுனா எப்படி நந்தினி சாப்பிட முடியும்.?” என்று கேட்க. நந்தினி அவனை பார்த்து முறைத்தாள். இதை பார்த்த உஷாவிர்ற்கு மெல்லிதாய் சிரிப்பு வந்தது.

“அன்னு நீ இப்போ எதுக்கு சிரிக்கறே.”, என்றாள் உஷாவை பார்த்து நந்தினி.

“நான் கேக்கலாம்னு நினைச்சேன் வாயை மூடிட்டு எப்படி சாப்பிடறதுன்னு. அதுக்குள்ளேயே அண்ணா கேட்டுட்டாங்க.” என்றாள் உஷா.

“எப்படி சாப்படறது நீயே சொல்லு.”, என்றாள் நந்தினி உஷாவை பார்த்து.

“இதுக்கு யாராவது பதில் சொல்ல முடியுமா.”, என்றான் அருண்.

நந்தினி உஷாவை பார்க்க, “என் வாயை மூடுனா சாப்பிட முடியாது. ஆனா உங்க வாயை மூடுனா நான் சாப்பிடலாம்.”, என்று கூறி நந்தினியை பார்க்க நந்தினி அவளுக்கு ஹை பை கொடுத்தாள்.

“அப்பா சாமி இது என்னடா பெரிய கடியா இருக்கு. அதைவிட பெரிய கூட்டணியா இருக்கு.”, என்று பாவனையோடு அருண் சொல்ல,

“மாமா. இது கடி இல்லை மாமா. இது ஜோக்கு. உங்கள்ளுக்கு அவ கடிய பத்தி தெரியாது. அவ வார்த்தையால கடிக்கமாட்ட. வாயால தான் கடிப்பா.”, என்றான் கிரி சிரிப்போடு. நந்தினியும் அவனோடு சேர்ந்து சிரிக்கத் துவங்கினாள்.

“நந்தினிக்கா நீங்களுமா. “, என்றாள் உஷா.

அருண் ஒன்றும் புரியாமல் பார்க்க, அவனிடம் நந்தினி. “சின்ன பொண்ணா இருக்கும் போது, அன்னு எல்லோரையும் கடிச்சி வெச்சிடுவா. நான் நிறைய கடி வாங்கி இருக்கேன். ஆனா இந்த கிரி எப்பவுமே எஸ்கேப் ஆயிடுவான். ஒரு தரம் அவ செகண்ட் படிக்கும் போது மிஸ் திட்டுனாங்கன்னு கோபத்துல மிஸ் கைய கடிச்சிட்டா. இதை இந்த கிரி வந்து வீட்ல எல்லோர்க்கிட்டையும் சொல்லி சொல்லி சிரிச்சிட்டு இருந்தானா. அன்னுக்கு கோபம் வந்து என்ன பண்ணா தெரியுமா.? “என்று சொல்லிவிட்டு இன்னும் அதிகாமாக சிரிக்கத் துவங்கினாள்.

“அக்கா ப்ளீஸ் சொல்லாதீங்க.” என்றாள் உஷா.

“கிரியுமே சிரித்துக்கொண்டு இருந்தான். இருவரும் சிரிப்பதை பார்த்த அருண். “சொன்னா நானும் சிரிப்பேன்ல. “என்றான்.

 அந்த சமயம் பார்த்து போன்வர. உஷாவினுடைய சித்தி அதை பேசுவதற்காக ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே போக., நந்தினி அருணை பார்த்து சொன்னாள் “அவன் தூங்கும்போது அவனோட வாய்லயே நல்லா கடிச்சி வெச்சிட்டா.”, என்றாள் சிரிப்போடு. உஷாவிர்க்கு கூச்சத்தில் முகமே சிவந்து விட்டது.

“ரத்தமே வந்திடிச்சு. ஒரு வாரம் எதுவும் அவனால சாப்பிடவே முடியல. டாக்டர் கிட்ட போய் இன்ஜெக்ஷன் கூட போட்டுகிட்டான்., அதை விட அம்மாக்கு தெரியாம அதை மறைக்க எத்தனை பொய். “,என்றாள் வாய் கொள்ளா சிரிப்போடு. 

 இப்போது மூவரும் சேர்ந்து சிரிக்கத் துவங்கினர். உஷாவிர்க்குமே புன்னகை மலர்ந்தது. ஆனால் அவளுக்கு இதெல்லாம் சரியாக நினைவில் இல்லை. அருணிற்கு கிரியை பார்க்க சந்தோஷமாக இருந்தது. இப்படி மனம்விட்டு அவன் சிரித்து பார்ப்பது அபூர்வம்.

இவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டு வர்ஷா உள்ளே வந்தாள். “அடடா.! என்ன அதிசயம் இது, மாமா சிரிக்கறாங்க.!”, என்றாள் கிரியை பார்த்து.

கிரி அவளை பார்த்து, “யாரோ ஒரு இளிச்சவாயன் உன் கிட்ட மாட்டபோறாங்கள்ள. அதை நினைச்சு சிரிச்சோம்.”, என்று பேச்சை மாற்றினான்.

“என்னது இளிச்சவாயனா.?”, என்றாள் வர்ஷா கோபமாக இருப்பது போல் காட்டி.

“அச்சோம்மா. இன்னும் பார்க்கவேயில்லை. அதுக்குள்ள அவரை சொன்னா உனக்கு கோபம் வருதா.”, என்றாள் நந்தினி கிண்டலாக.

இதை பார்த்துக்கொண்டிருந்த உஷாவிடம் நந்தினி விவரத்தை கூறினாள். உஷாவிர்க்கு குழப்பமாக இருந்தது. காலையில் இவளை கிரிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தானே அவ்வளவு பிரச்சனை நடந்தது. இப்போது என்ன நடக்கிறது என்பது போல் பார்க்க. நந்தினி ஒன்றும் கூறாமல் கையில் இருந்த பாத்திரத்தை வைப்பதற்காக நகர, அவளருகே வந்து அவள் கையில் குழந்தையை கொடுத்த கிரி, “இல்லாத மூளையை வெச்சு ரொம்ப யோசிக்காதே. ரிலாக்ஸ்டா இரு.!”, என்றுவிட்டு போனான்.

கையில் இருந்த குழந்தை தூக்கத்திலேயே சிரித்தது. அது சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுந்தது. குழந்தை சிரிப்பதை பார்த்து உஷாவின் பக்கத்தில் வந்த வர்ஷா, “எங்க நீரஜாக்கு கூட இப்படிதான் கன்னத்தில் குழிவிழும்.”, என்றாள்.

 உஷா யார் என்பது போல் பார்க்க, “இவங்க அம்மா.” என்றாள் வர்ஷா.

“குழந்தைங்க பேர் என்ன.”, என்று வர்ஷாவிடம் உஷா கேட்க, “இன்னும் வைக்கலை.”, என்றாள் வர்ஷா.

அருண் உஷாவிடம், “அவங்கம்மா இறந்து தர்ட்டி டேஸ் கூட ஆகாததினால வைக்கலை”, என்றான்.

இதை கேட்டுகொண்டிருந்த நந்தினி, “நாளைக்கு நாள் நல்லா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க. இன்னைக்கு தான் சாமி கும்பிட்டாச்சுள்ள. பேசாம நாளைக்கு வெச்சிடலாமா.”, என்று அருணை பார்த்து கேட்டவாறே, “வாங்க. அப்பாக்கிட்ட பேசலாம்” என்று அவனை இழுத்துக்கொண்டு போனாள். வர்ஷாவும் அவர்களோடேயே செல்ல உஷாவும் குழந்தையும் தனித்து விடப்பட்டனர்.

குழந்தையிடம் உஷா பேச ஆரம்பித்தாள். கிரி அவனுடைய செல்போனை அங்கேயே மறந்து விட்டிருந்தான். அதை எடுப்பதற்காக உள்ளே வர போனவன், உஷா குழந்தையிடம் பேசுவதைகண்டு நின்றான். உஷா அவனை கவனிக்காமல் குழந்தையிடம் பேசலானாள்.     “செல்லம் உங்க கன்னத்துல அழகா குழி விழுதே. உங்களுக்கு தெரியுமா. ஏன் விழுதுன்னு.? ம். யோசிங்க, யோசிங்க.!”, என்றாள்.

கிரி யோசித்தான் நீரஜாவிற்கு விழும். ஆனால் அதைப்பற்றி இவள் பேச வாய்ப்பில்லையே.

“தெரியலையா செல்லம். என் பாட்டிக்கு விழும். உங்களுக்கு தெரியுமா.? ஷி வாஸ்  சோ ஸ்வீட். ஐ மிஸ் ஹெர் எ லாட்.”

அதை சொல்லும் போது அவளுடைய குரலில் இருந்த உருக்கம் கிரியை ஏதோ செய்தது.     

 “ உங்களுக்கு தெரியுமா.?  எனக்கும் உங்களுக்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்கு. யோசிங்க, யோசிங்க.!”, என்றாள் குழந்தையை பார்த்து.

கிரி மறுபடியும் யோசித்தான். பிடிபடவில்லை.

“எனக்கும் பொறந்தவுடனே அம்மா இல்லை.! உங்களுக்கும் இல்லை.! என்றாள் கண்களில் மெல்லிய நீர் இழையோட.

அவள் சொன்ன விதத்தில் கிரிக்கு நெஞ்சில் ஏதோ அடைத்தது.

“ஆனா உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் கூட இருக்கு. உங்களுக்கு அப்பா இருக்காங்க. எனக்கு அப்போ அப்பாகூட கூட இல்லை.”, என்றாள்.   

மறுபடியும் குழந்தை தூக்கத்தில் சிரித்தது.

“போக்கிரி சிரிக்கரீங்களா.! என்னை பார்த்தா உங்களுக்கு கூட சிரிப்பா இருக்கா. இருங்க.! உங்க அப்பா வரட்டும் சொல்லறேன்.”, என்றாள். “ம். என் அப்பாக்கிட்ட ஏன் சொல்லறீங்கன்னு கேக்கறீங்களா. நான் குட்டி பொண்ணா இருக்கும் போது எல்லாத்துக்கும் உங்க அப்பாகிட்ட தான் போவேன். ஆனா பாருங்க உங்க அப்பா என்னை மறந்துட்டாங்க.”,. 

அவள் சொல்வது உண்மைதான். வீட்டில் அவளை பாட்டி பார்த்துக்கொண்டாலும், வெளியில் சிறு வேலை என்றாலும் அவனிடம் தான் வருவாள். அவளை அவன் மறந்து விட்டானா.? கிரிக்கு தன்னை அறியாமல் தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது.

“அச்சச்சோ.! நான் என்னை பத்தி பேசி உங்களை போரடிக்கிறேனா. சாரி.”, என்று ராகம் இழுத்தாள். அவள் குழந்தையோடு பேசுவதை பார்பதற்க்கே ஒரு கவிதைத்துவமாய் தெரிந்தது கிரிக்கு.

அவனுக்கும் அவர்களோடு சேர்ந்து பேசும் ஆர்வம் வர., “குட்டிம்மா. என்ன சொல்றாங்க இவங்க.?” என்று குழந்தையிடம் கேட்பது போல் உள்ளே நுழைந்தான்.

உஷா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். “ஏன் குட்டிம்மா.? இவங்க என்கூட பேசமாட்டாங்களா.!”,.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு சொல்லுங்க செல்லம். பேச ஒண்ணும் இல்லை அதனால பேசலைன்னு சொல்லுங்க.”, என்றாள் அவளும் குழந்தையிடம் பேசுவதுபோல்.

“சரி பேசலைன்னா பரவாயில்லை இங்கேயே அவங்கள இருந்துக்க சொல்லுங்க குட்டிம்மா.”  என்றான் அவளை வீட்டிலேயே இருக்க வைப்பதற்கான முயற்சியாக.

உஷாவிர்க்கு எப்போது கோபம் வரும் என்று அவளுக்கே தெரியாது. வந்தால் என்ன பேசுகிறோம் என்றும் தெரியாது. அவளுடைய அந்த குணம் டக்கென்று தலைதூக்க

கிரியை நேரடியாக பார்த்து, “எதுக்கு உங்க குழந்தைகளுக்கு ஆயா வேலை செய்யவா.”, என்றாள்.

ஏனோ ஒரு இனிய கனவு சட்டென்று கலைந்தது போல் இருந்தது கிரிக்கு. அவனுக்கும் பொறுமை என்பது கொஞ்சம் கூட கிடையாது. அது ஊர் அறிந்த ரகசியம். அது உஷாவுக்குமே நன்றாக தெரியும். இருந்தாலும் சட்டென்று அவளையும் அறியாமல் பேசிவிட்டாள்.

“ஆயா வேலை பார்க்கலைன்னா பரவாயில்லை. அம்மா வேலை பாரு!”, என்றான் கோபத்தை அடக்கியபடி நிதானமாக. அந்த வார்த்தையை அவன் சொல்ல வேண்டும் என்று அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை. அவனை அறியாமல் தானாக வந்தது.

“என்ன உளறல் இது.? என்றாள் உஷா அவனை யோசிக்க கூட விடாமல்.

“எது உளறல்.”, என்றான் அவளையே பார்த்தபடி.

“நீங்க சொன்னது.”

“என்ன சொன்னேன்.?”

“அது உங்களுக்கு தான் தெரியணும்.”,

“எனக்கு தெரியல. நீதான் சொல்லேன்.”,

“விளையாடாதீங்க.”, என்றாள் எரிச்சல் மிகுதியால்.

அவளுடைய கோபத்தின் அளவு ஏறிக்கொண்டே இருந்தது.

ஆனால் கிரி நிதானத்திற்கு வந்திருந்தான்.

அவளையே பார்த்தபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.

உஷாவிர்க்கு டென்ஷன் ஏறியது.

“இப்படி ஏன் பாக்கறீங்க என்னை.?”,  என்று கத்தினாள்.

 “ஏன் பார்த்தா என்ன.? கத்தாத. வெளில எல்லோரும் இருக்காங்க.”, என்றான்.

“அப்படிதான் கத்துவேன்.! நீங்க என்னை பாக்க வேண்டாம்.! நீங்க எனக்கு வேண்டாம்.! என்றாள். 

“ஏன் வேண்டாம்.” என்றான் கிரி.

“அதெல்லாம் சொல்ல முடியாது. எனக்கு நீ வேணாம்.!” என்றாள் குரலில் ஒரு பிடிவாதத்தோடு. 

“நீ பதில் சொல்லனும். சொல்லற வரைக்கும் விடமாட்டேன்.!” என்றான் அமைதியாக.

அவனுடை அமைதியான குரல் அவளை இன்னும் அதிகமாக ரியாக்ட் செய்ய வைத்தது.   

“சொல்ல மாட்டேன்.! என்று மறுபடியும் கத்தினாள். எனக்கு நீ வேணாம் .! எனக்கு நீ வேணாம் .!”

திரும்ப திரும்ப அவள் அதையே கூறிக்கொண்டிருந்தாள்.

கிரிக்கு ஏனோ அது உஷா அவனிடம் கூறியது போல் தோன்றவில்லை அவளுக்கு அவளே கூறி கொள்வது போல் இருந்தது .

அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான். கையில் இருந்த குழந்தை அவளுடை சத்தத்தில் சிணுங்க ஆரம்பித்தது. அவனுக்கு அந்த குழந்தைக்கும் அவளுக்கும் வித்தியாசம் இருப்பது போல் தெரியவில்லை. அவள் ஏதோ மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் அதையே சொல்லி கொண்டிருந்தாள்.   

அவளை பார்த்த இந்த இரு தினங்களுக்குள் எத்தனை நிகழ்வுகள். அவனை அறியாமலேயே மனைவி இறந்த ஒரு மாதத்தில் அவனே அவனுடைய திருமணத்தை பற்றி பேசிவிட்டான். அவன் மனம் மிகவும் பாரமாக உணர்ந்தது.

Advertisement