Advertisement

அத்தியாயம் பதினேழு:

மிகவும் சோர்வாக உணர்ந்தாள். குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்ற முத்துவிடம்,“வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு போகலாம்………….”, என்றாள்.

கிரி முத்துவிடம் சொல்லியிருந்தான், அவள் போனாலும் எங்கே வந்தாளும் அவளை கூட்டி கொண்டு போவது அவனுடைய பொறுப்பு என்று. அதனால் முழு நேரமும் அவளுடனே இருந்தான்.

வீட்டிற்கு போன பிறகு தான் தெரிந்தது, அங்கே சாம்பவியின் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, வர்ஷா, என அனைவரும் வந்திருந்தனர். மறுநாள் நந்தினியும் அருணும் ஊருக்கு கிளம்புவதால் அவர்கள் வந்திருக்கலாம் என நினைத்தாள். தெரிந்திருந்தால் வராமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

குழந்தைகள் அவர்களுடைய கைகளில் இருந்தனர். நந்தினி அவளை பார்த்து,“வா அன்னு” என வர்ஷா அவளை பார்த்து சிரித்தாள்.

பதிலுக்கு அவளை பார்த்து புன்னகைத்த உஷா, “எப்படி இருக்கீங்க.”, என்றாள்.

“நல்லா இருக்கேன்”, என்று சொன்ன வர்ஷா, “உங்க போட்டோ பார்த்தேன். பேபர்ல. நியூஸ்ல. பெரிய மாமா பேசுனதையும் பார்த்தேன்.”, என்றாள். உஷா பேசியது தான் வந்திருக்காதே. பதிலுக்கு புன்னகைத்த உஷா அவளை பார்த்து ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக, “எப்படி இருந்தது எங்க லான்ச்” என்றாள். இவர்களின் பேச்சை ருக்மணி பாட்டி கேட்டு கொண்டுதானிருந்தார். அவருக்கு வர்ஷா, உஷாவிடம் பேசியது பிடிக்கவில்லை. இப்போது உஷா ஏதோ சொல்லவும் வர்ஷாவை பார்த்து, “என்னடி அம்மா சொல்லறா அவ.”, என நீட்டி முழங்கினார்.

வர்ஷா இவர் ஏன் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் என்பது போல் பார்க்க, அங்கே இருந்த அருண் வேண்டுமென்றே, “நேத்து அவங்க கம்பனில சார்ஜ் எடுத்துட்டாங்க இல்லையா. அது எப்படி இருந்ததுன்னு கேக்கறாங்க பாட்டி.”, என்றான். உஷா லான்ச் என்று சொன்னது லண்டன் இண்டஸ்ட்ரீசை மனதில் வைத்து தான். ஆனால் வேண்டுமென்றே அருண் மாற்றி சொன்னான். அவர்கள் ஏதோ மனதில் வைத்து தான் வந்திருக்கிறார்கள் என அவனுக்கு புரிந்தது. அது வெளியே வர வேண்டும் என்று விரும்பினான்.

“ஏன் கேக்க மாட்டா அவ எப்போ திண்ணை காலியாகும்னு பாத்துட்டே இருந்து வந்து ஒட்டிகிட்டா இல்லை. இதுல குழந்தைகளை பார்க்க வர்றாலாமா.! யார் குழந்தைகளை யார் பாக்குறது. எப்படியோ கம்பெனிகுள்ள புகுந்துட்டா இனி வீட்க்குள்ள வேற வர இப்படி ஒரு பிளான் போடறாலா.”, என்றார். இந்த நாகரீகமற்ற பேச்சை எல்லாரும் பார்த்து கொண்டுதானிருந்தனர். ஆனால் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. விஸ்வநாதனையும் கிரியையும் தவிர எல்லாரும் இருந்தனர்.  நந்தினி ஏதோ பேச முனைந்த போது கண்களாலேயே அருண் தடுத்து விட்டான்.  

உஷா ஒரு வார்த்தை கூட திருப்பி பேசவில்லை. சாதாரணமாக இருந்தாள் பேசியிருப்பாள்.  ஆனால் இன்று ஏனோ பேச தோன்றவில்லை.

நந்தினியை பார்த்து, “நான் போயிட்டு வரேன் அக்கா.”, என்று கிளம்ப போனாள். அருண் “இரு அன்னு. குழந்தைங்களை பார்க்க வந்தேயில்ல, பார்த்துட்டு போ”, என்றான். அவனுக்கு உஷாவின் முகத்தை பார்த்தபோது திக்கற்று நிற்கும் குழந்தை போல் தெரிந்தாள். ஏதாவது அவளுக்கு தான் செய்தே ஆக வேண்டும் என்பது போல அருணிற்கு தோன்றியது.

“என்ன தம்பி நீங்க. நாங்க தான் அவ குழந்தைங்களை பாக்க வேண்டாம்னு சொல்றோமில்ல.”, என்றார் கிரியினுடைய தாத்தா.

“நீங்க யார் அதை சொல்றதுக்கு.”, என்றான் அருண் கோபமாக.

இதை பார்த்த உஷா, “அண்ணா ப்ளீஸ் யாரோடயும் சண்டை போடாதீங்க. எனக்கு யாரையும் பாக்க வேண்டாம். நான் கிளம்பறேன்”, என்றாள்.

“நீ இரு.! நீ போகக்கூடாது.!”, என்றான் அருண் உஷாவை பார்த்து.

“அண்ணா எனக்கு யாரோடயும் போராடறதுக்கு சக்தி இல்லை. எந்த பேச்சையும் கேக்க தெம்பும் இல்லை. நான் போறேன்.!”, என்று என்று மளமளவென திரும்பி நடக்க துவங்க,

அருண் வேகமாக வந்து, “நான் சொல்றத நீ கேட்ப்பியா மாட்டியா. நீ ஏன் போராடற? உன்னை எப்படி ப்ளாக் மெயில் பண்ணி ஒருத்தன் கூட்டிட்டு வந்தான். அவன் வந்து இவங்களுக்கு பதில் சொல்லட்டும். ஒரு சின்ன பொண்ண கேக்க ஆளிலைன்னு என்ன வேணா பேசுவான்களா இவங்க.”, என்றான் கடுமையாக.நீ கொஞ்சமாவது என்னை கன்சிடர் பன்னினா நான் சொல்லற வரைக்கும் நீ பேசவும் கூடாது இந்த இடத்தை விட்டு நகரவும் கூடாது.”,.

அருணிற்கு சாதாரணமாக கோபம் வராது, வந்தால். பிரச்சனையை தீர்க்காமல் விடமாட்டான். அந்த மாதிரி சமயங்களில் நந்தினி ஒதுங்கிகொல்வாள். இப்போது அவன் மிகுந்த கோபத்தில் இருப்பது புரிந்தது.

“நந்தினி உங்க அப்பாக்கும் கிரிக்கும் போன் பண்ணு.”, என்றான்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த நீரஜாவின் அப்பா, “கோபப்படாதீங்க நாங்க எதுவும் பிரச்சினை பண்ண வரலை. சில விஷயங்களை பேசி முடிவெடுக்கலாம்னு தான் வந்திருக்கோம்.” என்றார்.

“நீங்க என்ன விஷயம் வேணா பேசுங்க, ஆனா உங்களுக்கு இந்த சின்ன பொண்ண பேச எந்த உரிமையும் கிடையாது. யார் குடுத்தா உங்களுக்கு அந்த தைரியத்தை.”, என்றான் சாம்பவியை ஒரு பார்வை பார்த்து கொண்டே. அதுவே சொல்லாமல் சொன்னது எல்லாம் உங்களால் தான் என்று. உண்மையாகவே சாம்பவி புலம்பிய புலம்பலில் தான் அனைவரும் கிளம்பி வந்திருந்தனர். அதுவும் நேற்று விஸ்வநாதனுடைய பேட்டியை பார்த்த பிறகு உடனே கிளம்பியிருந்தனர். இவர்கள் வந்தவுடனேயே அருணிற்கு நந்தினிக்கும் பயமாகி விட்டது எங்கே தாங்கள் இருவரும் சென்ற பிறகு. கிரியும் இன்னும் மூன்று நான்கு தினங்களில் கிளம்பிவிடுவான், அதற்கு பிறகு மறுபடியும் உஷாவை விரட்டிவிட்டால்.

இவர்கள் வந்தவுடனேயே அருண் முடிவெடுத்து விட்டான், உஷாவை இப்படியே விட்டு விட்டு போகக் கூடாது என்று. நானா. அவர்களா. பார்த்துவிடலாம் என்று. நாளை ஊருக்கு போக நிறைய வேலைகள் பாக்கி இருந்தாலும் வீட்டை விட்டு அவன் வெளியே நகரவேயில்லை. நந்தினிக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. அவளுக்கு தெரியும் அருண் முடிவெடுத்துவிட்டால் அதை நடத்தாமல் விட மாட்டான் என்று. அதனால் அவள்    அமைதியாக இருந்தாள். 

அருணுடைய பார்வைக்கெல்லாம் சாம்பவி அசைபவராக தெரியவில்லை. அது இன்னுமே அருணை கோபப்படுத்தியது. வீட்டு மாப்பிள்ளை தனக்கே இப்படி ஒரு ரியாக்ஷன் என்றால்.  உஷாவை.என்ன செய்வார்கள். அருண் நிமிடத்தில் முடிவெடுத்தான் நானா. இவரா. பார்த்து விடலாம் என்று.

இவர்களையெல்லாம் பார்த்த முத்து முன்பே கிரிக்கு தகவல் கொடுத்திருந்தான். கிரியும் விஸ்வநாதனிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பியிருந்தான்.

அருண் யோசித்து கொண்டு இருக்கும் போதே கிரி உள்ளே நுழைந்தான். நுழைந்தவுடனேயே அங்கே இருந்த எல்லோர் முகத்தையும் பார்த்த பொழுது ஏதோ சரியில்லை என்று தோன்றியது. ஆனாலும் யாரிடமும் எதையும் காட்டி கொள்ளாமல் அனைவரையும் வரவேற்றான். பார்த்த அருண், “அன்னு கூட இங்க இருக்காளே, அவளை வரவேற்க்கலையா நீ.!”, என்றான் கிரியை பார்த்து.

“என்ன மாமா நீங்க. அவங்க நம்ம வீட்டு விருந்தாளிங்க வரவேற்கிறேன். ஆனா ப்ரத்யு விருந்தாளியா என்ன.? அவளை வரவேற்கிரதுக்கு. இது அவ வீடு.!”, என்றான். இதை எதிர்பார்த்ததுதானே அந்த கேள்வியை அருண் கேட்டான்.

“நீ இப்படி சொல்ற. ஆனா உங்க பாட்டி ஏதோ திண்ணை காலியாச்சுன்னு வந்து ஒட்டிக்கிட்டான்றாங்க. உங்க அம்மா அதை கேட்டு சும்மா இருக்காங்க. குழந்தைங்களை பார்க்க கூடாதுன்றாங்க.”, சற்று மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகம். என்றாலும் தெரிந்தே தான் கேட்டான், “ஆமா அது யார் குழந்தைங்க.? உன் குழந்தைங்க தானே.!”, என்றான்.

“மாமா ப்ளீஸ். இப்படி பேசாதீங்க.”, என்றான் கலக்கமாக, உஷாவுமே அருணை வேண்டாமே என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.  

“நான் என்ன அமெரிக்கால இருக்கறதுனால, எனக்கு பேச தெரியாதுன்னு நினைச்சிருக்காங்களா.? உங்க அம்மாவும் அம்மா வீட்டு ஆளுங்களும். இனி அன்னுவ பார்த்து ஒரு வார்த்தை பேசினாலும், உங்க டோட்டல் ஃபாமிலியையும் நாறடிச்சிடுவேன்”.

தமிழ் சினிமாவ பார்த்து நிறைய வார்த்தைய இவங்க கத்துகிட்டாங்க போலவே என மனதிற்குள்ளேயே நந்தினி நினைத்தாள், ஆனால் எதிலும் தலையிடவில்லை.

“தம்பி மரியாதையில்லாம பேசாதீங்க.”, என கிரியின் தாத்தா பேச, “யோவ் வாய மூடு, நீங்க யாரு என் கிட்ட பேசறதுக்கு.? நான் உங்கிட்ட பேசலை.”, என்றான் ஒரே வார்த்தையாக. அருணை இது வரை அமெரிக்கன் ரிடர்ன் பாய்யாக பார்த்து விட்டு, இப்படி ஒரு லோக்கல் ரியாக்ஷனை கிரியே எதிர் பார்க்கவில்லை. அருனுடைய கோபத்தை பார்த்து அவன் அவனுடைய தாத்தாவை அடக்கினான். “தாத்தா.! அமைதியா இருங்க தாத்தா. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.”, என்றான். எதற்குமே சாம்பவியும் வாயை திறந்தாரில்லை.

அருண் இன்னுமே எகிறினான், “நீ எப்படிடா இருப்ப.? உங்கப்பா மாதிரி எல்லாத்துக்கும் தலைய தானே ஆட்டுவ. என்ன பேசறதா இருந்தாலும். என் முன்னாடி இப்போ, இங்கே, பேசுங்க. நான் போயிட்டா, இன்னும் நீங்க என்னவெல்லாம் பன்னுவீங்களோ.”, என்று அவன் கோபமாக கத்தி கொண்டு இருக்கும் போதே விஸ்வநாதன் வந்து விட்டார்.

“என்ன.? என்ன பிரச்சினை.?”, என்று கொண்டே வர,

“நந்தினி.”, என்று அழைத்த அருண், “உன் பாட்டி இப்போ சில வார்த்தையெல்லாம் பேசிச்சே. அதை மறுபடியும் பேச சொல்லு.”.

கேட்ட விஸ்வநாதன் சாம்பவியை இது என்ன புது பிரச்சினை என்பது போல் பார்க்க. அவர் அவருடைய அம்மாவை பார்த்து, “நீ பேசும்மா, ஏன் பயப்படற.”, என்றார். சாம்பவியின் தைரியமே விஸ்வநாதன் தான் அதை அருண் புரிந்து கொண்டான். இவ்வளவு நேரமாக வாயை திறக்காதவர் விஸ்வநாதன் வந்ததும் குரலை உயர்த்துகிறார். 

இவ்வளவு நேரமாக அவரை பார்த்து பேசாத அருண், “பயமா உங்க அம்மாக்கா. ஏன் இப்படி ஒரு காமெடி.”, என்றான் கிண்டலாக,

நீரஜாவின் அம்மா, “அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் தம்பி.”, என்று தணிந்து வந்தார்.

“நீங்க ஏதோ பேசவந்திருக்கறதா. இவர் சொன்னார். என்ன அது.?”, என்றான் நீரஜாவின் அப்பாவை பார்த்து.

அவர்கள் வந்தது மறுபடியும் வர்ஷாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்கத்தான். முடியாது என்று கிரி கூறினால், குழந்தைகளை தங்களிடம் கொடுத்து விடுமாறு கூறுவதற்காக தான் வந்திருந்தனர்.

உஷாவினுடைய அறிமுகம். அவளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம். இதை பார்த்து கிளம்பி வந்து விட்டனர். ஆனால் இப்பொழுது பேச வாய் வரவில்லை. இப்படி ஒரு சப்போர்ட் அருணிடம் இருந்து உஷாவிற்க்கு வரும் என எதிர்பார்க்கவில்லை.

நீரஜாவுடைய அம்மாவிற்கு தெரியும், கிரியும் நீரஜாவும் தனித்தனியாக இருந்தாலும் இருவருமே மனதளவில் ரொம்ப க்ளோஸ் என்று. கிரி அவளை கூட்டி செல்ல எத்தனை முறை கேட்டும் நீரஜாவின் உடல் நிலை கருதி இவர் ஒரு டாக்டர் என்பதால் அனுமதிக்கவில்லை. அவளுக்கு திடீரென்று இப்படி ஆகும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. அவருக்கு ஏற்கனவே அந்த ஒரு நினைவே வாட்டியது. பேசாமல் அவளை அவளது கணவனுனாவது அனுப்பி இருக்காலாம். இப்போது எந்த முகத்தை வைத்து கேட்பார்.

அதனால் அமைதியாகவே இருந்தார். அவர் தயங்கியதை பார்த்து நீரஜாவின் தந்தை, “அவசரம் ஒண்ணுமில்லை, அப்புறம் பேசலாம்.”, என அருண், “அதெல்லாம் முடியாது, இப்போவே பேசுங்க.!”, என்றான்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த உஷாவிற்கு தலைவலி அதிகமாகியது, உட்கார முடியவில்லை. இவர்கள் பேசும் போது கிரி அவளை பார்க்க அவள் தடுமாறுவது தெரிந்தது.

அவளிடம் வந்து, “என்ன செய்யுது.”, என்றான்.

“தலைவலி. வாமிட் வர்ற மாதிரி இருக்கு.”, என்றாள்.

“டேபிலேட் தரட்டுமா.”, என்றான்

“நான் வீட்டுக்கு போறேன்.”, என்றாள்.

அவளை மேலே பேச அனுமதியாமல்,“இங்கேயே தூங்கு ப்ரத்யு. அவ்வளவு தூரம் எப்படி போவ.”, என்று சொல்லி நந்தினியிடம், அவளுக்கு சாப்பிட கொடுத்து மாத்திரை கொடுக்க சொல்லி, உள்ளே அனுப்பினான்.

அவள் போகும்வரை அமைதியாக இருந்த அருண், “சொல்லுங்க.”, என்றான் திரும்ப.

எல்லாரும் தயங்க ருக்மணி பாட்டி விஷயத்தை பட்டென்று உடைத்தார். வர்ஷாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி.

கேட்ட அருண் கோபத்தில் ஏதோ சொல்ல வர, “நான் பாத்துக்கறேன் மாமா.”, என்ற கிரி ஒரே வார்த்தையில், “முடியாது” என்றான்.

“அப்படின்னா குழந்தைகளை நாங்க தூக்கிட்டு போய்டுவோம்.”, என்றார் ருக்மணி பாட்டி.

“என்ன உளறல் இது. அவங்க என் குழந்தைங்க. இனிமே இந்த வீட்டோட எந்த தொடர்பும் வேண்டாம்னு இப்படி பேசறீங்களா.”, என்றான் குரலில் எரிச்சல் சற்றும் மறையாமல்.

“கிரி பார்த்து பேசு. அவங்க என் அம்மா. என்னை பாக்க வராங்க. அதை யாராலையும் தடுக்க முடியாது.”, என்றார் சாம்பவி.

“அவங்க உங்க அம்மான்னா. நான் யாரு உங்களுக்கு. என் குழந்தைகளை தூக்கிட்டு போய்டுவேன்னு மிரட்ற மாதிரி பேசறாங்க. அவங்க உங்க அம்மா அப்டின்றதனாலதான் சும்மா விடறேன். நான் உங்க கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலைமா”.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அருண், “உங்க சண்டையெல்லாம் அப்புறம் வச்சிகங்க. நான் இருக்கும் போதே அன்னுவ இப்படி பண்ணற நீங்க. நான் போனதுக்கு அப்புறம் என்ன பண்ண மாட்டீங்க. அதனால நீ என்ன பண்ற நான் போறதுக்குள்ள அவளை கல்யாணம் பண்ணிக்கற. இது நடக்கணும் இல்லைன்னா. நந்தினிக்கு இந்த ஜென்மத்தில் இனி அப்பா, அம்மா, கூடபிறந்தவங்க யாரும் கிடையாது.”, என்றான் கிரியை பார்த்து தீர்மானமான குரலில். குரலே. சொன்னதை செய்வேன் என்றது. விஸ்வநாதன் அதிர்ந்து போனார். சாதரணமாக தான் இந்த விவாதங்களை நினைத்தார். ஆனால் அவர் நினைத்ததை எல்லாம் மீறி விட்டது என புரிந்தது.   

கிரியுமே அதிர்ந்தான். ஒரு மாதிரி தான் பிரத்யுவை திருமணம் செய்துகொள்ள தன்னை கிரி தயார் செய்து கொண்டுதானிருந்தான். ஆனால் இவ்வளவு சீக்கிரமாகவா.!

“இப்போ உங்களுக்கு திருப்தியா.”, என்றான் கோபமாக சாம்பவியை பார்த்து தன்னையும் மீறி. சொன்ன பிறகு அவசரமாக திரும்பி ப்ரத்யு இதை கேட்டு விட்டாளோ என்று பார்க்க, நல்ல வேலையாக நந்தினியும் ப்ரத்யுவும் அங்கே இல்லை. அவனை அறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேறி அங்கே இருந்த சோபாவில் அப்படியே அமர்ந்து விட்டான்.

இதனை பார்த்த அருண், “நாளைக்கு நல்ல நாள். ஊருக்கு போறோம்னு நந்தினி ஏதோ பூஜை கூட கோயிலில் குடுத்திருக்கா, அதனால நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கலாம்.”, என்றான் தடாலடியாக.

சாம்பவி விஸ்வநாதனை பார்த்து, “என்னங்க மாப்பிள்ளை இப்படி சொல்றாரு, அமைதியா இருக்கீங்க.”, என்றார்

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு, இது கிரி தான் முடிவெடுக்கணும்”, என்றார்.

விஸ்வநாதன் இப்படி பதில் சொல்லுவார் என்று சாம்பவி எதிர்பார்க்கவில்லை. அவரை பார்க்க. இது தன்னுடைய இரு பிள்ளை செல்வங்களின் வாழ்க்கை என்றுணர்ந்த விஸ்வநாதன் “ஒரு தரம் அவனுடைய லைஃப் நம்ம தான் முடிவேடுத்தோம். இப்படி ஆகும்னு யாரும் எதிர்பார்க்கலை. என்ன வயசாகுது அவனுக்கு. ஜஸ்ட் ட்வென்டி சிக்ஸ். நான் எவ்வளவு ஹைட்ஸ் ரீச் பண்ணி என்ன.? என் பையன் சந்தோஷமா இருக்க வேண்டாமா. இவ்வளவு பெரிய அர்கனைசேசன் ரன் பண்றவனுக்கு அவனுடைய லைஃப் பார்க்க தெரியாதா.? உன்னுடைய முடிவுகளை அவன் மேல திணிக்காத.”, என்றார். இப்படி விஸ்வநாதன் சாம்பவியிடம் என்றுமே பேசியதில்லை.

அருணிற்கு இப்போது கூட, அவர்கள் பையனை தானே பார்கிறார்கள். உஷாவை பார்க்கவில்லையே. என்ன மனிதர்கள் சே. என்ற தோன்றியது. என்ன ஆனாலும் அருண் அவனுடைய முடிவில் இருந்து பின் வாங்குவதாக இல்லை.

“என்ன சொல்லற.?”, என்றான் கிரியை பார்த்து, “நீங்க எப்படி சொன்னாலும் சரி.”, என்றான் கிரி ஒரு வழியாக.

இதனை அங்கிருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை. கிரியினுடைய தாத்தாவிற்கு தோன்றியது தாங்கள் அவசரப்பட்டதை இந்த அருண் சாதகமாக்கி கொண்டான் என,

ஆனால் நீரஜாவின் தாயும் தந்தையும் எதையும் பேசவில்லை. நீராஜாவின் தந்தை கிரியை பார்த்து, “குழந்தைகளை நாங்க வளர்க்கட்டுமா.”, என்றார். அமைதியாக தான் கேட்டார்.

கிரி அவரை பார்த்து, “நீங்க என் அம்மாவோட அண்ணா அண்ணின்றது எனக்கு அப்புறம் தான். நீங்க நீரஜாவோட அப்பா அம்மா. நீரஜா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அது எனக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும். சொல்லப்போனா பிரத்யுக்கு இன்னும் நல்லா தெரியும். அதனால நீங்க என்னோட மாமனார் மாமியார் அப்படின்ற உரிமையில, எப்போ வேணா இங்கே வரலாம். குழந்தைகளை பார்க்கலாம். ஆனா அவங்களை எப்போவும் கூட்டிட்டு போகனும்னு நினைக்காதீங்க. அவங்க என் குழந்தைங்க. ப்ரத்யு தான் அவங்களோட அம்மா. நீங்க அந்த மரியாதையை அவளுக்கு காட்டாயம் குடுக்கணும்.குடுப்பீங்கன்னு நம்பறேன். அவங்க பேச்ச. இவங்க பேச்ச. கேட்டு நடக்காதீங்க. சுயமா முடிவெடுங்க. என்னை விட, நீரஜா இருந்திருந்தா அவ வளர்கறத விட. ப்ரத்யு அருமையா வளர்ப்பா. எனக்கு அவளை தெரியும். நீங்க அதனால எந்த கவலையும் பட தேவையில்லை.”, என்றான் தெளிவாக.

கேட்ட அனைவரும் அவன் குரலில் இருந்த உறுதியை நம்பிக்கையை பார்த்து எதுவும் பேச இயலாதவர்களாக வாயடைத்து போய் நின்றனர்.

வெளியே வந்த நந்தினி, உஷா தூங்குவதாக கூற. அருண் தன்னுடைய முடிவை சொல்ல. நந்தினி யோசித்தாள்.

அருணிடம், “நாளைக்கு கல்யாணம்னா ரொம்ப ஷார்ட் டைம். எல்லோரையும் கூப்பிட்டுதான் பண்ணனும். நாம வேணும்னா நம்ம ஜர்னிய ரெண்டு மூணு நாள் தள்ளி போடலாம். டிக்கெட் வேஸ்ட் ஆனா ஆயிட்டு போகுது.”, என்றாள்.

“இவன் ஊருக்கு கிளம்பிடுவானே.”, என்றான் அருண் கிரியை பார்த்து. “அதுக்குள்ள நடத்திடலாம்”, என்றாள் நந்தினி, மனதிற்குள் எழுந்த உற்சாகத்தை வெளி காட்டாமல்.

கிரி மெதுவாக, “ப்ரத்யு ஒத்துக்கனுமே.”, என்றான்.

“அது ஒண்ணும் எங்க பிரச்சனையில்ல. உன் பிரச்சினை. நாங்க சொன்னா கேட்கமாட்டா, அதனால சம்மதத்தை நீயே வாங்கிடு. அதெல்லாம் உனக்கு தான் வரும்.”, என்றான் கிண்டலாக கிரியை பார்த்து. பதிலுக்கு கிரி முறைத்ததை பார்த்து சிரித்தான்.

“இப்படி என்னை முறைக்கரத்தை விட்டுட்டு உங்க அப்பாகிட்ட ட்ரைனிங் எடுத்துக்கோ. எப்படி பொண்டாட்டி சொல்லறதுக்கு எல்லாம் தலையாற்றதுன்னு.”, என்றான் விஸ்வநாதனையும் விட்டு வைக்காமல் சாம்பவியை பார்த்து கொண்டே.

ருக்மணி பாட்டி ஏதோ சொல்ல வர. நீரஜாவின் தந்தை, “அம்மா அவங்க தெளிவா இருக்காங்க. மாறமாட்டாங்க. என் மரியாதைய நான் காப்பதிக்கனும்னு நினைக்கறேன். நீங்க இனிமே இதை பத்தி பேச கூடாது. பேசினா நான் என் பொண்டாட்டி பிள்ளை யாரும் உங்களோட வரமாட்டோம். அப்பா நான் சொன்னா செய்வார். நீங்க குழப்பாதீங்க.”, என்றார்.

சாம்பவி எதையும் செய்ய முடியாதவராய் பார்த்து கொண்டிருந்தார். அருண் நந்தினியுடனும் விஸ்வநாதனுடனும் சேர்ந்து அந்த இரவில் அய்யரை வரவழைத்து நாள் குறிதான். புதன்கிழமை நல்ல நாள் என்று அவர் கூற, நந்தினி, “கிரி அன்னைக்கு லண்டன் போறான்.”, என, “அதெல்லாம் பார்த்துக்கலாம், முதல்ல கல்யாணத்தை முடிப்போம்.”, என. எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது, சாம்பவியின் சம்மதம் இல்லாமலேயே., ப்ரத்யுவிற்கு தெரியாமலேயே.

அந்த நேரத்தில் கார் அனுப்பி விஸ்வநாதனின் பெரியப்பாவை வர சொல்லிவிட்டு,  அருணும் நந்தினியும் உஷாவின் சித்தியை பார்க்க கிளம்பி விட்டனர், அவரிடம் சொல்லாமல் செய்வது தவறு என உணர்ந்து.

கிரி ஹாலிலேயே அமர்ந்திருந்தான். தினமும் அவனை பிடித்து வைத்திருந்த பழக்கம் அன்று அவனுக்கு ஞாபகத்திற்கு கூட வரவில்லை. அவனுடைய கவலை எல்லாம் ப்ரத்யுவிடம் எப்படி சொல்லி சம்மதம் வாங்குவது என்பது தான். இரவு மணி பத்தரைக்கு மேல் ஆக எல்லாரும் உறங்க சென்று விட்டனர்.

நந்தினியும் அருணும் திரும்புவதற்காக கிரி காத்திருக்க. உறக்கம் கலைந்து உஷா எழுந்து வந்தாள். கிரி ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்து வந்தாள்.

அவளை பார்த்த கிரி, “இப்போ எப்படி இருக்கு.”, என்றான்.

“பரவாயில்லை”, என்று விட்டு, “நீங்க இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க. மறுபடியும் வெளில போகலையா.”, என்றாள்.

அவள் அவன் குடிக்க போகாததை கேட்கிறாள் என புரிந்தது. ஆனாலும் புரியாத மாதிரி, “பசிக்குது நான் இன்னும் சாப்பிடலை. சாப்பிடலாமா”, என்றான்.

எதுவுமே பேசாமல் இருவருமே எழுந்து சாப்பிட உட்கார்ந்தனர். பரிமாறுவதற்கு வந்த சமையல் அம்மாவை பார்த்த உஷா, “நீங்க ஏன் முழிச்சிருக்கீங்க. நீங்க போய் தூங்குங்க. நாளைக்கு வேலை செய்ய வேண்டாமா.”, என்றாள் கரிசனமாக.

சமையல் அம்மா அந்த வார்த்தையில் நெகிழ்ந்து விட்டார். அந்த வீட்டில் யாரும் திட்டி அதட்டி எல்லாம் வேலை வாங்க மாட்டார்கள். கேட்கும் போதெல்லாம் சாம்பவி பணமும் குடுப்பார். ஆனால் இந்த அக்கறை இருக்காது. அவர்கள் தூங்கிய பிறகு தான் வேலையாட்கள் தூங்க வேண்டும். அவர்கள் எழுவதற்கு முன் எல்லா வேலையும் ஆரம்பித்து விட வேண்டும். அது தான் அவர்களுடைய வேலை என்றாலும் இந்த மாதிரி கரிசனத்தை எதிர்பார்க்க முடியாது.

சமையல் அம்மா பார்த்து கொண்டே நிற்க. “நீங்க போய் தூங்குங்க.”, என்றாள் மறுபடியும். கிரிக்கு அதிசயமாக இருந்தது. அவனுக்கு தெரிந்த ப்ரத்யு இப்படி யாரிடமும் கனிவாக பேசமாட்டாள். எல்லோரையும் அதட்டி கொண்டு தானிருப்பாள். காலம் அவளை மாற்றி விட்டதா. இல்லை இது தான் அவள் இயல்பா. அவளை பார்த்து கொண்டிருந்தான்.

அந்த அம்மாள் தலையாட்டிய படியே சென்று விட, பார்த்தாள் என்ன இருந்தது என்று. இட்லி, சப்பாத்தி என நிறைய இருந்தது. அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தாலும், அதை விடுத்து. “யார் இன்னும் சாப்பிடலை. இவ்வளவு இருக்கு.”, என்றாள் சகஜமாக.

“மாமாவும், நந்தினியும், வெளியே போய் இருக்காங்க”, என்றான்.

“எங்க.!”, என்றவளிடம், “பசிக்குது ப்ரத்யு.”, என்றான். அதன் பிறகு ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவனுக்கு வைத்து விட்டு, அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டவுடன் ஹாலில் வந்து அமர்ந்தவுடனே மீண்டும், “இப்போ சொல்லுங்க.”, என்றாள், “உங்க சித்திய பார்க்க போய் இருக்காங்க.”, என்றான்.

“எங்க சித்தியயையா, எதுக்கு.”, என்றாள் கலவரமாக. என்னவோ ஏதோவென்று,

“பயப்பட ஒண்ணுமில்லை.”, என்றான் கிரி அவசரமாக,

“அப்போ எதுக்கு என்னை விட்டுட்டு போய் இருக்காங்க.”, என்றாள் நம்பாமல்.

“அது.”, என இழுத்த கிரி, தன்னுடைய தைரியத்தை எல்லாம் திரட்டி, “நம்ம கல்யாண விஷயமா பேச போய் இருக்காங்க.”, என்றான்.

இவன் என்ன பேசுகிறான் என்று புரியாமல் பார்த்த உஷாவிடம், “அருண் மாமா ஊருக்கு போறதுக்குள்ள நம்ம கல்யாணம் நடக்கணும்னு சொல்லிட்டார். புதன்கிழமை நாள் நல்லா இருக்குன்னு பேச போய் இருக்கார்.”, என்றான் கடகடவென்று மனப்பாடம் செய்து வைத்ததை ஒப்பிப்பது போல. கேட்டவுடனேயே புரிந்தது இது அருனுடைய வேலை என்று.

உஷா எதுவும் பேசாமல் இருக்க. “உனக்கு சம்மதமா”, என்றான் கிரி அவளுடைய முகத்தையே பார்த்தவாறு. அமைதியாக கண்களை மூடிகொண்டாள், அவனை பார்க்காமல்.

அவனை பார்த்து இதற்கு பதில் சொல்ல தெம்பில்லை. என்ன மாதிரியான ஒரு உணர்வில் இருந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை.

“ப்ரத்யு.”, என மறுபடியும் அழைத்தான். கண்களை திறக்காமலேயே, “சம்மதம் இல்லைன்னா, என்ன செய்ய போறீங்க.”, என்றாள்.

“ப்ரத்யு முதல்ல என்னை பாரு.”, என்றான் அதட்டலாக.

கண்களை திறந்து அவனை பார்த்த உஷா. அவனையே பார்த்தவாறு. “முதல்ல உங்களுக்கு சம்மதமா, அதை சொல்லுங்க.”, என்றாள் தீர்க்கமாக.

“சம்மதமில்லாமையா கேட்பேன்.”, என்றான்.

“எனக்கு என்னவோ அருண் அண்ணா ஃபோர்ஸ் பண்றதால தான் கேக்கறீங்கன்னு தோணுது.”, என்றாள். இருவருமே மனதிற்குள் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை பேசும் பழக்கமில்லாதவர்கள். அதனால் வார்த்தை பிரயோகம் நேரடியாகவே இருந்தது. எதையும் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ, என்று அனுமானிக்கும் பழக்கமும் இருவரிடமும் கிடையாது.

“உண்மையா சொல்லனும்னா அருண் அண்ணா ஃபோர்ஸ் பண்றதுனால தான் இப்போ கேக்கறேன். இல்லைன்னா கொஞ்ச நாள் கழிச்சு கேட்டிருப்பேன்.”, என்றான்.

“அப்போ கொஞ்ச நாள் கழிச்சே பார்த்துக்கலாம்.”, என்று கூறிவிட்டு முகத்தை அவனுக்கு காட்டாமல் வேறு புறமாக திருப்பி கொண்டாள். அவள் கலக்கமாக இருப்பது கிரிக்கு புரிந்தது. 

அவளுக்கு அருகில் வேறு சோபாவில் அமர்ந்திருந்த கிரி. எழுந்து வந்து அவளுடைய காலருகில் மண்டியிட்டான். அவன் அமர்வது தெரிந்தும் அவள் திரும்பவில்லை.

அவளுடைய கைகளை தன்னுடைய கைகளில் எடுத்துகொண்டான். கைகள் சில்லென்று இருந்தது. அதிலிருந்தே அவளுடைய மனதில் இருந்த பதட்டம் புரிந்தது. அவளுடைய கைகளை மெதுவாக சூடு வருமாறு தேய்த்து விட ஆரம்பித்தான். அவள் கைகளை இழுக்க முற்பட அவன் விடவேயில்லை. 

“ப்ரத்யு என்னை பாரு.”, என்றான் அவள் திரும்பவேயில்லை. அது ஒற்றை ஆள் அமரக்கூடிய சோஃபா. “ப்ரத்யு  இப்போ நீ திரும்பி பார்க்கலைன்னா, நான் எழுந்து உன் மேல உட்கார்ந்துப்பேன். பரவாயில்லையா.”, என்றான் சீரியஸாகவே. இதை கேட்டவள் சட்டென்று திரும்பி கண்களில் நீரோடு அவனை முறைக்க,

கைகளை தேய்த்து விட்டு கொண்டே பேச ஆரம்பித்தான். “ப்ரத்யு எனக்குமே இப்போ தோணுது, கல்யாணம் முடிச்சிட்டே நான் ஊருக்கு போறது பெட்டர்னு. எங்கம்மா எப்போ என்ன பிரச்சினை பண்ணுவாங்கன்னு தெரியாது. இப்போதைக்கு அப்பா நமக்கு சாதகமா பேசினாலும், அப்படியே இருப்பாறான்னு தெரியாது. அதனால கல்யாணம் பண்ணிக்கலாமா. இன்னும் சொல்லனும்னா எனக்குள்ள நடந்துட்டு இருக்கிற சில போராட்டமும் ஒரு முடிவுக்கு வரும்”, என்றான் தன்மையாகவே.

“இதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிபாங்களா என்ன.? எனக்கு என்னை பார்த்துக்க தெரியும். அதனால இந்த கஷ்டம் எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.”, என்றாள்.

“உனக்கு உன்னை பார்த்துக்க தெரியும். ஆனா எனக்கு என்னை பார்த்துக்க தெரியாதே. இப்போ மாமா சொன்னதுக்காக கேக்கறேனேன்னு கோபப்படாத. அவங்க சொல்ற ஒரு சூழ்நிலையில் நான் கேட்டாலும், கட்டாயம் இதை நான் கேட்டிருப்பேன். என்னை நம்பலையா நீ.”, என்றான் கண்களில் எதிர்பார்போடு.

அவனையே பார்த்தாள். “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. நான் என்ன சொல்லட்டும் நீயே சொல்லு. எனக்கு யோசிச்சு தலை மறுபடியும் வலிக்குது”, என்றாள் பரிதாபமாக.

“யோசிக்காத எதையும். எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடு. நான் பாத்துக்கறேன். எனக்கு ஒரு சான்ஸ் குடுக்கறியா.”, என்றான் அவளிடம் சமாதானமாக.

“நீ என்னை பிரைன் வாஷ் பண்ணற.”, என்றாள்.

“அச்சச்சோ. உனக்கு பிரைன் இருக்கா என்ன. எனக்கு தெரியாதே.”, என்றான்.

“ப்ச்.!”, என்ற உஷா. “புரிஞ்சிகோங்க. எல்லாரும் இங்க நான் ஏதோ தப்பு செஞ்ச மாதிரியே பார்க்கறாங்க. நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க ட்ரை பண்ற மாதிரி பேசறாங்க. நீங்க என்னை பார்க்க வரலை. என்னை விட்டுடீங்கன்னு தான் என் வருத்தம். திடீர்னு என்னை மீறி எல்லாமே நடக்கற மாதிரி பீல் பண்றேன்.”, என்றாள் மறுபடியும் கலவரமாக.

“இப்போ தானே சொன்னேன். எதையும் யோசிக்காதன்னு. என்றான் அதட்டலாக, அவனுக்கு தெரியும் இனி மிரட்டல் தான் பலனளிக்கும் என்று

“நான் இப்போ உங்கிட்ட கேக்கற கேள்விக்கு சம்மதம்னு பதில் சொல்லற.”, என்று கூறி “என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா.”, என்றான். நினைத்ததை முடிக்காமல் விட்டால் அது சூர்ய கிரி வாசன் அல்லவே.

உஷா இதற்கு மேல் இவனிடம் போராட முடியாது என்று உணர்ந்தவளாக, சம்மதம் என்று வாயால் கூறாமல், தலையை மட்டும் ஆட்டினாள்.

இதற்கு மேல் ஏதாவது செய்தால் மொத்தமாக சொதப்பி விடும் உணர்ந்து, “உன் கையெல்லாம் ஜில்லுன்னு இருக்கு. சூடா ஏதாவது குடிக்க கொடுக்கட்டா.”, என்று கேட்டான். அப்போது தான் அவன் கையை பிடித்து தேய்த்து கொண்டிருப்பதை உணர்ந்த உஷா அவசரமாக கை இழுத்தாள். “மேலே எழுந்து உக்காருங்க. யாராவது பார்க்க போறாங்க.”, என்றாள் பதட்டமாக.

“வாயால ஒரே ஒரு தடவை. சம்மதம்னு சொல்லு, அப்போ தான் எழுந்திருப்பேன்”, என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும்போதே, அருணும் நந்தினியும் வர அவசரமாக உஷா எழப்போனால். அவள் தடுமாறுவதை பார்த்து கிரி எழுந்தான்.

“கரக்டா வந்து சொதப்பிட்டோமா.”, என்றான் அருண். உஷாவின் முகம் கலக்கத்திலேயே இருந்தது. அவளருகில் வந்த அருண், “உங்க சித்திகிட்ட பேசு அப்போதான் அவங்க நிம்மதியா இருப்பாங்க. நாங்க இந்த நேரத்துல போனதுமே பயந்துட்டாங்க. நாங்க விஷயத்தை சொன்னதும் சந்தோசம் தான். ஆனாலும் உன் கிட்ட பேசிட்டு தான் சம்மதம் சொல்வேன்னு சொல்லிட்டாங்க. பேசு.”, என்றான்.

போனில் பேசிய உஷா, “சித்தி.”, என்றதுமே, “என்ன கண்ணு நடக்குது. உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே.”, என்றாள்.

“இல்லை சித்தி தலைவலின்னு தூங்கிட்டேன். வேற ஒண்ணுமில்லை”,

“நான் என்ன சொல்லட்டும். அவங்க கேட்டதுக்கு”, என்றார் சித்தி.

“கணேஷும் கலைவாணியும் என்ன சொன்னாங்க.”, என்றாள்.

“அக்காக்கு சம்மதம் இல்லைனாலும், நீங்க சம்மதிக்க வைங்கம்மான்னு சொன்னாங்க”,

“நீங்க என்ன சொல்றிங்க சித்தி”,

“உனக்கு எது சரியோ அதை செய் கண்ணு. எதுவும் கட்டாயமில்லை. ஆனா அந்த தம்பிய தவிர யார்க்கிட்டையும் உனக்கு நிம்மதியோ சந்தோஷமோ கிடைக்காதுன்னு எனக்கு தோணுது கண்ணு”, என்றார். உஷாவிர்க்கு என்ன பதில் பேசுவது என்றே தெரியவில்லை. தனக்கு வேண்டியதை அவர் கூறும் விதம். இப்படி மனிதர்கள் அபூர்வம். அவர் சொன்ன விதம் அவருக்க்காகவாவது கட்டாயம் சரி என்று உடனே சொல்ல தோன்றியது.

“நீங்க சந்தோஷபடுவீங்களா சித்தி”, என்றாள்.

“உன் சந்தோசம் தானே கண்ணு, என் சந்தோஷம்”, என்றார்.

“நீங்களே சரின்னு சொல்லிடுங்க சித்தி.”, என்று அருணிடம் போனை கொடுக்க, அதில் சம்மதத்தை அறிந்த அருண் மிகவும் சந்தோஷமாக, உஷாவை பார்த்து சிரிக்க, அந்த சிரிப்பு அவளை தொற்றவில்லை. உடனே கோபமாக அவன் கிரியை பார்க்க, “ப்ரத்யு சிரிச்சிடேன்”, என்றான்.

ஆனால் எதற்குமே அவள் முகம் தெளியவில்லை. அதை உணர்ந்த நந்தினி, “சாப்பிடலாம் வாங்க, அவ களைப்பா இருக்கா தூங்கட்டும்”, என்று பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்து அவளை அனுப்பினாள்.

அவள் உள்ளே சென்று படுக்கும்வரை அமைதியாக இருந்த நந்தினி, கிரியை பார்க்க. “அவளுக்கு சம்மதம் தான் நந்து. ஆனா ஏதோ சஞ்சலம். போக போக சரியாயிடும்”, என்றான். இது அவனுக்கும் சேர்த்து அவனே சொல்லி கொண்டான். அதை தெரிந்தவனாக அருண், “இது அவளுக்கு சொல்றியா இல்லை நீயே சொல்லிகறியா.”, என்றான்.

கிரி, “நான் நல்ல பையன் மாமா, என்னை நம்புங்க.”, என்றான்.

“அதுதாண்டா பிரச்சனையே.”, என்றான் அருண்.

மளமள வென வேலைகள் நடந்தது. அதற்கு பிறகு உஷா கிரியை பார்பதையே தவிர்த்தாள். கிரியை அவளுடைய அறிவிற்கு புரிந்தாலும். மனதிற்கு புரியவில்லை. அதை உணர்ந்தானோ என்னவோ கிரியும் அவளை நேரில் பார்ப்பதை விடுத்து போனில் எல்லாவற்றையும் மெசேஜ் ஆக அனுப்பி கொண்டிருந்தான். ஆனால் அந்த இரண்டு நாட்கள் கூட அவள் அலுவலகம் செல்லுமாறு பார்த்து கொண்டான். உஷாவினுடைய சித்தியை ஒரே நாளில் திருப்பூரிலிருந்து கோவைக்கு வீடு மாற்ற செய்தான்.

விஸ்வநாதனுடைய பெரியப்பா வந்து எல்லா வேலைகளையும் முன்னின்று செய்தார். நீரஜாவின் பெற்றோர் கூட அதற்கு பிறகு அமைதியாகவே இருந்தனர். உஷா குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பாங்கு அவர்களின் மனதிற்கு அவர்களை அறியாமலேயே ஒரு நிம்மதியை கொடுத்தது. அவர்கள் ஊருக்கு கிளம்ப கிரியும், விஸ்வநாதனும் திருமணம் முடிந்து செல்லுமாறு கேட்க. மறு பேச்சில்லாமல் இருந்தனர். அவர்களாகவே சென்று உஷாவிடம் இரண்டொரு வார்த்தை பேசக்கூட செய்தனர். சாம்பவி இதை அனைத்தையும் பார்த்தவறாக. எதையும் செய்ய முடியாதவராக. இருந்தார்.

 உறவுகள் சூழ. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில். கிரி அந்த புதனன்று அதிகாலை ப்ரத்யுவை அவனது மனையாள் ஆக்கிகொண்டான். தாரை வார்த்து கொடுக்க யாரை சொல்வது என உஷாவின் சித்தி தடுமாற, உஷா சிறிதும் தயங்காமல் அருணை பார்க்க, “நானா.”, என்றான். நீங்க தான் என்பது போல் தலை அசைக்க. நந்தினி அருணின் கை பிடித்து அழைத்து போய் நின்றாள்.

உறவுகள் எல்லோர் முகத்திலும் ஒரு திருப்தி தெரிந்தது. கிரி மறக்காமல் தனது தந்தையை வைத்தே உஷாவினுடைய சித்தியின் பிறந்த வீட்டின் சொந்தங்களை கூட அழைத்திருந்தான். அவர்களும் வந்திருந்தனர். சித்தியுமே ஒரு மன நிறைவில் இருந்தார். .கணேஷ் அருணை விட்டு இம்மியும் நகர வில்லை. அவனை கவனிப்பதே தலையாய கடமை என்பது போல் இருந்தான்.

அருண் கூட கணேஷை கிண்டல் செய்தான், “டேய் மாப்பிள்ளைய கவனிடா. எங்கயாவது கோபப்பட்டு போயிட போறான்.”, என்றான்.

“அவர் போகாம பார்த்துக்க தானே அண்ணா. நான் உங்க பின்னாடியே சுத்துறேன்.”, என்றான் கணேஷ் சிரிக்காமல்.

“டேய். தம்பி, நீ பெரியால்டா.”, என. “உங்களைவிடவா அண்ணா.”, என்றான் உணர்ச்சி பெருக்கோடு.

ஆனால் உஷாவோ இதை அனைத்தையும் என் கடன் பணி செய்வதே என்ற ஒரு மனபாண்மையோடே செய்து கொண்டிருந்தாள். கிரி அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

உஷாவின் சித்தியும் அவளையே கவனித்து கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ, “கண்ணு பழசை நினைச்சு வருத்திக்காத. நம்ம சந்தோஷம் நம்ம கைல தான். நீயும் சந்தோஷமா இரு. கிரி தம்பியையும் சந்தோஷமா வச்சிக்கோ.”, என்றார். “ஒரு ரெண்டு வார்த்தை நீ அவரோட நல்லபடியா பேசுனா சந்தோஷமா ஊருக்கு போவாங்க கண்ணு.”, என்றார். “செய்வியா.”, என சரி என்பது போல் தலையசைத்தாள். கோவை வந்த பிறகும் கிரியின் பின்னோடு துரத்தினார், “ஏதாவது தம்பிக்கு தேவையா இருக்கான்னு கேளு. போய் அவங்களுக்கு உதவி செய்.”, என்று விரட்டினார். அவள் முகம் சுளித்தாலும் விடவில்லை.

அருணும் நந்தினியும் இதை பார்த்தும் பார்க்காதவர்கள் போல், மற்றொரு பக்கம் அவளை ஏதாவது வேலை சொல்லி அவனிடத்தில் ஏவினர். விஸ்வநாதன் விருந்தினர்களை உபசரிக்கும் சாக்கில் சாம்பவியை அவரை விட்டு நகராமல் பார்த்து கொண்டார்.  ரூமிற்குள் பேக் செய்ய கிரி போக அவளையும் பின்னோடு செல்ல வைத்தனர்.

கிரி எடுத்து வைத்தது சரியாக இருக்கிறதா என சரி பார்க்க. “நான் ஹெல்ப் பன்னாட்டும்மா.”, என்றாள் தயங்கி. “ஹப்பா மூணு நாள் கழிச்சி என்னோட பேச உனக்கு மனசு வந்துடுச்சா.”, என்றான். அதற்கு பதில் சொல்லாமல், “ஹெல்ப் பன்னவான்னு கேட்டேன்.”,

“இல்லை முடிச்சிட்டேன். கிளம்பவா.?”, என்றான் அவளை பார்த்து. ஏனோ உஷாவிற்க்கு அழுகை வருவது போல தோன்ற. மெதுவாக தலை அசைத்தாள். அருண் அவன் லண்டன் ட்ரிப்பை சிறிது தள்ளி போடுமாறு சொல்லிக்கொண்டு இருக்கும் போதே யாருக்கும் தெரியாமல் அடமாக மறுத்து அவனை கிளம்ப சொன்னதே அவள் தான். ஆனால் இப்போது ஒரு மாதிரியாக இருந்தது.

“இருந்துப்பே தானே.?”, என்றான். அதற்கும் தலை மட்டுமே அசைத்தாள். குழந்தைகளை அவளுடனே சென்று பார்த்தான். சாம்பவி அவன் சொல்லிக்கொண்ட போது சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. அது அவனை வருத்தபடுத்தியது.

   ஒரு வழியாக திரும்பி திரும்பி பார்த்தவாறு அனைவரிடமும் விடை பெற்று அவன் கிளம்பினான். அவன் கிளம்பிய பிறகு இன்னும் சற்று  சிரித்த முகமாக அவனை வழி அனுப்பி இருக்கலாமோ என்று உஷாவிற்கு தோன்றியது. வந்த உறவுகள் அனைவரும் இருக்க. கிரி அன்று மதியமே கோவையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக வந்து. இரவு லண்டன் செல்லும் விமானத்திற்கு செக்கின் செய்ய வெயிட் செய்து கொண்டிருந்தான்.

. இரண்டு மாதங்களுக்கு முன் தான் என்ன நினைத்து வந்தோம். இப்போது எப்படி செல்கிறோம். என்று அவன் சிறிது நீரஜாவை நினைத்து அப்செட்டாக யோசித்து கொண்டிருக்கும்போதே.

“கொஞ்சம் சிரிச்சா நீ நல்லாதான் இருப்ப. அதனால சிரிச்ச மாதிரி இரு. GEM மாதிரி இருக்காத……………….”, ப்ரத்யு……………… என மெசேஜ் வர,

இவள் என்னடா ஜென்டில்மேன் அப்பியரன்சை குறை சொல்லுகிறாள்………. என அவன் யோசித்து கொண்டிருக்கும்போதே,

“இல்லாத மூளைய குழப்பாதீங்க……….GEM னா GINGER EATING MONKEY ன்னு அர்த்தம், அதாம்பா இஞ்சி தின்ன குரங்கு.” என பிரத்யுவிடம் இருந்து மெசேஜ் வர. அவன் முகம் புன்னகையில் மலர்ந்தது.

 அவன் அவளுக்கு போன் செய்ய நினைக்கும் போதே, அடுத்த மெசேஜ் வந்தது. “போன் செய்யாதீங்க. நான் என் குழந்தைங்களோட பிஸி. சிரிச்சிட்டியா. இல்லையா. டேக் கேர். பை. ப்ரத்யு”, என மறுபடியும் மெசேஜ் வர, புன்னகையுடன் போனை சுவிட்ச் ஆப் செய்து செக்கின் செய்தான்.  

Advertisement