Advertisement

அத்தியாயம் இரண்டு:

       அப்போது அவளுக்கு பின் இருந்து ஒரு குரல் கேட்டது.

“ நீ மாறவேயில்ல அன்னலட்சுமி. எல்லாரையும் மிரட்றது, அடுத்தவங்கள பேசவிடாம பேசறது அப்படியே இருக்க “

    அந்த குரலை கேட்டதும்  வார்த்தை வராது அப்படியே கல்லாய் சமைந்தாள். 

     அந்த குரலுக்கு சொந்தக்காரர் அவளை விட்டு சந்திரனை நோக்கி பேச ஆரம்பித்தார்.

    “ சாரி சார், அவளுக்கு கோபம் வந்தா அப்படிதான் பேசுவா.நீங்க கிளம்புங்க நீங்க பேசுனத நானும் கேட்டேன். அது சரி வராது ”.

     உடனே சந்திரன் “ சாரி மேடம், நீங்க எதோ தெரியாம பேசரிங்க. இவங்க அன்னலட்சுமி இல்ல உஷா “.

     “சார் கிளம்புங்க , அவ பேசாம இருக்கும்போதே தெரியல”

      சந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான். எத்தனை நாட்களாக பேச தயங்கி ஒருவாறாக இன்று பேச வந்தால் இப்படி ஒரு தடை. அவனுக்கு உஷாவிடமிருந்து வார்த்தை வராமல் போக மனமேயில்லை.

     உஷா அந்த குரலை கேட்ட அதிர்ச்சியில் இருந்து அப்போதுதான் வெளியில் வந்தாள்.

      அவளை அறியாமல் வாய் முணுமுணுத்தது “நந்தினிக்கா” என்று ,அவளால் என்ன முயன்றும் கண்களில் தேங்க ஆரம்பித்த கண்ணீரை நிறுத்த முடியவில்லை.

       திரும்பி பார்க்க மனம் வராமல் அப்படியே நின்றிருந்தாள்.உஷாவிற்கு அழுகையை அடக்க மிகவும் சிரமமாக இருந்தது. தொண்டையில் ஒரு வலியே வர ஆரம்பித்தது . சிறிது தண்ணீர் குடித்தால் தேவலாம் போல தோன்றியது. ஆனாலும் திரும்ப மனமே இல்லாமல் நின்றிருந்தாள்.

       இவர்கள் மூவரும் நின்று கொண்டிருந்தது ஆரம்ப நுழைவாயில், மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் தான் சந்திரன் அவளை அழைத்தான், நேரம் கடந்து விட்டபடியால் எல்லோரும் சாப்பிட வந்து கொண்டிருந்தனர். சித்தியும் சரஸ்வதியும் இவளை காணாமல்தேடி வந்தனர். ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டதால் சந்திரனும் அந்த இடத்தைவிட்டு நகர போனான்.

     அப்போது சித்தி வந்து,” என்ன விஷயம் சார் உஷாவ நீங்க கூப்டதா சொன்னாங்க.” என்றார்.

     அதற்குள் உஷாவே பதில் கூறினாள், “ஒண்ணுமில்லை சித்தி நேத்து நான் பாத்த பீஸ்ல நிறைய டாமேஜ் விட்டுட்டேன்போல அத சார் கூப்ட்டு தனியா சொன்னார், அப்படிதானே சார் “ அவள் கேட்ட தொனியேயிலேயே  “ஆமாம்” என்று சொல்லுமாறு ஒரு கட்டளை தொனித்தது.

    “ ஆமாங்க “ என்றான்.

   “ சொல்லிட்டிங்க தானே இனிமே நான் கவனமாருக்கேன் “

அவள் சொன்னவிதமே “கிளம்புடா” என்று சொன்னாமல் சொன்னது,

 சந்திரன் தன் விதியை நொந்தபடியே சென்றான்.

  இதையெல்லாம் பார்த்தபடியே நந்தினி நின்று கொண்டிருந்தாள்.

அதன் பிறகு தான் உஷா திரும்பினாள். கண்களில் கண்ணீர் பெருக அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்தவுடனே நந்தினிக்கு பேச்சே வரவில்லை. தன்னுடைய செல் போனை எடுத்து யாரிடமோ “உள்ளே வர்றீங்களா” என்று வினவினாள்.

   அவள் நின்றிருந்ததை பார்த்ததும் சித்தி அவளருகில் வேகமாக சென்று,” என்னம்மா , என்ன ஆச்சு” என்று வேகமாக வினவினார்.

          “ஒண்ணுமில்லை சித்தி” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ,நந்தினி அவர் அருகில் சென்றாள்.

        “ நான் அன்னலட்சுமியோட மாமா பொண்ணு , பேர் கோபிகா நந்தினி, வணக்கம்க, அப்பா உங்கள பாக்க சாயந்திரம் வரதா சொல்லியிருந்தாங்க போல. கொஞ்சம் முக்கியமான வேலை வந்துருச்சி அதனால வர முடியல, என்ன அனுப்பினாங்க “ என்றாள்.

சித்தியுமே முழித்தார்,“அன்னலட்சுமியா யாரது?” என்று,

“ இங்க எல்லோருமே என்ன உஷான்னு தான் கூப்பிடுவாங்க “ என்றாள் உஷா.

     “அதுக்குன்னு உன் முழு பேர் கூடவா தெரியாது”

   “ தெரியாது என்ன தெரியாது நீ சொல்லியிருக்கமாட்ட.” என்றாள் நந்தினி.

      நந்தினி மேலே என்ன பேசியிருப்பாலோ தெரியாது அதற்குள் சித்தி” “நான் லீவ் சொல்லிட்டு வர்றேன் வீட்டுக்கு போயிடலாமா “ என்றார்.

      அவர் உள்ளே செல்லவும் அருண் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

      அருணை பக்கத்தில் அழைத்து உஷாவிடம் “இது என்னோட கணவர் அருண் குமார் ” என்று அறிமுகப்படுத்தினாள்.

       உஷா அவனிடம் மரியாதை நிமித்தம் கரம் குவித்து “வணக்கம்” என்றாள். 

      இது எங்க பாட்டியோட பேத்தி “ அன்னலட்சுமி ப்ரத்யுஷா “ என்று அருணிடம் அறிமுகப்படுத்தினாள்.

     அருண் உஷாவை நோக்கி, “ஹலோ” என்று சொல்லிவிட்டு “பேர் ரொம்ப வித்யாசமா அழகா இருக்கு” என்றான்.

      “ எல்லாமே எங்க பாட்டியோட செலக்ட்ஷன் “ என்றாள் நந்தினி.

     “ கோபிகா நந்தினி , சூர்ய கிரி வாசன் , அன்னலட்சுமி ப்ரத்யுஷா நல்ல ரசனை உங்க பாட்டிக்கு “ என்றான் அருண்.

    அதற்குள் சரஸ்வதி வந்து “அக்கா உங்க சித்தி கையெழுத்து போட கூப்பிடுறாங்க” என்றாள்.

    உஷா உள்ளே சென்றதுமே அருண் நந்தினியை பார்த்து “அதென்ன நந்தினி உங்க அத்தையோட பொண்ணுன்னு சொல்லாம பாட்டியோட பேத்தின்னு சொல்லற”. என்றான்.

   “ அப்படியே பழகிபோச்சு, நாங்க வீட்ல அத்தைய பத்தி பேசுனதே இல்லை”.

   “ பாட்டி இறந்தப்ப, நானும் கிரியும், என்ஜின்நியரிங் செகண்ட் இயர்ல இருந்தோம். அவங்க இறந்தப்ப எங்களுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடந்துட்டு இருந்தது. அன்னைக்கு எக்ஸாம் நடுவுல எங்களுக்கு லீவ், அதனால தகவல் தெரிஞ்சவுடனே சென்னைல இருந்து கோயம்புத்தூர் வந்துட்டு மறுபடியும் சென்னை திரும்பிட்டோம். பாட்டி காலமானப்ப அவ அழுத அழுகை என்னால இன்னைக்கும் மறக்க முடியல. திரும்ப நாங்க எக்ஸாம் முடிஞ்சு வந்தப்போ, அவ வீட்ல இல்ல, எங்கன்னு கேட்டப்போ அவ அவங்க அப்பாவோட போயிட்டான்னு சொன்னாங்க. நாங்க ஒருதரம் போய் பாத்துட்டு வர்றோம்னு சொன்னதுக்கு அப்பாவும் அம்மாவும் விடவே இல்ல. அப்படி ஒன்னும் நாங்க அவள விட்டுடமாட்டோம் நாங்க பாத்துக்கறோம்னு சொல்லிட்டாங்க. ஒண்ணுமே செய்யமுடியல.

     கொஞ்ச நாள்ல மும்பைல ஒரு கம்பெனில எங்களுக்கு இன்டஸ்ட்ரியல் விசிட் இருந்தது. அதனால அவ 10 th மார்க் ஷீட் வாங்க வந்தப்ப கூட நாங்க இல்ல. ரொம்ப பிரில்லியண்ட் மாநிலதிலயே மூணாவதா வந்திருந்தா. நாங்க ஒரே வீட்ல இருந்தாலுமே அவ்வளவா அம்மாவும் அப்பாவும் எங்கள அவளோட பழக விட்டதில்ல. அம்மாவும் பாட்டியும் பேசிக்கமாட்டங்க”. நந்தினி கூறிக்கொண்டு இருக்கும்போதே அருணின் செல்போன் அலறியது.

   “ நந்தினி கிரி கூப்பிடறான் “ என்றான் அருண்.

   “ கூப்டா பேசுங்க “ என்றாள் நந்தினி.

   “ எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியல என்ன பேசுங்கன்னா என்ன சொல்லுவேன். உங்க வீட்டு கதைய எப்போ நீ சொல்லியிருக்க. உங்க பாட்டியபத்தியே நீ அதிகம் பேசுனதில்ல, இதுல அவங்க பேத்திய பத்தி என்ன தெரியும். அவங்க அவள வளத்தாங்க, அவங்க இறந்தவுடனே அவ அப்பாவோட போய்ட்டா. இதுதான் எனக்கு தெரியும். நானெல்லாம் ஒண்ணும் பேசமாட்டேன். நீயே பேசிக்கோ “, என்றான் அருண்.

    இவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கும்போதே அருணின் தொல்லைபேசி நின்று நந்தினியை தொல்லை செய்ய ஆரம்பித்தது.

    நந்தினி போனை எடுத்தவுடனே அவள் பேசும் முன்பாகவே கிரி பொறிய ஆரம்பித்தான்,” எங்க இருக்கீங்க, மாமா ஏன் செல் எடுக்கல, ரீச் ஆன உடனே போன் பண்ணுங்கன்னு எவ்வளவு தடவை சொன்னேன், எனக்கு இருக்குற டென்ஷன் போதாதுன்னு நீ வேறே “ என்றான்.

    அவன் கோபப்பட்டாலும் நந்தினி தன்மையாகவே, “இப்போ தான் ரீச் ஆனோம் கிரி” என்றாள். அவள் பேசட்டும் என்று கிரி காத்திருக்க, அவன் கேட்கட்டும் என்று நந்தினி காத்திருக்க, இருவரிடம் இருந்தும் ஒரு பெருமூச்சு கிளம்பியது.

    “ எப்படி இருக்கா “ என்று கிரி கேட்க , “சொல்லிக்கிரமாதிரி இல்லை” என்றாள் நந்தினி.

     “என்னபன்ணலாம்” என்றான் கிரி.

      “எனக்கே தெரியல, ஆனா இங்கே வச்சு கட்டாயம் பேசமுடியாது. அவ என்கூட இன்னும்  பேசக்கூட இல்ல. ஊருக்கு கூப்டா வருவாளான்னு தெரியாது, வந்தா கூட்டிட்டு வர்றேன் இல்லைன்னா நீதான் வரமாதிரி இருக்கும்” என்றாள் நந்தினி.

     “ நீயும் இல்ல நானும் வந்துட்டா குழந்தைங்கள எப்படி அம்மாவால தனியா பாத்துக்க முடியும் “. என்றான் கிரி .

      “ஏதாவது பண்ணு, கோயம்புத்தூர்ல இருந்து திருப்பூர் வர போக ஒரு மூணு மணிநேரம்தானே ஆகும் , நான் பேசிட்டுயிருக்கேன், பெட்டர் நீ வந்துடு” என்றாள்.

      சரி , நான் வர்றேன் , என்றான் கிரி.

      அவள் பேசிவைக்கவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது. சித்தி நந்தினியையும் அருணையும் பார்த்து “வீட்டுக்கு கிளம்பலாங்களா” என்றார்.

      “ எவ்வளவு தூரம் போகணும்” என்றாள் நந்தினி.

      “ கொஞ்சம் தூரம் போகணும். நான் வழி சொல்லறேனுங்க”, என்றார் சித்தி.

       “ உங்க அண்ணனா தம்பியா அவரு, விஷயத்தை கேள்விபட்டேனுங்க ”, என்றார் சித்தி.

         அவர்கள் கம்பெனியை விட்டு பேசிக்கொண்டே வெளியே வந்தனர்.

         “அப்போ உங்களுக்கு விஷயம் தெரியுமா, நான் தெரியாதுன்னு நினைச்சேன்”, என்றாள் நந்தினி.

         அதற்குள் கார் வந்துவிட, டிரைவர் உஷாவை பார்த்தவுடனே ஓடிவந்தார், வந்தவர் நந்தினியை பார்த்து “நம்ம சின்னஅம்மணிங்களா” என்றார்.

                உஷாவே அவரை பார்த்து “என்ன முத்து எப்படியிருக்கிங்க” என்றாள்.

              “ என்ன அம்மணி இப்படி வளந்துட்டிங்க, இளச்சி வேற போட்டிங்க எனக்கு அடையாளமே தெரியலீங்க” என்றார்.

                 அதற்கு உஷா அவரைப் பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தவாறு “ என்ன முத்து நான் திரும்பி நின்னு பேசிட்டு இருந்தேன், அத பார்த்தே அக்கா என்ன கண்டுபிடுசிட்டாங்க, நீங்க என்ன நேர்ல பாத்தும் தெரியலங்கறீங்க “ என்றாள்.

            “ சமயம் பாத்து தாக்கராபாரு “ என்று மனதிற்குள் நந்தினி நினைத்துக்கொண்டாள். அருணுமே உஷாவை ஆச்சரியமாகப் பார்த்தான். அப்போதுதான் அவளை நன்றாக கவனித்தான். நந்தினி மிகவும் அழகான பெண். அவளோடு பார்த்தால் உஷா சற்று கம்மியாகத்தான் தெரிந்தாள். உயரமாக சற்று ஒல்லியாக இருந்தாள். ஆனால் அந்த எளிமையான ஆடையிலும் ஒரு கம்பீரம் தெரிந்தது, அழுததையும் மீறி ஓர் அலட்சியம் தெரிந்தது.

          நந்தினி உஷாவுடைய சித்தியை பார்த்து, “நானும் கிரியும் ரெட்டை குழந்தைகள். அத இவ உங்ககிட்ட சொன்னதே இல்லீங்களா”, என்றாள்.

        “ ஊரப்பத்தி பேச்சு வந்தாலே ஏதோ பறிகொடுத்தமாதிரி ஆயிருமுங்க, அதனால நாங்க அதபத்தி ஒண்ணும் கேட்டுக்கறதிலீங்க. அதுவும் உங்க பொறந்தவங்க சம்சாரம் குழந்த பொறந்தவுடனே காலமாயிடிசின்னு கேட்டவுடனே ரொம்ப அழுதுச்சிங்க”.

       “ குழந்தை நல்லா இருக்குங்களா, பொண்ணா பையனா ” என்றார்.

       “ ரெண்டுமே “ என்றாள் நந்தினி. “எங்கள மாதிரியே அவங்களும் ரெட்டை குழந்தைங்க”.

       “ என்ன அழுது என்னம்மா பண்றது எங்கள வந்து இந்த மாதிரி சமயத்துல கூட பாக்கனும்னு இவளுக்கு தோணலையே”, என்றாள் நந்தினி உஷாவை பார்த்தபடியே.

          நந்தினி வந்ததிலிருந்து அவளிடம் பேசாமல் இருந்த உஷா முதல்முறையாக அவளை பார்த்து “சாரி இப்படி நடந்திருக்கவேண்டாம்” என்றாள்.

           “ எப்படி இந்தமாதிரி விட்டுடீங்க, டெலிவரின்றது இப்போல்லாம் சாதாரண விஷயம். அதுவும் ட்வின்ஸ் அப்படின்றப்போ ரொம்ப கேர்புல்லா இருந்திருப்பாங்க எப்படி இப்படி ஆச்சு “.

        “ மூணு நாள்தான் ஆயிருந்தது குழந்தைகள் பொறந்து, தீடீர்னு மூச்சுத்திணறல் , ADULT  RESPIRATORY  DISTRESS  SYNDROMEன்னு சொன்னாங்க பெஸ்ட் டாக்டர்ஸ் பெஸ்ட் ட்ரீட்மென்ட் ஆனாலும்கூட ஒண்ணும் பண்னமுடியல “ என்றாள் நந்தினி.

        பேசிக்கொண்டே காரில் ஏறி  வீட்டிற்கு வழிகூறலாயினர்.

       இந்தப்பக்கம் காரில் ஏறி இவர்கள் செல்ல, அந்த பக்கம் காரில் ஏறி சூர்ய கிரி வாசன் கிளம்பினான்.

Advertisement