Advertisement

கவியழகன் முடியாது என்று சொல்லவும் அவனை விட்டு விலகியவள், ரோட்டில் இருந்த பெரிய கல்லொன்றை எடுத்து அவனது காரின் மீது வீச குறி பார்த்தாள் பூங்குழலி…

 அவளது அச்செயல் வரை கனி, வசுந்தராவை எண்ணி பயத்தில் பூங்குழலியை பார்த்திருக்க, விக்கியோ கைகளை கட்டிக்கொண்டு கனியை பார்த்திருந்தான்… அவனை பொருத்த வரை அவனது உலகம் அவளோடு நின்று போனதை போல் தான் இருந்தது…

 திடீரென அவளது கண்கள் ரெண்டும் சாஸ்சரை போல் பெரிதாக விரிவதை கண்டு துணுக்குற்றவன் கனி பார்வை செல்லும் திசையில் இவனும் பார்க்க, பூங்குழலி கையில் கல்லுடன் காரை குறிப்பார்க்க தொடங்கியதை கண்டு அரண்டு நண்பனை நோக்கி,

 “டேய்… என்னடா இது… ஏன் டா இப்படி தேவையில்லாம பிரச்சனைய பெருசு பண்ணுற… அது சிலிக்கான் பிளேட் கோட்டடு கிளாஸ் டா… அதைய உடைக்க பார்க்குறா கல்லு மாதிரி நிக்குற… “என்று கத்தியபடி அவன் அருகில் செல்லவும், கனி

 “ஏய் புள்ள… நிறுத்து…” என்று அவள் கையை பிடித்து அவளது செயலை தடை செய்ய,

 “ம்ப்ச்ச்… விடு டி… எவ்வளவு திமிரு இவனுக்கு… வேண்ணும்னே வம்பு பண்ணுறான்… அன்னைக்கே இப்படி உடைச்சிருந்தா இன்னைக்கு வால் ஆட்டி இருந்திருக்க மாட்டான்… தப்புபண்ணிட்டேன் புள்ள… விடு எங்கைய…” என்று திமிறியவள் கார் கண்ணாடியை உடைக்கும் முனைப்போடு இருந்தாள் கோபம் அடங்காமல்…

 

விக்கி கூறவும் தன் சுயநிலைக்கு வந்தவன் அவசரமாக அவளிடம் சென்றான் கவி…

 

“ஏய்..ஏய்… இரு இரு… அவசர படாத… உன் சைக்கிள சரி பண்ணி தரேன்… கல்லை கீழ் போடு… ” என்று சமரசம் பேசினான்…

 

“ம்ம்ம்… அப்ப முதல் செரி பண்ணி குடு பொறவு இதைய கீழ் போடுதேன்….” என்று கரராக பேசவும் வேறு வழி தெரியாது, கடையில் இருந்த ஒரு சிறுவனை அழைத்து அருகில் இருக்கும் பஞ்சர் ஓட்டும் கடையில் பஞ்சர் ஓட்டி கொண்டு வருமாறு அனுப்பி வைத்தான்…

 

“அதான் சைக்கிள் சரி பண்ண அனுப்பி இருக்கேன்ல இன்னும் ஏன் அனுமார் மலைய தூக்கிட்டு நிக்குற மாதிரி அந்த கல்லை தூக்கிட்டு நிக்குற… அதையும் கீழ் போடு கார் மேல விழுந்துற போகுது…” என்ற கவியை பார்த்து முறைத்தவள், தன் ஜடையை பின்னோடு போட்ட படி ஒரு வெட்டும் பார்வையை செலுத்தி,

 

“இங்குட்டு பாரு… இந்த வம்பு பேசுற ஜோலி எல்லாம் எங்கிட்ட வச்சுகிடாத பொறவு என்ன பண்ணுவேன்னு தெரியாது…” என்று மிரட்டியவள் கல்லை கார் மீது எறிவது போல் பாவனை காட்ட,

 

“ஏய் ஏய்… சரி சரி… பேசல… நீ எதையும் பண்ணி வச்சுராத…” டக்கென்று சமாதானமாக பேசவும்,  சைக்கிள் திரும்பவும் வரும்வரை அமைதிகாத்தாள் பூங்குழலி…

 

அவளது அருகில் கையை பிசைந்தபடி நின்றிருந்தாள் கனிமொழி… இவ்விசயம் அத்தைக்கோ அல்லது தந்தைக்கோ சென்றால் என்ன ஆகும் என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை அவளால் அதற்கு காரணம் கவியழகனின் தந்தை, முருகவேல்…

 

விக்கிக்கு ஏனோ கனியின் பதற்றம் கவலையை கொடுத்தது… அவன் இதுவரை பார்த்த நேரம் அனைத்தும் அவளது பயம் மற்றும் பதற்றமே… அதை வைத்து இவள் பயந்த சுபாவம் என்று கணக்கிட்டு கொண்டான் உண்மை அறியாமல்…

 

பூங்குழலியின் சைக்கையும் கண்களை உருட்டி அவள் மிரட்டும் தோரணையில்  கவியின் உள்ளத்தில் பழைய நினைவுகளை கிளறி விடவும் அவளையே ரசனையுடன் பார்த்திருந்தான் தன்னை மறந்து…

 

சிறிது நேரத்தில் அவளது சைக்கிள் வந்துவிட, கல்லை கீழே போட்டவள் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அவனை முடிந்த மட்டும் முறைத்து விட்டு,

 

“வா கனி போலாம்…”என்று நகர போனாள் பூங்குழலி…

 

அவள் கூறிய கனி என்னும் வார்த்தை விலவேண்டியவன் காதில் நுழைந்து இதயத்தை சேர்ந்ததும் தன்னையும் அறியாது அவனது உதடுகள் மெல்ல உச்சரித்து பார்த்தது “கனி…”என்று… அதில் கனிமொழியின் உள்மனது ஊந்த அனிச்சையாக விக்கியின் முகத்தை பார்த்தாள் தன்னையும் மீறி, அதில் முகம் மலர்ந்தவன் ஒரு புன்னகையை உதிர்க்க, சட்டென தன் தலையை திருப்பி கொண்டாள் கனி…

 

‘லூசா டி நீ… எதுக்கு இப்ப அவிகள பார்த்த… எரும எரும.. அவிக அசலூர் காரவிக… தேவையில்லாம எதுலையும் போய் சிக்கிக்காத புள்ள…’என்று தனக்குள் எச்சரிக்கை உணர்வை தூண்டி விட்டுக்கொண்டவள், சைக்கிளில் பூங்குழலியுடன் செல்ல இருக்கையில், ஒரு குரல் தடுத்து நிறுத்தியது பெண்களை…

 

“ஏய் முட்டக்கண்ணி…”என்று கவி கத்தவும் சைக்கிளில் இரண்டி நகர்ந்தவள் சட்டென பிரெக்கிட்டு நின்றாள் அதிர்ச்சியில்…

 

அவளுக்கு முன்பு ரெண்டடி தொலைவில் நின்றாள் கனிமொழி பாவமாக…. ‘இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லையா இல்ல இவிகளுக்கு சரியில்லையா…?’

 

அவனது அழைப்பிற்கு பிரெக்கிட்டு நின்றாளே ஒழிய, அவனை திரும்பி பார்க்கவில்லை… அவளது நினைவுகள் சடுதியில் பழையதை கிளற மனம் ரணமாக பல்லை கடித்து பற்றியிருந்த சைக்கிளில் ஹாண்டில் பாரை போட்டு முறுக்கிக் கொண்டிருந்தாள் எதையும் கட்டுப்படுத்தும் நோக்கோடு அது அழுகையா கோபமா என்று அவளே அறியாள்…

 

அவள் திரும்பி பார்க்கவில்லை என்றதும் மீண்டும், “ஏய் முட்டக்கண்ணி…. உன்ன தான் கேட்குதா இல்லையா…?” என்று அன்றொரு நாள் போல் இன்று மீண்டும் அதே வார்த்தை அதே தோணியில் கத்த பூங்குழலி கண்களை இறுக மூடி பெருமூச்சு விட்டவள், அவனது அழைப்பை புறம் தள்ளி விட்டு முன்நோக்கி செல்ல போனாள்…

 

அவள் செல்ல இருப்பதை அறிந்து, வேகமாக ஓடி அவளது வழியை மறித்து நின்றான் கவியழகன்… அவனது செயலை ஆச்சரியமாக பார்த்தபடி மெல்ல இவர்களை நோக்கி வந்த விக்கி நடக்கவிருக்கும் சம்பவத்தை புருவம் சுருக்கி பார்க்க தொடங்கினான்…

 

தன்முன் நின்றவனை ஏறிட்டு பார்த்தவள், “மருவாதையா வழிய விடு…” என்று அடக்கப்பட்ட கோபத்தில் மெல்லிய குரலில் கூற,

 

“முடியாது டி என் முட்டக்கண்ணி…”

 

“ஏய்… அப்படி கூப்பிட்ட உன் மண்டைய உடைப்பேன்…” என்று விரல் நீட்டி எச்சரிக்க, அவளது விரலோடு கிடுக்குபிடி போட்டவன்,

 

“அப்படிதான் கூப்பிடுவேன் உனக்கு என்ன வந்துச்சு… நான் என் பொண்டாட்டிய கூப்பிடுறேன் அதைய தடை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்ல… உன்னையும் சேர்த்து… ” என்று கண்களில் காதல் பொங்க கூறியவனை முறைத்து பார்த்தவள் அவளது விரலை அவனிடம் இருந்து விடுவித்து கொள்ள போராடியவள்,

 

“கூப்பிடுவ… கூப்பிடுவ… என்கிட்ட வம்பு பண்ண பொறவு எங்அ…” என்று கோபமாக பேச வந்தவள் தன்நிலை புரிய, ஸ்தம்பித்து சட்டென அமைதியாக, அவளது உள்ளுணர்வை புரிந்துக் கொள்ளாமல் கவி,

 

“என்ன ஸ்டக்(stuck) ஆயிட்ட, என்ன உங்கப்பா கிட்ட சொல்லுவியோ…” என்று நக்கலாக கேட்டபடி தன் விரல் இடுக்கில் இருந்த தன் விரலை விடுவித்து கொள்ள போராடிய அவளது விரலோடு விளையாடியபடி கேட்டவனின் வார்த்தையில் உரைந்து அமைதியாக தலையை குனிந்து கொண்டாள் பூங்குழலி…

 

அவளை பார்த்த கவி, “என்னடி முட்டக்கண்ணி… அமைதியாயிட்ட…?” என்று கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கலங்கி ஒரு சொட்டு கண்ணீர் விழவா வேண்டாமா என்னும் நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ந்து தன் விரலில் இருந்து அவள் விரலை விடுவித்தான் கவியழகன்…

 

அவளது கண்ணீரை கண்ட பின்பே தன் தவறை உணர்ந்து, வருந்தியவன் அவளிடம் மன்னிப்பை வேண்டி வாயை திறக்கும் முன், தன்னை சட்டென நிலைப்படுத்தி கொண்ட பூங்குழலி, அவனை நிமிர்ந்து பார்த்து “ஆமா நீ சொன்ன போல அய்யன்ட்டதேன் சொல்லுவேன்… உன் அய்யன்ட்ட… என்ன பெரியவரே உம் மவனுக்கு புத்தி சொல்லி வளர்க்கலையா…? நடுரோட்டுல நின்னு எங்கூட வம்பு வளர்க்குறாகன்னு சொல்லுவேன்…” என்று திமிராக கூறவும் அவனுள் அவள் மீது உண்டான காதல் சற்று கூடியது அவளது தன்னம்பிக்கையை கண்டு…

 

அவளையே அமைதியாக சில நொடிகள் பார்த்திருந்தவன், பின் காதல் ததும்பும் விழியோடு “அவ்வளவு தைரியம் இருந்தா தாராளமா போய் சொல்லு… எனக்கு வேலை மிச்சம்….”  என்றவனை புரியாது பார்க்க,

 

“என்ன லுக் விடுற…? நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோ, இனி இந்த மாதிரி ராங்கியாட்டம் சுத்துறத நிப்பாட்டிக்கோ… ஒழுங்கா லட்சனமா பொண்ணு மாதிரி இருக்க பழக… எனக்கு அப்படி இருந்தா தான் புடிக்கும்…அப்புற….” என்று பேசும்போது இடைபுகுந்தாள் பூங்குழலி

 

“ஏய்ய்ய்ய்… நிப்பாட்டு நிப்பாட்டு நா என்னத்துக்குவே நீ விருப்ப படுதாப்புல நடந்துக்கனும்…?” என்று கையை கேள்வி கேட்பது போன்ற பாவனையில் அவனிடம் எகிறிக் கொண்டு வர,

 

“என்ன முட்டக்கண்ணி முட்டாள் மாதிரி கேட்குற… கட்டிக்க போறவன் விருப்ப படுற மாதிரி இருக்குற தானே பொண்டாட்டிக்கு அழகு…” என்று அவள் கன்னம் தட்டி கூற, பட்டென அவன் கையை உதறி விட்டவள், முன்பு இருந்ததை விட அதிக ஆவேசத்துடன்

 

“குடலை உருவிருவேன் டா எடுப்பட்ட பயலே… கட்டிக்க போறவனாம்ல ஆளும் மொகரையும்… கனவுல கூட நினைச்சு பார்க்காதல நான் உம் பொண்டாட்டியா வருவேன்னுட்டு… அப்படி மட்டும் நடந்துச்சு நான் உன்னைய கொன்னு கூரு போடுவேனே தவிர உன்னையே கட்டிக்க மாட்டேன்…” என்று கத்தியவள்,

 

அவனை சுற்றிக்கொண்டு கடந்துச்செல்ல முற்படுகையில், “இனி எங்கிட்ட இப்படி ஏதாச்சும் வம்பு பண்ண உன் கார் கண்ணாடிய ஒடைக்க மாட்டேன் உன் வூட்டு ஜன்னல் கண்ணாடி அம்புட்டையும் உடைச்சுருவேன் ஜாக்கிரத….” என்று மிரட்டி விட்டு போக, செல்லும் அவளையே ரசனையுடன் பார்த்திருந்தான் கவியழகன்…

 

கனியை மறைத்தப்படி நின்றிருந்த விக்கியை முறைத்து விட்டு, சுற்றிக்கொண்டு சென்றாள் அவனது அழகி…

 

“ம்ம்ம்… சம்பந்தமே இல்லாம நம்மாளு நம்மளை முறைச்சுட்டு போகுது… எல்லாம் என் நேரம்… போற போக்க பார்த்தா இவ பிரண்டுக்காக என்னைய வேண்டாம்னு சொல்லிருவா போல இருக்குதே…” என்று செல்லும் அவளையே பார்த்து புலம்பியவனின் வார்த்தை அவளது செவிகளை எட்டியதோ என்னவோ, திரும்பி இவனை ஒரு பார்வை பார்த்தபடி சென்றாள் கனிமொழி…

 

அதில் கண்கள் மின்ன, அவளை பார்த்து புன்னகைக்க சட்டென திரும்பி கொண்டாள் கனி… அவள் திரும்பியதும் மனத்திற்குள் இனிதாக உணர, சந்தோஷத்தில் தலையை கோதியபடி திரும்பியவனின் விழியில் விழுந்தான் கவியழகன்…

 

அவனது யோசனை முகத்தை கண்டு, இவனுள் இருந்த சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது, அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து அவன் கவனத்தை தன்புறம் திருப்பியவன்,

 

“மாப்ள… என்ன நடக்குது இங்க…? உன்ன பார்த்தா இன்னைக்கு முதல் முறையா அந்த பொண்ண பார்த்த மாதிரி தெரியலையே…?”என்று சந்தேகமாக கேட்டவன்,

 

“அதுவும் இல்லாமல் இவ்வளவு உரிமையா பேசுற… நீ இத்தனை வருஷம் ஊர் பக்கம் வந்ததே இல்ல அப்புறம் எப்படி உனக்கு இந்த பொண்ணு மேல இவ்வளவு லவ், உரிமையான பேச்சு, தைரியம் எல்லாம்… உனக்கு முன்னாடியே தெரிஞ்ச பொண்ணா…?” என்று கேள்வி கேட்டான் குழப்பத்தில்…

 

அவனை பார்த்து மென்மையாக புன்னகைத்த கவி, ‘ஆம்…’ என்பதை போல் தலையை ஆட்டி வைக்க…. “எப்படி தெரியும் மாப்ள…?” விக்கியும் ஆர்வமாக கேட்க….

 

சிறு நாண புன்னகையுடன், “சின்ன பிள்ளையா இருக்கும் போதே தெரியும்…” என்றவனின் வார்த்தையில் அதிர்ந்தான் விக்கி…

 

“என்னடா சொல்லுற…? நீ எய்த் படிக்கும் போது திருச்சி வந்துட்டதா சொன்ன… இப்ப சின்ன பிள்ளையா இருக்கும் போதே தெரியும்னு சொல்லுற… டேய் மாப்ள அப்ப பப்பி லவ்வா…? சொல்லவே இல்ல…” என்று வாயெல்லாம் பல்லாக தோளில் கை போட்டு கேட்டான் குஷியுடன்….

 

“அய்ய… அப்படி எல்லாம் இல்ல டா… புடிக்கும் அவ்வளவு தான்….” என்றவனின் இடுப்பில் கிள்ளி,

 

“சும்மா சொல்லு மாப்ள… சமாளிக்காத…” என்று கிண்டல் அடிக்கவும், அவனது செயலில் துள்ளி தள்ளி நின்றவன் நண்பனை முறைக்க முயன்று தோற்று போனான்…

 

பின் சிறு புன்னகையுடன் தன் நெஞ்சில் பசுமையாக வீசிய அந்நிகழ்வை கூற தொடங்கினான் தன்னவளின் நினைவில்…

………

 

அரசு பள்ளிகளிலின் வாசல் முன் நிறுத்தி வைத்திருந்த ஐஸ் வண்டியின் முன் சுற்றியிருந்தது மாணவர்கள் கூட்டம்… மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் மாணவர்கள் தங்களது ஷாப்பிங்கை அங்கு இருக்கும் ஐஸ் வண்டியில் முடித்து விட்டு செல்வது பலரது பழக்கமாக இருந்து வந்தது…

 

பள்ளியை விட்டு வெளியே வந்த ஒன்பது வயது நிரம்பிய பூங்குழலியும் கனியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் திரும்பி ஐஸ் வண்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கனி “காசு இல்லையே புள்ள எங்கிட்ட…” என்று உதட்டை பிதுக்க,

 

“எங்கிட்டயும்தேன் இல்ல… “என்ற குழலி என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள்…

 

“போ புள்ள… ஐஸ் தின்னு மூன்னு நாள் ஆச்சு… சட்டைய பாழாக்குதேன்னு காசே தர மாட்டீங்கிது ஆத்தா…” என்று கனி புலம்பவும்,

 

“எனக்கும்தேன்… நம்ம ரெண்டு ஆத்தாவும் சேர்ந்து இப்படி பண்ணுதாக… இவங்களைய முத பிரிச்சு விடனும் புள்ள… அதைய பொறவு பாப்போம் இப்ப ஐஸ்க்கு என்ன வழின்னுட்டு பார்ப்போம்…” என்றபடியே தன் விழிகளை சுற்றியபடி யோசிக்க தொடங்கினாள் பூங்குழலி…

 

Advertisement