Advertisement

அத்தியாயம் ஒன்று:

“பூங்காற்று தொட காலையில் கண் விழித்தேன்சூரியன் என் முகத்தில் பனியாய்சுட்டது “

என்று கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்தாள் அவள் . யாரோ “உஷா! உஷா!” என்று சத்தமாக கூப்பிட்டு கொண்டிருந்தனர் .

“யாரோ அல்ல அது சித்தி” .இன்னும் இங்கு நின்றுகொண்டடிருந்தால் திட்டு விழும் என்று அவசரமாக ஓடினாள் உஷா .

‘என்ன சித்தி’ என்றாள்.

“ஏம்மா காலையில எழுந்தா ரெடியாகரதுக்கு எவ்வளவு லேட் பண்ணற. சீக்கிரமா சாப்பிட்டுவிட்டு கிளம்பு. நானும் கிளம்பனும் பஸ் போயிரும்”.

“இதோ சித்தி கிளம்பிர்றேன். கலைவாணியும் கணேஷும் ரெடி ஆயிட்டங்களா”.

“அவங்க ஸ்கூல் போயி பத்து நிமிஷமாச்சு. உங்கிட்ட சொல்லிட்டு தானே கிளம்பினாக. அதகூட கவனிக்காம என்ன பண்ணிட்டு இருந்த. போ, போயி சீக்கிரம் கிளம்பு”.

சித்தியும் உஷாவும் பக்கத்து டவுனில் உள்ள கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துகொண்டிருந்தார்கள். அவசரமாக கிளம்பி அவளும் சித்தியும் பஸ்நிலையம் வந்து பஸ்சில் ஏறி உட்கார்ந்தார்கள். தினமும் பார்க்கும் கண்டக்டர் என்பதால் ஸ்நேஹமாய் புன்னகை செய்தார்.

சித்தி என்றால் உஷாவினுடைய தந்தையின் இரண்டாவது மனைவி. உஷா பிறந்தவுடன் அவளது அன்னை இறந்துவிட்டார்கள். பின்பு அவள் தந்தை சித்தியை திருமணம் செய்தார். அவள் தாய் இறந்தவுடன் அவளுடைய தாய் வழிப்பாட்டியிடமே அவள் பதினைந்து வயது வரை வளர்ந்தாள். ரொம்ப செல்லம்மாக அம்மாவினுடைய குறை தெரியக்கூடாது என்று நன்றாக கவனித்துகொண்டார்கள்.அவளுடைய தந்தை அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பியபோதுகூட அனுப்பமறுத்துவிட்டார்கள்.

       உஷாவை நல்ல கான்வென்ட்ல் சேர்த்து  படிக்கவைத்தார்கள். ஆனால் அவள் டென்த் எக்ஸாம் எழுதியிருந்த சமையத்தில் ஒரு நாள் தூக்கத்திலேயே இறந்து போனார்கள். மாமா வீட்டினர் மேலேயும் பாட்டி கீழேயுமாக உஷாவிர்க்காக தனியாக இருந்தார்கள். பாட்டி இறந்தவுடன் மாமா அவளை தந்தையுடன் அனுப்பி வைத்துவிட்டார். அங்கே மிகவும் கஷ்ட்ட ஜீவனம்.

          முன்பு போல் பெரிய்ய பள்ளியில் சேர்க்காவிட்டாலும் கவர்மென்ட் ஸ்கூலில் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்துவிட்டார்கள். எல்லோரும் அவளை நன்றாக பார்த்து கொண்டார்கள். ஆனால் அவளால் யாரோடும் மிகவும் ஒட்டுதலோடு பழக முடியவில்லை.  அவளுடைய வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவிட்டது.  எல்லாரோடும் நன்றாக பழக வேண்டும் என்று நினைத்தாலும் அவளால் முடியாது. நிறைய வருடங்கள் கழித்து உஷா வந்ததினால் அப்பா நன்றாகவே கவனித்துக்கொண்டார். சித்தியும் நன்றாகவே பார்த்துகொண்டார்கள். கணேஷும் கலைவாணியும் அக்கா என்று இவள்மேல் பாசமாகவே இருந்தார்கள். அங்கு வாழ்ந்த வளர்ந்த சூழ்நிலையோடு ஒப்பிடும் போது இங்கே ஜஸ்ட் அப்சைட் டௌன்.

            உஷா +2 முடித்து லீவில் இருந்தபோதஅவளுடை தந்தைக்கு HEART ATTACK வந்து இருந்த கொஞ்சநஞ்ச சேமிப்பையும் கரைத்து இறந்துபோனார். சொத்து என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இன்றைய சம்பாத்தியமே இன்றைய சாப்பாடு என்று ஆனது. வேறுவழியே இல்லாமல் உஷாவும் சித்தியோடு சேர்ந்து வேலைக்கு போகும்படி ஆயிற்று. அப்போது கணேஷும் கலைவாணியும் ஏழாவதும் எட்டாவதும் படித்துக் கொண்டிருந்தனர். நான்கு வருடம் ஆயிற்று இப்படியே நாட்கள் ஓடிகொண்டிருக்கிறது. பழைய நினைவுகளை நினைக்க கூடாது என்று எண்ணினாலும் மனது அங்கேயே போய் தான் நிற்கும். எப்படி மாமா வீட்டினர் எல்லோருமே அவளை மறந்து போனார்கள் என்று புரியவில்லை. மாமா மட்டும் அவளை முன்பு பார்க்க வந்துகொண்டிருந்தார். ஆனால் தந்தையுடன் அனுப்பியதால் உஷா அவரோடு சரியாக பேசமாட்டாள். அவர் படிக்கவைப்பதாக எவ்வளவோ கூறியும் மறுத்துவிட்டாள். சில வார்த்தைகளையும் சில மனிதர்களையும் அவளாள் என்றுமே மறக்கமுடியவில்லை. 

               “எப்போ பார்த்தாலும் எதையாவது யோசனை பண்ணிகிட்டே இருக்கியே , அப்படி என்னதான் யோசனை பண்ணுவ உஷா” என்றார் சித்தி.

             “ஒண்ணுமில்லை சித்தி”.

             “ நான் உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும் உஷா. இன்னிக்கு சாயந்திரம் பேசறேன்.ஏன்னா என்னக்கே இன்னும் சரியாத் தெரியல ”.

               “ என்ன விஷயம் சித்தி “

       “ஒன்னுமில்லைமா, எல்லாம் உன் கல்யாணவிஷயம்தான்”.                  

        “சித்தி ,நாம இருக்கிற நிலைமையில அத எல்லாம் யோசிக்க முடியுமா. நாந்தான் படிக்கல அவங்க ரெண்டு பேருமாவது காலேஜ் படிக்கட்டும்”.

“அப்படில்லாம் பேசாதம்ம இருபத்திரண்டு முடிந்து இருபத்திமூன்று பொறக்கபோகுது. அவங்களுக்கு படிக்கனும்னு விதி இருந்தாதான் நடக்கும். நீ கூடதான் ஆயிரதிநூறு மார்க் வாங்குன. நானும் படி பிரச்சனையை எல்லாம் நான் பாத்துகிறேன்னு சொன்னேன். ஆனா நீ கேக்கலை. புரிஞ்சுக்கோ உஷா ஏற்கனவே நல்லா படிக்கற பொண்ண நம்ம கஷ்டத்துக்கு இழுத்துவிட்டிடோமேன்னு கஷ்டமா இருக்கு.இதுல கல்யாணத்தையும் தள்ளிப்போடதே. அதுவுமில்லாம முதல் தாரத்து பொண்ணு சம்பாரிச்சு போடணும்னு கல்யாணம் பண்ணாம வெச்சிருக்கான்னு ஊர் பேசும். எதுவும் கட்டாயமில்லை. சாயந்திரம் உங்க மாமா வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க.அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு வந்து உன்ன எவ்வளவோ கூப்பிட்டாங்க. ஆனா நீ போகலை எல்லோரும் என்ன நினனப்பாங்க நான் உன்ன அனுப்பலைன்னுதான் சொல்வாங்க. நீ போகாததால நானும் போகலை.சரி பையன் கல்யாணத்துக்கு அதுவும் போகலை. அந்த வீட்ல ரெண்டு காரியம் வேற ஆயிடுச்சு அதுக்கும் போகலை ஏம்மா “.

“விடுங்க சித்தி நான் வேண்டான்னு தானே அனுப்புனாங்க அப்பறம் என்ன“.

“உனக்கு இங்க வந்தது வருத்தமா இருக்கா “.

“ப்ளீஸ் சித்தி ஏதாவது எமோஷனலா பேசாதிங்க. நான் உங்ககிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன் எனக்கு எந்த வருத்தமுமில்லை. நான் வந்தது வருத்தமில்லை, ஆனா வந்த விதம் வருத்தம் “.

     “ உங்க அப்பாவோட திதிக்கு வந்துட்டு போனவங்க இப்போ தீடீர்னு உன் கல்யாண விஷயமா பேச வர்றேன்னு எங்கண்ணா மூலமா சொல்லிவிட்டு இருக்காங்க. என்னன்னு பாப்போம்.எதுவும் எடுத்துஎரிஞ்சு பேசிடாத “.                                      

 அதற்குள் பஸ் நிறுத்தம் வந்துவிட இறங்கி கம்பனிக்குள், அவரவர் பிரிவுக்குள் சென்றனர்.

     திருமணம் பற்றி உஷாவிர்க்கு பெரியதாக கனவுகள் எதுவும் இல்லை என்றாலும் மனது ஏனோ சஞ்சலமாகவே இருந்தது. வருவது எது என்றாலும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொண்டே உள்ளே சென்றாள்.

    உஷா உள்ளே சென்றபோது அவளுடைய இன்சார்ஜ் சந்திரன் அவளையே பார்த்துகொண்டிருப்பது நன்கு அவளுக்கு தெரியும்.

ஆனாலும் ஒரு நாள் கூட அவள் பார்த்தது இல்லை. அந்த பார்வையின் வித்தியாசம் அவளுக்கு நன்கு தெரியும். சந்திரன் அவளோடு அளவோடு தான் பேசுவான், அதில் அவள் மீது உள்ள அக்கறை நன்றாகவே தெரியும். இருந்தாலும் எதுவும் தெரியாத மாதிரியே இருந்து விடுவாள். எத்தனையோ முறை சந்திரன் அவளிடம் பேச முயலும்போது அவளுடைய “என்ன” என்ற கேள்வி கேட்கும் தொனியிலேயே பயந்து வார்த்தையே வராமல் திரும்ப போய்விடுவான்.

   அவனுக்கு என்ன தெரியும் ஒரு வார்த்தை நன்றாக பேசினால் கூட அவன் ஏதாவது காதல் கீதல் என்று உளறி வைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் உஷாவிர்க்கு.

   உஷா மிகவும் கலகலப்பான பெண். பாட்டி வீட்டில் இருந்தவரைக்கும் அவள் இருக்கும் இடமே சந்தோஷமாக இருக்கும். எதற்குமே அதிகமாக கவலைப்படும் சுபாவமே கிடையாது.அவளுக்கு அம்மா இல்லை, பாட்டி வீட்டில் வளர்கிறாள் என்பதே அவளுடைய ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்ஸ் தவிர வேறு யாருக்கும் தெரியவே தெரியாது.

    தீடிரென்று பாட்டி இறந்தது, அந்த வீட்டை விட்டு தந்தை குடும்பத்துடன் வந்தது ,தாய்மாமா வீட்டாரின் புறக்கணிப்பு ,ஸ்கூல் சூழ்நிலை முற்றிலும் மாறியது அவளை நிறைய மாற்றிவிட்டது.

     இப்பொழுதும் நிறைய பேசுவாள்,ஆனால் பாதி மனதுக்குள் மீதிதான் வெளியே வரும். அதனால் பார்பவருக்கு அவள் அமைதியான பெண். ஆனா நமக்கு தானே தெரியும் அம்மணி லட்சணம்.

    பக்கத்தில் நின்ற சரஸ்வதியிடம் பேச்சுகொடுத்துகொண்டே வேலையை ஆரம்பித்தாள்.

  “என்ன சரஸ்வதி இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட”.

 “ இன்னைக்கு கொஞ்சம் சமையல் வேலை வேகமா ஆயிடுச்சு அதான் வந்துட்டேன். உனக்கு என்னக்கா சமையல் முழுசும் உன் சித்தியே செஞ்சிடுது ”.

       “ செஞ்சிடுதுதான் ,ஆனாலும் என்னையும் கத்துக்கசொல்லி திட்டிட்டே தான் இருக்கும். இதுல ஒரு டயலாக் வேற…. இல்லன்னா போற வீட்ல கஷ்டபடனும்னு. ஆனா என்ன பண்ணறது அந்த உண்மை எனக்கு மட்டும்தானே தெரியும் ”.

    “ எந்த உண்மைக்கா உங்களுக்கு சமைக்க வராதுன்றதா “.

     “நீ எங்கிட்ட உதை வாங்கபோற”.

     “அப்போ வேற என்ன உண்மை”.

    “ ம், நான் சமைச்சா எனக்கே சாப்டபிடிக்காது “.

    “ இது கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம். உங்க கொடுமைய உங்களாலேயே பொருத்துக்கமுடியலன்னா மத்தவங்கள்ளால எப்படிமுடியுங்கா “.

 “ கரெக்ட். அதனால தான் இந்த விஷ பரீட்ச வேணாம்னு விட்டுட்டேன் “.

  “ ஆனா அக்கா எல்லாருமே கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி தான் சொல்லறாங்க. மனசுக்கு பிடிச்சவங்க வந்துட்டா அப்புறம் விழுந்து விழுந்து சமைப்பிங்க “.

   “அப்புறமும் இல்ல, விழுபுரமும் இல்ல, விழபோறதும் இல்ல. போடி போய் வேலையப்பார்ரி” .

 “போங்கக்கா, நீங்க இப்படிதான் பேசுவிங்க என்ன நடக்குதுன்னு நானும் பாக்கத்தானே போறேன் “.

  உஷா சிறிது யோசிப்பது போல் பாவனை செய்து “ என்ன நடக்கும் ஆடு நடக்கும், கோழி நடக்கும், மாடு நடக்கும் கூட நானும் நீயும் நடப்போம் வேற ஒன்னும் நடக்காது” என்று சிரித்தாள்.

  மனதுக்குள்ளும் நினைத்துக்கொண்டாள் “ மனசுக்கு பிடிச்சவனா எவன் அவன் “ என்று. மறக்க நினைக்கும் முகமொன்று மனதில் மின்னி மறைந்தது.

  அப்போது சந்திரன் என்றும் இல்லாத திருநாளாய் அன்று வந்து அவளோடு சிறிது பேசவேண்டும் என்று கூறிசென்றான்.

   உஷாவிர்க்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. போகவேண்டாமே என்று முதலில் நினைத்தாள். பின்பு போய்தான் பார்போமே, இல்லையென்றால் நாளையும் இது தொடரும். முதலிலேயே இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட நினைத்து சென்றாள்.

   அங்கே சந்திரன் “ உஷா நான் உன்ன விரும்பறேன். உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். நீ சரின்னு சொன்னா நான் வந்து உன் சித்திக்கிட்ட பேசறேன் “.

உஷாவிற்கு இதை கேட்டவுடனே மிகுந்த எரிச்சல் வந்துவிட்டது, காலையில் இருந்த மனசஞ்சலம், சித்தியோடான பேச்சுகள் எல்லாம் சேர்த்து அவளை ஹார்ஷாக பதில் சொல்லவைத்தது.

    “சாரி சார் எனக்கு இஷ்டமில்ல. இந்த மாதிரி ஏதாவது தாட் இருந்தா அத தயவுசெஞ்சு மறந்துருங்க “.

    “ஏன் இஷ்டமில்ல, எனக்கு என்ன கொறச்சல். சொந்தமா வீடு இருக்கு, அப்பா அம்மாக்கு நான் ஒரே பையன். மாசம் பதினஞ்சாயிரம் சம்பாறிக்கிறேன். கூடிய சீக்கிரமே சொந்தமா ஒரு கார்மென்ட்ஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். ஏன் என்ன வேண்டாம்னு சொல்லற. உன் சித்தி ஏதாவது சொல்லுவாங்கன்னு பயபட்ரியா. நான் அவங்ககிட்ட பேசறேன் “.

  “ பயமெல்லாம் இல்லைங்க எனக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடுங்க “.

  “ விட்டுடுங்கன்னா , அப்படியெல்லாம் விடமுடியாது.” என்றான் சந்திரன்.

   இந்த வார்த்தைகளை கேட்டவுடனே பொறுமையாக பேசவேண்டும் என்று நினைத்த உஷாவிர்க்கு மிகவும்

கோபம் வந்தது இருந்தாலும் அவன் ஏதோ உளறுகிறான் . இங்கே வைத்து சத்தம் வேண்டாம் என நினைத்து “சார் இது வொர்கிங் டைம் எதுவாக இருந்தாலும் பிறகு பேசலாம்” என கூறி செல்லநினைத்தாள்.

   “ ஒன்னும் பிரச்சனை இல்லைங்க. நீங்க ரெண்டு மூணு நாள் எடுத்துக்கிட்டு நல்ல பதிலா சொல்லுங்க ”.

    உஷாவின் பொறுமை ஏனோ பறந்தேபோனது. கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என்றே அவளுக்கு தெரியாது. நிறைய நாட்களுக்கு பிறகு வார்தையை கோபத்தோடு பிரயோகித்தாள்.

   “ என்ன சார் , லூசு மாதிரி பேசுறிங்க “  விட்டுடுங்கன்னா , அப்படியெல்லாம் விடமுடியாதுன்னு சொல்லரிங்க.ரெண்டு நாள்ல சொல்லுன்னு டைம் எல்லாம் பிக்ஸ் பண்றீங்க .நல்ல பதிலா சொல்லுன்னா, யாருக்கு நல்ல பதில் எனக்கா உங்களுக்கா. உங்களுக்கு எது நல்ல பதில்ன்றதபத்தி எனக்கு அக்கரையில்ல. ஆனா எனக்கு நல்ல பதில் எனக்கு இஷ்டமில்லைங்கரதுதான். இந்த பேச்ச இதோட விட்டுடண்ணும். யார்கிட்டயாவது தேவையில்லாம பேசுநிங்கன்னு தெரிஞ்சது.” என்றாள் மிரட்டலாக.

      இப்படி ஒரு ரியாக்ஷனை சந்திரன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் பார்த்த உஷா அமைதியான பெண் அதிகம் பேசக்கூட மாட்டாள். அவள் இப்படி பொரிந்தவுடன் அவன் வாய் பேச வராது பார்த்துகொண்டிருந்தான்.

       அப்போது அவளுக்கு பின் இருந்து ஒரு குரல் கேட்டது.

“ நீ மாறவேயில்ல அன்னலட்சுமி. எல்லாரையும் மிரட்றது, அடுத்தவங்கள பேசவிடாம பேசறது அப்படியே இருக்க “

    அந்த குரலை கேட்டதும்  வார்த்தை வராது அப்படியே கல்லாய் சமைந்தாள். 

Advertisement