Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றி ஐந்து :

ஆழ் மனதின் அடித்தளங்கள் ஆழமானவை!

என்னவென்று தெரியாத போதும், இருவரின் முகங்களை பார்த்த அஸ்வினின் முகமும் வெகுவாக மலர… அவர்களுக்கான நேரத்தில் தலையிட விரும்பாதவனாக “நான் கிளம்பட்டுமா” எனக் கேட்டான்.

“சரி” என்பது போல தலையசைத்தார்கள் இருவருமே.. கூடவே வர்ஷினி “எப்படி நடந்தது உங்க தங்கை கல்யாணம்” என,

“ரொம்ப நல்லா நடந்தது. நீங்க இல்லாதது மட்டும் தான் எனக்கு குறை” என்று மொபைலில் இருந்த சில போட்டோக்களை காட்டினான்.

இருவருமே ஆர்வமாகப் பார்த்தனர். ஈஸ்வர் ஐஸ்வர்யாவின் முகத்தை வெகுவாக. அதில் அவனுக்கு எந்த சஞ்சலமும் தெரியவில்லை. மிகவும் நிம்மதியாக உணர்ந்தான்.

“உங்க தங்கை ஐஸ்வர்யா ராய் விட அழகா இருக்காங்க” என வர்ஷினி சொல்ல..

“எஸ், அவ ரொம்ப அழகு தான்” என அஸ்வினுமே அதை ஆமோதித்தான்.

“ஒரு நாள் இந்த வாரத்துல கூட்டிட்டு போங்க, நான் விஷ் பண்ணனும்” என்றாள் வர்ஷினி.

“கண்டிப்பா” என சொல்லி அஸ்வின் கிளம்ப, வர்ஷாவை பார்த்ததை இருவரிடமும் சொல்ல மறந்து போனான் ஈஸ்வர்.

தாஸ் வந்துவிட, லக்கேஜ் எல்லாம் எடுத்து வீடு வந்த போது, “மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்டா” என்றாள் சிறு புன்னகையுடன் வர்ஷினி.

“எஸ், எஸ்” என அமோதித்தவன்.. “ரொம்ப ரிலீவ்டா இருக்கு. ஆசை காட்டி ஒருத்தரை மோசம் செஞ்சிட்ட மனநிலை தான் எப்பவுமே. இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு” என கால் நீட்டி சோபாவில் அமர்ந்து கொண்டு “வா” என்பது போல கை விரிக்க.. அவனின் கைகளுக்குள் பாந்தமாய் அடங்கிக் கொண்டாள்.

“அதுதான் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க இல்லையா! யாருடைய விருப்பமோ, விருப்பமில்லையோ, எல்லாம் தாண்டி பார்த்தோம்ன்னா வாழ்க்கையில நடக்கறது தான் நடக்கும்! ஒரு வேளை உங்களுக்கு என் மேல விருப்பமில்லாம இருந்து அவங்க மேல தான் விருப்பம் இருந்திருந்தாலும், நான் உங்களுக்கு மனைவியா வரணும்னு இருந்திருந்தா, மாத்தி இருக்க முடியாது! சோ ஐஸ்வர்யா பார்ட் மறந்துடுங்க.. அவங்க நல்லா இருப்பாங்க! நீங்க மிஸ் ஆனது வருத்தப்படாத மாதிரியான வாழ்க்கை அவங்களுக்கு இருக்கும்!” என,  

“என்னை சமாதானம் பண்ண இந்த வார்த்தைகளை சொல்றியா” என முறுவலுடன் ஈஸ்வர் கேட்க..  

“நோ, நோ, நிஜமா!” என்றாள் உணர்ந்து. “எனக்கு தோணிச்சு” என நிம்மதியாய் ஒரு ஆசுவாசத்தோடு கண்களை மூடிக் கொண்டான்.    

“வீடு முடியற ஸ்டேஜ்ல இருக்கு. புண்ணியாஜனம் பண்ண டேட் பிக்ஸ் பண்ணனும். அதுக்கு முன்ன கோவிலுக்கு போகணும்” என..

“போகலாமே, எப்போ வேணும்னாலும்” என உடனே சம்மதம் தெரிவித்தாள். யார் யார் போகிறோம் என்றெல்லாம் இந்த முறை கேட்கவில்லை. ஈஸ்வரோடு இருந்தால் இப்படி தான் அவளின் வாழ்க்கை என்று அனுமானித்து அவளே சுமுகமாய் நடக்க முடிவு செய்து கொண்டாள் மீண்டும்!

தானாக வந்தால் போராடித் தான் ஆக வேண்டும், அவளாக எந்த போராட்டதையும் வைத்துக் கொள்ள இனி விருப்பமில்லை.

தானாகவோ இல்லை நீயாகவோ போராட்டம் முடியவில்லை என்னும் நிலைகள் இன்னும் இருப்பதை அவள் அறியாள்.

வர்ஷினி சிறிது நேரம் உறங்கி எழ, ஈஸ்வர் அதனை கூட செய்யவில்லை.. அம்மாவின் வீடு சென்று அம்மாவை அழைத்து கொண்டு வீட்டின் புண்ணியாஜனதிற்கு நாள் குறிக்க போனான்.

பின்பு வீடு சென்று அதனை மேற்பார்வை இட்டு அங்கிருந்த படியே வர்ஷினியையும் கூட அழைத்துக் கொண்டான். இதுவரை ப்ரைவேட் செக்யுரிட்டி எதுவும் இல்லை. இப்போது அதற்கும் ஏற்பாடு செய்தான். அவனிற்கும் வர்ஷினிக்கும்.

“இப்போ எதுக்கு இது” என்று வர்ஷினி கேட்ட போது கூட, “இருக்கட்டும்” என்று விட்டான். வர்ஷாவைப் பற்றி சொல்லக் கூட அவனுக்கு விருப்பமில்லை.

இப்படியாக வேலைகள் சென்று கொண்டிருக்கக.. இரண்டு மூன்று நாட்களில் பத்திரிகையில் ஒரு கிசுகிசு… “இணங்காத நடிகை.. கல்தா கொடுத்த ஐ பி எல் அதிபர்” என்ற வார்த்தைகள்.. கூடவே ஏர்போர்டில் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் புகைப்படம்!

அதுவரை பலருக்கு மட்டுமே தெரிந்திருந்த ஈஸ்வர் இப்போது எல்லோருக்கும் தெரிந்தவர் ஆனான்! அப்படி ஒரு விஷயம் வந்தது கூட இவர்கள் யாருக்கும் தெரியவில்லை! நிஷா தான் பார்த்துவிட்டு வர்ஷினிக்கு அழைத்து சொன்னாள்.

தாஸை அனுப்பி அந்த பத்திரிக்கையை வாங்கி வரச் சொல்லி வர்ஷினி பார்த்திருக்க, ஈஸ்வரும் அப்போது தான் ஃபைனான்சில் இருந்து திரும்பினான்.

“என்ன வர்ஷ்?” என்றபடி அருகில் அமர.. மெளனமாக அந்த பத்திரிக்கையை வர்ஷினி கொடுக்க.. பார்த்த அவனுக்குமே அதிர்ச்சி தான். ஆனால் ஒரு சில நொடிகளே.. “தூக்கி போடு வர்ஷ், நாம பாப்புலர் ஆக ஆக இந்த மாதிரி வர்றது எல்லாம் சகஜம் தான்!” என இலகுவாக சொல்ல..

“அதெப்படி இவ்வளவு ஈஸியா விடறீங்க, அந்த பத்திரிக்கை கிட்ட நம்ம கேட்க வேண்டாமா?” என வர்ஷினி கொதிக்க.. இது அவங்களா போட்டாங்களோ? இல்லை அந்த வர்ஷா சொல்லி போட்டாங்களோ? நாம் இதை கவனிச்சம்னா, அவங்க நம்மளை கவனிப்பாங்க! நம்ம ப்ரைவசி போகும், விடு!” என்று சமாதானம் சொன்னான்.

“நீங்க ஏன் அவளை ஏர்போர்ட்ல பார்த்ததை சொல்லலை!” எனக் கோபித்தாள்,

“எனக்கு அது ஒரு விஷயமா தோணவேயில்லை” என்று ஈஸ்வர் விளக்கம் கொடுக்க.. ஆனாலும் வர்ஷினிக்கு மிகவும் கோபம் “எப்படி இவர்கள் அப்படி எழுதலாம்” என,

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மலரிடம் இருந்து அழைப்பு, “விஸ்வா, என்ன இது பத்திரிக்கைல!” என,

“உங்க வரைக்கும் விஷயம் வந்துடுச்சா!” என்றவன், “போட்டுட்டாங்க, என்ன பண்ண?” என,

“வர்ஷினி எப்படி எடுத்துகிட்டா?” என்றார் அவர் கவலையாக. அவள் ஏதாவது ஈஸ்வரை பற்றி தப்பாக எடுத்துக் கொள்வாளோ! இப்போது தான் பிரிந்தவர் சேர்ந்து இருக்கின்றனர் என்ற கவலை அவருக்கு.

“அவளா கோபமா இருக்காம்மா” என பத்திரிகையை மனதில் வைத்து சொல்ல..

மலருக்கு கவலையாகப் போயிற்று.. “அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைன்னு நீ அவக்கிட்ட சொல்லலலையா” என கவலை தொணிக்கச் சொல்ல..

அதில் சிரித்து விட்டான்.. கோபத்தில் இருந்த வர்ஷினி “என்ன சிரிப்பு?” என.

“அம்மாக்கு பயம் நீ என்னை சந்தேகப்படுவியோன்னு” என,

தலையில் செல்லமாக தட்டிக் கொண்டவள் கைபேசியை வாங்கி, “உங்க பையனுக்கு அந்த அளவுக்கு தைரியமில்லை அத்தை. நான் இந்த உலகத்துல இல்லாம போனாலும் கூட யார் கிட்டயும் போகமாட்டார்!” என,

“என்ன பேசற நீ” என்று ஃபோனில் மலர் கத்த.. இங்கே ஈஸ்வர் “வாயை மூடு” என்று கர்ஜித்தான்.

“ஹி, ஹி” என இருவரிடமும் அசடு வழிந்தவள், “ஒரு வார்த்தைக்கு சொன்னேன்!” என,

“வார்த்தைக்கு கூட சொல்லக் கூடாது. அந்த குப்பையை தூக்கிப் போடு!” என மலர் அதட்ட, அவர் சொல்வதற்கு எல்லாம் “சரி அத்தை, சரி அத்தை” என, கடைசியாக அவர் சொன்னதிற்கும் “சரி அத்தை” எனச் சொல்லி வைத்தாள்.

ஈஸ்வர் கோபமாக இருக்க.. “வாங்க! வாங்க!” என்று அழைத்துப் போய் பூஜை அறையில் நின்று, “ஃபோட்டோ எடுத்து அத்தைக்கு அனுப்பிடுங்க” என்று சொல்லி, தோப்புக்கரணம் போட ஆரம்பிக்க, கோபத்தை விட்டு சிரித்து விட்டான் ஈஸ்வர். சிறு வயதில் பிள்ளைகள் தப்பு செய்தால் அது மலர் கொடுக்கும் தண்டனை!    

அஸ்வினும் கொதித்து வீட்டிற்கு வர, ஈஸ்வர் அவனையும் வெகுவாக சமாதானம் செய்து, அவளை எங்கேயாவது பார்க்க நேரிட்டாலும், இரண்டு பேரும் கண்டு கொள்ளக் கூடாது, சண்டை இடக் கூடாது என வர்ஷினியையும் அஸ்வினையும் மிரட்டி வைத்தான் ஈஸ்வர்.

அந்த வர்ஷாவின் பேட்டி வேறு அடுத்த வார இதழில் வெளியாகி இருந்தது. “நடிகைகள் என்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பது நியதியா என்ன? நான் அப்படி கிடையாது. எனக்கு அப்படி எந்த டீமிலும் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று ஒட்டு மொத்த நடிகைகளையும் சேர்த்து இழுத்து பிரச்னையை பெரிதாக்கி விட..  

ஈஸ்வரை சேர்ந்த எல்லோருமே கொதிக்க, ஈஸ்வர் தான் எல்லோரையும் மீண்டும் சமாதானம் செய்யும் படி ஆகிற்று. “வேண்டாம்! விட்டு விடுவோம்! இப்போதைக்கு இதை பேசினால் மிகவும் சென்சேஷனல் இஸ்ஸு ஆகிடும்.. இது அடங்கட்டும், பிறகு யோசிக்கலாம்!” என்றான்.

ஆனாலும் வர்ஷினியின் கொதிப்பு அடங்கவேயில்லை!

ஒரு வேலையாக அவளின் நண்பர்களின் ஸ்டுடியோ போக, துரதிஷ்டவசமாக அங்கே அந்த வர்ஷாவும் இருந்தாள். அதுவும் அவளின் நண்பர்களிடம் சண்டையிட்டு கொண்டு!

“எதுக்கு என்னை அந்த விளம்பரத்துல இருந்து எடுத்துட்டீங்க” என,

“எங்களுக்கு விருப்பமில்லை! எங்க காண்ட்ராக்ட் உங்களோட முடிஞ்சது!” என்று அவர்கள் கறாராக பேசிக் கொண்டிருக்க.. அவளின் மேனேஜர் ஏகத்திற்கும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். 

வர்ஷினி அஸ்வினுடன் அங்கே வர, “ஓஹ், எல்லாம் இவளால!” என்று வர்ஷா வார்த்தையை விட.. அங்கிருந்த அத்தனை பேருக்கும் கோபம் பொங்கியது.

“என்ன இவளா?” என்று வர்ஷாவை அடிப்பது போல அஸ்வின் செல்ல..

“அடிச்சிடுவியாடா நீ” என்று அந்த மேனேஜர் துள்ள, அந்த மேனேஜரை அடித்தே விட்டான்.

வர்ஷினியின் செக்யுரிட்டி ஆள் வந்து அஸ்வினை பிடித்துக் கொண்டு, “நான் பார்த்துக்கறேன்” என்று மேனேஜர் முன் நின்றான்.

மேனேஜர் பயந்து விட்டான். அந்த இடமே அப்படியே அமைதியாகியது. “சாரி கேள்டா” என அஸ்வின் அப்போதும் கர்ஜிக்க..

சங்கீத வர்ஷினி ஒரு அமைதியான பார்வை பார்த்திருந்தாள். ஆனால் முகத்தினில் ஒரு அழுத்தம் வந்திருந்தது.  

“சாரி!” என அந்த மேனேஜர் சொல்ல..

“கூட ஆள் இருக்காங்கங்கற தைரியம்” என்ற வார்த்தையை வர்ஷா, சங்கீத வர்ஷினியை பார்த்து விட..  

யாரும் அருகே வர வேண்டாம் என்பது போல சைகை காட்டி.. “என்ன ஆள் இருக்காங்க” என வர்ஷாவின் அருகில் வந்த வர்ஷினி, “இப்போ யாருமில்லை, என்ன பண்ணிடுவ என்னை” என்றாள் இன்னம் அழுத்தமாக.

அவளின் நண்பர்கள் கலவரமாகத் தான் பார்த்திருந்தனர். வர்ஷினியின் கோபம் அவர்கள் அறிந்ததே. மூன்று வருடம் கூடப் பயின்று இருக்கிறார்கள். யாரை பார்த்தும் பயம் என்பது கிடையவே கிடையாது! கையும் நீட்டி விடுவாள்! ஆனால் அஸ்வினிற்கு தெரியாது அல்லவா!  

“நீ மேம் எதுவும் பண்ணக் கூடாது” எனக் கத்த,

அவனை திரும்பி பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தனர். வர்ஷினி கை கட்டி நின்று வர்ஷாவை பார்த்துக் கேட்ட தோரணை ஒரு வகையில் இன்னம் வர்ஷாவை உசுப்பி விட, “பக்கத்துல யாருமில்லைன்னா, உன் கூட உன் புருஷன் இருக்கான்” என,

ஈஸ்வரை அவன் என்று சொன்னதும் கோபம் வர பெற்றவள், “அவன் இவன்னு பேசின, திரும்ப பேச வாய் இருக்காது!” என்றாள் கோபத்தை அடக்கி,

“என்ன மிரட்டறியா?” என வர்ஷா கேட்க,

“நீ எப்படி வேணா வெச்சிக்கோ” என கூர்மையாக அவளைப் பார்த்தபடி சொல்ல..

வர்ஷினியின் கண்களில், அதில் தெரிந்த தீவிரத்தில், அவளை காயப்படுத்தியே ஆக வேண்டும் என்று அந்த நிமிடம் வர்ஷாவிற்கு தோன்ற… அதுவும் இவளின் கணவன் என்னை பார்த்து என்ன சொன்னான்? என் மனைவியின் பெயர் இருப்பதால் டீமில் நீ இருக்கிறாய் என்பது போல.. இவள் என்ன அவ்வளவு பெரிய இவளா?, ஒரு துவேஷம் தோன்ற..   

இரண்டு நாட்களுக்கு முன் வர்ஷா நடித்த ஒரு  படத்தில் வரும் டைலாக் ஞாபகம் வர, சங்கீத வர்ஷினியிடம் இருக்கும் மிக அழகான கண்களை இழுத்து….   

“இந்த மாதிரி நீல கண்கள் இருக்குற பெண்கள் ஒருத்தனோட திருப்தி ஆகமாட்டாங்களாமே!” என வர்ஷினிக்கு மட்டும் கேட்குமாறு வர்ஷா சொல்ல..

சில நொடி வர்ஷா சொல்ல வந்தது வர்ஷினிக்கு புரியவில்லை! புரிந்த போது.. கோபத்தில் அவளின் முகம் ரத்த நிறமே கொண்டு விட்டது.

“என்ன சொன்ன? தைரியமிருந்தா திரும்பச் சொல்லு!” வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

வர்ஷினியின் முகம் பார்த்து வர்ஷாவிற்கு பயம் வந்தது, ஆனாலும் சொன்னாள். அடுத்த நொடி வர்ஷினி அறைந்ததில் கீழே விழுந்தாள். அப்படி ஒரு அடி!

வேகமாக நண்பர்கள் ஓடி வர.. அஸ்வின் “என்ன பண்றீங்க” எனக் கத்த .. எதுவும் வர்ஷினியை அசைக்கவில்லை.

வர்ஷாவை நிஷா தூக்க.. அவளின் உதடு கிழிந்து ரத்தம் வந்தது. வர்ஷினியின் கையின் மோதிரம் அவளின் உதட்டை கிழித்து இருந்தது.

“அய்யய்யோ கொல்றாங்க” என அந்த மேனேஜர் ஒரு பக்கம் கத்தினான்.

எழுந்து நின்றவளின் முன் “திரும்ப சொல்லுடி பார்க்கலாம்” என வர்ஷினி நிற்க..

வர்ஷாவிற்கு கோபம், ஆத்திரம், அழுகை, பயம் என அத்தனையும் சேர்ந்து பொங்கியது.

“சங்கீதா எதுன்னாலும் பேசிக்கலாம், இவளை நாங்க சாரி கேட்க சொல்றோம்! அமைதியா இரு!” என நிஷா சொல்லி வர்ஷாவை தள்ளி நிறுத்த.. மோஹித் ஒரு புறம் “அடிக்க வெல்லாம் கூடாது, என்ன பண்ற?” என வர்ஷினிக்கும் வர்ஷாவிற்கும் இடையில் வந்து மறித்து நின்றான்.

“தள்ளு நீ” என்றாள் அவனையும் பார்த்து கோபமாக,

மோஹித் அப்படியே நிற்கவும், “தள்ளு” என சொல்லி கை வைத்து தள்ளு என்பது போலவும் காட்ட,   

“வேண்டாம்! சொன்னா கேளு!” என்று மன்றாடி அவளிடம் சொல்லிக் கொண்டே, “நிஷா, இவங்களை தூர கூட்டிப் போ!” என வர்ஷாவை காட்டிச் சொல்ல,

நொடியில் மோஹித்தை தள்ளி வர்ஷாவின் முன்பு வந்து மீண்டும் நின்று, “சொல்லுடி பார்க்கலாம்!” என சொல்லிக் கொண்டே மீண்டும் அறைந்து விட..

இப்போது வர்ஷினியை பார்த்து பயம் வந்தது வர்ஷாவிற்கு! “இல்லை, இல்லை, சொல்லலை, சொல்ல மாட்டேன்!” என வர்ஷா அழ..

அஸ்வின் வர்ஷினியின் அருகில் வந்து “ஏன் இவ்வளவு கோபம்? என்ன பேசினா? பார்த்துக்கலாம் விடுங்க!” என,

கேட்ட வார்த்தைகளின் தாக்கம் வர்ஷினியுள் சுழன்று அடிக்க யாரிடம் கோபத்தை காட்டுவது என்று தெரியாமல், “வாயை மூடிட்டு போடா!” என்று அஸ்வினையும் அடித்து விடுபவள் போல வர்ஷினி நின்றாள்.

“யு ப்ளடி விச், திரும்ப சொல்லுடி” என நின்றாள். சொன்னால் நீ சாவது உறுதி என்பது போல அந்தக் கண்கள் ஜொலிக்க.. 

அதற்குள் அந்த மேனேஜர் எதோ காப்பவன் போல அருகில் வந்து “அடிக்கறீங்க, நான் போலிஸ்க்கு போவேன்” என..

அவன் பேசிக்கொண்டிருந்த போது அவனையும் அறைந்து விட்டாள். அடித்து வர்ஷினி கைகளை உதறிய விதமே அடியின் வேகத்தை சொல்ல.. பார்த்தவர்களுக்கு அவளை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. மேனேஜர் தடிமாறி பின்பு நின்றான்.  “ஆமாண்டா! அடிக்கறேன்! என்ன செய்வ நீ? நீதானே அடிச்சிடுவியான்னு கேட்ட! அடிப்பேன்!  இங்க தான் இருப்பேன்! இல்லை எங்க வீட்ல தான் இருப்பேன்!”

“யாரும் என்னோட நிற்க மாட்டாங்க! என் வீட்டுக்காரர், என் ஃபாமிலி, என் ஃபிரண்ட்ஸ்ன்னு யாரும் வரமாட்டாங்க! நீயென்ன நினைச்ச என்னை பத்தி! யாரும் எனக்கு தேவையில்லை. என் பிரச்சனை எனக்கு பார்த்துக்க முடியும்! யாரும் வராம நான் பார்த்துக்கறேன்! என்ன செய்ய முடியுமோ செய்ங்கடா பார்க்கலாம்!” என்று வார்த்தையை அந்த மேனேஜருக்கு கொடுத்தாலும் பார்வை வர்ஷாவிடம் நிலைத்தது!   

தேவையில்லாமல் பிரச்னையை இழுத்து விட்டு விட்டோமோ என வர்ஷாவிற்கு பயம் வந்தது.  

“என்ன ஒரு குரூர புத்தி உனக்கு? நான் சின்ன வயசுல படிச்ச சூனியக்கார கிழவி மாதிரி பேசற! ஆமா! நீயெல்லாம் உயிரோட இருந்து என்ன பண்ணப் போற? அடுத்தவங்க உன்னை கொல்ற நிலைமையெல்லாம் வெச்சிக்காத! நீயே செத்துப் போயிடு!” என நிற்க..   

பார்த்திருந்த எல்லோருக்கும் பயம்! வர்ஷாவிற்கு அப்படி ஒரு பயம். 

இந்த ஒரு வர்ஷினியின் பரிமாணத்தை இதுவரை பார்த்திராத அஸ்வின், பயந்து ஈஸ்வருக்கு கைபேசியில் அழைத்தான்.

ரௌத்திரம் பழகு!         

      

Advertisement