Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு :

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..                     கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்.. காற்றில் குழலோசை.. பேசும் பூமேடை மேலே..  

ஐஸ்வர்யாவின் திருமணம் கோவிலில் எளிமையாய் நடக்க.. ரிசப்ஷன் மிகவும் கிராண்டாக நடந்தது.. அஸ்வின் அண்ணனாக சிறப்பாக எல்லாம் செய்தான்.. ரூபாவும் ஜெகனும் தான் முன்னின்று எல்லாம் நடத்தினர்..

ரஞ்சனி மிகவும் நிறைவாக உணர்ந்தாள், தோழியின் திருமணத்தின் போது.. அஸ்வின் அங்கே இருந்த போதும் அவனை கண்டு கொள்ளாமல் ஐஸ்வர்யாவோடு பேசி அங்கே தான் அவ்வப்போது அவளுக்கு தேவையானதை கவனித்து இருந்தாள்..

ஏன் சஞ்சயிடம் கூட தானே வலிய சென்று பேசினாள். அவனுமே முறைத்து நிற்கவெல்லாம் இல்லை. ரூபாவின் மொத்த குடும்பமும் அவளின் தங்கையின் திருமணம் என்று வந்திருக்க..

வராத இரு ஜீவன்கள் ஈஸ்வரும் வர்ஷினியும்.. வர்ஷினி அவள் வேலை செய்த படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்தாள்.  ஈஸ்வர் அவனின் வேலை நிமித்தம் சிங்கப்பூர்.. வெளியீட்டு விழாவிற்கு அவர்கள் அழைத்திருந்தாலும் வர்ஷினிக்கு செல்லும் எண்ணமெல்லாம் இல்லை.. ஐஸ்வர்யாவின் திருமணம் கூடி வரவுமே.. சென்றாள்..

சென்னையில் இருந்தால் திருமணத்திற்கு போகாமல் இருக்க முடியாது.. அஸ்வின் என்ன நினைத்துக் கொள்வான்.. செல்லவும் முடியாது.. ஐஸ்வர்யா அவர்களை பார்த்து பழைய நினைவுகள் எதனையாவது கிளறிக் கொண்டால்..

ஈஸ்வர் ஒரு புறம் சென்றான்.. இவள் ஒரு புறம் சென்றாள்.. சேர்ந்து செல்ல வெல்லாம் இல்லை.. சேர்ந்து அவளுடம் செல்லவே முடியாது!

வர்ஷினியிடம் எல்லாம் சொல்லி முடித்த பிறகு, அவள் வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்க அவளுடனான பயணத்தை ஈஸ்வர் தவிர்த்து விட்டான் என்பது தான் நிஜம்..      

ரஞ்சனியிடம் சஞ்சய்.. “நீங்க எங்க கல்யாணத்துக்கு வரவே மாட்டீங்கன்னு நினைச்சேன், உங்களுக்கு தான் நான் இவங்களை பார்த்தா கூடப் பிடிக்காதே” என்று சொல்ல..

“நிச்சயம் அப்போ அப்படித் தான்.. என் பிரண்ட் அவ, அவளை யாரும் டிஸ்டர்ப் பண்றதை நான் விரும்பலை.. இப்போ அவளே உங்களை சூஸ் பண்ணியிருக்கும் போது அதுக்குரிய மரியாதை எப்போவுமே இருக்கும்!” என வாயடிக்க..

ஐஸ்வர்யா எல்லாம் ஒரு புன்னகையோடு தான் பார்த்து இருந்தாள், முகத்திலும் எந்த சஞ்சலமும் இல்லை, மலர்ந்து தெளிவாய் இருந்தது..

ஆம்! அவளின் பெர்சனல் கான்ப்ளிக்ட்ஸ் ஒரு முடிவுக்கு வந்திருந்தது சஞ்சையால்.. இவள் பதில் கொடுக்காமல் இருக்க.. “என்ன உங்க பிரச்சனை?” என்று நேரடியாக கேட்கவும், “அது அப்போ காலேஜ் முடிச்ச டைம் ஒருத்தரோட லவ் அக்சப்ட் பண்ணினேன்.. அப்புறம்..” என ஆரம்பிக்க..  

“நீங்க லவ் பண்ணுணீங்களா?” என்றான்.

“தெரியலை! ஆனா அவரை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்” என,

“ஹ, ஹ” என சிரித்தவன்.. “நான் ஐஞ்சு பொண்ணுங்களை லவ் பண்ணி, இப்போ உங்களை கல்யாணம் பண்ணக் கேட்கறேன். இதெல்லாம் ஒரு விஷயமா.. இதுக்கா இவ்வளவு பதில் சொல்ல தயங்கறீங்க, போங்க!” என்றான் ஈசியாக.

“பொய் தானே சொல்றீங்க!” என்று ஐஸ்வர்யா கேட்க,

“நான் சொல்ற பொய் அவ்வளவு ஈசியா கண்டுபிடிக்கற மாதிரியா இருக்கு” என ஆச்சர்யம் போல வினவ..  

சிரித்து விட்டாள் ஐஸ்வர்யா.. எப்போதுமே ஈஸ்வரோடு அவளின் பேச்சு இவ்வளவு இலகுவாய் இருந்ததில்லை.  ஐஸ்வர்யா திரும்பவும் பேச வர.. “நாம இதை பத்தி பேசவே வேண்டாம், ப்ளீஸ்!” என்றான் கெஞ்சுதலாக.. “எனக்கு அதை தெரிஞ்சிக்க விருப்பமில்லை..  நான் உங்களை லவ் பண்றேன் ரொம்ப வருஷமா, நீங்க அதை மட்டும் தெரிஞ்சிக்கங்க! நீங்க என் வாழ்க்கையில வர்ற நிமிஷதுக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கேன்.. யாரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உங்களோட இருக்குற சந்தோசம் எனக்கு கிடைக்காது..  விதார்த் மூலமா உங்க கிளாஸ் மேட்ஸ் கிட்ட உங்களை பத்தி தெரிஞ்சிக்குவேன், உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சு எனக்கு சான்ஸ் இருக்குன்னு நினைச்சு தான் நான் என் கல்யாணத்தை தள்ளி போட்டேன்” என,

“நீங்க விட்டுடுங்க” என்றாள் இலகுவாக.  

“என்ன?” என்று அவன் அதிர,

“இந்த இங்க விட்டுடுங்க, வா, போ, பேசுங்க! இப்படி பேசினா, எனக்கு உங்களை க்ளோஸ்சா நினைக்க முடியலை” என சிரிக்க..

“ஊப்ஸ்” என்றவன் பதிலுக்கு சிரித்து “விட்டுட்டேன்” என,  

இதோ திருமண வரவேற்பு மேடையில்.. ஐஷ்வர்யா என்றுமே அழகி தான்.. இப்போது இந்த மணப்பெண் அலங்காரங்களில் இன்னும் அழகாய் ஜொலித்தாள், பார்த்த யாரும் பார்வையைத் திருப்ப முடியாதபடி..

இவளை வேண்டாம் என்று சொல்லி வர்ஷினியின் புறம் போயிருக்கிறான் என்ன இருக்கின்றது அவளிடம் என்று எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.. என்னால் அதை ஏன் கண்டு கொள்ள முடியவில்லை.. எல்லாம் சிக்கலாக்கி கொண்டேன்…  

அதையும் விட பத்து என் அம்மா போல ஒரு குழந்தை என்றோ, உன்னை போல ஒரு குழந்தை என்றோ ரஞ்சனியிடம் சொல்லவில்லை! எனக்கு வர்ஷினி மாதிரி தான் ஒரு பொண்ணு வேணும் என்கின்றான்! என்ன சொல்ல?

அதிசயமாய் பொறாமை எழவில்லை.. வர்ஷினியை குறித்து ஒரு முறுவல் எழுந்தது.. இதையெல்லாம் விட அவளுக்கு அவ்வளவு பயம் கொடுத்த அஸ்வின்.. வர்ஷியினியின் ஒரு பார்வையில் அவள் இட்ட வேலையை உடனே செய்கின்றான்.. அது இன்னுமே ஒரு அதிசயம் அவளுக்கு!

அதுவும் அஸ்வின் வர்ஷினிக்கு புடவை எடுக்கக் கேட்க வந்த தினம்.. வர்ஷினி ரிஷிக்காக அவளையும் சேர்த்து வீட்டிற்கு பிடிவாதமாக அழைத்து வந்திருந்தாள்.

அன்று ஈஸ்வரின் வீட்டில் தான் இருந்தால் ரஞ்சனி.. ஆனால் அவள் இருப்பது அஸ்வினிற்கு தெரியாது.. தெரிந்திருந்தால் நிச்சயம் வந்திருக்க மாட்டான்.

வீட்டின் உள் அவன் வந்த போதே பார்த்து விட்டவள்.. அறையினுள் புகுந்து கொண்டாள். ஈஸ்வர் தான் ஹாலில் அமர்ந்து இருந்தான்..

இவனை பார்த்ததும் “வா அஸ்வின்” என, அப்போது ஐஸ்வர்யாவின் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது.. “உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான் தயங்கி தயங்கி.. வர்ஷினி இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே..  

அவனின் பாவனைகளைப் பார்த்து “என்ன” என ஆச்சர்யமாய் ஈஸ்வர் வினவ.. “கல்யாணத்துக்கு புடவை எடுக்கறோம்.. ரூபாக்கு எடுக்க போறேன்.. வர்ஷினி மேம்க்கும் ஒன்னு எடுக்கட்டுமா?” என,

“எடேன் அஸ்வின்” என்று ஈஸ்வர் இலகுவாக சொல்ல.. “இல்லை, நீங்க ஏதாவது சொல்வீங்களோன்னு பெர்மிஷன் கேட்டேன்” என்றான் தயங்கியபடியே.  

“எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ எடு.. வர்ஷினிக்கு செய்யறதுக்கு நீ எதுவும் கேட்க வேண்டாம்.. ஆனா மத்த விஷயங்கள் எதுவும் என்னோட பார்வைக்கு வராம இருக்கக் கூடாது.. பாக்கி எல்லாம் நீ நடந்துக்கறதை பொருத்து தான்!” என்றும் சொல்ல..

அஸ்வின் கோபமெல்லாம் படவில்லை.. ஒரு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டான்.. ஈஸ்வரின் ஆளுமைத்தன்மை அவன் அறிந்தது தானே.. அஸ்வினை பொறுத்தவரை அவனை போன்ற மனப்பான்மை கொண்டவன்.. மனைவியாகினும் கண்ணசைவில் நடக்க வேண்டும், சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் கொண்டிருப்பான்.

ஈஸ்வரின் குணநலன்கள் எல்லாம் அணுஅணுவாய் அறிந்தவன் அஸ்வின்.. ஆனால் அது எல்லாம் வர்ஷினியிடம் மாறிப் போய் தான் இருக்கின்றது.. பிறப்பிலிருந்தே நான், எனது, என் குணம், குலம், பாரம்பர்யம்.. என எல்லாம் பார்ப்பவன்.. அவன் மீதே தவறு என்றாலும் இப்படித் தான் என நிற்பவன்.. ம்ம் என்ன சொல்ல.. வர்ஷினியிடம் இது எதுவுமே இல்லை.

இப்போது அருகில் இருந்து பார்ப்பதால் பல சமையங்களில் நான் இவளின் அடிமை என்பது போல தான் ஈஸ்வரின் செயல்கள் இருக்கின்றது! ஈஸ்வரை பற்றி ஈஸ்வரே முன்னொரு காலத்தில் இப்படி நினைத்திருக்க மாட்டான் என்பது நிச்சயம்.. முகத்தில் முறுவல் மலர்ந்தது!  

அதனை மறைத்து “வர்ஷா, அந்த ஆக்ட்ரஸ், நம்ம டீம்ல கண்டிப்பா வேணுமா? தூக்கிடலாமே!” என்றான்..

“ஏன்?” என,

“இந்த மேட்ச் நடந்தப்போ வரவேயில்லை, நம்ம டீம்க்கு ஒரு போட்டோ ஷூட் எடுத்தோம் அதுக்கும் வரலை.. புதுசா எதோ அவளோட மேனஜர்ன்னு ஒருத்தன் வந்து பேமென்ட் வேற கேட்கறான்” என,

“அவங்களுக்கு நம்ம ப்ளான் எல்லாம் முன்னமே இன்ஃபார்ம்டா, திடீர்ன்னு சொன்னா எப்படி வருவாங்க?” என..

“முன்னமே இன்ஃபார்ம்ட் தான். நான் தான் பெர்சனலா இன்ஃபார்ம் பண்ணினேன்! கிட்ட தட்ட ஒரு மாசம் முன்னமே.. அப்போ எதுவும் அவங்க அந்த டேட்ல அவைலபிள் இல்லைன்ற மாதிரி சொல்லலை! சொன்னா ஷூட் டேட் மாத்தியிருப்போம்!”   

“பேமென்ட் குடுத்துருங்க, நிறுத்த வேண்டாம்!” என்ற ஈஸ்வர்… “ஆனா இனிமே அவங்க நம்ம டீம்க்கு வேண்டாம்! அக்ரீமென்ட் கேன்சல் பண்ணிடுங்க!” என்றான்.. அதுவே சொன்னது இனி முடிவை மாற்ற மாட்டான் என..

கூடவே.. “நம்ம தமிழ் நாடு கபடி டீம் ஸ்பான்சர் பண்ணலாம் நாம! அதுக்கு என்னன்னு பாரு!” என்றான்..

“நிஜமா வா” என்று குதூகலித்த அஸ்வின்.. “ஆண்கள் தா, பெண்கள் தா” என,

“ரெண்டுமே பண்ணுவோம்” என்று அவன் சொல்லும் போதே மொபைல் அடிக்கும் சத்தம் கேட்க, ஈஸ்வர் உள்ளே சென்றவன்.. வர்ஷினிக்கு குரல் கொடுத்துக் கொண்டே செல்ல.. ரிஷியோடு ஐக்கியமாயிருந்த வர்ஷினி அவனை தூக்கி கொண்டே வெளியே வந்தாள்.

கொழுக் மொழுக் கென்று இருந்த குழந்தையை பார்த்துக் கொண்டே “ஹாய் மேம்” என்று அஸ்வின் சொல்ல..

அவனின் அருகில் வந்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்டி, “ரஞ்சனி அண்ணி குழந்தை” என்று ரகசியம் பேச..

“இருக்காங்களா?” என அஸ்வின் கிளம்பப் போக.. ஆனால் குழந்தையை தூக்கும் ஆர்வமும் இருக்க.. “தூக்கிட்டு குடுங்க” என்று வர்ஷினி சொல்ல.. தூக்கி அணைத்துக் கொடுத்தவன்.. “ஓகே, நான் கிளம்பறேன்!” என்று உடனே கிளம்பி விட்டான் .

எல்லாம் பார்த்து தான் இருந்தாள் ரஞ்சனி.. “எப்படி? தன்னிடம் அப்படி நடந்தான்? அப்படி பேசினான் என்று சொன்ன பிறகும், இவ்வளவு சுமுகமாய் விஸ்வா இவனிடம் நடந்து கொள்கிறான்! ஏன் அப்படி? என்ன  விஷயம்?” மண்டையைக் குடைய ஆரம்பித்தது.. இன்று வரையிலுமே இருந்தது.

பதில் சொல்பவர் தான் யாருமில்லை.. அந்த யோசனைகள் ஓட.. திருமணத்திலும் ஒன்றிரண்டு முறை அஸ்வின் மீது பார்வை படிந்து மீண்டது..

வரவேற்பிற்கு பத்துவும் ரிஷியும் கூட வந்திருந்தனர். குழந்தை தூக்கத்திற்கு சிணுங்க.. “நான் இவனை வீட்ல விட்டுட்டு வர்றேன்” என்று எழுந்தான். “இருங்க, நானும் கிளம்பறேன்” என ரஞ்சனி சொல்லவும்.. “இல்லை நீ இரு.. நீ ரொம்ப என்ஜாய் பண்ற.. நான் இவனை அம்மா கிட்ட விட்டுட்டு வர்றேன்.. எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை” என்று பத்து கிளம்ப..

வீட்டில் இரு டிரைவர்கள் இருந்த போதும்.. ரஞ்சனியுடன் எப்போதும் பத்து மட்டுமே வருவான்.. அதை அவன் எப்போதுமே விரும்புவான்.. “ம்ம் சரி” என்று தலையாட்டி விட்டாள் ரஞ்சனி.

சரணும் ப்ரணவியும் கூட தூக்கத்திற்கு சிணுங்கியதால் ஜெகனும் ரூபாவும் கூட கிளம்பினர். மணப்பெண் இப்படியே மணமகன் வீட்டிற்கு செல்ல இருப்பதால் வேறு வேலைகளும் இல்லை! இப்போது சென்றால் தான் நாளை அவர்கள் மணமகள் வீட்டிற்கு வரும் போது ஏற்பாடுகள் செய்ய முடியும் என அவளின் அம்மாவிடம் சொல்லி ரூபா கிளம்பிவிட்டாள்.

வீடு விட்டு அவன் வருவதற்குள் மணமக்கள் கிளம்பும் நேரம் ஆகிவிட.. நண்பர்கள் கிளம்பியவர்களும் “நாங்க ட்ராப் பண்றோம்” என சொல்ல.. மறுத்து விட்டாள் ரஞ்சனி.. பத்துவை எங்கிருக்கிறான் என்று அழைக்கலாம் என்றாள் இவளின் மொபைலும் அவனிடம் தான் இருந்தது.

“இல்லை, வந்துடுவார், நீங்க கிளம்புங்க!” என அவர்களிடம் சொல்லி, அவளும் ஐஸ்வர்யாவிடம் மற்ற உறவுகளிடமும் சொல்லிக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்து விட்டாள்..

பத்து வீட்டிற்கு சென்று விட்டது எல்லாம் ஐஸ்வர்யாவிற்கு தெரியவில்லை.. “சரி” என்று விடை கொடுத்து விட.. இவள் இருப்பதை கவனிக்காமல் மணமக்களும் உறவுகளும் கிளம்பிவிட.. சில பேர் இருந்தனர்.. ஆனால் யாரென்று தெரியாத ஆட்கள்.. மனதில் லேசாக ஒரு பயம் எட்டிப் பார்க்க.. சுற்றும் முற்றும் பார்க்க.. அங்கே அவளின் பார்வை வட்டத்தில் அஸ்வின்..

“இருக்கிறானா” என்று ஒரு ஆசுவாசம் எழ.. கூடவே “இவனிடம் பயந்து நீ உன் வீட்டை விட்டு போய் திருமணமே செய்து கொண்டாய்” என்று ஞாபகம் வர.. காலம் எப்படி மாற்றிவிடுகிறது தன் பார்வைகளை என வியந்து அமர்ந்திருந்தாள்.

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்

                                                

 

Advertisement