Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

நந்தினிக்கு பயமாக இருந்தது. அவள் பாவமாக முகத்தை வைத்து அருணை பார்க்க,“நம்ம செய்யறதுக்கு இதுல ஒண்ணுமில்லை. வா ரொம்ப யோசிக்காதே………………. அன்னு வை கவனி……………”, என்று அழைத்துக்கொண்டு போனான்.

கிரி நிறைய நேரம் லாயரோடு பேசி கொண்டு இருந்தான். பிறகு இந்த ஒரு மாத பழக்கமாய் வழக்கம் போல் பார் நோக்கி தானாகவே அவனுடைய கார் சென்றது.

அன்று இரவும் அவன் வீட்டுக்கு வந்த போது இரவு மணி ஒன்றை தொட்டிருந்தது. நந்தினியும் சாம்பவியும் உறங்கி இருக்க விஸ்வநாதனும் அருணும் அவனுக்காக காத்திருந்தனர்.

அவர்கள் அவனோடு பேச அமர்ந்திருந்தாலும் அவன் பேசும் நிலையிலேயே இல்லை. பேச முயன்றபோது கூட, “நான் பாத்துக்கறேன். நீங்க ப்ரத்யு விஷயம். எதுலயும் தலையிடாதீங்க அப்பா”, என்றான் பெருமூச்சோடு.

அவனால் மாடியேரகூட முடியவில்லை. அப்படியே சோபாவில் சரிந்தான்.  அவனுடைய அப்பா அவனுடை டிரெஸ்ஸை சிறிது தளர்த்தி அப்படியே அவனை படுக்க வைத்தார்.

அருண் அவரை பார்த்து, “நந்தினிக்கு சொன்னதே தான் உங்களுக்கும். மாமா இதுல நம்ம சொல்றதுக்கோ. செய்யறதுக்கோ. ஒண்ணுமில்லை வாங்க.”, என்றான்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் ஆபீசில் நிறைய பேர்கள் இல்லை. மிகவும் முக்கியமான ஆட்கள் தேவைக்கு என்று கிரியால் வரவழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இருந்தனர். எல்லோருக்குமே வேலைகள் கொடுத்திருந்தான்.

லாயர் மிக சில பேப்பர்ஸ் மட்டுமே ரெடி செய்திருந்தார். கிரியிடம் சொல்லியிருந்தார். “என்ன பர்டிகுலர்ஸ் அவங்ககிட்ட இருக்குன்னு பார்த்துட்டு தான் பண்ண முடியும்”, என்று.

நந்தினியிடம்,“உஷாவிடம் இருக்கும் எல்லா பேப்பர்ஸ்ம் வேணும். நீயும் மாமாவும் அவளோடவே போய் அதை எடுத்துக்கிட்டு அவளை கூட்டிட்டு வந்துடுங்க………….”, என்றான்.

நந்தினி உஷாவிடம் விவரங்களை கூற………………. அவளுடனே ஊருக்கு சென்ற உஷா எல்லாவற்றையும் எடுத்து நந்தினியிடம் கொடுத்துவிட்டு,“நீங்க போங்க நான் வரலை”, என்றாள். என்ன சொல்லியும் சிறிதளவு கூட அசையவில்லை.

 நந்தினி கிரியிடம் பேச,“வரலைன்னா விட்டுடு. ஆனா எப்போ கூப்பிடறோமோ அப்ப வந்து சைன் பன்னுவாளான்னு கேளு…………….”, என்றான். எதுவும் நேரடியாக அவன் உஷாவிடம் பேசவேயில்லை.

நந்தினி உஷாவிடம் கேட்க சரி என்பது போல் தலையாட்டினாள்.

அருண் உஷாவிடம்,“உனக்கு இதுல ஏதாவது இஷ்டமில்லையா. நீ வேற ஏதாவது ஆப்ஷன் வெச்சிருந்தா சொல்லும்மா………. நாங்க இருக்கோம் உனக்கு………”, என்றான்.

ஒன்றும் தேவையில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினாள்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளால் எதுவும் பேச முடியவில்லை. இது எல்லாவற்றையும் அவளது சித்தியும் கலைவாணியும் கணேஷும் பார்த்துகொண்டு இருந்தார்கள். ஆனால் அவளை எதுவும் கேட்கவில்லை.

அருணும் நந்தினியும் சென்ற பிறகு ஒரு அமைதி வீட்டில் நிலவியது. யாரும் எதுவும் பேசவில்லை. அவளை அணுகவே எல்லோருக்கும் யோசனையாக இருந்தது.

பலமான யோசனையில் இருந்தாள் அவள். அவளுடைய சொத்து விஷயம் என்பதால் யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதுவுமில்லாமல் அவர்களுக்கு முழுமையாக விவரங்கள் தெரியவில்லை.

மறுநாள் இருந்து எல்லாம் வழக்கம் போல் நடந்தது. அங்கே சென்று வந்ததால் பாட்டியின் ஞாபகம் அவளுக்கு அதிகமாக இருந்தது. திடீரென அவளுக்கு அங்கே பிடிக்காமல் போனது. தன்னுடைய சிறு முக சுனக்கமும் சித்திக்கும் கணேஷிர்க்கும் மிகுந்த வருத்தத்தை கொடுக்கும் என தெரிந்ததால் சிரமப்பட்டு எதையும் முகத்தில் கொண்டு வராமல் ஒரு வகையான அமைதி காத்தாள்.

ஆனால் ஏனோ வேலைக்கு போக உஷாவிற்க்கு விருப்பமில்லை. சித்தியிடம் சிறிது நாட்களுக்கு தான் வரவில்லை என தயங்கி தயங்கி கூற. “அதுக்கென்ன கண்ணு. நீ எப்படி சொல்றியோ அப்படிதான். நீ நான் இருக்குற வரைக்கும் எதுக்கும்  கவலைபடாத.”, என்றார். 

கணேஷிற்க்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு நெருங்கி விட்டதால் அவன் அதில் மூழ்க உஷா தன்னையே தனிமை படுத்திகொண்டாள். கணேஷ் அவளிடம் ஏதாவது பேச வரும்போது பேச்சை படிப்பு சம்பந்தமாய் திசை திருப்பி விடுவாள்.

அவனுக்குமே அது அவனுடைய எதிர்காலம் என்பதால் எதுவாக இருந்தாலும் பரீட்சை முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டான்.

இப்படியே ஒரு மாதம் செல்ல. இதனிடையில்  நந்தினியும் அருணும் தினமும் ஒரு முறை அவளிடம் பேசிவிடுவர். அவர்கள் பேசுவதற்கு பதில் கொடுப்பாள். மற்றபடி அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள்.

வாரம் ஒரு முறை குழந்தைகளை தூக்கிகொண்டு அவளை பார்க்க வந்து விடுவர். ஓரிரண்டு மாதமே ஆன சிறு குழந்தைகள். அவளுக்கு குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அவர்களை கஷ்டப்படுத்துவதை அவள் விரும்பவில்லை.

 இங்கே அவர்களுக்கு வசதி குறைவு கூட்டி வர வேண்டாம் என்று கூறினாலும். வந்து காலையில் இருந்து மாலை வரை இருந்து செல்வர். அங்கே இருக்கும் போது குழந்தைகளை முற்றிலுமாக அவளே கவனிக்கும் படியாக பார்த்துகொள்வர்.

 ஆனால் குழந்தைகள் அந்த சூழ்நிலையில் இருப்பதை உஷா விரும்பவே மாட்டாள். அவளுடைய வீடு அது. அங்கே அவள் இருந்தாலும் குழந்தைகள் அங்கே கஷ்டப்படுவதாகவே தோன்றும். ஏ ஸி யில் இருக்கும் குழந்தைகள் இங்கே பேன் காற்று பற்றாமல் அழுதபடியே இருக்கும்.

அங்கே அவர்களுக்கு தண்ணீரை கொதிக்க வைத்து. பால் கலக்கி. அவளுக்கு பயமாக இருக்கும். உடம்பிற்கு ஏதாவது வந்து விட்டால் என்ன செய்வது என்று. , அவர்களுக்கு தொட்டில் தன்னுடைய  காட்டன் புடவையால் கட்டுவாள்.

 அருண் வரும் போதெல்லாம் அவளுக்கு ஏதாவது வாங்கி கொண்டு வருவான். முதலிலேயே அவளிடம் கூறிவிட்டான். இதற்கும் அவள் வீட்டிற்கும் சம்பந்தமில்லை. இது தன்னுடையது அதனால் மறுக்க கூடாது என்று. அவன் அவளுக்கு மட்டும் வாங்கி வர மாட்டான், கணேஷிர்க்கும் கலைவானிக்கும் சித்திக்கும் வாங்கி வருவதால் அவளுக்கு மறுக்க வழியில்லாது போனது. பார்பதற்க்கு எளியது போன்று தோன்றினாலும் எல்லாமே மிக விலை உயர்ந்த பரிசுகள். எல்லாமே அவர்கள் உடனே உபயோகிப்பதற்கு ஏதுவாக அவர்களுடைய தோற்றத்தில் மாற்றம் கொண்டு வரும்படியாக உடைகள் நகைகள் என இருக்கும்.

     அவர்களுடைய கன்செர்நின் விவரங்களை எல்லாம் கொண்டு வருவான். அதனுடைய வளர்ச்சி இத்தனை வருடங்களில் எவ்வளவு முன்னேறியுள்ளது எப்படி முன்னேறியுள்ளது இதெல்லாம் அவளுக்கு தெரியுமாறு பார்த்துகொண்டான். ஆனால் இத்தனை நாட்களில்  கிரி அவளிடம் பேசவோ பார்க்கவோ முயலவில்லை. அது அவன் மேல் அவளுக்கு உள்ள கோபத்தை அதிகப்படுத்தியது. வேலை முடிந்த உடனே பழைய மாதிரி அவளை பார்க்க வராமல் புத்தியை காட்டி விட்டான் என்று தோன்றியது. 

ஆனந்த்திற்க்குமே எப்படி அவளை தொடர்பு கொள்வது என தெரியவில்லை. ஒரு நாள் அவள் சித்தியிடமே பார்த்து ஏன் அவள் வருவதில்லை. உடம்பிற்கு ஏதாவது தொந்தரவா என கேட்க அதெல்லாம் இல்லை என்று விட்டார் அவர். தான் அவளுடைய பாமிலி பிரன்ட் தான். ஒரு முறை அவளை பார்க்க விரும்புவதாக கூற. சித்தி அவளிடம் அவன் கேட்டதாக கூற. உஷா தான் யாரையும் தற்போது பார்க்க விரும்பவில்லை. கட்டாயம் பிறகு பார்ப்பதாக கூறி விடுங்கள் என்றாள்.

ஆனந்திற்கு இத்தனை நாட்கள் வேலைக்காகவாவது அவள் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். தற்போது சுத்தமாக அவள் வீட்டை விட்டு வெளியேவே வருவது இல்லை என புரிந்தது.

வேலைக்கு போன சமயத்தில் கூட ஞாயிறு ஆனால் லைப்ரரி சென்று ஒரு வார தகவல்களையும் அறிந்து கொள்வாள். இயல்பிலேயே மிக புத்திசாலி என்பதால் எல்லா விஷயங்களையும் சீக்கிரம் கிரகித்து கொள்வாள். மொழியும் அவளுக்கு பிரச்சனையில்லை. ஆங்கிலம் அவளுக்கு தண்ணீர் பட்ட பாடு.

ஆனால் அவளுக்கு தற்போது தன்னை தானே அமைதி படுத்திக்கொள்வது முக்கியமாக தெரிந்தது. மிகுந்த மன போராட்டத்தில் இருந்தாள் அவள். இவ்வளவு நாட்களாக யாரும் அவளை பார்க்கவில்லை என்றாளும். அவள் எந்த சொத்துக்களையும் உபயோகிக்கவில்லை என்றாளும். பணம் தேவையாக இருந்தபோது கூட அவள் அதிலிருந்து எடுக்கவில்லை என்றாளும். அந்த கன்செர்ன் பற்றி அவளுக்கு தெரியவில்லை என்றாளும். அவளொரு மேஜர் ஷேர் ஹோல்டர் என்று அறிந்திருந்தாலும். அவள் எதையும் பொருட் படுத்தியதில்லை என்றாளும். எல்லாம் அவளுடையதாகவே இருந்தது.

ஆனால் இனி எதுவும் அவளுடையது இல்லை.

ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் சொத்துக்காகவாவது கிரி அவளை தேடி வருவான் என எதிர்பார்த்தாள். ஆனால் தற்போது தான் எடுத்திருக்கும் இந்த முடிவு சரியா தவறா புரியவில்லை. தன்னுடைய அப்பாவிற்கு மரியாதை குடுத்து தான் அதிலிருந்து எதுவும் உபயோகிக்கவில்லை என்றாளும் பாட்டிக்காக எல்லாம் அவளுடயதாகவே வைத்திருந்தாள்.

தற்போது தான் எடுத்திருக்கும் இந்த முடிவு பாட்டிக்கு தான் செய்யும் மரியாதையில்லை என்பது போல் உணர்ந்தாள். எல்லாவற்றையும் கொடுத்து விட்டு தான் ஒன்றுமில்லாமல் நிற்பதா. குழப்பத்தின் உச்சியில் இருந்தாள் அவள். இதற்க்கெல்லாம் காரணமான கிரி மீது அளவில்லாத கோபம் பொங்கியது.

இதற்கிடையில் அருண் வந்த போது இந்த வாரம் அநேகமாக தானும் நந்தினியும் அமெரிக்கா கிளம்புவதாக கூறினான்.  அங்கே அவர்களுக்கு ஹோட்டல் பிசினஸ் இருந்தது. அவர்களுடைய குடும்பம் செயின் ஆப் ஹோட்டல்ஸ் நடத்தி வந்தனர். அதுவுமில்லாமல் லிக்கர் பிஸினஸ் தற்போது ஆரம்பித்திருந்தனர். அதனால் அவனுடைய தந்தை அங்கே தனியாக சிரமப்படுவதால் தான் கிளம்புவதாக கூறினான்.

அவளுக்கு என்ன தேவை என்றாளும் சிறு பிரச்சனை என்றாளும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கூறினான். அவள் தன்னுடைய வாயால் சரி என்று சொல்லும் வரை விடவில்லை.

அன்று நந்தினி அவளை கடைவீதிக்கு கூட்டி சென்று அவள் மறுக்க மறுக்க அவளுக்கு உடைகள் நகைகள் என அவளுக்கு தேவையானதை வாங்கி குவித்து விட்டாள். அவள் மறுத்தும் ஒரு பயனும் இல்லை. ஏன் செருப்பை கூட பாக்கி விடவில்லை அதை கூட வாங்கி விட்டாள். அவளுக்கு மட்டுமல்லாது வீட்டில் உள்ள எல்லோருக்குமே வாங்கினாள்.

அன்று தான் பரீட்சை முடிந்ததால் அவளுடன் கணேஷும் வந்திருந்தான். அவன்  மறுக்க மறுக்க ஏன் நீ சம்பாதிக்கும் போது எனக்கு வாங்கிகுடுக்க மாட்டாயா என பேசி அவன் மேலும் பேசுவதற்கு இடமில்லாமல் செய்து விட்டாள்.

உஷாவிற்க்கு அவள் செல்வதில் என்ன வருத்தம் என்றாள், குழந்தைகளை இனி எப்படி பார்ப்பது என்று தான். ஆனால் அதை வெளியே அவள் சொல்லவில்லை. எல்லாவற்றிற்கும் அவளுடைய இயல்புக்கு மாறாக மெளனம் காத்தாள்.    

அவர்களும் கிரியை பற்றி ஒன்றும் கூறவில்லை. இவளும் கேட்கவில்லை.

மிகுந்த யோசனைக்கு பிறகு, அவர்கள் கிளம்புவதாக கூறும்பொழுது நந்தினியிடம், “அக்கா என்கிட்ட இருந்து டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டு போனீங்களே. என்னோட சைன் எதுவும் தேவையில்லையா.”, என்றாள்.

“தெரியல்லையே அன்னு . அதை வாங்குனதுக்கு அப்புறம் அதைப்பற்றி கிரி என்கிட்ட எதுவும் பேசவேயில்லை. நான் கேட்டப்ப கூட நான் பாத்துக்கறேன் அப்படின்னு சொல்லிட்டான். லண்டன் ப்ராஜெக்ட்ல பிஸியா இருக்கறதால ரொம்ப பேச முடியல.”,  என்றாள்.

“எந்த ஸ்டேஜ்ல இருக்கு.”, என்றாள் உஷா.

அதற்கு அருண், “நெக்ஸ்ட் மன்த் எண்ட்ல சைன் ஆகுது.”, என்றான். “அதனால கூட நான் இப்போ அவசரமா ஊருக்கு போறேன். அது சைன் ஆகும்போது கட்டாயம் நான் அங்க இருக்கனும்னு கிரி சொல்லியிருக்கான்.”, என்றான். பிறகு அவளிடம் விடைபெற்று இருவரும் கிளம்பினர்.

உஷா முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாளும். மிகுந்த வருத்தமாக உணர்ந்தாள். தன்னிடம் இந்த கிரி ஒரு வார்த்தை கூட கூறவில்லையே என்று. அவள்தான் தன்னை கிரி தொடர்பு கொள்ள கூடாது என்று கூறி இருப்பதையே மறந்துவிட்டாள்.

வாழ்க்கையில் இப்போது தான் என்ன மாதிரி சூழ்நிலையில் இருக்கிறோம் என்ன செய்யபோகிறோம். ஒன்றும் புரியவில்லை. கிரியிடம் ஒரு ஆவேசத்தில் கூறிவிட்டாள் தான் யாரையாவது கல்யாணம் செய்துகொண்டு நன்றாக இருக்கபோவதாக.

தன்னால் யாரையாவது திருமணம் செய்ய முடியுமா தெரியவில்லை. பிறந்ததிலிருந்து எப்படி குழந்தைகளுக்கு, இது அப்பா. அம்மா. என்று அடையாளம் காட்டப்படுகிறார்களோ, அது போல் நீ திருமணம் செய்துகொள்ளபோகிறவன். என்று அடையாளம் காட்டபட்டதால், அவள் மனதளவில் வேறு யாரையும் சும்மா கூட நினைத்ததோ. இல்லை கம்பேர் செய்ததோ கிடையாது. அவன் திருமணம் செய்துகொண்டபோது கூட அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒன்றும் தோணவில்லை. இப்போது அவனை பார்த்த பிறகு அவனிடத்தில் யாரையாவது வைக்க முடியுமா என்று தோன்றவேயில்லை.

பரீட்சை முடிந்ததில் இருந்து கணேஷ் உஷாவை மட்டுமே அவள் அறியாதவண்ணம் பார்த்துகொண்டிருந்தான். அவளுடைய முகத்தில் இருந்து ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் அவனுக்கு தோன்றியது அவள் புயலையே உள்ளடக்கி வைத்திருப்பது போல.

அருணும் நந்தினியும் சென்றபிறகு மெதுவாக அவளருகில் வந்தான். “அக்கா ப்ளீஸ் என்ன நடக்குதுன்னு சொல்லுங்களேன்.”, என்றான்.

ஒன்றுமில்லை என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.“என்ன டாகுமென்ட்ஸ் அது நீங்க நந்தினிக்கா கிட்ட கொடுத்தது. “,

“அவங்க ப்ரோபெர்ட்டி டாகுமென்ட்ஸ். “,

“அவங்க ப்ரோபெர்ட்டி டாகுமென்ட்ஸ். ஏன் உங்க கிட்ட இருந்தது. “.

“என் பேர்ல இருந்தா என்கிட்ட தானே இருக்கும். “, என்றாள்.

“உங்க பேர்ல இருந்ததா. “, என்றான் ஆச்சர்யமாக. “உங்க பேர்ல இருந்தா ஏன் குடுத்தீங்க. அது எப்படி அவங்களது ஆகும்.?”.

உஷா பதில் பேசவில்லை.

சட்டென்று அவள் கையை எடுத்து தன் தலை மேல் வைத்த கணேஷ், “இதுக்கு நீங்க உண்மையா பதில் சொல்லனும். ஏன் குடுத்தீங்க.?”,என்றான்.

அதற்கு கூட அவள் பதில் பேசவில்லை. “இந்த மாதிரி எல்லாம் செய்யாதடா. “, என்று அவனிடம் கத்தினாள்.

“அப்ப பதில் சொல்லுங்க. “, என்று கணேஷும் பதிலுக்கு கத்தினான்.

“சொல்லமுடியாது போ.”, என்றாள்.

மறுபடியும் சட்டென்று இந்த முறை தனது அஸ்திவாரத்தை மாற்றினான் கணேஷ்.

“அக்கா ப்ளீஸ். என்கிட்ட சொல்லுங்களேன்.”, என்றான் பணிவாக. “நீங்க என்னை உங்க தம்பியாகவே நினைக்கலையா.”, என்றான். “உங்களை யாராவது ஏமாத்திடுவாங்கன்னு தானே கேட்கிறேன்.”, என்றான்.

உஷா இதற்கு அவனை பார்த்து கோபமாக முறைத்தாள்.

“சரி சரி முறைக்காதீங்க. உங்களை யாரும் ஏமாத்த முடியாது. ஆனா நீங்களே ஏமாந்து போயிடுவீங்க.”, என்றான் அவளை பார்த்து எரிச்சலாக.

“இவ்வளவு பேசறேன் பதில் சொல்லலைன்னா என்ன அர்த்தம். அப்போ நாங்க பிடிங்கிப்போம்னு நீங்க குடுத்தனுப்பிடீங்களா.”, என்றான்.

“டேய் ஏண்டா என்னை இப்படி டார்ச்சர் பண்ணறே.”, என்றாள்.

“அப்போ பதில் சொல்லுங்க. உண்மையா சொல்லுங்க. பொய் சொல்லாதீங்க. நான் கண்டுபிடிச்சிடுவேன்.”, என்றான்.

இதையெல்லாம் அந்த பக்கம் இந்த பக்கம் நடந்து கொண்டே கலைவாணியும் அவனது அம்மாவும் பார்த்துக்கொண்டே தான் இருந்தனர். ஆனால் யாரும் தலையிடவில்லை.

சளைக்காமல் அவளிடம் கேள்விகளை அடுக்கி கொண்டே இருந்தான்.

“டேய் என்ன விட்டுடா.”, என்றாள் சலிப்பாக உஷா.

“ஒரே ஒரு பதில் உண்மையா சொல்லுங்க விட்டுடறேன்.”, என்றான். “ஏன் அவங்களுக்கு குடுத்தீங்க.”, என்றான் கூர்மையாக.

“கிரி மாமா கேட்டாங்க. கொடுத்தேன்.”, என்றாள் கடைசியாக.

ஆனாலும் கணேஷ் அவளை விட்ட பாடில்லை. “அவங்க கேட்டா நீங்க ஏன் குடுக்கணும்.”, என்றான்.

உஷா அமைதியாக இருந்தாள்.

“பதில் சொல்லுங்க. சும்மா அமைதியா இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காதீங்க. அவங்க கேட்டா நீங்க ஏன் குடுக்கனும். இத்தனை நாளா வராத அந்த மாமா தீடீர்னு எங்கே இருந்து வந்தாங்க. எங்க கிட்ட ஏதாவது நீங்க இதுவரைக்கும் சொல்லியாவது இருக்கீங்களா. நான் தான் முட்டாள் மாதிரி என்னோட அக்கான்னு இருந்துட்டேன்.  ”, என்றான் கோபமாக.

 இப்படி பலவிதமான வார்த்தைகளை உபயோகித்து அவளுடைய டென்ஷனை அதிகப்படுத்தி அவளை பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளினான். 

ஒரு கட்டத்தில் இதற்கு மேல் பொறுக்க முடியாது “கிரி மாமாக்கு இல்லாதது எதுவுமே என்கிட்ட கிடையாது.”, என்று அவனை பார்த்து கத்தினாள். பரவாயில்லை கணேஷ் சிறிது தூரத்தில் நின்றிருந்தான் பக்கத்தில் இருந்தான் காட்டாயம் அடி வாங்கி இருப்பான்.

“பதில் போதுமா. இனிமே இது விஷயமா என் கிட்ட எதுவும் நீ கேட்க கூடாது போடா.”, என்று இடத்தைவிட்டு நகர்ந்து மொட்டை மாடிக்கு போய் அமர்ந்து கொண்டாள். 

“டேய் ஏண்டா இப்படி. அவளை தொந்தரவு பண்ணாத அவ என்ன பண்ணா என்னடா. “,  என்றார் அவனுடைய அம்மா அவனை பார்த்து.

“சும்மா இருங்கம்மா அப்படியே அக்காவை  விட்டுட முடியாது. நான் பாத்துக்கறேன். நீங்க அவங்களை ரொம்ப கொஞ்சாம வேலையை பாருங்க. ஒரு பதிலை வாங்கறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். அவளும் அப்பா மாதிரியே பிழைக்க தெரியாதவ. சும்மான்னு நினைக்கறீங்களா, அது எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் தெரியுமா. லண்டன்ல கூட ஏதோ கம்பெனி வாங்க போறாங்க. என்ன ஏதுன்னு ஒரு மண்ணும் தெரியல. இவங்க கிட்ட என்ன இருந்தது. ஏன் குடுத்தாங்க. என்ன குடுத்தாங்க தெரியலை.”.

“அதுக்காக நம்ம என்னடா செய்ய முடியும். “.

“ஏதாவது செய்யணும் அப்படியே வீட்டுட முடியுமா. பயப்படாதீங்க நானும் எங்க அப்பா  மாதிரி பிழைக்கதெரியாதவன் தான் . நான் அவங்களுக்காக மட்டும் தான் சொல்லறேன். அதுல இருந்து நான் ஒரு சின்ன ஆதாயம் கூட எடுக்க மாட்டேன்.”, என்றான் கோபமாக.

“டேய் தம்பி. இப்படி கோபப்பட்டா எப்படிடா.”, என்றார் வருத்தமாக.

“அப்போ அமைதியா இருங்க தலை இடாதீங்க.”, என்றான்.

மேலே போனான். உஷா நின்றபடி வானத்தை வெறித்தபடி நின்றிருந்தாள்.

அவளுடைய நிராதரவான அந்த தோற்றம் அவனுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. “அக்கா கோபமா.”, என்றான்.

“இல்லை.”, என்பது போல் தலையசைத்தாள்.

“என்ன பண்ணலாம்.”, என்றான்.

“புரியலை நீ எதை பத்தி பேசற.”, என்றாள்.

“உங்க லைப் பத்தி தான்.”, என்றான்.

மெலிதாக புன்னகைத்தாள், “டேய் கிழவா, அதை பத்தி அப்புறம் பேசலாம். இப்போ ஏதாவது சாப்பிடலாம் வா.”, என்றவாறு அவனை கீழே அழைத்து கொண்டு போக பார்த்தாள்.

“அக்கா பேச்சை மாத்தாதீங்க ப்ளீஸ். என்ன பண்ணியிருக்கீங்க. என்ன பண்ண போறீங்க.”.

“டேய் நேத்து தான் எக்ஸாம் முடிச்ச. ஜாலியா இருப்பியா. அதை விட்டுட்டு ஏன் இப்படி என்ன கேள்வியா கேட்டு கொல்ற. அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏன்னா என்ன பன்னபோறேன்னு எனக்கே தெரியாது வா. பேசாம கொஞ்சம் ரெஸ்ட் எடு.”, என்று அவனை இழுத்துக்கொண்டு கீழே போனாள். அதற்கு பிறகு அவனுக்கு பேச அவள் சந்தர்ப்பமே அளிக்கவில்லை.

எதையும் அப்படியே விட்டுவிட்டால் அவன் உஷாவினுடைய தம்பி அல்லவே.

அடுத்த நாள் காலை எழுந்தவுடனே, “பிரண்ட்ஸ்சோடா இன்னைக்கு ப்ரோக்ராம் இருக்கு. போனா வர எவ்வளவு நேரம் ஆகுதோ தெரியாது”, என்றான். “நான் போயிட்டு வரவா.”, என்றான் வீட்டில்

அவனுடைய அம்மா உஷாவை பார்க்க, “எங்கே ப்ரோக்ராம்.”, என்றாள்

“கல்லாறு.”, என்றான். அது மேட்டுப்பாளையம் பக்கம் இருக்கும் நீரோட்டமுள்ள ஒரு சுற்றுலா ஸ்தலம்.

உஷா அவனை சந்தேகமாக பார்க்க, அதை சிறிது கண்டு கொள்ளாமல் முகத்தில் சிறு வித்யாசமும் காட்டாமல், “போய் வரவா.”, என்றான்.

“போகட்டும் சித்தி.” என்றாள். இங்கே இருந்தாள் அவளிடம் ஏதாவது கேட்டுகொண்டே இருப்பான் என்றாளும் அவன் அங்கே தான் போகிறானா என்ற சந்தேகம் இருந்தது.

அவனிடம் கேட்டு வைத்தால் அவன் அதையே செய்வான் என்பதால் என்ன நடந்தாளும் பார்த்துக்கொள்லாம் என்று, “போயிட்டு வா.”, என்றாள். 

கிரியை பார்க்க கணேஷ் கிளம்பி விட்டான். ஆனால் எங்கே செல்வது எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.

முதலில் கோவை செல்வோம் என்று அங்கே இருக்கும் பேருந்தில் ஏறிவிட்டான். செல்லும் வழியெல்லாம் ஒரே யோசனையாக இருந்தது.

தெரிந்த அக்காவே ஒன்றும் சொல்லவில்லை தெரியாத இவரிடம் சென்று என்ன பேசப்போகிறோம் என்று ஒரே யோசனையாக இருந்தது.

பஸ் விட்டு இறங்கினவுடனே அங்கே உள்ள ஒரு கடையில் கிரி குரூப் ஆப் இண்டஸ்ட்ரிஸ்க்கு இன்டர்வியூ வந்ததாகவும் லெட்டர் தொலைந்து விட்டதால் முகவரி தெரியவில்லை என. அவர்கள் அங்கே செல்லும் பஸ்ஸை காட்டி கொடுத்தனர்.

இறங்கி அங்கே கட்டிடத்தை பார்த்தவுடனே மூச்சடைத்தது. ஐந்து மாடி கட்டிடம் மிகப்பெரிய காம்பவுண்ட் சுவருக்கு மேலே வெளியே தெரிந்தது. இதையா அக்கா வேண்டாம் என்கிறாள், ஐய்யோ என தோன்றியது.

காலை நேரம் என்பதால் அங்கே வேலை பார்பவர்களின் வண்டிகள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். எல்லோரம் கேட் அருகே நின்று செக்யூரிட்டிகள் வண்டி நம்பர். வேலை பார்பவர்களா. இல்லை வெளியாட்களா. என்று பார்த்தபிறகே அனுமதிக்க பட்டனர். நடந்து யாருமே வரவில்லை. மிகப்பெரிய வளாகம் உள்ளே விடுவார்களா  தெரியவில்லையே நினைத்தான்.     

அவன் நினைத்தது போலவே வாசலில் இருந்த செக்யூரிட்டி ஆயிரம் கேள்வி கேட்டான். யார் அவன், எங்கே இருந்து வருகிறான், யாரை பார்க்க வேண்டும், அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா.

கணேஷ் தடுமாறினான். “கிரி சாரை பார்க்க வேண்டும்.”, என,

“நீ யார்.”, என்றனர். ஒரு வகையாக, “அவருடைய ரிலேடிவ்.”, என்றான்.

கிரி சாருடைய ரிலேடிவ் இப்படி நடந்து இவ்வளவு சாதாரணமாக வருவானா சந்தேகமாக பார்த்தனர்.

அங்கே இருந்த ஒரு செக்யூரிட்டி அவனை மிரட்டவே ஆரம்பித்தான்.

பக்கத்தில் இருந்தவன் கணேஷ் முகத்தில் என்ன பார்த்தானோ.  “தம்பி நீ கொஞ்சம் சும்மாயிரு.”, என அந்த செக்யூரிட்டியை அடக்கி, “ஒரு வேலை நிஜமாவே சொந்தமா இருந்தா பிரச்சினை ஆயிடும்பா.”, என்றான்.   

அந்த சமயம் பார்த்து முத்து, அந்த வீட்டின் டிரைவர் வர அவனிடம் கேட்டார்கள். ஹாஸ்பிடலில் கணேஷை முத்து பார்த்திருந்ததால் கணேஷ் தப்பித்தான்.

ஆனால் முத்துவிற்கு ஏதோ அவசர வேலை இருந்ததால், அங்கே இருந்த செக்யூரிட்டியிடமே சேர்மநிர்க்கு நெருங்கிய சொந்தம் அவரிடமே அழைத்து போகுமாறு பணித்துவிட்டு சென்றான்.

அவர்கள் அவனை விஸ்வநாதன் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். கட்டிடத்தின் பிரமாண்டத்தை…………… அதன் அலங்காரத்தை………. அங்கே இருந்த மக்களை பார்த்துகொண்டே வந்ததனினால் எங்கே போகிறோம் என்று சரியாக கவனிக்கவில்லை. அவனுக்கு நினைவு எல்லாம் அவனுடைய அக்கா இதை மிஸ் செய்வதா என்பதிலேயே இருந்தது.

அவர்கள் விஸ்வநாதனுடைய செகரட்ரியிடம் இவர் சேர்மேனை பார்க்க வந்திருப்பதாக கூறி விட்டு சென்றனர்.

அப்பொழுது தான் அவன் முன்னே இருந்த கதவில் பேரை பார்க்க அது விஸ்வநாதன் என்றிருந்தது. அவன் கிரி சாரை பார்க்க வேண்டும் என்று சொல்லுவதற்கு முன்பாகவே உள்ளே அழைக்கப்பட்டு விட்டான். அங்கே இரண்டு பேர் அவனை செக் செய்து உள்ளே அனுப்பினர். இதிலேயே கொஞ்சம் பதட்டமாக உணர்ந்தான். 

என்ன சொல்லுவது என்று தெரியாமல் அவன் உள்ளே செல்ல……………. விஸ்வநாதன் அவனை யார் என்பது போல் பார்த்தார். ஓரிரண்டு முறை அவனை பார்த்திருந்தாலும் சட்டென்று அவனை தெரியவில்லை.

“நான் கணேஷ்………. உஷாக்காவோட தம்பி……………”, என்றான்.

இப்போது அவருக்கு தெரிந்தது, ஒரு முறை உஷாவிற்க்கும் சாம்பவி மிகப்பெரிய பிரச்சினை வந்தபோது அவன் உஷாவுடன் இருந்தான்.

என்ன என்பது போல் பார்க்க…………. அந்த பார்வையில் ஒரு அந்நியத்தன்மை தெரிந்தது.

“கிரி சாரை பார்க்க வந்தேன்…………….”, என்றான் ஒரு வாராக தைரியத்தை திரட்டி.

“எதுக்கு.”, என்றார் ஒற்றை வரியில். அவர் கேட்ட தொனி அவனுக்கு சிறிது பயத்தை கொடுத்தது.

என்ன சொல்லுவது என்று தெரியாமல், “அக்கா பார்த்துட்டு வர சொன்னாங்க.”, என்றான்.

மறுபடியும் அவர், “எதுக்கு.”, என.

“தெரியாது பார்த்துட்டு வர சொன்னாங்க.”, என்றான்.

அவர் உடனேயே கிரியிடம் பேச, “அனுப்பிவிடுங்கப்பா.”, என்றான்.

அவனை வெளியே இருக்கும்படி அனுப்பிவிட்டு, “எதுக்கு அவன் உன்னை பார்க்கணும். உஷா எதுக்கு அவனை அனுப்பியிருக்கா.”, என்றார்.

கிரி என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவருக்கு சிறிது டென்சன் ஆக இருந்தது.

“ஒண்ணுமில்லை பா அனுப்பிவிடுங்க.”, என்றான்.

கணேஷ் கிரியை பார்க்க போக. அவனுடைய கேபினுக்குள் நான்கைந்து பேர் இருந்தனர். ஏதோ சீரியசாக விவாதித்து கொண்டிருந்தனர்.

இவனை பார்த்தவுடன் மெலிதாக புன்னகைத்த கிரி, “உள்ளே இரு.”, என்றான்.

உள்ளே இது மாதிரியே பெரிய ரூம் இருந்தது. அதிலுள்ள சோபாவில் அமர்ந்து கொண்டான்.

இவ்வளவு நேரமாக இருந்ததை விட இப்போது டென்ஷனாக உணர்ந்தான். வந்து விட்டோம் என்ன பேச போகிறோம் என்று பதட்டமாக இருந்தது. விஸ்வநாதன் அவனை பார்த்த பார்வையே அவனுக்கு பயத்தை கொடுத்தது.

சாப்பிட. குடிக்க. என ஏதாவது கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை வந்து கொடுத்தார்கள், மறுத்தாலும் விடவில்லை.

“சர் பிஸி. வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும். வெயிட் பண்ண சொன்னாங்க.”, என்றார்கள்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் கழித்து தான் கிரியால் வர முடிந்தது. இன்னுமே அவனுக்கு முக்கியமான வேலைகள் இருந்தன. இருந்தாலும் கொஞ்சம் ப்ரேக் எடுத்து வந்தான்.

கணேஷிர்க்கு அவனை பார்த்தவுடனே பேச நினைத்தது எல்லாம் மறந்து போனது.   

அவனை உணர்ந்தவாறு கிரி அவனிடம் என்ன விஷயம் என்று உடனே கேட்கவில்லை. எப்படியிருக்க. எப்படி எக்ஸாம் எழுதியிருக்க. என்று அவனிடம் சாதாரணமாக பேசியவாறு அவன் ரிலாக்ஸ் செய்ய உதவினான்.

கணேஷிர்க்கு, விஸ்வநாதன் அவனிடம் அணுகிய முறைக்கும் கிரிக்கும் நன்றாக வித்தியாசம் தெரிந்தது. கொஞ்சம் ரீலீபாக உணர்ந்தான். எல்லாம் பேசிய கிரி. மேலே நீ பேசு, என்பது போல் அமைதியாக பார்த்தான்.

“அது வந்து.”, என ஆரம்பித்த கணேஷ். எப்படி பேசுவது என தெரியாமல், “நான் உங்களை டிஸ்டர்ப் பன்னறேனா.”, என்றான்.

“என்ன விஷயம். ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க. அப்பா  கிட்ட வேற மாத்தி சொல்லியிருக்க. ப்ரத்யு உன்னை அனுப்பினான்னு.”, என்றான் கிரி

கணேஷிர்க்கு ஆச்சர்யமாக இருந்தது. “உங்களுக்கு தெரியுமா அக்கா என்னை அனுப்பலைன்னு.”, என்றான்.

“ஏன் தெரியாம. அவ என்ன பண்ணுவான்னு. எனக்கு தெரியாதா. அவ அனுப்பியிருக்க மாட்டா.’, என்றான்.

“இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஆனா ஏன் நீங்க அவளை பார்க்க வரலை இவ்வளவு நாளா. இப்போ எதுக்கு வந்தீங்க. அக்கா எதுவும் என்கிட்ட சொல்லலை. ஆனா அவகிட்ட இருந்த எல்லாமே உங்க கிட்ட குடுத்துட்டான்னு நினைக்கிறேன். அவளோட எதிர்காலம்.”, என்றான் பபடவென்று.

“அட நீயும் ப்ரத்யு மாதிரியே பேசற. இத்தனை கேள்விகளை கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்.”, என்றான் ஒரு பெரு மூச்சோடு.

பிறகு என்ன நினைத்தானோ. “அவளோட எதிர்காலம் எப்படியிருக்கனும்னு நீ நினைக்கிற.”, என்றான்.

கணேஷ் அமைதியாகவே இருந்தான்.

“சொல்லுப்பா. என்கிட்ட சொல்ல எந்த தயக்கமும் வேண்டாம்.”, என்று அவனை ஊக்கபடுத்தினான்.

“அக்கா உங்க கிட்ட குடுத்ததெல்லாம் அவளுக்கே உரிமையாய் இருக்கனும்னு நினைக்கிறேன். ஆனா அவ என்ன குடுத்தான்னு கூட எனக்கு தெரியாது.”, என்றான்.

“அவ கிட்டயே கேட்கறது தானே.”, என

“பதிலே பேச மாட்டேங்கறாங்க. அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு அவளை பேச வச்சா. கிரி மாமாவுக்கு இல்லாதது என்கிட்ட எதுவுமே இல்லைன்னுட்டா.”, என்றான்.

கணேஷ் அந்த வார்த்தைகளை தெரிந்து தான் சொன்னான். கிரிக்கு அது தெரிய வேண்டும் என்று நினைத்தான்.

அந்த வார்த்தைகளை சொல்லும்போது அவன் கிரியின் முகத்தையே பார்க்க. அதில் ஒன்றுமே தெரியவில்லை.

“ப்ளீஸ் என்ன நடக்குது சொல்லுங்களேன்.”, என்றான் கணேஷ் கிரியை நோக்கி.

“உங்க அக்காக்காக பேச வந்திருக்க. உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியணும் தான். நான் எங்க வீட்லயே பார்த்தேன்……………. உங்க அம்மா அவளை நல்லா பார்த்துகிட்டாங்க. அவளுமே உங்களோட நல்லா பழகிட்டா. அவளை நீ நல்லா பார்த்துகிட்டு இருக்க. ரொம்ப அவ வெக்ஸ் ஆனப்போ நீ தான் அவளை பார்த்துகிட்டேன்னு அவளே சொன்னா. அதுக்காக சில விஷயங்களை நான் உனக்கு கிளியெர் பண்ண கடமைப்பட்டு இருக்கேன். கேட்டுட்டு சொல்லு என்ன பண்ணலான்னு…………”,

“ ப்ரத்யு இந்த கம்பெனியோட மேஜர் ஷேர் ஹோல்டர். எங்க அப்பாவை விடவும் அதிக உரிமை இருக்கு……………….இப்படி எங்க பாட்டி சொத்தை எழுதி வச்சிட்டாங்க. யோசிச்சுபார், எங்க அப்பாக்கு இல்லாத உரிமை அவளுக்கு இருக்குன்னு சொன்னா எங்க அப்பாவால அதை பொறுத்துக்க முடியுமா.”,

“அவர் இந்த வீட்டோட மூத்த வாரிசு. இந்த கம்பெனியை ரொம்ப பெரிய யாரும் நினைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு ரொம்ப ஷார்ட் பீரியட்ல வளர்திருக்காரு. ஆனா பாரு இதெல்லாம் என் பாட்டி பேர்ல இருந்தது. அவர் எதுவும் மாத்திக்க கூட ட்ரை பண்ணலை. பாட்டி இருந்த வரைக்கும் அவங்க தான் இதோட உரிமையாளர். அவங்க இறந்தது அப்புறம் பார்த்தா நிறைய உரிமை அவளுக்கு தான் அப்படிங்கரப்போ அவங்களால பொறுத்துக்க முடியலை. அதனாலேயே அவளை உங்க அப்பாவோட அனுப்பிட்டாங்க. அப்புறம் பெருசா அவளை கேர் பண்ணலை. எங்களையும் பண்ணவிடளை. எங்களுக்கு அவளை பத்தி தெரியாம. பார்க்க முடியாதபடி எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வராதபடி பண்ணிட்டாங்க.”,

“நீயே சொல்லு இதுல எங்கப்பாக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கு. பாட்டி அவங்க இறந்ததுக்கு அப்புறம் சொத்துக்க்காகவாவது நாங்க அவளை பாத்துக்கணும் நினைச்சு இருப்பாங்க போல. ஆனா அதுவே அவளுக்கு எதிரியாயிடுச்சு.”,

“இப்போ ஒரு மகனா நான் எங்க அப்பாக்கு என்ன பண்ணனும்னு நீ நினைக்கிற சொல்லு. இது உன் அக்காவோடது அப்படின்றத மறந்துட்டு ஒரு பார்வையாளரா சொல்லு.”,

கணேஷிர்க்கு பயமாக இருந்தது. எங்கே தன் வாயாலேயே கிரி அவன் செய்து கொண்டிருப்பது சரி என்ற பதிலை வாங்கி விடுவானோ என்று. என்ன சொல்வது என்ற இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டான். உஷா நேற்று வானத்தை வெறித்தபடி நின்றிருந்த தோற்றம் கண்ணில் தோன்றியது.

Advertisement