Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றி மூன்று :

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்                           ஒரு தலையாகவும் சுகம் தனை அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல் 

அதன் பின்னும் கால் மணி நேரம் கழித்து தான் வந்தான் பத்து.. “ஏன் லேட்? நான் தனியா பயந்துட்டேன்!” என்று அவன் மீது ரஞ்சனி பாய்ந்தாள்.

“தனியா இருந்தியா? அஸ்வின் இல்லை!” என்றான் பத்து..

“ம்ம் இருந்தான்.. அங்க தூரமா..” என்று காட்ட..

பத்துவை பார்த்ததும் அருகில் வந்தான் அஸ்வின்.. “ஒரு ஆக்சிடென்ட் வழில, விட்டுட்டு வர முடியலை.. ஆம்புலன்ஸ் கால் பண்ணி, அவங்க வீட்டுக்கு சொல்லி.. அவங்க வந்ததும் அனுப்பிட்டு வந்தேன்!” என்றான்.

“என்னாச்சு அவங்களுக்கு?” என ரஞ்சனி கேட்க..

“உயிருக்கு ஆபத்தில்லை.. அவங்க கான்ஷியஸ் தான்.. ரெண்டு பொண்ணுங்க ஸ்கூட்டி ல.. நைட் டைம் கூட.. அதான்.. இங்க உனக்கு கூப்பிட்டு சொல்ல முடியலை.. அஸ்வின் நம்பர் இருந்தது, சொன்னேன்!” என,

“இவனுக்கு என்கிட்டே வந்து சொன்னா என்ன?” என்று திரும்பி அஸ்வினை முறைத்தாள்.

“நீங்க என்னை பார்த்தா எப்பவும் பயப்படுவீங்க, அதுதான் பக்கத்துல வரலை! அங்கேயே இருந்தேன்! சாரி!” என்றவன்..

கூடவே இரு கை கூப்பி “முன்ன எப்பவோ முட்டாள்தனம் பண்ணினதுக்கும் சாரி!” என்றான் பத்து முன்னிலையிலேயே..

“அது அந்த வயசுல அழகான பொண்ணுங்களைப் பார்த்தா கல்யாணம் பண்ண வர்ற இன்ட்ரஸ்ட்.. அதுல கொஞ்சம் மிரட்டலா பேசிட்டேன்! தப்பா எப்பவும் நினைச்சது கூட இல்லை!” என்றவனின் வார்த்தைகளில் மட்டுமல்ல கண்களிலும் உண்மை.  

“ரொம்ப நாளா கேட்கணும்னு தோணினது தான்! சந்தர்ப்பமே அமையலை!” என்று உண்மையாக உரைத்தான்.

“இட்ஸ் ஓகே, அந்த கை கீழ போடு அஸ்வின்!” என்ற ரஞ்சனி.. பத்துவை போகலாமா என்பது போல பார்க்க..

பத்து அஸ்வினை பார்த்து “ஆமா, என் முன்னமே கேட்கறீங்களே, அவ என்கிட்டே இந்த விஷயம் சொல்லாம இருந்திருந்தா, இல்லை நான் ஏதாவது தப்பா எடுத்திக்கிட்டா?” என,

“அவங்களும் உங்க கிட்ட சொல்லாம இருந்திருக்க மாட்டாங்க! நீங்களும் தப்பா எடுக்க மாட்டீங்க.. எனக்கு அப்படி தான் தோணுது!” என புன்னகைத்தான்.

ரஞ்சனி, பத்து இருவர் முகத்திலும் அந்த புன்னகை தொற்றியது.. “சாரி, கல்யாண வீட்டுக்காரர் உங்களை நிறுத்தி வெச்சிட்டேன்” என் பத்து சொல்ல..

“இவங்க என் சின்ன பாஸோட தங்கை, பெரிய பாஸோட அண்ணி!  எனக்கு அவங்க கிட்ட வொர்கிங் டைம் எல்லாம் கிடையவே கிடையாது! நான் இருபத்தி நாலு மணிநரமும் அவங்க ரீச்ல தான்.. இவங்களை பத்திரமா அனுப்பறது என்னோட வேலையும் கூட.. நீங்க கால் பண்ணலைன்னாலும் நீங்க வர்ற வரை இருந்திருப்பேன்!” என்ற நீண்ட விளக்கம் கொடுத்தான்.  

“என்ன பதில்டா இது?” என இருவருமே வியந்து போயினர்.. கூடவே பத்து “ஈஸ்வர் உங்களுக்கு சின்ன பாஸ், வர்ஷினி பெரிய பாஸா?” என முறுவலோடு கேட்க..  

“கண்டிப்பா! ஏன்னா விஸ்வாவோட பாஸ் அவங்க.. அதனால!” எனச் சொல்ல,

இந்த முறை ரஞ்சனி சிரித்து விட்டாள்.. “விஸ்வாக்கு மட்டுமில்லை, இவருக்கும் அவ தான் பாஸ்!” என சொல்லி.. இருவரும் விடைபெற..

அஸ்வினின் மனம் அப்படி ஒரு நிம்மதியில் இருந்தது.. அவன் வேண்டிய மன்னிப்பு அப்படி ஒரு நிம்மதியை கொடுத்திருந்தது..

கூடவே வர்ஷினியைப் பற்றிய அவனின் நினைவுகள்…

நான்கு வருடங்கள் முன்பு.. அன்று தான் ஈஸ்வர் அவளை தொலைத்திருந்த நாள்.. அஸ்வின் வேலை பார்க்கும் ஹோட்டலில் அவன் தானே பப் இன்சார்ஜ்..

பத்து மணி இருக்கும் ஒரே சத்தமாக இருந்தது.. அந்த ஹாலில் ஒலித்த பாடல், கூடவே அங்கிருந்த இளைஞர்களின் கூச்சல்.. அங்கே இருந்த பெண்களை கிளப்பலாம் என்று அஸ்வின் சென்று “இட்ஸ் டைம், ப்ளீஸ் மூவ்” என சொல்லிக் கொண்டிருந்தான்..

ஆண்கள் அவனுக்கு பிரச்சனையில்லை, பெண்களை கொண்டு தினமும் ஏதாவது பார்க்க நேரிடுவதால் அவர்களை எப்போதும் பத்து மணிக்கு மேல் விடமாட்டான்..

அங்கே இருந்த கும்பலை பார்வையிட்டு வரும் போது, ஒரு மூலையில் ஒரு பெண் மட்டும் தனித்து கவிழ்ந்து படுத்து இருக்க.. இரு இளைஞர்கள் அவளை தூக்கி நிறுத்த முற்பட்டுக் கொண்டிருக்க..

அருகில் சென்றான், உண்மையில் அவர்களுக்கு உதவுவதற்காக. யாரோ ஒரு பெண் குடித்து மயங்கி விட்டாள் என்ற எண்ணத்தோடு.. அருகில் செல்லவும் தான் அது வர்ஷினி என்று தெரிய.. விரைந்து சென்றவன்.. அவளை அவர்களின் பிடியில் இருந்து விலக்கி பிடிக்க.. அவன் மீதே சாய்ந்தாள்.. சுற்றுப் புறம் உணர்ந்தது போலத் தெரியவில்லை.

அவனின் உடை பார்த்து அங்கே வேலை செய்பவன் என்று தெரிந்த அந்த இளைஞர்கள் “அவ எங்க ஃபிரண்ட் நாங்க தான் கூட்டி வந்தோம்!” என,

அவனுக்கு நிஜமாகிலுமே நண்பர்களா எனத் தெரியவில்லை.. நண்பர்களுடன் தான் எப்போதும் வருவாள், தனியாக இதுவரை வந்ததில்லை.. ஆனாலும் அந்த நண்பர்களை அவனுக்கு பிடிக்கவில்லை.. அவர்களும் போதையில் இருந்தனர்.

“இருக்கட்டும், இவங்களுக்கு நினைவில்லாம உங்களோட அனுப்ப முடியாது!” என்றான் திட்ட வட்டமாக.

“ஏய், எங்க ஃபிரண்ட் இவ, அனுப்ப உனக்கு என்ன?” என்று அவர்கள் எகிற..

அது ஏனோ மனதிற்கு சரியில்லாமல் பட.. “அனுப்ப முடியாது, போங்கடா!” என்றான் கோபமாக.

அதில் ஒருவன் பணிவாக “எதுக்கு பாஸ் பிரச்சனை, எல்லோருமே ஷேர் பண்ணிக்கலாம்!” என

முதலில் புரியாமல் முழித்தவன்.. பின்பு சொல்வது புரிய.. “என்னடா சொன்ன?” என்றவன், அவனையும் மீறி சொன்னவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்..

இன்னும் கூட அடித்து துவைத்து இருப்பான்.. வர்ஷினி அவனின் கையினில் இருப்பதால் முடியவில்லை.. அவளை திரும்பவும் அந்த இருக்கையில் சாய்த்து அமர வைத்து நிமிர..

அந்த இளைஞர்கள் ஏற்கனவே போதையில்.. “எங்களையாடா அடிச்ச நீ! நாங்க யாருன்னு தெரியுமா?” என்றவன்.. வர்ஷினியை சாய்த்து வைத்து நிமிர்வதற்குள்.. அவர்கள் ஒருவன் கையினில் இருந்த பாட்டிலை உடைத்து அஸ்வினின் பக்க வாட்டில் குத்தி இருந்தான்.

அஸ்வின் இதை எதிர் பார்கவில்லை.. ரத்தம் பீச்சியடிக்க.. வலியில் கத்தி விட்டான்.. ஆனாலும் அந்த சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை.. அப்படி ஒரு கூச்சல் ஆட்டம் பாட்டம் நடனம்..

அவன் குத்திய இடத்தை அழுத்திப் பிடிக்க.. குத்தியவன் “தூக்குடா அவளை” என மற்றொருவனை பார்த்து சொல்ல..

அவன் தூக்கி கொண்டான்..  அஸ்வினால் கத்தி யாரையும் அழைக்க முடியவில்லை.. சில நொடி சுதாரித்து நிமிர்வதற்குள் அவர்கள் வெளியே போகும் வாயிலை நெருங்கியிருக்க..

“பிடிங்க அவங்களை” என்று கத்தும் நேரம் கதவை திறந்து வெளியேறி இருந்தனர்.. வேகமாக அவனும் வாயில் வந்து, அங்கிருந்த ஹோட்டல் ஆட்களோடு.. அவர்கள் அவளை காரில் போடும் நேரம் பிடித்திருந்தான்..

எதுவுமே எதுவுமே தெரியவில்லை வர்ஷினிக்கு.. ஒரு மாத்திரை எடுத்தாலே போதை.. இவள் மூன்றோ நான்கோ.. கையில் வந்ததை போட்டு இருந்தாள்.. போதைக்காக இல்லை.. உயிர் வாழ விருப்பமில்லை… செத்துவிடலாம் போல ஒரு எண்ணம்..

எடுத்தவளுக்கு போதையும் ஏறவில்லை.. சாவு வருவது போலவும் தெரியவில்லை.. மெதுவாக கதவு திறந்து பார்த்தால் ஈஸ்வர் உறக்கத்தில்.. கதவு திறந்து காரை எடுத்துக் கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் போக ஆரம்பிக்க.. பல நிமிடங்கள் கழித்து போதையோடு கூடிய மயக்கம் வரும் போல இருக்க.. ஃபோனும் எடுத்து வரவில்லை.. அவள் இருந்த இடத்தில பக்கத்தில் நண்பர்களுடன் போகும் பப் இருக்க.. அங்கே சென்று ஓரிடத்தில் எப்படியோ அமர்ந்து கொண்டாள்.

அங்கே ஒரே கூச்சாலும் கும்மாளமுமாய் இருக்க.. எல்லோரும் நடனமாடுவதை பார்த்து இருந்தாள்.. கூடவே நான் ஏன் சாக வேண்டும்? சாக வேண்டாம்! என்ற எண்ணம் தோன்ற.. யாரை அழைக்கலாம் என்று நினைக்கும் போதே போதையை மீறிய ஒரு மயக்கம் அணுகியிருந்தது.

இவள் உள் வந்ததில் இருந்து பார்த்த இரு இளைஞர்கள் தான் அவளை அனுபவிக்கும் ஆசையோடு தூக்க முற்பட.. அப்போது தான் அஸ்வின் பார்த்திருந்தான்..

எப்படியாவது ஈஸ்வரிடம் அவளை சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் அஸ்வினிற்கு..

அவளின் கார் தெரியும், கார் சாவியும் அவளின் கையினில் தான் இணைத்து இருந்தாள்.. யாருக்கும் அவளை காட்சி பொருள் ஆக்க விரும்பாதவனாக.. “அவங்களை கார்ல உட்கார வைங்க” என வர்ஷினியின் லம்பாகினியை காட்டி இருந்தான்..

அதற்குள் அந்த இளைஞர்கள் “நாங்க யாருன்னு தெரியாம பண்ற.. நான் யார் தெரியுமா?” என்று அரசியல்வாதியின் பெயர் சொல்லி. “எப்படி நீ இந்த பொண்ணை காப்பாத்துவ பார்க்கிறான்” என்று கத்த,

அதற்குள் அங்கிருந்தவர் போலீசிற்கு அழைத்து விட.. “ஐயோ போலிஸா.. வீணாக வர்ஷினியின் பேர் அடிபடுவதை விரும்பாதவனாக, அவளின் மயக்கமும் எதனால் என்று புரியாதவனாக தடுமாறினான். அவளை முதல் முறை பார்த்த போதே அவளின் நீல நிறக் கண்களில் போதையின் மயக்கத்தை உணர்ந்திருக்கின்றான்..

தான் காயப்பட்டிருப்பதையும் பொறுக்காது.. அவளின் காரில் அமர்ந்து காரை கிளப்பினான்.. திரும்ப திரும்ப ஈஸ்வரிடம் அவளை சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றே அவனுக்கு பிரதானமாக இருந்தது.. அவர்களின் வீடு தெரியும், ஆனால் இவர்கள் இப்போது தனியாக இருக்கும் வீடு தெரியாதே..

வர்ஷினியை கையினில் தாங்கி, எதிரில் இருந்தவனை அடித்த போது அவனின் மொபைலும் அங்கே டேபிளில் விட்டிருந்தான்.. காரை ஓட்டிக் கொண்டே அவளை தட்டி தட்டி எழுப்ப முயற்சி செய்தான்.. காரில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து அப்படியே அவள் மேல் கவிழ்தினான்.. எதற்கும் அவள் அசையவில்லை..

அவனின் குத்துபட்ட இடத்திலிருந்தும் ரத்தம் அதிகமாக வெளியேறி அவன் பலவீனமாக உணர துவங்க.. இதில் அவனின் காரின் அருகில் சத்தம்.. பார்த்தால் அந்த இளைஞர்கள் அவர்களின் காரில் இருந்து எதையோ வைத்து தட்டினர்..

அவர்களுமே ஒரு வெறியில் இருந்தனர்.

அது ஒரு பயத்தைக் கொடுக்க.. அவனுக்கும் மயக்கம் வருவது போல இருக்க.. காரை வேகப் படுத்த.. அவர்களும் துரத்த.. ஒரு திருப்பத்தில் அந்த இளைஞர்களின் கார், இவர்கள் கார் மேல் மோத, அது கட்டு பாட்டை இழந்து பாதை தவறி பில்டிங் மேல் மோதி நிற்க.. அவனின் பின் வந்த இளைஞர்கள் கார், பல முறை உருண்டு.. ஒரு மரத்தில் மோதி தீப்பிடித்தது.

இவர்களது லம்பாகினி என்பதால் காரின் ஏர்பேக் ஓபன் ஆகிவிட.. வர்ஷினியை அமர்ந்தி இருந்தவர்களும் சீட் பெல்ட் போட்டிருக்க.. வர்ஷினி எந்த சேதாரமுமில்லாமல் தப்பித்து இருந்தாள்.. ஆனால் அதற்கும் அவளின் போதை தெளியவில்லை.  

அதிர்ஷடவசமாக தூரமாக அந்த வழியாக வந்த ஒரு போலீஸ் அதிகாரியின் கார் இதை பார்த்திருக்க.. வேகமாக அருகில் வந்து.. அதிகாரி இவர்களை நோக்கி வர, அவரின் டிரைவர் தீபிடித்த இடத்திற்கு ஓட..

பாதி மயக்கத்தில் இருந்த அஸ்வின்.. கதவை திறந்து கொண்டிருந்தான்.. அதிகாரி அருகில் போகவும், திறக்கவும், அவரை பார்த்தவன் மயக்கத்திற்கு சென்று கொண்டே.. “சர், இவங்க ஹஸ்பன்ட் கிட்ட சொல்லணும் சர்.. ப்ளீஸ் இவங்க பேர் எங்கயும் வரவேண்டாம் சர்” என சொல்லச் சொல்ல.. இல்லை கெஞ்சக் கெஞ்ச  மயக்கமானான்.                             

 அங்கே ஒருவன் இவள் எங்கே என்று தெரியாமல், எங்கே தேடுவது என்று தெரியாமல் பித்து பிடித்து இருந்தான்.

 

உயிர் வாழ்வதா இல்லை போவதா..                                  அமுதென்பதா.. விஷமென்பதா..                                                        இல்லை அமுத விஷமென்பதா..  

 

Advertisement