Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று (1):

இவன் யோசனையில் ஆழ்ந்து விட, இவனை பார்த்த உஷா அவன் இங்கேயே இல்லை என்றுனர்ந்தவளாக, “என்னங்க!”, என்றாள். அப்போதும் அவன் நீரஜா இல்லாமல் போய்விட்டாள் என்ற நினைவில்லேயே இருந்தான். ஒருவேளை தான் முன்பே ப்ரத்யுவை சந்திக்க முயற்சி எடுத்திருந்தால்.,  நீரஜாவுடனான தன்னுடைய  திருமணம் நடக்காமல் இருந்திருந்தால்.,  நீரஜா இறக்காமல் இருந்திருப்பாளோ!.  நினைவலைகள் அவனை நீங்காமல் தொல்லை செய்தன. அவனால் விடுபட முடியவில்லை.

எல்லாமே இருந்திருந்தால் இருந்திருந்தால் தான்!. வாழ்க்கையில் இந்த இருந்திருந்தால் என்ற நினைவு எல்லோருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டாயம் இருந்திருக்கும். யார் மேல் என்று தெரியாமல் தன் மேலேயே கோபம் பொங்கியது.  

வேகமாக இடத்தை விட்டு எழுந்து போகப் போக, அவன் ஏதோ மன உளைச்சலில் இருப்பதை உணர்ந்தவளாக, அவனை திசை மாற்றும் பொருட்டு, “உங்களுக்கு தெரியாததில்ல வேலைய ஆரம்பிச்சிட்டா முடிச்சிடனும்! டாக்டர் கிட்ட பேசுங்க!”, என்றாள்.

இப்போ எனக்கு கொஞ்சம் மூட் சரியில்லை ப்ரத்யு. நான் அப்புறம் பேசட்டுமா”,

ஏன் என்ன ஆச்சு?”. அவனுக்குமே யாரிடமாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதல் வர, “நான் முன்னயே உன்னை பார்த்திருந்தா கட்டாயம் வேற யாரையும் பார்திருப்பேன்னு தோணலை. மீன் ஒரு வளர்ந்த பொண்ணா, மாரேஜ், லைப் பார்ட்னர் அப்படின்னு வரும் போது. நீ பக்கத்துல இருந்திருந்தா யாரும் என் கண்ணுக்கே தெரிஞ்சிருக்க மாட்டாங்க”.

சரி! இப்போ என்ன அதுக்கு?”.

நான் முன்னாடியே உன்னை பார்த்திருந்தா நீரஜாவை கல்யாணம் செஞ்சிருக்க மாட்டேன். அட்லீஸ்ட் அவ என்னை கல்யாணம் செஞ்சுக்காம இருந்திருந்தா உயிரோட இருந்திருப்பா இல்லையா”.

ஜட்ஜ்மெண்ட்க்கு காத்திருக்கும் குற்றவாளி போல அவள் முகத்தை தவிப்போடு பார்த்திருந்தான்.

அவனுக்கு நீரஜாவின் மேல் உள்ள காதல் அந்த வார்த்தைகளை அவன் உச்சரித்த விதத்திலேயே தெரிந்தது. அதை கேட்டு பிரத்யுவிற்கு சிறிதும் கோபம் வரவில்லை. அவனுடைய தவிப்பிலிருந்து அவனுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்ற உணர்வே ஓங்கி நின்றது.

நீரஜா யாரை திருமணம் செய்திருந்தாலும் அவளோட முடிவு அதுதான்னா யாரும் எதுவும் செஞ்சிருக்க முடியாது. எனக்கு அவளை பத்தி தெரியாது, நீங்க அவளை இவ்வளவு விரும்பறீங்க, விரும்பியிருக்கீங்க, எப்படியும் அந்த உணர்வே அவங்களுக்கு ஒரு நிம்மதியான விடுதலையை கொடுத்திருக்கும். வேற யார் கிட்டயும் அது அவங்களுக்கு கிடைச்சிருக்காதோ என்னவோ”, என்றாள்.

நான் அவளை இவ்வளவு விரும்பியிருக்கேன்னு தெரிஞ்சும் உனக்கு பொறாமையா இல்லையா.”,

இல்லை”, என்று தலையாட்டினாள். “நீங்க அவங்களை எவ்வளவு விரும்பியிருந்தாலும், அவங்களுக்கு தாலி கட்டுறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட நான் உங்க மேல இஷ்டபடறேன்னு தெரிஞ்சிருந்தா நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணியிருப்பீங்க.”, என்றாள் குரலில் ஒரு கர்வத்தோடு, அதனையும் மீறி முகத்தில் ஒரு உறுதி தெரிந்தது. “எனக்கு தெரியும் நீங்க அப்படிதான் செஞ்சிருப்பீங்க, ஆனா எனக்கு நீங்க என்னை தேடி வரணுன்றதுதான். வரலைன்னா, நீங்க விருப்பப்பட்டு தான் நீரஜாவை கல்யாணம் செஞ்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியும். அதுதான் நான் வரலை”.

இந்த வார்த்தைகளை அவள் உச்சரிக்கும்போது அவள் குரலில் ஒலித்தது, உன்னை என்னை விட அறிந்தவர் யார் என்பதுதான்.

கேட்டவுடன் கிரிக்கு அவள் மேல் கரை காணாத காதல் பொங்கியது என்றே சொல்ல வேண்டும். எப்போதும் அவனுக்கு அவள் மேல் நேசம் உண்டு. அதையும் விட நல்ல புரிதல் உண்டு. அது காதலாக அவன் உணர்வதற்கே நாட்கள் ஆகிவிட்டன. அதில் அவன் எங்கே போய் அவளுக்கு உணர்த்துவான். அவன் அவளுக்கு உணரவைக்கும் முன்னே அவள் அவன் தேவையாகி போனாள். இப்போது இன்னும் புதிதாய் தெரிந்தாள் அவன் கண்களுக்கு ப்ரத்யு. அவன் பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க, அந்த பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று அன்னலட்சுமி ப்ரத்யுஷாவை முதன் முறையாக வெட்கப்பட வைத்தது. எப்பொழுதும் அவன் பார்வையை எதிர்கொள்ளும் அவளால் இந்த முறை அதனை எதிர்கொள்ள முடியவில்லை. பார்வையை வேறுபுறம் திருப்பினாள்.

அப்பொழுதும் அவன் அவளையே பார்த்துக்கொண்டு இருப்பது புரிய, “என்ன?”, என்றாள் எங்கோ பார்த்துகொண்டு, பதிலே பேசாமல் கைகளை தலைக்கு பின்புறம் கொடுத்து சோபாவில் நன்றாக சாய்ந்து அவளையே பார்த்தான். அதற்கு மேல் அவளால் அங்கே உட்காரவே முடியவில்லை.

எழுந்து உள்ளே போக அப்போதும் அவன் சிரித்தபடியே அவளை பார்த்திருந்தான். எப்பொழுதும் கிரியின் பார்வை அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும். தன்னால் சிரமப்பட்டு விட்டாள் என்பது போல் இருக்கும், அல்லது தன்னுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் ஆவல் இருக்கு, ஆனால் அந்த கண்களில் அவளுக்கு காதல் தெரிந்ததில்லை. இன்று கிரி அவள் பார்வைக்கும் புதியதாய் தெரிந்தான், அவனுடைய பார்வை அவளுக்கு எல்லையில்லாத காதலை காண்பித்தது. முதன் முறையாக நிறைவாய் உணர்ந்தாள்.

மனைவியை போய் சைட் அடிக்கிறான் பாரு!”, என்று அவள் முணுமுணுக்க, “யாரு யாரை சைட் அடிக்கறா!”, என்ற குரல் மிக நெருக்கத்தில் கேட்க, விதிர்த்து திரும்பினாள், திரும்பியவளை அப்படியே சுவரோடு தள்ளி அர்றேஸ்ட் செய்வது போல் இருபுறமும் கைகளை வைத்தான்.  “நீங்க அங்க தானே உட்கார்ந்திருந்திங்க”, என்று அவள் திக்க.

ப்ரத்யு பேச்சில் தடுமாறுவதா, அவளை சீண்டும் ஆவல் தோன்ற, “சொல்லு யாரை யார் சைட் அடிச்சா”, பார்வையின் வீச்சை சிறிதும் மாற்றவில்லை கிரி. “நான் உன்னை சைட் அடிக்கறனா இல்லை நீ என்னை அடிக்கரியா.”,

இப்படியே போச்சுன்னா யார் யாரை சைட் அடிச்சான்னு தெரியாது. ப்ரத்யு கிரி வாசனை அடிச்சான்னு தான் தெரியும்”, என்றாள் கிசுகிசுப்பாக, “எங்க அடி பார்க்கலாம்”, என்று அவன் சவால் விட, “ப்ளீஸ் விடுங்களேன்”, என்றாள். “எங்க நான் உன்னை எங்க தொட்டுட்டு இருக்கேன், விடுங்கன்னு சொல்ற”, என்று அவன் கொஞ்சல் மொழி பேச. “என்னை இப்படி பார்க்கறதை விடுங்க”,

நீ என்னை பார்க்காத., நான் உன்னை பார்க்கறது தெரியாது”.

நான் பார்க்களைன்னாலும் எனக்கு தெரியுது”, என்று முணுமுணுத்தாள். ஒரு விதமான மயக்கத்தில் இருந்தாள் அன்னலட்சுமி பிரத்யுஷா,

அவள் மனதுக்குள்அவளையறியாமல் இந்த வரிகள் தோன்றின,

என்னுள்ளே என்னுள்ளே

ஏதேதோ செய்கிறதே

அது என்னென்று அறியேனடி

ஓரப்பார்வை பார்க்கும் முன்னே

என்ற பாடல் வரிகள் ஓட அவளையறியாமல் அது ஹம்மிங்காக வெளியே வர,

அவன் விட்டு இருந்தால்,, அவளையறியாமல் அது வார்த்தையாக வந்திருக்கும். ஆனால் அதற்குள் கிரி, “பாடேன் ப்ரத்யு”, என, மயக்கத்தில் இருந்து விடுபட்டவள், “இது என்ன சாங், என்ன வார்தைகள்ன்னு கண்டு பிடிங்க?, நான் பாடறேன்”, என்றாள். அவளுக்கு தெரியும் கிரிக்கு அப்படி நிறைய பாட்டுகள் தெரியாது என்று அதனால் தான் தைரியமாக கூறினாள்.

இதெல்லாம் ஒத்துக்க மாட்டேன். எனக்கு இது தெரியாது”, என்றான். ஒய்வு நேரங்களில் கூட கிரி நியூஸ், ஸ்போர்ட்ஸ் என்று தான் பார்த்துக்கொண்டிருப்பான். பாட்டு கேட்பது அரிது.

அதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்க இதை கண்டு பிடிச்சிடீங்கன்னா பாடுறேன். நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்”, என்றாள் அவளுக்கு இருந்த நிறைவான மனநிலையில்.

ஒரு வேளை என்னால முடியலைன்னா”,

வேற உங்களால முடியற மாதிரி ஏதாவது சொல்றேன். அதை செய்ங்க!”,

இப்போவே சொல்லு”, என. “எனக்கு தோனும்போது தான் சொல்வேன்”, என்றவள், அவன் யோசனையில் அசந்த நேரத்தில் அவன் கைகளுக்கு நடுவில் சட்டென்று குனிந்து வெளியே வந்து ஓடியே போனாள்.

கிரி, முத்து விநாயகத்துடன் பேச. அவன் வீட்டில் பேசுகிறேன் என்றான். இதை அவன் உஷாவிடம் சொல்ல. அவளே முத்து விநாயகத்தின் பெற்றோரிடம் பேசி ஜாதகத்தை வாங்கினாள்மறுபடியும் அவனை முதலில் இங்கே அவனுடைய அப்பா அம்மாவிடம் பேசிவிட்டு, வர்ஷாவினுடைய அப்பா அம்மாவிடம் பேச சொன்னாள்.

நான் அப்பாகிட்ட மட்டும் சொல்வேன், அம்மா கிட்ட பேசமாட்டேன்”, என்றான். “எவ்வளவு நாட்கள் இப்படியே இருக்க முடியும், பிடிவாதத்தை விட்டு பேசுங்கள்”, என இவள் சொல்ல, “நான் அவங்களோட பேசாம இல்லை, அவங்க தான் ஆரம்பிச்சாங்க வேணும்னா அவங்களே முடிக்கட்டும்”, என்று விட்டான் தீர்மானமான குரலில்.

உஷா அவனையே என்ன செய்வது என்பது போல் பார்த்திருந்தாள்.

வேகமாக எல்லோரிடமும் பேசி ஜாதக பரிமாற்றங்கள் நடந்து அது பொருந்தி முறையாக பெண் பார்க்கும் படலமும் முடிந்து, இண்டர்ன்ஷிப் முடித்தவுடன் திருமணம் என முடிவெடுத்து, அதற்கு ஆறு மாதங்கள் இருக்க, ஏழாம் மாதம் நிச்சயம், திருமணம், என அனைத்து வைபவங்களும் நாள் குறிக்கப்பட்டது. வர்ஷாவுடைய பாட்டிக்கும் தாத்தாவிற்கும் அவ்வளவாக இஷ்டமில்லை. அவர்கள் கிரியின் வீட்டு செல்வநிலைமையை, முத்து விநாயகத்தோடு ஒப்பிட இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

சாம்பவியோடு ருக்மணி பாட்டி சண்டையே போட்டார், “உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னா, இன்னும் வசதியான மாப்பிள்ளையா பார்க்க கூடாதா, இவங்க ரொம்ப வசதி ஒண்ணும் இல்லையே”, என்று குறைபட்டார்.

கேட்டிருந்த நீரஜாவின் அம்மா கூட, “நீங்க பேசுறது சரியில்லை அத்தை. அவங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடப்போகுது. நீங்க சாம்பவி அண்ணி வீட்டு நிலைமையோடு அவங்களை ஒப்பிடாதீங்க, நம்ம வீட்டு நிலைமையோடு பாருங்க. அவங்க வசதி நம்ம வசதிய விட அதிகம் தான். அதுவுமில்லாம இங்க நானும் அவரும் டாக்டர், பொண்ணும் டாக்டர். அதனால மாப்பிளையும் டாக்டர் அப்படின்றது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான்”, என்றார்.

ஒரு பொண்ணோட கல்யாணத்தை அவசர அவசரமா செஞ்சு எல்லாமே முடிஞ்சிடுச்சு! நீரஜாவை நாங்க பறிகொடுத்தது போதும். மறுபடியும் எதுவும் குழப்பம் பண்ணாதீங்க”, என்றார்

கல்யாண விஷயங்களை முன்னிட்டு ஊரிலிருந்து எல்லாரும் வருவதும் போவதுமாக இருக்க, ருக்மணி பாட்டி இதையே சாக்கிட்டு அடிக்கடி தன்னுடைய மகளின் வீட்டிற்கு விஜயம் செய்து குழப்பம் செய்து கொண்டிருந்தார்.

தெளிந்த நீரோடையாக போய் கொண்டிருந்த கிரி உஷாவின் வாழ்கையில், முடிந்த அளவு கற்களை எறிந்து கொண்டிருந்தார். அது என்ன செய்யும்? நீரோட்டத்தை தடை செய்யவா முடியும்.

முடிந்தவரையில் பிரச்சனைகளை உஷா வளர விடவில்லை. அதை கிரிவரை எடுத்து செல்லவே இல்லை. அவளுக்கு தெரியும் இதை பற்றி அவனிடம் சாதாரணமாக ஏதாவது பேசினாள் கூட அது சாம்பவிக்கும் கிரிக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகப்படுத்தும் என்று. அதுவுமில்லாமல் கிரி எப்போதும் பிஸியாக இருந்தான். காலை பத்து மணிக்கு கிளம்பினால் வீடு வருவதற்க்கு இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிடும். அதுவும் உஷா கட்டாயம் அதற்கு மேல் விடமாட்டேன் என்று சொன்னதால் தான் அதுவும். விஸ்வநாதன் எவ்வளவு உயரங்களை எட்டிய போதும் அது வீட்டை அணுகாமலேயே பார்த்து கொண்டார். பிசினஸ்பார்ட்டி கல்ச்சர், வீட்டை அணுக விடவில்லை. வீடு நார்மலாக, பழக்க வழக்கங்கள் எல்லாம் ஒரு உயர் மத்தியதர குடும்பம் போலவே இருக்கும்.

அதையே உஷாவும் விரும்பினாள். அவன் இருக்கும் அந்த நேரத்தில் எந்த பிரச்சனைகளையும் அவனை அணுக அவள் விட மாட்டாள்.

இவளுமே காலேஜிர்க்கு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே செல்வாள். அதிக சத்தங்கள் இல்லாத அமைதியான வாழ்கையையே அவனுக்கு கொடுத்தாள். அவளும் அதை தன் குழந்தைகளோடு அனுபவித்தாள்.

ஆனால் ருக்மணி பாட்டி விடுவதாக இல்லை. ஏதாவது ஜாடையாக பேசிக்கொண்டே இருந்தார். அவளுக்கு இயல்பே இல்லாத பொறுமையை மிகவும் சிரமத்தோடு கையாண்டாள். எப்போது அது பறந்து போகும் என்று அவளுக்கே தெரியவில்லை.

மாதங்கள் ஓட, திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், குழந்தைகளுக்கு பதினோரு மாதம் ஆக, காதுகுத்தி மொட்டையடிப்பது என்று முடிவெடுத்து உஷா கிரியிடம் பேச, விஸ்வநாதனிடம் கிரி பேசினான். சாம்பவியும் இதைபற்றி முன்பே விஸ்வநாதனிடம் கூறியிருந்ததால், ஜோசியரை  வர சொல்லி நாள் குறிக்க முடிவெடுத்து அவரை வரவழைக்க. அப்போது அங்கே ருக்மணி பாட்டி, நீரஜாவின் அம்மா கல்யாண வேலையாக வந்திருந்தனர். .

உஷாவிற்க்கு குழந்தைகளை அருணின் மடியில் உட்காரவைத்து மொட்டையடித்து காது குத்துவதே விருப்பமாக இருக்க, தாய்மாமன் என்று யாரும் இல்லாததால், அவள் நீரஜாவின் அம்மாவிடம் அவர்களுக்கு எதுவும் இதில் விருப்பமில்லையா? என்று கேட்க, “அவர் அதெல்லாம் எதுவுமில்லை அப்படியே செய்துவிடலாம்”, என்றே கூறினார்.

இதை ருக்மணி பாட்டி அறிந்திருந்தாலும் அவருக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் ஏற்கனவே மருமகள் அவரால் எந்த தொந்தரவும் வரக்கூடாது என்று சொல்லியிருந்ததால் அவரால் மருமகளிடம் ஒன்றும் கூற முடியவில்லை. அதே சமயம் மகளிடமும் கூற முடியாது ஏனென்றால் அது அவளுடைய மருமகன்.

நாள் குறிக்க ஜோசியர் வர. அவர் நாட்களை சொல்ல, உஷா அருணை தொடர்பு கொண்டாள்,  “அண்ணா உங்களுக்கு எந்த நாள் வர சௌகரியமா இருக்கும்”, என்று கேட்க. அவன் சொன்னதை வைத்து நாட்களை குறித்தாள். இதில் அவள் சாம்பவியைகூட எதுவும் கேட்கவில்லை. எல்லாமே அவளே முடிவு செய்ய, பொறுக்காத சாம்பவி விஸ்வநாதனிடம்இப்படி யாரையுமே கேட்காம எல்லாத்தையும் முடிவெடுத்தா என்ன அர்த்தம். என் கூட சண்டைன்னா உங்களை கேட்கலாம், இல்லை கிரியை கேட்கலாம். விட்டுட்டு இவளே முடிவெடுத்தா என்ன அர்த்தம்”, . என்று கோபமாக கேட்க,

ருக்மணி பாட்டியின் ஜாடை வார்தைகளால் சிறிது கோபம் எப்பொழுதும் அவள் மனதில் சுழன்று கொண்டிருந்தது. அவரை அடக்க சாம்பவி எதுவும் முயற்ச்சிக்காதது இன்னும் கோபமாக இருந்தது. அது வார்த்தைகளில் வெளிப்பட,   “என்ன அர்த்தம்! யாரையும் கேட்க மாட்டேன்னு அர்த்தம். கிரி மாமாவை கேட்க வேண்டியதில்லை, நானும் அவரும் வேற, வேற கிடையாது. நான் சொன்னா அவர் சொன்ன மாதிரிதான். பெரிய மாமா கிட்ட கேட்கறதும் ஒண்ணு தான் கேட்காம இருக்கறதும் ஒண்ணு தான். அவர் பதில் சொல்றதுக்கு உங்களை பார்ப்பார். அது எனக்கு வேண்டாம். என் குழந்தைங்க நான் பார்த்துக்கறேன்”, என்றாள். நெடு நாளைய மனதின் கோபம் வார்த்தையாய் வந்தது.

கிரியே அவளிடம் பார்வையாலேயே வேண்டாமே என்பது போல பார்த்தான். அவள் சிறிதும் அதை கண்டுகொள்ளவில்லை. பார்த்தவுடனேயே கிரிக்கு தெரிந்தது, யாரும் அவளிடம் வாய் கொடுக்காமல் இருந்தால் பரவாயில்லை என்று. “அப்பா அம்மாவை அமைதியா இருக்க சொல்லுங்க!”, என்றான் மெதுவான குரலில் சாம்பவிக்கு கேட்காதவாறு, துரதிர்ஷ்டம் சாம்பவி கவனிக்கவில்லை, ருக்மணி பாட்டி கவனித்து விட்டார்.

ஏண்டாப்பா கிரி, உன் பொண்டாட்டிய சொல்லாம உங்கம்மாவை அமைதியா இருக்க சொல்ற, ஏதாவது வீட்ல செஞ்சா பெரியவங்க கிட்ட கேட்க வேண்டாமா”,

வீட்ல இருந்து என்னை தொறத்திவிட்டவங்க எல்லாம், எனக்கு பெரியவங்க என்னைக்குமே ஆக மாட்டாங்க”,

அந்த வார்த்தைகள் சாம்பவியை தாக்க, அது விளைவித்த ஆத்திரம், அவரை பதில் பேச வைத்தது. “நான் உனக்கு பெரியவங்களா இல்லாம போனா போயிட்டு போகுது. ஆனா அவங்க என் பேரக்குழந்தைங்க. உன்னைவிட எனக்கு நிறைய உரிமை இருக்கு. உனக்கு என்ன உரிமை இருக்கு. நீயே அம்மான்னு சொல்லிகிட்டா அம்மா ஆயிடுவியா. நீ அவங்களுக்கு சித்தி தான்!”, என்றார்.

அம்மா!.”, என்று கிரி கோபத்தில் கத்திய கத்தலில் அங்கே இருந்த அனைவருமே ஆடிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

அவன் என்ன பேசியிருப்பானோ, என்ன செய்திருப்பானோ. அந்த நிமிடத்தில் அவனை அடக்கும் சக்தி அங்கே யாருக்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பயத்தில் சாம்பவி விஸ்வநாதநின் அருகில் நகர்ந்து நின்று கொண்டார்.

ஆனால் உஷா அவனை பார்த்த பார்வை அவனை அடக்கியது.

அங்கே அந்த க்ஷணத்தில் நிலவிய அமைதி, விஸ்வநாதனுக்கு எல்லாம் கை மீறி விட்டதோ என்று தோன்றியது. அவர் உஷாவை பார்க்க, அவள் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது, அவளுக்கு எதிரே யார் இருக்கின்றார் என்றே தெரியவில்லை.

சாம்பவியை பார்த்து கிரி அடக்கப்பட்ட கோபத்தோடு வார்த்தைகளை உதிர்த்தான், “அவளுக்கு அவங்க குழந்தைங்க இல்லைனா, உங்களுக்கும் உங்க பசங்க கிடையாது. பசங்க இல்லைன்றப்போ பேரக்குழந்தைங்க எங்க இருந்து வருவாங்க. அப்பா ஒண்ணு நீங்க உங்க மனைவிய கூட்டிக்கிட்டு இங்க இருந்து போய்டுங்க, இல்லைன்னா நான் என் மனைவி பசங்களை கூட்டிகிட்டு இங்க இருந்து போய்டுவேன்”.     

உஷா எதையும் எதிர் கொண்டிருப்பாள், ஆனால் இதை அவளால் முடியவில்லை. அவள் அம்மா என்றழைக்க யாருமில்லாமல் போய். அவளையும் யாரும் அம்மா என்று அழைக்காவிட்டால் என்ன செய்ய முடியும். இல்லை நீ திடமானவள் என்று மனதிற்குள்ளேயே சொல்லி கொண்டாள்.

அவளை பார்த்தான் கிரி, அவளின் மனதின் போராட்டம் முகத்தில் தெரிந்ததோ,      

வா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுப்பியாம்”, என்று அவளை அழைத்து கொண்டு குழந்தைகளையும் கூட்டி கொண்டு ரூமிற்கு போய்விட்டான்.

வீட்டில் நிலவிய அமைதி சாம்பவிக்கு பயத்தை கொடுத்தது. “நான் பேசினது தப்பு தான். நான் இப்போ என்ன செய்யட்டும் பரிதாபமாக”.

இப்போ மட்டுமில்லை, நிறைய நீ செஞ்சிட்ட. அதை நான் கண்டிச்சாலும் நீ கேட்கலை. நீ யாச்சு உன் பையனாச்சு நான் ஒண்ணும் செய்ய முடியாதுஎன்றார் விஸ்வநாதன்.

அவன் வெளியே வருவதற்காக சாம்பவி அங்கேயே அமர்ந்திருந்தார். நீரஜாவின் அம்மா, கிரியை அழைக்க, அவன் வெளியே வந்தான். “நீங்க உஷாவை கவனிங்க நான் குழந்தைகளை பார்க்கிறேன்”, என்றார்.

அவ என்கிட்டயே குடுக்க மாட்டேங்குறா அத்தை. உங்க கிட்ட எங்க குடுப்பா. விடுங்க கொஞ்ச நேரம் சரியாயிடுவா”, என்றான்.

சாம்பவி அவனிடம், “சாரிஎன. “என்கிட்ட சொல்லி என்ன பண்றது. அவளை எவ்வளவு கஷ்டப்பட்டு இப்போ தான் கொஞ்சம் நார்மல் பண்ணினேன். அவளை எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பான்னு சொல்ல முடியாது. பார்த்து இருந்துகோங்க. ஆனா கல்யாணம் முடியறவரைக்கும் தான் இங்கே இருப்போம் அம்மா. அதுக்கு மேல நான் இங்கே இருக்க மாட்டேன்!”, என்று சொல்லி சென்று விட்டான்.

இரண்டு நாட்கள் யாரிடமும் எதுவும் பேசவில்லை உஷா. ஆனால் சற்று தேறிக்கொண்டாள். மீண்டு வந்த சந்தோஷம் கலகலப்பு குறைந்துவிட்டது. அப்படி அவளை பார்க்கவே சகிக்கவில்லை கிரிக்கு.

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்றே கிரிக்கு தெரியவில்லை. “யார் சொன்னாலும் உன் பசங்க உன்னை தான் அம்மான்னு சொல்வாங்க ப்ரத்யு. இதுக்கு இவ்வளவு நீ கலங்க கூடாது. என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள் அவங்களுக்கு நீரஜா தான் இந்த உலகத்து அவங்க வர காரணமா இருந்தான்னு தெரியும். அன்னைக்கும் அவங்க உன்னை தான் அம்மான்னு சொல்வாங்க. இதுக்கு நான் ஃப்ரூப் எல்லாம் கொடுக்க முடியாது. நீ என் வார்த்தைகளை நம்பாதே. உன்னை நம்பு.”, என்றான்.

வில் ட்ரை”, என்றவள் முகம் தெளியாததை கண்டு, “நம்பு ப்ரத்யு! இப்போ நானும் அம்மாவும் மட்டும் சுமுகமா இருக்கோமா என்ன? யாரா இருந்தாலும் நடக்கறது தான் நடக்கும். நாளைக்கு இப்படி நடந்துடுமோன்னு இன்னைக்கு நீ ஸ்பாயில் பண்ணிக்காத.”, என்றான்.

இது ஒரு ட்ரையல் அண்ட் எர்ரர் ப்ரோசெச்ஸ் தான் நமக்கு. பசங்க பெரியவங்க ஆகும்போது நம்ம என்ன தான் தவிர்த்தாலும் இந்த மாதிரி ஏதாவது சூழ்நிலை அமையலாம். அப்போ பசங்க உன்கிட்ட தான் வந்து அது நிஜமான்னு கேட்பாங்க. இதை எல்லாம் உன்னால பார்க்க முடியலைன்னா வேற யாரல முடியும். அதுவும் உன்னை மாதிரி இன்னொரு ஃப்ராடக்ட் வரும் போது, இன்னுமே நீ மேனேஜ் பண்ணனும்”, என்று கூறி கண்ணடித்து சிரித்தான்.

அதுக்குள்ள என் பசங்களும் என்னை மாதிரி, உன்ன விட்டுட்டு இருக்க முடியாமா மாறியிருப்பாங்க”.

இன்னும் நம்பலைன்னா பாரேன்”, என்றவன், குழந்தைகளின் பர்த் செர்ட்டிபிகேட் எடுத்து காண்பித்தான், “யாரு அம்மான்னு?”, மதர்ஸ் நேம் என்ற இடத்தில்அன்னலட்சுமி பிரத்யுஷா”, என்ற பெயரை பார்த்தவள், “உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே வாங்கிட்டேன். என்கிட்ட இருந்தும் உன்னால தப்பிக்க முடியாது, என் பசங்க கிட்ட இருந்தும் உன்னால தப்பிக்க முடியாது”, என்று கூறி சிரித்தான். அந்த சிரிப்பு அவளிடம் தொற்றவில்லை என்றாலும் புன்னகையை வரவழைத்தது. பிரச்சனையை மறக்க வைத்தது.

. ஒரு குழந்தையை அருண் மடியிலும், ஒரு குழந்தையை கணேஷின் மடியிலும் அமர்த்தி காது குத்தவே உஷா விரும்பினாள். ஆனால் கணேஷிர்க்கு செமெஸ்டர் நடக்க. அது முடியாது போயிற்று. எக்சாம் ஸ்கிப் செய்ய கிரி ஒத்துக்கொள்ளவில்லை. “நீ அதை பார்”, என்றான். அவன்மாமா.”, என்று இழுக்க, “உனக்கொரு சேன்ஸ் இருக்குடா, சீக்கிரமே வாய்ப்பு குடுக்கேறேன்”, என்றான்.

 “எப்படி மாமா? காது குத்துனதுக்கு அப்புறம் என்ன செய்ய முடியும்”, என்று அசடாய் ஒரு கேள்வியை கேட்க, “டேய் ட்யூப் லைட், உனக்கு உங்க அக்காவே பரவாயில்லடா. நான் புதுசா ஒன்ன பெத்து குடுக்கறேண்டா., நீங்கலான்னு திருப்பி கேட்டுடாதடா, உங்க அக்கா பெத்து குடுப்பா.”, என்று உஷா இருப்பதை உணராது பேசி, வழக்கம்போல் அடியை வாங்கி அதையே சாக்கிட்டு பிறகு வேறு சிலதையும் அவளிடம் வாங்கி கொண்டான். அவள் மனதை மயக்கி இருந்தாலும், இப்போது மதியை மயக்கும் வித்தையை அறிந்திருந்தான். வார்த்தை ஜாலங்களிலும் வாழ்க்கை ஜாலங்களிலும் அவளை மன உளைச்சலில் இருந்து வெளியே கொண்டுவந்தான்.   

அடுத்த நாளில் இருந்து முன்பு போல் அவள் சாம்பவியிடம் ஒதுங்கி இருக்கவில்லை. மறுநாளும் கிரி இல்லாத சமயத்தில் ருக்மணி பாட்டி,சாம்பவியிடம், “உங்க மாமியார் இருந்த போதும் இவ தான் இந்த வீட்ல பன்னாட்டம் பண்ணிட்டு இருந்தா, செத்தும் இவ கிட்டயே மாட்டிகிட்டியே”, என்று ஜாடை பேச, இவள் நேரடியாக சாம்பவியிடம் சென்று. “உங்க அம்மாவை அமைதியா இருக்க சொல்லுங்க, அப்புறம் நடக்கற விளைவுகளுக்கு நான் தான் பொறுப்பு. என்ன செய்வேன்னு தெரியாது”, என்றவள், ருக்மணி பாட்டியிடம், “உங்களுக்கு உங்க பொண்ணையும் மாபிள்ளையையும் வீட்டோட மாப்பிள்ளையா வெச்சிகனும்னு ஆசையா இருந்தா கூட்டிட்டு போங்க, அங்க அவங்க பன்னாட்டம் பண்ணட்டும்”, என்றாள் நக்கலாக.

விஸ்வநாதன் இருக்கும் பொழுது தான் பேசினாள். விஸ்வநாதனிடமும்மாமா உங்களை கூட்டிட்டு போறதுக்கு அவங்களுக்கு ஆசை போலஎன்றவள், ருக்மணி பாட்டியியம்போகும் போது உங்க மகளுக்கு குடுத்த சீரையெல்லாம் மறக்காம எடுத்துட்டு போங்க.லாரி வேணுமா என்ன? சைக்கிள் போதாது. அதுலயே நீங்க கொண்டு வந்தது எல்லாத்தையும் கட்டிட்டு போய்டலாம்இங்க இருக்கறதெல்லாம் எங்க பாட்டியோட மகன் சம்பாறிச்சது, என் வீட்டுக்காரரோட அப்பா சம்பாறிச்சது, அதை ஞாபகத்துல வெச்சிகொங்க. உங்க பேச்சுனால உங்க பொண்ணுக்கு பையன் இல்லாம பண்ணிடாதீங்க. எங்க மாமாக்கு கூட ரொம்ப வயசாயிடலை. இன்னும் அவர் வெளிய போனா எத்தனை லேடீஸ் மேல விழுந்து பேசுறாங்க தெரியுமா”, என்றாள் விஸ்வநாதனை பார்த்து சிரிப்போடு. அவள் கிண்டல் செய்கிறாள் என்று அவருக்கு புரிந்தது. அவள் சொன்ன விதம் அவருக்கே சிரிப்பை வரவழைத்தது. சாம்பவியை பார்க்க அவரின் மிரண்ட பார்வை இவரை ஏதோ செய்ய. “ உஷா குழந்தை அழறான் போல, பாரேன் அவனைஎன்று அவளை அந்த இடத்தை விட்டு அனுப்ப முயற்சித்தார்.     

தான் பேசியதை கேட்ட சாம்பவியின் அதிர்ந்த பார்வை உஷாவிற்கு பாவமாக இருக்க, “இன்னும் பேசறது என்ன? செஞ்சே காட்டிடுவேன். அந்த மாதிரி ஒரு நிலைமையை வரவெச்சிக்காதீங்க”, என்று விட்டே இடத்தை விட்டு நகர்ந்தாள்.

மரியாதையெல்லாம் கிலோ என்ன விலை என்று தான் உஷா கேட்பாள். ஆனால் இப்போது அந்த மாதிரி யாரையும் அவள் மரியாதை இல்லாமல் பேசுவது இல்லை. வெகு நாட்களுக்கு பிறகு பேசினாள்.           

   அது சிறிது வேலை செய்தது. அனாவசியமாக இப்போது ருக்மணி பாட்டி எதுவும் பேசுவதில்லை. சாம்பவி அன்று கிரி சத்தம் போட்டதில் இருந்தே பயத்தில் இருந்தவர், இன்று உஷா பேசவும் அவருக்கு அழுகை பொங்கியது. விஸ்வநாதனின், “சும்மா பேசறா, விடு. உங்கம்மா சீன்டிட்டே இருந்தா எவ்வளவு நாள் அமைதியா இருப்பா?”, என்ற சமாதானங்கள் அவரை சிறிதும் அசைக்கவில்லை. கிரியை பார்த்தவுடனேயே அழ ஆரம்பித்து விட்டார்.

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னடா இது என்று நொந்து கொண்டான் மனதிற்குள். அவர் தேம்பி தேம்பி அழ, அவனுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நடந்தவைகளை அறிந்து, “நீங்களே தேடிக்கறது தான் அம்மா இதெல்லாம். அவளை எதுவும் பேசாதீங்க. அவ எதுவும் பேசமாட்டா.”, என்றான் சமாதானமாக. மகன் சமாதனப்படுத்தியதால் சிறிது தெளிந்தார் சாம்பவி.

சாரி அப்பா”, என்றான் விஸ்வநாதனிடம். அவன் தோளை தட்டியவர், “நான்  அவளுக்கு தாய் மாமாண்டா, உன் அப்பான்ற உறவு அதற்கு அப்புறம் தான்  அவளுக்கு. என்னை அவளை தவிர வேற யார் பேசமுடியும். அவ என்கிட்ட இப்படியாவது பேசுறது எனக்கு சந்தோஷம்தான்”, என்றார்

அன்றிலிருந்து அதிக பிரச்சனைகள் இல்லாமல் வீடு சென்றது. கிரி உஷாவிடம்பெரியவங்க கிட்ட தயவுசெய்து மரியாதையில்லாம பேசாத.”, என்றான். அவள் பதிலுக்கு பார்த்த பார்வையே அவள் அதை கடைபிடிக்க மாட்டாள் என்றுனர்த்த,  “அப்பாவை வெச்சு அம்மாவை டென்ஷன் பண்ணாத. ப்ளீஸ்!”     என்று மிஞ்சி. கொஞ்சி. கெஞ்சிகடைசியாக அஞ்சி கேட்டபிறகு, வழக்கம் போல், “ட்ரை பண்றேன்”, என்றாள்.

எனக்கும் அவங்களுக்கும் தான் பிரச்சனை. இதுல நீங்க பெருசா எதுவும் செய்ய தேவை இருக்காது. நீங்க முடிஞ்ச வரைக்கும் அவங்க கிட்ட முன்ன எப்படி இருப்பீங்களோ அப்படியே இருங்க. அவங்க உங்க அம்மா, அவங்க செஞ்சதெல்லாம் உங்களுக்காக தானே. நான். எனக்கு. அவங்களோட சரியாகும்னு தோணலை. ஆனா நீங்க அதை வெச்சு என்கிட்டயும் காட்ட வேண்டாம், அவங்க கிட்டாயும் காட்ட வேண்டாம். எனக்கு தெரியும் அவங்க உங்களுக்கு ரொம்ப இஷ்டம், நீங்க அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்னு. அம்மா பையன்குள்ள நான் எப்போவுமே வரமாட்டேன்.”. என்றவள் என்ன நினைத்தாளோ, “மறுபடியும் நீங்க  இதை பத்தி என்கிட்ட பேசக்கூடாது”, என்றாள்.                  

கோபிகா நந்தினியும், அருண் குமாரும் வர. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மொட்டையடித்து காதுகுத்தினார்கள்அது அவர்கள் குடும்ப வழமை. குழந்தைகளை விட அருண் செய்த ஆர்பாட்டம் இன்னும் அதிகமாக இருந்தது.

முடி எடுப்பவரிடம், “ஏதாவது இதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் பண்ணியிருக்கீங்களா”, என்று கேட்டு, தான் அமெரிக்கன் பிராட்அப் என்று காட்டி எல்லோரிடமும் சிரிப்பை கிளப்பினான். மொட்டயடிப்பதர்க்குள் மொட்டை அடிப்பவரை, “இப்படி அடிக்காதீங்க, அப்படி தலைய பிடிக்காதீங்க, காயம் ஆயிடப்போகுது ஜாக்கிரதை”, என்று அவரை விரட்டி கொண்டே இருந்தான். காது குத்துவதற்க்குள், குழந்தைகளை விட இவன் அதிகமாக குதித்தான். “அண்ணா, நாங்க குழந்தைகளை பார்க்கறதா, உங்களை பார்கறதா, அடங்க மாட்டீங்களா!”, என்று உஷாவிடம் திட்டு வாங்கின பிறகே சற்று அமைதியானான். நந்தினிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

எந்த சடங்குக்கும் அவள் நீரஜாவின் அம்மாவை விடவில்லை. குழந்தைகளின் பாட்டி அவரே என்று, அவர் மகள் இருந்திருந்தால் என்னென்ன வேலைகள் வாங்கியிருப்பாளோ அதை வாங்கினாள். “பெரியம்மா இவளுக்கு டிரெஸ் பண்ணுங்கஎன்றாள், “பெரியம்மா நான் கார்த்திக்கு சாதம் ஊட்டுறேன். அதை சாப்பிட்டா தான் கொஞ்ச நேரமாவது பசியில அழாம இருப்பான். நீங்க ஸ்வாதிக்கு செரேலாக் ஊட்டுங்க”, என்றாள். அவர்கள் ஒதுங்கி நிற்க விடவில்லை. சித்தியையும் அருகில் அழைத்துகொண்டாள்.     

Advertisement